அவளின் பிடிவாதத்தில் அடுத்த நாளே புது பைக் வாங்கியிருந்தான் ஆனந்த். எப்படி பணம் கிடைத்தது என மனைவி கேட்டதற்கு அப்பா கடனாக வாங்கிக் கொடுத்தார் என்றான்.
“அந்த கடனையும் நீங்கதானே அடைக்கணும்” என அவள் கேட்டதற்கு பதில் தராமல் சலிப்பாக பார்த்தான்.
“எப்படி பார்த்தாலும் நான் சொல்றது இல்லைனு ஆகிடாதே”
“அவருக்கு என்ன வருமானம் வருது எனக்கு சும்மா பணம் தர?”
“உங்க தம்பிக்கு மட்டும் கேட்கிறப்ப எல்லாம் எப்படி எங்கேருந்து வாங்கி தர்றாங்க?” இடுப்பில் கை வைத்துக்கொண்டு கோவமாக கேட்டாள்.
அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் விலகி உள்ளே சென்றான். அவள் விடவில்லை, அவன் பின்னாலேயே சென்றாள்.
“உங்க வீட்ல யாருக்கும் எதுவுமே செய்யக் கூடாதுன்னு நான் சொல்லவே மாட்டேங்க. ஆனா உங்களை அது ஏதாவது பெரிய இக்கட்டுல மாட்டி விட்றோமோன்னு பயமா இருக்கு. தேவையானது செஞ்சு கொடுங்க, அனாவசிய செலவு எதையும் செய்ய மாட்டேன்னு அடிச்சு பேசுங்க. ஏதாவது பிரச்சனை வந்தா உங்களோட சேர்ந்து நான் புள்ள எல்லாரும்தான் கஷ்டப்படணும். நினைவு வச்சுக்கோங்க” சற்று சத்தமாகவே சொன்னாள்.
“எதுக்கு இப்படிலாம் பேசுற தேனு. நான் பார்த்துக்கிறேன்” என உள்ளே போன குரலில் சொன்னான்.
“எல்லாத்தையும் நீங்களே பாருங்க, உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் நடை பழகியிருக்காத தவழ்ந்துகிட்டிருக்க பாப்பாங்க. எல்லாருக்கும் எல்லாம் நீங்கதான் செய்யணும். உங்களை நம்பி ஒரு புள்ளை வேற பெத்து வச்சிருக்கேன், நான் நினைவு இல்லாட்டாலும் அவன் நினைவு இருக்கட்டும்”
“நீ கேட்கிற எல்லாம்தான் செஞ்சு தர்றேனே தேனு, ஏன் இப்படி பேசிட்டே இருக்க?”
“எதையும் சந்தோஷமாவே செய்யல நீங்க, உங்க வீட்டுக்கு வாரி வழங்குறவர் எங்களுக்கு மட்டும் பணத்த கணக்கு பண்ணி கணக்கு பண்ணி செலவு செய்றீங்க. நம்ம பையனுக்கு நடக்கிற விஷேஷம், உங்க மூஞ்சும் சரியில்ல, நீங்க ஆளும் சரியில்ல. என்ன கேட்டும் கல்லுளி மங்கன் கணக்கா வாய தொறக்கவும் மாட்டேங்குறீங்க. எனக்குதான் எனர்ஜி போவுது” அலுத்துக் கொண்டே சென்று விட்டாள் தேன்.
மனைவியை மகிழ்ச்சி படுத்த மகனின் காதணி விழாவில் குறைகள் ஏதும் இல்லாமல் சிறப்பாக செய்து விட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான். என்ன செலவாகும் என அவன் ஒரு கணக்கு போட்டு, தன் சக்திக்கு உட்பட்டதுதான் என சமாதானமும் அடைந்தான்.
அவன் ஒரு கணக்கு போட்டால் அவனது மாமியார் மற்றும் அம்மா வேறு கணக்கு போட்டிருந்தனர்.
காதணி விழாவுக்கு நாங்கள் முறை செய்வோம், அதற்கு எதிர் முறையாக எங்களுக்கு துணிகள் கொடுக்க வேண்டும், பெண்களுக்கு பட்டுப் புடவைகள்தான் வாங்க வேண்டும், உறவினர்களை அழைத்துக் கொண்டுதான் வருவோம், அதற்கான போக்குவரத்து செலவு உங்களுடையதுதான், இரண்டு வேன் அல்லது ஒரு பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்து விடுங்கள், சைவ சாப்பாடு வழக்கம் இல்லை, கறி விருந்துதான் வைக்க வேண்டும் என ஒரு பட்டியலே தயார் செய்திருந்தார் கலைவாணி.
“அவங்க வீட்டுக்கு முறை செய்றப்போ உன் தம்பி அக்காளுக்கு மட்டும் செய்யாம இருக்க முடியாது, வேணும்னா எனக்கு எதுவும் வேணாம் டா” என்ற திரிபுரசுந்தரி, “எதித்த வூட்டு கணேசன் அவன் மாமனா மாமியாவுக்கு எது செஞ்சாலும் அவன் அப்பாம்மாவுக்கும் சேர்த்து செஞ்சிடுவான், ஹஹான்… அதெல்லாம் ஒரு கொடுப்பினை…” என வினயத்தோடு பேசினார்.
ஆக மொத்தம் உறவுகளுக்கு ஆடைகள் வாங்கியதிலேயே செலவு எகிறிப் போனது. கூடுதலாக தனக்கும் கணவனுக்கும் சேர்த்து எடுத்தாள் தேன். நமக்கும் வேண்டுமா என்பது போல அவன் பார்க்க, அவளின் முகத்தில் ஏறிய கோவச் சிவப்பால் அவனால் வாயே திறக்க முடியவில்லை.
பேரனின் காதணி விழாவை நானும் ஜமாய்க்கிறேன் என பெயர் செய்து கொள்ள, வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பேரனின் பெயர் அச்சிட்ட பெரிய தாம்பாளமும், கோயிலில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்தார் சுந்தரி. செய்வது அவர்தான் ஆனால் செலவு மட்டும் பெரிய மகனுடையது.
குறித்த நாளில் குல தெய்வ கோயிலில் தருணின் காதணி விழா நடந்தது. ராஜ்குமார் குட்டி மருமகனுக்கு எல்லாம் சிறப்பாகவே செய்தான்.
ஆனந்தின் அக்கா சுபர்ணா, “அம்மா, உன் மருமக அவளோட அண்ணிக்கு எனக்கு வாங்கினது விட காஸ்ட்லியான புடவை வாங்கி தந்திருக்கா” என குறை படித்தாள்.
சுந்தரியும் மகனை கூப்பிட்டு விசாரிக்க, “பில் எடுத்தா காட்ட முடியும் மா? அப்படிலாம் இல்லை” என்றான்.
சுபர்ணா சமாதானம் கொள்ளாமல் தன் அம்மாவை பாவமாக பார்த்தாள். “ஏன் டி இதுக்கு போய் வாடுற? உனக்கு இன்னொரு புடவை எடுத்து தந்திடுவான் உன் தம்பி” என தன் ஆசை மகளை குளிர்ச்சி படுத்தி வைத்தார் சுந்தரி.
ஆனந்தின் தம்பி அகிலன் கறி விருந்து சாப்பிடவென பத்து நண்பர்கள் புடை சூழ வந்திருந்தான். அண்ணனுக்கு உதவியாக அல்லாமல் வெட்டி நண்பர்களுடன் சிரத்தையாக அரட்டையில் ஈடுபட்டிருந்தான். தம்பியை பார்க்க பார்க்க ஆனந்துக்கு கோவமாக வந்தாலும் அனைவரின் முன்னிலையில்அவனை கடிந்து கொள்ள முடியாமல் அமைதி காத்தான்.
சீர் கொடுக்கும் போது சம்பந்தியின் கையில் கொடுக்க மாட்டேன் என கலைவாணி அடம் பிடிக்க, ராஜ்குமாரும் அம்மாவுக்கு ஒத்து ஊதினான்.
“தீபாவளி பொங்கல் வரிசையெல்லாம் எப்படி மக மருமகன் கைல கொடுக்கிறோமோ இப்பவும் அப்படியே கொடுத்துக்கலாம்” என தீர்மானமாக சொன்னார் கலைவாணி.
“அது மத்தவங்களுக்கு தெரியாது, இப்ப சொந்தப்பந்தமெல்லாம் கூடியிருக்கும் போது அபப்டி செய்றது நல்லாருக்காது. நாளைக்கு நம்ம மருமகளே நம்மள மதிக்காது. சம்பந்தி கூட என்ன சண்டைனு ஆளாளுக்கு கேள்வி கேட்பாங்க” என எடுத்து சொன்னார் தங்கப்பன்.
அப்படியும் அவரது மனைவியும் மகனும் முறுக்கத்தான் செய்தனர். எப்படியோ விஷயம் வெளியில் தெரியாமல் அவர்களை சமாளித்து ஆனந்தின் பெற்றோரிடமே சீர்வரிசை தட்டுக்களை கொடுக்க வைத்து விட்டார் தங்கப்பன்.
காதணி விழா முடியவும் முதல் பந்தியில் நண்பர்களை அமர வைத்து விட்டான் அகிலன்.
விருந்தினர்களுக்கு முன் விஷேஷ வீட்டுக்காரர்கள் சாப்பிடுவது முறையா? இதுதான் எங்களுக்கு நீங்கள் தரும் மரியாதையா? என மகளிடம் நியாயம் கேட்டார் கலைவாணி. அவள் கணவனை முறைத்தாள். அமர்ந்து விட்டவர்களை எழ சொல்லவா முடியும்? மாப்பிள்ளையின் சங்கடம் புரிந்து அப்போதும் தங்கப்பன்தான் தன் குடும்பத்தை சமாளித்தார்.
ஆனந்தின் பள்ளிக்கால தோழர்கள் இருவர் வந்திருந்தனர், அவர்கள்தான் அவனுக்கு உதவியாக நின்றனர்.
எப்படியோ விழா முடிந்து அனைவரும் புறப்பட்டனர். ஆனந்த் மனைவி மகனோடு ஊருக்கு செல்கிறான். அடுத்த நாள்தான் சென்னைக்கு பயணம்.
வந்த மொய் பணத்தை அம்மாவின் சொல்படி தன் வசம் வைத்துக்கொண்டாள் தேன். சென்னைக்கு சென்றதும் அதை மகனின் பெயரில் வங்கியில் செலுத்த திட்டமிட்டிருந்தாள்.
மறக்காமல் மகளுக்கு இன்னொரு புடவைக்கு பதிலாக பணத்தை மகனிடம் பெற்று கொடுத்தார் கலைவாணி.
இரவில் உறங்கும் வேளையில் ஆறு மாதம் ஆன் சைட் செல்ல போவதாக சொன்னான் ஆனந்த்.
“என்ன திடீர்னு, என்கிட்ட ஏதும் சொல்லவே இல்லை?” எனக் கேட்டாள் தேன்.
மகனை, மனைவியை பிரியவெல்லாம் ஆனந்துக்கு விருப்பமில்லை. இப்போது அவன் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி. மனைவியிடம் பகிரவும் பயமாக இருந்தது. பத்து நாட்களுக்கு முன்னரே அலுவலகத்தில் சரியென ஒப்புக் கொண்டு அக்ரிமெண்ட் எல்லாம் போட்டாகி விட்டது. இப்போதுதான் மனைவியிடம் சொல்கிறான்.
இதை எதிர்பார்க்காதவள் அதிர்வோடு அவனை பார்த்திருந்தாள்.
எந்த நாடு, கூடுதலாக என்ன சம்பளம் கிடைக்கும், அவனுடைய வேலை முன்னேற்றத்துக்கு எப்படி இது உதவும் என்றெல்லாம் அரை மணி நேரம் விளக்கி கூறினான்.
ஆறு மாதங்கள் பிரிவுதான் என்றாலும் கணவனுக்கு இது நல்ல வாய்ப்புதானே என சம்மதித்தாள் தேன்.
சென்னையில் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்து விட்டு இங்கு தங்கிக் கொள்கிறாயா என மனைவியிடம் கேட்டான்.
“ஐயையோ அதெல்லாம் சரிப்படாது, நான் எங்கம்மா வீட்டுக்கு போறேன், இல்லைனா நான் பாட்டுக்கும் சென்னையிலேயே இருக்கேன், அப்பா துணைக்கு வந்து இருப்பாங்க” என்றாள் தேன்.
“நீ உன் அம்மா வீட்டுக்கே போ, சென்னை வீட்டுக்கு வாடகை மிச்சமாவும்” என்றான் ஆனந்த்.
சில நிமிடங்கள் யோசித்தவள், “என் அம்மா வீட்டுக்கு நானும் உங்க பையனும்தான் போக முடியும், அங்க இருக்க பொருளை எல்லாம் என்ன செய்றது? ஆறு மாசம் கழிச்சு திரும்ப இந்தியா வரத்தானே போறீங்க? நாங்க சென்னைலேயே இருக்கோம்” என்றாள்.
“பொருளையெல்லாம் இந்த வீட்டு மாடில போட்டு வச்சிடலாம். ஷெட் போட்ருக்குதானே? பாதுகாப்பா இருக்கும்” என யோசனை சொன்னான் ஆனந்த்.
தேன் ஒத்துக் கொள்ளவே இல்லை. அவளின் விருப்பத்துக்கே விட்டு விட்டாலும் தான் சொல்வது எதையுமே கேட்க மாட்டேன் என்கிறாள் என மனைவியின் மீது அதிருப்தி அடைந்தான்.
“நான் குறையாவே சொல்றேன்னு நினைக்காதீங்க. இங்க எல்லாரை பத்தியும் தெரியும்தானே உங்களுக்கு? இங்க இருந்தா எனக்கு சௌகர்யம் இல்லங்கிறது ஒண்ணு, சேர்ந்து இருந்தா அப்புறம் இங்க வரவே மாட்டேன்னு நான் சொல்ற அளவுக்கு வரவச்சிடுவாங்க. சென்னை வீட்ட காலி பண்ணினா செலவ மிச்சம் பிடிக்கலாம்னு நினைச்சு எனக்கும் உங்க குடும்பத்துக்கும் உள்ள உறவ ஒரேடியா பிரிச்சு விட்ராதீங்க. நாங்க சென்னைலேயே இருக்கோம்” அவன் எண்ணவோட்டத்தை புரிந்தவளாக சொன்னாள்.
“ சரி சரி, தூங்கலாம்” அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.
பிரச்சனைகளை பேசி தீர்த்துதான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே தவிர, மூடி மறைத்து அல்ல.