Advertisement

 

மயிலிறகு – 11

 

“இல்ல அப்பா…. நாங்க இங்க தங்க முடியாது…. நான் எந்த வொர்க்கும் பிளான் பண்ணாம வந்தேன்… காளான் பாக்டரில வேலை இருக்கு.. இன்னைக்கு கிளம்பலனா, நிறைய லாஸ் ஆகிடும்…. ” என்று மணமகனான ஆதவன் கூற, இத்தனை நேரம் ஏதேதோ கலக்கத்தில் இருந்த இழையினி இப்போது தந்தையை விட்டு பிரியவேண்டும் என்ற பெரிய கலக்கம் அவளை சூழ்ந்துக் கொள்ள, ராகவனுக்கோ அந்த நொடி தான் இது நினைவுக்கு வந்தவராக அப்படியே நிற்க, ஒரு நிமிடம் அவரது இதயம் ஆட்டம் கண்டது. ராகவனும், இழையினியும் ஒரு சேர மனதினுள் “இதை எப்படி மறந்தேன்” என்று எண்ண, தந்தை மகளின் மனது வெவ்வேறாக இருந்தாலும் அதிலோடும் எண்ணங்கள் ஒன்றாகவே இருந்தன. அந்த கலக்கத்திலும், ஆதவன் தன்னை ‘அப்பா’ என்று அழைத்தது ராகவனுக்கு ஓரளவு நிம்மதியை தந்தது….

 

அதன் பின் மளமளவென அடுத்தடுத்த  சடங்குகள் நடக்க, அவர்கள் குடும்ப வழக்கப்படி திருமணம் முடிந்த கையோடு மணமக்களை, மணமகனின் வீட்டிற்கு அழைத்து செல்லும் வழக்கமாக இருக்க, திடீர் என்று நிச்சயக்கப்பட்ட திருமணம் என்பதால், மாப்பிளையின் வீடு, ஊர், தொழில், அதோடு அவர்களின் குடும்பத்தின் மூத்தவர்களான ஆதவனது தாத்தா ராஜ சக்கரவர்த்தியையும், அவரது மனைவி பார்வதியையும் பார்க்க ராகவன் குடும்பமும் பெண்ணின் ஒரு சில முக்கிய உறவுகளும், மணமக்களோடு கிளம்ப ஆயத்தமானார்கள்.

 

ஆரியனின் தந்தை மூலம் ஆதவனை பற்றியும், ருத்ரனை பற்றியும் ராஜ சக்ரவர்த்தியின் பரம்பரை பற்றியும் ஏற்கனவே அறிந்திருந்தாலும், ராகவனது செல்ல பெண் வாழ போகும் இடத்தை பார்க்கவே,மிக முக்கியமாக அவர்களுடன் புறப்பட்டார்….

 

அத்தியூர் – விராலிமலையில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில்,  தஞ்சாவூரிலிருந்து வடக்கே 44 கிமீ தொலைவிலும், கும்பகோணதிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய, விவசாயத்தை பிரதானமாக கொண்ட ஊர். மண்ணியாறு விவசாயத்துக்கு நீர் வசதி கொடுக்க, மண்ணியாற்றங்கரையில் அமைந்த அழகிய கிராமம் ஆகும்… கொள்ளிடமும் அருகிலேயே இருக்க, பசுமை கொஞ்சும் எழிலோவியமாகத் திகழ்ந்தது அத்தியூர்.

 

விராலிமலையில் இருந்து அத்தியூருக்கு மூன்று மணிநேர பயணம் என்பது ராகவனுக்கு சற்று கலக்கத்தை தான் தந்தது… மகளை, நினைத்த நேரம் பார்க்க இயலாதே என்று…. ஆயினும் அந்த நொடி அவ்வெண்ணம் தோன்றியதும் மரகதத்தை பார்த்து, அவர் மனதினுள், “என்னோட மரகதம் என்கூட வாழ வந்த பொழுது, அவளோட அப்பாவும் இது போல தானே நினைத்திருப்பார்கள்…” என்று எண்ணமிட, அவரது பார்வையிலையே மரகதம் கணவனின் மனதை படித்தார். அவரது கண்களாலே மரகதம் ராகவனுக்கு ஆறுதல் சொல்ல, ராகவனும் கலங்கிய கண்ணை மறைக்கும் பொருட்டு, ஒரு சிரிப்பை உதிரவிட்டு அவரது பெரிய மீசையை தடவிக்கொண்டார்.

 

ஆதவனும், இழையினியும் மட்டும் ஒரு வண்டியில் பயணமாக, மற்றவர்கள் ஒரு சிறு சொகுசு பேருந்தை பிரத்யேகமாக ஏற்பாடு செய்து, அதில் பயணமானார்கள். ஆதவன், மகிழை வற்புறுத்தி அழைத்தும் இதழாவோடு வருவதற்காக, ஆதவனிடம் ஏதோ காரணம் சொல்லி தப்பித்தவன், இதழா அமர்ந்திருந்த இருக்கைக்கு பின் இருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டான்…..அவனது காற்சட்டை பையில் அப்போதும் அவன் நேற்று வாங்கிவந்த அந்த சிலம்பு இருந்தது….

 

ஆதவனும் ஏதும் பேசவில்லை…இழையினியும் வாய் திறக்கவில்லை…

 

ஆதவனுக்கு மனதினுள் இனம் புரியா கோபம்…. எப்படி இவளால் எந்த சலனமும் இல்லாமல் மணமேடையில் இன்னொருவனுடன் நிற்க முடிந்தது… அவளுக்கு என் மீது காதல் இல்லை தான்… அதை என் மனமும் ஒப்புக்கொள்கிறது… ஆனால் தாலியை தெய்வமாக மதிக்கும் இந்த தமிழ் நாட்டில், நான் கட்டிய மஞ்சள் கயிறு…? எனக்குள் தோன்றிய உணர்வு, அது தாலி தான் என்ற உணர்வு அவளுள் எப்படி தோன்றாமல் போனது…? இது மனப்போராட்டம்… தான் நேசிப்பவள் எப்படி அடுத்தவன் முன் மனைவியாக போகிறவள் போல நிற்கலாம்? என்ற காதல் போராட்டம்… காதலினால் வந்த கோபப்போராட்டம்….

 

இழையினிக்கோ மனதினுள், அவள் தந்தையை தவிர அந்த நொடி வேறு எதுவும் இல்லை… கனத்த மனதோடு பயணமாக, பயணத்தினால் பின் நோக்கி செல்வது போல் நகர்ந்துக்கொண்டு இருந்த தென்னை மரங்களையும், தோட்டங்களையும், கள்ளிச்செடிகளையும் பார்த்துக்கொண்டே வந்தாள் இழையினி.

 

மறுபுறம், பெரியவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருக்க, ராகவன் அவரது மகளின் சிந்தனையில் இருந்தார்….

 

இவர்கள் யாவரும் ஒரு உலகில் இருக்க, மகிழன் மட்டும் வேறு ஒரு உலகில் இருந்தான்….

“எக்ஸ்க்யூஸ் மீ…” என்று மகிழன் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இதழாவை அழைக்க, இதழா ‘யார் இவன்’ என்ற ரீதியில் பார்த்துவைத்தாள்….

 

” நான் மகிழன் ” – மகிழன் இதழாவிடம் சொல்ல

‘இருந்துட்டு போயேண்டா… நான் கேட்டனா…?’ – இதழா மனதில் பதிலளித்தாள்

“உங்களுக்கு சிலம்பு ரொம்ப பிடிக்கும்னு கேள்விப்பட்டேன்” – மகிழன் கேட்க

‘ஆமாம் அதுக்கு என்ன?’ –  இதழா மனதில் சொல்ல

“அது தான் உங்ககிட்ட பேசிட்டு..அப்படியே…” – மகிழன் இழுத்தான் .

 

” என்கிட்ட பேச என்ன இருக்கு … ?” – இதழா, மகிழனிடம் கூற, மகிழனோ மனதினுள், “நமக்குள்ள பேச எவ்வளவோ இருக்கு…” என்று எண்ணிவிட்டு வெளியில், “இல்லங்க , நமக்கு சேம் இன்ட்ரெஸ்ட், எனக்கும் சிலம்புனா பிடிக்கும், அதான்….” என்று மகிழன் இழுக்க, இதழாவோ மனதினுள் ‘சிலம்பு தானடா எனக்கும் பிடிக்கும் சொன்னேன்… சிலம்பை பிடிக்கிறவனையெல்லாம் பிடிக்கும்னா சொன்னேன்… ஐயோ..” என்று புலம்பினாள்.

 

“எங்க அப்பா… முன்னாடி தான் உட்காந்து இருக்காரு… பெரிய மீசை வச்சுட்டு..” – இதழா, மகிழனிடம் கூற  “ஹா இருக்கட்டும்ங்க.. அவரை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க… பெரிய மீசை அவருக்கு நல்லாவே சூட் ஆகுதுங்க…” – மகிழன் சமாளிக்க

 

‘டே உன்ன நான் மிரட்டுறேன் டா..ஒருவேளை இவனுக்கு புரியலையோ..?’ என்று மனதினுள் இதழா நினைக்க, மகிழனோ, ‘எல்லாம் புரியுது… இதெல்லாம் என்கிட்ட நடக்காது..இதழு, நீ தான் என் மயிலு’ என்று அவன் மனதினுள் எண்ணமிட்டான்.

 

“ஹான்ன்ன் எங்க விட்டேன்…” – மகிழன்

‘டே அத தான் நானும் சொல்றேன்..விட்டுடேண்டா, நான் ஓடிடுறேன்…’ – இதழா மனதில் புலம்பினாள்.

“யூ சி இதழா, நானும் உங்க மாமா, அதான் உங்க அக்காவோட கணவனும் ஒண்ணா தான் படிச்சோம்….” – மகிழன் சொல்ல

‘ஒ மாமாவோட பிரண்டா… அப்போ வேற வழி இல்ல , இந்த ஜொள்ளு வாயனை கொஞ்சம் பொறுத்து தான் ஆகணும்’ – இதழா மனதில் நொந்து கொண்டாள்.

“நான் படிச்சது ஆக்ரோனமி தான்.. பட் சின்ன வயசுல இருந்து எனக்கு சிலம்புன்னா உயிர்…. அதை பார்க்கும் போது எல்லாம் ஒரு இனம் புரியாத உணர்வு…” – மகிழன் பெருமையடிக்க

‘நம்புடி… தயவு பண்ணி கொஞ்சம் முட்டாளாவே இரேன்… ஏன்னா எனக்கு இதுக்குமேல பொய் சொல்ல வராது’ – மகிழன் மனதில் கெஞ்சினான் .

‘அட இவ்ளோ பிடிக்கும்னு சொல்றாரே… ஒரு வேளை நம்மதான் தப்பா புரிந்துக்கொண்டோமோ… சரி என்ன தான் சொல்றாருன்னு பார்ப்போம்’ – இதழா மனதில் சொல்லிக்கொண்டே தயாரானாள்

“அதைக் கையில எடுக்கிற ஒவ்வொரு முறையும் ச்சா.. அப்படி ஒரு ஃபீல்.. படத்துல பார்த்துட்டு பரவசப்பட்டு போய் தான் சிலம்பு மேல ஒரு ஈடுபாடு வந்துச்சு” என்று மகிழன் ‘பூம்புகார்’ படத்தின் இறுதி காட்சியை மனதில் நிறுத்தி கூற, இதழாவோ சிலம்பாட்டத்தை நினைத்து புல்லரித்து போனாள்.

 

“அப்படியா…நீங்க எந்த சுற்று முறையில சிலம்பைப் பயன்படுத்துறீங்க…?” – இதழா கேட்க

‘என்ன… சுற்று முறைன்னு சொல்றா… ? நம்ம சினிமா கொட்டகைய சுத்தி சுத்தி போய் ல பார்த்தோம்…சுருள் பீடி குடிக்கிற கண்ணப்பன் கொட்டாய்-ல பார்த்தோம்’ – மகிழன் மனதினுள் யோசிக்க

“அது வந்துங்க… நான் சுருள்…” என்று மகிழன் தொடங்கி முடிப்பதற்குள், இடை புகுந்த இதழா, “ஒ சுருள் கத்தியா…? சூப்பர்ங்க…. நானும் அது தான்” – இதழா

‘என்ன இவளும் சுருள் பீடி பிடிப்பாளா? அதை இவ்ளோ சந்தோசமா சொல்றா? சரி, இதுவரை பிடிச்சாலும் சரி… கல்யாணம் பிறகு என் அன்பாலையே இவள அதுல இருந்து வெளில கொண்டு வந்திடலாம்’ என்று எண்ணமிட்டான் மகிழன் மனதில்.

“ஒ சூப்பர்.. நம்ம ரெண்டுபேரும் ஒரே விஷயத்த செஞ்சுருக்கோம்…. ” – மகிழன் இதழாவிடம்.

“ஒகே நான் இப்ப ரீசென்ட்டா நடந்த, போட்டில கலந்துக்கிட்டேன்…. நீங்க வந்துருந்தீங்களா? குன்னூருக்கு…” – இதழா கேட்க

‘கால் சிலம்பை வச்சு என்ன போட்டில இவள் கலந்துக்கிட்டா…? ஒருவேள  கண்ணகிவேசம் போட்டு இருப்பாளோ….? ‘ – மகிழன் மனதில் குழம்ப

”இல்லங்க நான் வரல, எனக்கு சிலம்புன்னா ரொம்ப பிடிக்கும்… பட் போட்டில நான் கலந்துக்கிறது இல்ல….” – மகிழன் இதழாவிடம் சொன்னான் .

“அட என்ன சொல்றீங்க… இப்ப கலந்துக்காம அப்புறம் எப்ப கலந்துக்க போறீங்க.. உங்க திறமையை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த வேணாமா..?” – இதழா கேட்க

‘நீ தான் கழுத வயசு ஆகியும் ஃபான்சி ட்ரெஸ் காம்பட்டீஷன்- ல கலந்துக்கிறன்னா..என்னையும் ஏண்டி உயிரை வாங்குற…? அதோட, ஒரு ஆம்பள எப்படி சிலம்பு கட்டி கண்ணகி வேசம் போடறது…? இவள அவசரப்பட்டு லவ் பண்ணிட்டோமோ…! ‘ – மகிழன் மனதில் நொந்தான்.

 

“இல்லங்க, எனக்கு சிலம்பு பிடிக்கும் தான் பட்.. யூ சி.. திஸ் இஸ் கேர்ல்ஸ் திங்.. அது தான்…” என்று மகிழன் வாக்கியத்தை முடிக்காமல் இழுக்க, இதழாவோ குழப்பம் நிறைந்த விழிகளை அவன்மீது செலுத்திவிட்டு, “என்ன சொல்றீங்க… பொண்ணுங்க … ”  என்று கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே மரகதம் இதழாவை முன் இருக்கைக்கு ராகவன் அழைப்பதாக கூற, மகிழனிடம், “ஹா நான் வரேன்… அப்புறம் பேசலாம்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

  அடுத்த முப்பது நிமிடங்களில், அவர்கள் சென்ற பேருந்து அத்தியூரில் நுழைந்தது…. இருபக்கங்களும் சவுக்கு தோப்புகளும், இரண்டு கிலோ மீட்டர் தொலைவு பயணத்திற்குப் பிறகு, குமிழ் மரங்களும் அடர்ந்து வளர்ந்திருக்க, அதை ராகவன் குடும்பத்திடம் ருத்ரன் விளக்கி கொண்டு வந்தார்.

 

அத்தியூரில் நுழைந்ததும், வெகு பசுமையாக வளர்ந்திருக்கும் குமிழ் மரங்களின் அழகை தனது கண்களில் நிரப்பியவள், அத்தனை நேரம் இருந்த கலக்கத்தை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, இப்பொழுது தான் இவ்வுலகிற்கு வந்தவள் போல் ஆதவனை நிமிர்ந்து பார்த்தாள்…. அவளது பார்வையை உணர்ந்து ஆதவனும் அவளை பார்க்க, அவளது மருண்ட மான்விழியை கண்டவனுக்கு, கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது…

 

அவள் விழியோடு இவன் விழி முகிழ, அவனது பார்வையை பார்த்த இழையினிக்கு, தான் எப்படி முகபாவனையை வைத்துக் கொள்வது என்றே தெரியவில்லை….. ஆனால் அன்று அவள், அவனிடம் சொல்லாத நன்றியை இன்று சொல்ல எண்ணமிட்டாள். அவன் பார்த்த பார்வையில் அதை சொல்லத்தான் அவளுக்கு வார்த்தை வரவில்லை,.

 

‘ஏன் இப்படி இவரு பார்க்குறாரு… ‘ – இழையினி மருள

‘இப்படி முழிச்சு முழிச்சே என்ன ஃபிளாட் ஆக்குறியேடி…. ‘ – ஆதவன் மனதுள் கொஞ்சினான் .

‘நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்’ – இழையினி ஆரம்பிக்க

‘நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்…’ – ஆதவனும் அதையே சொல்ல

‘நீங்க அன்னைக்கு என் கழுத்தில் இருந்து பிரித்த மஞ்சள் நாணை, நான் மறுபடியும் என் கழுத்துல கட்டிக்கிட்டேன்… உங்களோட செயினும் என் கழுத்துல தான் இருக்கு….’ – என இழையினியும்

‘நான் கோவத்துல அந்த மஞ்சள் நாணை கழட்டிடேன்… ஆனா அட்லீஸ்ட் அந்த செயினாச்சும் உன் கழுத்துல இருக்கிறதா இப்போ… ? உனக்கு எந்த உணர்வுமே தோணலியாடி… எப்படி டி  நீ இவ்ளோ சாதரணமா இருக்குற? ‘ – என ஆதவனும்

 

இந்த கேள்வி பதில் அனைத்தும் அவரவர் மனதில் ஓடிக்கொண்டு இருக்க, இருவரது விழியும் மற்றவரை கவ்வி நின்றது… ஆதவனது பார்வை அவள் மீதான ,காதலையும், கோபத்தையும், கேள்விகளையும் சுமந்து நிற்க, இழையினியின் பார்வையில் நிம்மதியும், குழப்பங்கள் தீர்ந்த தெளிவும், அதே நேரம் ராகவனை பிரியும் வேதனையும் போட்டி போட்டன.

 

இவ்வாறாக ஒருவழியாக அனைவரும் அத்தியூர் வந்து சேர, சூழ்ந்து இருந்த பசுமை அவர்களின் மனதிற்கு இனிமை சேர்க்க, ஒரு பெரிய கதவின் முன்னால், ஆதவன், இழையினி சென்ற வண்டி நிற்க, அதை பின்தொடர்ந்து வந்த, அந்த பேருந்தும் நின்றது….

 

இரு ஆளுயர அளவுக்கு கம்பீரமாக எழுந்து நின்ற, வேலைப்பாடு அமைந்த இருப்பக்ககதவு… தோட்டத்தில் வேலை செய்பவர்கள் போல இருந்த இருவர், அந்த பெரிய இரும்பு கதவை தள்ளமுடியாமல் தள்ளி திறக்க, இழையினி அவள் வந்து சேர்ந்த இடத்தை பார்த்து, பிரமித்து இமைக்கவும் மறந்தாள்…

உள்ளே நுழைந்ததும் தனது சிவப்பு கொண்டைகளை காற்றிற்கு தகுந்தவாறு அப்புறமும் இப்புறமும் ஆட்டி புதியவர்களின் வரவை நோக்குவது போல அமைந்திருந்த கோழிக்கொண்டை செடிகள் இருபுறமும் இருக்க, நடுவினிலே நீண்ட அகலமான செம்மண் சாலை வண்டி போவதற்கு ஏதுவாய் அமைக்கப்பட்டு இருந்தது….

 

அத்தோட்டத்தை அடுத்து ஒரு பெரிய அடர்ந்த நேர் எதிர் அடுக்குகளாக அமையப்பெற்ற பளபளக்கும் இலைகளை கொண்ட ஓர் புன்னை மரம் பூ சொறிந்துக் கொண்டு இருந்தது….  அந்த புன்னை மரத்திற்கு அருகினிலே வெயிலுக்கு ஏதுவாக வைக்கோலால் வேயப்பட்ட கொட்டாரம், தள்ளி தள்ளி, இரண்டு மூன்று வட்டவடிவில் அமைக்கப்படிருந்தது….

 

வைக்கோலால் வேயப்பட்ட கொட்டாரம் என்பது நான்கு புறமும் நான்கு பெரிய கல்லுக்காலை நிலத்தில் ஆழமாக ஊன்றி, அதன் மீது சில மரக்கட்டைகளை பரண் போல் அமைத்து, அதன் மீது காய்ந்த தென்னை ஓலைகளை பரப்பி, அதன் பிறகு வைக்கோலை சிறு குன்று போல் குவித்து வைத்திருப்பார்கள். அது ஒரு அழகிய நான்கு புறமும் திறந்தவெளி கொண்ட கூடாரம் போல காட்சி தரும். அதில் காற்றாட அமருவதற்கு ஏதுவாய், மரத்தினால் செய்யப்பட்ட நாற்காலிகள் இருந்தன ஆதவனது வீட்டில்.

 

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வேப்பமரமும், மாமரமும் இருக்க அதன் இடை இடையே கோழிகளும், அதனுடைய குஞ்சுகளும் ஆங்காங்கே ஏதோ தானியங்களை கொறித்தபடி கொக்கரித்துக் கொண்டு இருந்தன….  இவற்றுக்கு இடையில் மிக கம்பீரமாய் எழுந்து நின்றது அந்த கட்டடம்….

 

அந்த மரங்களுக்கு சற்று அப்பால் ஒரு தாழ்ந்த நிழல் கொட்டாரம் இருக்க அதில் இரண்டு உயர்ரக கார்கள் இருக்க, இரண்டு மூன்று காளை பூட்டும் மாட்டு வண்டிகளும் சற்று அப்பால் நிறுத்தப்பட்டிருந்தன.

 

பரப்பளவில் பெரிய இடத்தை ஆக்ரமித்திருந்த அந்த அரண்மனை போன்ற தோற்றம் கொண்ட அந்த கட்டிடடம் ஒரு சிலரால் அத்தியூர் அரண்மனை என்றும் அழைக்கப்பட்டது….

 

உயரத்தில் இரண்டு அடுக்கு மட்டுமே இருக்க, இரண்டாவது அடுக்குகளில் இரண்டு கோபுரம் போன்ற முகப்புகள் இருந்தன… அவை இரண்டும் எதிர் எதிர் துருவங்களில் இருந்தன… கீழ் தளத்தில், அம்மாளிகையின் தாழ்வாரம் முன்னில் இருக்க, அதைத் தொடர்ந்து உள்ளே ஒரு பெரிய வரவேற்பறை… அந்த வரவேற்பறையை அடுத்து பெரிய முற்றம் அமைந்திருக்க, அந்த முற்றம் முழுக்க விலை உயர்ந்த, உயர்ந்த ரகத்தை சார்ந்த கருப்பு கருங்கல் பதிக்கப்பட்டு இருந்தது. அந்த முற்றம் அறுகோண வடிவில் இருக்க, ஒவ்வொரு கோணத்திலும் வேலைப்பாடு அமைந்த வைரம் பாய்ந்த தேக்கு மரங்களால் செய்யப்பட்ட மரத்தூண்கள் இருந்தன. அந்த முற்றத்தின் வழியாக கதிரவன் தன் கதிர்களை வஞ்சனை இல்லாமல் அம்மாளிகையில் பாய்ச்ச, இருளுக்கு இடமே இல்லாமல் இருந்தது ஆதவனது வீடு…. ஆறு தூண்களில், ஒரு தூணின் ஓரத்தில் மட்டும், ஒரு பெரிய மண்பானையில் வளமான செம்மண் நிரப்பப்பட்டு மயில்மாணிக்க கொடி படர்ந்திருந்தது…. அந்த முற்றத்தின் மேலே இருந்த மெல்லிய இரும்பு கம்பிகள் மீது, மயில் மாணிக்க கொடியில் அழகான சிவப்பு பூக்கள் சிரிக்க படர்ந்திருந்தது.

 

முன் வரவேற்பறைக்கும் முற்றத்துக்கும் இடையே பூஜை அறை இருந்தது.   ஆறு தூண்களின் திசைகளிலும் ஆறு அறைகள் இருக்க, அதில் மூன்று புழக்கத்தில் இருந்து வந்தது… மீதி மூன்று அறைகளும் விருந்தாளிகளுக்காக எப்போதும் தயார் நிலையில் இருந்து வந்தது… இந்த முற்றத்தையும், அதைச் சுற்றி இருந்த ஆறு அறைகளையும் கடந்து, பின் கட்டிற்கு வந்தால், பெரிய சாப்பாட்டு அறை இருக்க, அதில் அகில் மரத்தால் செய்யப்பட்ட பெரிய மர மேஜை சாப்பிடுவதற்காக போடப்பட்டிருந்தது… அதையடுத்து சமையல் அறையும், பின் கட்டு புழக்க  பகுதியும் இருந்தது… கொல்லைப்புறத்தில் நிறைய வாழைமரங்களும் அதன் கன்றுகளும் செழித்து வளர்ந்து காணப்பட்டன.

 

மேல்தளத்திற்கு இடது புறமாக மரக்கட்டையால் செய்யப்பட்ட படிக்கட்டுகள் நீண்ட மலைப்பாம்பை போல வளைந்து செல்ல, உப்பரிகையில் இருந்த அறை ஆதவனது அறையாக இருந்தது… பரந்த விசாலமான அறை. மாடியில் இருந்து பார்க்க, சுற்றிலும் முழுக்க பசுமை சூழ்ந்திருக்க, சற்று தொலைவில் சிறு ஓடையின் சலசலப்பு கேட்டுக்கொண்டு இருந்தது….

 

வந்தவர்கள் அனைவரும் வீட்டின் அழகை ரசித்துக் கொண்டு இருக்க, இதழா தனது அக்கா-அப்பா பிரிவை நினைத்து சிந்திக்க, மரகதம் மகளின் வாழ்க்கை வளம் பெற ப்ரார்த்தனை செய்ய, ராகவன் இழையினியின் பிரிவை நினைத்து கலங்க, இழையினியோ, புது இடம், புது மனிதர்கள், இன்னும் சில மணி நேரத்தில் ராகவனும் சென்றுவிடுவார் என்று கலங்கிக்கொண்டு இருக்க, மகிழனோ இதழாவை பார்வையால் தொடர, ஆதவனோ இழையினியின் கழுத்தில் குறைந்தபட்சமாக அவன் இட்ட சங்கிலியேனும் இருக்குமா… என்ற கேள்வியோடும் சிறு கோபத்தோடும் இருந்தான்….

 

நடந்த விவரங்களை தொலைபேசியிலே ஆதவனின் தாத்தா, பாட்டிக்கு தெரியப்படுத்தி இருக்க, தங்களுக்கு சம அந்தஸ்த்து, அவர்களும் தங்கள்  குலம், என  இவற்றை கருத்தில் கொண்டும், மேலும் திருமணத்திற்கு பிடிகொடுக்காத பேரன், திருமணம் செய்துக் கொண்டதே பெரிய விஷயம் என்று எண்ணி இழையினியின் வருகையை இனிப்பான செய்தியாகவே அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

 

மணமக்களை ஆலம் கரைத்து வரவேற்று, சிறு சிறு திருமண விளையாட்டுகளை நிகழ்த்திக்கொண்டு இருக்க, இந்த இடைவேளையில், பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் பாலும் பழமும் கொடுக்க, ராகவனது முறையும் வந்தது அவர்களுக்கு பால்பழம் கொடுக்க. அப்போது ராகவனது உறவை சேர்ந்த ஒருவர், அருகிலிருப்பவரிடம், ‘சிவநேசா… உனக்கு தெரியுமா… நம்ம ராகவன் அம்புட்டு பாசத்தைக் கொட்டி இந்த பொண்ணை வளர்த்தான்… மூத்தவளை, தொடர்ந்து நாலு நாள் பார்க்காம, நம்ம ராகவனால இருக்கவே முடியாது… பொண்ணு வானத்தையே கேட்டாலும் வளைச்சு கொடுத்துருவாரு…. இதுவரை அவரோட பொண்ணு கேட்ட எதையுமே இல்லன்னு சொன்னது இல்ல… இப்ப மனுஷன் முகத்தைப் பாரு… சந்தோசம் இருந்தாலும், பொண்ணை பிரியிற வருத்தமும் நல்லாவே தெரியுது…” என்று கூற இந்த வார்த்தைகள் தெளிவாக ஆதவனது செவிகளில்  விழுந்தது.

 

ஆதவன் மனமோ, ” உன்னோட அப்பா, நீ என்ன சொன்னாலும் கேட்கிறவர்.. அப்போ, நடந்ததை நீ நினைத்திருந்தா நிச்சயமா சொல்லி இருக்கலாம்… ஆனா நீ என்ன திண்ணக்கமா மணவறை வரை போன…? என் பரம்பரை சங்கலியைக் கூட நீ நிச்சயம் கழட்டி இருப்ப… ஒரு வேளை அது உன் கழுத்துல இருந்தா கூட, ஏதோ ஒரு சூழ்நிலைல தான் திருமணத்துக்கு தயார் ஆகி இருப்பனு நான் நம்பியிருப்பேன்… ஆனா அது உன் கழுத்துல இருக்கிறதா இல்லையானு கூட தெரியலையே…எனக்கு தோன்றின உணர்வு, அதே வலியோட உனக்கு உணர்வா தோன்றாட்டிக் கூட, ஒரு சின்ன சலனம் கூட இல்லாம நீ இருக்கிறது தான் என்னோட கோவத்துக்கு காரணமா இருக்கு இழையா…” என்று மனதினுள் பேசிக்கொண்டான்.

 

அதன் பின், இழையினியின் கையால் பஞ்சமுகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றப்பட, ஒளி நிறைந்த அந்த வீட்டில் மற்றொரு ஒளியும் இணைந்துக்கொண்டது. வீட்டிலேயே பெரியவர்களான ராஜ சக்ரவர்த்தியிடமும், பார்வதியிடமும் ஆசி வாங்க இழையினியும், ஆதவனும் பெரியவர்களின் பாதம் பதிய, ஆதவனின் சங்கலியை பற்றியதான ஆதங்கம் மனதில் கோபத்தை கிளற, முழுவதும் கீழே குனிந்ததால் இழையினியின் மார்பிற்கு நேரே ஊஞ்சல் போல ஆதவனது பரம்பரை சங்கலி விழ, ஆதவனுக்கோ ஏதோ உள்ளுணர்வு தோன்ற, பாதம் பணிந்த நிலையிலேயே இழையினியின் பக்கம் பார்வையை திருப்ப எத்தனித்தான்.

 

Advertisement