அத்தியாயம் ஆறு:
அவளின் தந்தையை தனியாக விடமுடியாது என்பது மறுக்க முடியாத காரணம் தான் அதே சமயம் வைதேகிக்கு ராமின் வீட்டிற்கு போயும் இருக்க முடியாது. அவளுக்கு போக பிடிக்கவில்லை. அவன் மேல் கோபம் கனன்று நின்றது. ஒன்றுக்கொன்று முடிச்சு போட்டு தந்தையை தனியாக விட முடியாது என்று சுந்தரேசன் இருந்த இடத்தில் தைரியமாக கூறினாள்.
“என்ன இவள் இப்படி கூறுகிறாள்”, என்று ராம் மட்டும் இல்லை சுவாமிநாதனும் நினைத்தார். தன் பெண் தன் மேல் உள்ள பாசத்தில் கூறுகிறாளா இல்லை கல்யாணம் பிடிக்காமல் கூறுகிறாளா என்று சுவாமிநாதனால் வரையறுக்க முடியவில்லை. அதனால் தன் பெண்ணின் கூற்றிற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை.
ஒரு பக்கம் பேசிக்கொண்டு இருந்தாலும் அடிக்கடி ராமை பார்த்து முறைக்கவும் தயங்கவில்லை வைதேகி. ராமிற்கு அவளின் முறைப்பில் கோபம் வந்தாலும். இது தானும் பதிலுக்கு பதில் காட்ட வேண்டிய நேரம் இல்லை என்பதால் அமைதி காத்தான்.
“எவ்வளவு தைரியம் எல்லாரும் இருக்கும்போது என்னை பார்த்து முறைக்கிறாள். யாராவது பார்த்தால் என்னாவது”, என்று ராம் நினைக்க. அவன் நினைப்பிற்கு தகுந்த மாதிரி ரமாவும் மாலதியும் இவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மிகுந்த சிரமப்பட்டு முகத்தை சீராக்கியவன். இன்னும் நம்மை பார்த்து அவள் முறைக்க கூடாதே என்றிருக்க. அவளின் கவனம் அவனின் அதிர்ஷ்டமாக சுந்தரேசனிடம் சென்றிருந்தது.
சுந்தரேசன் பேசினார். “நீ சொல்றது ஒரு வகையில சரின்னாலும். ராமும் அவன் தம்பி தங்கச்சிய விட்டுட்டு வரமுடியாதேம்மா. அவன் தான் மூத்த பையன் அவனை நம்பி தான் ரெண்டும் இருக்குதுங்க. நீ இப்படி பேசினா எப்படி. என்ன பண்ணலாம் சொல்லு”,
“எனக்கு தெரியலை பெரியப்பா. நீங்க சொல்லுங்க அப்பாவை என்னால விடமுடியாது. அவ்வளவு தான்”, என்றாள் உண்மையாக. அவளின் அன்னை அவரின் கடைசி தினங்களில் அதிகமாக கவலைப்பட்டது அவளின் தந்தையை பற்றி தான். “நான் கடைசி வரைக்கும் பார்த்துக்கொள்வேன், அவரை விட்டுவிட மாட்டேன்”, என்று அன்னையிடமும் உறுதி அளித்திருந்தாள். அதன் பிறகே அவளின் அன்னை நிம்மதியாக கண்ணை மூடினார். அது வேறு அவளின் நினைவில் நின்றது.
“என்னமா பண்றது.”, என்று இழுத்தவர். “என்ன ராம் நீயே சொல்லு. உன் வாழ்க்கை இது”, என்றார்.
சட்டென்று முடிவெடுத்த ராம். “எப்பவும் போல அவ இங்க இருந்தே காலேஜ் போகட்டும் மாமா. கொஞ்ச நாள் கழிச்சு மாமாவுக்கு நல்லா உடம்பு தேறுனதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்”, என்றான் பிரச்சனைக்கு தீர்வாக.
“இதெல்லாம் உடனே முடிவெடுக்கற விஷயம் இல்லை ராம். அவசரப்படாத”, என்றார் சுந்தரேசன். அதையே ஆமோத்திதார் லீலாவதியும். பரவாயில்லை லக்ஷ்மி பாட்டி இல்லை. அவர் இருந்தால் இந்த யோசனைக்கெல்லாம் ஒத்துக்கொள்ளவே மாட்டார். “திருமணமான பிறகு புருஷனும் பெஞ்சாதியும் தனித்திருப்பதா”, என்பார்.
“எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை ராம். நான் தனியா இருந்துக்குவேன். எனக்காக நீங்க பிரிஞ்சு இருக்கறதெல்லாம் வேண்டாம்”, என்றார் சுவாமிநாதன் அவசரமாக.
“யார் மாமா பிரிஞ்சு இருக்கறேன் னு எல்லாம் சொல்றாங்க. அதெல்லாம் இல்லை. நான் ரெண்டு நாள் வர்றேன். அவ ரெண்டு நாள் வரட்டும். இப்படி வர போக இருக்கலாம் மாமா, சரியாகிடும்”, என்றான்.
அவன் சொல்லும் யோசனை சரிவருமா என்று எல்லோருக்கும் சந்தேகமாக இருந்தது. ஆனால் இப்போதைக்கு அதை விட்டால் வேறு வழி கிடையாது என்பதால் எல்லாரும் அமைதி காக்க. திருமணம் முடியட்டும் எப்படியாவது அவளை அனுப்பி வைத்து விடலாம் என்று சுவாமிநாதன் மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
அவரின் யோசனையை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல என்று அவருக்கு தெரியவில்லை. வைதேகியின் பிடிவாதத்தின் அளவு அவருக்கே தெரியவில்லை.
அன்று அவர்கள் போன பிறகு வைதேகி தனது தந்தையுடன் மீண்டும் விவாதத்தில் ஈடுபட்டாள். “என்னப்பா நீங்க வீட்டோட மாப்பிள்ளையை பார்கிறேன்னு சொல்லிட்டு இப்படி என்னை அவங்க வீட்டுக்கு போய் இருக்கனும்ன்ற மாதிரி பேசறீங்க”, என்றாள்.
“அசல் ஆள்னா அப்படிதாம்மா சொல்லிட்டு இருந்தேன். இப்போ ராமா இருக்க போகவும் எப்படி அப்படி சொல்றது. அவன் தம்பி தங்கச்சி இருக்காங்க இல்லை எப்படி அவங்களை விட்டுட்டு வருவான். வேற ஆள்னா பார்த்துக்குவாங்களா இல்லையான்னு தோணும். ஆனா ராம் என்னை எங்க இருந்தாலும் பார்த்துக்குவான்மா”, என்றார்.
வைதேகிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் ராமின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது.
“யாரையும் இந்த காலத்துல அப்படி நம்ப முடியாதுப்பா”, என்றாள்.
“அப்படி சொல்லாதம்மா ராமை தாராளமா நம்பலாம். இல்லைனா அவனை நம்பி என் பொண்ணையே கல்யாணம் பண்ணி வைப்பனா.”, என்றார் கர்வத்தோடு.
அவனை என்ன இவ்வளவு பிடித்திருக்கிறது இவருக்கு என்று இன்னும் கோபம் கோபமாக வந்தது ராமின் மீது வைதேகிக்கு.
“அப்பா மறுபடியும் இந்த கல்யாணத்தை பத்தி யோசனை பண்ண மாட்டீங்களா”, என்றாள் கெஞ்சலாக.
அவரும் கோபப்படாமல் பொறுமையாக பதில் சொன்னார். “வைதேகி ராம் நல்ல பையன். படிப்பு அதிகம் இல்லைன்ற குறையை தவிர அவன்கிட்ட வேற ஒண்ணும் இல்லை. நல்ல பையன் பார்க்கவும் நல்லா இருக்கான். சொத்துன்னு பெருசா இல்லைனாலும் நிறைய சம்பாறிக்கறான். கூடிய விரைவுல சொத்து எப்படியும் பெருகிடும். எனக்கு நம்பிக்கை இருக்குமா. அப்படியே ஒரு வேளை நூத்துல ஒரு பங்கா என் கணக்கு தப்பா போச்சினாலும். நம்ம சொத்து முழுசும் உனக்கு தான். அதுவே உனக்கு மட்டுமில்லை உன் பசங்களுக்கு ஏன் அவங்க பசங்களுக்கு கூட காணும்”, என்றார்.
“அப்பா எனக்கு பிடிக்கலையேப்பா”, என்றாள் பாவமாக.
“இப்போவே எப்படிம்மா தெரியும். உனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு. ராமையே உனக்கு பிடிக்கலைன்னா வேற எந்த பையனை உனக்கு பிடிக்கும் சொல்லு”, என்றார் மீண்டும் கர்வத்தோடு
அதை பார்த்த வைதேகிக்கு ராமின் மேல் பொறாமை வந்தது. தந்தையிடம் அதிகம் பேசியிராத வைதேகி. “என்னை விட உங்களுக்கு அவரை தான் ரொம்ப பிடிக்குதுப்பா”, என்றாள் ஆதங்கத்தோடு.
“என்னமா இப்படி சொல்லிட்ட. உங்கம்மா இல்லாத இந்த உலகத்துல நான் இருக்கறதே உனக்காக தானேம்மா”, என்றார் தழுதழுத்த குரலில்.
உடம்பு சரியில்லாத அவரை மேலும் சிரமப்படுத்த விரும்பாமல் அமைதியாக எழுந்து சென்று விட்டாள்.
தன் மகள் பதிலே பேசாமல் சென்றது அவரின் மனதுக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. தான் செய்வது அவளின் நன்மைக்கு தான் என்று ஒரு நாள் கட்டாயம் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை சுவாமிநாதனுக்கு இருந்தது.
இங்கே வீட்டிற்கு வந்ததும் ராமை மாலதி பிடித்துக்கொண்டாள். “அவ்வளவு வசதியா இருக்கறவங்க நம்ம வீட்டுக்கு வந்து எப்படி அண்ணா இருப்பாங்க”,
“ஏன்மா நம்ம வீட்டுக்கு என்ன குறைச்சல்”,
“உனக்கு கண்ணே தெரியாதா. நம்ம வீடு எவ்வளவு சாதாரணமா இருக்குது. நம்ம வீடு ஒட்டு வீடு. அவங்க வீடு பங்களா. எப்படி அவ்வளவு வசதியா இருக்கறவங்க நம்ம வீட்ல வந்து அட்ஜஸ்ட் பண்ணி இருப்பாங்க”,
“கல்யாணம் பண்ணினா இருந்து தானே ஆகணும்”,
“அவங்க இருக்க மாட்டாங்க”, என்றாள் உறுதியாக.
“எப்படி மாலதி சொல்ற”,
“எனக்கு தோணுது அண்ணா. எங்க கூட பேசவே அவ்வளவு யோசிக்கறாங்க. அவங்க எப்படி நம்ம கூட வந்து இருப்பாங்க. இதுல இப்போவே அவங்க அப்பாவை விட்டிட்டு இருக்க மாட்டேன்னு சொல்றாங்க. எனக்கு பயமாயிருக்கு அண்ணா. கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க அங்க இருப்பாங்க நீ இங்க இருப்பன்னா எதுக்கு அண்ணா கல்யாணம்.”, என்றாள் தன் மனதை மறையாது.
அவளின் கேள்வி மனதை சுட்டது. அவளின் கேள்வி நூறு சதவிதம் நிஜத்தை உரைத்தது.
அடுத்த கேள்வி உடனேயே தொடுத்தாள். “உனக்கு அவங்களை பிடிச்சிருக்கா அண்ணா”,
இந்த கேள்வியை ராம் எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் சொல்வது என்று ஒரு நிமிடம் தடுமாறியவன். “கல்யாண நாள், மண்டபம் எல்லாம் சொல்லியாச்சு. இப்போ இந்த கேள்வி அவசியமா”, என்றான்.
“என்ன அண்ணா இப்படி சொல்ற. உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா”,
மனதில் வைதேகியை பற்றி இருந்த பயத்தை ஒதுக்கி, “பிடிச்சு தான்மா இருக்கு”, என்றான் மாலதிக்காக.
அந்த பதிலில் மாலதியின் மனம் சமாதானம் ஆகவில்லை என்றாலும் அதிகமாக துருவவில்லை.
“அவங்களுக்கு’, என்றாள்.
“அது அவளை தானம்மா கேட்கனும்”,
“அவங்களை நீ ஏன் கேட்கலை”, என்றாள் பதிலுக்கு.
“நானா நான் எப்படி கேட்பேன். அவங்க வீட்ல தானே கேட்கனும்”,
“என்ன அண்ணா இப்படி பேசற. நீயும் ஒரு வார்த்தை என்னை பிடிச்சிருக்கான்னு அவங்க கிட்ட கேட்கவேண்டாமா.”,
“அவ தான் தெளிவா என்னை பிடிக்கலைன்னு சொல்றாளே”, என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான். வெளியில் சொல்லவில்லை
“இப்போ எதுக்கு நீ இவ்வளவு கேள்வி கேட்கற”,
“எனக்கு என்னமோ அவங்க உன்னை முறைச்சு முறைச்சு பார்த்த மாதிரி இருந்தது”,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீ சரியா கவனிச்சு இருக்க மாட்ட “,
“நான் மட்டும் இல்லை அண்ணா. ரமாவும் இதுவே தான் சொன்னா”,
“நீ மட்டும் இல்லாம அவ வேற எங்களை ஆராய்ச்சி பண்ணி இருக்காளா. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எல்லாம் நீங்களா நினைக்கறது தான்”,
“அண்ணா இந்த கல்யாணம் உங்க ரெண்டு பேர் விருப்பத்தோட தானே நடக்குது”, என்றாள் சந்தேகமாக.
“என்னாச்சு உனக்கு இப்படி துருவி துருவி கேள்வி கேட்கற”, என்று பேச்சை மாற்றினான்.
“உங்க ரெண்டு பேர் முகத்துலையும் ஏதோ கடமை உணர்ச்சி தான் இருக்குற மாதிரி தோணுது. ஒரு சந்தோஷம். ஆர்வம். எதுவும் தெரியலை. அதான்”, என்றாள்.
மாலதியின் புத்தி சாதுர்யம் ராமிற்கு வியப்பை அளித்தது. தன் தங்கை எப்படி மனிதர்களை எடை போடுகிறாள். சிறிது நேரத்திலேயே தங்கள் இருவரின் மனநிலையையும் சரியாக கணித்துவிட்டாள் என்று இருந்தது
“நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. சும்மா கண்டதையும் நினைச்சு மனசை குழப்பாத”, என்று அவளை சமாளித்தான்.
அவள் மீண்டும் ஏதோ பேச வர அதை தவிர்த்து வேறு வேலை இருப்பது போல அகன்றான்.
மாலதி கேட்ட ஒரு கேள்வி ராமின் மனதை கூறு போட்டது. “இருவரும் தனித்தனியாக இருக்க எதற்கு கல்யாணம்”, என்று கேட்டாள். மிகவும் சரியாக தான் கேட்டிருக்கிறாள் என்று அவன் மனம் கூறியது.
முதன் முறையாக இந்த திருமணத்தை குறித்து பயம் வந்தது. தான் செய்வது சரியா தவறா என்று யோசிக்க ஆரம்பித்தான். ஆனால் இதை விட்டால் வேறு வழியில்லையே என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான்.
“அவள் தான் உன்னை பிடிக்கவில்லை திருமணத்திற்கு என்று தெளிவாக கூறி விட்டாளே. பின்பும் நீ அவளிடம் என்ன எதிர்பார்கிறாயடா”, என்று அவனின் மனசாட்சி அவனை சாடியது.
“அவள்தான் பிடிக்கவில்லை. திருமணத்தை நிறுத்து என்று கூறுகிறாள். உன்னால் முடியாது என்று மறுத்துவிட்டாய். இனி அவள் என்ன செய்தாலும் நீ பொறுத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.”, என்று அவனின் மனம் அவனுக்கு புத்திமதி வேறு கூறியது.
மேலும் இது பற்றி யோசிக்க விழைந்த மனதை அடக்கினான். “எப்படியும் நடப்பது தான் நடக்க போகிறது. வைதேகி எப்படி இருந்தாலும் நீ அவளை அனுசரித்து தான் வாழவேண்டும். வேறு வழியில்லை. இப்போதே ஏன் அதற்கு கவலைப்படுகிறாய்”, என்று தன் மனதை ஒரு நிலை படுத்தினான்.
இருந்தாலும் மனது சஞ்சலமாகவே இருந்தது.
காலையில் திருமண உறுதியின் போது மனதை தேற்றி உற்சாகமாக இருந்தவன் மனது இப்போது உற்சாகம் வடிந்து இருந்தது.
தன்னை நோக்கி நிறைய வேலைகள், நிறைய கடமைகள் காத்திருக்கின்றன. தான் மனம் தளரக்கூடாது என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான். அவனுக்கு தெரியும் வருவதை தான் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும் என்று.
அதற்கு மேலும் அவனை யோசிக்க விடாமல் திருமண வேலைகள் அவனை அழைத்தன. ஒரே மாதம் தான் இருந்தது. சுவாமிநாதனால் எந்த வேலையும் பார்க்க முடியாது என்பதால் எல்லா வேலைகளும் ராமின் மேலேயே விழுந்தன. வேலை செய்வதில் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. இஷ்டப்பட்டே செய்வான். இருந்தாலும் இந்த திருமணம். வைதேகி. இதே அவனின் கவலை.
அவனின் கவலைக்கு சற்றும் குறையாமல் இருந்தது வைதேகியின் கவலை. ராமுடனான தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம்.
“நானே அவனை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். பிறகும் எதற்கு என்னையே திருமணம் செய்கிறான். அவனை பார்த்தால் என்னை விரும்புகிறவன் போலவும் தெரியவில்லை. பிறகு ஏன் தன்னை திருமணம் செய்கிறான்.”, என்று யோசனைகள் அவளை வட்டமிட்டன.
திருமணத்திற்கு இருந்த ஒரு மாதமும் இந்த யோசனை தான் அவளிடம்.
அங்கே ராமிற்கு நிற்க நேரமில்லை. கல்யாண வேலைகள் அவன் தலை மேல் நிற்க. உதவிக்கு கூட யாருமில்லாமல் தடுமாறினான்.
சுந்தரேசன் அவரது மனைவி லீலாவதியுடன் திருமண அழைப்பு முழுவதையும் பார்த்துக்கொண்டார். அழைக்க வேண்டியவர்கள் நிறைய இருந்ததால் அவருக்கு அந்த வேலையே சரியாக இருந்தது. அதனால் அவரை அதிகம் அவன் எந்த வேலைக்கும் தொந்தரவு செய்யவில்லை.
அவர்கள் சமூகத்தில் திருமணம் மாப்பிள்ளை வீட்டினர் தான் செய்யவேண்டும். ராமிற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்று மனம் ஒரு பக்கம் அடித்துக்கொண்டாலும். சுவாமிநாதனின் அந்தஸ்தை கணக்கில் கொண்டு பணத்தை தாராளமாகவே செலவு செய்தான்.
அவனுக்கே அவனின் செலவுகள் அதிகப்படியாக தோன்றின. அது வேறு அவனுக்கு மிகுந்த மனவுளைச்சலை கொடுத்தது. என்ன திருமணமோ என்ற விரக்தியை கொடுத்தது. ராம் மிகுந்த கணக்கு பார்ப்பான் செலவு செய்ய. அதனால் தான் இந்த எண்ணமெல்லாம்.
சுவாமிநாதன் ஏதாவது பணம் வேண்டுமா என்று பலமுறை கேட்டுவிட்டார். இல்லை தேவையில்லை என்று உறுதியாக மறுத்துவிட்டான். அவரிடம் வாங்கி செலவு செய்யவும் மனம் ஒப்பவில்லை. பணம் அவனிடம் இல்லாமல் இல்லை இருந்தாலும் செலவு செய்ய மனமில்லாமல் செலவு செய்து கொண்டிருந்தான்.
பணம் செலவாகிறதே என்ற அந்த எண்ண ஓட்டத்திலேயே இருந்தான். திருமண நிகழ்வுகளின் இனிமை அவனை தாக்கவில்லை. ஏன் வைதேகியின் ஞாபகம் கூட வரவில்லை. அவன் எண்ணமெல்லாம் பணம் செலவாவதிலேயே இருந்தது.
யாருக்கும் எதற்கும் காத்திராமல் திருமண நாளும் அருகில் வந்துவிட்டது. நாளை காஞ்சிபுரத்தில் தான் திருமணம். ஏற்பாடுகளை எந்த குறையும் இல்லாமல் ராம் சிறப்பாகவே செய்திருந்தான்.
சுவாமிநாதனும் மற்றும் சில உறவினர்களும் மணப்பெண்ணுடன் காஞ்சிபுரம் வந்து ஹோட்டலில் தங்கி கொண்டனர், அன்றே நிச்சயதார்த்தம் பின்பு இரவு வரவேற்பு மறுநாள் காலை முகூர்த்தம்.
நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற. தனது தந்தையின் கௌரவத்தை நினைவில் கொண்டு இன்முகமாகவே இருந்தாள் வைதேகி. மனதில் இந்த திருமணத்தை குறித்து பிரளயமே நடந்து கொண்டிருந்தாலும் அவளின் வளர்ப்பு அவளை எதையும் வெளியில் காட்ட விடவில்லை.
நிச்சயம் முடிந்து வேறு அலங்காரம் செய்தனர் அவளுக்கு. மணமகள் அலங்காரத்தில் ஜொலித்தாள் வைதேகி. தன் பெண்ணின் அழகை பார்த்து பெருமை கொண்டார் சுவாமிநாதன். பார்த்தவர் எல்லோருக்கும் அவளின் அழகு கண்களுக்கு பளிச்சென்று தெரிந்தது.
வைதேகி வரவேற்பின் போது பக்கத்தில் நிற்க. ராம் கூட அவளின் அழகை பார்த்து வியந்தான். இவள் இவ்வளவு அழகாக இருக்கிறாளே என்று. வந்தவர் எல்லாம் பரிசு கொடுத்து மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றனர். ஆர்கெஸ்ட்ரா வேறு ஒரு பக்கம் சத்தமாக இருந்தது.
ராமும் வைதேகியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வைதேகியும் ராமிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருவரும் ஒருவரின் அருகில் மற்றவர் நின்றாலும் பேசும் சந்தர்ப்பத்தை இருவருமே ஏற்படுத்திக் கொள்ளவில்லை. தனக்கு தெரிந்தவர்களை ராமும் வைதேகியிடம் அறிமுகப்படுத்தவில்லை. அதற்காக வைதேகியும் கவலைப்படவில்லை.
இன்னும் திருமணமே நடக்கவில்லை அதற்குள்ளாகவே வைதேகிக்கு சோர்வாக இருந்தது. தலையை வேறு வலித்தது, ஏன் மண்டையை பிளந்தது. எப்போது தான் இந்த அமளி துமளி முடியுமோ என்றிருந்தது.
அப்போது பார்த்து ஆர்கெஸ்ட்ராவில் மணமகளையும் மணமகனையும் பாட வற்புறுத்த. ராமே முடியாது என்று கொண்டிருந்தான். அவர்கள் விட்டேனா என்று மணமகளையும் கேட்க. அவள் மறுப்பது ராமிற்கு புரிந்தது. ஒரு கும்பலாக அவளின் அருகில் நின்றனர். அவர்கள் மேலும் மேலும் வைதேகியை கட்டாயப்படுத்துவது புரிந்து அவர்களிடம் இருந்து அவளை காப்பாற்றும் பொருட்டு “இல்லை நாங்க பாடலை”, என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி அவளின் அருகே சென்று நின்றான்.
அவளின் முகத்தை அப்போது தான் பார்த்தான் ராம் சற்று சோர்வாக இருப்பது போல காணப்பட்டாள். மாலதியை கூப்பிட்டு அவளுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்க சொன்னான்.
அதை வைதேகி பார்த்துக்கொண்டே தானிருந்தாள். “ஏன் இவன் கேட்டா குறைஞ்சு போயிடுவானா. இவனை எல்லாம் கல்யாணம் பண்றதே பெருசு. இதுல இவன் நம்ம கூட பேசக்கூட மாட்டானாமா. எல்லாம் நேரம்டா”, என்று நினைத்துக் கொண்டாள்.
அந்த எரிச்சலிலேயே மாலதி அவளிடம் வந்து பேசிய போது அவளிடம் பேசவே பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக. அவளின் கேள்விக்கு பதில் சொன்னாள்.
மாலதிக்கா தெரியாது அவள் வேண்டா வெறுப்பாக பேசுவது. இருந்தாலும் அவளின் அண்ணனுக்காக பொறுத்துக்கொண்டு மறுபடியும் கேட்டாள். “குடிக்க ஏதாவது கொண்டு வரட்டுமா அண்ணி”,
“எனக்கு ஒரு தலைவலி மாத்திரை கிடைச்சா பரவாயில்லை பயங்கரமா தலை வலிக்குது”, என்றாள் அலட்சியமாக.
அதை ராமும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். இந்த முறை அவள் பதில் சொல்லிய விதத்தை பார்த்து மாலதிக்கு சற்று கோபம் வந்தது. மாலதி திரும்பி அவளின் அண்ணனை பார்க்க. அவன் பொறுத்துக்கொள் என்று என்று கண்களாலேயே பேசினான். அவனுக்குமே அவள் பதில் சொன்ன விதத்தில் கோபம் தான். எவ்வளவு அக்கரையாக மாலதி கேட்கிறாள். இவள் என்ன இப்படி அலட்சியமாக பதில் சொல்கிறாள் என்றிருந்தது.
மாலதி அவளை பொறுத்துக்கொண்டு அவசரமாக மனோகரை அனுப்பி ஒரு மாத்திரை வாங்க சொல்லி வந்து கொடுத்தாள்.
அதை சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பிறகே தலைவலியின் ஆதிக்கம் குறைய கண்களை சுற்றி முற்றி ஓடவிட்டாள் வைதேகி. அதற்குள் அவளையும் ராமையும் சில பல சடங்குகளுக்காக அழைத்து சென்றனர். அதை முடித்து வந்தால் வைதேகியால் சாப்பிடவே முடியவில்லை. இலையில் வைத்த அத்தனையும் வீணாக்கி எழுந்தாள்.
ராமிற்கு அதை பார்த்தவுடன் பணக்கார திமிர் சாப்பாட்டை எப்படி வீணாக்குகிறார்கள் என்று தோன்றியது. வைதேகியை பற்றி எல்லாம் எதிர்மறை எண்ணமாகவே ராம் நினைக்கும்படி எல்லாம் நடந்தது.
இயல்பில் வைதேகி மிகவும் நல்ல பெண். இப்போது தான் திருமணம் வேண்டாம் என்று கூறியும் ராம் அதை நிறுத்தாததால் அவள் அப்படி ஏறுமாறாக நடந்து கொண்டிருந்தாள்.
அன்றைய இரவு அதிக தூக்கமில்லாமல் ராமிற்கும் வைதேகிக்கும் கடந்தது. நாளையில் இருந்து தங்களின் வாழ்க்கை முற்றிலும் மாறப்போவதை இருவரும் உணர்ந்தே இருந்தார்கள்.
வைதேகிக்கு ராமின் மீது திருமணத்தை நிறுத்தாத கோபம் இருக்க. ராமிற்கு வைதேகி தங்களிடம் தனது பணக்கார திமிரை காட்டுகிறாளோ என்று இருந்தது.
இருவரும் மற்றவருடன் சேர்ந்து எப்படி வாழப்போகிறோம் என்பதிலேயே அந்த இரவை கழித்தனர்.
வைதேகிக்கு தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து நிறைய பயம் வந்தது. இப்படியே எங்காவது ஓடிப்போயிடலாமா என்று இருந்தது.
ஆனால் எங்கு போவது. போவதற்கு தனக்கு இடம் ஏது. என்பதை விட வாழ்க்கையில் கஷ்டப்படுவதை பற்றி அவளால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. அதற்கு பயந்தே தன் தந்தையின் சொல் கேட்டு நடந்தாள். நாளை மணவறையில் ராமின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் கட்டப்போகும் மங்கள நாணையும் ஏற்க மனதை தயார் படுத்திக்கொண்டு இருந்தாள்.