முகிழ் –  25

 

“சினேகன், எங்க இருக்கீங்க? ஒகே மதிக்கு பின்னாடி தான் வரீங்களா?  ஆர் யூ சுயூர்? ஒகே… சரியா இப்ப எங்க இருக்கீங்க…. என்ன? ஒகே அங்கே இருங்க,…. நீங்க கொஞ்சம் பாஸ்டா மூவ் பண்ணி மதி போயிட்டு இருக்க ஆட்டோவ அங்கயே நிப்பாட்டி வைங்க நான் 10 மினுட்ஸ் ல வரேன்” என்று கூறிவிட்டு கைபேசியை அணைத்துவிட்டு மின்னெலென அந்த இடத்தை அடைந்திருந்தான் ஆதித்யன்.

 

அவன் பயணித்த 10 நிமிடங்களும் 10 யுகங்களாக தோன்ற ஆதித்யன் மதிக்கு ஏன் அழைப்பு செல்லவில்லை என்று சிந்தித்துக் கொண்டே அதோடு மதி நலமாக உள்ளதாக சினேகன் கூறினாலும் மதி எதற்காக தனக்கு அழைத்தாள், அந்த குரலில் ஏதோ ஒரு பயம் கலந்த ஒரு உணர்வு இருப்பதை புரிந்துக் கொண்டவன் அதற்கு மேல் என்ன யோசித்தும் விடை காணாததால் மதியிடம் தான் பதில் இருக்கிறது என்று யோசனையை கைவிட்டு, அவளிடம் விரைந்தான்.

 

கடவுளின் அனுகிரகம் இருந்ததோ என்னவோ சினேகன் கூறிய இடம் அவன் வீட்டிற்கு வெகு அருகில் இருந்ததால் ஆதித்யனால் 10 நிமிடங்களில் அந்த இடத்திற்கு சென்று அடைய முடிந்தது.

 

அவளுக்கு என்னவோ ஏதோ என்று சிந்தனையோடு விரைந்த வந்த ஆதித்யன் பார்த்தது, அந்த ஆட்டோ ஓட்டுனருடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்த மதியை. சற்று தொலைவிலே அவளை கவனித்து விட்டதால் அவள் அதிகார தோரணையில் அவரிடம் ஏதோ பேசிக் கொண்டு இருக்க தன் முன் பேச யோசிக்கும் மதியா இவள் என்ற எண்ணம் தோன்ற அவன் கடை இதழில் அளவான புன் முறுவல் தோன்றியது.

 

 

இத்தனை நேரம் பதறியது மறந்து, அவள் செய்கைகளை ரசித்துக் கொண்டே அவள் அருகினில் வர மதி ஆதித்யனை பார்த்து மௌனமானாள். ஒரு நிமிடம் அங்கே மௌனம் ஆட்சி புரிய, மதி ஆதித்யனிடம், “க்ரிஷ்ணவ்…நீங்க இங்க எப்படி?” என்று கேட்டு முடிப்பதற்குள் பதில் சிநேகனிடம் இருந்து வந்தது.

 

 

“ஆமாம் நல்லா போய்ட்டு இருக்க ஆட்டோல இருந்து ஆதி சார்க்கு போன் பண்ணிட்டு எதுவும் பேசாம கட் பண்ணிட்டா அவரு என்ன நினைப்பாரு…. அதான் ஆதி சார் எனக்கு கால் பண்ணி உனக்கு எதுவும் பிரச்சனையான்னு கேட்டாரு, இதே இடத்துல வெயிட் பண்ணவும் வைக்க சொன்னாரு…. ஆமாம் ஆதி சார்க்கு கால் பண்ணின சரி, ஒரு வேலை சார்ஜ் இல்லாம கட் ஆகிருக்கும்னே வச்சுபோம்… ஆனா எதுக்கு என்ன பாத்தது இருந்து இந்த ஆட்டோ காரர நீ திட்டுற…? அப்படி எத சொல்ல சொல்ற?” என்று சினேகன் கேட்க தன்னுடைய ஒரு அழைப்பிற்காக, அனைவரையும் கண் அசைவில் ஆட்டிவைக்கும் ஆதித்யன் வந்ததை எண்ணி அவனுக்கு தன் மீது உள்ள அக்கறையில் ஒரு மனம் பூரிப்பு அடைய மறு மனமோ இந்த அக்கறைக்கும், அன்பிற்கும் பதிலாய் அவரிடம் தன் காதலையும் தான் அவன் மீது கொண்ட நம்பிக்கை அற்ற தன்மையையும் எப்படி கூறுவது என மறு மனம் மருக தொடங்கியது.

 

அவள் ஆதித்யனை இமை விலக்காமல் பார்த்தபடி அவள் மனதோடு போராடிக் கொண்டு இருக்க, இப்போது அவளது கவனத்தை கலைப்பது ஆதித்யன் ஆனான்.

 

“மதி, என்ன ஆச்சு உன் மொபைல்க்கு? எதுக்கு இவரு கூட சண்டை போடுற? பதில் சொல்லு… உனக்கும் ஒன்னும் இல்லையே” என்று அவன், அவளில் பாதம் முதல் தலைவரை கண்களை ஓடவிட்டபடி கேட்க அவனது கரிசனத்தில் கரைந்து போனாள் மதி.

 

அவனது ஒவ்வொரு செய்யலும் மதிக்கு குற்ற உணர்ச்சியை தர ஆதியின் கண்களை சந்திக்காமல், “இல்ல நான் பாக்குற கேஸ்விஷயமா ஒரு தகவல்… அது தான் விசாரித்தேன்… இந்த… இந்த ஆட்டோ ஏறும் போதே, முன்பே இந்த ஆட்டோவ பாத்தது போல இருந்தது… அப்புறம் தான் நினைவு வந்தது.. இந்த ஆட்டோ தான் என்ன அன்னைக்கி கடத்த முயற்சி செஞ்ச ஆட்டோ… அது தான் ஒரு நிமிஷம் எனக்கு என்ன பண்ணனு புரியல அதான் உங்களுக்கு கால் பண்ணிட்டேன்… டிஸ்டர்ப் பண்ணிட்டேனா… அது வந்து….” என்று என்ன சொல்கிறோம் என்பதை அவளே அறியாமல் தட்டு தடுமாறி முன்பு நடந்த விஷயத்தை கூறியவள், கூறி முடித்த பின்பே உணர்ந்தாள் இந்த ஆட்டோ கடத்தலில் தன்னை பாதுகாத்தது ஆதித்யன் என்று சினேகன் நினைத்திருக்கின்றான், ஆதித்யனுகோ இப்படி ஒன்று நடந்ததே தெரியாது போன்ற விஷயங்கள் நினைவு வர சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தி விட்டு உதடை அழுந்த கடித்துக் கொண்டாள்.

 

ஒரு சில நொடிகளில் தன்னை வெகு வேகமாக சமன் செய்தவள் மீண்டும் அதை சமாளிக்கும் பொருட்டு, “அது வந்து… அப்போ நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்… பிறகு சினேகன் வரவும்… கொஞ்சம் சப்போர்ட்டிவா பீல் பண்ணினேன்… அதான் இந்த ஆட்டோகாரர் கிட்ட விசாரிச்சுட்டு இருக்கேன்” என்று ஒருவாராக பழைய குரலை வரவழைத்துக் கொண்டு பிசுகின்றி பேசினாள் மதி.

 

இதை கேட்டு கொண்டு இருந்த ஆதித்யனோ மனதினுள், “உன்ன சுத்தி ஒரு வலயம் போட்டு உன்ன பாதுகாக்க முடியிது, உன்ன சுத்தி நடக்குற விஷயத்துல உன் எதிரிகள என்னால கண்டுபிடிக்க கூட முடியிது… ஆனா உன் மனசுல என்ன நினைக்கிறனு என்னால புருஞ்சுக்க முடியலையே…. காலை வர என் கண்ணை பாத்து பேசுன… என் கண்கள் கேட்ட கேள்விக்கு கூட பதில் சொன்ன… ஆனா இப்ப என் கண்கள பார்கிறத ஏன் தவிர்க்கிற” என்று அவன் எண்ணமிட்டபடியே வெளியில் நடப்பவைகளை பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

ஆதியின் பார்வை நடப்பவையில் பதிந்திருக்க, அவன் சிந்தை மதி சொன்ன தகவல்களை உள்வாங்கி இருக்க அவன் மனமோ அவளிடம் கேள்வியை தொடுத்துக் கொண்டு இருந்தது.

 

என் வானின் இளமதியே!!!

 

பிறை இல்லா

பொழுதிலும் உலவும் என் பார்வை

உன் ஆழ் மனதினுள்

பார்க்கும் சக்தி பெறாதது ஏனோ

 

ஒளி இல்லா

சமுத்திரத்திலும் நீந்தும் என் பார்வை

உள்ளங்கை அளவுகொண்ட உன் உள்ளதை

அறியும் சக்தி பெறாதது ஏனோ 

                                                      —உன் ஆதித்யன்

                                                                                           

அவனது கேள்விகள் ஒன்று ஒன்றாய் தொடுத்து இறுதியில், கேள்விகள் நிறைந்த அழகிய மாலை போல் கவிதை முளைத்திருந்தது அவன் மனதினில்.

 

 

இவை அனைத்தும் ஓரிரு நிமிடங்களில் நிகழ்ந்திருக்க மதியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சினேகன் ஒரு சில வினாடிகள் யோசனையின் பிறகு பேச தொடங்க, மதி ஆதி இருவருமே தங்கள் சிந்தனையில் இருந்து களைந்து சினேகன் சொல்வதை கவனிக்கலானார்கள்.

 

 

“மதி நானே வந்து ஆட்டோ ஸ்டாப் பண்ணவில்லை, நீ, ஆதி சார்க்கு கால் பண்ணிட்டு அப்புறம் கால் கட் ஆனதுனால ஆதி சார் தான் உடனே எனக்கு தகவல் சொல்லி அவர் வர வரைக்கும் இதே இடத்துல வண்டிய நிறுத்த சொல்லிட்டு சீக்கிரம் வந்தாரு… சோ உனக்கு தயிரியம் வந்ததுக்கு நான் காரணம் இல்ல ஆதி சார் தான்.. ஆமாம் நீ தான் பயப்பட மாட்டியே… இப்ப என்ன திடிர்னு…” என்று சினேகன் கேட்க அதற்கு மதியோ, “இல்ல அன்னைக்கு நடந்த விஷயத்துல கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் அதே ஆட்டோனால… மத்தபடி பயம்லாம் ஒன்னும் இல்ல… தகவல் சொல்லலாம்னு கால் பண்ணினே பட் சார்ஜ் இல்ல… அப்புறம் தான் கவனிச்சே ஆட்டோ தான் சேம், பட் அன்னைக்கி வந்தவன் இந்த ஆட்டோ காரர் இல்ல, அதான் இவர்ட விசாரிச்சுட்டு இருக்கே” என்று சிநேகனிடம் கூறிவிட்டு அந்த ஆட்டோ ஓட்டுனரிடம், “இப்போ நீங்க சொல்ல போறீங்கள இல்லையா? அன்னைக்கு இந்த ஆட்டோல வந்தது யாரு… நீங்க இங்க சொல்லலான, போலீஸ் ஸ்டேஷன் ல போய் சொல்லுங்க” என்று குரலில் கடுமையுடன் கேட்கவும் அவள் கேட்கும் விதத்தை ஆதித்யன் ரசித்துக்கொண்டு இருந்தான்.

 

அந்த ஆட்டோ ஓட்டுனரோ, “மேடம் ப்ளீஸ் நம்புங்க… இந்த ஊருல நிறைய வெளிநாட்டு காரவங்க வராங்க, வரவங்க சில நேரம் ஆசைப்பட்டு வண்டிய 1 ஹௌரு 2 ஹௌரு னு வாடகைக்கு எடுப்பாங்க… சவாரி ஓடுறதவிட 2, 3 மடங்கு அதிக துட்டு குடுப்பாங்க, அதுக்கு ஆசைப்பட்டு குடுப்பேங்க… அன்னைக்கு கூட சோக்கா ஒருத்தரு உடுப்பு போட்டு வந்துதான் கேட்டாருங்க.. அது தான் குடுத்தே…. மத்தபடி நீங்க சொல்றமாதிலாம் எனக்கு தெரியாதுங்க… சார் ப்ளீஸ் நம்புங்க இந்த பொண்ணுட்ட சொல்லுங்க சார், நான் புள்ள குட்டி காரன்” என்று விறு விறுவென அவனுக்கு தெரிந்த விஷயங்களை கூறினான் அம்மூவரம் நம்பவேண்டுமென்ற பரிதவிப்போடு.

 

மேலும் சினேகன் மதி என்று இருவரும் அவரிடம் கேள்விமேல் கேள்வி கேட்க அவரோ சொன்ன தகவலையே மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டு இருந்தார். இதுவரை மௌனம் காத்த ஆதித்யன் இப்போது சற்று முன்னேறி அந்த ஆட்டோ ஓட்டுனரிடம், “சரி நீங்க சொல்றத நம்புவாங்க… ஆனா அதுக்கு நீங்க ஒன்னு பண்ணனுமே” என்று அவன் இடது புருவத்தை ஏற்றி ஆளுமையுடன் கேட்கவும் அந்த ஓட்டுனர் ஒரு நிமிடம் ஆதித்யனின் தோரணயை பார்த்து பின்வாங்கி பயத்தோடு சேர்த்து மரியாதையுடன், “சொல்லுங்க சார், என்னானாலும் பண்றே.. ஆனா எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல” என்று கூறினார்.

 

இத்தனை நேரம் பேசியதிலிருந்து அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு இதற்கு மேல் எந்த தகவலும் தெரியவில்லை என்பதை புரிந்துக் கொண்ட ஆதித்யன் அவரிடம் அவரது தொலைபேசி எண், விலாசம் பெற்றுக் கொண்டு சினேகனின் எண்னையும் அவரிடம் குடுக்குமாறு கூறினான்.

 

அதன் பின், “சரி உங்களுக்கு தெரியாது… அப்போ உங்ககிட்ட வந்து ஒருத்தர் ஆட்டோ கேட்டாருனு சொன்னீங்க தானே… அவர பத்தி ஏதாவது, அடையாளம் இல்ல அவரோட பேரு … இது போல… ஆட்டோ கேட்டதும், ஆட்டோ ஓட்டிட்டு போனதும் ஒருத்தரா?” என்று கேட்க அவரோ, ” இல்ல சார், ஆட்டோ எடுத்துட்டு போக ஒருத்தன் வந்தான், நான் சொல்ற ஆளு வாடக பணம் மட்டும் கொடுத்தாரு… பேருலாம்… ஹா நாபகம் வருது சார்… என்னாட பேசிட்டு இருக்கப்ப அந்தாளுக்கு ஒரு போனு வந்தது, அதுல விஜய் பேசுறேன்னு சொன்னாருங்க… அவ்ளோ தான் தெரியும்” என்று கூறினார்.

 

விஜய் என்ற பெயரை கேட்டதும் ஏனோ ஆதித்யனுக்கு தொலைபேசி அழைப்பின் தகவலில் கிடைத்த விஜய ராஜசேகரன் என்ற பெயர் நினைவு வந்தது.

 

“சரி, இனி இது போல உங்ககிட்ட அவுங்களோ இல்ல வேறு யாரோ ஆட்டோ கேட்டா… நீங்க இவரோட நம்பர்க்கு தகவல் சொல்லணும்… என்ன சொல்லுவீங்க தானே?” என்ற மிரட்டலுடன் சினேகனை கை காட்டி கேட்க அவரோ, “சரிங்க சார், இந்த சார் நம்பர் எண்ட தான் இருக்குதுல நான் உடனே தகவல் தாரே ” என்று கூறிவிட்டு விட்டால் போதும் என ஓட்டம் எடுத்தார்.

 

உடனே சினேகன், “சார் இவன போலீஸ் ஸ்டேஷன் கூப்பிட்டு போயிருந்த, நமக்கு ஏதாவது தெரிஞ்சிருக்குமே…” என்று கூற ஆதித்யன் வாய் திறப்பதற்கு முன்னால் மதி அதற்கான பதிலை கூறினாள்.

 

“இல்ல சினேகன், நம்ம அங்க போய் இருந்தா உள்ளதும் கெட்டு இருக்கும்… இந்த கேஸ்ஆ பாக்க கூடாதுன்னு என்ன தடுக்க நினைகிறவங்களுக்கும் இந்த விஷயம் போய் சேர வாய்ப்பு இருக்கு… இப்ப அந்த ஆளு சொன்ன விஜய் யாருன்னு கண்டு பிடிக்கணும்” என்று கூறினாள்.

 

உடனே சிநேகன், “அட அட… அன்னைக்கு உனக்கு ஆபத்து வந்த போதும் ஆதி சார் வந்தாரு, இப்போ அந்த ஆட்டோ ல தான் வந்த, அதுக்கே அவரு உனக்கு சப்போர்ட்டிவா வண்டாரு…. அவரு செஞ்ச செயலுக்கு நீ விளக்கம் தர.. வாட் எ லவ்” என்று கூறிவிட்டு மேலும் அவனே தொடர்ந்து, “சரி சார் நான் அப்ப கிளம்புறே… வரேன் மதி” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

 

அதன் பின் ஆதித்யனோடு பயணித்தவள் எண்ணங்கள் யாவும் ஆதித்யனை சுற்றியே வலம் வந்தது. அவள் மனமோ சமாதனம் செய்ய ஆள் இல்லா குழந்தையை போல அழுதுக் கொண்டு இருந்தது, “இப்ப தான் உங்ககிட்ட சகஜமா பழக ஆரம்பிச்சேன், இப்ப தான் நீங்களும் என்கிட்ட நெருங்கி வரதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டுச்சு… ஆனா இப்ப என்னோட முட்டாள் தனத்தால, என்னோட காதல நம்பாம கண்டவளோட பேச்ச நம்பி உங்கள சந்தேக பட்டு பிரிஞ்ச என்னோட செயல் எனக்கு குற்ற உணர்சிய தருது க்ரிஷ்ணவ்… இத சொல்லாம இப்ப நான் காவ்யா மூலமா தெருஞ்சுகிட்ட உண்மைய உங்ககிட்ட மறச்சு என் காதல மட்டும் நான் சொன்னா என் மனசு அறிந்து நான் உங்ககிட்ட பொய் சொன்னது போல… ஆனா இத உங்கள பாத்து உங்க கண்ண பாத்து சொல்ற தயிரியம் எனக்கு இல்ல… எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது” என்று மனதினுள் எண்ணமிட்டபடியே பயணித்தாள்.

 

மேலும் அவளது மனம், “சினேகன் வேற இதுக்கு முன்னாடி காப்பாத்துனதும் இவருனு சொல்லிட்டான்.. அது பத்தி இவருக்கு எதுவும் தெரியாது… இப்போ அத கேட்டா நான் என்ன சொல்லுவே… இதுல என் தவறு இல்லனா கூட எனக்கு தெருஞ்சதுமே காப்பாத்தினது க்ரிஷ்ணவ் இல்லன்னு யார்கிட்டயும் ஏன் சொல்லல அப்படின்னு கேட்டா நான் என்ன செய்வேன்… இதுலயும் நான் பொய் சொல்லி இருக்கேன்னு க்ரிஷ்ணவ் தவறா புருஞ்சுக்கிட்டா…?, எனக்கு என்னவோ அத யார்கிட்டையும் சொல்லணும்னு தோனல, அதுனால சொல்லல.. ஆனா இத க்ரிஷ்ணவ் எப்படி எடுத்துப்பாறோ?” என்று பலவாறாக எண்ணமிட்டபடி அமர்ந்து இருந்தாள்.

 

மதியின் மனம் இவ்வாறாக உழன்றுக் கொண்டு இருக்க, ஆதித்யனோ சற்று முன்பு பேசிய ஆட்டோ ஓட்டுனர், மதி முன்பு நடந்த கடத்தலை அவள் சொல்லவந்து சிறு தடுமாற்றத்துடன் நிறுத்தி பிறகு சொல்லியது, அந்த ஆட்டோ ஓட்டுனர் வாயிலாக தெரிந்துக் கொண்ட பெயர் விஜய் போன்றவைகள் அவன் உள்ளத்து நிறைந்திருக்க அதிலும் முதன்மை இடம் மதிக்கு தான் இருந்தது. மதி ஏன் அவனது கண்களை பார்த்து பேச மறுக்கின்றாள், காலையில் இருந்தவளுக்கும், இப்பொழுது இருக்கும் மதிக்கும் உள்ள வேறு பாடு என அனைத்தையும் யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்ட அடுத்த 10 நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்து இருந்தனர்.

 

 

இருவர் உள்ளங்களிலும் ஓய்வு இல்லாது சிந்தனைகள் ஓட இருவர் மத்தியிலும் 10 நிமிடங்களாக மௌனம் மட்டுமே குடியிருக்க, வண்டி நின்றதும் இறங்க எத்தனித்த மதியின் கைகளை பற்றியது ஆதித்யனின் வலிய கரம். அவள் காதல் சொல்லுவாள் என்ற எண்ணம் பொறுமை இவை அனைத்தும் குன்ற தொடங்க, ஒரு ஆபத்து என்ற போது அவள் அன்னை, தந்தை, நண்பன் என யாரையும் அவள் அழைக்காது தனக்கு அழைத்ததின் அர்த்தத்தையாவது இன்று இந்த கணமே இந்த நொடியே அறிய ஆவல் பிறக்க, அவளது தளிர் கையை அவன் இரும்பு கரம் கொண்டு மென்மையாக பிடித்து அவளிடம், “ஏன் மதி…? உனக்கு ஒரு ஆபத்து வரும் போது… ஏன் எனக்கு கால் பண்ணின… எதுனாலானு நான் தெருஞ்சுக்கலாமா?” என்று ஆழ்ந்த குரலில் அவன் கேட்கவும் அவனது குரலே அவளுக்கு அவனின் நேசம் கலந்த கேள்வி இது என்பதை புரியவைக்க அவளுள் மெல்லிய மலர்கள் தோன்றி அடுத்தகணமே அவளது குற்ற உணர்ச்சியில் அது மடிந்தது.

 

அந்த குற்ற உணர்வு வந்த நொடி அவள் மனதினுள், “என்ன நீங்க நேசிக்கிரீங்கனு புரியிது க்ரிஷ்ணவ்… ஆனா ஒருத்தர் பேச்ச நம்பி நான் என் காதல் கூட சொல்லாம போயிருக்கேனா உங்க அன்புக்கு நான் சரியானவளானு எனக்கு குழப்பம் அதிகமா இருக்கு… ஆனா உங்கள விட்டு பிருஞ்சாலும் உங்கள ஒரு நொடி கூட நான் மறக்கல, இல்ல அப்படி சொல்றதவிட ஒரு நொடி கூட நினைக்காத நேரங்கள் என் கடிகாரத்துல இல்ல, இது எல்லாம் நான் எப்படி உங்ககிட்ட சொல்லுவே… ஒரு வேலை நான் சொன்னதுக்கு அப்புறம் நீங்க பார்க்கிற பார்வையில காதல் இல்லனா, அத என்னால தாங்க முடியாது” என்று எண்ணமிட்டவளுக்கு அவனிடம் தன்னை சரியாக வெளிபடுத்த சற்று அவகாசம் வேண்டும் என்று தோன்ற அவன் கண்களை சந்திக்காமல் தாழ்ந்த இமைகளோடு ஆதித்யனிடம், ஒரு வரியில், “ஏன்னா உங்ககிட்ட மட்டும் தான் அப்போ பேசணும்னு தோனுச்சு…” என்று குரலில் அவளை மீறி ஒரு உரிமையோடும், சிறு தயக்கத்தோடும், அதிக அன்போடும் கூறியவள் அவன் பிடி தளர்ந்த நேரத்தில் காரின் ஒரு பக்க கதவை திறந்து இறங்க, ஆதித்யன் இமை அசைக்காமல், செல்லும் அவனின் இளமதியையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

 

அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் ஆதியின் காதல் கொண்ட மனதை அவளின்பார் மொத்தமாக இழுத்து செல்ல அவளை விழுங்கி விடுபவன் போல மறுப்பக்க கதவை திறந்துக்கொண்டு இறங்கி கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

அவள் காதல் சொல்லி, இந்த வழக்குக்கு ஒரு முடிவு வந்து, அவனது மதியை இந்த பிரச்சனைகளில் இருந்து விளக்கி அவனது காதல் மனைவியோடு வாழபோகும் நாட்களுக்காக அவன் மனம் ஏங்கியது.

 

 

அவள் சிந்தனையாகவே உள்ளே செல்ல, அங்கு மதியின் பெற்றோரும் சிவகாமி அம்மாளும் அமர்ந்திருக்க தன் அன்னையிடம் சென்றவன், “அம்மா உங்களுக்கு பரவா இல்ல தான? ” என்று கேட்டுக்கொண்டு அவரின் அருகில் அமர்ந்து அவரது கைகளை எடுத்து அவன் கைகளில் வைத்துக் கொண்டான்.

 

மகன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அந்த தாயுள்ளம் மேலும் அவனுடன் சகஜமான உரையாடலுடன் இருக்க, அன்னையுடன் பேசிக்கொண்டே உள்ளே வந்த மதி எங்கே சென்றாள் என்ற சிந்தனையோடு அங்கும் இங்கும் கண்களை ஓடவிட்டான்.

 

தாய் அறியா சூழ் ஏது, மகன் மருமகளை தேடுகிறான் என்பதை புரிந்துகொண்ட சிவகாமி அம்மாள் தனது தம்பியிடம் கண் ஜாடை காட்ட அவர்களும் புரிந்துக்கொண்டதன் அடையாளமாய் சிரித்துக் கொண்டார்கள்.

 

பெரியவர்கள் இத்தனை நாட்கள் கவனித்ததில் ஒருவர் மீது மற்றொருவர் அக்கறையாய் உள்ளார்கள் என்றும் ஆனால் அவர்கள் திருமண வாழ்கையை ஆரம்பிக்க ஏனோ தயங்குகிறார்கள் என்றும் புரிந்துக் கொண்ட அவர்கள் மதியும் ஆதியும் வருவதற்கு முன்னே ஒரு திட்டம் வகுத்திருந்தனர்.

 

அவர்கள் எண்ணம் உண்மையே என்பதை நிரூபிக்கும் விதமாய் மகனின் ஆவல் நிறைந்த பார்வையை மருமகளை நாடுவதை உணர்ந்த சிவகாமி அம்மாளோ மெல்ல அவர்களது யோசனையை முன் வைக்க முனைந்தார்.

 

 

“ஆதி… தம்பி ஒன்னு சொன்னான்பா…. அது வந்து நம்ம வீட்ல எந்த நல்லதுனாலும் உடனே நம்ம முருகன் கோவிலுக்கு போவோம்… அழகர் கோவில்ல இருக்க பழமுதிர் சோலை பிரதானம் நமக்கு, உனக்கும் மதிக்கும் கல்யாணம் முடுஞ்ச அங்க போகாதது ஏதோ சரியா படல… அதுனால 2 பேரும் போயிட்டு அப்படியே நம்ம ரிசார்ட்டு ஒன்னு கொடைக்கானல்ல இருக்குதுல… அதையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுங்க பா… என்ன தான் ஆள் வச்சு பார்த்தாலும், நம்ம போய் பார்த்துக்குற போல வருமா… என்ன நான் சொல்றது..சரிதான ஆதி” என்று அவர் கேட்க ஆதியோ அன்னையின் எண்ணத்தை சரியாக புரிந்துக் கொண்டான்.

 

 

மதியுடன் எங்காவது வெளியில் சென்றுவர நாசுக்காக அன்னை சொல்கிறாள் அதையே மதியின் பெற்றோரும் விரும்புகிறார்கள், அதற்காகவே இவ்வாறு சுற்றி வளைத்து கூறிகிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ள ஆதித்யனுக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை.

 

அவர்கள் சொன்னதும் ஆதியின் மனதில், காதல் சொல்லாமல் கண்ணாமூச்சி ஆடும் மனையாளை கொடைக்கானல் அழைத்து சென்று அவள் வாய்மொழியாய் காதல் சொல்லவைக்க ஒரு திட்டம் சட்டென உருவாக பெரியவர்களுக்கு மனதினுள் ஒரு நன்றி தெரிவித்துவிட்டு வெளியில், “எனக்கு புரியிதுமா… ஆனா நிறைய வேலை இருக்கே.. இது அப்புறம்…” என்று ஆதித்யன் சொல்லி முடிப்பதற்குள் அவனின் அன்னை, “இல்ல ஆதி, வேலை எல்லாம் அப்புறம்… சாக்கு போக்கு சொல்லாத… இந்த வார இறுதியில போய்ட்டு வந்துருங்க என்ன 2 நாலு இல்ல ஒரு 3 நாலு உன் வேலைய ஒதிக்கி வை… நான் மதிகிட்டையும் பேசுறேன் என்று சிவகாமி அம்மாள் கூற இளமாறனும் மதியழகியும் ஆமாம் என்பதற்கு அறிகுறியாய் தலை அசைத்தனர்.

 

ஆதித்யனோ, “இல்ல அம்மா… மதிகிட்ட நீங்க கோவில் போறது மட்டும் சொல்லுங்க… கொடைக்கானல் பத்தி நான் பார்த்துட்டு சொல்லிக்கிறேன், அப்புறம் மாமா அம்மாஅ பார்த்துக்கோங்க, அத்தை நீங்களும் உங்க உடம்ப பார்த்துக்கோங்க” என்று கூறிவிட்டு அவனது அறைக்கு செல்ல, மகனின் மறைமுக சம்மதத்தை அதோடு மனைவிக்கு ஏதோ இன்ப அதிர்ச்சி குடுப்பதற்காகவே மதியிடம் இப்பொழுது கூறவேண்டாம் என்று எண்ணி அம்மூவரும் மாறி மாறி புன்னைகைத்துக் கொண்டனர். ஆனால் மதிக்கு அது இன்ப அதிர்ச்சியா இல்லை பேர் அதிர்ச்சியா என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

 

வந்ததும் பெரியவர்களிடம் பேசியவள், மாடி அறையில் இருந்து நிலா அவளை அழைக்கவும் அங்கே நிலாவை பார்க்க சென்றவளுக்கு கீழ்தளத்தில் நிகழ்ந்த பேச்சு வார்த்தைகள் தெரியாமல் போனது அதோடு ஆதித்யனின் காதல் திட்டமும்.

 

நிலாவுடன் பேசிய பிறகு கீழ்தளத்திற்கு நிலாவோடு வந்தவள் பெரியவர்களுடன் பேச்சில் இறங்க அப்போது சரியாக அகிலன் அவனது பணி முடிந்து வந்தான். ஆதியிடம் சொன்ன விஷயங்களை சிவகாமி அம்மாள் மதியிடம் கூற கொடைக்கானல்யை தவிர்த்து, நிலாவையும் மதி அழைக்க, சிவகாமி அம்மாளின் கண் ஜாடையில் அகிலனுக்கும் நிலாவுக்கும் ஏதோ புரிய அவர்கள் முன்பே சென்று விட்டு வந்ததாக கூறிவிட்டனர்.

 

மதியும் அவர்கள் சொல்வதை கேட்டு மனதினுள், “கோவிலுக்கு தானே… ஆனாலும் க்ரிஷ்ணவ் எதாச்சும் கேட்டா… அவர்கூட தனியா போகணுமே… எப்படி அவ்ளோ நேரம் நான் அவர் பக்கத்துலையே இருந்துகிட்டு அவர் கேள்வி கேட்ட பதில் சொல்லாம சமாளிக்கிறது? நான் எப்படி அவர் முகத்த பார்த்து சொல்லுவே…. இப்ப இருக்க கொஞ்ச நஞ்ச பாசமும் இல்லாம போய்ட்டா… முருகா… எனக்கு நீ தான் உதவி செய்யணும்.. எனக்கு அவர்கிட சொல்றதுக்கு சந்தர்ப்பம் அமைச்சு கொடு… நான் சொல்றத அவரு சரியான முறையில புருஞ்சுக்கவும் உதவி செய்…” என்று கவலையுடன் மனமுருகி இறைவனிடம் வேண்டிக் கொண்டாள்.

 

சிவகாமி அம்மாள் அவர்களுக்கு தனிமை ஏற்படுத்தி தரவே இப்படி செய்கிறார் என்பதை அகிலன் புரிந்துக் கொண்டு சிறு புன்னைகையோடு அவ்விடம் விட்டு எழுந்து அவன் அறைக்கு சென்று போலீஸ் உடையோடு சேர்த்து அவனது வேலை பளு யோசனைகளையும் தள்ளி வைத்துவிட்டு ஆதித்யனின் அறையை நோக்கி சென்றான், பழைய நண்பனாக மாறி ஆதியை சற்று சீண்டுவதற்காக.

 

“மச்சான்… என்ன பண்ணிட்டு இருக்க டா?” என்று கூறி கொண்டே ஆதித்யன் அறைக் கதவை தட்ட ஆதித்யன் அவனது அலுவல் அறையில் இருந்தபடியே, “வா அகில் … உள்ள வா” என்று அழைக்க அகிலன் ஒரு குறு சிரிப்போடு வந்து, “என்ன மச்சான்… ஹனிமூன் போற போல?” என்று கேட்க ஆதித்யன் அவனை பார்த்து, “டே ஹனிமூனா? ஏன்டா… அம்மா போக சொன்னது பழமுதிர் சோலைக்கு டா… அப்படியே நம்ம ரிசார்ட்டும் பார்க்க போறேன். அவ்ளோதான்…” என்று கூற உடனே அகிலன், “அடப்பாவி… அப்போ ஹனிமூன் தானா? அம்மா கோவில் மட்டும் தாண்டா சொன்னாங்க, இந்த மேட்டர் எனக்கு தெரியாதே… கொடைக்கானல் ஹ்ம்ம்ம்ம்” என்று சிரிப்போடு கூற ஆதித்யனோ முதல் முறையாக ஒரு அசட்டு சிரிப்போடு சமாளிக்க முயன்றான்.

 

மதியை பற்றி பேசும் பொழுது ஆதித்யனின் முகம் சந்தோசத்தை பிரதிபலிப்பதை பார்த்த ஆதியின் உயிர் நண்பன் அகிலனுக்கு சந்தோசமாகவே இருந்தது.

 

வெகுநாட்கள் பிறகு கல்லூரி கால நபர்கள் போல இருவரும் பேசிவிட்டு அகிலனும், ஆதித்யனும் இரவு உணவுக்காக எழுந்து கீழ் தளம் செல்ல எத்தனிக்கும் போது அகிலனின் கண்களில் ஆதி சற்று முன் வெள்ளை பலகையில் எழுதி இருந்த பெயர்களும் அதன் எண்களும் அவனின் கண்ணில் பட, ஒரு அடி எடுத்து வைத்த அகிலனின் கால் அதற்கு மேல் நகராமல் அங்கயே நிலைத்திருந்தது.

 

 

அதிலிருந்த அலமேலுவின் பெயரை கண்ட அகிலன் ஆதித்யனை கேள்வியாக பார்க்க, ஆதித்யன் சுருக்கமாக அந்த உளவாளிகள் அடிகடி தொடர்புகொள்ளும் நபர்கள் இம்மூவர் என்று கூறினான்.

 

 

இதை கேட்டதும், மதி சேகரிக்கும் தகவல், தான் பார்க்கும் வழக்கு தானா என்று நினைத்த அகிலன் அதை வெளிக்கு காட்டாமல் ஆதியிடம் அந்த வழக்கு பற்றி கேட்க ஆதியோ முன்பு சொன்னது போல் இப்போதும் அதை சொல்ல மறுத்தான்.

 

 

ஆனால் அகிலனோ, தனக்கும் இந்த அலமேலுவை கண்காணிக்கவேண்டும் என்று மட்டும் பகிர்ந்துக் கொண்டு, அவளை பற்றிய விவரங்களும் அவள் செய்யும் தொழில் பற்றிய விவரங்களும் கொடுக்க ஆதித்யன் அதை உள்வாங்கி கொண்டான். 

 

அந்த தகவல்களை கேட்டுக்கொண்ட ஆதித்யன் அகிலனிடம், “ஆனா அகில் நான் கிட்டத்தட்ட நெருங்கிட்டேன்னு நினைக்கிறேன்… நான் இத கண்டுபிடிச்சிட்டா முதல்ல மதிகிட்டையும், அப்புறம் அந்த குற்றவாளி பிடிக்க உன்கிட்டையும் தான் இந்த தகவல குடுப்பேன்… அதுவர நான் கேக்குற தகவல் மட்டும் குடு டா… என்னோட மதிக்காக நான் இத பண்ணியே ஆகணும், அவ வேலையில உறுதுணையா அவ நினச்சத சாதிகிறதுல, எந்த ஆபத்தும் அவள நெருங்கவிடாம பாத்துகிறதுல…. இப்போ என்னோட திட்டம் என்னனா… மதி எதிரி யாருன்னு தெரியாம மோதுறா. நான் அந்த எதிரிய கண்டுபிடிச்சிட்டா அவுங்க கிட்ட இருந்து என் மதியை காப்பாத்த முடியும்… அவன பத்தி தெரிந்ததும் உன்கிட்ட சொல்றேன்… அதுக்கு அப்புறம் என் மதி திரட்டனும்னு நினச்ச ஆதாரம், தகவல் எல்லாம் அவளுக்கு கிடைக்கும்… இதுக்கு தான் இத்தனையும் பண்றே” என்று நீளமாக அதே நேரம் முன் வைத்த காலை பின்வைக்கமாட்டேன் என்பதில் உறுதியோடும் கூறிய நண்பனை பார்த்து அகிலனுக்கு பெருமையாக இருந்தது.

 

புன்னைகையோடு, “சரி சரி… நீ ஒரு முடிவெடுத்துட்டா மாத்தவா போற… உனக்கு எல்லா சப்போர்ட்டும் நான் பண்றேன்… கேர்புல் மச்சி” என்று கூற ஆதித்யனோ, “சரி டா, நான் பாத்துகிறேன்… எனக்கு இந்த லிஸ்ட்ல 3வதா இருக்க விஜய ராஜசேகர்னோட அட்ரெஸ் வேணுமே டா, இப்பவே கிடைக்குமா?” என்று கேள்வியோடு முடிக்க உடனடியாக சில நபர்களை தகவல் கொண்டு அந்த தொலைபேசி எண்ணிற்க்கு உரிய விலாசத்தை அகிலன் ஆதியிடம் கொடுத்தான்.

 

அதை குறித்துக் கொண்ட ஆதித்யன், “ஹ்ம்ம் ஒகே அகில்… அப்புறம் இந்த நம்பர் எந்த ஏரியா டவர்ல இருந்து எப்பயும் வேலை செய்யிதுனு கொஞ்சம் அந்த தகவலும் வேணும் மச்சான்… கரக்ட்டா துல்லியமான விவரம் ட்ராக் பண்ணனும்… அது நாளைக்கு காலையில கிடைச்சா கூட ஒகே டா மச்சான்… என்கிட்ட நாட்கள் கம்மியா இருக்கு… கொடைக்கானல் போறதுக்குள்ள நான் விரிச்ச வலையில எதோ ஒரு தடயம் மாட்டனும்” என்று கூறினான்.

 

ஆதி வெகு தீவரமாக பேசிக் கொண்டு இருக்க அகிலனோ சிரிப்புடன், “ஏன்டா இங்க நான் போலீசா இல்ல நீயாடா? ” என்று கேட்க, சிரிப்பு மாறாமல் ஆதித்யன், “இத கண்டிபிடிக்கிறது காரணம் என்னோட மதிடா, இதுக்கு நான் போலீசா இருக்கவேணாம்… அவள காதலிக்கிறதே போதும்… காதலுச்சு பாரு டா… இது மட்டும் இல்ல, அவுங்கள பாதுகாக்க என்னவேணும்னாலும் செய்யலாம்னு தோனும்” என்று கூற அகிலனோ “மச்சி நீயா இது” என்று கூறி நம்பமுடியாமல் பார்த்தான்.

 

அவர்களின் உரையாடலின் போதே அவர்களை இரவு உணவு உண்ண அழைக்க மதி வர, இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு மதியை அகிலன் அழைக்க, மதியை பார்த்த ஆதியின் கண்களில் ஏதோ ஒரு ஆர்வம் இருப்பதை மதி புரிந்து கொள்ள, அவனோடு அவன் கண்களோடு உறவாடும் சக்தி மதியின் மனதுக்கு இல்லாமல் போனதால், அவர்களை உணவு உண்ண அழைத்துவிட்டு ஒரு புன்னைகையோடு சென்றவள், மனதினுள் அவனோடு ஒரே அறையில் தங்குவதை எப்படி தடுப்பது என யோசிக்கலானாள்.

 

அகிலனை முன்னே செல்லுமாறு அனுப்பிவிட்டு, ஆதித்யன் பின்னே வருவதாக கூறியவன் உடனே செழியனுக்கு அழைத்தான்.

 

“செழியா, நான் இப்ப ஒரு அட்ரெஸ் தரேன்… அந்த இடத்துக்கு போ…. அங்க விஜய ராஜசேகரன் அப்படின்னு யாராச்சும் இருக்காங்களா, ஒருவேள இப்ப இல்லாட்டியும் இதுக்கு முன்னாடி இருந்தாங்களா, அவனோட தொழில் குடும்பம் பத்தி தகவல் சேகரிச்சிட்டு வா… எனக்கு நைட்நாளும் பரவா இல்ல கால் மீ இம்மீடியட்லி ஒகே? ” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

அழைப்பை துண்டித்தவன் மனதினில், “என்னோட கணக்கு சரினா, நிச்சயம் அப்படி ஒரு ஆள் அங்க இருக்கமாட்டான்… இத்தன விசயங்கள பண்றவன்…இப்படி ஈஸியா ட்ராக் பண்றமாதி இருக்கமாட்டான்… இது போலியான ஆவன நகல் குடுத்து நம்பர் வாங்கி இருக்கணும்… ஆனா ஒன்னு அவன் பெயரும் விஜய் தான்… சரி பார்க்கலாம்” என்று எண்ணிக்கொண்டான்.

 

அழகிய காலை…

 

என்றும் போல் அன்று அழகாவே விடிந்தது…. இரவு நிகழந்தவை யாவும் மெல்ல மதிக்கும் ஆதித்யனுக்கு தனி தனியே அவர் அவர் நினைவுகளில் வந்து போனது…..

 

மதியின் நினைவலைகளோ, “நேற்று எப்படியோ அத்தையை காரணம் காட்டி, அவர்கள் அறையில் தங்கி கொண்டேன்… கிருஷ்ணவ நேருக்கு நேர் என்னால பார்க்க முடியல… இன்னும் எத்தனை நாள்… இதுக்கு ஒரு முடிவு கட்டனும்…. பழமுதிர் சோலைக்கு போயிட்டு வந்து க்ரிஷ்ணவ் கிட்ட நானே சொல்றேன்… நிச்சயம் அவர்க்கு புரிய வைப்பேன்… “

 

ஆதியின் நினைவுகளோ, “நேத்து செழியா சொன்ன தகவல் நான் எதிர்பார்த்தது தான்… விஜய ராஜசேகரன்னு ஒருத்தன் இருந்துருக்கான்… மருத்துவமனையில வேலை பார்த்தவன், ஏதோ தவறு பண்ணிட்டதா அவன் மேல நிர்வாகம் நடவடிக்க எடுக்கும் போகும் போது அவன் தலை மறைவு ஆகிட்டான்… அதுக்கு மேல அந்த பகுதில இருக்கவங்களுக்கு எதுவும் தெரியல… இந்த தகவல் உண்மை… ஆனா அந்த மருத்துவமனை நடவடிக்கை எடுக்கும் முன்னே ஏன் அவன் மறையனும்… இதுக்கு பின்னாடி என்ன நடந்துருக்கும்? ” என்று கரை புரண்டன அவன் நினைவுகள்.

 

மதி தன் போக்கில் வெகு துரிதமாக இந்த வழக்கின் தகவல்களை சேகரித்துக் கொண்டு இருக்க, அகிலனும் அந்த அலமேலுவை கண்காணிக்க தொடங்கி இருந்தான்.

 

சினேகன் எல்லா வகையிலும் மதிக்கு உறுதுணையாக இருக்க, அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து அன்று மாலையே சினேகனுக்கு அழைப்பு வந்தது. அவர் பார்த்ததாக கூறிய வண்டியை வாடகைக்கு எடுத்து சென்ற நபரை அவர் குறிப்பிட பகுதியில் பார்த்ததாகவும் அவன் நுழைந்த வீட்டின் முகவரியையும் கொடுத்தவர், இப்பொழுதும் அவன் வீட்டில் தான் இருக்கின்றான் என்ற கூடுதல் தகவலையும் கொடுத்துவிட்டு இதற்கு மேல் தன்னிடம் தருவதற்கு தகவல் இல்லை என்றும் அவர்க்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் மன்றாடி கேட்டுக் கொண்டு அவருக்கு தெரிந்த அவனின் அங்க அடையாளங்களை கூறிவிட்டு கைபேசி அழைப்பை துண்டித்தார்…

 

விவரத்தை மதியிடம் கூறிய சினேகன் ஆதிக்கு அழைத்து சொல்ல எத்தனிக்க மதியோ, “சினேகன் ஒரு நிமிஷம்… க்ரிஷ்ணவ் கிட்ட சொல்லு… அதுக்கு முன்னாடி அந்த ஆட்டோ காரருக்கு கால் பண்ணு… குய்க்” என்று அவனை துரிதப்படுத்த அவனும் அவரை அழைத்து மதியிடம் கைபேசியை குடுத்தான்.

 

“அண்ணா… நீங்க சொல்றமாதி நான் உங்கள முழுசா நம்புறேன்… நீங்க இப்போ அந்த பகுதில தான இருக்கீங்க… நான் இப்ப அங்க வரேன்… நீங்க அங்கயே இருங்க… அந்த ஆள எங்க கிட்ட அடையாளம் மட்டும் காட்டிட்டு அப்புறம் நீங்க போய்டுங்க… உங்களா நாங்க இதுல இன்வால்வ் பண்ணமாட்டோம்” என்று கூறி அழைப்பை துண்டித்து சினேகனுடன் கிளம்பினாள் அந்த இடத்திற்கே.

 

அவளுக்கு ஆபத்து இருக்கும் இடத்தை தேடியே செல்லும் தனது தோழிக்கு துணையாய் அவனும் செல்ல இவை அனைத்தையும் ஆதித்யன் முன்பு கூறியபடி ஆதிக்கு ஒன்று விடாமல் அத்தனை தகவலையும் சினேகன் பகிர்ந்திருந்தான் அந்த இடத்தின் விலாசம் முதற்கொண்டு.

 

 

அந்த தகவல் வரவும், முக்கிய தொழில் சந்திப்பில் ஈடுப்பட்டு இருந்த ஆதித்யன் அவசரமாக இனியனை அழைத்து அந்த சந்திப்பை அவனை பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு நகர இனியனோ மனதினுள், “இவ்ளோ இம்பார்டன்ட் மீட்டிங் விட்டு இவரு எப்படி போறாரு…” என்று எண்ணத்துடனும் கேள்வியுடனும் செல்கின்ற ஆதித்யனை பார்த்துவிட்டு வேலையில் லயித்தான்.

 

ஆதித்யன் அத்தனை வேகமாய் சினேகன் சொன்ன விலாசத்திற்கு கிளம்ப காரணம் இருக்க தான் செய்தது. அகிலனின் உதவி கொண்டு விஜய ராஜசேகிரன் என்ற பெயரில் பதிவாகி இருந்த தொலைபேசி அடிகடி உபயோக படுத்திய டவர் இருந்த பகுதியும் இப்போது சினேகன் கூறிய பகுதியும் ஒரே பகுதியை சேர்ந்தது என்பதே ஆதித்யனின் வேகத்திற்கு காரணம்.

 

மதி கயவர்களை கண்டறிய செல்ல, ஆதித்யனோ அவன் மனதை ஆள்பவளுக்கு காவலனாய், அவளை கரம் பிடித்த கணவனாய் புயலென விரைந்திருந்தான்.