ஆனந்ததும் எவ்வளவோ பேசி பார்த்து விட்டான், நேரில் போய் பேசியும் கூட நிர்வாகம் அதன் முடிவில் உறுதியாக இருந்தது. 

மற்ற அலுவலக ஊழியர்களுக்கும் தெரிந்தால்தான் பயம் இருக்கும், எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாமல் இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கையில் ஒளிவு மறைவையும் கடைபிடிக்கவில்லை நிர்வாகம். ஆகவே இந்த செய்தி அலுவலகத்தில் அனைவருக்குமே தெரிந்து விட்டது. இப்போது குடும்பத்தினருக்குமே தெரிந்து போனது. 

மறுப்பாக ஏதும் சொல்லாத ஆனந்த்தின் அமைதி இது உண்மைதான் என்பதை தேனுக்கு ஊர்ஜிதப் படுத்தியது. 

பைக் வாங்க அவனது அப்பாவிடம் பணம் பெறாமல் கடன் பெற்றானோ, காதணி விழாவுக்கு அதிக செலவாகி விட்டதோ என்றெல்லாம் மனதில் கணக்கிட்டு பார்த்தாள் தேன். ஆனால் இவன் அலுவலகத்திலும் கிரெடிட் கார்டு மூலமாகவும் கடன் பெற்றதாக சொல்லப் படும் தொகை மிக அதிகம். 

தன்னையே அனைவரும் கேள்வியாக பார்த்து நிற்பதில் அவமானமாகவும் அசிங்கமாகவும் உணர்ந்த ஆனந்த் கூனி குறுகிப் போய் நின்றிருந்தான். 

வேலை இல்லாமல் இருப்பதே அவமானம், இதில் குற்றம் செய்து வேலையை விட்டு நீக்கப் பட்டிருப்பது பேரவமானம் இல்லையா? 

ஆனால் இந்த அவமானம்தான் ஆரம்பம், இனிதான் இருக்கிறது என்பது போலானது அவனது நிலை. 

எதை பற்றியும் யோசிக்காமல் எப்படி இவ்வளவு கடன் என அனைவரின் முன்பே வைத்துக் கேட்டான் ராஜ்குமார். 

அங்குள்ளவர்களில் உச்சபட்ச அதிர்ச்சியில் இருந்தது தேன்தான். நடப்பதை உணர்ந்தாலும் எதற்கும் எதிர் வினையாற்றும் நிலையில் இல்லை அவள். 

மைத்துனனின் கோவ பேச்சில் இன்னும் குன்றிப் போனான் ஆனந்த். 

மகனின் நிலை பொறுக்காமல் சுந்தரிதான், “என் மகன் பொறுப்பானவன், என்ன ஏதுன்னு இப்படியா ஊரு முன்னாடி வச்சு கேட்கிறது? சேச்ச… தராதரம் இல்லாத ஆளா இருக்கியே நீ” என ராஜ்குமாரை திட்டினார். 

“உங்க தரத்தை பத்தி எடுத்து விட்டேனா இந்த சென்னையே நாறிப் போயிடும், ஒழுங்கா ஓரமா நில்லுங்க” என்றார் கலைவாணி. 

சுபர்ணாவுக்கு தன் தம்பியின் பக்கம் வலுவில்லை என தெரிந்து போனதால் எப்போதோ ஓரம் கட்டி நின்றிருந்தாள். 

மகனிடம் சென்ற வேதாச்சலம், “என்னடா ஆனந்த், எப்படி இவ்ளோ கடன் ஆச்சு. அகிலன் வாங்கின கடனைதான் ஆறு மாசம் முன்னாடியே அடைச்சாச்சே” என்றார். 

“வாய வச்சிட்டு சும்மா இருங்க, அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்காது” என பதற்றத்தோடு சொன்னார் சுந்தரி. 

“என்ன சம்பந்தம் இருக்காது, அந்த காசையெல்லாம் நீங்கதான் வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டதா?” என கேட்டார் கலைவாணி. 

“சத்தம் போடாம இரு” என மனைவியை அதட்டி அடக்கிய தங்கப்பன், “என்னாச்சுன்னு சொல்லுங்க மாப்ள” என்றார். 

“உன்தம்பி அப்படியாக்கும் இப்படியாக்கும்னு எப்ப பாரு ஒரே பீத்தல் பீத்துவ, இப்பதானே எல்லா வண்டவாளமும் தண்டவாளம் ஏறுது” என சுபர்ணாவிடம் பேசினான் அவளது கணவன். 

அகிலன் ஏதாவது பிஸ்னஸ் செய்கிறேன் என ஆரம்பித்து முதலீடாக போட்ட பணத்தையும் எடுக்காமல் நஷ்டத்தில் அந்த தொழிலை இழுத்து மூடுவது வாடிக்கைதான். எப்போதும் பண உதவி செய்யும் ஆனந்த்துக்கும் ஒரு கட்டத்தில் இவனுக்கு பணம் கொடுத்து கொண்டே இருந்தால் பொறுப்பே வராது என புரிந்து விட்டது. ஆதலால் போன வருடம் தம்பி பணம் கேட்ட போது மறுத்து விட்டான். 

அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசி வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து காபி ஷாப் தொடங்குவதற்கு முயன்றான் அகிலன். மார்க்கெட்டில் பரபரப்பான இடத்தை பேசி முடிக்க முயன்றான். பணம் எல்லாம் கொடுத்து இடம் இவனது பெயரில் பத்திரமும் ஆகி விட்டது. பின்னர்தான் அந்த இடத்தின் உரிமையாளர் வேறு யாரோ என்பது தெரிய வந்தது. பத்திரம் ஆனதே செல்லாது என்ற நிலை. 

அகிலன் ஏமாந்து விட்டான். பெரும் நஷ்டம். வீட்டிலும் சொல்லவில்லை. கடன் வாங்கிய இடத்திலும் வட்டியை சரியாக செலுத்தவில்லை.  

பணத்தை திருப்பி கொடுங்கள், இல்லையென்றால் வீட்டை என் பெயருக்கு மாற்றி கொடுங்கள் என கடன் கொடுத்தவர் நெருக்கடி செய்யவும்தான் விஷயம் ஆனத்திற்கு தெரிய வந்தது. 

தேனுக்கு பிரசவமாகி அவளது பிறந்த வீட்டில் இருந்த நேரமது. தம்பியின் மீது கோவமான கோவம்தான் என்றாலும் அதற்காக வீட்டை பறி கொடுக்க தயாராக இல்லை ஆனந்த். 

போதாத குறைக்கு, “உன் தம்பிக்கு ஏதோ நேரம் சரியில்லை, அதான் எது செஞ்சாலும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகுது. நீதான் அவனுக்கு கை கொடுத்து தூக்கி விடணும். நீ கை விட்டா மனசு வெறுத்து போயி செத்து போனாலும் போயிடுவான், அவனுக்கு ஒண்ணுன்னா அப்பறம் நானும் போயிடுவேன்” என அழுகை எனும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டார் சுந்தரி. 

“நான் என்ன செய்றது, நீதான்ப்பா எல்லாம்” என பாவப் பார்வை பார்த்தார் வேதாச்சலம்.

அலுவலகத்தில் கடன் பெற்றாலும் அத்தனை தொகையை ஆனந்தால் அடைக்க முடியாது. அவ்வளவு கடன் தரும் நண்பர்களும் யாரும் கிடையாது. 

தேனுக்கு அவளது பிறந்த வீட்டில் ஐம்பது சவரன் நகை போட்டிருந்தார்கள். ஆனந்த்தின் பெயரில் உள்ள  வங்கி லாக்கரில்தான் நகைகள் பாதுகாப்பாக வைக்க பட்டிருந்தன. 

மனைவியிடம் சொல்லாமல் அனைத்து நகைகளையும் அடமானம் வைத்து பணத்தை புரட்டினான். பற்றாக்குறைக்கு அம்மாவின் நகைகளையும் சேர்த்து அடமானம் வைத்தான். 

வீட்டு பத்திரத்தை மீட்டாகி விட்டது. அடகில் உள்ள நகைகளையும் அலுவலக கடனையும் அடைக்க வேண்டுமே. செலவுகளை சுருக்கிக் கொண்டு அடைக்க முயன்றான்தான். குழந்தை பராமரிப்பு செலவுகள், பெற்றோர் குடும்பம் நடத்த, சென்னையில் அவன் இருந்த வீட்டின் வாடகை, மனைவியும் பிள்ளையும் சென்னைக்கு வந்த பின்  குடும்பத்தை நடத்த செலவுகள் என அவனுக்கு விழிகள் பிதுங்கின. 

எதை பற்றியும் மனைவியிடம் வாய் திறக்காமல் அவனே சமாளிக்க முயன்றான். மாமனாரின் பணி ஓய்வு விழாவில் செயின் போட அவனால் முடியவில்லை. மாதம் பெருந்தொகை கடனுக்கே சென்றால் எப்படி முடியும்? பைக்கை விற்று விட்டான். 

விஷேசங்கள் வரும் போது வீட்டு பெண்கள் நகை அணிந்து கொள்வது வழக்கம்தானே? மனைவியின் ஒரு சில நகைகளை மட்டும் மீட்டுக் கொடுப்பான். விழா முடிந்து மீண்டும் லாக்கரில் வைப்பதற்கு பதிலாக அடகிலேயே வைத்து அப்போது ஏற்படும் பணப் பற்றாக்குறையை சமாளிப்பான். 

தருணின் காதணி விழா வரும் போது, லாக்கரில் இருந்த வேறு சில நகைகளை எடுத்து தாருங்கள் என சொல்லி விட்டாள் தேன். எல்லாம் எடை கூடுதலாக உள்ள நகைகள். போதாத குறைக்கு அவனது அம்மாவும் நகையை மீட்டு தா என நச்சரிக்க ஆரம்பித்து விட்டார். விழாவில் வெறுமையாக நின்றாலோ கவரிங் நகைகள் அணிந்தாலோ அவருக்கு பெரிய அவமானம் ஆகி விடுமாம். 

அனைத்து பக்கத்திலிருந்தும் வந்த நெருக்கடியை தானே சமாளிக்க அலுவலக கிரெடிட் கார்டை பயன்படுத்திக் கொண்டான். அது விதிகளுக்கு முரணானது என்பது தெரிந்தாலும் யாருக்கும் தெரிய வருவதற்குள் சமாளித்து கொள்ளலாம் என நினைத்து விட்டான். 

இப்போது வரை தேனின் பாதிக்கும் மேலான நகைகள் அடமானத்தில்தான் இருக்கிறது. 

கேட்க கேட்க பொறுமையான, பக்குவமான தங்கப்பனுக்கே கோவம் வந்தது என்றால் அவரது மகன் மற்றும் மனைவியை பற்றி சொல்லவும் வேண்டுமா? 

அடுத்தவர் குடும்ப விஷயம் நமக்கெதற்கு என நினைத்து யாரும் அங்கிருந்து நகரவில்லை. சுவாரஷ்யத்தோடும் பொய்யான பச்சாதாபத்தோடும் நடப்பதை வேடிக்கை பார்த்தனர். 

அனைத்துக்கும் மூல காரணமான அகிலன் சாமர்த்தியமாக அந்த இடத்திலிருந்து நழுவி போயிருந்தான். 

“ஐயோ இது இப்படி ஆவும்னு தெரியாதே” என அங்கலாய்த்த சுந்தரிக்கு பொய்யான மயக்கம் வந்து மின் விசிறிக்கு கீழே படுத்து விட்டார். அம்மாவை கவனிக்கிறேன் என சுபர்ணாவும் தம்பியை விட்டு அகன்று விட்டாள். 

“எல்லாம் சரி பண்ணிடுவான்” என உள்ளே போன குரலில் வேதாச்சலம் சொன்னது யாரின் காதிலேயுமே விழவில்லை.

சிலை போல நின்றிருந்த மனைவியை ஏறிட்டு பார்க்கும் துணிவில்லாமல் மருகிப் போயிருந்தான் ஆனந்த். 

தனக்கே தெரியாமல் தன் நகைகள் அடமானம், உதவாக்கரைக்காக வாங்கிய கடன் என்பதையெல்லாம் தாண்டி தன்னுடன் எதையுமே பகிர்ந்து கொள்ளாத கணவனின் செயலில்தான் தேன்முல்லைக்கு அதீத ஏமாற்றம். 

இன்னும் ஒரு மாதத்தில் என் தங்கையின் நகைகள் அனைத்தும் வந்து சேர வேண்டும் என கட்டளையாக சொன்னான் ராஜ்குமார். வரவில்லை என்றால் எப்படி வரவைப்பது என தெரியும் என அவன் சொன்னதற்கான அர்த்தம் யாருக்கும் விளங்கவில்லை. போலீசுக்கு போவானா, அடிதடி என இறங்குவானா என சுற்றி இருந்தோருக்கு யோசனையாகிப் போனது. என்னவாக இருந்தாலும் சுமூகமான நடவடிக்கை இல்லை அது என்பது மட்டும் உண்மை.

இனி இவருடன் வாழ்வதில் அர்த்தமே இல்லை என அக்கா சொன்ன போது அவளால் மறுத்து பேச முடியவில்லை. எங்களோடு வந்து விடு என அம்மாவும் அண்ணனும் அழைத்த போது அதுதான் சரியென அவளுக்கும் பட்டது. தங்கப்பனே எதையும் மறுக்கவில்லை.  மகளை அழைத்து செல்லத்தான் அவரும் நினைத்தார். 

தன் பக்க நியாயமென எடுத்து சொல்ல ஆனந்திடம் எதுவுமே இல்லை. ஒரே நாளில் வேலையையும் இழந்து தன் மனைவி மகனையும் பிரிய நேர்ந்து சொல்லொனா வேதனையில் தொண்டை அடைக்க நின்றிருந்தான்.