Advertisement

                           மின்னல்-10

 

“ஓய்!!! நில்லு! மரியாதையா நின்னுரு” என்று கத்திக் கொண்டே விரட்டினாள்  குறிஞ்சி.

 

“அய்யோ!! அஷ்மீ!!! ஆன்ட்டீ!!!” என்று எல்லோரையும் இழுத்து நடுவில் விட்டவன் கடைசியில் ஜிதேனிற்கு பின் வந்து நின்றிருந்தான்

 

அன்றைய நாளே அவளை வைத்து செய்திருந்த காரணத்தினால் கடுப்பிலிருந்தவள்…அவனை கண்டவுடன் முதலில் அதிர்ந்து பின் அது மனதில் பதிய…அவனை கொலைவெறிப் பார்வை பார்த்தாள்.

 

அவனால் ஆன காயம் இன்னும் கையில் சிறு எரிச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்க…இன்று அவனே நேரில் என்றாள்…? அதான் அடுத்த நொடியே தனது கொலைவெறி தாக்குதலை தொடங்கியிருந்தாள்.

 

“மரியாதையா நின்னுரு!” என்று அவள் விரட்ட அவனோ அங்கிருந்த எல்லோரையும் நடுவில் இழுத்துவிட்டு தப்பியிருந்தான்.

 

அவன் லீலாவை பிடித்தவாரே “சாரி ஆன்ட்டீ!!” என்று நடுவில் இழுக்க குறிஞ்சி அவர் மேல் மோதி பின் “நீ ஏன்மூ ஊடைல வர…நீ ஏன் வர???” என்றுவிட்டு மறுபடியும் துரத்த லீலாவுக்கோ ‘நான் எங்கடா வந்தேன்…சும்மா கிடந்தவள நடுவுல இழுத்து விட்ட நல்லவனே உனக்கு தேவைத்தான்டா’ என்றானது.

 

இம்முறை அவன் ஜிதேந்திரனின் பின்வர அவனை நிறுத்தியவர் குறிஞ்சியை இரு கைகளுக்குள் அடக்கினார்.

 

“கண்ணா காம் டௌன்டா! நரேன் நம்ம அஷ்மியோட ஃப்ரெண்ட்…” என்று கைகளுக்குள் வைத்தே எடுத்துரைக்க அவளோ

 

“அப்பூ!!! யூ டோன்ட் நோ…ஆரா ஓடஞ்சதுக்கு இவன்தான் காரணம்!!! இவன்தான் என்ன தள்ளிவிட்டான்” என்று துள்ளினாள் அவள்.

 

கேட்டுக் கொண்டிருந்த நரேனோ ஆரா யாரென்று தெரியாமல் குழம்பிப் போனான்.

 

“எனக்கு தெரியும்டா!” என்றவரை அதிர்ச்சியாக அவள் நோக்க

 

“நரேன் நல்ல பையன்டா தெரியாம பண்ணிருப்பான்…நம்ம வீட்டுக்கு வந்துருக்கான்டா” என்றவர் அந்த ‘நம்ம வீட்டுக்கு வந்துருக்கான்டா’ வில் அழுத்தம் குடுக்க அதில் சற்று அமைதியானவள் ” ஐம் சாரி” என்றாள்.

 

“அய்யோ சாரிலாம் வேணாங்க! அன்னைக்கு நான் இன்னும் கவனமா இருந்திருக்கனும்… சாரி ஃபார் தட்” என்று வருந்தினான்.

 

“அதையே எத்தனை வாட்டிபா சொல்லுவா…சரி நான் ஃப்ரெஷாகிட்டு வரேன் நீங்க பேசிட்டிருங்க” என்று ஜிதேன் அவ்விடமிருந்து நகர்ந்தார்.

 

மகளையே பார்த்துக் கொண்டிருந்த லீலாமதிக்கு தெரியாமலா போகும் அவளது கோபமும்…அதை அவள் கட்டுப் படுத்திக்கொண்டிருப்பதும்…அவளையே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அப்பொழுதுதான் நினைவு வந்தது அவள் கேட்ட காஃபி…ஸ்ட்ராங் காஃபி…! அவளிருக்கும் மனநிலையில் அது அவளுக்கு சற்று இதமாக இருக்கும் என்றெண்ணியவரோ…

 

“இருடா உனக்கு காஃபி கொண்டுவரேன்!” என்று சென்றுவிட்டார்.

 

“உட்காரு நரேன்!…” என்றவள் தலையிலடித்தவாறு “நீங்க பண்ண அலப்பறையில நான் எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு  வந்துட்டேன்…டூ மினிட்ஸ்!” என்றவள் குறிஞ்சியிடம் பார்வையாலேயே பேசிச் செல்ல நரேனுக்கோ ‘என்னடா இது எல்லாரும் இப்டி சொர்ணாக்காவோட தனியா விட்டுட்டுப் போய்ட்டீங்க???…’ என்றாக ‘இப்போ நாம என்ன பண்ணனும்??? பேசனுமா..? இல்ல வேணாமா..???’ என்று அவன் சிந்தனைக் கடலில் மூழ்கிக் கிடக்க அங்கிருந்த சோஃபாவில் ‘தொப்’ பென்ற சத்தத்துடன் அவள் அமர அதே வேகத்தில் கீழே விழுந்து சிதறியது அந்த டீவி ரிமோட்…! அவள் உட்கார்ந்த வேகத்தினால் வந்தது. ஏற்கனவே சோஃபாவில் வைக்கப் பட்டிருந்த ரிமோட் துள்ளிக் குதித்திருந்தது.

 

ஐந்தடி எடுத்து வைத்திருப்பாள்…இந்த சத்தத்தில் பதறியடித்துக் கொண்டு அஷ்மி எட்டிப் பார்க்க அதில் இன்னும் இன்னும் கடுப்பேறியது குறிஞ்சிக்கு.

 

விழுந்தது ரிமோட்தான் அடியில்லை என்பதில் உறுதியாக தன் அறையை நோக்கி நடையை கட்டினாள் அஷ்மி!

 

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கோபமெல்லாம் நரேன் மேல் திரும்பியது. ‘சரியான ஆளா இருப்பான் போல…ஜிதேனையே கவுத்துட்டானே!’ என்றெண்ணியவள் தலையை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து உட்காருங்க என்று சொல்ல நினைக்க…அவனோ ஏற்கனவே ஒரு தனி சோஃபாவில் அமர்ந்திருந்தான். கொஞ்சம் இளகிய மனமும் இப்பொழுது மாறிவிட அவனையே பார்த்தவள் “உன் பேர் என்ன?” என்றாள்.

 

அவ்வளவு நேரம் ஏதோ யோசனையிலிருந்தவன் இவள் கேட்ட கேள்வியில் முதலில் விழித்து பின்… “நரேன்” என்றிருந்தான்.

 

அவள் விரட்டியப் பொழுதுகூட அவளை வாங்க போங்கவென்று மரியாதை பன்மையில் அழைத்தவனுக்கு அவளது இந்த வா போ என்ற பேச்சு உறுத்தவில்லை போலும். ஆனால் அவனையறிமாலேயே அவன் ஒருமைக்கு தாவியிருந்தான்.

வலது கையை அவள் புறம் நீட்டியவன் “ஐம் நரேன்!” என்று அறிமுகமாய் சொல்ல…அவளுக்கோ அவனை சீண்டிப் பார்க்கும் எண்ணம்! சத்தியமாக மற்றவரிடம் இதேப்போல் நடந்துக் கொள்வாளா என்பது சந்தேகமே…ஏனெனில் அவள் தன் குடும்பத்தையும் நட்பு வட்டத்தையும் தாண்டியுள்ளவர்களிடம் நடந்துக் கொள்ளும் முறையே வேறு…ஒரு கோடு வரைந்து ‘இதுக்கு இந்தப் பக்கம் நான்…அந்த பக்கம் நீ…இதத் தாண்டி வரவும்கூடாது! நானும் வரமாட்டேன்!’ என்ற கைப்புள்ளயின் பாவனைதான்.

 

நீட்டிய கையை கவனியாமல் அவள் அவன் கண்களையே உற்று நோக்க அவனும் பாவம் எவ்வளவு நேரம்தான் பல்பு வாங்குவான்…அவனும் ‘நான் உனக்கு சளைத்தவனில்லை’ என்றப் பார்வைப் பார்த்தான்.

 

அவர்களுக்குப் பதில் அவர்கள் பார்வை மோதிக் கொண்டது…!

 

சற்றும் பார்வையை அசைக்காமல் இருவரும் பார்த்து நின்றனர்.

‘நமக்கே டஃப் குடுப்பான் போலேயே’ என்று நினைத்தவள் “ஐம் குறிஞ்சி…குறிஞ்சி யாழ்!” என்று கையை நீட்டினாள்.

 

‘ஓ….மேடம் கைய குடுத்தா நாங்க குடுத்துறுனுமா?’ என்று பார்த்து நிற்பது இப்பொழுது அவன் முறையானது.

 

‘திமிருபுடிச்சவன்!’

 

‘சொர்ணாக்கா!’

‘பாக்கறத பாரு என்ன தள்ளி கொல்ல பாத்துட்டு இங்க அப்பாவியா வந்து நிக்கறான்!’

 

‘மொத நாளே நரின்னு கூப்பிட்டவதானே…இவ ஊடயில வந்து விழுவாளாம்…அப்பறம் நான் சாரி கேட்டாலும்  சண்டை போடுவாளாம்!’

 

‘பார்க்கறான் பாரு…பக்கி’

 

‘மொறைக்கறத பாரு அப்டியே சொர்ணாக்கா தான்!’

 

என்று இருவரும் ஒருவரை ஒருவர் மனதுக்குள் தாறுமாறாக துவைத்து தொங்கவிட்டனர். பார்வையிலும் அதே அனல் வீச்சு!

 

“கண்ணா காஃபி!” என்று லீலா அங்கு வரும்வரை இவர்களிருவரின் அன்பான(?)  உரையாடலும் இனிமையான(?) பார்வை பரிமாற்றங்களும் நடந்துக் கொண்டுத்தான் இருந்தது.

 

“தாங்க்ஸ் ம்மூ!!!” என்றவள் “ம்மூ கெஸ்ட்க்கு காஃபிலாம் இல்லையா?” என்று அவனைப் பார்த்தவாரே வினவ “இல்லடா ரொம்ப லேட்டாகிருச்சுல அதான் டேரெக்ட்டா டின்னரே சாப்பிடலாம்னு நரேன் சொல்லிட்டான்”.

 

‘ஓ….சாரு அந்த அளவுக்கு போய்ட்டாரா?’

 

“அப்பூவ கூப்ட்டு வரேன்!” என்று அங்கிருந்து துள்ளி ஓடியவளையேப் பார்த்த லீலாமதி நரேனிடம் திரும்பி “சாரி நரேன்…கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை…” என்று வருந்த அவனோ ‘விளையாட்டுப் பிள்ளையா…? யாரு அந்த சொர்ணாக்காவா???’ என்றாக அதை வெளிப்படையாக சொல்ல முடியாதில்லையா…”அய்யோ பரவால்ல ஆன்ட்டீ எதுக்கு சாரிலாம். ஆமா அப்டி என்ன சமையல் வாசம் மூக்க தொளைக்குதே!” என்றவன் கண்களை மூடி வாசம் பிடிப்பதுப்போல் பாவனைக் காட்ட…அவன் பாவனையில் சிரித்தவர் “தம்பி நரேனு!!! உன் தைரியத்த நினைச்சு எனக்கு புல்லரிக்குதுபா!!!” என்று நடுங்குவதுபோல் நடிக்க.

 

“தெய்வமே!!! அடியனை மன்னிப்பீராக!…ஆனாலும் நெய் வாசம் வருதே! நான் என்ன பண்ண?”

 

“மன்னித்தேன் மானிடா!” என்று நாடக பானியில் சொல்ல அதில் சட்டென்று சிரித்துவிட்டான். அவன் சிரிப்பு  அவருக்கும் பரவ சற்று இளகுவானது அந்த சூழல்.

 

                               ************

 

அந்த டைனிங் டேபிள் ‘அம்போ’ வென்றிருக்க அவர்கள் அனைவரும்.தரையில் வாகாக அமர்ந்திருந்தனர்.

 

அவனுக்கென்று ஸ்பெஷலாக செய்யப்பட்டிருந்த கேசரியை மட்டும் மொக்கிவிட்டு அமைதியாக இருந்திருக்கலாம்…அதைவிட்டு அவன் குறிஞ்சியிடம் சென்று “அன்னைக்கு உன்கூட இருந்தாங்களே…அவங்க பேர் என்ன?” என்று வினவ

 

‘தலையும் புரியாமல் வாலும் புரியாமல் என்னடா இது’  என்ற அவள் பார்வையிலேயே…

 

“அன்னைக்கு…பேக்கரில…கொஞ்சம் குள்ளமா..சப்பியா…” என்று விளக்க அவனது “சப்பியில்” புன்னகை சிந்தியவள் மற்றதை மறந்து அவனிடம்

 

“அவ பேரு புவன்…புவனஸ்ரீ!”

 

‘ஓ!!! நம்ம குலதெய்வத்தோட பேரு புவனா வா!’ என்றெண்ணியவன்

 

“நீ எல்லாத்தையும் இரண்டு இரண்டு வாட்டிதான் சொல்லுவியா?”

 

“ப்ச்! அதுசரி எதுக்கு கேட்ட?”

 

“இல்ல அன்னைக்கு என்ன தெய்வமா வந்து காத்தாங்கள…” என்றது தான் தாமதம் விட்டால் அவள் பார்வையாலே அவனை பின்னி பெடலெடுத்திருப்பாள்.

 

இதையெல்லாம் பக்கத்தில் இருந்த அஷ்மியின் காதிலும் விழ அவளோ நரேனைப் பார்த்து ‘உன்னல்லாம் நறுக்கு நறுக்குனு மண்டைலயே கொட்டனும்டா!’ என்று மனதினுள் தாளித்துக் கொண்டிருந்தாள்.

 

கிளம்பும் சமயம் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டவன்..கிளம்பிய சில மணி நேரங்களிலேயே அஷ்மிக்கு அழைத்து மிக முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்டிருந்தான்.

 

Advertisement