Advertisement

காதலெனுந் தீவினிலே

 கால்பதித்த மயிலிறகே !!!

 

மயிலிறகு– 1

 

‘ஜெயம்’ என்ற வார்த்தையை   பார்த்துக்கொண்டே   மனதில்   இனம் புரியா சந்தோசம் குமிழியிட அன்றைய நாள் காட்டியை கிழித்தாள் இழையினி.  

அவளது ராசிக்கு இன்றைய தினம் ஜெயமாம்… என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தோடு, பொழுது விடிந்ததும் பார்த்த முதல் வார்த்தையே மங்களமாக இருக்க மகிழ்ச்சியுடன் முருகன் கோவிலிற்கு புறப்பட்டாள் இழையினி அந்த உதயகாலத்தில்.

அவள் சந்தோசத்திற்கு காரணம், நாள் காட்டியில் அவள் பார்த்த வார்த்தை மட்டும் அல்ல, அவள் வெளி தாழ்வாரம் வந்தவுடன் அவளது மனதுக்கு இனிய விராலிமலை முருகன் கோவிலில் இருந்து ஒலித்த கோவில் மணி ஓசையும் தான்.

 

ஆம் விராலிமலை. இது தான் இழையினி பிறந்து வளர்ந்த ஊர். திருச்சியில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் அழகிய ஊர், விராலிமலையின் குன்றின் உச்சியில் அழகே உருவான முருகன் வீற்றுருக்க, முருகனின் வாகனமான அழகு மயில்கள் அவ்வூரில் குழுமி இருக்க, விராலி மலையோ அல்லது மயிலின் இருப்பிடமோ என்று ஐயமுறும் விதம் அழகு மயில்கள் நிறைந்திருந்தன.

 

மயில் கழுத்து நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தவள், அவளது பின்னழகையும் தாண்டி நீண்டிருக்கும் நீளமான கூந்தலை பின்னலிட்டிருந்தாள். நேர்வகுடு, சிறு அளவான நாசி, பால்சருமம், அகன்ற விழிகள் என மொத்த அழகையும் தத்தெடுத்தவள் போல், பார்பவரை ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகுடன் மிளிர்ந்த இழையினி, நடந்து தான் செல்கிறாளா? அவள் பாதம் பூமியில் படுகிறதா? இத்தனை அமைதியாய்க் கூட  ஒரு பெண்ணால் நடக்க இயலுமா என்று சிந்திக்கும் அளவு கோவிலை நோக்கி நடந்து சென்றாள்.

 

அமைதியான நடையிலும் சற்று துரித்தம் காட்டத்தான் செய்தாள், அவளின் தந்தையை நினைத்து….

 

கோவிலுக்கு வெகு அருகில் தான் அவள் வீடு இருந்தது. வீடு என்று சொல்வது சரிதானா? இல்லை அதை மாளிகை என்று சொல்ல வேண்டுமோ, அத்தனை கம்பீரமாய் எழுந்து நின்றது அந்த மாளிகை.

 

புதுமையின் சாயல் ஒரு சதவீதம் கூட இல்லாது, எழுந்து நின்ற மாளிகை அவ்வூரில் பெரிய தலைக்கட்டான ராகவன் என்பவருடையது. ராகவனுக்கு தொழில் என்று சொல்லவதை விட, ராகவனால் தான் அங்கே பலருக்கு தொழில் நடந்துக்கொண்டு இருந்தது. விவசாயம், பால்பன்ணை, தென்னந்தோப்பு, மாந்தோப்பு, சம்பங்கி, செண்டுமல்லி தோட்டம் என அனைத்துக்கும் சொந்தகாரர். ஆனால் ராகவனோ அவரது சொத்தாக கருதுவது அவளது மூத்த மகளான இழையினியை தான். சின்னவள் இருக்கிறாள், இழையினியை விட ஒரே வயது சிறியவள் ‘இதழா’. துரு துருக் குணமும், ஓயாத வாயாடி பேச்சும் இதழா வரும் முன்னே அனைவர்க்கும் அது தெரிந்துவிடும் அளவு கலகலப்பானள்.

 

சின்னவளும் ராகவனின் செல்லமே, ஆனால் மூத்தவளே அவரது உயிர் நாடி…..

 

ராகவனுக்கு பெரியவர்கள் நிச்சயித்த திருமணம்… மரகதம், அவரின் மனையாளின் பெயர். பெயரில் மட்டும் அல்லாது குணத்திலும் மரகதத்துக்கு இணையானவர்.

 

“பாப்பா… பாப்பா.. எங்க இருக்க டா… ” என்று குரல் கொடுத்துக்கொண்டே முன் அறைக்கு வந்தார் ராகவன்.

 

அவரை பார்த்து ஒரு மென்மையான சிரிப்பை உதிர்த்தவர் அவரின் குரலைக் கேட்டு வெளியில் வந்த அவரின் மனையாள் மரகதமே. மரகதத்தின் சிரிப்பை உணர்ந்துக் கொண்டவராய், “ஒ வெள்ளி கிழமை-ல மறந்துட்டேன்… பாப்பா எப்ப கிளம்புச்சு… ” என்று கேட்டவர் வாசலை பார்த்தார் மகள் வருகின்றாளா என்று.

 

காரணம் எப்பொழுதும் அவர் எழுந்ததும்,  முதலில் இழையினின் முகம் காணவே அவளை தேடி வந்திடுவார். இழையினி இப்பொழுதும் அவருக்கு குழந்தையே.

 

இழையினிக்கு 2.5 வயது இருக்கும் பொழுது, இழையினி அவரிடம் மழலை மொழியில், “அப்பா… காலையில எங்க போன.. பாப்பா தேடுச்சு, அப்பா காணோம்” என்று கூற, அந்த சமயம் அறுவடை நேரம் என்பதால் அதிகாலையில் சென்று விட்டவர் தாமதமாக வர, காலையில் கண் விழித்ததும் தந்தையை காணாமல் முதல் முறையாக இழையினி கேட்க அந்த கேள்வியில், மகள் தன்னை தேடுகிறாள் என்று உணர்ந்துக் கொண்ட அவரோ பெருமிதத்தின் உச்சத்திற்கு சென்றார்.

 

“அப்பா, வேலையா போனேன் பாப்பா, என் செல்லம் தேடுச்சா?” என்று கேட்டுவிட்டு அவளை தூக்கி சுற்ற, மழலை சிரிப்பை உதிர்த்தவள் அவரிடம் குழந்தை தனம் மாறாமல், “அப்பா, டாட்டா போய்ட்டியா? நீ தூங்கி, … தூங்கி முடிச்சிட்டு, நாளைக்கு வரும்ல அப்ப, பாப்பா’அ பாத்துட்டு தான் டாட்டா போகணும்..இல்ல பாப்பா பாவம்” என்று கூற, அதை இன்றுவரை அவரின் செல்ல மகளின் பேச்சை அப்படியே பின்பற்றி வருகிறார்.

 

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மகளை சந்தித்த பிறகே மற்றது அவருக்கு…..

 

கோழி கூவித்தான் விடியலை உணரும் மக்கள் இருக்க, தன் மகளின் முகத்தில் தான் அவரது விடியலே இருந்துவந்தது.

 

நேற்று காய்கறி சாகுபடி விஷயமாக மதுரை சென்று வந்தவர், பின்னிரவு 3 மணிக்கே வந்து சேர்ந்திருக்க, தந்தையை எழுப்ப மனம் இல்லாத இழையினி, வாடிக்கையாக செல்லும் முருகன் கோவிலிக்கு சென்று விட, காலை 7 மணிக்கு விழிப்பு தட்டிவிட, மகளை தேடி ராகவன் வந்தார்…..

 

இவை அனைத்தையும் இத்தனை காலமாய் பார்த்துக்கொண்டே வந்த மரகதம், இழையினியை தேடி வந்தவரை நோக்கி சிறு கிண்டல் கலந்த சிரிப்பை உதிரவிட்டார்.

 

“இப்ப எதுக்கு சிரிக்கிற… பாப்பா, என்ன எழுப்ப வேணாம்னு போயிருப்பா… அவ கிளம்புறதுக்கு முன்ன, நான் பாப்பாவ பார்க்கலாம்னு வந்தேன்… காரணம் இன்னைக்கு ஒரு முக்கியமான தாக்கல் வருது… ” என்று மரகதத்தின் சிரிப்புக்கு பதில் கொடுத்துக் கொண்டு இருந்தார் ராகவன்.

 

அங்கு இழையினியோ வழக்கத்தைவிட வேக வேகமாக முருகனை தரிசித்து விட்டு, கையில் கொண்டு சென்ற தானியம் அடங்கிய பனை ஓலையால் செய்யப்பட்ட கூடையில் இருந்து அவளின் மனம் கவர்ந்த மயில்களுக்கு இரை போட்டுக் கொண்டு இருந்தாள்.

 

ஆம் விராலிமலை முருகனுக்கு மட்டும் அல்லாது, அழகனின் வாகனாமா மயிலுக்கும் பிரசித்தம். பாரம்பரிய மிக்க இடம் என்று அரசாங்கமே ஆணைபிறப்பிக்கும் அளவு அதிக அளவில் தோகைகள் உறையுமிடம்.

 

முருகன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த காடோ மயில்களின் உய்வகம்…..

 

அந்த அடர் காட்டின் முகப்பில் நின்றபடி தான் இழையினி மயில்களுக்கு தானியம் இட்டாள். கொறித்து முடித்த மயில்களில் ஒன்றோ, அவளது முகம் பார்த்து அகவ, அந்த மயில், இழையினியிடம் தான் பேசியதோ என்ற பிரம்மை தந்தது.

 

அன்னமிடும் தோகையை கண்டு 
ஆண்மயிளுக்கும் காதல் வர, 
காதல் கொண்ட ஆண்மயிலும்
அகவுகிறது காதல் மொழியை…..

மானிடர் போல மயில்களும் 
மைவிழியின் மனம்கவர 
மன்னரின் சாமரம்போல் 
கொடைவிறித்தி கூத்தாடுகிறது வண்ணத்தோகையை……..

                                                                — ராசி

 

சில நிமிடங்களில் இவை யாவையும் செய்தவள், வேகமாக அவள் தந்தையை  காண விரைந்தாள்….

 

“ஏங்க, பொண்ண பார்த்தா தான் போகணும்னு காத்திருந்தா, அவ பெண் பிள்ளைங்க..வேற வீட்டுக்கு போய் வாழபோறவ, எப்பொழுதும் இதே தொடர  முடியாதுங்க …. ” என்று மரகதம் நிதர்சனத்தை  எடுத்துக் கூற, அவரோ, “என் பொண்ணு என்கூடவே இருக்குறது போல இங்கயே ஒரு மாப்பிளை பார்ப்பேன் டி…” என்று கூறினார் ராகவன்.

 

மேலும் அவரே தொடர்ந்து, “அதோட இன்னைக்கு பாப்பவ பார்க்கமட்டும் நான் ஆவலா காத்திருக்கல, நம்ம பாப்பா படிப்ப முடுச்சதும் வரன் பார்க்கலாம்னு நினைச்சோம்… ஆனா பாப்பா தான் இன்னும் ஒரு வருடம் போகட்டும்னு பிடிவாதமா இருந்துச்சு… இன்னைக்கு தான் பாப்பா சொன்ன ஒரு வருஷம், அதான் என் பொண்ணுக்காகா காத்துட்டு இருக்கேன்” என்று கூறினார்.

 

ராகவன், மரகதத்தின் உரை நிகழ்ந்துக்கொண்டிருந்தபொழுதே உள்ளே நுழைந்தாள் இழையினி, தான் அவகாசம் கேட்டிருந்த தேதி இதுதான் என்பதையே மறந்தவளாய் முகம் முழுக்க புன்னகையுடன்….

 

“அப்ப்பா…. ரொம்ப நேரம் ஆகிடுச்சா… இந்தாங்க பிரசாதம்… ஏன் இப்பவே எழுந்தீங்கப்பா, இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதானே…. நைட் ரொம்ப லேட்டா தானே உறங்க போனீங்க…” என்று செல்லம் கொஞ்சியவளையும், கணவரையும் மரகதம் பெருமையுடன் பார்த்தார்.

 

காரணம், வெளி உலகில் அவரிடம் பேசவே தயங்குவோர் இருக்க, மகளின் கண் அசைவிற்கு காத்திருக்கும் கணவனின் பாசமும், கண்ணை கட்டிவிட்டு கிணற்றிலே விழு என்றாலும் , ஒரு நொடிக் கூட தாமதிக்காது தந்தை சொன்னதை செய்யும் மகளின் பாசமும் தான் அந்த பார்வைக்கு அர்த்தம்.

 

“என்ன அங்க சத்தம், என்ன அங்க சத்தம்ம்ம்….. ” என்று கரகாட்டக்காரன் கோவைசரலாவின் கரகாட்டகாரன் பட வாக்கியத்தை கூறியபடி, கலைந்த கேசத்துடன், வாயை திறந்தபடி கொட்டாவிவிட்டுக்கொண்டு படி இறங்கி வந்த சின்னவளை பார்த்த ராகவன் முறைக்க, அதை கண்டுக்  கொள்ளாமல் மரகதத்தின் அருகில் நின்றுக் கொண்டு, “என்ன மா… மீச என்ன சொல்லறாரு” என்று நக்கல் இழையோட அன்னையின் காதில் கிசுகிசுத்தாள் அவரின் பெரிய மீசையை குறிவைத்தப்படி.

 

அவள் கேட்டதுக்கு, அவளின் அன்னையோ, “ஏண்டி நீயும் உன் அக்காவ போல கொஞ்சம் பொறுப்பா இருக்கலாம்ல, அது தான் அவரு உன்ன திட்டுறாரு…” என்று மெதுவாக கூற, சின்னவளோ “ஏன் மா பொறுப்பா இருந்தா மட்டும்… அப்படி என்ன ஆகபோது… இல்ல பொறுப்பா இருக்கவங்களுக்கு பருப்பு வட தரபோறதா யாராச்சும் சொன்னாங்களா, திட்றதுக்கு மட்டும் அந்த மீசைக் கூட சேந்திடுவியே…. மிஸ்டர் ராகத்துக்கு ஏற்ற தாளம் தான் நீ…” என்று மீண்டும் முணுமுணுக்க, “அங்க என்ன சத்தம்….” என்று ராகவன் அவருடைய கம்பீரமான குரலில் கேட்க, அதை சட்டை செய்யாமல் சின்னவளான இதழாவோ கம்மிய குரலில், “சும்மா பேசிட்டு இருக்கே மாமா…” என்று சினிமா பாணியில் கூற அவளுக்கும் சேர்த்து வழக்கம் போல மரகதமே அவரிடம் சமாளிக்க நேர்ந்தது.   

 

ராகவனுக்கு இதழாவையும் பிடித்தமே… ஒரு சில விஷங்களில் மட்டும் சிறுது ஏட்டிக்கு போட்டியாக நடந்து அவரிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்க நிற்பாள். அதுவும் சில நிமிடங்களே, அதன் பிறகு, சிறகு விரிக்கும் பட்டாம் பூச்சியாய் கவலை மறந்து சென்றுவிடுவாள். ராகவனுக்கு, இழையினி மீது எத்தனை அன்போ, அதவிட ஒரு படி மேலாக இதாழவிற்கு, இழையினி மீது அன்பு அதிகம்.

 

“என்ன வழக்கம் போல உன் பொண்ணுக்கு சப்போர்ட்டா..?” என்று சமாளிக்க தடுமாறிக் கொண்டு இருந்த மரகதத்தை பார்த்து ராகவன் வினவ, மரகதமோ, “இதே பொண்ணு, இந்த வருஷம் சிலம்பு சுத்துரத்துல முதல்ல வந்த பொழுது என் பொண்ணு-னு பெரும புடுச்சீங்க… இப்ப இவ பல்லுக்கூட தேயிக்காம வந்து நின்னதும் என் பொண்ணு ஆகிடாளா?” என்று கேட்க, அவரோ, “அதுக்கு காரணம்….” என்று ராகவன் தொடங்கும் முன்னமே அவரை தடுத்தாள் இதழா.

 

“மை டியர் மீசை டாட்…இருங்க நான் சொல்றேன் உங்க மனசுல இருக்குறத” என்று தொடங்கிவிட்டு, அவரது துண்டை தூக்கி அவளது தோளில் போட்டுக் கொண்டு குரலை செருமிக்கொண்டு, “மரகதம்… பொண்ணோ, ஆணோ எப்படி இருக்கணும் தெரியுமா…? யார இருந்தாலும் காலை 6 மணிக்கு மேல தூங்க கூடாது, எப்பயும் யாருக்கும் நாம தப்பான உதாரணமா வாழக் கூடாது, நம்ம மண்ணோட கலாச்சாரத்தை கைவிட கூடாது, நாகரிகத்த ஏற்குற அதே சமயம் பழமையையும் மறக்க கூடாது. இதழா, எத்தனையோ விளையாட்டு இருக்கும் போது சிலம்பு கத்துகிட்டா, அது எனக்கு பெருமை.  

 

நம்ம பாப்பா இழையினி, அது வாங்குன மார்க்குக்கு வேற படிப்பு படிக்காம அப்பா-க்கு பிடிக்குமே னு வரலாறு படிச்சுச்சு….

 

ஒரு பையன விட பொண்ணுக்கு தான் கல்வி அறிவு தேவை, ஒரு பெண் படிச்சாதான் அவளோட சங்கதியே பட்டறிவு பெரும்….

 

அப்படி அவுங்க இரண்டு பேரும் நான் ஆசைப்பட்டது போல வந்தது சந்தோசம் தான்… ஆனா அதுக்காக காலையில தாமதமா கண் முழிக்கிறத நான் எப்பயும் ஏத்துக்க மாட்டேன்…. எனக்கு பிடிக்காத காரியம் செய்தா, அவுங்க உன்னோட பெண் தான்…” என்று கூறி முடித்த இதழா, அவரிடம் திரும்பி, “சரி தான அப்பா…எதுவும் மிஸ் பண்ணிடலியே….” என்று கூறி கலகலவென சிரித்தாள்.

 

இதை கேட்டுக்கொண்டு இருந்த மரகதமோ, “அப்படி பேசு டி என் செல்லமே.. என் புள்ளக்கு எவளோ அறிவு..பார்த்தீங்களா.. ? ” என்று இதழா பேசியதை அதிசயம் போல மரகதம் பேச, மகள் பேசிய விதத்தில் ராகவனுமே மெளனமாக சிரித்துக் கொண்டு தான் இருந்தார்.

 

இழையினியோ, “அடிப்பாவி… உன் வேலைய ஆரம்பிச்சுட்டியா…காலையில எழுந்துருச்சு, பல்லுக் கூட தேக்காம என்னடி இது… அப்பா, இவளுக்கு போய் ஏன் இதழானு பெயர் வச்சீங்க.. இதழாக்கு பதிலா இம்சைனு வச்சு இருக்கணும்” என்று கூறி தந்தையின் கையைபற்றிக் கொள்ள, இதழாவோ, “அட இதுக்கூட சூப்பராதான் இருக்கு… இம்சை இதழா… ” என்று அவளது பெயரை அடைமொழியோடு கூறிக்கொண்டு அவளே சந்தோசப் பட்டுக்கொண்டாள்.

 

இதுதான் இவர்களது குடும்பம். இழையினி தந்தையின் செல்லமாக இருக்க, இதழவோ தாயின் செல்லம். ஆனால் பெற்றோர் இருவருமே இரண்டுபேரையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்….. மகள்களின் நலனுக்காக எதையும் செய்ய துணிந்தவர். அறத்தின் வழி மட்டுமே நடப்பவர்.

 

“அப்பா… எனக்கு ஒரு டவுட்… எனக்கு அழகா ‘இதழா’-னு பூவிதழ் பெயர வச்சுருக்கீங்க.. ஆனா இவளுக்கு மட்டும் ஏன் இலை, தலை, காய்னு ஒரு பேரு…. ” என்று நக்கல் இழையோட கடைக்கண்ணில் இழையினியை பார்த்துக்கொண்டே, அவளை வெறுப்பேற்றும் பொருட்டு இதழா கேட்க, அவளது பெயர் கூறுபோடபடுவதை பொருக்க முடியாத இழையினி அவளை அடிக்க துரத்த, தாயின் பின்னும், தந்தையின் பின்னும் மாறி மாறி மறைந்துக் கொண்டு இதழா, இழையினியின் கைகளில் சிக்காமல் ஆட்டம் காட்டினாள்.

 

“அப்பா…” என்று சிறு குழந்தை போல் இழையினி, அவரிடம் முறையிட இருவரையும் சமாதானப்படுத்தி அவர்களை அவரின் அருகினில் அமர்த்திக் கொண்டார்.

 

“சின்ன குட்டி… இழையினினா இலை இல்லடா… ஆபரணம்னு தான் அதுக்கு அர்த்தம்… எங்களுக்கு திருமணம் ஆகி 3 வருஷம் கழுச்சு, எங்க வாழ்க்கைய அலங்கரிக்க வந்த ஆபரணம். அதுனாலா தான் இழையினி அப்படின்னு பெயர் வச்சே…. ” என்று கூறி பெரிய பெண்ணை சமாதானம் செய்ய, முகம் மலர்ந்தவளாய் பெரியவள் இப்பொழுது மாற, சின்னவளோ முகம் வாடி அவரிடம், “அவ மட்டும் தங்கம்.. நான் என்ன வெறும் பூ தானா ?” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கேட்க , இப்பொழுது ராகவனோ இதாழவின் புறமாக திரும்பி, “இல்ல டா.. நீ பிறந்தப்ப உன் சருமம், மற்ற எல்லா குழந்தைய விட மிருதுவா இருந்தது.. அதோட ரோஜா இதழ் போல சிவப்பு நிறமா இருந்தடா… நான் உன்ன கையில வச்ச பொழுது, என் கையில என் சின்னக் குட்டி, ஒரு ரோஜா பூ போல இருந்தடா.. அது தான் டா…  பூவிதழ் போல இருந்த என் செல்லத்துக்கு இதழானு வச்சேன்… ” என்று கூற இல்லாத காலரை தூக்கி விட்ட இதழா, இழையினிடம் பழிப்புக் காட்டினாள்.

 

அவர்களின் உரையாடலின் போதே உள்ளே வந்த ஒரு பன்ணை வேலை ஆள் ராகவனிடம் மிக பவ்யமாக வந்து, “அய்யா….கோத்தகிரி-ல இருந்து ஆள் வந்துருக்காக அய்யாவ பாக்குறதுக்காக தான் காத்துகிடக்காங்க…” என்று கூற ராகவனோ, அந்த பணியாளிடம், “அவுங்கள உள்ள வந்து கல்லு வாசல்ல உக்கார சொல்லு சொக்கா…” என்று கூறினார்.

 

‘கோத்தகிரி’ என்ற வார்த்தையை கேட்டதும் இழையினியின் கண்களில் ஆர்வம் லேசாக துளிர்விடுவதை கண்டுக்கொண்ட ராகவன் ஒரு சன்ன சிரிப்புடன் கல்லுவாசலுக்கு சென்றார்.

 

சிறிது நேரத்தில் அவர்களுடன் பேசிவிட்டு உள்ளே வந்த ராகவன் “மரகதம்….” என்று அழைக்க, பின்கட்டில் இருந்த இழையினியும், இதழா-வும் அவரின் அழைக்கும் குரல் கேட்டு, பின்கட்டில் இருந்த ஐந்து ஆறு தென்னைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை பாதியில் விட்டுவிட்டு இழையினி ஈர பாதத்துடன் ஓட, அதை பார்த்த இதழாவின் பார்வையில் நிலைத்த இடம், சற்று முன்பு இழையினி சென்ற பாதை, அவள் மறைந்த பின்னும், அவள் பாதத்தின் ஈர சுவடுகளை தாங்கி நின்ற, கல்லினால் அமைக்கப்பட்ட அந்த தோட்டத்து ஒற்றை அடி பாதை…

 

அந்த ஈர பாத சுவடை பார்த்தவள், தன் தமக்கையின் பாத அழகில் எப்போதும் போல், இப்போதும் ஈர்க்கப்பட்டாள். இதழாவும், இழயினியும் கிருஷ்ணர் ஜெயந்தி அன்று தம் தம் பாத சுவடை பதிக்க, அந்த சிறுவயதிலே ஏதோ ஒன்று இழையினியின் பாத சுவட்டை தனிமை படுத்தி காட்டியது. அது என்னவென்று இதழாவிற்கு இன்றுவரை புரியவில்லை. ஆயினும், நிச்சயமாக தனது தமக்கையின் பாத சுவடை போல வேறு எந்த பெண்ணுடயதும் அத்தனை அழகாய் இருக்காது என்று மற்றும் தோன்றிட்டு.

 

சிறுவயதில் என் அக்காவை போல் அழகாக எனது கால் தடம் ஏன் வரவில்லை என்று இதழா அழுது புரண்டதும் சேர்த்து நினைவு வந்து, ஏதோ இன்று நடந்த நிகழ்வு போல் இதழாவின் அதரம் மெலிதாக மலர்ந்தது.

 

இந்த சிறு எண்ணங்கள் முளைக்க, அதை தற்காலியமாக ஒதிக்கிய இதழாவின் மனதில் இபொழுது, “அட ஏன் இவ இப்படி ஓடுறா… அப்பா, அம்மாவதான கூப்பிட்டாங்க… இவ இப்படி தல தெறிக்க ஓட காரணம் என்ன” என்று யோசித்தவள், அவளும் இழையினியை தொடர்ந்து முன்னேறினாள்.

 

மரகதம் கொடுத்த நீர் மோரை பருகியவர், பார்வையால் இழையினியை கவனிக்க, அவரது சின்ன கண்கள் சிரித்ததோ என்று இருந்தது இழையினிக்கு. ஏன் இதழாவிற்கும் தான். ஆனால் காரணம் தான் இதழாவிற்கு புரியவில்லை.

 

“பாப்பா… உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு நானும் உன் அம்மாவும் யோசித்தோம்டா… நீ, நாங்க கேட்டதுக்கு ஒரு வருஷம் போகட்டும்னு சொன்ன. இப்ப அந்த ஒரு வருசமும் முடுஞ்சிருச்சு. இப்ப பண்ணலாம்னு, அதுக்கு முன்ன, உனக்கு என்ன அபிப்ராயம் இருக்குமா.. எதுனாலும் அப்பாகிட்ட சொல்லு டா.. எதுனாலும்.. உன் மனசுல எதுவும் ஆசை இருக்கா…” என்று ராகவன் கேட்க, இதழாவோ, “அடிபாவி, இந்த மேட்டர் தெரிஞ்சு தான் அவ்வளவோ வேகமா வந்தியோ…” என்று கேட்க, இழையினியோ அவளை முறைத்துவிட்டு அவள் அப்பாவிடம், “அப்பா… என்ன கேட்டுடீங்க, எனக்கு உங்கள விட்டு போக இஷ்டம் இல்லப்பா…. அதுக்காக என் மனசுல வேற இஷ்டம் இருக்கும்னு அர்த்தம் இல்ல… என் அப்பா தான் எனக்கு முக்கியம், என் அப்பா என்ன செஞ்சாலும் எனக்கு சம்மதமே.. ஏன் பா.. இப்படி கேட்டீங்க… ” என்று கேட்டவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

 

அதை பார்த்து, பெருமையாக தனது மனையாளிடம் பிருவம் உயர்த்தியவர்… அவரது பெரிய மீசையை தடவியவாரே, “என் மகள, பார்த்தியா” என்று கூற அவரோ, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” என்று கூறினாலும் அவரது மனதிலும் நிம்மதி படர்ந்தது.

 

இதை எல்லாம் பார்த்து குழம்பிய இதழாவோ, “ஐயோ இங்க என்ன தான் நடக்குது… இப்ப சொல்ல போறீங்களா இல்லையா” என்று தலைமுடியை பியித்துக்கொண்டு கேட்க, ராகவனோ சிறு சிரிப்போடு, “இதழா குட்டி, அக்காக்கு கல்யாணம் பண்ணலாம்னு யோசிச்சு அக்கா கிட்ட பேசுனேன் டா… ஆனா பாப்பா, இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு சொல்லிடுச்சு… அதுக்குள்ள உங்க அம்மா, ஒரு வேளை நம்ம இழையினி மனசுல வேறு ஆசை இருக்குமோனு என்கிட்டே சொல்ல, நான் அவ சொன்னத ஒரு துளிக் கூட நம்பள. என் பொண்ண பத்தி எனக்கு தெரியாதா.. உங்க அம்மா சொன்னதுக்காக பாப்பா ட்ட கேட்டேன்… என் பொண்ணு, எப்பயும் என் பொண்ணு தான்-னு அவளோட பதில் ல இருந்து சொல்லிடுச்சு….” என்று கூற இதழாவோ, “அப்பா, ஒருவேள அப்ப அக்கா லவ் பண்ணினா ஏத்துகிற…?” என்று சந்தேகத்தோடு இழுக்க, ராகவனோ பெரும் சிரிப்புடன், “இல்ல டா… நான் அப்படி சொல்லல, என் பொண்ணுங்க காதலிச்சா நிச்சயம் அந்த பையனுக்கு கல்யாணம் பண்ணி தந்துருவேன்…

 

ஏன் தெரியுமா? என் இரண்டு பொண்ணுங்க மேலயும் எனக்கு அவ்ளோ நம்பிக்கை. அவுங்க எந்த முடிவும் சரியா தான் எடுப்பாங்க.. சுயமா முடிவு எடுக்குற அளவு நான் அவுங்களுக்கு இந்த உலக அறிவு கொடுத்திருகிறதா நம்புறேன்… ஆனா இழையினி மனசுல அப்படி ஒரு நினைப்பு வந்தா, நிச்சயம் என் பொண்ணு அந்த பையன் கிட்ட சொல்லுதோ இல்லையோ.. என்கிட்ட இருந்து எதையும் மறைக்க நினைக்காது சொன்னேன்டா.. அது தான் உங்க அம்மா கிட்ட இப்ப நான் சொன்னதுக்கான அர்த்தம்” என்று கூற இழையினி அவளது தந்தையை சிறு குழந்தை போல் கட்டிக் கொண்டாள்.

 

“அப்ப லவ் பண்ணலாம்னு சொல்றீங்க…” என்று இதழா இழுக்க, மரகதமோ அவளது கதை பிடித்து திருகினார்…

 

அதை பார்த்து ராகவனும், இழையினியும் சிரிக்க….. ராகவனோ, “என்னடா… அப்பா உனக்கு மாப்பிளை பார்க்கட்டுமா டா.. ? ” என்று வினவ, “உங்க விருப்பம் பா” என்று மட்டும் இழையினியின் பதிலாய் இருந்தது.

 

“சரி டி, அப்பா கிட்ட எப்படி மாப்பிளை வேணும்னு சொல்லிடு…” என்று இதழா கூற, இழையினியோ, “என் அப்பாவ போல யோசிக்கிறவரா” என்று கூற… ராகவனுக்கு பெருமை பிடிபடவில்லை.

 

“அப்பா ஆசைப்பட்ட பதில் சொன்ன என் பாப்பாக்கு… நான் ஒரு பரிசு தர போறேன்…” என்று கூற என்ன என்பது போல ஆவலாக பார்க்க, இழையினியிடம், “நீயும், நம்ம இதழும் கோத்தகிரி போரீங்கடா… இது உன்னோட மனசுல ரொம்பநாளா இருக்குற ஆசை.. அப்பாகிட்ட சொல்லலனா எனக்கு தெரியாதா… ஐந்து நாள்… நீ ஆசைப்பட்டபடி அந்த மக்களை பார்த்துட்டு வரலாம்.. அதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்… ” என்று கூறினார்.

 

ஆம் கோத்தகிரியில் வாழும் பழங்குடி மக்கள் ராகவனுக்கு பழக்கம். பத்து வருடங்கள் முன்பு, அந்த மக்கள் உழைப்பில் கொண்டு வரும் கிழங்கு , தேன், மீன் , மூலிகை இவை யாவையும் குறைந்த விலையில் அவர்களை ஏமாற்றி சில வியாபாரிகள் வாங்க, அதை தற்செய்யலாக நீலகிரி சென்ற ராகவன் கண்டுக்கொண்டு அவர்களுக்கு உதவியதோடு இல்லாது, அவரே சில பொருட்களை சரியான நியாய விலையில் கொள்முதலும் செய்ய தொடங்கினார்.

 

அன்று ஆரம்பித்த பழக்கம், அவர்களின் திருவிழாவின் போது அவரை தவறாது அழைக்கும் வரை அந்த பழக்கம் பெருகியது. எல்லா வருடங்களும் சென்றவர், இழையினி-க்கு அங்கு செல்லும் ஆவல் இருந்தும், சூழ்நிலை  காரணமாய் அவளை அழைத்து செல்லாமல் விட்டவர் கடந்த 4 வருடங்களாக அவரும் செல்லமுடியாத சூழல் ஏற்பட,  தன் மகளின் மனம் அறிந்து அவளை அனுப்பவேண்டும் என்று குறித்துக் கொண்டார்.

 

இந்த வருடமும், அவர் செல்ல இயலாது போக, இவரை அழைக்க வந்த ஊர் பெரியவர்களிடம், தனது மகள்கள் மற்றும் அவரது பன்ணை ஆள் இருவர் வருவார்கள் என உறுதிக்கூற அவர்களோ அகமகிழ்ந்து போனார்கள்.

 

இவ்வாறாக அவர்கள் கோத்தகிரி பயணம் உறுதி ஆனது…..

 

பெண் பிள்ளைகளை தனியாய் அனுப்புவதை பற்றி குறைப்பட்ட மரகதத்திடம், “நம்ம பொண்ணுங்க அத்தன கோழை இல்ல மரகதம்… பொண்ணுங்கள பூட்டியே வைக்க கூடாது.. அதோட அந்த பழங்குடி மக்கள் பழகுறவங்களுக்கு உயிரையே கொடுக்குறவங்க…. பாதுக்காப்பான இடம்… நம்ம சொக்கனும், ரங்கன்னும் கூட போவாங்க… அட அதை விடு நம்ம கடைக்குட்டி இதழா இருக்கும்போது… என்ன பயம்” என்று கூற இதழாவோ பெருமையாக தாயை பார்த்து புருவம் உயர்த்தினாள்.

 

சந்தோசமாக, இழையினி பயணத்திற்கு ஆயித்தமாக, அந்த பயணம் அவள் வாழ்க்கை பயணத்தை மாற்ற போவதை அறியாமல் காலையில் பார்த்த ஜெயம் என்ற வார்த்தையை இன்று நிகழ்ந்ததோடு பொருத்தி பார்த்தாள்.

 

அவள் மனதில் உற்சாகம் தொற்றிக்கொண்டது… கடந்த ஏழு வருடமாக ஒருமுறையேனு அந்த கிராமத்தையும், மக்களையும் பார்க்கவும் அவர்கள் சாப்பிடும் உணவாக அவள் கேள்விப்பட்ட மூங்கில் குருத்து ரசத்தையும் பருக ஆசைக்கொண்டவள், அது நிகழ போகும் தருவாய் வந்ததை எண்ணி, மனதினுள் சிறு குழந்தையாய் குதியாட்டம் போட்டாள்.

 

அவர்கள் கிளம்ப ஆயுத்தமாக, அந்த நேரம் சரியாக இதழாவின் கைபேசி அழைத்தது……

 

கைபேசியில் வந்த செய்தி, இதழாவிற்குதான் எனினும் அந்த செய்தியால் இழையினியின் வாழ்க்கை ஆட்டம் காண போகிறது என்பதை அந்த நொடி இழையினி அறியவில்லை….

 

அவளுக்காக அவள் தந்தை தேர்வு செய்ய போகும் மணாளனை முழுமனதோடு ஏற்கும் நிலை இழையினிக்கு இந்த பயணத்திற்கு பிறகு இல்லாது போக போவதையும் அப்போது உணரவில்லை.

 

இதழா, அழைப்பில் வந்த செய்திக் கேட்ட அடுத்த நொடி… அவளது கூச்சல் அனைவரையும் ஸ்தம்பிக்க செய்தது.

Advertisement