Advertisement

மயிலிறகு – 12

 

ஆதவனுக்கு அந்த ஓரிரு நொடிகளில், பக்கவாட்டில் குனிந்து நிமிர்ந்த மனையாளின் கழுத்தில் ஊசல் போல முன்னும் பின்னும் ஆடியது, தான் அன்று அவள் கழுத்தில் தாலி என்று கூறி அணிவித்த தங்க சங்கலியோ என்ற எண்ணம் துளிர்க்க, ஒரு நொடியும் தாமதிக்காது, அவன் பார்வையை இழையினியின் பக்கம் திருப்ப, அதற்குள் இழையினியின் குனிந்த நிலை மாறி மண்டியிட்ட நிலையில் எழ எத்தனிக்க, பெரியவர்கள் அவர்களுக்கு ஆசி கூறி முடித்திருந்தனர்….

 

அதன் பின் பெரியவர்கள் பேசிக்கொண்டு இருக்க, பன்ணை ஆட்களும், சமையல் காரர்களும் சேர்ந்து விரைவாக அறுசுவை உணவை தயாரித்திருந்தனர், பார்வதி பாட்டியின் உத்தரவு படி, வேதா அம்மாவின் மேற்பார்வையில்… பார்வதி பாட்டி, மரகதம் அம்மாளுடன் மிக பாந்தமாக பேச, மரகததிற்கு மகளின் புகுந்த வீட்டை பற்றிய கவலை குறைந்தது….

 

ஆதவன் ராகவனிடம், விவசாயத்தை பற்றியும் இதழாவின் படிப்பு பற்றியும் அவர்களிடம் உரிமையுடன் பேச, ராகவனுக்கு ஆதவன் மனதளவில் நெருங்கிக்கொண்டே இருந்தான்….

இதழா, இழையினிக்கு துணையாக இருக்க, வேதா அம்மாள் கிடைத்த நேரம் வந்து இழையினியிடம் இன்முகத்தோடு பேச, இழையினி கீழிருந்த ஓர் அறையில் , முகூர்த்தப் புடவையை மாற்றிக்கொண்டு எளிமையான கிளிபச்சையும், கடல் நீளமும் கலந்த பட்டுப்புடவையை கட்ட, பார்வதி பாட்டி வந்து அவளுக்கு தலை நிறைய குண்டு மல்லியை சூட்ட, அது அழகாக அவள் தோளில் சரிந்து கூத்தாடியது….

 

ஆதவனுக்கு ராகவன் மீது மரியாதையே இருந்தது…. வந்தவர்கள் அனைவரும் மறுவீடு அழைப்பிற்கு தேதி பார்க்க, இன்றிலிருந்து மூன்றாவது நாள், ஆதவனும் இழையினியும் விராலிமலைக்கு மறுவீட்டிற்கு போவதாக முடிவு செய்யப்பட்டது. இன்று மாலையே ராகவனது வீட்டினர், அனைவரும் கிளம்புவதாக முடிவாக, இதழாவை மட்டும் மூன்று நாட்களுக்கு இழையினியின் பெண் தோழியாக இருக்கப்போவதாக முடிவு செய்யப்பட்டது.

 

அவ்வூரில் அனைவரும் ஆதவனது திருமண செய்திக்கேட்டு உறவுகளும், நட்புகளும் திரண்டுவிட, அனைவரும் அன்று மாலை குழுமி இருந்தனர். அனைவரது பேச்சும் ஆதவன் , இழையினி ஜோடி பொருத்தத்தை பற்றி தான் இருந்து… பிறகு மெல்ல மெல்ல அனைவரும் மேக பொதிகளை போல களைந்துவிட, ராகவன் மற்றும் அவரது குடும்பமும் கிளம்ப ஆயுத்தமானார்கள்…..

 

ராகவன் மனம் சொல்லாமல் ஊமையாய் அழுக, இழையினியின் மனமோ வாய் விட்டு கதறும் குழந்தை போல் அழுதது… இழையினின் கண்கள் வற்றாத காவேரியாய் கண்ணீர் உகிர்க்க தொடங்க, அவள் கண்கள் கண்ணீர் சிந்துவதை, இரு ஜீவனால் ஜீரணிக்க முடியவில்லை. ஒன்று ராகவன், மற்றொன்று ஆதவன்.

 

“பாப்பா.. இங்க வா…” என்று ராகவன் அழைக்க, கட்டவிழ்த்த கன்றாக இழையினி துள்ளி ஓடினாள் ராகவனிடம்.

 

“எதுக்கு அழுகுறீங்க…நீங்க அழுமூஞ்சி பாப்பாவா… என்னோட இழையினி பாப்பா” என்று ராகவன் குழந்தையிடம் கேட்பது போல் கேட்க, வேக வேகமாக கண்களை துடைத்தவள் அவரிடம், “நான் ஒன்னும் அழல…” என்று சிரிக்க முயன்று மறுபடியும் உதடு பிதிக்கி அழ தொடங்கினாள்….

 

அவளது தந்தை மீதான பாசத்தை பார்த்த ஆதவனுக்கு சற்று லேசாக பொறாமை துளிர்விட்டது….

 

“மாப்பிள்ளை ஒரு நிமிஷம்” என்று ராகவன் ஆதவனிடம் கூற, ஆதவனும் இதழ் பிரிக்கா சிரிப்புடன் தலை அசைக்க, ராகவன் இழையினியுடன் மெல்ல முன் தோட்டத்து பக்கம் நடக்க தொடங்கினார்.

 

“பாப்பா… அப்பா சொன்னா கேட்ப்ப தானே ..?” – ராகவன்

 

“ஹ்ம்ம்ம்ம் ” – கேவழுடன் இழையினின் குரல்

 

“வாழ்க்கை ஒரு ட்ரைன் பயணம் போல… ஒவ்வொரு இடத்துக்கும் நம்ம வாழ்க்கையில கடந்து போய் தான் ஆகணும்… எப்பயும் வாழ்கையில மாறாதது, மாற்றம் மட்டும் தான்….

 

இப்படி அழு மூஞ்சி பெண்ணாவா அப்பா உன்ன வளர்த்தேன்…? எப்பவும் உன்கூட இருந்த நான் இப்ப கொஞ்சம் தள்ளி இருக்க போறேன் அவ்வளவுதான்…

 

புரியிதா… எப்பொழுதும் என் பாப்பா தான் என் உயிர்… எப்ப அப்பா கிட்ட பேசணும்னாலும் உடனே ஒரு போன் அடி குட்டிமா…” என்று கூறி வாஞ்சையாக அவளது தலை முடியை வருடிக் கொடுத்தார்.

 

சரி என்று தலை அசைத்தவள் மெதுவாக உதடுகள் பிரித்து சிரிக்க…”பாப்பா… இனிமேல் எப்போவும் நான் சொல்ற விஷயங்கள மனசுல நிறுத்திக்கணும்…

எந்த ஒரு முடிவு எடுக்குறதுக்கு முன்னாடியும் ஒரு முறைக்கு நூறு முறை யோசிக்கணும்… எப்பயும் மனம் தளராம, வாழ்க்கைய ரசிச்சு வாழணும்..எது நடந்தாலும்…எந்த ஒரு காரியத்துளையும், உனக்கு னு ஒரு பக்கம் இருக்கிறது போல, அடுத்தவங்களுக்கும் ஒரு சரியான காரணம் இருக்கும்…

 

இது, நான் உனக்கு எப்பவும் சொல்றது தான்… இருந்தாலும் மறுபடியும் சொல்றேன் நீ புத்திசாலி பொண்ணு.. பார்த்து இரு டா…” என்று இழையினியிடம் சிறுபிள்ளைக்கு கூறுவது போல, கூறிவிட்டு அவரது கலங்கிய மனதை இழையினிக்கு தெரியாமல் மறைத்து புன் முகத்துடன் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

 

என் தந்தையே

 

என் விரல் பிடித்து

நடைபழக்கிய நீங்கள்

நான் விரல்விரித்து

தனியே நடக்க

கற்று தருவதற்காகவே

நம் பிரிவின் கணம் மறைக்க

நின்றன் மனம் மறைத்து

நடிக்கவும் கன்றுக்கொண்டீர்களோ?

 

                                                             — ராசி

 

ஆதவனின் குடும்பத்து நபர்கள், மற்றும் வேலையாட்கள் மட்டும் இருக்க மற்ற சுற்றங்கள் அனைவரும் கிளம்பி சென்று இருந்தனர்…

ஆதவன் எண்ணம்  முழுதும் அவன் அணிவித்த சங்கலியை பற்றியே சுழல, இழையினிக்கோ இப்பொழுது தான் ஆதவனை பற்றி யோசிக்க அவளது மனம் சற்று அமைதி அடைந்து இருந்தது…ஆதவனை பற்றி நினைக்க ஆரம்பித்த நொடி தானாக, அவன் அனுவித்த சங்கலியை வருடியவள் அன்று அவன் சொன்னா வார்த்தைகள் அவள் காதில் ரீங்காரம் போட தொடங்கின.

 

“ஒரு நிமிடம், இவள் என் மனைவி தான்… அதுக்கு இப்ப என்கிட்டே இருக்க, என்னால பண்ண முடிந்த காரியம் இது தான்…”

 

இந்த வாக்கியம் ஆதவன் அன்று கூறியது… இன்று அவள் உண்மையாகவே ஆதவனது மனைவி. அது அவளது மனதில் நிம்மதி தந்தது…. பெயரளவில் கூட மாற்றானின் அருகில் மனைவி என்று அன்று நிற்கவில்லை. கொண்டவன் அருகினிலே அன்றும் நின்று இருக்கிறாள் என்ற நிம்மதி அது.

 

அப்போது தான் அவளுக்கு, அவரது தந்தை எப்படி கண்டறிந்தார் என்ற அதி முக்கிய கேள்வி உதயமாக, தந்தையிடம் நிச்சயம் இதை கேட்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

 

அதை தொடர்ந்து, அவளது மனம் மீண்டும் கோத்தகிரிக்கு செல்ல ஒவ்வொன்றாய் அவள் நினைவலையில் அடுக்கடுக்காய் தோன்ற, திடீர் என்று ஆதவன் அன்று கூறிய வார்த்தை அவள் சிந்தையில் உதித்து அவளுக்கு பேரிடியை தந்தது…

 

அவளுக்கு அதிர்ச்சி தந்த வாக்கியம் இவை தான்….அன்று ஆதவனின் அழுத்தமான உதடுகளில் இருந்து வெளிவந்த வார்த்தைகள்….

“ஸ்டாப் இட்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத, நான் காதலித்த பெண்ணை விட்டுட்டு, உனக்கு அவமானம் வரக்கூடாதுன்னு நான் செய்ததுக்கு, நீ என்னை நிற்க வச்சு கேள்வி கேட்குற…. அது தான் நீயே சொல்லிட்டியே… இது ஒன்னும் தாலி இல்ல… ஜஸ்ட் கயிறு தான் னு… அப்புறம் என்ன… கழட்டி எறிஞ்சிட்டு போக வேண்டியது தான… நானும் இதை தாலி-னு யோசிச்சு உன் கழுத்துல கட்டல… இடியட் இடியட்

 

உனக்கு போய் உதவி செய்யனும்னு நினைச்சது என் தப்பு தான்… என்ன தையிரியம் இருந்தா என் சட்டைய பிடிப்ப… உன்ன… “

 

“அவரு காதலிகிறதா சொன்னாரே… அப்போ அவரு ஏன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாரு… ” என்ற கேள்வியே அவளது உள்ளத்து எழும்பி, பெரிய பெரிய தீகற்களை அவள் நெஞ்சின் மீது எரிந்துக்கொண்டு இருந்தது… இதை அவனிடம் இன்றே கேட்க இழையினி முடிவு செய்தாள்.. அப்போது சரியாக அவளது தந்தை சொன்ன அறிவுரையின் மூணாவது வரி நினைவு வர, ஆதவன் தரப்பும் காரணம் இருக்கும் என்று நினைத்து, அவளது குழப்பத்திலும், துயரத்திலும் சற்று நிதானமாகவே இருந்தாள்… இழையினி ராகவன் பெண்ணாயிற்றே….

 

இதழாவிற்கு ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, மகிழன் அவனது இல்லத்துக்கு சென்று விட, பெரியவர்களும் இரவு உணவை முடித்துக்கொண்டு தத்தம் அறையில் முடங்கிவிட, வேதா அம்மாள் மட்டும், ஆதவன் அறைக்கு செல்லும் மச்சுபடியை காட்டி, புன்னைகையோடு விடைக்குகொடுக்க, இழையினி கேள்வியோடு படியேறினாள்.

 

மறுப்புறம் ஆதவனோ, அவளுக்குள் தன் மீது எந்த உணர்வும் தோன்றவில்லையோ… அந்த சம்பவம் அவள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையோ… என்று அவன் மனதில் இவ்வாறாக  சிந்தனையோட அலகரிக்கப்பட்ட கட்டிலின் மறுப்புறம் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக்கொண்டு இருந்தான்…

 

கதவு திறக்கும் ஓசைக்கேட்டு இழையினி உள்ளே வர, அவளையே இமைக்க மறந்து பார்த்தான்… அவன் மனதில் அவள் நிறைந்திருக்கிறாள்….. இழையினி மனதில் அவன் மீது காதல் இல்லை என்றாலும், அந்த சம்பவம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததே அவனது ஏக்கம்.. அந்த ஏக்கம் அவனுக்கு கோவமாக மாறியது…

 

உள்ளே வந்தவளுக்கு, அடுத்து என்ன செய்யவது.. எப்படி பேசுவது என்று தயக்கம் தோன்ற, மெல்ல வெளி உயர்த்தி ஆதவனை பார்க்க, ஆதவன் மார்புக்கு குறுக்கே கை கட்டியப்படி அவளையே ஊடுருவி பார்த்தான்…

 

“ஏன் அங்கயே நிற்கிற… ? உள்ள வா… ” – ஆதவன்

 

மெதுவாக வந்தவள் அவனை விட்டு தள்ளி சற்று எட்ட நின்றப்படி அவனை பார்ப்பதும், பிறகும் குனிவதுமாய் இருக்க, அவளது முகத்தில் லேசாக வியர்வை துளிர்க்க ஆரம்பித்தது… அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் ஓரிரு நிமிடங்கள் பொறுத்து… “என்கிட்ட ஏதாவது சொல்ல நினைகிறியா…?” என்று கேட்க, அவளோ அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்து, ஆமாம் என்பதை தலை அசைத்து, “ஹ்ம்ம் .. உங்ககிட்ட அப்போதே நன்றி சொல்லணும் னு நினைத்தேன்… ஆனா அப்போ சூழ்நிலை சரி இல்லை… அது தான்…” என்று கூறினால் இழையினி.

 

“ஹ்ம்ம் சொல்லு… ” – ஆதவன்

“என்ன சொல்ல..?” – இழையினி

“நன்றி சொல்லனும்னு சொன்னியே…?” – ஆதவன்

“ஹ்ம்ம் ஆமாம் , ந…நன்றி ” – இழையினி

“நான் கூட உன்கிட்ட ஒன்னு கேட்கணும்…” – ஆதவன்

“ஹ்ம்ம்………… கேளுங்க….” – இழையினி

 

அவன் அந்த சங்கலியை பற்றி இதற்குமேல் அவனே யோசித்து குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து, கேட்க நினைத்தான்… ஏனென்றால் அவள் இப்பொழுதும் நிறைய நகைகளும், அதில் சிலவற்றை மட்டுமே சேலைமீது தெரியும்படியாக அணிந்திருந்தாள். ஆனால் அந்த நேரம் சரியாக இளநிவன், ஆதவனுக்கு கைபேசியில் அழைப்பு விடுக்க, அதை கைகளில் எடுத்தவன், இழையினியின் மீது ஒரு பார்வை பதித்தான்.

 

ஏனோ இழையினி அவன் முன் படபடப்பாக உணர, அவளுக்கு முத்துமுத்தாக வியர்த்தது… அதை கவனித்தவன், அவளது உடமைகள் அடங்கிய பேட்டிகள் அந்த அறையின் ஓரத்தில் இருக்க, அதை அவளிடம் காண்பித்து, “இழையா… இதுல உன் ட்ரெஸ் இருக்கு… வேற ட்ரெஸ் சேன்ஜ் பண்றதுனா பண்ணிக்கோ.. எதுக்கு இந்த வெயில் காலத்துல இப்படி ஒரு சருகை ட்ரெஸ்… நான் வெளியில போன் பேசிட்டு வரேன்… நம்ம கொஞ்சம் பேசணும்… ஆஹ் அந்த தாழ்ப்பாள் போட கொஞ்சம் டைட்டா இருக்கும்.. பார்த்து போடு…” என்று சொல்லிவிட்டு அவன் நகர, அழைப்பு நின்று இருந்தது….

 

மீண்டும் அவனே இளநிவனுக்கு முயல, நடந்தபடி வெளியே சென்றான்…அவன் பின்னோடு வந்தவள், தாழ்ப்பாளை சற்று அழுத்தி போட முயல, அவளால் அதை போட இயலவில்லை. ஆதவனை பார்க்க, அவனோ கைப்பேசியை காதுக்கு பொருத்தி சற்று தூரத்தில் முதுகு காட்டி நிற்க, இழையினியின் மனமோ, “இப்ப தான் போய் இருக்காரு… வரதுக்கு கண்டிப்பா டையம் ஆகும்….” என்று எண்ணியபடி கதவை தாழ் இடாமல் சாற்றியவள், அறை முழுக்க கண்களை ஓடவிட, பெரிய விசாலமான அறையில் ஒரு மறைவிடம் கூட இல்லை… பெரிய ஆளுயுர வேலைப்பாடு அமைந்த நிலைக்கண்ணாடி, அறையோடு பொருத்தப்பட்ட குளியலறை, அவ்வளவே அந்த படுக்கை அறையில் இருக்க, மீண்டும் கதவை திறந்து ஆதவனை பார்க்க, அவன் இன்னமும் அதே இடத்தில் நின்று இருக்க, வேகமாக அவன் வருவதற்குள் உடையை மாற்றிக்கொள்ளலாம் என்று நினைத்த இழையினி, உடையை எடுத்துக்கொண்டு குளியலைறை போக, அது முழுக்க முழுக்க நீர் தெரித்திருக்க, அங்கே அவள் உடை மாற்றினால் உடை வீணாக போய்விடும் என்று எண்ணியவள் வேகமாக தேவையற்ற நகைகளை கழட்டி நிலை கண்ணாடியின் மேஜை மீது வைத்தவள் , அதை விட வேகமாக அணிந்திருந்த சேலையை கலைந்தாள்.

 

வேகமாக , வெயிலுக்கு இதமான ஒரு பருத்தி புடவையை கையில் எடுத்தவள், அதை கட்டிக்கொண்டு இருக்கும் பொழுதே…. மறுப்புறம் இளநிவனுக்கு அழைப்பு கிடைக்காமல் போக, கைபேசியை பார்த்தபடி வந்தவன் அவள் ஆடை பாதி மட்டுமே அணிந்திருந்த நிலையில் உள்ளே நுழைந்தான்….

அவள் கொசுவத்தை சரி செய்துவிட்டு, முந்தானைக்கு மடிப்பு வைக்கும் தருவாயில் சட்டென்று வந்துவிட, ஒரு நிமிடம் அவன் கண்ட காட்சியில் அவன் தடுமாறி தான் போனான்…

 

அவளை அந்த கோலத்தில் எதிர்ப்பார்க்காதவன், அப்போது தான் அவளை உடைமாற்றி கொள்ளும் படி சொல்லி சென்றது நினைவு வந்தவனாக அவசரமாக, மிக அவசரமாக ‘சாரி…’ என்று கூற, அவன் குரல் கேட்ட பின்பே அவனின் வருகையை உணர்ந்திருந்தாள் இழையினி.

 

திடீர் என்று கேட்ட குரலில், படபடப்புக்கு உள்ளானவள் கையிலிருந்த முந்தானை பகுதியை நழுவ விட, அவள் ஆதவனுக்கு முதுகு காட்டி நின்று இருந்தாலும், எதிரில் இருந்த ஆதவன் அறை நிலைக்கண்ணாடி, இழையினிக்கு எட்டப்பனாக மாறி, அவளது முன் அழகை பிரதிபலிக்க, ஆதவன் மனம் பந்தய குதிரையாய் ஓடியது ஓரிரு நிமிடமே… அடுத்தவினாடி அந்த நிலைக்கண்ணாடி அவள் அழகு அவன் கண்களுக்கு புலப்படாமல், அவன் அவளுக்கு அணிவித்த சங்கலி மட்டும் அவன் கண்களுக்கு தெரிய, அவன் தேடலின் விடை அவனுக்கு கிட்டிவிட்ட நிம்மதியோடு அவளிடம் முன்னேறினான் அவளின் ஆதவன்.

 

அவன் குரலை அடுத்து, அவன் அருகில் வர தொடங்கவும் வேகமாக கீழே நழுவிய முந்தானையை மாரோடு சேர்த்து பிடித்தபடி, அவள் சற்று பின்னகர, அவளை நகர விடாமல் ஆதவன் கை அவளது தோளை பற்றி இருந்தது…. ஆதவன் என்ன செய்ய வருகிறான் என்று யோசிக்கும் முன்னே அவளது கழுத்தை தொட்டு, அந்த சங்கலியை அவன் கையில் எடுக்க, இலவச இணைப்பாக அன்று கோத்தகிரியில் அவன் கட்டிய மஞ்சள் நாணும் அவன் கைகளில் தவழ்ந்தது….

 

“என்ன பண்றீங்க.. ப்ளீஸ் விடுங்க…” – இழையினி

“நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல் இழையா…” – ஆதவன்

“இந்த மஞ்சள் கயிறு…” – ஆதவன்

“நீங்க அன்னைக்கு கட்டிட்டு உடனே கழட்டி எறிந்திட்டு போன அதே மஞ்சள் கயிறு…” – இழையினி

“என்னோட செயின் நீ கழட்டவே இல்லையா… ” – ஆதவன்

“கழட்டனும்னு தோணல… காரணம் எனக்கு தெரியல….” – இழையினி

 

இதை அவள் சொன்னதும், அவளை பற்றி இருந்த கையை எடுக்க, இழையினி இப்பொழுதும் மாரோடு சேலையை இறுகி பிடித்தபடி நின்று இருக்க, அவளின் அந்த கோலம் அவனது மனதில் ஒரு ஓவியம் போல பதிந்தது….

“சரி… நீ புடவையை கட்டிக்கோ, கட்டிட்டு என்ன கூப்பிடு… நான் வெளியில இருக்கேன்…” என்று கூறிவிட்டு விடுவிடுவென செல்பவனின் முதுகை வெறித்தபடி நின்றிந்தாள் இழையினி.

 

அறைக்கு வெளியில் நின்ற ஆதவன் மனம் இழையினியிடமும், அறைக்குள் நின்ற இழையினியின் மனம் ஆதவனிடம் தொக்கி நின்றது….

 

இருவரும் அவர் அவர் மனதில் எழுந்த கேள்விகளை அவரவர்களுக்கு உள்ளேயே கேட்டு கொண்டு இருந்தனர்…

 

“இழையா.. என் மனசுல தோன்றின அதே உணர்வு உன் மனசுலயும் இருந்திருக்கு.. நம்ம ரெண்டு பேருக்கும்மே அந்த மஞ்சள் நாண்.. தாலியா தான் தெரிந்திருக்கு… உன் மனசுல காதல் இல்லாம இருக்கலாம்.. ஆனா நிச்சயம் ஒரு சலனம், அப்புறம் அன்னைக்கு நடந்த விஷயத்துல ஒரு பாதிப்பும், நான் உனக்கு போட்டுவிட்ட சங்கலியோடு உன் மனதுக்கு ஒரு உணர்வும் இருக்குது… அப்படி இல்லாட்டி நீ நிச்சயமா நான் வீசி எறிந்த மஞ்சள் கயிற மறுபடியும் கட்டி இருக்க மாட்ட.

 

உன் மனசு அன்னைக்கு நடந்ததை திருமணமா ஒப்புக்கொண்டிருக்கு…ஏதோ ஒரு காரணத்துனால தான் நீ இன்னைக்கு ஆரியனோடு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்க…

 

எனக்கு இது போதும்.. நீ என் மனைவி…எனக்கு மட்டுமே சொந்தமானவள்…” என்று ஆதவன் எண்ணமிட, மறுப்புறம் இழையினியின் எண்ணத்துக்கு சொந்தகாரனாக ஆதவன் திகழ்ந்தான்.

 

“இவரு எப்படி சட்டென்னு என்கிட்ட நெருங்கினாரு… ஏன் இப்படி இந்த செய்யின் பார்த்து அத்தனை சந்தோசம்… ஆனா இன்னைக்கு காலையில என் கழுத்துல தாலி கட்டினப்ப அவர் கண் ல கோவம் தெரிஞ்சது… அவரு ஒரு பொண்ண காதலிகிறதா சொன்னாரே…. எனக்கு ஒன்னுமே புரியல… அவருக்கு நிஜமாகவே ஒரு காதலி இருப்பாளா? அப்படி இருந்தால், அவள விட்டுவிட்டு ஏன் என்னை மணம் முடிக்கணும் ? ” இவ்வாறாக அவள் உழன்று கொண்டு இருக்க, ஒருவழியாக புடவையை கட்டி முடித்தவள், கதவை திறந்து ஆதவனை பார்க்க, கதவு திறந்த சப்த்தம் கேட்டு, சிறு அளவான புன்னைகையுடன், இத்தனை நேரம் இருந்த குழப்பங்கள் நீங்க ஆதவன் அறைக்குள் நுழைந்தான்.

 

“முதலிரவில், கணவன கதவுக்கு பின்னாடி நிற்க வச்சிட்டு, புடவை மாத்தற முதல் பொண்டாட்டி நீயா தான் டி இருப்ப… ” என்று ஆதவனது ஒரு மனம் எண்ணமிட, மறுமணமோ….”இல்ல என் மனசுல இழையா அணு அணுவா நிறைஞ்சிருக்கா… ஆனா அவள் மனதுல அந்த சம்பவத்தால பாதிப்பும், இன்னைக்கு நடந்த திருமணத்தால நான் அவளோட புருஷனா மட்டும் தான் தெரிவேன்… எனக்கு அது போதாது… அவ மனசு முழுக்க நான் நிறைஞ்சு இருக்கணும்.. அவளோட காதலுக்கு நான் சொந்தமாகணும்… அப்போ தான் , அந்த நாள் வரும் போது தான் நான் அவள முழுசா ஆளுவேன்… ரெண்டு பேரு மனசுலையும் காதல் நிறைஞ்சு கூடல் முகிழனும்….” என்று எண்ணமிட்டது.

 

இவன் எண்ணங்கள் இப்படி இருக்க, இழையா மெல்ல அவனிடம் அவள் மனதில் உள்ள வினாவை வினவ விழைந்தாள்…..

 

“ஹ்ம்ம்கும்… அது அது வந்து…நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி… ” என்று தயங்கி தயங்கி வார்த்தைகள் வெளிவர, அதற்கு மேல் எப்படி கேட்பது என தெரியாமல் மனதினுள் அக்கேள்வியை பூர்த்தி செய்தாள்.

 

“நீங்க வேற பொண்ண காதலித்தீர்களா ? .. இத எப்படி நான் கேட்பேன்” என்று மனதில் கேட்டு முடிக்க அதே நேரம் ஆதவனும் அவளது வாக்கியத்தை ஒரு பகுதியை கூறிவிட்டு பிறகு தடுமாறும் மனைவியை பார்த்தவன் மனதில், “ஒ இவள், நான் கட்டின தாலி அவ கழுத்துல இருந்தும், ஆரியனோடான திருமணதிற்கு சம்மதம் சொன்னதிற்கான விளக்கத்தை சொல்ல தயங்குறாளோ….” என்று எண்ணமிட்டான்.

தயக்கத்தோடு இழையா, கேள்வியை முழுதாக கேட்க நினைக்க, இடை புகுந்தான் ஆதவன்….

 

“வேணாம் இழையா.. கல்யாணம் முன்னாடி நடந்த எதையும், அதற்கான காரணமும் வேண்டாம்… எதை பேசினா, நமக்கு மன கஷ்டம், இல்ல சங்கடம் வருமோ.. அதை நம்ம தவிர்த்திடலாம்… இப்ப உனக்கும் எனக்கும் திருமணம் ஊரறிய நடந்திருக்கு… இனி என் வாழ்கை துணை நீ தான்… பழசு நடந்ததிற்கான காரணம் எதுவாக வேணாலும் இருக்கலாம்.. பட் பழச நம்ம பேசவேண்டாமே…இனி நம்ம ஒருத்தரை ஒருத்தர் புருஞ்சுக்க முயற்சி செய்வோம்….” என்று ஆதவன் கூறி அவளின் பதிலிற்காக அவள் முகம் பார்த்தான்.

 

இழையாவின் மனமோ, “இவரோட பழைய காதல பற்றி அவர் பேச விரும்பல… ஆனா ஏன் .. சரி எதுவானாலும் ஒரு நாள் என்கிட்ட கண்டிப்பா சொல்வாரு… அவரு என்ன அவரோட வாழ்க்கை துணை னு சொல்லி இருக்காரு… அன்னைக்கு அந்த ஆபத்துலையே கை விட்டு போகாதவரு, கல்யாணம் பண்ணி மனைவியா இருக்கும் பொழுது நிச்சயம் எந்த சூழலிலும் அவர் வாழ்க்கைய விட்டு பிரிக்க மாட்டாரு…அவரே மறக்க நினைக்கிற அவரோட காதல் வாழ்க்கைய நான் மறுபடியும் பேச விரும்பல… ” என்று எண்ணமிட்டது.

 

ஒருவேளை அந்த நொடி இருவரும் தெளிவாக பேசி இருந்தால் பின்னாளில் வர போகும் பிரச்னையை தவிர்த்திருக்கலாம்….

 

“என்ன இழையா… நான் கேட்குறதுக்கு பதில் சொல்லமாற்ற…?” –ஆதவன்

“ஹ்ம்ம் சரி பழசை பற்றி பேசல…” – மெலிதான புன்னகை கீற்றோடு இதாழவின் பதில் இருந்தது.

 

“சரி ஏன் நின்னுட்டே இருக்குற… உட்காரலாமே… கணவன் பக்கத்துல உட்கார கூட தயங்குற பொண்ண இப்ப தான் நான் பார்க்கிறேன்….இந்த விஷயத்தை அந்த பார்த்த சாரதிக்கிட்ட கண்டிப்பா சொல்லணும்.. இன்னும் சமுதாயத்துல இப்படி கட்டுப்பாடான பெண்களும் இருகிறாங்கனு…” என்று கூறியவன் ஓரக்கண்ணால் அவளை எடை போட, அவன் சொன்ன பெயரில் அவளே அறியாமல் ஒரு நொடி திகைத்த  இழையா, அவளை ஆதவன்  நகையாடுவதை சற்று தாமதமாக, அவனது கண்களில் இருந்த சிரிப்பை வைத்து புரிந்துக்கொண்டாள். அவனைப்பார்த்து கன்னம்குழிய சிரிக்க, ஆதவன் பிருவம் உயர்த்தி சிரித்தான்….

 

அப்பொழுது, அவர்கள் சிரிப்பின் சப்தத்தை தாண்டி சில கூக்குரல்கள் கேட்க, ஆதவனது அறை ஜன்னல் திடீர் என்று அதிக வெளிச்சத்துடன் காணப்பட்டது… தொடர்ந்து வந்த கூச்சல்களும், அபாய குரல்களும் கேட்க, ஆதவன் – இழையினி இருவரும் ஒரு சேர திகைத்தனர்….

Advertisement