மயிலிறகு – 18

இருள் சூழ்ந்துக்கொண்டிருக்கும் நேரம், மனம் முழுவதும் பரவிய வெளிச்சத்துடன் ஆதவன் மகிழனை தேடிப்போக, தோட்டத்தில் மகிழன் இல்லாது போகவே, மறுபடியும் வந்த வழியே ஆதவன் திரும்பி வர நேர்ந்தது….

ஆதவன் மகிழனை தேடிச்சென்றதையும், மகிழன் தோட்டத்தில் இருந்து கடை தெருக்கள் பக்கம் சென்றதையும் அறிந்திருந்த பாக்கியம், ஆதவனின் வருகைக்காக அவன் வரும் பாதைக்கு அருகில் இருந்த பெரிய மரத்தின் பின்னால் பதுங்கியப்படி நின்றார்… பாக்கியம் மட்டும் அல்லாது, அவரது மகனும் அரை போதையில் நின்று கொண்டிருந்தான்… ஆதவன் அம்மரத்தின் அருகே நெருங்கியவுடன், பாக்கியத்தின் குறுக்கு புத்தி திட்டத்துடன், மகனிடம் பேசுவது போல பேச தொடங்கினார்….

“இழையினிய பத்தி தான் ராசா சொல்லுதே… ” என்ற பாக்கியத்தின் குரல், ஆதவனின் நடையை தடை செய்தது… எங்கிருந்து குரல் வருகிறது என்று அவன் அந்த இருட்டில் தேட, பாக்கியத்தின் பேச்சு தொடர்ந்தது….

“நீ ஒன்னத்துக்கும் வெசனப்படாத ராசா… அவள் யார கல்யாணம் பண்ணினா நமக்கு என்ன…? இந்த மாதிரி பொண்ணு நமக்கு வேண்டாம்…. முதல்ல பார்த்த மாப்பிள்ளை க்கு சரின்னு சொல்றா.. ராவோட ராவா வேற மாப்பிள்ளை கொண்டு வந்தா அதுக்கும் சரி சொல்றா…  ஒருத்தன மாப்பிள்ளைன்னு காமிச்சு மனமேடை ல நிண்ட புரவு கூட, இன்னொருத்தன கட்டிக்க சம்மதம் சொல்லுறானா… அவ எப்படி பட்டவளா இருக்கணும்… ? இவளாம் பாவமே கிடையாது… இவள கட்டிக்கிறவன் தான் பாவம்…. இவளுக்கு உலகத்துல எல்லாத்த விடவும், ஏன் அவள விடவும் அவளுக்கு அவளோட அப்பன் தான் முக்கியம்… நாளைக்கே என் அருமை தம்பி இப்ப கட்டி இருக்க மாப்பிளை வேணாம்னு சொன்னா… தாலிய அறுத்து எறிஞ்சிட்டு நடைய கட்டிடுவா… நல்ல வேலை, உனக்கு நான் இவள சம்மந்தம் முடிக்கல… இவள கட்டிக்க முடியலனா, நீ இப்படி குடுச்சிட்டு நிக்கித… போ ராசா… உனக்கு ராசாத்தியாட்டம் பொண்ண பாக்குறேன் அம்மா…” என்று நீளமாக பேசும் பாக்கியத்தின் குரல், ஆதவனது செவிகளில் நன்றாக விழுந்தது….

இதை கேட்க, கேட்க ஆதவனது நெஞ்சம் உளைக்கலமானது…. அவன் அவர்கள் அருகில் வரும் அதே நேரம் சரியாக, பாக்கியத்தின் மகன் மாணிக்கம் பேச தொடங்கினான்… “அந்த இழையினி மட்டும் என்கிட்டே கிடைக்கட்டும்… அவளுக்கு இருக்கு… பொட்ட கழுத… அவள….” என்று குடி போதையில் மாதேஷின் குரல் ஒலித்துக்கொண்டிருக்க, அவனது வாக்கியத்தை முடிப்பதற்கு முன்பே மாணிக்கம் ‘ஆ..அம்மா…’ என்ற அலறலுடன் தரையில் விழுந்தான்…. 

ஆதவனது கை, மாதேஷின் தாடையை பதம் பார்த்திருக்க, உதடு கிழிந்து குருதி பெருக, மாணிக்கம் மண்ணில் கிடந்தான்… அதை பார்த்த பாக்கியத்தின் அலறல் அந்த நேரத்திலும் ஊரை கூட்ட, ராகவனும், சில பன்ணை  ஆட்களும் அங்கே கூடிவிட்டனர்… அங்கே இருப்பது அவருடைய மருமகன் மற்றும் பாக்கியம், அவரின் மகன் என்பதை அறிந்த ராகவன் ரங்கனை தவிர்த்து அனைவரையும் அனுப்ப, ஆதவன் முகத்தில் ரௌத்திரத்தின் சாயல் தெளிவாக படர்ந்தது….

“என்ன ஆச்சு மாப்பிள்ளை…” – ராகவன் 
” அப்பா, இந்த பொறுக்கி… என்னோட இழையாவ தப்பா அவள் இவள் னு பேசுறான்… அப்புறம் இந்தா நிக்கிதே இந்த அம்மா, இது பேசியதுக்கும் சேர்த்து தான் இவனுக்கு கொடுத்தேன்” என்று தாடை இறுக பேசிய ஆதவன், சட்டையை முளங்கை வரை மடக்கி விட்டு, மீண்டும் அவனை அடிப்பது போல் போக, அவன் அலறியே விட்டான்… 

அதற்குள் அவனை தடுத்த ராகவன், ஆதவனை சமாதானம் செய்து, பாக்கியத்தை கண்டித்து, அந்த நொடியே அவர், அவர்களை வெளி அனுப்பினார்….ஆதவனின் கோவத்தில் கதி கலங்கி நின்ற பாக்கியம் விட்டால் போதுமென மகனை அழைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்…

அந்த நேரத்தில், அவர்கள் என்ன பேசினார்கள் என்று அவரும் கேட்கவில்லை, ஆதவனும் அவரிடம் கூறவில்லை… அதன் பின் மகிழன் வர, அவனோடு ஒப்புக்கு பேசிய ஆதவன், மனதினுள் அந்த பாக்கியம் பேசியதையே எண்ணிக்கொண்டு இருந்தான்…

இரவு அனைத்து உறவினர்களும் கிளம்பிவிட, இரவு உணவுக்கு பின் அறைக்கு வந்த இழையினின் முன்பு அமர்ந்திருந்த ஆதவன், அவள் இத்தனை நாள் பார்த்த ஆதவன் இல்லை என்பதை இழையினி அந்த நொடியில் அறியவில்லை….

ஆதவன் வெளியே பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும், அவனது மனதில் ஓயாதது அலை அடித்து, கேள்விகணைகளை தொடுத்துக் கொண்டிருந்தன….அவன் மனதினுள் பாக்கியம் சொன்ன வார்த்தைகள் வந்து வந்து போயின… ஆதவனுக்கு திண்ணமே… இழையினிக்கு ஆரியனுடனான திருமணத்தில் விருப்பம் இல்லை… இவன் கட்டிய மஞ்சள் நாணுக்கு, அவள் இந்த நொடி முதல் மதிப்பு தருகின்றாள்

இவை அனைத்துக்கும் காரணம், அவனை போலவே இழையினி மனதிலும் அவன் மீது இருந்த பிடிப்பே… இது அவனுக்கு தெளிவாக தெரிந்தாலும், அந்த பாக்கியம் சொன்னது போல், தனது மாமானார் சொல்லி தான் இவள் திருமணதிற்கு சம்மதம் சொன்னாளோ? ராகவன் பார்த்த மாப்பிள்ளை தான்… ராகவன் தேர்வு என்பதனாலே அவள் ஒப்புக்கொண்டாளோ…. அவள் மனதில் தன் மீதான விருப்பம் இருந்து, தந்தை சொல் மீறாமல் இருந்தாளோ….என்று அவன் எண்ணங்கள் இப்படியாக ஓடிக்கொண்டிருக்க, அவன் சிறிது நேரம் தனிமையில் சிந்திக்க வேண்டி இருந்தது…. 

அதே நேரம், இழையினியும் ‘‘எப்படி தந்தைக்கு தன் கலக்கம் தெரியவந்தது…? மாப்பிள்ளை மாறியது எவ்வாறு நிகழ்ந்தது….?” என்ற கேள்விகள் விராலிமலை வந்தது முதல் அவ்வப்போது தோன்றினாலும், அதை கேட்க சரியான சந்தர்ப்பம் அமையாமல் போகவே, நாளையாவது தந்தையிடம் கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அந்த சிந்தனையில் இருந்தாள்…

சில நிமிடங்கள் தாமதமாக, அவள் வரவை உணர்ந்த ஆதவன், இழையினியிடம், “இழையா… நீ கொஞ்சம் தூங்கு… நான் வெளி தாழ்வாரத்துல இருக்கேன்… ஒரு போன் பண்ணனும்….” என்று ஏதோ சாக்கு கூறிவிட்டு போனவன், வெகுநேரம் குறுக்கும் நெடுக்குமாய் நடை பழகி கொண்டிருந்தான்….

பாக்கியமும், அவர் மகன் பேசியது எதையும் அவன் கருத்தில் கொள்ளவில்லை… அவன் கருத்தில் பதிந்த ஒன்றே ஒன்று, இழையினி தன்னை விட, தனது தந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாள்… அவள் மீது இருந்த அதீத அன்பால், அவனால் அதை ஏற்க முடியவில்லை…

 

அவளது அன்புக்கு முதன்மையானவன் தான் என்ற சூழல் வரவேண்டும், அதை செய்தே தீர வேண்டும் என்ற முடிவோடு, அவன் அறைக்கு செல்ல, அங்கே நிர்மலமான முகத்துடன் தூங்கும், அவனின் இழையாவை கண் எடுக்காமல் சிறிது நேரம் பார்த்தான்… பிறகு, அவள் அருகிலே படுத்தவன், வெகு நேரம் புரண்டப்படி இருந்து, பின் இரவில் கண் அயர்ந்தான்….

மறு நாள் காலை…. 

அன்று ஆதவன், இழையினி மீண்டும் அத்தியூர் செல்ல வேண்டிய தினம்…. ராகவனுக்கோ இந்த மூன்று நாட்கள் அவரின் செல்ல மகளை பார்க்காமல் இருந்தது, இனிமேல் நினைத்த நேரம் அவளை காண இயலாது என்று புரிந்தாலும்… இவை அனைத்தும் வாழ்க்கையில் ஏற்று கொள்ள வேண்டிய மாற்றம் என்று மனதை சிரமம்ப்பட்டு சமன் செய்திருந்தார்….  

இந்த மூன்று நாட்களாய்… காலை எழுந்தவுடன், மகளை பார்க்காத குறையை தீர்க்க, இழையாவின் குழந்தை பருவ புகைப்படத்தை, அவரது அறையில் பெரிது பண்ணி மாற்றி வைத்து, ஓரிரு நிமிடம்…. இழையாவின் மழலை சிரிப்பை ரசித்து தன்னை பழக்கி கொண்டு இருந்தார்….

ஆனால் இன்று காலை, மகள் இங்கே தானே இருக்கிறாள்…. அவளையே கிளம்புவதற்கு முன் பார்த்து செல்ல வேண்டும் என்று தோன்ற, சிறு குழந்தையின் சந்தோசத்துடன்…. வராண்டாவில் அப்பக்கமும், இப்பக்கமுமாக நடந்துக்கொண்டு இருந்தார்…மகளின் வருகைக்காக

அவர் எதிர்ப்பார்த்தபடியே… அவருடைய செல்ல மகளான இழையா, விடிந்தும் விடியாமலும் தந்தையை தேடி வர, கூடவே வந்த ஆதவனுக்குகோ அவள் தந்தையிடம் ஓடி, செல்லம் கொஞ்சி பேசியது பொறாமையை தூண்டியது…. 

“பாப்பா… கண் விழிச்சதும் வந்துட்டியா ? சரி அப்பா வெளில போயிட்டு வரேன்… நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி வெரசா வந்துரேன்… சரி மாப்பிள்ளை க்கு காபி தண்ணி கொடுத்தியா?” என்று ராகவன், பின்னாலிருந்த ஆதவனை கவனிக்காது பேசிக்கொண்டு இருக்க, இழையா வாய் திறப்பதற்கு முன் ஆதவன் பேச்சை தொடங்கி இருந்தான்…

“காபியா… ? எழுந்ததும், உங்க பொண்ணு என் முகத்தை கூட சரியா பார்க்கல… இதுல எங்க இருந்து காபி…. ” என்று சாதரணமாக சொல்வது போல ஆதவன் சொன்னாலும், ஆதவனது வயசை அவரது அனுபவமாக கொண்டிருந்த ராகவனுக்கு, ஆதவன் கண்களில் துளிர்த்திருந்த பொறாமை தப்பவில்லை….

அதை பார்த்த ராகவனுக்கு சட்டென்று ஒரு வலி பரவ தொடங்கியது… ஏதோ தன் பெண் தன்னை விட்டு விலகி போவதாய்… ஆனால் எதையும் யோசித்து, நிலைதடுமாறாமல் முடிவெடுக்கும் ராகவனுக்கு, அந்த சூழ்நிலையை புரிந்துக்கொள்ள பெரிதாக சிரமம் ஏற்படவில்லை…..

தன் மகளுக்கு திருமணம் நடந்துவிட்டது…இனி அவளுக்கு முதன்மை அவளது கணவனே… என்று மீண்டும் மீண்டும் மனதில் சொல்லி கொள்ள, இழையா… அவரின் கவனத்தை கலைத்தாள்…

“அப்பா.. கிளம்பனும்னு சொன்னீங்க…” – இழையா…
“ஹா .. ஆமாம் பாப்பா.. கிளம்பனும்… நீ மாப்பிள்ளைக்கு காபி கொடு, இன்னைக்கு வெள்ளி கிழமை-ல முருகன் கோவில் போவியே டா.. “என்று கலங்கி இருந்த அவர் முகத்தை மறைப்பதற்காய் பேச்சை மாற்ற, இழையாவோ, “ஹா ஆமாம் பா.. போகணும், நீங்க சீக்கிரம் வந்திடுங்க, போயிட்டு வந்து எப்பயும் போல உங்களுக்கு தான் பிரசாதம் முதல்ல கொடுப்பேன்…” என்று இலகுவாக இழையினி, வழமை போல பேச, அவள் பேசியதை கேட்டு ராகவனுக்கு தான் ஏன் அவர் இந்த பேச்சை இப்போது எடுத்தார் என்று தோன்றிட்டு….

அவர் கணித்தது சரியே என்று நிரூபிக்கும் வகையில், ஆதவன் முகம் மாற, ஒரு பக்கம் அவருக்கு சிறு மனவலி ஏற்பட்டாலும், தன்னை போலவே தனது மருமகனும் இழையா மீது அதீத அன்பு வைத்திருக்கிறார்… அதனாலே வந்த கோவம் இது என்று ராகவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது…

“பாப்பா… இங்க நான் இருகிறே.. அதுனால எனக்கு முதல்ல பிரசாதம் தர்ற… ஆனா அத்தியூர் ல அப்பா இருக்க முடியாது இல்லையாடா…? அப்போ என்ன பண்ணுவீங்க…” என்று சிறு குழந்தையிடம் கேட்பவர் போல ராகவன் கேட்க, இழையா ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.. அவளுக்கும், அவள் தந்தையை பிரிந்திருப்பது வலியை தந்தது. அந்த நொடி அவள் மனதில், “நம்ம ஒரு பையனா பிறந்திருந்தா… இப்படி அப்பாவ விட்டு போகும் படி ஆகி இருக்காது” என்று எண்ணமிட்டாள்.. ஆனால் வெளிக்கு காட்டவில்லை…

“என்ன பாப்பா… அமைதியா… இருக்குற.. நான் சொல்றேன் கேட்குறியா.. இன்னைக்கு மட்டும் இல்ல, இனி எப்பொழுதுமே முதல் பிரசாதம் நீ என்னோட மாப்பிள்ளைக்கு தான் கொடுக்கணும்… ஏன்னா, நான் அவரை நம்பி தான் உன்ன கொடுத்திருக்கேன்…. இங்க என் பாப்பாவ நான் பார்த்துக்கிட்டது போல, என் மாப்பிள்ளையும், உன்ன பார்த்துப்பாரு… அதுனால… இனிமே எப்பவும் முதல் பிரசாதம் மாப்பிள்ளைக்கு தான்.. பாப்பா… பிரசாதம் மட்டும் இல்ல… எல்லாமே… புரியுதா குட்டிமா?” என்று அவளது தலையை வாஞ்சையாக தடவ, இழையினியோ எதுவும் சொல்லமால் கண்கலங்க தலையை மட்டும் உருட்டினாள்..

ராகவன் மகளிடம் சாதாரணமாக சொல்வது போலவே, தனது மருமகனுக்கும் மறைமுகமாய், இழையினியை நன்றாக கவனித்துக்கொள்ளும் படி பொருள் பொதிந்து கூறியதை ஆதவனும் கண்டுக்கொண்டான்…

ஆதவனுக்கோ, அவரது மாமானாரின் மனம் புரிந்தாலும், அந்த நொடி அவர் மீது மதிப்பு ஏற்பட்டாலும், ஏனோ இழையாவின் முதல் அன்பு அவனுக்கு தான் என்ற கருத்தை மட்டும் அவன் மாற்றிக்கொள்ளவில்லை….

இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த மரகதமோ, ராகவன் மனநிலையை சரியாக புரிந்துக்கொண்டு, தன் கணவன் வருந்தக் கூடாது என்று நினைத்தாலும், அவருக்கு யாரும் ஆறுதல் சொல்லும் நிலை அவருக்கு என்றும் போல இன்றும் இல்லை… என் கணவன் எதையும் கை ஆளும் திறன் கொண்டவர் என்று எண்ணி, மீண்டும் தன் கணவனின் நடவடிக்கைகளில் கர்வம் கொண்டார்….

ராகவன் சொல்லி சென்றது போலவே, சிறிது நேரத்தில் வந்துவிட, இழையாவும் தலைக்கு குளித்து, ஈரம் தளர, கூந்தலை அள்ளி முடியாது, விரித்துவிட்டப்படி, சாப்பாட்டு மேஜை மீது பிரசாதத்தை வைத்துக்கொண்டு காத்திருந்தாள்… பிராசாதம் இன்னமும் அப்படியே எடுக்கப்படாமல் இருக்க, மகள் தான் சொன்னதை சரியாக புரிந்துக்கொள்ளவில்லையோ என்று தோன்ற, அதே நேரம் ஆதவன் சரியாக வீட்டினுள் நுழைந்தான்….

ஆதவன் வாசல்புறம் இருந்து வருவதை பார்த்ததும், ராகவன் சரியாக புரிந்துக்கொண்டார்… மருமகன் வருகைக்காகவே தனது மகள் காத்திருக்கின்றாள் என்று… இத்தனை வருடங்களை சுழன்ற உலகம் ஏனோ மகளின் பாசத்தில் ராகவனுக்கு இன்று வேறாக தோன்றியது… ஆனாலும் என்றும் போலவே, இன்றும் தன் மகள் தன் வார்த்தைக்கே மதிப்பு தருகிறாள் என்று என்ன, அந்த குழந்தை உள்ளம் கொண்ட தந்தை மனம் பெருமையில் விம்மியது….

ஆதவன், ராகவன் இருவரும் ஒரு சேர சாப்பாட்டு மேஜைக்கு வர, இழையினி கண்கள் ராகவனிடம் வினாடிக்கும் குறைவான நேரத்தில் படிந்து மீள, அந்த பார்வையில் ராகவன் தனது மகள் பிறந்தவுடன் அந்த சிறு விழியை திறந்து அவரை பார்த்த நொடிக்கு தள்ளப்பட்டார்…. அந்த சிறு பார்வைக்கு பிறகு, ஆதவனிடம் முதல் பிரசாதத்தை தர, ஆதவன் எதையோ வென்ற உணர்வை பெற்றான்….

 

மரகதம், நடந்தவற்றை இதழாவிடம் கூறியிருக்க, இதழாவோ தன் அக்காவின் மீது ஆதவனுக்கு இருந்த அன்பையும், அதே நேரம் தன் தந்தை, தமக்கைக்கு ஏதும் மனசலனம் வராமல் இருக்கவும், சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு, “அக்கா… மாம்ஸ் க்கு பிரசாதம் கொடுத்துட்டியா.. ? நான் இன்னைக்கு அப்பாக்கு கொடுக்கிறேன் கா.. ப்ளீஸ்.. என் செல்ல அக்கா..ல” என்று வழக்கமான துடுக்கு தனம் நிறைந்த குரலில் இதழா கூற, தந்தையிடம் பிரசாதம் கொடுக்க எத்தனித்த இழையா… ஒரு மென் முறுவலுடன் இதழாவிடம் நீட்டினாள்….

 

இதழாவும் வாங்கி கொண்டு, ராகவனுக்கு வெண்பொங்கல் கொடுத்து, திருநீறை கீற்றாக அவர் நெற்றியில் இதழா வைத்துவிட, அவள் செய்கையில் ராகவனது மனமும், இழையினி மனமும் லேசாக மாறியது…

 

இது சாதாரண நிகழ்வுதான் என்றாலும், அந்த சாதாரண நிகழ்வில் இன்று நடந்த மாற்றம் பெரிது இல்லை என்றாலும், ஒரு பாச வளையத்தினுள் சுற்றி வந்த பாச பறவைகளுக்கு, திடுமென வளையத்தை விட்டு திசை மாறி போவது கடினம்… அந்த நிலை தான் ராகவனுக்கும், இழையினிக்கும்…

 

ஆனால் வெளியில் தெரியாமல், மென் நூல் இழை போல் அவர்கள் நெஞ்சில் இருந்த வலியை, இதழா இலகுவாக அகற்றி.. மேலும் அவர்கள் கவனத்தை திசை திருப்ப, அவளது குறும்பு பேச்சை தொடர்ந்திருந்தாள்…..

 

அப்பொழுது சரியாக அங்கே மகிழன் வந்து சேர்ந்தான்… நேற்றிலிருந்து, அவன் வீசி எறிந்த கார் சாவியை தேடி தேடி கலைத்து வந்திருந்தான்… மாற்று சாவி கொண்டு வந்திருந்தாலும், அசல் சாவியில் தானியங்கி பூட்டு வசதி இருந்ததனால், அதை ஆதவன் அறியாமல் தேட, நேற்று இரவு தோட்டத்திற்கும், பிறகு, கடை தெருக்கள் பக்கம் போகும் சாலைவழியும் தேடிக் கொண்டு இருந்தான்… இந்த நொடி வரை கிடைக்காதனால், சலிப்பு தட்ட, ஆதவனை தேடி வர, சாப்பாட்டு மேஜை-யில் ஒரு மாநாடு நடந்துக்கொண்டு இருப்பதை பார்த்து, வாயெல்லாம் பல்லாக வந்து அமர்ந்தான்… காரணம், அந்த மாநாட்டை தலைமை தாங்கியது, அவனது லட்டு குட்டி அல்லவா…

 

வந்து ஆதவன் அருகில் அமர்ந்தவன், பார்வையால் இதழாவிடம், “லட்டு குட்டி… என்ன டா இனிக்க இனிக்க பேசிட்டு இருக்க..? ” என்று மைண்ட் வாய்சில் கேட்க, இதழாவோ காரமான முறைப்பை அவனிடம் கொடுத்து விட்டு பேச்சை தொடர்ந்தாள்….

 

“மாமா.. கிளம்புறதுக்கு முன்னாடி… ஏதாவது விளையாடலாமா? ப்ளீஸ்..” – இதழா..

“ஐயோ, இதழ்.. என்னமா என்ன நீ சின்ன பையன்னு நினைச்சியா. ? அதெல்லாம் வேணாம் மா…” என்று கூறிய ஆதவன், மனைவியுடன் தனியே நேரம் செலவிட எண்ணி, இதழாவின் கோரிக்கையை தவிர்த்தான்…

“மயிலு. மாமாட்ட விளையாடாம.. இந்த எரிமலைய போய் கூப்பிடுறியே… ” – மகிழன் மனதில்…

அவனது பார்வை புரிந்தவளாக இதழாவோ, “சரியான கொல்லி கண்ணு… எப்படி பார்க்குறான் பார்.. ” என்று மனதினுள் எண்ணமிட்டாள்.

“ஆமாம் இதழா, விளையாட்டெல்லாம் வேணாம்.. நான் அப்பா கூட கொஞ்ச நேரம் பேசணும்” – பிரிவின் ஏக்கத்துடன் ஒலித்தது இழையினி குரல்.

 

அதோடு, தனது தந்தைக்கு… தான் கூறாமலே எப்படி என் மனம் அறிந்தது என்ற கேள்வியும் கேட்க நினைத்தாள்… மாப்பிள்ளை மாறி இருந்தாலும், ஆதவன் தான் மாப்பிள்ளை என்று அறிந்தால், என் மனம் சந்தோசம் கொள்ளும் என்பதை அறிந்தே, அவர் அன்று என்னை கண்களால் மாப்பிள்ளை -யை பார்க்கும் படி செய்கை செய்திருக்கிறார் என் தந்தை… அப்படி என்றால், என் மனதில் இருந்தது அவருக்கு எப்படி தெரியும்.. இதுவரை ஆதவனிடமே அவள் சொன்னது இல்லையே.. என் கண் அசைவிலே என் தந்தை கண்டுக்கொண்டாரா? அதை கேட்க தான் அந்த பேதை நெஞ்சம் துடித்துக் கொண்டு இருந்தது…

 

ஆனால் இழையினி கூறியதை கேட்ட, ஆதவனது மனமோ, “நான் உன் கூட நேரம் செலவு பண்ண யோசிச்சா.. நீ ஏன் இழையா, இப்பவும் உன் அப்பா கிட்ட பேசணும்னு நினைக்கிற.. ? உன்ன எப்படி மாத்த போறேன்… உனக்காக…. இவ்ளோ சீக்கிரம் எழுந்து, திறக்காத கடைய திறக்க வச்சு, உனக்கு பரிசு வாங்கிட்டு வந்து, அதை தனிமையில உன்கிட்ட கொடுக்கணும்.. என் காதல சொல்லணும்னு வந்தால், நீ அப்பா கிட்ட பேசணும், ஆட்டுக்குட்டி ட பேசணும்னு நினைக்கிற… ” என்று எண்ணமிட்டது…

 

ஒவ்வொருவரின் மனபோராட்டத்தை அறியாத மகிழனோ, ஆதவன் கை மறைவில் வைத்திருந்த, துணி பையை பார்த்துவிட, அது என்ன என்று யோசிக்க தொடங்கினான்….

 

இப்பொழுது ஆதவனுக்கு, இழையினி அவள் தந்தையுடன் பேசபோவது பிடிக்காமல் போக, அவளுடன் அவன் நேரத்தை செலவு செய்ய யோசித்தான்….

 

மீண்டும் இதழா, “ச்சா போங்க பா.. யாரும் வரமாட்றீங்க” என்று சலித்து கொண்டு மேஜையை விட்டு எழுந்திரிக்க, ஆதவன் சட்டென யோசித்தவனாக, “இதழா.. ஒகே நம்ம விளையாடலாம்…இழையா… இதழா சின்ன பொண்ணு… அதுனாலா அவ கேட்டதுக்கு சரி சொல்லலாம் ” என்று கூறி புன்னகைக்க, அதை அங்கு இருப்பவர் அனைவரும் இலகுவாக எடுத்துக் கொள்ள, இழையினி மட்டும் தந்தையிடம் தனியே பேசவே முடியாமல் போவதை எண்ணி மன சுனக்கம் கொண்டாள்…

 

விளையாடுவது என்று முடிவாக, பாட்டு போட்டி என்று இதழா கூற, அனைவரும் ஆமோதித்தனர்… ராகவன், மரகதம் கலந்து கொள்ள மறுத்துவிட, அவர்கள் பார்வையாளர்கள் ஆனார்கள்…

 

இதழா, இழையினியை பார்த்து, பாட்டு போட்டி நடத்துபவரை போல, குரலை செருமிக்கொண்டு, “இழையினி… நீங்க உங்களுக்கு பிடித்த பாடலை பாடி தொடங்கி வைக்கவும்…” என்று கூற, இழையினியோ மனதில் அவளது வாழ்கை, முக்கியத்துவம், அவளது உலகம் அனைத்தும் ஒரே நாளில் மாறிவிட்டத்தை எண்ணி மறுகிக் கொண்டு இருந்தவள் பாட்டை தொடங்கினாள்…

 

“நேற்று இல்லாதா மாற்றம் என்னது

காற்று என் காதில் ஏதோ சொன்னது…..” – ‘து’ என்ற எழுத்தோடு இழையினி முடிக்க, ஆதவன் தொடர்ந்தான்…

 

”தூவானம் தூவ தூவ

மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை

நானே கண்டேன்” என்று காதல் கலந்த குரலில் ஆதவன், இழையினியை பார்த்தவாறு பாட, ‘ன்’ என்ற எழுத்தில் பாட்டு நிறைவு பெற, அடுத்து மகிழன் ‘நா, நீ, ந,’ அந்த வரிசையில் பாட நேர்ந்தது…

 

“நீ இருந்தால் நான் இருப்பேன்

நீ  நடந்தால் நான் நடப்பேன்

நிழலுக்கெல்லாம்  குடை பிடிப்பேன்

நீ என்  காதலியானால்…”  என்ற வரிகளை, மகிழன் இதழாவை பார்த்து முதன் முதலில், அவனது காதலை சொல்லும் முயற்சியில் இறங்கினான்… இத்தனை நாட்கள், அவளோடு பேசவே பல திட்டங்கள் போட்டு அனைத்தும் தவிடுபொடியாக, இன்று இந்த யுக்தியை கையாண்டான்….

 

ஆனால் அவனது எண்ணத்தை சரியாக புரிந்துக்கொண்ட இதழாவோ, மகிழனிடம், “இப்போ நான் அ வரிசையில ஆரம்பிக்கணும்…” என்று கூற, ஆதவனோ, “இல்ல இதழ், ல வரிசை தான் மா…” என்று கூற, மகிழனோ, “நண்பா.. அ தான் டா… அவுங்க சரியா தான் சொல்றாங்க… நீங்க பாடுங்க…” என்று இதழாவிற்கு வக்காலத்து வாங்கி பேசிக்கொண்டு இருந்தான்…. அவளின் உள்நோக்கம் புரியாமல்.

 

இது தான் சமயம் என்று, மகிழனை முறைத்தபடி, பாட தொடங்கினாள்…

 

“அடி டா அவன உதை டா அவன விட்றா அவன தேவையே இல்ல…” என்று ஒரு பாட்டை, பாதியில் இருந்து எடுத்து, பற்களை நறநறவென கடித்தப்படி மகிழனை பார்த்து பாட, மகிழனுக்கோ புரை ஏற தொடங்கியது…

 

அவனது மனமோ, “சாங் பாடி சைலெண்டா லவ்வ சொல்லலாம் பார்த்தா, இவ இப்படி வையலெண்டா இருக்கா.. மகிழ் உன் பாடு ரொம்ப கஷ்டம் டா. எங்குட்டு போனாலும் கேட்டு போடுறா…” என்று புலம்பியப்படி பெருமூச்சு விட்டான்…

 

அவனுக்கு புரை ஏறவும், போட்டி மறந்து அவனுக்கு அனைவரும் என்னவென்று பார்க்க, “ஹி ஹி .. ஐ அம் பைன்…” என்ற சிரிப்புடன், அனைவரது கவனத்தை திசை திருப்பும், நோக்குடன், “ஐயோ என்ன விடுங்க.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. நண்பா.. கை ல என்னடா.. ? ஏதோ நகை கடை பை போல இருக்கு…” என்று அனைவர் முன்னிலையிலும் கூறிவிட, இதழாவோ, அதை இப்பொழுதே பிரிக்கும் படி கேட்க ஆரம்பித்தாள்….

 

ஆதவன் கையிலிருந்த பையில் இருந்தது… ஒரு அழகிய வெள்ளி கொலுசு… அவனது தேவதையை முதன் முதலில் சந்திக்கும் ஆவலை தந்து, அவளை தேடி செல்ல தூண்டிய அவளுடைய பாதத்திற்கு தான் அவன் அதை வாங்கி வந்திருந்தான்… எந்த பாத அழகில் மதி மயங்கினானோ… எந்த பாதத்துக்கு உரிய பெண்ணை தேடி அலைந்தானோ… எந்த பாதத்தை வைத்து அவளை மணமேடையில் கண்டுக்கொண்டானோ.. எந்த பாதம் பிடித்து, விரலில் மெட்டியிட்டானோ… அந்த பாதத்திற்கு, அவன் ஒரு பரிசை யோசித்து, பார்த்து பார்த்து, அலைந்து திரிந்து அந்த அதி காலையில் வாங்கி வந்திருந்தான்.. அழகிய, மூன்றே சலங்கைகள் கொண்ட கொலுசு…

 

அதை அவள் அணிகின்ற நொடி, அவன் காதலையும் சொல்ல நினைத்திருந்தான்… அதனால் தான், அந்த நேரத்தில், இழையினி அவள் தந்தையுடன் பேசவேண்டும் என்று சொன்னதை கூட அவன் உள்ளம் விரும்ப வில்லை…

 

அவன் ரசனையோடு கொடுக்க நினைத்த பரிசை, மகிழன் கண்டுக்கொண்டதால், இதழாவின் வேண்டுதலால், தட்டமுடியாமல், அதை எடுத்தான்….

 

இருந்தாலும், அவன் முதன் முதலாக அவளுக்காக வாங்கிய பரிசை கொடுக்கும் தருணத்தை, அழகாக அவனது மனதில் சேர்த்து வைத்தப்படி, “இது என்னோட இழையாக்காக….” என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி, உதட்டில் மென்மையான குறுஞ்சிரிப்பு தவழும் படி கூறினான்…

 

அதை இழையினி பிரித்து பார்க்க, அவளுக்கு அந்த கொலுசு.. மனதில் ஒரு நெருக்கத்தை தர, அவளும் கணவனை புன்னகையுடன் ஏறிட்டாள்… இத்தனை நேரம் இருந்த சுணக்கத்தை சற்று ஒதிக்கி வைத்தவளாக… அவர்களின் பார்வை பரிமாற்றத்தை பார்த்து, அனைவரும் அவ்விடம் விட்டு நகர, ஆதவனோ அவர்களை தடுத்தான்…

 

” ராகவன் அப்பா, அத்தை, இதழ் எங்க போறீங்க.. மகிழா.. ” என்று கூறியவன், அந்த கொலுசை எடுத்து, இழையினிக்கு போட்டுவிட முனைய, இழையினியோ கன்னங்களில் வெக்க சிவப்பு ஏற, அதை அவனிடம் இருந்து வாங்கிக்கொண்டாள்…

 

“என்ன பண்றீங்க.. கொடுங்க நானே போட்டுகிறேன்…” என்று வெக்கத்தை மறைக்க முயன்று தோற்றப்படி கூற, அந்த தோல்வி கூட, வெற்றியின் உவகையை இழையினிக்கு அளித்தது…

 

“என் மனைவி.. நான் போட்டு விடுறேன் .. ஊரே நிறைஞ்சு இருக்கும் போது, கால் பிடிச்சு, மெட்டி போட்டா, சரி னு சொல்றீங்க… இங்க வீட்டுக்குள்ள கொலுச போட்டா.. வேணாம்னு சொல்லறீங்க.. என்னடா இது… எந்த ஊரு நியாயம் இது? ஏன் அப்பா நான் சொல்றது சரிதான? ” என்று மனைவியில் ஆரம்பித்து, மாமானரிடம் ஆதவன் முடிக்க, அவனது சேட்டையில் இழையினிக்கு முகம், குங்குமமென சிவந்தது…

 

ராகவனுக்கோ, இத்தனை நேரம் இருந்த மன கலக்கம், பெண்ணை பிரிகின்ற வலி, ஆதவன் கண்களில் துளிர்த்த பொறாமை என அனைத்தும் ஒரு நொடியில், ஆதவன் முன் நிற்கும் பனித்துளியாய் கரைந்தது… அதாவது, இந்த ஆதவன் அன்பின் முன் ராகவனது நெஞ்சில் இருந்த கலக்கம் பனித்துளியாய் கரைந்தது….

 

“சரி தான் மாப்பிள்ளை…” என்று அவருடைய கம்பீரமான குரலில் கூற, இதழா, மரகதம், மகிழன் என அனைவரும் சிரிக்க, இழையினி கொலுசை எடுத்துக்கொண்டு, யாருடைய முகத்தையும் பார்க்காமல் ஓடி செல்ல, அவளை பின் தொடர்ந்தது, ஆதவனது குரல்….

 

இப்படியே கலகலப்பாக நேரம் கழிய, இழையினி அவள் தந்தையிடம் கேட்க நினைத்த விஷயத்தையும் அவள் கேட்க முடியவில்லை… ஆதவன்  அவள் பாதத்தில் கொலுசை அணிவித்து, காதலை சொல்ல நினைத்திருந்த சிந்தனையும் நிகழவில்லை… ஆதலால், அவன் அவளிடம் அவன் காதலித்த கதையை சொல்லும் தருணத்தை தள்ளி போட்டான்… அதை ரசித்து, வாழ்கையில் மறக்கவே முடியாதபடி ஒரு ரம்யமான சூழலில் தான் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தான்…

 

அதன் பிறகு மறுவீடு முடிந்து, ஆதவன், இழையினி, மகிழன் மூவரும் கிளம்ப, பிறந்த வீட்டு சீராக… பல பெரிய தூக்கு வாளிகள் குமிய, அதையும் அடுக்கினப்படி.. அங்கிருந்து கிளம்பினர்…

 

இழையினியின் கண்கள், ராகவனை பார்க்க, ஆதவன் கிளம்பும் வேகத்தில் இருக்க, மகிழனோ மனதில் இதழாவை பார்த்தப்படி, “வண்டி சாவியும் கிடைக்கல, மயிலோட மனச திறக்க, காதல் சாவியும் கிடைக்கல…” என்று பெரு மூச்சு விட்டப்படி சென்றான்….

 

ராகவன் கண்களில் இருந்து மறையும் வரை, இழையினி அவரையே பார்த்துக்கொண்டே போக, அவள் விழிகளில் நீர் பெருகியது… அதே போல, அவர்கள் சென்ற கார், புள்ளியாக மறைந்த பின்னும், ராகவன் கண்களில் வேதனை குறைந்தப்பாடில்லை…. வாழக்கையில் அவர் எதற்காகவும் அழுது பார்த்திடாத மரகதமே ஒரு நொடி அதிர்ந்து நின்றார்..

அவர்கள் சென்ற பின், தனது அறையில் சென்று சிரிக்கும் சிறு வயது இழையினியின் புகைப்படத்தை பார்த்தவர் தோள்களில் மரகதம் கை வைக்க, ஒரு மென்மையான சிரிப்புடன், துண்டை உதறி, தோளின் மீது போட்டப்படி, “கொஞ்சம் காடு வர போய்ட்டு வரேன்… ” என்று கூறியப்படி நடந்தார்…

 

பெண் பிள்ளைகளை, அருமை பெருமையா பெற்று, பாராட்டி சீராட்டி வளர்த்த, அனைத்து பெற்றோர்களும் சந்தித்து கடக்கவேண்டிய முக்கியமான பாதை மட்டும் அல்ல… மிகவும் கடினமான பாதையும் கூட… அதை ராகவனும், மரகதமும் கடக்க முயன்று கொண்டு இருந்தனர்…

 

கிளம்பிய மூன்று மணி நேரத்தில், ஆதவன், இழையினி, மகிழன் மூவரும் அத்தியூர் அரண்மனை வாசலை அடைய, முன் தாழ்வாரத்தில் இருந்த மூவரை கண்ட ஆதவன், இழையினிக்கு வெவ்வேறு உணர்வுகளும், நினைவுகளும் தோன்றின…

 

இழையினியின் விழிகள் சிறு அதிர்ச்சியையும், ஆதவனது மனதில் சிறு குழப்பமும் படர, ஆனால் அதை வெளிக்காட்டாது…. வந்தவர்களை நோக்கி, வரவேற்கும் புன்னகையை உதிர்த்தப்படி, கம்பீரமாக அவர்களை நோக்கி முன்னேறினான் ஆதவன்….