முகிழ் – 18
மதியின் சொற்கள் ஆதித்யனின் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அதே நினைவில் ஒவ்வொரு படியாக இறங்கியவனின் சிந்தனையை கலைத்தது அகிலனின் உற்சாக குரல்.
“ஆதி, மச்சா…” என்று அகிலன் படிகளை நோக்கி முன்னேற, யோசனையை கைவிட்டு, ஆதித்யன் தன்னை நிலை படுத்திக்கொண்டு அகிலனோடு உரையாட, ஆதித்யன் இங்கு வரும் போது, தான் சொன்னதை கவனித்திருப்பானோ என்று சிறு பதட்டம் கொண்டு அவன் முகம் ஆராய, அது நிர்மலமாக இருந்தது. உடனே மதி ஒரு பெரு மூச்சுடன், “ஆதி கிட்ட என்ன பத்தியும் என் காதல பத்தியும், அடுக்கத்துல நான் புருஞ்சிகிட்டத பத்தியும் நான் அவர்கிட்ட சொன்னால் மட்டும் தான் சரியா இருக்கும்..நிச்சயம் என் க்ரிஷ்ணவ் கிட்ட நான் சீக்கிரமே சொல்ற நாள் வரும்” என்று எண்ணமிட்டாள்.
ஆனால் அவள் கவனித்த அனைத்தையும் ஆதியும் கவனித்து விட்டான் என்று மதிக்கு தெரியவில்லை.
அகிலனோடு சிறுது நேரம் பேச்சில் நுழைந்தவன், அவனை சென்று ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு அனைவரிடமும் பொதுவாக இரவு உணவிற்கு வந்துவிடுவதாக சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றான். அவனுக்கு அந்த நொடியில் தனிமை தேவைப்பட்டது. மதி ஏன் அப்படி கூறினாள் என்று அவன் மனம் சிந்திக்க வேண்டி இருந்தது. தனிமை நாடி, கடலை தேடி அவன் கால்கள் நடைப்போட்டது.
சிறுது நேரம் மெளனமாக கடற்கரை மணலில் நடைபோட்டவன் மெல்ல அலை அருகில் தன் பாதங்களை நனையவிட்டபடி மெல்ல மெல்ல யோசிக்கலானான்.
“மதி, நிச்சயம் அவள் நான் தேடியவள் தான், ஆனா அதை ஏன் மறைக்கிறா? ஏதோ ஒன்னு அவள கண்டிப்பா தடுக்குது, அவ இப்பயும் என்ன காதலிக்கிறா, அதுக்கு அவ இன்னைக்கு எழுதுன கவிதை தான் சாட்சி, மதி அந்த கல்லூரியில் படித்தும் அந்த முதல்வர் ஏன் அவர்கள் மாணவர்கள் அடுக்கம் செல்லவில்லை என கூற வேண்டும்?, இதற்கிடையில் பூதபடயன் அவளை சந்தித்தாரே அன்று என் ஆபிஸ் வாசலில், அப்பொழுது ஏன் அவரால் மதியை கண்டு பிடிக்க முடியவில்லை” என்று யோசித்து இறுதியில் அவள் அன்று ஹெல்மெட் அணிந்திருந்ததை நினைவுப் படுத்திக்கொண்டான். “ஒ மதி ஹெல்மெட் போட்ருந்தா, அதுனால தான் அவரால கண்டுபிடிக்க முடியல, அவ கண்ல தெருஞ்ச உணர்வு, அவள் கை எழுத்து, அவள் ப்ராஜெக்ட் ரிபோர்ட் எல்லாமே நீ தான் என் மதின்னு சொல்லுது எனக்கு” என்று யோசித்தவன் மேலும், “இன்னைக்கு நான் அகிலன்கிட்ட பேசும்போது நீ என்ன கவனிச்சத நான் பார்த்துவிட்டேன் மதி, அன்னைக்கு உன் அப்பா உன் ப்ராஜெக்ட் ஊரு பத்தி சொல்ல வரும் போதும் அத தடுக்கிற விதமா தான் பேசின, ஹாஸ்பிட்டல்ல கல்யாணம் பிடிக்கலன்னு கதறின நீ, அன்னைக்கு இரவு நான் உன்கிட்ட இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கலன்னு சொல்லும் போது உன் கண்ணுல வலிய பாத்தேன் மதி, நிச்சயமா எனக்கு தெரியுது, அந்த பொன்னு நீ தான், நீ என் மதி தான்..எந்த சந்தேகமும் இல்ல, ஆனா நீ அத மறைக்க நினைக்கிற….. அது ஏன் மதி? “என்று மனதினுள் அவளோடு பேசிக் கொண்டு இருந்தான்.
“அது ஒன்னு தான் புரிய மாட்டிங்கிது, அடுக்கம்ல உன்ன வெளி படுத்தாம போனதுக்கும், இப்ப நீ தடுமாருறதுக்கும் இடையில என்ன இருக்கு….? நான் இத கண்டுபிடிக்கிறேன், நிச்சயமா உன் வாய்மொழியா நீயே உன் காதலா சொல்ற நாள் ரொம்ப தூரம் இல்ல மதி…. உன் மௌனதிற்கான காரணமும், உன் காதலையும் நான் வெளில நிச்சயம் கொண்டு வருவேன்… இது நான் உன்மேல வச்சுருக்க காதல் மேல சத்யம் அது மட்டும் இல்ல, சினேகன்கிட்ட நீ பேசினத வச்சு பார்க்கும் போது உனக்கு இதுவர மூன்று முறை ஆபத்து வந்துருக்கு, இனி நிச்சயம் உன்ன எதுவும் அவ்ளோ சீக்கரம் என்ன தாண்டி நெருங்க முடியாது மதி… உனக்கு இருக்க ஆபத்த சரி செஞ்சு, உன் காதல நீ சொல்ற நாள் வரவைக்கிறது இது இரண்டும் இனி என் பொறுப்பு” என்று மனதினுள் கூறி விட்டு ஒரு முடிவெடுத்த தெளிவோடு குழப்பங்கள் நீங்க அவன் கிளம்ப எத்தனித்தான்.
அவன் முடிவிற்கு அந்த அலை கடல், அலைகளின் நுரைக்கொண்டு பெரும் வெண் புஷ்ப பூங்கொத்தை போல அவன் பாதத்தில் அந்த நுரைகளை தவழவிட்டு அவனின் முயற்சிக்கு வாழ்த்து கூறியது.
கடற்கரை நோக்கி வரும்போது இருந்த சிந்தனை இப்போது அவனுக்கு இல்லை, தெளிந்த முகத்தோடு வந்தவன் கண்கள் கண்டது அவன் வீட்டிற்கு எதிர்புறத்தில் நின்று அவன் வீட்டு வாசலை பார்க்காதது போல நோட்டமிடும் ஒருவன். அவனை ஆதித்யன் காலையில் அலுவலம் செல்லும் போதும் பார்த்தான், மாலை வரும் பொழுதும் கவனித்தான், இப்பொழுது இரவு 9 மணி ஆகியும் அவன் இந்த இடத்திலே நிற்க வேண்டிய அவசியம் என்னவென்று ஆதித்யன் முகத்தில் சிந்தனை ரேகை மெல்ல படர ஆரம்பித்தது.
அவன் போக்கிலே அவனை கவனிக்காது போலவே ஆதித்யன் அவன் வீட்டு பாதுகாப்பு அறையில் உள்ள எண்ணிற்கு அழுத்த அவசரமாக வந்த பணியால் ஆதித்யனுக்கு கதவை திறந்துவிட்டு நிற்க, ஆதித்யன் காவலாளியிடம் தலை அசைத்து விட்டு, வேக நடை நடந்தவன், தன் கை பேசியில் எதிர் வீட்டில் இருப்பவரின் எண்ணுக்கு நடந்துக்கொண்டே அழைத்தான். அழைத்து பேசியவன் அவர்களிடம் அவர்களின் வீட்டிற்கு புது காவலாளி அமர்த்தி இருகின்றார்களா என்று அறியமுற்பட, அவர்களோ பழைய காவலாளிதான் அவனும் இரண்டு நாள் விடுமுறையில் சென்று இருப்பதாக கூற ஆதித்யனின் முகத்தில் யோசனையின் தீவிரம் அதிகரித்தது.
அந்த யோசனையின் பலனாக ஒரு சில முடிவுகளை எடுத்தவன் அதை நாளை செயல் படுத்தும் நோக்கோடு வீட்டினுள் நுழைந்தான்.
வீட்டில் நுழைந்தவனை வரவேற்றது மதியின் சிரிப்பொலி…..
கலகலவென பேசி சிரித்துக்கொண்டிருந்த மதி அனைவரையும் அமரவைத்து அகிலன் நிலாவை சீண்டி அவர்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தாள். அகிலனும் மதி வாயாடும் விதத்திற்கு சளைக்காமல் சிரிப்பும் மாறாமல் அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க, நிலா வெக்கம் கலந்த புன்னைகையோடு அகிலனை பார்த்துக் கொண்டிருக்க ஆதியின் அன்னையும் அவர்களின் கேலி கிண்டலை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்
இத்தனை நாள் நிலாவின் வாய் ஒய்ந்து ஆதி பார்த்ததே இல்லை. இன்று அவளே மௌனமலராகி போனாள் அவளது அகிலனின் அருகாமையில், வெக்கத்தினால்.
ஆதி மனத்திரையில் அவர்களது திருமணம் நடந்த விதம் நினைவலைகளில் வலம் வர தொடங்கியது.
‘அடுக்கத்தில் இருந்து வந்த பிறகு கடினமாக தன்னை தயார் படுத்திக்கொண்ட அகிலன் முதல் வருட தேர்வில் தோல்வியை தழுவினான் என்றாலும் இடைவிடாது மீண்டும் முயன்று அதற்கு அடுத்த வருட தேர்வில் வெற்றி பெற்றான். அதன் பிறகு கடிவாளமிட்ட குதிரை போல எங்கும் கவனம் சிதராமல் தன்னை தயார் படுத்திக் கொண்டவன் அடுத்தகட்ட நேர்காணல், பயிற்சி என அனைத்திலும் வெற்றி வாகை சூடி அவன் தந்தை ஆசைப்பட்ட படி ஐ.பி.எஸ் என்ற இலக்கையும் அடைந்தான்.
அவன் மனதில் லட்சியம் குடிகொண்டிருக்க, நிலாவின் மனதில் ஆத்தியனின் நண்பனாக அறிமுகமான அகிலன் அவளை ஆளும் நாயகனாக அவள் அறியாமலே மாறி போயிருந்தான். அதை அவள் உணர்ந்து கொண்டது நிலாவுக்கும் ஆதிக்கும் முறை வருகிற காரணத்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்ற ஒரு சிலரின் பேச்சுக்களால்.
ஆதி அவளுக்கு அத்தான் என்றாலும், ஆதியின் தந்தை வழி ஒன்றுவிட்ட அத்தை மகளான நிலா, சிறுவயதிலே தந்தையும் தாயும் விபத்தில் பறிக்குடுத்துவிட்டு ஆதியின் அருகான்மையில் வளர்ந்தவளால் ஆதியை சகோதரனின் பார்வையை தாண்டி பார்க்க முடியாமல் போனது.
இந்த கல்யாண பேச்சுகளால் ஆதியிடம், அகிலனின் மீதான காதலை கூற, ஆதி சந்தோசத்தின் எல்லைக்கு சென்றான். ஆனால் அகிலனோ காதல் என்ற வார்த்தையே வெறுப்பாக உள்ளது என கூறிவிட, நிலா தேய்பிறை காலத்து நிலாவாக ஒளி மங்கி ஓசை இல்லாமல் அழுது கரைய, ஆதி பெரியவர்களால் நிச்சயக்கப்பட்ட கல்யாணம் என்ற ஆயிதத்தை கையில் கொண்டு திருமணத்தை நடத்தி முடித்தான்.
தன் பெற்றோர்கள், தன் நண்பன் பார்த்த பெண் மற்றும் நிலா தெரிந்த பெண், அதோடு ஆதித்யனின் சொல்லை தட்டாதவனான அகிலனும் திருமணத்திற்கு சம்மதித்தான். திருமணம் முடிந்த பிறகும் நிலாவுடன் ஒரு நண்பனை போலவே நடந்துக்கொண்ட அகிலன், திருமணமான 2 வாரங்களிலே வேலை நிமித்தம் பெங்களூருக்கு சென்று இருக்க, அகிலனின் தந்தை மற்றும் தாய் வெளிநாட்டில் கணவனுடன் வாழும் தன் மகள் வீட்டிற்கு சென்று வருவாதாக கிளம்பிவிட, ஆதியின் வற்புறுத்தலாலும் நிலாவிற்கு அவன் இல்லாத நேரங்களில் துணை அவசியம் என்பதாலும் ஆதித்யன் இல்லத்திலே நிலா இருக்குமாறும், அவனும் சிறுது காலம் தங்குவதாகவும் நிர்னையக்க பட்டது.
அகிலனின் அக்காவிற்கு தற்சமயம் குழந்தை பிறந்திருப்பதால் குறைந்தது சில மாதங்களேனும் அவர்கள் அங்கே தங்கி இருக்க வேண்டிய கட்டாயத்தாலும், ஆதி நண்பன் மட்டும் அல்லாது சிவகாமி அம்மாளும் அகிலனுக்கு ஒரு அன்னைக்கு சமம் ஆனவரே என்ற காரணத்தினாலும் அகிலனிற்கு அங்கே தங்குவது இலகுவாக இருந்தது.
திருமணம் ஆனா 2 வாரங்களிலும், இது போல அவர்களை அருகில் அமரவைத்து கேலி கிண்டல் என செய்வதற்கு யாரும் இல்லாமல் போகவே, நிலாவின் மனதில் காதல் இருந்த போதிலும் அகிலன் அதை உணரும் விதம் எதுவும் நடக்காததால் நிலாவின் முகத்தில் இப்படி ஒரு வெக்க சிவப்பை ஆதி கண்டதே கிடையாது.
அகிலனும் இத்தனை அமைதியாய் நிலாவின் அருகில் அமர்ந்ததும் கிடையாது.’
இப்படி பழையகால நினைவு பக்கங்களை புரட்டியவன் விழிகள் மதியின் மீது நிலைத்தது இப்போது. ஆதியின் மனதில், “அகிலன் நிலாவோடு சகஜமா பேசுறதுக்கு, அகிலன் மனதில் நிலா ஒரு தோழி மட்டும் இல்ல அவனின் மனைவி அப்படி னு வரதுக்கு நிச்சயமா இப்போ மதி செய்றது போல அவுங்கள சேத்து வச்சு பேசினா போதும், அகிலன் மனசும் ஒரே அடியா இருகிட்டது போல தெரியல, நிலா மேல நிச்சயம் ஒரு சின்ன அபிப்ராயம் இருக்குதுன்னு தான் நினைகிறேன், அதுனால தான் மதி கிண்டலுக்கு, நிலாவோட காதல் பார்வை எல்லாம் பார்த்தும் அகிலன் முகம் இருகாம அவனால சிரிக்க முடியிது, இப்படியே அவன் கொஞ்சம் கொஞ்சமா மாறினா கூட நிச்சயமா அகிலன் பழையபடி மாறிடுவான், அவர்களுக்குள் கணவன் மனைவி அப்படின்னு எண்ணம் வரதுக்கு மதியோட பேச்சு, புள்ளி வச்சுருக்கு, இப்ப நான் அகிலனோட மனசுல பணத்த பெருசா நினைக்காதது தான் காதல்னு புரியவைக்கணும் ” என்று எண்ணமிட்டான்.
அவன் எண்ண ஓட்டத்தை கலைக்கும் விதமாக மதியின் சிரிப்பொலி கேட்க, அந்த சிரிப்பில் கலைந்த அவனின் எண்ணம் இப்பொழுது அவள் சிரிப்பில் அவனின் எண்ணங்களை அவனே தொலைத்துக்கொண்டிருந்தான்.
அகிலன் விஷயத்தில் அவன் எடுத்த முடிவை செயல் படுத்தவும் அதே நேரம் மதியையும் அவள் வாயால் அவள் காதலை சொல்ல வைக்கவும் எண்ணியவன் மிக சகஜமாக அனைவரிடமும், “என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும், நிலா, அட நீயா இது…. ஏதோ வெக்கப்படற போல? இதுலாம் உனக்கு தெரியுமா என்ன? என்னாடா அகில் நிலா என்ன சொல்றா? “என்று பொதுவாக பேசிக்கொண்டே சென்று மதி அமர்ந்திருந்த ஒற்றை சோபாவில் அந்த சோபாவின் கைப்பிடி மீது அமர்ந்தான்.
“ட” வடிவத்தில் போட பட்டு இருந்த சோபாவில் இருவர் உக்காரும் பகுதியில் நிலா அகில் அமர்ந்திருக்க ஒருவர் அமரும் சோபாவில் மதி அமர்ந்திருந்தால்.
அதற்கு எதிர்புறம் பெரியவர்கள் அமர்ந்திருக்க, ஆதி வேணும் என்றே மதியின் அருகில் அமர்ந்தான் சாதாரணமாக அமருபவன் போல.
அந்த சோபாவின் கைபிடியில் அமர்ந்திருக்க, அவன் தோள் மதியின் தோளோடு உறவாட மதியின் மனம் மெல்ல மெல்ல அவள் வசமிருந்து சறுக்க ஆரம்பித்தது. அவனின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து ரசித்து காதலித்தவளுக்கு, இன்று அவனது அருகாமை ஒருவித பரவசத்தை தர அவள் உடல் ஒரு பூ மலர்வது போல மெல்ல சிலிர்க்க ஆரம்பித்தது.
அவள் இதுவரை அனுபவித்திடாத மோன நிலை அவளுக்கு உருவாக ஆரம்பித்தது. அவன் எதார்த்தமாக சாய்வது போல அவள் தோளோடு நன்றாக சாய்ந்து அமர மதி ஒரு இன்ப அவஸ்தைக்குள் சிக்கி மீள முடியாது தத்தளித்தாள்.
அவள் அருகில் அமர்ந்ததும் ஆதிக்கு ஒரு பூ கொடிமீது தான் அவன் சாய்ந்துவிட்டானோ என்று எண்ணும் அளவு இருந்தது என்றால் அவள் சூடி இருந்த முல்லை அந்த கொடியிலே மலர்ந்தது போல அவள் தோள்களில் தவழ்ந்தது. முகம் தெரியாமலே அவளை நான்கு வருடங்களாக ஒரு தவம் போல நேசித்தவன் அவளை கண்டுக்கொண்ட சந்தோசத்தில் மனம் கூத்தாட, அதுவும் அவனின் மனைவியாக அவன் அருகில் அவள் அமர்ந்திருந்த தருணம் அவன் நெஞ்சில் இன்ப அதிர்வலைகளை பரப்பியது.
அந்த நிலை இருவருக்குமே ஒரு அழகிய மோன நிலை உருவாக்க, அதில் சில நொடிகளே திளைத்தவர்கள் ஒருவர் அறியாமல் மற்றொருவர் அந்த நிலை மறைக்க பெரும் பாடுப்பட்டார்கள்.
அகிலனின் அழைப்பில் இருவரும் சுயநினைவு வர…. சட்டென்று முதலில் தன்னை சுதாரித்துக்கொண்டு தெளிந்தவன் ஆதித்யனே.
தனி தனியே அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களுக்குளே இருந்தது. அதை அடுத்தவர்களும் அறியவில்லை, அங்கி இருந்த மற்றவர்களும் அறியவில்லை.
ஒரு சில நொடிகளில், சம நிலைக்கு வந்த ஆதித்யன், அகிலனின் மனமாற்றம் இப்பொழுது முக்கியம் என கருத, அதற்கான பேச்சில் இறங்கி மற்றவர்களையும் அதில் இழுக்க முற்பட்டான்.
ஆதி நிலாவிடம், “நிலா, இத்தன நாளா இல்லாத ஒன்னு, இன்னைக்கு உன்கிட்ட இருக்கு… நீ சொல்லலனா கூட உன் மனசு அகில் எப்ப வருவான்னு எதிர்ப்பாத்துச்சு…. இல்லையாடா?…. இப்ப உன் முகம் முழுக்க முழுக்க சந்தோசம் மட்டும் தான் இருக்கு…. என்ன நான் சொல்றது சரிதானா டா?
இதைக்கேட்டவுடன் நிலா முகம் சிவந்து அதை மறைக்க முற்பட்டு தலை தாழ, அதை அகிலனின் கண்கள் அளவுடுத்துக்கொண்டது. அவனை அவள் எதிர்ப்பார்கின்றாள் என்பது அகிலனுக்கு இனம் புரியா நிம்மதி அளித்தது. அந்த நிம்மதிக்கான காரணம் அவனிற்கு அப்போது புரியவில்லை என்றாலும் அந்த நிம்மதியை முழுதாக அனுபவிக்க முடியாமால் ஏதோ ஒரு தீ அவன் மனதில் தனல் விட்டப்படி இருந்தது.
உனக்கும் அகில்க்கும் ஒரு பரிசு தரலாம் இருக்கே மா…. வேற ஒன்னும் இல்ல…. ஒரு சின்ன காம்ப்ளெக்ஸ் ஒரு 15 கடை இருக்குறது போல… அகில் பேருல பதிவு பண்ணிடலாம்னு…. இங்க நீ கொஞ்சம் வசதியா இருந்து பழகிட்டலடா, அதுக்காக தான் அகில் யும் என் நண்பன்… அவனுக்காகவும் உனக்காகவும் எதுவேணும்னாலும் செய்வேன் டா…. வேற என்ன வேனும் நிலா சொல்லு…..” என்று கூறியவன் மேலும் வாய் எடுக்கும் முன் அகிலன் ஏதோ சொல்ல எத்தனிக்க ஆதியின் பார்வையில் மௌனமானான். “என்ன நிலா மா அமைதியா இருக்க? முதல் ல இத பதிவு பண்ணிடலாம்… அப்புறம் அகில்க்கு என்ன வேனும்ம்னாலும் செய்யலாம்டா” என்று கூற சிவகாமி அம்மாளும் ஆதி சொல்வதையே ஒத்து பேசினார்.
“ஆமாம் அகில், எனக்கு நீ வேற நிலா வேற ஆதி வேற இல்ல… நாங்க உங்களுக்கு கொடுக்கணும்னு பிரியப்படுறத தடுக்காதப்பா” என்று அகில் மறுப்பு கூருவானோ என்று எண்ணி அவர் பேசிக் கொண்டு இருக்க அவர் எதிர்ப்பார்த்தபடியே மறுப்பு முளைத்தது ஆனால் அகிலிடம் இருந்து இல்லை, நிலாவிடம் இருந்து.
“அம்மா, நீங்க சொல்றது எனக்கு புரியிது, ஆதி அத்தான் இவரு மேல வச்சுருக்க நட்பும் என் மேல வச்சுருக்க பாசமும் எனக்கு நல்லவே தெரியும்…. ஆனா அத இப்படி சொத்து குடுத்து தான் நிரூபிக்கணும்னு கிடையாது…. ஆதி அத்தான்….. இத நீங்க குடுக்குறது நான் சந்தோசமா சௌகரியமா இருக்கணும் அப்படின்னு தானே…? அப்படினா இந்த காம்ப்ளெக்ஸ் நீங்க கொடுத்தா நிச்சயம் நான் சந்தோசமா இருக்க மாட்டேன்” என்று நிலா கூற அங்கிருந்த அனைவரும் விழித்தனர் ஆதியை தவிர.
“என்ன மா சொல்ற?” என்று சிவகாமி அம்மாள் கேட்க, அதற்கு நிலவோ, “ஆமாம் அம்மா, நான் இங்க வசதியா இருந்து பழக்கப்பட்டுடேன், அது அகில் வீட்டுக்கு போன கொஞ்சம் கம்மியாகும், அதுக்காக தானே நீங்க இத பரிசுனு சொல்லி எனக்கு கொடுக்க பார்க்குறீங்க… ஒரு நிரந்தர வருமானம் வருவதற்காக…. எனக்கு புரியிது…. ஆனா நான் காதலிச்சது அகில மட்டும் இல்ல… அவர்கிட்ட இருக்க அத்தனையும்… அவர எந்த அளவு நேசிகிறேனா…. அவருக்காக சாகுற அளவு…. அப்படி இருக்கும் போது, அவருக்காக என்னோட சுகத்த கம்மி பண்ணமாட்டேனா?”
இவரு, இவரோட அப்பாவ போலவே நேர்மையா இருக்கணும்னு நினைகிறவரு…. டூட்டில மட்டும் இல்ல, வரதட்சன விஷயத்துலயும், நீங்களே விருப்ப பட்டு கொடுக்கிறதுனாலும் இவர பத்தி தெருஞ்சும் நான் இத ஏத்துகிட்டா, நான் இவர காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அர்த்தம் இல்லாம போய்டும்…. ஆதி அத்தான் நீங்க தான் என் காதல புருஞ்சுகிட்டு எனக்கு சப்போர்ட்டா இருந்தீங்க.. என் காதலுக்கு மரியாத கொடுத்தீங்க… அத நீங்களே அவமதிக்காதீங்க அத்தான்….” என்று கூறிவிட்டு தலையை குனிந்துக் கொண்டாள்.
இதை எல்லாம் நிலா பேச பேச அனைவருக்கும் அவள் மீது மதிப்பு ஏற்பட்டது என்றால், அகிலனுக்கோ அவள் மீது தோழியை தாண்டிய பிடிப்பு ஏற்பட்டது.
“நிலா, பணம் ரொம்ப முக்கியம்டா வாழ்க்கைக்கு, அத ஏன் புருஞ்சுக்க மாற்ற?, பின்னாடி நீ வருத்தப்பட கூடாதுன்னு தான் டா….ஒருவேள அகிலனால உன்ன இங்க இருக்குறது போலவே பாத்துக்க முடியாம போகலாம் டா….அது அவனுக்கும் கஷ்டம், உனக்கும்…. இதுனால பின்னாடி உங்களுக்குள்ள ஏதாவது” என்று தொக்கி வார்த்தையை முடிக்காமல் ஆதங்கம் குரலில் தொனிக்க கேட்ட ஆதியை சட்டென நிமிர்ந்து பார்த்தது நிலா மட்டும் இல்லை மதியும் தான்.
“ஆதி இப்படி சொல்லியது சரி தானா? வாழ்கைக்கு அன்பு தானே பிராதானம், ஆனால் இவர் ஏன் பணம் என்று சொல்கிறார்” என்று மதி சிந்திக்க அவள் மனமோ அவளிடம் “ஒருமுறை கிருஷ்ணவை தவறாக புரிந்துக் கொண்டது போதும், மறுபடியும் அப்படி நினைக்காதே, இதற்கு பின் ஏதேனும் காரணம் இருக்கலாம்” என்று இலவச ஆலோசனை வழங்க மதி மௌனமானாள்.
இதுவரை அமைதியாக பேசிகொண்டிருந்த நிலா இதை கேட்டதும் ஆதியை அறிந்தும் அந்த நிலையில் அவள் யோசிக்கும் திறனை இழந்து, “என்ன அத்தான்? சொல்லுங்க….? பணம் இல்லாமா போன எங்க எனக்கு இந்த காதல் வாழ்க்கை கசந்துதிமோனு பயமா? நீங்களா அத்தான் இப்படி பேசுறது….? “என்று தீ விழி விழிக்கவும் இதுவரை நிலாவை சிரித்த முகமாவே பார்த்து பழகியிருந்த அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தார்கள்.
நிலாவை தோழியாக பார்த்திருந்த அகிலனிற்கு இப்போது அவள் மீது தோழியை தாண்டிய ஒரு பிடிப்பு ஏற்படுவதை அவனால் உணர முடிந்தது, ஆனால் அதைமட்டும் உணராமல் சில நொடிகளில் நிலைமை அடியோடு மாறிவிட்டதை உணர்ந்த அகிலன் இந்த நிலைமையை மாற்ற எண்ணினான்.
அவனுக்காக அவனது நண்பனான ஆதித்யன் இப்படி பேசி நிலாவின் காதல் கொண்ட ஆழ்மனதின் ஆழத்தை அகிலனிற்கு தெளியவைக்க முயல, இதனால் ஆதியே நிலாவின் கோவமெண்ணும் காரிருளுள் மாட்டிக்கொண்டைதை நினைத்த அகிலன் நெஞ்சம் ஒருமுறை நண்பனை எண்ணி பெருமிதம் கொண்டு அடுத்த நொடியே இதை சரி செய்ய வேண்டுவது அவனது கடமை என நன்கு உணர்ந்து பேச தொடங்கினான் ஆதியிடம் நிலாவிடமும்.
அவசரமாக யோசித்தவன் ஏதோ ஒரு பொய்யை புனைய தயாராகி, “எல்லாரும் ஏன் இப்ப இப்படி நடந்துகுறீங்க? …. நிலா என்ன நீ? ஆதிகிட்ட நீ இப்படி தான் பேசுவியா? மச்சான் நீ தான் டா வொன், நீ தா ஜெயிச்ச…. கூல் நிலா… முதல்ல இப்படி பார்க்குறது விடுமா… நீ பார்க்குறத பார்த்தா எனக்கே பயமா இருக்கு” என்று சகஜமாக்க முயன்று குரலில் இலகுதன்மையை வரவழைத்து பழைய அகிலனாக பேச முற்பட்டான்.
அவனது மாற்றத்தை ஆதியும், மதியும் கண்டுகொண்டாலும், நிலா அந்த நிலையில் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. அகிலன் கூறியதன் பொருள் என்ன என சிந்திதவள் அதை நேரடியாகவும் கேட்டாள்.
அதற்கு பதில் அகிலனிடம் இருந்து வந்தது, அவன் நிலாவிடம், “நிலா, நான் தான் மச்சா கிட்ட சொன்னே…உனக்கு அங்கு வந்து இருக்குறது கஷ்டமா இருக்கும்… உன்ன சந்தோசமா எப்படி பார்த்துகிறதுன்னு, அதுக்கு ஆதி சொன்னான், நிலா அப்படி நினைக்க மாட்டாடா… அப்படின்னு, எங்களுக்குள்ள ஒரு பெட் வச்சுக்கிட்டோம்… அவன் சொன்னது போலா தான் நீ நடந்துக்கிட்ட…. இப்ப புரியிதா? இதுக்கு எதுக்கு நிலா இத்தன கோவம் உனக்கு?” என்று கேட்க இதை கேட்டுகொண்டிருந்த நிலாவின் முகம் கோவத்தால் சிவந்து இருந்த சூரியனை ஒத்திருந்ததை மாற்றி தேய்பிறை காலங்களில் இருக்கும் நிலாவை போல ஒளி மங்கி வாடிவிட்டது.
அவள் கண்கள் ஒரு நொடி துயரத்தை வெளி படுத்தி மறுகணமே அகிலனிடம், “இவ்ளோ தான அகில்? நீங்க இப்படி சொல்லி இருப்பீங்கனு… உங்க மனசுல என்ன பத்தி இப்படி நினச்சுருப்பீங்கனு எனக்கு தெரியாமா போச்சு அகில்…” என்று கூறியவள் எழுந்து விறு விறுவென தனது அறைக்கு சென்று முடங்கிவிட்டாள்.
சிவகாமி அம்மாளோ, “ஏன்பா, உங்களுக்கு எது எதுல பெட் வச்சு விளையாடனும்னு தெரியாதாப்பா, எதையும் இலகுவா எடுக்குற பொண்ணு, இப்படி கலங்கி போகுது… அகிலன் மேல எத்தன அன்பு இருந்தா அந்த பொண்ணு இப்படி வேதனைப்படும்…ஆதி போ பா.. 2 பேரும் போய் பேசி, கூப்பிட்டு வாங்க நிலாவ” என்று கூற, ஆதியோ, “இல்ல அம்மா…இப்ப போய் பேச வேண்டியது நான் இல்ல” என்று கூறியவனின் பார்வை அகிலன் மீது நிலைத்தது.
அவனின் பார்வையை புரிந்துக்கொண்ட அகிலன், இந்த திருமண பேச்சிற்கு முன் ஒரு தோழியாக நிலாவிடம் பேசி இருந்தாலும், திருமணம் பேச்சுக்கு பின் அவனாக இதுவரை சென்று பேசாதவன், இன்று நிலாவை தேடி சென்றான்.
நிலாவை அவன் ஒதிக்கியது இல்லைதான் என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை அவளை ஒரு கோட்டிற்கு வெளியில் நிறுத்தி இருந்ததும். ஆனால் இப்பொழுது அவன் போவது ஆதியின் கண் பார்வையில் அல்ல, நிலாவின் கண்கள் பிரதிபலித்த வேதனையால். அவள் பார்வை அதில் தெரிந்த வலி என அவனை கயிறு இல்லாமலே இழுக்க அவன் கால்கள் அவள் போன பாதையில் நடைப்போட்டது.
இந்த மௌன பரிபாஷைகளை மதியின் பத்திரிக்கையாளர் கண்ணிற்கு தப்பவில்லை. எனினும் அதற்கான காரணம் தான் அவளுக்கு புரியவில்லை. ஆனாலும் இது நிச்சயம் கெட்டதிற்கு இல்லை என மதியின் மனம் மதியிடம் கூற மறுபுறமோ நிலாவின் விழி நீர் அவள் ஆசைப்பட்ட வாழ்வை துளிர்க்கவைக்கும் வல்லமை கொண்டது என ஆதி மனதினுள் எண்ணிக் கொண்டான்.
கதவை தாழிடாமல் விட்டவள் அவள் முகத்தில் புன்னைகைக்கு தாழிட்டு கொண்டு ஜன்னலின் வழியே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளை பின்னிருந்து பார்த்தவனுக்கு அவளின் வருத்தம் மனதை தாக்க, அதை உடனே போக்க வேண்டி அவன் சிந்தை செயல்பட ஒருநிமிடம் அவனின் மனம் போகும் போக்கை புரிந்துக்கொள்ளமுடியாமல் தடுமாறினான். மறுநிமிடமே நிலாவின் வருத்தம் அவளை விட அவனை அதிகமாக தாக்குவதை உணர்ந்தவன் நிலாவின் காதல் தன்னில் மாற்றங்களை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டதை உணர்ந்தவனின் கடை இதழ்களில் சிறு புன்னைகை மென்மையாக படர்ந்தது.
அவள் பின்னே நடந்தவன், அவன் காலடி அரவம் உணர்ந்தாலும் உணராததுப் போலவே நிலா சிலையென சமைந்திருக்க அவன் நெருங்கி அருகில் வருவதை உணர்ந்து அவன் மீது ஏற்பட்ட வருத்தத்தால் அமைதி காத்தாள் அவனை நோக்கி திரும்பாமல்.
“நிலா ” என்று ஆழ்ந்த குரலில் இதுவரை அழைத்திராத தொனியில் அவளை அழைக்க, அது நிலாவின் உயிர் வரை தீண்டி சென்றது. ஆனாலும் அவளின் எண்ணத்தில் அவளின் சுகவாழ்கைக்கு குறைவு வந்தால் அவளின் காதல் காணாமல் போய்விடுமோ என்று அகிலன் எண்ணியதே ஓடிக்கொண்டிருந்தது. அவனின் அழைப்பிற்கு பிறகும் அமைதியே உருவாய் நின்றவள் அடுத்து ஏதேனும் பேசுவான் என்று எதிர்ப்பார்த்திருந்தால் அவள் ஏமாந்தே போவாள். ஏனெனில் அகிலன் எதுவும் பேசாமல் மேலும் அவன் முன்னேறினான். இன்னும் அவளை அகிலன் நெருங்கி நிற்க அவன் மூச்சுக் காற்று நிலாவின் பின்னங்கழுத்தில் புயலை போல தாக்கியது. இந்த மூச்சு காற்று வருடலால் தன்னை தொலைத்த நிலா, அது வெளியே தெரியாமல் இருக்க எந்த மாற்றங்களையும் வெளிக்காட்டாமல் நின்றாள்.
நிலாவின் துயர் துடைக்கத்தான் வந்தான் அகிலன்… ஆனால் இப்பொழுது அவன் மாறியிருக்க தொடங்கி இருந்ததால், நிலா கீழே அவன் மீது எய்த காதல் பார்வைகள், அவள் அவனை மட்டுமே அதாவது அவன் குறைகளாக நினைக்கும் அவனின் குடும்ப நிலையையும் சேர்த்தே நேசிக்கின்றாள் என்று அவன் அறிந்துக் கொண்ட உண்மை எல்லாமுமாய் சேர்ந்து சிறு சிறு இழைகளை சேர்ந்து அவன் மனதில் காதல் அமர ஒரு பட்டு ஜமுக்காளத்தை நெய்துக் கொண்டிருந்தது. அவள் மீது அவனுக்கு ஏற்பட்ட தாக்கம், அவளின் துயர் துடைக்க எண்ணிய நொடியில் அது வெறும் தாக்கம் இல்லை தானே நிலாவின் காதலில் தாக்கப்பட்டதை அறிந்துக் கொண்டான் அந்த நிலவின் நாயகன்.
அவள் பின்னால் வெகு அருகில் நின்றவனுக்கு அவள் தன்னுடையவள், தன்னை தனக்காக மட்டுமே நேசிப்பவள், என்று முதல் முறையாக தோன்ற உள்ளுக்குள் புதுவித மின்சாரம் பாய்ந்தது. இத்தனை வெகு அருகில் நின்றவன் என்ன செய்கிறான், என்று புரியாமல் மதில் மீது பூனையாக அவள் மனம் அவன் மீது கொண்டு உள்ள வருத்தத்தை தொடரவும் முடியாமல் அவன் நெருக்கத்தை அனுபவிக்கவும் முடியாமால் தத்தளிக்க, அதுக்கு முற்று புள்ளி வைப்பது போல…. இல்லை… அவர்களின் அழகிய வாழ்கையின் காற்புல்லியாக அகிலன் குனிந்து நிலாவை பின்னிருந்து இறுக அணைத்தான்.
இந்த எதிர்பாராத அணைப்பினில் தடுமாறிய நிலா மெல்ல அவன் புறம் திரும்ப அகிலன் இன்னமும் அவள் தோள் வளைவிலே தன் முகத்தை பதித்திருந்தான். நிலா அவளுக்கே கேட்காத குரலில் மெதுவாக அகில் என்று அழைக்க, அந்த அழைப்பை காற்று அகிலுக்கு தெரிய படுத்த எண்ணியதோ என்னவோ அந்த மெல்லிய அழைப்பும் அவன் செவிவழி சேர்ந்தது.
நிமிர்ந்த அவனை, நிலா முகம் நிமிர்ந்து பார்க்கும் அளவு அவன் நிற்க, அவன் முகத்தை பார்த்தவள் பதறினாள். சிறிதாக மிக சிறிதாக அவன் விழிகள் சிவந்திருக்க நிலா புரியாமல் பதறி அகிலனிடம், “அகில் நீங்க ஏன் இப்படி இருக்கீங்க … எனக்கு வருத்தம் தான்… கோவம் கூட இல்ல…. உங்கள என்னால இப்படி பார்க்கவே முடியாது… நா… நா…நார்மல் ஆகிட்டேன் பாருங்க” என்று சிறு பிள்ளை போல வேக வேகமாக கூற அகிலனின் மனதில், “அவளை நான் சமாதனம் செய்ய வேண்டிய நிலையில் அவள் என்னை சமாதனம் செய்கிறாளே… என்னை இப்படி நேசிக்கும் நிலாவை அவளுக்கு நிகராக,, இல்லை அவளை விட ஒரு படி மேலாக நான் நேசிப்பேன்” என்று உறுதி எடுத்துக் கொண்டான்.
அவன் இதழ்கள் மெல்ல விரிந்து… தலை சரித்து நிலாவை பார்த்து, “இங்க யாரையோ சமாதனம் செய்ய வந்தே… ஆனா இங்க யாரோ எனக்கு சமாதனம் சொல்றாங்க… இங்க இவ்ளோ நேரம் கோவமா நிண்ட எனோட மனைவிய பார்த்தீங்களா நீங்க? ” என்று அவள் இடையில் கை கோர்த்தபடி அவன் அணைப்பை விடாமலே கேட்க நிலா வெக்கத்தால் குங்குமமென சிவந்தாள்.
அவளது முகத்தை இரு கைகளிலும் ஏந்தி அவன், முன் உச்சியில் சரிந்த ஓரிரு முடி கற்றை அவள் காதோரம் மிக மெதுவாக ஒதிக்கியவன், அவள் பிறை நெற்றியில் முதல் ஓவியத்தை அவன் இதழ் கொண்டு வரைந்தான்.
அந்த ஒற்றை முத்தம் அவன் வாய் மொழியாய் கூறாத காதலை மட்டும் அல்லாமல் அவனின் காதலின் ஆழத்தையும் நிலாவிற்கு உணர்த்தியது.
இவர்கள் மோன நிலையில் ஏதோ வெகு தொலைவில் என்னவென்று புரியாத சப்தம் கேட்க ஒரு சில நிமிடங்கள் அதை கவனிக்காமல் விட்டு ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்களை உறவாடவிட சிறிது நேரத்தில் சுதாரித்த நிலா கேட்கும் சப்தம் தூரத்தில் இல்லை அவர்கள் அறையில் அதுவும் அகிலனின் கைபேசி என உணர்ந்தவள் அவனை விட்டு திடுமென விலகி அவனிடம் கைபேசியை நீட்டினாள். அவன் ஏக்கம் கலந்த பார்வையை நிலாமீது ஓடவிட்டு கைபேசி எடுத்து காதிற்கு கொடுக்க அகிலனின் தலைமை அதிகாரி ஒரு முக்கியமான கேஸ் விஷயமாக நாளை வந்து அவரை சந்திக்கும் மாறு கூறி அழைப்பை துண்டித்தார்.
கைபேசியின் சிணுங்களில் அவர்கள் இயல்பு நிலைக்கு மீள தங்களுக்காக கீழே அனைவரும் காத்திருப்பது நினைவு வர அகிலன் அதை நிலாவிடம் கூறி கீழே அழைத்து செல்ல நிலாவின் முகம் தெளிந்திருந்ததை கண்ட பெரியவர்களும் மதியும் நிம்மதி பெரு மூச்சு விட, இத்தனை நாள் தன் நண்பனின் முகத்தில் ஒட்டாத ஏதோ ஒன்று இன்று பரிபூரணமாக நிரம்பி இருக்க, அகிலன் சரிவர நிலாவின் காதலை புரிந்துக்கொண்டான் இனி அந்த காவ்யா தந்த அவமானம் அவன் மறக்க வெகு நாட்கள் இல்லை ஆதிக்கு அவனின் பழைய நண்பனான அகிலன், அவனின் துரு துரு பேச்சோடு கிடைப்பான் என தீர்க்கமாக நம்பினான் நட்பின் இலக்கனமான ஆதித்யன்.
அடுத்த 1 மணி நேரமும் சிரிப்பும் சந்தோசமுமாக இரவு உணவை முடித்துக்கொண்டு அவர் அவர் அறைக்கு செல்ல இப்போது சிந்திப்பது ஆதியின் முறை ஆகிற்று….
நாளை அவன் யோசித்த திட்டங்களை செயல்படுத்த எண்ணி ஒரு சில நபர்களுக்கு இரவு என்றும் பாராமல் அழைத்து சில விஷயங்களை பணிந்தான். இதை எதையும் அறியாமல் மதி வழக்கம் போல அங்கு இருந்த பெரிய சோபா ஒன்றில் ஆதியுடன் ஆனா சிறு தீண்டல்களை நினைத்து நினைத்து ரசித்து உறங்கினாள் அந்த பாவை.
அவள் உறங்கியபின் தன் அழுவல் அறை விட்டு வெளி வந்த ஆதித்யன் சிறு மணித்துளிகள் தன் உள்ளம் நிறைந்தவளான மனையாளிடம் மானசீகாமாக அவளின் மௌனத்திற்கு காரணம் கேட்டு பேசிகொண்டிருந்தான்.
துயில் கொள்ளும் பாவையே, நித்தம்
என் துயில் அள்ளி போனதென்ன
உன் முகம்காண நான் தவமிருக்க, என்னை
தனியே தவிக்கவிட்டு மறைந்ததென்ன
உன் இதழ் என்னும் தாள் கொண்டு எந்தன்
மனதில் மடல் வரைந்தவளே
இப்பொழுது ஏன் மறைகின்றாய்
மௌன தாழ்பாளின் பின்னால்
அவள் தூங்கும் அழகை ரசித்தவன் கண்களில் அவளின் பிம்பத்தை நிறப்பிக்கொண்டு கட்டிலில் விழுந்து அவள் இப்போது அவன் அருகில் இருகின்றாள் என்ற நிம்மதியில் கண் அயர்ந்தான்.
மறுநாள் காலை ஆதித்யனின் பார்வையில் ரம்யமாக தோன்றியது…….
எழுந்ததும் அவன் அறை சாளரத்தின் வழி அவன் மனம் கவர்ந்த கௌதம புத்தரை பார்க்கும் வழக்கம் கொண்டவன் எழுந்ததும் அறையில் மதியை கண்களால் துலாவியவன் அவள் இல்லாது போகவே சிறு ஏமாற்றம் அவன் இதயத்தில் நிறைந்தாலும், அவளை காண ஏங்கும் அவன் நிலையை நினைத்து அவனே மெலிதாக இதழ் பிரிக்காமல் தன் தலை முடியை கோதிக்கொண்டு சிரித்தான்.
பிரெஞ்சு விண்டோ என்று சொல்ல படும் முறையில் அந்த அறையின் பெரிய சாளரத்தில் கதவு அமைக்க பட்டிருக்க அதை ஒருபுறமாக நகர்ந்தி பனித்துளிகள் நிறைந்த புல்வெளி மீது அவன் பாதம் படிய நடந்து சென்றான். கை இல்லா பனியன் அணிந்துருந்த ஆதித்யன் திரண்ட தோள்களுடன் சாளர கோடிக்கு வந்து பலகனியில் கைகளை ஊன்றி சித்தாதரை பார்த்தவன், பிறகு விழிகளை அருகினில் ஓடவிட்டவனின் பார்வை கண்ட காட்சியில் அவன் விழிகள் ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றன.