Advertisement

மயிலிறகு – 17

 

“அம்மா…என்னமா இது, கல்யாணத்துல நிம்மதி இல்லாம இருக்க, கலாட்டா செஞ்சேன்…. அதோட அந்த முதல் மாப்பிள்ளை ஓடிட்டான்.. இரெண்டாவதா வந்தவன் எப்படின்னு தெரியல, கடைசி நேர மாற்றத்துனால, நிச்சயம் அந்த இழையினி சந்தோசம் இல்லாம குழப்பத்துல இருப்பா…. நிச்சயம் அப்படியே அவ வாழ்க்கைய கெடுக்கலாம் னு சொல்லி ஆசை காமிச்சு கூப்பிட்டு வந்த, நானும் குடிக்கிறத கூட விட்டுட்டு இங்க வந்தே, அவள் என்னடானா… வெக்கப்பட்டுடே ஓடி வரா… எனக்கு ஒன்னும் சரியாப்படல” என்று கூறி பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தான் மாணிக்கம், பாக்கியத்தின் தவப்புதல்வன்.

 

“என்ன டா சொல்ற.. ? நீ சொல்றது நிசமா ? ” என்று பாக்கியம், மகன் சொல்வதை உறுதிப்படுத்தும் நோக்குடன் கேட்க, மகனோ, “அட ஆமாங்கிறே.. என் கண்ணால பார்த்தே… அந்த ரூம்ல சிரிப்பு சத்தமும், அப்புறம் அவ சிரிச்சுக்கிட்டே, படியில இறங்கி வந்ததையும்….” என்று கூறினான்…

 

“தப்பாச்சே.. இவுங்க இவ்ளோ சந்தோசமா இருக்க கூடாதே.. அம்மா கிட்ட சொல்லிட்டல … நீ பார்த்துட்டே இரு, உன் அம்மா என்ன பண்றான்னு… நீ வெசனப்படாத, மனசுக்கு சரி இல்லனா சாராய கட பக்கம் வேணும்னா போய் வா ராசா, அம்மா காசு தரேன்…” என்று கூறியப்படியே இரு 50 ருபாய் நோட்டுகளை எடுத்து, பாக்கியம் மகனிடம் திணித்தார்….

அதை வாங்கிக்கொண்டு அவன் வேக வேகமாக வெளியேற, அவனை கடந்து வந்தாள் இதழாவின் தோழி தீபா… தீபாவை பார்த்ததும், ரங்கன் சென்று இதழாவை அழைத்துவர, அங்கே அவர்களின் கச்சேரி அரங்கேறியது…

 

இந்த இடைப்பட்ட நேரத்தில், மகிழனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு ராஜ உபச்சாரம் நிகழ்ந்திருக்க, கால் ஆட்டிக்கொண்டு கட்டிலில் கிடந்தப்படி, இதழாவை கண்களில் நிறைத்து, கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தான்…

 

கீழே தீபாவும், இதழாவும், சில நிமிடங்கள் வெட்டி பேச்சில் இறங்கியவர்கள், பிறகு நாடு, தேசம் என்று நாட்டு பேச்சில் இறங்கி இருந்தனர்…

 

“இங்கிலீஷ்-ல எனக்கு தெரியும், நான் ஜாகரபி-ல எழுவது மார்க்… ‘இந்தியா இஸ் எ  பென்னின்சுலா’…. தீபகற்பம் னு நான் கேள்விப்பட்டதே இல்ல…நீ எனக்கு தமிழ் ல தெரியலன்னு எனக்கு காது குத்தாத…” – தீபாவின் குரல் இழையினியோடு தர்க்கம் செய்துக் கொண்டு இருந்தது….

 

“ஹே தீப்ஸ், பென்னின்சுலானா தமிழ்ல ல நான் சொல்றது தான் டி…”  – இதழா

அதே நேரம் சரியாக மகிழன் மனதினுள், “ரெஸ்ட் எடுத்தது போதும்… கீழ போய் நம்ம லட்டுக்குட்டி என்ன பண்றான்னு பார்ப்போமா? ஆனா , அவளோட அப்பா வந்துட்டா? நம்ம லட்டு சொன்னது போல அவரோட மீசை ரொம்ப பெருசாத்தான் இருக்கு.. பட் மீசைய பார்த்தா, நம்ம காதல் ஆசைக்கு ஆப்பு.. சோ போய் தான் பார்போமே” என்று எண்ணிவிட்டு மேலிருந்து கீழே இறங்கினான். அவன் படிகளில் இறங்கிக்கொண்டு இருக்கும் பொழுதே, இதழாவும், ஒரு பெண்ணும் பேசிக்கொண்டு இருப்பது மகிழன் கண்ணில் பட, அருகில் இருந்த வேலையாட்களிடம், புதிதாக வந்த பெண் யார் என்று கேட்க, அவர்களோ, “அது தீபா பொண்ணு தம்பி, நம்ம சின்ன பாப்பா கூட படிக்கிது” என்று கூறிவிட்டு செல்ல, அவர்களை நோக்கி முன்னேறினான் மகிழன்.

“அப்படியா மறுப்படியும் சொல்லு… தமிழ்ல என்ன அது… ? ” – தீபா…நம்பாத குரலில்

“தீபகற்பம்” – இதழா

அவர்கள் அருகில் அவன் நெருங்கவும், அதே நேரம் இதழாவின் வாயில் இருந்து, “தீபகற்பம்” என்ற வார்த்தை வரவும் சரியாக இருந்தது… அவ்வார்த்தையை கேட்டதும், மகிழன் ஒரு நொடி அப்படியே நிற்க, அவனது மனமோ, “என்னது தீபா கர்ப்பமா? ” என்று எண்ணமிட்டது.

இதழாவும் , தீபாவும் பேச்சை தொடர்ந்தனர். அவர்கள் பின்னால் வந்த மகிழனை கவனிக்காது….

“வா நம்ம செக் பண்ணி பார்த்து கன்பார்ம் பண்ணலாம்” – இதழா..

“ஹே வேணாம் டி வெளில சொல்லிடாத டி.. அசிங்கம், என் மானமே போய்டும் டி” – தீபா

 

இவர்கள் இருவதும் பேசியது, இந்தியாவை பற்றி… இந்தியா ஒரு தீபகற்பம் என்று இதழா கூற, தீபாவோ அதை மறுத்துக் கொண்டு இருந்தாள்… இறுதியாக, இதழா கூறியது தான் சரி என்று தீபா ஒப்புக்கொள்ள, இதழாவிடம், தனக்கு இந்த சிறிய செய்தி கூட தெரியாததை கல்லூரியில் சொல்ல வேண்டாம் என்று கூறிக்கொண்டு இருக்க, இதழா சிலுப்பிக்கொண்டு இருந்தாள்….

 

“என்னால முடியாதுப்பா.. கண்டிப்பா நான் சொல்லத்தான் செய்வேன்.. இதை எப்படி மறைக்க முடியும் டி…” – இதழா

“ப்ளீஸ் இதழா.. வேணாம் டி” – தீபா

 

இவர்கள் எதை பற்றி பேசுகிறார்கள் என்ற முழு சாரமும் அறியாமல், அவர்கள் பேசியதில் இருந்து புரிந்துக்கொண்ட சாரத்தை எடுத்துக்கொண்டு மகிழன் இதழாவை நோக்கி சென்றான்…

 

“இதழா.. என்ன பேசுறீங்க நீங்க… தீபா.. நீங்க எதுக்கும் கவலை படாதீங்க… உங்களுக்கு என்னால ஆனா உதவிய நான் செய்றேன்… ங்க தயிரியமா இருங்க…. ” என்று வேகமாக, இதழாவிடமும், தீபாவிடமும் மகிழன் கூற, திடுமென தோன்றி சம்மந்தம் இல்லாமல் பேசும் அந்த புதியவனை தீபா அறிமுகமற்ற பார்வை பார்க்க, இதழா “அயோ வந்துட்டியா? ” என்பது போல் பார்த்து வைத்தாள்….

 

“என்ன இதழா அப்படி பார்க்குறீங்க, சிலம்பு சுத்த தெருஞ்சா மட்டும் போதாது… சிக்கல் இருக்கவங்களுக்கு உதவியும் செய்யணும்…” – மகிழன்

“அவளுக்கு சிக்கலா? ” – நக்கல் இழையோட ஒலித்தது இதழாவின் குரல்

“எது எதுல விளையாடறதுன்னு இல்லையா இதழா.. தீபா எவ்ளோ பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டு இருக்காங்க… தீபா, நீங்க கவலை படாதீங்க… ஒரு அண்ணனா உனக்கு என்ன உதவினாலும் நான் செய்றேன்” – மகிழன்

“நீங்க என்ன சொல்றீங்க… எனக்கு என்ன பிரச்சனை ? ” – தீபா

“நீங்க பயப்பாடாதீங்க தீபா.. இதழா சொன்னத நான் கேட்டுட்டேன்… ” – மகிழன்

“நான் என்ன சொன்னேன்.. நீங்க என்ன கேட்டீங்க…” – இதழா…

“தீபா கர்ப்பம்…. இது தான் நீ சொன்னது… அதுக்குள்ள மறந்துட்டியா? ” – மகிழன்

“என்னது? நான் கர்ப்பமா? ” என்று அவளையும் மீறி வாய் விட்டு கேட்ட தீபா, அதிர்ச்சியில் அப்படியே சோபாவில் சரிந்தாள்….

 

அதைப்பார்த்த இதழா, தீபாவின் அருகில் சென்று அவளை எழுப்ப, ஒரு நிமிட திகைத்தை பார்வைக்கு பிறகு, “டி இதழா…என்ன டி சொல்றாரு இவரு… யாரு டி மொதல்ல இவரு ? ” என்று பரிதாபமாக கேட்டவள், வேகமாக அவளது முட்டை விழிகளை ஒருமுறை சுழலவிட்டாள். இந்த புதியவனின் வார்த்தைகள், அடுத்தவரின் செவிகளில் விழுந்திருக்க கூடாதே என்ற பரிதவிப்பில்… தோழியை பார்த்த இதழா, சண்டையிடும் கோழியாக, மகிழனிடம் பாயிந்தாள்….

 

“இப்போ திருப்தியா? … உங்கள என்ன பண்றது ? ” – இதழா

“என்ன லட்டு.. இல்ல இதழா.. என்ன இதழா சொல்ற? நான் என்ன செய்தேன்…” – அப்பாவியான முகத்தோடு மகிழன்

“நான் சொன்னது, தீபகற்பம்… தீபா கற்… அட அத சொல்ல கூட முடியல… நீங்களா ஏதாவது கற்பனை செய்வீங்களா?” – இதழா

“அட நான் சரியாதானே புரிந்துக்கிட்டே.. இவள் ஏன் இப்படி பொரியிறா? தீபா கர்ப்பம்.. சரி தானே.. இதுக்கு இந்த அர்த்தம் தானே…” என்று மனதினுள் எண்ணிக்கொண்டு இருந்தான் மகிழன்.

“என்ன நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீங்க அமைதியா இருக்கீங்க… ? ” – இதழா

“இல்ல.. அது வந்து சரியா தான் நான்…” என்று சொல்லாமல் யோசனையுடன் மகிழனின் குரல் ஒலித்தது.

“ஒ சரியா சொன்னீங்களா? நான் இந்தியாவா தீபகற்பம்னு அவள் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்… ” என்று இதழா கூற, தன் முன் கோவத்துடன் கூறிக்கொண்டு இருந்த இதழா, மகிழனுக்கு பத்ரகாளி போல் தோன்ற, திருட்டு முழி முழித்துக்கொண்டு இருந்தான்…

 

“என்னது….? தீபா தான் கர்பம்னு சொன்னா.. இப்போ இந்தியாவ கர்பம்னு சொல்றா… சரியா புரியமாட்டிங்குதே….கேட்டா கண்டிப்பா கட்டைய தூக்கிட்டு வருவா… ” என்று மனதினுள் மகிழன் புலம்பினான்.

 

“ஐயோ ராமா.. இங்கபாருங்க தீபகற்பம்னா, மூணு புறம் நீர், ஒரு புறம் நிலம் சூழ்ந்த பகுதிய தான் அப்படி சொல்லுவாங்க.. இந்தியா அப்படி இருக்கிறதுனால, நான் இந்தியாவை தீபகற்பம் னு சொல்லிட்டு இருந்தேன்… இப்போதாவது புரியிதா? இல்லையா? ” – கடுப்புடன் ஒலித்தது இதழாவின் குரல்

 

“நீ சொல்றது ஒகே… இந்திய அப்படி தான் இருக்கும்… அதை நான் இந்தியா இஸ் எ பென்னின்சுலா அப்படி தானே படிச்சுருக்கே… நீ சொன்னது போல நான் படிக்கலியே…” – என்று யோசனையோடு ஒலித்தது மகிழனது குரல்.

 

“ஏங்க தீபாங்க… அப்போ நீங்க கர்பமா இல்லையா? இதழ் சொல்றது போலவா பேசுனீங்க….” என்று இதழாவை ஓரக்கண்ணால் பார்த்தப்படி இழுக்க, இப்போது தீபா கொலைவெறிக்கு உள்ளானாள்…. இருவரும் சேர்ந்து ஒரு சேர மகிழனை முறைத்தப்படி அவனை நோக்கி நடக்க, மகிழனின் மைண்ட் வாய்சோ “மகிழா… ஒன்னு கூடிட்டாளுக… விடுறா ஜூட்…” என்று குரல் கொடுக்க, ஒரு நொடியும் தாமத்திக்காது, வேகமாக “ஆதவா… கூப்பிட்டியா டா? இதோ வந்துட்டேன்…” என்று கூறிக்கொண்டே அவர்களை திரும்பி திரும்பி பார்த்து வேகநடை போட்டான்…

 

சிறுது தூரம் அவனை பின்பற்றுவது போல் பாசாங்கு செய்த இதழா, சிறுது தூரத்திலே, தீபாவின் நடையையும் தடுத்து, வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள்…. “தீபா கர்ப்பம்.. ” என்று அவளுக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே சிரிக்க, இப்பொழுது தீபா, மகிழனை மறந்துவிட்டு, இதழாவை பார்த்து முறைக்க தொடங்கினாள்…..

 

இவர்கள் சலசலப்பு ஒருப்புறம் இருக்க, ராகவன், தனது மருமகனான ஆதவனை அழைத்துக்கொண்டு, நடக்கிற தூரம் வரை உள்ள காடு கழனி என்று சுற்றி காண்பிக்க கிளம்பிவிட, ஆதவனுக்கான விருந்து தடப்புடலாக தயார் ஆகி கொண்டு இருந்தது….

 

நண்பகல் வேலை: நாட்டு கோழி சொதி, இறால் தொக்கு, இள குரும்பு ஆட்டு பிரியாணி, நெய் மீன் வறுவல், மிளகு சீரகம் தூவிய முட்டை, பாயாசம், செரிமானத்திற்கு கத்திரிக்காய் தாள்ச்சா என்று வகை வகையாக ஆதவனுக்கும் மகிழனுக்கும் பரிமாற, இருவரும் உணவு உண்டு முடிப்பதற்குள் திக்கு முக்காடி போயினர்…

 

அவர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு, உணவு வகைகள் பரிமாறப்பட, மகிழன் மனமோ, “இவைங்க சாப்பாடு போட்டே… காலி பண்ணிடுவாங்க போலவே… இப்பவே கண்ணக்கட்டுதே… ” என்று புலம்பிக்கொண்டு இருக்க, அவனது அருகில் ஆதவன் போதும் என்று கூற, இழையினி மீண்டும் ஒரு மீன் வறுவலை வைக்க, அங்கு ஒரு சாப்பாட்டு போராட்டம் நிகழ, மகிழனோ, “என்ன டா இது, பக்கத்துல ராஜ்கரன் உக்காந்து சாப்படறது போலவே எனக்கு பீல் ஆகுதே… இவன் ஆதவன் தானா? பட் போட்டு இருக்க வாழை இலை சைஜ் பார்த்தா அப்படி தெரியலையே… ” என்று எண்ணமிட்டுக் கொண்டு இருந்தான்….

ஒருவகையாக, விருந்து முடிந்து அறைக்கு வந்த ஆதவனின் வயிறு டொம் என்று ஆகிவிட, ஒரு அடிக்கூட அவனால் எடுத்துவைக்க முடியாமல் போக, இழையினி வருவுக்காக காத்திருக்க முடியாமல், அந்த நண்பகல் வேளையிலும் வாழ்வில் முதல் முறையாக கண்யர்ந்தான்…

 

எப்போது இழையினி அறைக்கு வந்தாள், உறங்கினாளா, வந்தாளா ? அல்லது வரவே இல்லையா.. ? என்பதெல்லாம் அறியாது, ஆதவன் அழுப்பிலும் உண்ட மயக்கத்திலும் கண் அயர்ந்து விட, அவன் தூங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டு இழையினி அவன் காயத்திற்கு தவறாமல் மருந்திட்டாள்…

 

அவனது காயம் ஓரளவு நன்றாகவே காயத்தொடங்க, அதை பார்த்து திருப்தியாக புன்னகைத்துக்கொண்ட இழையினி, தூங்கும் தன் கணவனை ரசிக்க ஆரம்பித்தாள்…

 

தூக்கத்திலும் இறுக்கமாக இருக்கும் அவனது முகம், ஆண்மையை பறைசாற்றும் அவனது அடர் அளவான மீசை, அவளுக்கு பிடித்த கருப்பு நிறம், அவன் கை வளைவினுள் மாட்டிக்கொண்டால், வெளி வருவது முடியாத காரியமே என்று என்னும் அளவிற்கு வலிய தோள்கள், அவள் முகம் புதைப்பதற்காகவே பறந்து விரிந்த அவனது மார்பு… என்று இழையினி அவளது கணவனை அணுஅணுவாக ரசிக்க, அவளது மனசாட்சியோ, “ச்சா.. இழையா ? என்ன இப்படி பார்த்துக்கிட்டு இருக்க” என்று அவளையே அது கேள்விக்கேட்க, அதற்குமேல் அவளது முகம் அந்தி சாயும் பொழுது, சிவந்திருக்கும் வானமென சிவக்க, தற்செய்யலாய் நேரத்தை பார்க்க, அது மாலை 4 என காட்டவும்… இத்தனை நேரம் அவளையும் அறியாமல் அவள் கணவனை ரசித்து நின்றதை நினைத்து, அவளே அவளை செல்லமாக கொட்டிக்கொண்டாள்…

 

ஒரு பூத்துவாலையை எடுத்துக்கொண்டு, முகம் கை கால் கழுவி லேசாக ஒப்பனை செய்துக்கொண்டு, ஒரு காபியுடன் கணவனை எழுப்பலாம் என்ற எண்ணத்துடன் குளியறைக்கு சென்றவள், தனக்குள் மீண்டும் கணவனது நினைவுகளை பரப்பிக்கொண்டாள்….

 

அவனது சிந்தனையோடு குளியலறைக்குள் சென்று தாழிட்டவள், இத்தனை சீக்கிரம் அவனின் மீது தனக்கு எப்படி நேசம் வந்தது என்று கேள்விகளை எழுப்பிக்கொண்டாள்….

 

“எனக்கு தெரியவில்லை… ஆனா ஒன்னுமட்டும் உறுதி, அவரை நான் நேசிக்க தொடங்கிட்டேன்… எப்போ இருந்து ? தெரியல… எனக்காக அந்த ரிபோர்டர் ட பரிந்து பேசுனப்பவா? முதல் முறைய இந்த செயின் கழுத்துல போட்ட பொழுதா? அவரோட ஜெர்கின் எனக்காக யோசிச்சு கழட்டி கொடுத்த பொழுதா? அந்த நிலையிலையும், அவருக்கும் பிரெச்சனை இருக்கும் பொழுது கூட, என்ன சமாதானம் செய்தாரே..அதுனாலையா? யோசிக்காமா, எனக்காக இந்த தாலிய கட்டினாரே.. அப்போ இருந்தா? அவரே இந்த மஞ்சள் கயிற்ற கழட்டி எரிஞ்சாரே.. அப்போ என்னையும் அறியாமல் அதை எடுத்து மீண்டும் கட்டிகிட்டதுனாலவா ?

 

ஆரியன மாப்பிளை னு சொன்னதும் என் மனசு துடித்ததே அப்போவா? இல்ல அவர கல்யாணத்துல பார்த்தேனே அப்போவா? அவருக்கு காதலி இருக்குறத நினைத்து குழம்பினேனே அப்பொழுதா? பழையத பேசவேண்டாம்.. இனி நீ தான் என் மனைவின்னு சொன்னாரே… அவரோட பழைய காதல கூட மறந்து, அப்போ இருந்தா? இல்ல நடந்த ஒவ்வொரு துர் சம்பவத்துக்கும் எனக்கு உட்க்காந்து சமாதானம் சொன்னாரே… அந்த நொடி இருந்தா.. ? இல்ல இப்போ இத்தனையும் செய்திட்டு, அமைதியா தூங்குறாரே.. இந்த நிமிஷத்துல இருந்தா… ? அவர் மீது எனக்கு எப்ப காதல் வந்தது…” என்று அவளின் ஒரு மனம் கேட்டுக்கொண்டு இருந்தது….

 

அவளது புத்தியோ, “அப்போ நீ அவர காதலிக்க தொடங்கிட்டியா? “

அவளது மனமோ, “ஹ்ம்ம் ஆமாம்… “

அவளது அறிவு, ” இது தான் காதலா?”

அவளது மனம், “அப்படி தான் நான் உணருறேன்…”

அவளது அறிவு, “சரி உன் காதல எப்ப சொல்ல போற?”

அவளது மனம், ” நானே முதல் போய் சொல்ல வெக்கமா இருக்கு.. இதே போல அவரு தூங்கிட்டு இருந்தால், நிச்சயமா இப்பவே சொல்லிடுவேன்… ஆனா முழுச்சு இருந்தா எப்படி சொல்லன்னு தான் தெரியல…” என்று இழுக்க… இப்படி அவளது அறிவும், மனமும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்க, சட்டென்று அவள் சுய உணர்வு பெற்றாள்….

 

நினைவு உலகில் இருந்து மீண்டு வந்தவள், அப்பொழுதுதான் உணர்ந்தாள், ஆதவன் நினைவில், அவள் குழாய்-க்கு பதில் துாவாலைக்குழாயை திறந்திருப்பதை….. ஆனால் அப்பொழுது உணர்ந்து என்ன பயன்.. ? பூவாக சிதறிய நீர் துளிகள் அவள் மேனி மொத்தமும், உச்சி முதல் பாதம் வரை நனைத்திருக்க, அவனது நினைவு தன்னை இத்தனை தூரம் ஆட்டிப்படப்பதை எண்ணி அதிசயத்தவள், மாற்று துணிக்கூட இப்பொழுது மாற்ற தன்னிடம் இல்லை என்பதை நினைத்து, என்ன செய்வது என்று விழிகளை உருட்டியப்படி நின்றுக்கொண்டு இருந்தாள்…

 

சில நொடிகள் நின்றவள், மெதுவாக தாழ் திறந்து எட்டிப்பார்க்க, ஆதவன் இன்னமும் உறக்கம் கலையாமல் படுத்திருக்க, வேகமாக தனது ஈர உடைகளை களைந்து, அவள் கையோடு கொண்டுவந்த துண்டை உடலில் கட்டிக்கொள்ள, மார்பிலிருந்து தொடங்கி, முட்டிக்கு மேல்வரை மட்டுமே அது இருந்தது… கூந்தலில் இருந்து நீர் சொட்ட சொட்ட, மெதுவாக வெளியில் வந்தவள், அவன் உறங்குவதை சற்று எட்டநின்றே உறுதிப்படுத்திக்கொண்டு, வேகமாக அவளது அலமாரியை நோக்கி விரைந்தாள் இழையினி.

 

கையில் அகப்பட்ட, சேலையை எடுத்தவள், வேகமாக அலமாரியின் கதைவை அணைத்து தாழிட, அதை விட வேகமாக இழையினியை அணைத்திருந்தான் ஆதவன்…

 

அவள் குளியலறைக்குள் நுழைந்ததுமே கேட்ட தண்ணீர் சப்தத்திலே கண்விழித்துவிட்ட ஆதவன், அவள் வருகைக்காக காத்திருக்க, முதல் முறை அவள் ஈர துணியுடன் எட்டிப்பார்த்ததை காணாதது போல பாசாங்கு செய்து படுத்திருந்த அவளது கனவனான கள்வன், அவள் அடுத்து என்ன செய்ய போகிறாள் என்பதை அறிவதற்காய், தூங்குவது போலவே படுத்திருக்க, அவனது காதல் மனைவி வந்த கோலத்தில் மதிமயங்கி போனான்…

 

அவளை அந்த கோலத்தில் பார்த்தவன், அதுவும் அவனது மனதில் நிறைந்த காதல் தேவதை, அவன் முன் இப்படி ஒரு கோலத்தில் வர, அவனது ஒவ்வொரு அணுவும் அவளிடம் போக அவனுக்கு கட்டளை  இட, அதே நேரம் அவள் பதட்டமாக உடைய எடுத்துக்கொண்டு இருந்ததனால், பின்னால் வந்தவனை இழையினி கவனிக்காமல் இருக்க, இப்போது அவன் கைகளுக்குள் சரண் புகுந்திருந்தாள், ஆதவனின் இழையா….

 

பின்னால் இருந்து அணைக்கப்பட்டதால், எதிர்பார்க்காத இந்த நிகழ்வால் இழையா, கைகளில் இருந்த துணிகளை கீழே நழுவவிட, ஆதவனின் கைகள் அவளது இடைய சுற்றி வளைத்தன… அவன் உயரத்திற்கு, சற்று குனிந்து அவள் கழுத்தோடு முகம் சேர்க்க, உடல் படபடக்க, இன்னமும் ஆதவன் புறம் திரும்பாமலே நாணத்தோடு, பயமும் ஒட்டிக்கொள்ள நடுங்கிய உடலுடன் உறைந்து நின்றாள்…

 

அவனது குரல் கிறக்கமாக ஒலிக்க, இழையினியின் காது மடலில் கிசுகிசுக்க தொடங்கின அவனது அழுத்தமான உதடுகள்… சில நிமிடங்கள் தொடர்ந்த அந்த அணைப்பில், ஒவ்வொரு வினாடியும், அணைப்பின் வீரியம் ஏறிக்கொண்டே போக, இழையினி மெல்ல அதே நிலையில் நின்றப்படி, இன்னமும் ஆதவனின் முகம் காணாமல், “என்னங்க.. விடுங்க… போகணும்…” என்று முணுமுணுக்க…. ஆதவனோ, “எங்க போகணும் இழையா? ” என்று கிசுகிசுக்க, இழையினி அவனது குரலில் கரைந்து போனாள்….

 

“இல்லங்க ட்ரெஸ் .. ட்ரெஸ் மாத்திட்டு….” என்று சொல்லாமல் இழுக்க, ஆதவன். “ட்ரெஸ் மாத்திட்டு என்ன பண்ண போற இழையா… ” என்று வேண்டுமென்றே கேட்க, அதற்கு மேல் சொல்ல முடியாமல் அவள் தடுமாற, அவன் உல்லாசமாக சிரித்தான்… அந்த இடைவேளையில் ஆதவன் பிடிதளர, வேகமாக அவனை விட்டு இரண்டடி எட்டுவைத்து விலக, அதற்குள் மீண்டும் ஆதவன் வசம் சிக்கினாள் இழையினி….

 

இப்பொழுது இருவரும் நேருக்கு நேர் இருக்க, அந்த அந்தி மாலையில், ஓர் அந்தி மந்தாரை போல நாணத்தில் மலர்ந்திருந்த தன் மனைவியின் முகம் பார்த்த ஆதவன், மெல்ல அவள் முகம் நிமிர்த்தி, “என்ன பிடிச்சுருக்கா இழையா? ” என்று ஏக்கம் நிறைந்த காதல் பார்வையோடு கேட்க, இழையினியோ, ஆதவன் முன் இப்படி நிற்பதனால் வெக்கம் தாழாமல் தலை குனிய முயன்று கொண்டு இருந்தவள், அவன் இரு கரமும் அவளது கன்னத்தை ஏந்தி இருந்ததனால் தலை தாழ்த்திக்கொள்ள இயலாமல் தவித்துக்கொண்டு இருந்தாள்…

 

அவன் கேட்ட கேள்வியில் மேலும் சிவந்தவள், தன் அழகை அவனிடம் இருந்து மறைக்கவும், அவனது கேள்விக்கும் பதில் கூறவும் ஒரே செயலாக, அவன் மார்போடு ஒன்றினாள்… மெல்ல அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “பிடிச்சுருக்கு” என்ற ஒற்றை வார்த்தையில், ஆதவனது காதல் வாழ்க்கையும், தாம்பத்ய வாழ்க்கையையும் இயங்க வைத்தாள் இழையினி…

 

அவளது செய்கையிலும், பதிலிலும் உலகத்தையே வெற்றி கொண்ட களி, ஆதவன் நெஞ்சில் காட்டாற்று வெள்ளமாய் வேகமெடுக்க, புயலென மனைவியை கைகளில் ஏந்தி கட்டிலை அடைந்தான் ஆதவன்….

 

அவன் தேடல் தொடர்ந்துக்கொண்டே தான் இருந்தது… இழையினியும் விருப்பத்துடனே அவன் தேடலுக்கு, அவளையே அவனிடம் ஒப்படைத்தாள்…சிலமணி நேரங்கள் தொடர்ந்த காதல் யுத்தத்தில், யாருக்கும் தோல்வி இல்லை…

 

“எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்.. ஐயோ மணி 7 ஆச்சு.. இப்ப போய் நான் எப்படி கீழ இறங்கி போவேன்… மானமே போகுது…” என்று வெக்கம் கலந்து சலித்து கொண்டாள் இழையா…

 

“ஏன் இழையா? கீழ போனா என்ன? ஏன் லேட் னு கேட்ப்பாங்களா? கேட்டா சொல்ல வேண்டியது தானே” – கள்ள சிரிப்புடன் ஒலித்தது ஆதவன் குரல்.

“உங்கள… கிண்டல் பண்ணாதீங்க.. ஏதோ போல இருக்கு… எனக்கு கீழ போகவே கூச்சமா இருக்கு…” என்று பாவம் போல இழையா முகத்தை வைத்துக்கொண்டு கூற, ஆதவன் மனம் இறங்கினான்…

“இழையா.. நீ இப்படி தயங்குற அளவு எதுவும் இல்லை… உங்க அம்மா புருஞ்சுப்பாங்க… சரி நீ ப்ரெஷ் ஆகு…பிரஷ் ஆகிட்டு, மறுப்படியும் நீ தூங்கு…  நீ கீழ போறதுக்கு நான் வழி சொல்றேன்… ” என்று கூறிய ஆதவன் சில நிமிடங்களில் தயாராகி கீழே சென்றான்.

“இவரு என்ன பண்ண போறாரு…” என்று தனக்குள் புலம்பியப்படி, லேசாக தன்னை திருத்திக்கொண்டவள், அவன் சொல்வது போலவே மீண்டும் கட்டிலில் வந்து கண்களை மூடி படுத்தவள் விழிகளுள் ஆதவன் செய்த காதல் சேட்டைகளே வந்து போயின….

அவள் விழி மூடி படுத்திருந்த சில நொடிகளுள், இழையினின் அன்னையும் இதழாவும் வர, பின்னோடு ஆதவனும் வந்தான்….

 

“பாப்பா..என்ன செய்யுது டா..? மாப்பிள்ளை உனக்கு மதியம் இருந்து தலைவலி..இப்பவும் எழுதிரிக்க முடியாமல் படுத்திருக்கான்னு சொன்னாரு டா…” என்று கலங்கியப்படி மரகதம் கேட்க, இதழாவும் ஜுரம் எதுவும் இருக்கிறதா என்று இழையினியை பரிசோதித்தாள்…

 

பிறகு, அவளது கூந்தலில் இன்னனும் ஈரம் ஒட்டிக்கொண்டு இருப்பதை உணர்ந்த மரகதம், மெதுவாக, தனக்குள் சிரித்துக்கொண்டு, அதை வெளியில் காட்டாமல், “இதழ், தலை க்கு தண்ணி ஊத்திட்டு அப்படியே தூங்கிட்டா டா.. அதான் தல வலி… ஒரு சுக்கு தட்டிபோட்டு வரகாப்பி குடுச்சா சரியாகிடும்… நீ என்கூட வா…நான் உன்கிட்ட கொடுக்கிறேன்.. நீ அக்கா ட்ட கொடுத்திட்டு வந்திடு.. பாப்பா இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்… ” என்று தன் சின்ன மகளிடம் கூறியவர், இழையினியிடம், “பாப்பா.. நான் சொல்லிகிறேன் மத்தவங்ககிட்ட, உனக்கு உடல் சுகமில்லன்னு…அதுனாலா நீ அதெல்லாம் யோசிக்காம நல்லா ஓய்வு எடு… ” என்று விட்டு நகர, ஆதவன் பெருமையாக காலரை தூக்கிவிட்டான்…

 

அவர்கள் தலை மறைந்ததும், “போங்க, அம்மா கண்டுபிடிசிருப்பாங்க…” என்று இழையினி சிணுங்க, “இழையா.. வேணாம் டி.. இப்படி சிணுங்காத, அப்புறம் நான் பொறுப்பில்லை….” என்று கூறி கண்ணடிக்க, “ஐயோ….உங்கள என்ன தான் பண்றதோ” என்று மட்டும் சொல்லிவிட்டு அடுத்து வாயை திறக்கவே இல்லை…

 

ஆதவனோ கதவை தாழிட்டுவிட்டு வந்து, ஒரு உலர்ந்த துவாலை கொண்டு மனைவியின் ஈர கூந்தலை உலர்த்த தொடங்க, அவனது காதலில் இத்தனை நேரம் கண்டவள், அவனது அக்கரையில் கரைந்தே போனாள்….

 

“விடுங்க… நான் பண்ணிக்கமாட்டேனா…” -இழையா..

“அதுனால என்ன இழையா… அம்மா சொன்னத கேட்டியா.. தலை ஈரமா இருந்தா, அப்புறம் நிஜமா தலை வலி வந்திடும்… அதுனால அமைதியா இரு” என்று கூறியவன், அவள் சொல்ல சொல்ல கேட்க்காமல், அவனுக்கு தெரிந்தவரை அவளது கூந்தலை உலர்த்த உதவி செய்துவிட்டு, மனைவியினி முன் உச்சியில் ஒரு முத்தம் பதித்தான்…

 

“தேங்க்ஸ் இழையா.. ஐ லவ் யூ… ” என்று ஆழ்ந்த குரலில், முதன் முதலாக தன் மனைவியிடம் உலகத்தையே கட்டிபோடும் வல்லமை கொண்ட அந்த மூன்று வார்த்தையை கூறியவன், இழையினியிடம், “நீ இன்னும் சொல்லவே இல்லையே.. சொல்ல மாட்டியா டி…” என்று கேட்க, “ஹ்ம்ம்ம்ஹும்… மாட்டேன்.. எனக்கு தோணும் போது சொல்வேன்… ” என்று இழையினி, அவனை சீண்டி பார்க்கும் எண்ணத்துடன் கூறினாள்…. ஒரு வேளை இப்பொழுதே, அவள் கூறி இருந்தால், பின்னால் வரவிருக்கும் பிரச்சனையை தவிர்த்திருக்கலாமோ என்னவோ…

 

மேற்கொண்டு, ஆதவன் அவளிடம் எதுவும் கேட்கும் முன்னதாக, இதழா காபியுடன் வர, இழையினிடம் சொல்லிக்கொண்டு, தனது நண்பன் மகிழனின் நிலை கருதி வெளியே சென்றான்… தன்னையே நம்பி வந்த மகிழன் தனியே இருப்பானே என்று தோன்ற, அவனை தேடி அவன் சென்று கொண்டு இருந்தான்…

 

மகிழன் எங்கிருக்கிறான் என்று வேலை ஆட்களிடம் விசாரிக்க, அவர்களோ மகிழன் தோட்டத்து பக்கம் போனான் என்று கூற, அவனை தேடி ஆதவன் தனியே செல்ல, ஆதவன் தனிமையில் செல்வதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள துடித்தன நான்கு வஞ்சக கண்கள்….

 

Advertisement