Advertisement

 

முகிழ் – 12

 

காவ்யா சொன்னவற்றை அவள் மனம் மறுத்தாலும் அவள் அறிவு அதை நம்ப தொடங்கி இருந்தது. கடைசியாக க்ரிஷ்ணவ் கூறிய வார்த்தைகள், அப்பெண்ணும் மதியிடம் கூறியதால், காவ்யா சொல்வதில் உண்மை இருகின்றது என அவள் அறிவு நம்பிவிட்டது. அதோடு ஒரு பெண் இந்த விஷயத்தில் எப்படி பொய் சொல்லுவாள் என்றும் அவளுக்கு தோன்ற, அவள் அறிவு மதியிடம், “நீயே உன் கண்களால் பார்த்தாய் தானே, க்ரிஷ்ணவ் எத்தனை அலட்சியமாய் நின்றிருந்தான், இறுதியில் கெடு வேறு குடுத்தானே” என்று எடுத்துக் கூற மதிக்கு அவளை நினத்தே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது.

 

அவள் மனது ஒரு வேலை இது எல்லாமே பொய்யாக இருக்க கூடுமோ என்று எண்ணினாலும், அவனை ஒருதலையாய் காதலித்ததை தவிர அவனின் பழக்கவழக்கங்கள் தெரியாததால், ஏன் ஒருமுறை கூட அவள் அவனிடம் பேசாததால், அவள் மனதால் அறிவிடம் வாதட வழியற்று போயிற்று.

 

அவள் அறிவு மெல்ல மெல்ல அவள் மனதையும் மாற்ற தொடங்கி இருந்தது. அவள் மனமோ மதியிடம், “ஒரு வேலை அப்பெண்ணிற்கு முன்னால் நீ உன் காதலை தெரிவித்திருந்தால்?, அவன் உன்னிடமும் இதே தகாத வார்த்தைகளை பேசியிருந்தால்? ” என்று எண்ணும் பொழுதே மதியால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

 

அப்படி ஒரு நிலை தனக்கு ஏற்பட்டு விட்டால் என்று எண்ணிய நொடியே அவளின் சர்வ நாளங்களும் அடியோடு ஒடிங்கிற்று. இனியும் க்ரிஷ்ணவை சந்திக்கும் துணிவு அவளுக்கு இல்லாமல் போனது, காரணம் சந்தித்து அவன் ஒரு வார்த்தை ஒரே வார்த்தை அவளிடம் தவறாக பேசிவிட்டாலும் அவளால் உயிர் வாழ இயலாது. அதை விட அவள் காதல் ஒன்றே அவள் வாழ்விற்கு போதுமென எண்ணியவள் அங்கிருந்து செல்ல துணிந்தாள்.

 

அவன் மீது அவள் கொண்ட காதல் கண்ணீராக கரைந்து வெளியில் வந்தது. அவள் மனமோ, “என் ராமன், துச்சாதனனா?” என்று எண்ணி எண்ணி மருகியது. உடனடியாக இவ்விடம் விட்டு கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தவள் கண்களை துடைத்துக் கொண்டு கிளம்பினாள். அவளால் அவள் கண்ணில் வழிந்த நீரைத்தான் துடைக்க முடிந்தது. அவள் மனம் ஊமையாய் அழுது கரைவதை தடுக்க வழி இல்லாமல் போனது ஏனோ.

 

முன்பின் தெரியாத ஒருவனின் பின்னால் சென்ற தன் மனதை நினைத்து வெம்பி வெம்பி துடித்தாள். அவனை பற்றி அறிந்த பின்னும் ஒரு மனது அவன் பால் சாய்வதையும் தடுக்க முடியாமல் தடுமாறினாள். தங்கி இருக்கும் இடம் வந்து சேர்ந்தவள் காலையில் ஆசை கொண்டு மனது, ஆசை ஆசையாய் எழுதிய டைரி கண்ணில் பட அதை புரட்டியவள் அதில்

 

    

     “உன்னை நினைத்த மனது

     வேறு ஒருவனை மணக்காது இனி

     அப்படி மணந்து விட்டால்

     உனக்கும் எனக்கும் வித்தியாசம் ஏது?

     உயிர் உள்ளவரை

     என் காதல் மட்டும் போதும்

     இந்த வாழ்க்கைக்கு”

 

என்று மட்டும் எழுதினாள். அவள் கண்ணீர் துளிகள், அவளின் கன்னங்களை நனைத்து அவள் கன்னம் தாண்டி சிதறி அந்த காகிதத்தையும் நனைத்திருந்தது. அதை பார்க்க பார்க்க அவள் நெஞ்சில் பாரம் ஏற அதை தூக்கி எரிய அது பால்கனியில் சென்று விழுந்து கேட்பாரற்று கிடந்தது.

 

அந்த காவ்யா என்ற பெண் மட்டும், மதியிடம் தனியாக வந்து நாம் இன்றே கிளம்பிவிடுவதால் க்ரிஷ்ணவின் கண்களில் படாமல் சென்று விடலாம் என்றும் அதே நேரம் அவளுக்கு உள்ளுர கலக்கமாகவே இருக்கிறது என்றும் கூறி சென்றாள்.

 

அவர்கள் அனைவரும் ஒரு தனியார் வண்டி தயார் செய்து கிளம்ப கொடைக்கானலில் இருந்து மதுரை நோக்கி பயணமானது அந்த வண்டி. மலை சரிவில் இறங்க இறங்க குளிர்ச்சி குறைவது போல மதியின் மனதிலும் சந்தோசம் குறைந்துக் கொண்டே போனது.

 

“ஒருதலை காதலுக்கு இத்தனை வலி தரும் சக்தியா?” என்று எண்ணிய மதி, அது ஒருதலை காதல் மட்டுமல்ல அது அவளின் உயிர் காதல் என்று உணர்ந்தாள். வாழ்வில் ஒருமுறை மட்டுமே காதல், ஒருவனிடம் மட்டுமே காதல் என்று எண்ணி இருந்த மதிக்கு க்ரிஷ்ணவோடு அவள் வாழ்வின் மொத்த காதலையும் அவனுடனே விட்டு செல்வதாக தோன்றிட்டு.

 

அவனை சந்திக்காமல் வந்தவள் அவனை சிந்திக்காமல் இருக்கவில்லை. மதியின் மனமோ, “அவன் பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறானோ, காதல் கல்யாணம் இவ்வற்றை மதிக்கின்றானோ இல்லையோ, ஆனால் அவனை நினைத்த மனதில் இனி யாருக்கும் இடம்கிடையாது காதலனாகவும், கணவனாகவும்” என்று உறுதி எடுத்தாள்.

 

மனதாலும் உடலாலும் இனி வேறு ஒருவன் அவள் வாழ்வில் இல்லை என்று அன்று முடிவு செய்தவள் அதன் படியே இன்று வரை வாழ்ந்து வருகிறாள். 

 

அடுக்கம் காட்டில் இருந்து வந்து அன்றோடு 4 நாட்கள் முடிந்திருந்தது. திடீர் என்று அப்பெண் காவ்யா கண்ணீரோடு வந்தவள், “அவன்… அவன்… என்னை தேடி இங்கேயும் வந்துவிட்டான் மதி” என்று கூற அவளின் பின்னால் பார்க்க க்ரிஷ்ணவ் அவர்கள் கல்லூரி வளாகத்தில் வந்துக் கொண்டிருந்தான்.

 

“எனக்கு பயமா இருக்கு மதி, என்னோட தகவல் ஏதும் சேகரிக்க வந்து இருப்பானோ?” என்று குரல் நடுங்க கூறுபவளை பார்த்து மதிக்கு அவள் மீது பரிதாப படுவதா? இல்லை இப்படி ஒருத்தன் மீது காதல் கொண்டு, அந்த காதலையும் மறக்க முடியாமல் போன தன் மீது பரிதாப படுவதா என்றே புரியவில்லை.

 

ஏனெனில் அந்த காவ்யாவை தேடி அவன் அவர்கள் கல்லூரிக்கே வரும் பட்சத்தில் காவ்யா சொன்ன அனைத்துமே உண்மை தானே என்று உள்ளுர கலங்கவும் செய்தாள்.

 

ஆனாலும் வெகுநேரம் தாமதிக்க முடியாது என கருதி விரைந்து கல்லூரி அலுவலகம் நோக்கி விரைந்தவள் அவளின் ப்ரின்சிபால் முன் மூச்சு வாங்க நின்றாள். அவளின் நடத்தை, படிப்பு, அறிவு இப்படி அனைத்தும் தெரிந்ததால் அவர்களிடம் மதிக்கு நல்ல மதிப்பு இருந்தது. அவர்கள் மதியிடம், “என்ன மதி ஏன் இப்படி வந்து நிக்கிற” என கேட்க மதியோ அவசரமாக யோசித்து, ” மேடம், நாங்க அடுக்கம் போனதுல ஒருத்தன் நம்ம பொண்ணுங்க கிட்ட தப்பா பேசி இருக்கான், இவளும் பதிலடி குடுத்துட்டா, பட் இப்ப அவன் ஏதோ தகவல் கேட்டு இங்க வந்திருக்கான். நீங்க அடுக்கம் போனவங்கள பத்தி எந்த தகவலும் குடுக்காதீங்க ப்ளீஸ்… “என்று கெஞ்சி கேட்க அவரோ,” இத நீ என்கிட்ட சொல்லவில்லை என்றால் கூட நான் கொடுத்திருக்கமாட்டேன் மதி “என்று கூறினார்.

 

மேலும் அந்த பாதிக்கப்பட்ட பெண் பற்றி கேட்க மதியோ,”மேடம் ப்ளீஸ் நானே ஒரு பெண்ணோட பெயர்க்கு கலங்கம் வர மாதி எதுவும் சொல்ல கூடாது நினைக்கிறேன். பட் என்ன நம்புங்க எந்த தப்பும் அந்த பொண்ணு பண்ணவில்லை” என்று கூற மதியின் மேல் இருந்த நம்பிக்கையால் அவரும் சரி என்று கூறினார்.

 

மேலும் கல்லூரி வந்து பெண்களின் தகவல் கேட்பவரிடம் அவரும் எக்காரணம் கொண்டும் கூற போவதுமில்லையே. ஆகையால் மதிக்காக என்று இல்லாமல் அவர் கொள்கைக்காகவும் கூறமாட்டேன் என்று கூறி மதியை வகுப்பிற்கு செல்லுமாறு பணிந்தார்.

 

ஆனால் என்றும் போல அவளின் ஒரு மனது அவனுக்கு பரிந்துரைக்க, ஒருவேளை வேறு வேலையாக வந்திருப்பானோ என்று எண்ணி அன்று மாலையே அவள் சென்று ப்ரின்சிபலிடம், “மேடம், அவர்…அவரு வந்து என்ன தகவல் கேட்டார்” என்று மனதில் சிறு நம்பிக்கையோடு கேட்டாள்.

 

ஆனால் க்ரிஷ்ணவ் அவர்களிடம், அடுக்கம் பகுதியில் யாரேனும் நம் கல்லூரி மாணவிகள் ப்ராஜெக்ட் செய்தார்களா என்றே வினவியதாக கூறவும் மதி அதற்கு மேல் வேறு எதுவும் தெரிந்த கொள்ள மனமில்லாது மறுபடியும் அவனின் செய்கையில் துவண்டு போனாள். 

அதன் பின் மதி க்ரிஷ்ணவை சந்திக்க வில்லை. ஆனாலும் அவளின் முதல் காதல், முதல் காதல் மட்டுமல்ல, வாழ்வின் முழுமைக்கும் உண்டான காதல் அது ஏற்படுத்திய வலி அவள் மனதிலிருந்து மாறவும் இல்லை. அவளுடைய ப்ராஜெக்ட் மிக சிறப்பாக இருந்ததினால் அவள் அதே பத்திரிக்கை நிறுவனத்திலே பணிக்காக தேர்வு செய்யப்பட்டாள்.

 

அதன் பின் நிற்காத கடிகார முள்ளாய் மதியின் வாழ்வு பயணமானது ஆதியை சந்திக்கும் வரை.

 

ஆதியை சந்தித்த பிறகு அவள் மனம் மறுபடியும் தடுமாற தொடங்கியது. ஆனால் பெண்களை மதிக்காது இப்படி அனைவருடனும் பழகுபவனை மதியின் மனதால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

 

“ஒருத்தனுக்கு ஒருத்தி…..”

 

“காதல்,காதல்,காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல்,சாதல்,சாதல். ”

 

என்ற கோட்பாடுகளை கொண்டவளால் அவனை ஏற்கவும் முடியவில்லை, மறக்கவும் முடியவில்லை.

 

இதை நினைத்துக் கொண்டிருந்த மறு நொடியே அவள் இதயத்தில் சொல்ல முடியாத வேதனை சூழ்ந்தது. “இனி யோசித்து எப்பயனுமில்லை. அவன் இன்று திருமணம் ஆனவன்” என்று அவள் மனம் கூற, மறு மனமோ, “அப்படி அவனுக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நீ அவனிடம் காதல் சொல்வாயா?” என்று கேட்க, பேச்சிழந்து மௌனமானாள் மதி.

 

அடுத்தவரிடம் போராடி வாழ்வதை விட கொடுமையானது தன் மனமிடமே போராடி வாழ்வது என்பது மதியின் விஷயத்தில் உண்மை ஆனது. அவள் மனதின் ஆசைக்கும் மனதின் கேள்விக்கும் பதில் இல்லாமல் தடுமாறியவள் பிறகு மணமானவனை பற்றி எதற்கு இந்த பட்டிமன்றம் என அனைத்து நினைவுகளையும் ஒதிக்கி வைத்து விட்டு தனது வண்டி நோக்கி நடந்தாள்.

 

அவள் கடற்கரையிலிருந்து வரும் வழியில் இருக்கும் சாய் பாபா ஆலயம் கண்ணில் பட ஏதோ ஒரு உந்துதலில் அவள் உள்ளே சென்றாள். அவளின் மன போராட்டத்தின் ஒரு கேள்விக்கு பதில் உள்ளே கிடைக்க போவதை அறியாமல், என்ன என்று புரியாத ஒரு எதிர்பார்ப்போடு உள்ளே சென்றாள்.

 

அவள் உள்ளே செல்வதை மூன்று ஜோடி கண்கள் மறைவாக இருந்து கவனித்ததை மதி அறிய வாய்ப்பில்லை அவள் இருந்த மன நிலையில்.

 

அவள் சென்ற அடுத்த பத்து நிமிடங்களில் ஆதி அவனது அன்னை மற்றும் நிலாவை அழைத்துக் கொண்டு அதே கோவில் வந்திருக்க அவர்களை மட்டும் உள்ளே போகுமாறு சொல்லிவிட்டு அவன் அருகிலிருக்கும் கடற்கரைக்கு சென்று அமர்ந்தான்.

 

ஈஞ்சம்பாக்கம் கடற்கரை  அது மற்ற கடற்கரை போல கூட்டம் அலைமோதாது. அந்த கோவிலிற்கு வருபவர்கள் மட்டுமே வந்து செல்வர். அங்கு கடைகளும் கிடையாது. சஞ்சல பட்ட அவன் மனது அமைதி வேண்டி அங்கு வந்து அமர்ந்தது.

 

அன்று அதே நாளில் ஒரு 4 மணி நேரம் முன்னோக்கி சென்றான் ஆதி. அவன் அன்னை கூறிய வார்த்தைகள் அவன் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. மதி அமர்ந்திருந்த அதே இடத்தில் அவனும் அமர்ந்து முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

 

கோவிலிற்குள் சென்ற மதி அந்த பாபா ஆலயத்தில் ஒரு பேரமைதி சூழ்ந்திருப்பதை உணர்ந்தாள். அவள் மனமும் சற்று லேசாக ஆனதுபோல தோன்ற, மெதுவாக பாபா சன்னதியில் தொழுதுவிட்டு அடுத்த சன்னதி நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள். இந்த ஆலயத்தில், கடலை ஒரு ஆண் கடவுளாக சித்தரித்து அதற்கு ஒரு சன்னதியும் அமைத்திருப்பர். அதன் உள்ளே சென்று வழிபட்டுவிட்டு வெளியில் வந்தவளுக்கு அருகிலிருக்கும் கடல் அலையின் சத்தம் தெளிவாக விழுந்தது. ஒரு சிறிய தோப்பிற்குள் ஆலயம் கட்டப்பட்டது போல தோற்றம் தரும் அவ்விடத்தில் அவள் மனது ஒரு சமன் நிலைக்கு வந்தது. கடற் காற்றோடு கோவில் உள் இருந்த மாமரத்து காற்றும் சேர்ந்து மதியின் மேனியில் பட அவள் அதை ரசித்துகொண்டே நடந்து வர, மதியின் கண்களில் தென்பட்டாள் ‘நிலா’.

 

நிலாவை கண்டதும் இத்தனை நேரம் மட்டுபட்டிருந்த மனமோ மறுபடியும் நிலை தடுமாற ஆரம்பித்தது. வேகமாக சுற்றி வந்தவள் அங்கிருக்கும் விநாயகர் சன்னதியில் 2 நிமிடம் அமர்ந்து விட்டு செற்று விடலாம் எண்ணி அமர்ந்தாள்.

 

அவள் அதிர்ஷ்டமோ இல்லை துரதிர்ஷ்டமோ, அவள் அருகிலே நிலா மற்றும் ஆதியின் அன்னை அமர இவள் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

ஆதியின் அன்னைக்கு தெரிந்த பெண்மணி போலும், அவர்களை நோக்கி புன்னைகை செய்து அப்போது அங்கு வர மதி அதே சமயம் எழுந்து வெளியில் கிளம்ப தயாரானாள். அப்போது புதிதாக வந்த பெண்மணி நிலாவை பார்த்து, “என்னடா நிலா, எப்படி இருக்க? உன் வீட்டுகாரரு இன்னும் பெங்களூருல தானா? அது சரி ஆதி அம்மா… எப்ப ஆதிக்கு ஒரு கல்யாணம் பண்ண போறிங்க?” என்று குசலம் விசாரிப்பில் ஆரம்பித்து, கேள்வியில் முடித்தார்.

 

கிளம்ப தயாராக எழுந்தவள் இந்த பேச்சு வார்த்தை காதில் விழவும் அவளை அறியாமல் அவள் கால்கள் அங்கே சிறைப்பட்டது. அதற்கு மேல் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது மதிக்கு கருத்தில் பதியவில்லை.

 

“க்ரிஷ்ணவ் மணம் ஆகாதவன்” அது ஒன்றே அவள் மணம் சுற்றி சுற்றி வந்து கூக்குரலிட்டு உல்லாசமாய் பாடிக் கொண்டிருந்தது.

 

கோடைகாலத்தில் ஒரு சில நிமிடங்கள் வந்து போகும் மழையாக, மதியின் மனதில் சாரல் வந்து, வந்தே சுவடே தெரியாமல் மறைந்து போனது. காரணம், அவனுக்கு திருமணம் ஆகவில்லை, ஆனால் அடுக்கம் பகுதியில் அந்த காவ்யாவிடம் பேசிய வார்த்தைகள்….? அவள் அவனிடம் தன்னை தெரியபடுத்தாமலே விலகி வந்த காரணம் அப்படியே இருகின்றதே….என்று யோசித்து மறுபடியும் சோர்ந்து போனாள்.

 

அவனை அன்றி அவள் வாழ்வில் ஒருவன் இல்லை, ஆனால் அவன் மற்ற பெண்களிடம் நடந்து கொள்ளும் முறையும் அவளால் ஏற்க இயலாது. அவனுடன் வாழவும் முடியவில்லை, மறக்கவும் முடியவில்லை அவள் நிலை என்ன என்று அவளுக்கே புரியாத புதிராக இருந்தது.

 

ஆனால் இப்போதைக்கு அவனுக்கு இன்னும் மணம் ஆகவில்லை என்பதே அவளுக்கு இனிப்பூட்ட அவள் மனம் மற்றதை ஒதிக்கி வைத்து விட்டு தனது வண்டியில் ஏறி பயணமானாள். அவள் தன்னை மறந்த நிலையில் பயணிக்க, அவளை அறியாமல் 3 நபர்கள் அவள் பின்னே பயணிக்க தொடங்கி இருந்தார்கள்.

 

அவள் கிளம்பிய 10 நிமிடங்களில் அவளுக்கு சிநேகனிடமிருந்து அழைப்பு வர வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பேசினாள். அவள் எங்கு இருகின்றாள் என்ற விவரத்தை கூறிவிட்டு கிளம்ப எத்தனிக்க யாரோ தன்னை தொடர்வதை கண்டு கொண்டவள் அதையும் சிநேகனிடம் கூறிவிட்டு வேகமாக வண்டியை இயக்கினாள்.

 

அவள் அறிந்துக் கொண்டதை அவர்களும் அறிந்துக் கொள்ள அவளது வண்டியும் அவளை பின்பற்றிய வண்டியும் வேகமெடுத்தது. இங்கு சிநேகனோ அவள் இருக்கும் இடத்திற்கு அருகிலே இருந்ததால் அவனும் மதியை நோக்கி விரைந்தான்.

 

அவள் வண்டியை தடுக்க எண்ணிய அவர்கள் (அந்த 3 நபர்கள்) அவர்கள் வந்த கார்கொண்டு அவளின் வண்டியை இடிக்க அவள் கிழே விழுந்தாள். அவள் விழுந்ததில் அவள் தலையில் அடிப்பட்டு ரத்தம் வர அவள் சுயநினைவை மெல்ல மெல்ல இழந்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் முழு நினைவும் தப்பிக் கொண்டிருந்த நொடியில் அவள் எதிரில் சினேகன் தென்பட்டான். அந்த ரௌடிகள் அவளை தர தர வென இழுத்து செல்ல, சினேகன் அவர்களை நோக்கி முன்னேறினான். சினேகனை இருவர் பிடித்துக் கொள்ள மற்றொருவன் மதியை கார்க்குள் இழுத்துப் போட்டான். அரைமயக்கதில்லும் காரின் மறுப்பக்க கதவை திறந்து அதிலிருந்து வெளி வந்தவள் நிலை தடுமாறி விழ அவளை கைகளில் ஏந்தினான் ஒருவன். அது யார் என்று பார்க்க கூட சக்தி அற்றவளாக முழு மயக்கத்திற்கு சென்றாள் மதி.

 

அதன் பின் என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியாது. அவள் சுய உணர்விற்கு வந்தபொழுது இமைகளை மிகவும் சிரமப்பட்டு பிரிக்க முதலில் அவளுக்கு தான் எங்கு இருக்கிறோம் என்றே புரியவில்லை.

 

முதலில் நடந்ததும் நினைவில் இல்லை.

 

அவள் இருக்கும் அறையை பார்வையால் அலசியவள் அது ஒரு மருத்துவமனை என்பதை அறிந்து மெல்ல மெல்ல நடந்தது அவளுக்கு நினைவு திரும்பியது. அவள் மனமோ, “இது எந்த ஹாஸ்பிடல், அம்மா அப்பா எங்கே?, சினேகன், அய்யோ சினேகனுக்கு என்ன ஆச்சு, இங்கே எப்படி வந்தேன்” என்று குழம்பிக் கொண்டு இருக்கும் பொழுதே உள்ளே நுழைந்தனர் சிநேகனும் அவளின் தந்தையும்.

 

அவர்களிடம் சிறிய புன்னகையை உதிர்த்தவள், மிகவும் பலவீனமான குரலில் சிநேகனிடம், “உனக்கு ஒன்னும் ஆகவில்லையே” என்று கேட்க சிநேகனுக்கோ அவன் தோழியை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. இந்த நிலையிலும் அவன் சுகம் அறிய துடிகின்றாள் என்று.

 

அவன் மதியிடம், “நான் நல்ல இருக்கேன் மதி” என்று கூற மதி தன் தந்தையிடம், “அம்மா எங்க பா?” என்று கேட்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

மதியின் தந்தை தயங்கி, “மதி குட்டி… அம்மா க்கு ஹார்ட் அட்டாக்… இப்ப ஆப்ரேஷன்….. இப்பதான் முடிஞ்சது….ஆனா….அவ அதுக்கு முதல்ல சம்மதிக்கல குட்டி” என்று மென்று மென்று முழுங்கி மிகவும் தயக்கத்துடன் கூறினார்.

 

“அப்பா, அம்மா இப்ப எப்படி இருக்காங்க அத சொல்லுங்க” என்று பரபரக்க, அவள் தந்தையோ மெல்ல தயங்கி “அவள் இன்னும் கண் விழிக்கவில்லை ஆனால் இனி பிரச்சனை இல்லை என்று மருத்துவர் உறுதியாக கூறிவிட்டார்” என்று கூறினார்.

 

“பிறகு ஏன் இப்படி இருக்கீங்க எனக்கு ஒன்றும் இல்லை அப்பா ” என மதி கூற, அவள் தந்தையோ தயக்கத்தோடு, “மதி, உன் அம்மா உன் கல்யாணத்த பாக்காம ஆப்ரேஷன் ஒத்துக்கமாட்டேன்னு சொல்லவும்……..நாங்க வேற வழி இல்லாம……. உனக்கு…. உனக்கு…. கல்யாணம்..” என்று தடுமாற, ஏதோ உள்ளுணர்வு தோன்ற திகைத்து மதி உடனே தன் கழுத்தை பார்த்தவள் கண்களில் புதிய மஞ்சள் கயிறு தென்பட வார்த்தை வராமல் அவள் கண்கள் மட்டும் கண்ணீர் சிந்த தொடங்கி இருந்தது.

 

அவள் அழுவதை பொறுக்க முடியாத அவள் தந்தை “மதி இத பாரு, உனக்கு நாங்க கெட்டது செய்ய மாட்டோம் நம்புடா” என மன்றாட, சினேகன், “மதி அழாத யாரோ என்னவோனு தான உன் மனசு அடிச்சுக்கிது, எனக்கு புரியிது உனக்கு இது எவ்ளோ பெரிய அதிர்ச்சின்னு, ஆனா உன்ன நல்லவர்கிட்ட தான் ஒப்படச்சிருக்கோம் ” என்று கூறினான்.

 

அவள் தந்தையோ, “மதி இப்படி அழாத மா, அம்மாவ காப்பாற்ற உதவி செஞ்சவர கல்யாணம் செஞ்சதுக்கு நீ அழுகுரனு அவருக்கு தெருஞ்சா எவ்ளோ வேதன படுவாரு, நம்ம அவருக்கு நன்றி தான் சொல்லணும் மதி அவரு வேற யாரும் இல்ல, உனக்கு இதுக்கு முன்னாடி 2 முறை ஆபத்தில் உதவி செஞ்சவரு தான் மா, என்னமா பாக்குற? நீ எங்க கிட்ட இருந்து மறச்சாலும், எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டியா மதி? இப்ப கூட உன் அம்மாவ காப்பாற்ற, உன்ன கல்யாணம் செஞ்சு உதவி இருக்காரு” என்று கூறி முடிக்க மதிக்கு உலகம் தலை கீழாய் சுற்றுவதை போல உணர்ந்தாள்.

Advertisement