பூத்தது ஆனந்த முல்லை -3

அத்தியாயம் -3

கணவன் வரப் போகும் நேரத்துக்காக காத்திருந்தாள் தேன்முல்லை. தருணுக்கு பதினோராவது மாதத்திலேயே மொட்டை அடித்து காது குத்தி விடலாம் என சற்று முன்னர்தான் அவளது அம்மா யோசனை சொல்லியிருந்தார். 

சோர்வாக வந்து சேர்ந்த ஆனந்த் கை கால் கழுவி வந்து குழந்தையை தூக்கிக் கொண்டான். அவனது வயிற்றை கவனித்த பின்னர் விஷயத்தை சொன்னாள் தேன். 

“இப்ப என்ன அவசரம்? ஒரு வருஷம் போகட்டும்” என்றான் ஆனந்த். 

“சளி காய்ச்சல்னு அடிக்கடி இவனுக்கு முடியாம போயிடுது, முடி இறக்கிட்டா அப்படிலாம் பண்ணாதாம். இப்பவேன்னா பிஞ்சு காதா இருக்குமாம், சட்டுன்னு காது குத்திடலாம்” என்றாள் தேன். 

அவள் பேசிய பாங்கிலேயே அவளது அம்மாவின் உபதேசம்தான் இது என்பதை புரிந்து கொண்டவன், “இப்ப வலி தாங்க மாட்டான், ஒரு வருஷம் போகட்டும்” என வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி சொன்னான். 

“ரெட்டிப்பு வருஷத்துல செய்யக் கூடாதாம்”

“அப்ப இவனுக்கு மூணு வயசு ஆகும் போது செய்யலாம்”

“ஸ்கூல் போற வயசாகிடும்”

“அதனால என்ன?” 

“ஹ்ம்ம்.. அப்ப காதுல கடுக்கன் போட்டுட்டு போனா நல்லாருக்காது, இப்பவே செய்யலாம்”

இருவரும் விடுவதாக இல்லை. அதிகம் வாய் பேசாத கணவன், ஒரு கட்டத்துக்கு மேல் தான் சொல்வதை ஒத்துக் கொள்பவன் இப்படி பேசுவதை கண்டு ஆச்சர்யம் கொண்டவள், “என்னாச்சுங்க உங்களுக்கு?” என ஆராய்ச்சியாக கேட்டாள். 

அவன் கேள்வியாக பார்த்தான். 

“இல்லை… ஏன் வேணாம்னு சொல்றீங்க? உண்மை காரணம் சொல்லுங்க, நான் இந்த பேச்சை விட்டிடுறேன்” என்றாள். 

அவனிடம் தடுமாற்றம் எழுந்தது. அவள் கூர்மையாக அவனை பார்க்க, “சரி என்னவோ பண்ணு, எதுவா இருந்தாலும் அப்பாம்மாகிட்ட சொல்லிட்டு செய்யணும்” என்றான். 

“அத நீங்க சொல்லுங்க. அப்புறம் இது என் அப்பாம்மா செய்ற விஷேஷம் இல்லை, நாம செய்றது, அதனால முறையா நீங்கதான் அவங்களுக்கு சொல்லணும்” என்றாள். 

அவன் ம் கொட்டிக் கொண்டான். அப்பாவின் மூக்கை பிடித்து இழுத்து ஆராய்ந்த தருண் கெக்க பெக்க என சிரித்தான். 

“அப்பாவோட நிலைமை பார்த்து சிரிப்பா இருக்கா உனக்கு? உன் காதுல  ஓட்டை போட போறாங்களாம், வலிக்குமேடா என்னடா செய்வ? வேணாம்னா உன் அம்மா கேட்குறாளா?” மகனின் தலையில் லேசாக முட்டிக்கொண்டே கேட்டான். அதற்கும் சிரித்தான் தருண். 

மனைவி தொந்தரவு செய்து கொண்டே இருந்ததில் தன் பெற்றோரிடம் அன்றே பேசி விட்டான் ஆனந்த். அவனாக முடிவு செய்து சொல்வது போலவே பேச, அவர்களும் மறுப்பாக ஏதும் சொல்லவில்லை. அவர்களே விழா வைக்க நாள் பார்த்தும் சொன்னார்கள்.  அந்த நாள் தேனின் பிறந்த வீட்டினருக்கும் வசதியாக இருந்தது. 

இப்படியாக தஞ்சைக்கும் திருச்சிக்கும் இடையில் இருந்த கிராமம் ஒன்றில் இருக்கும் ஆனந்த்தின் குலதெய்வ கோயிலில் தருணின் காதணி விழாவை நடத்துவது எனமுடிவானது. 

ஆனந்த் அவனது பைக்கில் செல்லாமல் அலுவலக பேருந்தில் சென்று வருவதை அடுத்த நாள்தான் கவனித்தாள் தேன்.

கேட்டதற்கு சர்வீசுக்கு விட்டிருப்பதாக சொன்னான். 

“பைக் சர்வீஸ் என்ன நாள் கணக்கிலயா பண்ணுவாங்க?” என அவள் கேட்டதற்கு அமைதி காத்தான். 

“சொல்லுங்கன்னு சொல்றேன்ல?” என அதட்டினாள். 

“என் ஃபிரெண்ட் யூஸ் பண்ண வாங்கியிருந்தான்ல… அது…” குரலை செருமிக் கொண்டவன், “ஆக்சிட்டென்ட் பண்ணிட்டான். பைக் திரும்ப யூஸ் பண்ண முடியாத கண்டிஷன்” என்றான். 

அவர்களின் திருமணத்தின் போது தேனின் வீட்டில் வாங்கிக் கொடுத்த பைக் அது. அதற்கு முன் அவன் உபயோகித்து வந்ததை அவனது தம்பிக்கு கொடுத்து விட்டான். 

“என்கிட்ட ஏன் சொல்லலை? எப்ப ஆச்சு இப்படி? எதையுமே என்கிட்ட சொல்லக் கூடாதுன்னா எதுக்கு உங்களுக்கு நான் பொண்டாட்டியா இருக்கணும்?” ஆத்திரத்தில் சத்தம் போட்டாள். 

“இதோ இப்படி டென்ஷன் ஆவேன்னுதான் சொல்லலை. அவனுக்கு நிலைமை சரியில்லை, ஆறு மாசத்துல புதுசு வாங்கி தர்றேன்னு சொல்லியிருக்கான்” என்றான். 

“யாரு யாரு அந்த ஃப்ரெண்ட்?”

“என் ஆஃபிஸ்தான், உனக்கு தெரியாது” 

“ஆமாம் இல்லாட்டா மட்டும் எல்லாத்தையும் எனக்கு தெரிய படுத்திடுவீங்க? ஆறு மாசம் வரைக்கும் பைக் இல்லாம எப்படி ஓட்டுறது? நைட்ல ஒரு அவசரம்னா நமக்கு பைக் வேணாமா?” 

“அவனுக்கு நிறைய ஃபினான்ஸியல்  டிஃபிகல்ட்டீஸ், தெரிஞ்சே அவன் கழுத்தை நெறிக்க முடியாது என்னால”

இந்த பேச்சுவார்த்தை சிறு மனப்பூசலில் முடிந்தது. அந்த இறுக்கம் இருவருக்குமே பிடிக்கவில்லை. சற்று நேரத்தில் அவளாகவே சமாதானம் அடைந்து அவனிடம் பேசினாள். 

 “நீங்களே புது பைக் வாங்கிக்கோங்க, ஆறு மாசத்துக்கு அப்புறம் உங்க ஃப்ரெண்ட்கிட்டேருந்து பணமா வாங்கிக்கலாம்” என்றாள். 

அது சரியாக வராது, பைக் இல்லாமல் இருந்தால்தான் அவன் வாங்கித் தருவான், இல்லையென்றால் இழுத்தடிப்பான் என காரணம் சொல்லி பைக் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டான். 

தேனுக்கு ஆயாசமாக வந்தது. தான் சொல்லும் யோசனைகளுக்கு மதிப்பே இல்லை என பொரிய ஆரம்பித்து விட்டாள். விழித்துக் கொண்ட மகனை தூக்கிக் கொண்டவன் வீட்டை விட்டு சென்று விட்டான். 

கோவத்தில் இரவு சமையல் எதுவும் செய்யவில்லை தேன். சற்று நேரத்தில் வீடு வந்து விட்டான் ஆனந்த். குழந்தைக்காக கூட எதுவும் செய்யாமல் இருந்தவளை எதுவும் சொல்ல முடியாமல் கோவத்தை அடக்கிக் கொண்டே மகனை ஹாலில் விட்டு அவனே சமையலறை சென்றான். 

விளையாட்டு ஆர்வத்தில் தருண் பசிக்காக அழவில்லை, ஆனால் அவனது கண்களை பார்த்தே அவனது பசியை அறிந்து கொண்ட தேனுக்கு மிகுந்த குற்ற உணர்வாகி விட்டது. ஆனந்துக்கு பெரிதாக சமைக்கவும் தெரியாது. 

கணவனை அப்புற படுத்திவிட்டு அவளே சமைத்து மகனுக்கு ஊட்ட தொடங்கினாள். அறைக்கு சென்ற ஆனந்த் லேப்டாப்பில் மூழ்கி விட்டான். 

நேரம் செல்ல உறங்க தயாராகி விட்ட மகனோடு அறைக்கு வந்தவள் அப்படியே படுத்து விட்டாள். அறையை விட்டு வந்தவன் அவள் இன்னும் சாப்பிட்டிருக்கவில்லை என்பதை அறிந்து கொண்டு மீண்டும் அறைக்கு சென்றான். 

“அப்படியே தூங்கிடாத, நான் இவனை தட்டி கொடுக்குறேன், நீ சாப்பிட்டு வா” என்றான். அவள் பதில் பேசவே இல்லை. 

சில பல முறை அவளை அழைத்து பார்த்து சோர்ந்து போனவன், “காது குத்து வச்சிருக்க, அதுக்கு செலவு பண்ணுவேனா, இல்லை பைக் வாங்குவேனா? கொஞ்சம் கூட புரிதலே இல்லாம இப்படி பண்ணினா என்ன அர்த்தம்?” என்றான். 

அப்போதுதான் அவன் பக்கம் திரும்பியவள், “இத முன்னாடியே சொல்றதுக்கு என்ன?” எனக் கேட்டாள். 

அவன் சலிப்பாக மூச்சு விட்டான். 

“இப்படி புஸ் புஸ்ஸுன்னு மூச்சு விட்டா ஆச்சா?”

“நான் என்ன சொல்லணும்? உனக்கே புரிய வேணாமா?”

“சரி விடுங்க, நான் என் வீட்ல கேட்டு வாங்கி தர்றேன், மெதுவா கொடுத்துக்கலாம்” என்றாள். பார்வையாலேயே தன் சம்மதமின்மையை காட்டினான். நகை அடகு வைக்கலாம் என்பதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை. 

“டியூல வாங்கலாம்” என்றாள். 

“ஆஃ பிஸ் பஸ்ல ஜம்முன்னு போறேன் வாரேன். கொஞ்ச நாள் போகட்டும், செட் ஆகலைனா பார்த்துக்கலாம்” என தீர்மானமாக சொன்னான். எரிச்சலடைந்தவளாக திரும்பி படுத்துக் கொண்டாள்.

“சாப்பிட்டு படு தேனு, பசிக்குது” என அவன் ஓய்ந்து போன குரலில் சொல்ல, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு எழுந்தாள். 

அமைதியாக சாப்பிட்டு முடித்து உறங்க சென்று விட்டனர். மகனை நடுவில் போட்டு ஆளுக்கொரு பக்கமாக படுத்திருந்தனர். 

இருவருக்குமே மனம் சரியில்லை என்பதால் சரியான உறக்கம் இல்லை. தன் பேச்சை குறைத்துக் கொண்டதன் மூலம் தன் கோவத்தை வெளிப் படுத்தினாள் தேன். அவனும் பிணக்கை சரி செய்ய முயலாமல் தன் அதிருப்தியை வெளிப் படுத்தினான். 

அந்த வார ஞாயிற்றுக் கிழமை சுவாரஷ்யமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. மதியம் போல உறங்கிக் கொண்டிருந்த தருண் கட்டிலில் இருந்து உருண்டு விழுந்து விட்டான். அழுகை என்றால் அப்படியொரு அழுகை. பயந்து போய் விட்டனர் இருவரும். 

தலையில் வேறு லேசாக புடைத்து விட்டது. உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்றாள் தேன். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மட்டும்தான் நெருங்கிய பழக்கம், அவர்கள் வெளியில் சென்றிருக்க கேப் புக் செய்தான் ஆனந்த். 

கேப் வர பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகி விட, கணவனை வறுத்து எடுத்து விட்டாள் தேன். 

ஒரு வழியாக மருத்துவமனை சென்றனர். பயப்பட ஒன்றுமில்லை என சொல்லி விட்டார் மருத்துவர். வீட்டுக்கு வந்த உடன் இப்போதே பைக் வாங்கினால்தான் ஆகிற்று என பிடித்துக்கொண்டாள் தேன். 

“ஆஃபிஸ்ல லோன் போடுங்க, இல்லைனா உங்க அப்பாட்ட கேளுங்க, எங்கேயாவது வாங்கி தர சொல்லுங்க, அடுத்த மாசம் உங்களுக்கு சம்பளம் வந்ததும் திருப்பி தந்திடலாம். வாடகை போக எனக்கு பதினஞ்சாயிரம் கொடுங்க செலவுக்கு, நான் சமாளிச்சுக்குவேன், பைக்குக்கு வாங்குற கடனை அடைச்சிடலாம்” என தீர்மானமாக சொல்லி விட்டாள்.