அத்தியாயம் பதினைந்து:

 வைதேகியின் கையை பிடித்துக்கொண்டிருந்தவன் விடவேயில்லை.

எப்படியாவது தான் செய்த மாபெரும் தப்பை நியாப்படுத்தி விடவேண்டும் என்று தணியாத ஆர்வம் அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்தது.

நடந்து முடிந்த நிகழ்வு ஆரம்பத்தில் ஒரு பரவச நிலையை கொடுத்தாலும் இப்போது பெரும் குற்றமாக தெரிந்தது.

அதிலிருந்து விடுபடுவதற்கான வழி  வைதேகி சமாதானமாகி தன்னுடன் இயல்பாக நடந்து கொள்வதே என்று நினைத்தான். அவளை எப்படியாவது சமாதானப்படுத்தி விட வேண்டும் என்று நினைத்தான். 

அவளின் கைகளை பிடித்திருந்தவன் மெதுவாக அதை தடவி விட்டுக்கொண்டே அவளிடம் பேசத்துவங்கினான்.

“இப்போ இதை கேட்கறது சரி கிடையாது. இருந்தாலும் எனக்கு கேட்கத் தோணுது. உனக்கு ஏன் என்னை பிடிக்கலை. நான் படிக்கலைனா. படிக்கலைன்ற குறையை தவிர வேற குறை என்கிட்ட இருக்கிற மாதிரி தோணலை.”,

“ஏன் படிச்சு ஏதாவது கார்பரேட் கம்பனில வேலை பார்க்கிற மாதிரி தான் நீ மாப்பிள்ளையை எதிர்பார்த்தியா. அதனால தான் என்னை பிடிக்கலையா”, என்றான் பொறுமையாக.

அவன் சொன்ன விதமே வைதேகியை யோசிக்க வைத்தது. அப்படி எதுவும் தான் நினைத்தோமா என்று.

“அப்படி ஒன்றும் நினைக்கவில்லையே”,

“அப்படி எதுவும் நீ நினைக்கலையா”, என்றான் அவளின் மனதை படித்தவனாக.

“இல்லை”, என்று அவனை பார்த்தவாறே தலையாட்டினாள். அவளின் கையை அவன் விடவேயில்லை. மிருதுவாக அதை வருடிக்கொடுத்துக் கொண்டே இருந்தான்.

“அப்புறம் ஏன்? என்னை பிடிக்கலை. என்ன காரணம்?”,

அவளுக்கு நிஜமாகவே இதற்கு பதில் தெரியவில்லை. தெரியாத போது என்ன வென்று சொல்லுவாள்.

அமைதியாகவே இருந்தாள்.

“ஒரு தரமாவது என்னை பிடிச்சிருக்குன்னு நினைச்சு பாரேன்”, என்றான் சற்று கெஞ்சுதலாக.

அசையாமல் அமர்ந்திருந்தாள். பதிலே பேசவில்லை. அவ்வளவு வாய் பேசும் வைதேகிக்கு இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரியவேயில்லை.

முதல் முறையாக, “ஆமாம் இவனை ஏன் எனக்கு பிடிக்கவில்லை”, என்று எண்ண ஆரம்பித்தாள். அப்படியே பார்வையாலேயே அவனின் தோற்றத்தை அளந்தாள். குறை சொல்லும்படி ஒன்றும் இல்லை. நல்ல உயரமாக இருந்தான். முகமும் லட்சனமாகத் தான் இருந்தது. அசட்டு சிரிப்புகள் இல்லாத கம்பீரமான ஆண்மகனே.

குணமும் இவன் இந்த குற்றத்தை இழைக்காதவரை தவறென்று சொல்ல முடியாது. உண்மையை அவள் மனம் ஒத்துக்கொள்ள தயங்கவில்லை. 

தெரியவில்லையே. அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லையே. அவளுக்கு யோசிக்க யோசிக்க தலை வலிக்கும் போல இருந்தது.  அவனை ஒரு இயலாமையோடு பார்த்தாள்.

“எனக்கு தலை வலிக்குது”, என்றாள்.

அவளிடமிருந்து இப்போதைக்கு பதில் வராது அட்லீஸ்ட் அவள் யோசிக்க ஆரம்பித்தாலாவது பரவாயில்லை என்று எண்ணியவன். “சரி தூங்கு”, என்றான்.

அப்போதும் அவனுக்கு கையை விட மனமில்லை. அப்போது தான் தன் கை அவனின் கைகளுக்குள் பாந்தமாய் அடங்கியிருப்பதை பார்த்தாள் வைதேகி.

அவள் கையை இழுக்க போக. அவளின் கையை மேலே தூக்கி ஒரு மென்மையான முத்தத்தை அதில் பதித்த பிறகே விட்டான்.

“நான் உன்னை எந்த வகையிலாவது வருத்தப்பட வச்சிருந்தா சாரி”, என்றான் மறுபடியும்.

கேட்ட வைதேகிக்கு கண்களில் நீர் தழும்பியது.

“ஏன் அப்படி செஞ்சீங்க”, என்றாள் உருக்கமாக.

அவள் கேள்வி கேட்ட விதத்திற்கு தன்னையே வெறுத்துக் கொண்டான். அவளை அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த மனதை மிகவும் முயன்று அடக்கினான். 

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அவளின் மனநிலையை மாற்ற கொஞ்சம் விளையாட்டுத்தனமாக பேச்சை ஆரம்பித்தான். 

“நீ பேசி பேசி என்னை ரொம்ப கோபப்பட வைச்சே. என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை. அதனால இப்படி ஆகிடுச்சு. எல்லாம் நீ என்னை உசுப்பேத்துனதுனால தான். அப்படின்னு எல்லாம் நான் சொல்லவே மாட்டேன்.”,

“நீ ரொம்ப அழகா இருக்கியா. எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தனா. இன்னைக்கு கிடைச்சது. விடமுடியலை. உனக்கு எப்படியோ தெரியாது. உன்னை ஒவ்வொரு நிமிஷமும் என் மனைவியா தான் நினைச்சேன். என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியலை. அதுதான் நிஜம்.”, என்று விளையாட்டுத்தனமாக ஆரம்பித்து அவனும் உருக்கமாக முடித்தான்.

அவன் பேசிய விதம் வைதேகியை மிகவும் கவர்ந்தது மெல்லிய புன்னகை கூட முகத்தில் தோன்றியது.

“தலை வலிக்குதுன்ன படுத்துக்கோ”,

சற்று தேறிக்கொண்ட மனதோடே அவள் படுத்தாள். அவள் எப்போது படுப்பாள் என்று காத்திருந்தவன் போல. “நான் வேணும்னா தலையை அழுத்தி விடவா. தலைவலிக்கு நல்லா இருக்கும்”,

“இல்லை வேணாம். வேணாம்.”, என்றாள் அவசரமாக.

“இல்லை! தூங்கு நான் அழுத்தி விடறேன்.”, என்றான் மறுபடியும், சொல்லிக்கொண்டே அவளின் பக்கத்திலும் வர. 

“இல்லைல்ல வேண்டாம்”, என்றாள் பதட்டமாக பயந்தவாறு வைதேகி.

“சரி, ஓ.கே”, என்றான். “நோ டென்ஷன்”, என்றான். அவளின் அருகில் சற்று இடைவெளி விட்டு படுத்துக்கொண்டான். 

இருவரும் உறங்க முற்பட்டனர். உறக்கம் தான் வருவேனா என்றது.

திடீரென்று எழுந்து அமர்ந்த வைதேகி மறுபடியும் அவனை சரமாரியாக அடிக்க துவங்கினாள். “செய்யறதை  எல்லாம் செஞ்சிட்டு. இப்போ என்னடா நல்லவன் மாதிரி பேசற. ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிற. நீ என்ன சொன்னாலும். என்ன செஞ்சாலும். எனக்கு உன்னை பிடிக்கலை. பிடிக்கவும் பிடிக்காது.”, ஆவேசமாக அவனை அடித்தாள். அவள் அடிக்கும் வரை அடியை வாங்கியவன் அவள் சற்று தளர்ந்ததும்.

“வலிக்குது விடுடி. சும்மா அடிச்சிட்டே இருக்காத வைதேகி ஏதாவது ஆகிடப்போகுது”, என்றான். 

பின்பு அவளின் கையை பிடித்தவன். “ஏண்டி? ஏண்டி? உனக்கு என்னை பிடிக்காது. பிடிக்கணும். என்னை பிடிக்கணும். என்னை மட்டும் தான் பிடிக்கணும்.”, என்றான் அவனும் ஆவேசமாக.

“நான் தப்பு பண்ணிட்டேனேன்னு தான். பொறுமையா கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றேன். அப்புறமும் உனக்கு என்னை பிடிக்கலைனா என்ன அர்த்தம். உனக்கு பிடிச்சா என்ன?. பிடிக்காட்டி என்ன?. ஒழுங்கா என் பொண்டாட்டியா என் கூட குடும்பம் நடத்தற வழியை பாரு”,

“உன்னை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காத. அது மட்டும் நடக்கவே நடக்காது”,

“சும்மா என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்கறதையே வேலையா வெச்சிட்டு இருக்காதா. பேசாம படு.”, என்று சத்தமாக அதட்டலாக சொன்னான். சொன்னான் என்பதை விட எரிந்து விழுந்தான். 

அது கொஞ்சம் வேலை செய்தது. அவனை விழிவிரித்து பார்த்தவள். கொஞ்சம் அமைதியானாள்.

“எத்தனை தடவை தான் இந்த முட்டைகண்ணை வெச்சு என்னை பார்ப்ப. படுடி இல்லை. நான் உன்னை கட்டிபிடிச்சிட்டு தான் தூங்குவேன். எப்படி வசதி”,  என்றான்.

அது நன்றாக அவளிடத்தில் வேலை செய்தது. கப் சிப் பென்று படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்.

அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் பேசிவிட்டான் தான். இருந்தாலும் அவன் செய்த தப்பு அவன் மனதை தின்றது.

தப்பு செய்தாகிவிட்டது இனி எப்படி அது சரியாகும் என்ற எண்ணத்தோடு உறங்காமலேயே படுத்திருந்தான் ராம். ஒரு மனிதனின் செய்கைகள் அவனை எவ்வளவு தூரத்திற்கு கீழே இறக்கி விடுகின்றன என்பதற்கு உதாரணமாகிப் போனதாக அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டு இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமலேயே படுத்திருந்தான்.

இரவு முழுவதும் உறக்கம் இல்லை. செய்த தப்பின் வீரியம் இப்போது தான் அவனை முழுமையாக தாக்கியது.

ஒரு பக்கம் மனது. “அவள் உன் மனைவி. நீ செய்தது தப்பில்லை. அவளாக உன்னிடம் வருவது நடக்கிற காரியமல்ல. நீ செய்தது சரி”, என்றது.

இன்னொரு பக்கம் மனது. “மனைவியே ஆனாலும் நீ செய்தது தவறு”, என்றது. “அவளும் உன் தங்கையை போல சிறு பெண் தானே. என்ன அவளை விட ஒரு இரண்டு வருடங்கள் மூத்தவள். அவள் வளர்ந்த விதம் அவளை உன்னிடம் அப்படி நடந்துகொள்ள செய்தது. இத்தனை நாள் பொறுமையாய் இருந்த உனக்கு இன்று என்ன வந்தது?”,. என்று அவனை கேள்வி கேட்டது.

இதையெல்லாம் எண்ணிக்கொண்டே இருந்தான். மனதில் ஏதோ பாரமாக அழுத்தியது.   தப்பு செய்தவனை தாக்கும் ஒரு பயம் தாக்கியது.

வைதேகி கூட நடந்தது அவளை தாக்கியிருந்தாலும். அதையும் மீறி உறக்கத்தில் இருந்தாள். இரவு முழுவது அவளை பார்த்தபடியே உறங்காமல் இருந்தான் ராம்.      

செய்த தப்பு பூரணமாக அவனை தாக்க. அதன் தாக்கம் அவனுக்கு ஒரு மன பயத்தை கொடுக்க. அது காய்ச்சலை கொடுத்தது.

ஒரே இரவில் கடும் காய்ச்சலுக்கு ஆளானான் ராம். காலையில் வைதேகி கண்விழித்த போது ராம் அனத்திக்கொண்டு இருந்தான்.

வைதேகி என்ன சத்தம் என்பது போல பார்த்தாள். அவன் தலை மட்டும் தான் தெரிந்தது. உடம்பு முழுவதும் போர்த்தியிருந்தான். கண்களை மூடியிருந்தான். அவனிடம் இருந்து சிறு முனகல் வெளிப்பட்டு கொண்டு இருந்தது.

வைதேகி அவனின் அருகில் மெதுவாக சென்று பார்த்தாள். சத்தம் அவனிடம் இருந்து தான்.

மெதுவாக, “ராம்”, என்றாள். அவளின் சத்தம் அவளுக்கே கேட்கவில்லை. பின்பு சற்று சத்தமாக, “ராம்”, என்றாள்.

மெதுவாக அவன் கண்களை திறக்க முற்பட்டான். முடியவில்லை. ஏதோ தலையை பாரமாக அழுத்தியது.

“தான் அடித்ததில் தான் அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ”, என்று பையிதியக்காரத்தனமாக எண்ணங்களை ஓட்டினாள்வைதேகி . அவன் கூட சொன்னானே. ஏதாவது ஆகிடப்போகுது என்று. தன்னால் தான் எதாவது ஆகிவிட்டதோ என்று பயந்து போனாள். அதில் அவன் அவளுக்கு செய்த கொடுமையே அவளுக்கு மறந்து போனது.

“ராம்! ராம்! என்ன பண்ணுது”, என்றாள் அவனை சற்று உலுக்கி. போர்வையின் மேல் கையை  வைத்திருந்ததால் உடம்பின் சூடு தெரியவில்லை. அவனிடம் இருந்து அனத்தல் மட்டுமே பதிலாக கிடைத்தது.

மெதுவாக அவனின் நெற்றியை தொட்டுப் பார்த்தாள். அனலாக கொதித்தது. வைத்த கையை எடுத்துக்கொண்டாள். அவ்வளவு சூடை உணர்ந்தாள்.

மெதுவாக கீழே இறங்கி வந்தாள். யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை. ஒரு காபியை அவனுக்கு கலந்து. கூடவே ஒரு மாத்திரையையும் எடுத்து போனாள்.

“ராம் இதை சாப்பிட்டிட்டு படுங்க”, என்று அவனை எழுப்பினாள். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. மிகுந்த சிரமமாக உணர்ந்தான். அவனுக்கே புரியவில்லை ஒரே இரவில் தனக்கு என்ன ஆகிவிட்டது என்று.

எழுந்து அமர்ந்தவனிடம். காபியை கொடுத்தாள். அதை பிடிக்கவே அவனின் கைகள் நடுங்கியது. பெட்ஷீட்டில் எல்லாம் சிந்தியது. அவளே திரும்ப வாங்கிக்கொண்டாள்.

தான் அவனுக்கு புகட்டுவதா என்று ஒரு மாதிரியாக தான் இருந்தது. இருந்தாலும் ஆபத்துக்கு பாவமில்லை என்று அவளே அவனுக்கு புகட்டினாள்.

காபியை குடித்தவுடன் சற்று தெம்பாக உணர்ந்தான். எழுந்து பாத்ரூம் போனான். போனவன் எல்லாவற்றையும் வாமிட் செய்தான். தலையே சுற்றியது. ஒருவாராக அதை சுத்தம் செய்துகொண்டு வந்தான்.

அவன் வாமிட் செய்யும் சத்தம் அவளுக்கு நன்றாக கேட்டது. கவலையாக நின்றிருந்தாள் வெளியே.

அவனால் நடக்க கூட முடியவில்லை. எப்படியோ நடந்து வந்து படுத்துக் கொண்டான்.

“இந்த மாத்திரையை சாப்பிட்டிட்டு படுங்க”, என்றாள் வைதேகி.

அந்த நேரத்திலும் தன் மனைவி தன்னை கவனித்து கொள்வதை சந்தோஷமாக உணர்ந்தான்.

அவள் சொன்ன மாதிரி ஒரு மாத்திரையை போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டான்.

மாலதியும் சுவாமிநாதனும் எழுந்தவுடனே அவர்களிடம், “அவருக்கு காய்ச்சல்”, என்று சொன்னாள்.

அவர்களும் வந்து பார்த்தனர். ஹை டெம்பரேச்சர் இருந்தது. அவர்கள் வந்து பார்த்தது கூட ராமிற்கு தெரியவில்லை.

“பத்துமணிக்கு பக்கதுல இருக்கிற ஹாஸ்பிடல் போயிடலாம்மா”,  என்றார் சுவாமிநாதன்.

“எப்படிப்பா. நடக்கவே மாட்டேங்கறாரே”,

“எப்படியாவது கூட்டிட்டு போய் தானேம்மா ஆகணும்”, என்றார்.

அதற்குள் அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடுப்போம் என்று நினைத்தவர்கள். அவனை கஷ்டப்பட்டு எழுப்பி அமரவைத்து இட்லியை கொடுத்தனர்.

ஒரு இட்லி எப்படியோ சாப்பிட்டான்.

சாப்பிட்டதும் அதுவும் வாமிட் வர. எப்படியோ பாத்ரூமிற்கு போய் விட்டான்.

சுவாமிநாதன் மிகவும் பயந்து விட்டார்.

“என்னம்மா நேத்து சாயந்திரம் கூட நல்லா தானேம்மா இருந்தான். உனக்கு தானேம்மா காய்ச்சல் வர்ற மாதிரி இருந்தது. அப்படியே மாறிடுச்சு.”, என்றார்.

அப்போது தான் நடந்த நிகழ்வுகளே வைதேகிக்கு ஞாபகம் வந்தது. “இவன் நடந்துகொண்ட விதத்திற்கு நமக்கு தானே காய்ச்சல் வர வேண்டும். இவனுக்கு ஏன் வந்தது”, என்று அவளின் மனது கேள்வி எழுப்பியது.   

ஒரு வழியாக அவனை ஹாஸ்பிடல் கூட்டி போயினர் வைதேகியும் மாலதியும். சுவாமிநாதனும் உடன் இருந்தார்.

அங்கே அவனின் நிலையை பார்த்த மருத்துவர் என்ன நினைத்தாறோ. “அட்மிட் பண்ணிடுங்க. ரொம்ப காய்ச்சலா இருக்கு. எதுக்கும் ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துடுவோம்”, என்றுவிட்டார்.

அட்மிசன் என்றதும் உடனிருந்த மூவருமே பயந்து விட்டனர். மாலதி மனோகருக்கு சொல்ல அவனும் அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் அங்கு இருந்தான்.

ராம் ஒரு அரை மயக்க நிலைக்கு சென்றிருந்தான். அவன் வாய் “சாரி, சாரி”, என்று பிதற்றிக்கொண்டு இருந்தது.

அதை கேட்ட வைதேகி இன்னும் பயந்து விட்டாள். காய்ச்சலில் வேறு என்ன என்ன உளறி வைக்க போகிறானோ. மற்றவர்கள் கேட்டால் என்ன ஆகுமோ என்று.

“அண்ணி . ஏதோ அண்ணா சாரி சாரி ன்னு சொல்ற மாதிரி இல்லை”, என்றாள் மாலதியும்.

“ஐயோ”, என்று இருந்தது வைதேகிக்கு. மேலே என்ன உளறி வைப்பானோ என்று டென்ஷனாக இருந்தாள் வைதேகி.

“காய்ச்சல்ல ஏதாவது அனத்துவாங்களா இருக்கும்”, என்றான் மனோகர்.

ட்ரிப்சில் தான் மருந்து ஏற்றினர்.

அன்று முழுவதுமே அதே நிலையில் இருந்தான் ராம். அடிக்கடி சாரி சாரி என்ற வார்த்தைகள் மட்டும் வந்து கொண்டிருந்தன.

“ஹப்பா! கூடவே வைதேகி. என்று என் பெயரை சொல்லாமல் போனானே”, என்று வைதேகிக்கு சற்று நிம்மதியாக இருந்தாலும். எந்த நிமிடத்தில் சொல்வானோ என்று பயமாக இருந்தது.

அதனாலேயே அன்று இரவு வைதேகியே ராமுடன் தங்கிக்கொண்டாள். அவளுக்கு அவ்வளவாக இஷ்டமில்லாவிட்டாலும். தங்களுடைய அந்தரங்கம் வெளிச்சத்திற்கு வருவதில் அவளுக்கு அவ்வளவு உடன் பாடு இல்லை. ஒருவர் மட்டுமே தங்கலாம் அது தானா இல்லை மனோகரா என்று யோசித்தவள் அவளே தங்கலாம் என்று முடிவெடுத்துக்கொண்டாள்.

இரவு அவனின் “சாரி சாரி”, என்ற அனத்தல் அதிகமாக இருந்தது.

ட்ரிப்ஸ் மாற்ற வந்த சிஸ்டர் கூட. “என்னங்க இவர் சாரி சாரி ன்னு சொல்லிட்டே இருக்கார். மனசுல எதையோ வெச்சி குழப்பிக்கறார் போல. அதான் காய்ச்சல் குறைய மாட்டேங்குது. அவரை கொஞ்சம் சமாதனப்படுத்தும்மா”, என்றார்.

அவன் எதுக்கு குழப்பிக்கொள்கிறான் என்று தெரியாதவளா அவள்.

முதலில் அவன் எப்படி போனால் எனக்கென்ன என்று விட்டுவிடுவோமா என்று நினைத்தாள்.

“நீ அவனின் மனைவி வைதேகி. அவனுக்கு என்னவானாலும் இந்த உலகத்தில் உலகத்தின் கண்களுக்கு அதிகமாக பாதிக்கப்படும் ஜீவன் நீதான். அவன் உன் கணவன். எல்லா உறவுகளையும் விட மிக முக்கியமான உறவு உனக்கு. அதையெல்லாம் விட நடந்தது என்னவென்று அவன் உளறி வைத்தால் உனக்கு எவ்வளவு அசிங்கம். அவனை கவனி.”, என்றது மனம்.     

அவனருகில் சென்றவள். அவளுக்கு மனமில்லாமலேயே யாரும் அருகில் இல்லாத தைரியத்தில். அவனை சமாதானப்படுத்த ஆரம்பித்தாள்.

“ராம்! ராம்! கண்முழிச்சு பாருங்க. ஒண்ணுமில்லை! ஒண்ணுமில்லை!”, என்று அவனிடம் பேசினாள்.

அவன் கண்விழித்த மாதிரி தான் இருந்தது. இருந்தாலும் இல்லை.

அவனை பிடித்து உலுக்கினாள். கன்னத்தை பிடித்து தட்டினாள். “இங்க பாருங்க, இங்க பாருங்க,” என்றாள். ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு பிறகு அவன் கண்விழித்தான்.  

“சாரி எல்லாம் தேவையில்லை. அதை விட்டுடுங்க. அமைதியா இருங்க. அதையும் இதையும் நினைச்சு குழம்பாதீங்க.”, என்றாள்.   

சற்று சிரமப்பட்டு கண்விழித்தவன் யார் தன்னிடம் பேசிக்கொண்டு இருப்பது என்பது போல பார்த்தான்.

“நான் தான் வைதேகி. சும்மா எதுக்கு சாரி சாரி சொல்லிட்டு இருக்கீங்க. எல்லாம் என்ன என்ன கேட்கறாங்க.”, என்றாள் படபடவென்று.

நான் எப்போது சாரி கேட்டேன் என்று தோன்றியது ராமிற்கு. அவன் அனத்துவது அவனுக்கே எப்படி தெரியும். இவள் என்ன பேசுகிறாள் என்பது மலங்க மலங்க விழித்தான்.  

“இப்போ கொஞ்சம் பரவாயில்லையா”, என்றாள்.

தலையை தலையை ஆட்டினான்.

“சரி தூங்குங்க”, என்றாள்.

இவள் எதற்கு என்னை எழுப்பினாள். இப்போது எதற்கு தூங்கு என்கிறாள். என்று ராமிற்கு குழப்பமாக இருந்தாலும். அவள் தன்னை பார்த்துக்கொள்கிறாள் என்பதே ஒரு நிறைவை தர. அமைதியாக உறங்கினான்.

மருந்துகளின் வீரியத்தால் காய்ச்சலும் விட. அடுத்த நாள் அனத்தல் எல்லாம் இல்லை. சற்று தேறியிருந்தான்.

“வைரல் பீவர் மாதிரி தான் தெரியுது. இன்னும் ஒரு டூ த்ரீ டே ஸ்ல சரியாகிடும்”, என்றார் டாக்டர்.

உடம்பு சற்று தேறினாலும், சோர்வு இருந்தது. இயற்கையிலேயே நல்ல திடக்காத்திரமானவன் என்பதால் விரைவில் தேறிக்கொண்டான்.

மனதிற்குள் சற்று குற்ற உணர்ச்சி இருந்தாலும். அதை வைதேகியிடம் உடம்பு தேறிய பிறகு காட்டவில்லை. அவன் அனத்திக்கொண்டு இருந்தது அவனுக்கு தெரியவேயில்லை.

“என்ன பேபி? என்னை நல்லா பார்த்துக்கற போல”, என்று அவளை சீண்டினான். 

“நேத்தெல்லாம் கண்ணே தொறக்கலை. இன்னைக்கு என்ன பேச்சு பேசறான்”, என்பது போல ஒரு பார்வை பார்த்தாள் வைதேகி.

“என்ன பேபி? நான் அவ்வளவு ஹேண்ட்சம்மாவா இருக்கேன். இந்த பார்வை பார்க்குற”,

“இவனை என்ன பண்ணலாம். இவன் அடங்கவே மாட்டானா.”, என்பது போல வைதேகி பார்த்தாள். அவளின் மனதை படித்தவன்.

“ம்கூம். நான் அடங்கவே மாட்டேன்”, என்றான்.

இவ்வளவிற்கும் படுத்துக்கொண்டிருந்தான். கைகளில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது அதற்கே இந்த வாய்.

அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே மாலதியும் மனோகரும் வந்தனர். அவர்களோடே சுவாமிநாதனும் வந்தார். 

அவர்கள் வந்தவுடன் அமைதியாகிவிட்டான்.

“எப்படி அண்ணா இருக்கு”,

“இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்லைடா”,

“என்ன அண்ணா நேத்து அவ்வளவு பயமுறுத்திட்டீங்க. ஒரே உளறல் சாரி சாரின்னு. ஆமாம் எதுக்கு சாரி. யார்கிட்ட சாரி.”, என்றாள் மாலதி. 

அப்போது தான் அவன தன்னை மீறி சாரி சாரி என்று உளறியதை தெரிந்து கொண்டான். நேற்று வைதேகி தன்னை அதற்கு தான் சமாதானப்படுத்தினாள் என்றும் புரிந்து கொண்டான்.  

கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது. அவளை பார்க்க அவள் வேறுபுறம் பார்த்தாள்.

ஏதோ இந்த மட்டிலும் அவள் தன்னை விட்டுவிடவில்லையே என்று இருந்தது.

ஒரு வகையில் அவனுக்கு பெருத்த நிம்மதி. தங்களின் அந்தரங்கத்தை அவள் வெளியில் தெரியுமாறு செய்யவில்லை என்று. தான் முட்டாள் தனமாக ஏதாவது உளறி விடுவேன் என்று தான் கூடவே இருந்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். 

மாலதியும் மனோகரும் வந்தபின் வைதேகிக்கு வேலை எதுவும் இருக்கவில்லை அவர்களின் அண்ணனை அவர்களே நன்றாக கவனித்துக்கொண்டனர். இனி அவன் எதுவும் உளற மாட்டான் என்று வைதேகிக்கு நம்பிக்கை இருந்தது. அவனுக்கு தான் சற்று பரவாயில்லையே. வீட்டிற்கு போய் விடலாமா என்று கூட நினைத்தாள், அவளின் தந்தைக்கு பயந்து அமைதியாக இருந்தாள். 

இருந்தாலும் ராமின் பார்வை அவளை தொடர்ந்து கொண்டு தானிருந்தது, இவளை எந்த வகையில் சேர்ப்பது என்று யோசித்துக்கொண்டே. அவனின் பார்வை தன்னை தொடர்வதை தெரிந்தே அவளும் தொடர்ந்து கொண்டு தானிருந்தாள்.