அம்மாவின் போதனையால் மட்டுமின்றி, கைக்குழந்தை இருப்பதாலும் வேலை பற்றி அவளால் அப்போதைக்கு வேறு சிந்திக்க முடியவில்லை. 

இரண்டு பக்க உறவையும் சீர் செய்ய ஆனந்தோ தேன்முல்லையோ முயலவே இல்லை. 

இதை வைத்து மனைவியிடம் முகம் காட்ட மாட்டான் ஆனந்த், ஆனால் அவள் அவ்வப்போது பேசுவாள். அதற்கும் அமைதிதான் அவனது பதில். 

எப்போதாவது, “நமக்குள்ள எல்லாம் சரியா இருக்குதானே, அவங்களை நமக்குள்ள வர விட வேண்டாம் தேனு” என சொல்வான். அவளும் அப்போதைக்கு சரி என்றாலும் பின் சொல்லிக் காண்பிப்பாள்தான். 

புகுந்த வீட்டுக்கு சென்ற புதிதில் தேனுக்கும் அங்கே பழக சிரமமாகத்தான் இருந்தது. வீடு பார்த்து விட்டு மகனுடன் சென்னைக்கு சென்று விடலாம் என சொல்லியிருந்தார்கள் அவளின் மாமனார் மாமியார். 

ஆனால் மணமாகி மாதம் மூன்றாகியும் அவன் வீடு பார்ப்பதாக தெரியவில்லை. வாரா வாரம் அவன்தான் ஊருக்கு வந்து கொண்டிருந்தான். 

தேன் அவளது வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண், காலையில் ஐந்தரைக்கெல்லாம் எழுந்து வாசலில் கோலமிட வேண்டும், குளித்து விட்டுத்தான் சமையலறை வர வேண்டும், விரத நாட்கள் என்றால் கண்டிப்பாக தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும், வெள்ளி செவ்வாய் என்றால் அவளுக்கு மூட் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக கோயிலுக்கு செல்ல வேண்டும், பகலில் நைட்டி போடாதே என நிறைய கட்டுப்பாடுகள் போட்டார் சுந்தரி. 

மாமனார் வேதாச்சலம் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் உடையவர். நித்தமும் இந்த மாத்திரை எடுத்துக் கொடு, வெந்நீர் போட்டுத் தா என மருமகளிடம் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். 

அவளுக்கும் ஆரம்பத்தில் செய்வதில் பிரச்சனையாக இருக்கவில்லை, ஆனால் அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்றும் பாராமல் “அம்மா தேனு… அம்மா… எங்கம்மா இருக்க?” என அவள் கண்முன் தென்படும் வரை விட மாட்டார். சில சமயங்களில் மதிய உணவுக்கு பின் உறங்கிக் கொண்டிருப்பவளை சத்தம் போட்டு எழுப்பி விடுவார். 

இவள் வந்து நின்றால், “இந்த டிவில விஜய் படம் ஓடிட்டு இருந்துச்சுமா, எப்படியோ மாத்திட்டேன்,  சேனல் நம்பர் தெரியலை, கண்டுபிடிச்சு தாம்மா” என்பார். 

பல சமயங்களில், “1980ல…” என ஏதாவது கதை பேச ஆரம்பித்து விடுவார். மணிக்கணக்கில் நீளும் அவரது பிரசங்கம். அசுவாரஸ்ய கதையை எத்தனை நேரம்தான் தலையாட்டி கேட்டுக் கொள்வாள்? 

அமுதன் அடிக்கடி நண்பர்கள் பட்டாளத்தோடு வருவான், யாரும் கொடியவர்கள் இல்லை என்றாலும், பழகியவர்களும் கிடையாது. அமுதனுடனே அத்தனை சிநேக பாவம் இல்லை எனும் போது அவனது நண்பர்கள் அவளுக்கு முற்றிலும் அந்நியர்கள்.  அவளால் இயல்பாக வீட்டில் நடமாட முடியாது. அவர்கள் வெளியேறும் வரை அறைக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியதாக இருக்கும். 

திருமணம் ஆன புதிதிலேயே கணவனும் உடன் இல்லாமல் இதெல்லாம் அவளால் சகித்துக் கொள்ளவே முடியாமல், கணவனும் அவனுடன் கூப்பிட்டுக் கொள்ளாமல் போனதில் கோவம் கொண்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட்டாள். 

அதில் மனத் தாங்கல் கொண்ட சுந்தரி, “அவளா வரட்டும், இங்க எப்படி நாங்க பெத்த பொண்ணு மாதிரி அவளை வச்சிக்கிறோம், ஒரு விஷயமும் இல்லாம அங்க போய்ட்டா. அவளா வரட்டும், நீ போய் கூப்பிடாத” என மகனிடம் உறுதியாக சொல்லி விட்டார். 

ஆனந்த்தால் அப்படியெல்லாம் மனைவியை விட முடியவில்லை. எங்கே இது நிரந்தர பிரிவாகி விடுமோ என பயந்து விட்டான். பேசி அவளை அழைத்து வந்து விடலாம் என அம்மாவிடம் சொன்னான். 

“நாங்க என்ன தப்பு பண்ணினோம் அவங்ககிட்ட போய் பேச. இதான் எங்களுக்கு நீ வாங்கி தர்ற மரியாதையா?” கண்ணீர் விட்டார் சுந்தரி. 

“அவ வராட்டா போறா, நான் வர்றேன் போலாம் வாடா” என சொன்னார்தான் வேதாச்சலம்.

அம்மாவின் அனுமதி இல்லாமல் அப்பா மட்டும் வந்தால் அவர்களுக்குள் சண்டை வரும் என்பதால் அப்பாவை தவிர்த்து விட்டு அவன் மட்டும் சமாதானம் பேச மாமனார் வீட்டுக்கு சென்றான். 

தேனின் பெற்றோரோ, “சென்னைல வீடு பார்த்திட்டு வந்து அழைச்சிட்டு போங்க, ஊருக்கு நீங்க எப்போ வர்றீங்களோ அப்ப உங்களோட வந்திட்டு உங்களோடவே கிளம்பிடுவா எங்க பொண்ணு. இதுக்கு சம்மதம்னா அனுப்பி வைக்கிறோம்” என ஆனந்திடம் தீர்மானமாக சொல்லி விட்டனர். 

ஆனத்துக்கும் மனைவியை தனியே விட்டு வைக்க விருப்பமில்லை. தங்களுக்கென சென்னையிலேயே வீடு வாங்க நினைத்திருந்தான். மனைவி ஊரில் இருந்தால் அவன் விடுதியில் இருந்து கொள்ளலாம். குடும்ப செலவு அதிகமில்லாமல் போனால் ஒரு தொகை சேர்ந்து விடும். அதை முன் பணமாக வைத்து மேற்கொண்டு கடன் வாங்கி வீடு வாங்க எண்ணினான். 

ஆனால் அந்த எண்ணம் அவனுக்குள்ளேயே இருந்தது. திருமணத்துக்கு முன்னும் சரி பின்னரும் சரி,  இதை பற்றி தேனிடம் ஏதும் பேசியதில்லை அவன். இப்போதும் இதுதான் காரணம் என மாமனார் வீட்டில் அவனால் சொல்ல முடியவில்லை. 

மகள் எங்கள் வீட்டில் இருக்கட்டும், நீங்க இங்க வந்து போய் இருங்க என சொல்லி விடுவார்களோ என நினைத்தான். ஆண் ஆகிற்றே, மாமனார் வீடு வந்து போகவெல்லாம் அவனது ஆண் மனம் சம்மதிக்காதே. 

ஆதலால், “நான் ஆஃபிஸ் போயிடுவேன், நைட் ஷிஃப்ட் கூட இருக்கும், தேனு தனியா இருக்கணுமேன்னுதான் அம்மாப்பா கூட இருக்கட்டும்னு நினைச்சேன், கொஞ்ச நாள் போகட்டும் மாமா” என்றான் ஆனந்த். உடனே ராஜ்குமாருக்கு கோவம் வந்து விட்டது. 

“ஏன் உங்க ஆஃபிஸ்ல வேலை பார்க்கிற வேற யாரும் அவங்க ஃ பேமிலி யோட இருக்கிறது இல்லையா? உங்களோட நல்லா வாழ்வான்னுதான் அம்முவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம், உங்கம்மா காலை புடிச்சி விட்டு சேவை செய்ய வேலைக்கு ஆள் வச்சுக்கோங்க, என் தங்கச்சி அதுக்கான ஆள் இல்லை” என காட்டமாக பேசி விட்டான். 

மச்சானின் பேச்சில் ஆத்திரம் கொண்ட ஆனந்த் மனைவியை பார்க்க, அவளோ அண்ணன் சொல்வது சரிதானே என்பது போல நின்றாள். 

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு சென்றவன் வேறு வழியின்றி ஒரே வாரத்தில் வீடு பார்த்து விட்டுத்தான் மனைவியை அழைத்து சென்றான். 

கேட்டட் கம்யூனிட்டியாக இருந்தால்தான் பாதுகாப்பு என்பதால் அபார்ட்மெண்ட் வீடுதான் பிடித்திருந்தான். அங்கு வாடகையோடு மெயிண்டனென்ஸும் இருந்ததால் அவனது கையை கடித்தது. ஆகவே ஒற்றை படுக்கையறை கொண்ட வீடுதான் பிடித்தான். 

தேனின் அம்மா வெளிப்படையாகவே சிறிய வீடு என அதிருப்தியை காட்டினார். 

“ரெண்டு பேருக்கு இந்த வீடு போதும்” என்றான் ஆனந்த். 

“ஏன் நாங்க யாரும் வந்து போக இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என கேட்டே விட்டார் கலைவாணி. 

ஒரு பதிலும் சொல்லாமல் மனைவியை பார்த்தான் ஆனந்த். அவளுக்கோ எப்படியோ கணவனிடம் வந்து விட்டதே நிம்மதியை தர அம்மாவை சமாளித்தாள்.

அவர் விடுவதாக இல்லை, அன்றைய மாலையே அதே குடியிருப்பில் வேறொரு இரட்டை படுக்கையறை வீடு காலியாக இருப்பதை அறிந்து கொண்டார். அடுத்த நாளே பேசி ஜாகையை அங்கே மாற்றி விட்டார். 

ஒரு வாரம் கூட குடியிருந்திராத அந்த ஒற்றை படுக்கையறை வீட்டிற்கு கொடுத்திருந்த அட்வான்ஸ் பணத்தில் ஒரு மாத வாடகையை பிடித்தம் செய்து கொண்டுதான் ஓனர் திருப்பி தந்தார். 

நட்டமாகி விட்டதே என ஆனந்த் சொல்லி விடக்கூடாது என்பதற்காக, “இதுக்குத்தான் பெரியவங்கள வச்சு எல்லாம் செய்யணும், உங்களுக்கு விவரம் பத்தல மாப்ள” என முந்திக் கொண்டார் கலைவாணி. அவன் பதிலே பேசவில்லை. 

தேனுக்கு கொடுத்த சீர்வரிசை பொருட்கள் இருந்ததால் குடும்பம் நடத்தவென புதிதாக எதுவும் வாங்க தேவையிருக்கவில்லை. 

இது செய் அதை ஏன் இப்படி செய்தாய் என மனைவியிடம் எந்த கெடு பிடிகளும் செய்ய மாட்டான். வீட்டு வேலைகளில் கூட உதவிகள் செய்வான். ஆசையாகவும் இருப்பான். ஆனால் அதிகம் பேச மாட்டான். அதுதான் இவனது சுபாவம் போல என அவளும் விட்டு விடுவாள். 

ஆனால் அன்பை காட்டுவதிலும் ஆசையாக இருப்பதிலும் எந்த குறையும் வைத்ததில்லை அவன். ஏன் உன் அண்ணன் அப்படி பேசினார், அம்மா அப்படி சொன்னார் என யாரை பற்றியும் குறையும் சொல்ல மாட்டான். 

தேன்தான் அவனது பெற்றோர் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பாள். இப்போது அலைபேசி வாயிலாக உரையாடும் போதும், “வீட்ல விளக்கேத்துனியா, வெறும் ரசம்தான் வச்சியா? ஞாயித்து கிழமைனா என்ன… எட்டு மணி வரைக்குமா தூங்குவாங்க?” என  மருமகளை நொச்சு செய்து கொண்டே இருப்பார் சுந்தரி. 

தினம் மாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வாரம் ஒரு முறை என ஆக்கி விட்டாள். 

பலவித யோசனைகளோடு அப்படியே உறங்கி விட்டாள். ஒரு மணி நேரம் கழித்து விழித்த போது தெளிவாக இருந்தாள். யாருக்குத்தான் கஷ்ட நஷ்டமில்லை, அப்படியொன்றும் கொடுமையான வாழ்க்கை இல்லை எனக்கு என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள். 

மாலையில் நேரமாகவே வந்து விட்டான் ஆனந்த். அவனே கட்டாயப் படுத்தி மனைவி மகனோடு மாமனாரையும் பீச் அழைத்து சென்றான். நண்பன் ஒருவனின் கார் எடுத்து வந்திருந்தான். ஆகவே போக்குவரத்துக்கு பிரச்சனை இருக்கவில்லை. 

 தங்கப்பனுக்கு பீச் என்றால் மிகவும் பிடிக்கும், ஆகவே அந்த நேரத்தை ரசித்தார். மனைவியின் மடியில் அமர்ந்திருந்த மகனுக்கு மணலை குவித்து விளையாட்டு காட்டினான் ஆனந்த். அவன் குவித்து வைக்கும் மணல் கோபுரத்தை கலைத்து, இடித்து கை கொட்டி சிரித்தான் தருண். 

விடாமல் மீண்டும் மீண்டும் மணல் கோபுரம் கட்டி கொண்டே இருந்தான் ஆனந்த். 

“போதும் அவன் கண்ல மண் பட்டிட போகுது” என்றாள் தேன். 

“இவ்ளோ நேரம் அப்படி ஏதும் ஆகலைதானே? எப்படி என்ஜாய் பண்ணி சிரிக்கிறான் பாரு” என்றான் ஆனந்த். 

“செலவே இல்லாம எப்படி என்ஜாய் பண்றதுன்னு கத்து கொடுக்குறீங்கதானே?” கிண்டலாக சொன்னாள். 

“நீ எங்க வர்றேன்னு புரியுது, இவன் சந்தோஷம்தான் முக்கியம், இவன் விஷயத்துல செலவெல்லாம் பார்க்க மாட்டேன். எம்பையனுக்கு எல்லாம் கத்து கொடுப்பேன், நீச்சல், செஸ் விளையாட, கிரிக்கெட் விளையாட,குதிரை ஓட்ட…”

“ராக்கெட் ஓட்டவும் கத்து கொடுங்க”

“இவன் ஆசை பட்டா அதையும் பண்ணுவேன்” 

“புள்ளைய பெத்து கொடுத்தவ என்ன ஆசை படறான்னு கூட பார்க்கலாம் நீங்க”

“உனக்கு என்ன வேணும் சொல்லு, வாங்கி தர்றேன்”

அவனை ஆழ்ந்து பார்த்தவள், “கேட்டதெல்லாம் வாங்கி தந்திட்டா போதாது. எதையும் மறைக்காம உள்ளதை உள்ள படி சொல்லணும். அப்பாக்கு ஒரு பவுனுக்கு செய்ய முடியாத படி அப்படி என்ன பணக் கஷ்டம் உங்களுக்கு? சரி பண்ண முடியாத அளவுக்கு கஷ்டமா?” கவலையாக கேட்டாள்.

“ரொம்ப கற்பனை பண்ணாத. மாமாக்கு அறுபது கல்யாணம் வரும்தானே,  அப்போ சிறப்பா செஞ்சிடலாம், இப்போ வா கொஞ்ச தூரம் நடக்கலாம்” என சொல்லி எழுந்தவன் மகனையும் தூக்கிக் கொண்டான். 

கவலை தரும் விஷயங்கள் அல்லாமல் பொதுவாக ஏதோ பேசிக் கொண்டே நடந்தனர். தான்தான் ஏதேதோ நினைத்து கவலை கொள்கிறோம், எல்லாம் பார்த்துக் கொள்ள இவருக்கு தெரியாதா? என நினைத்தாள். சற்று நேரத்தில் அவளது மனம் லேசாகி விட்டது. 

  இரவு உணவை வெளியில் முடித்துக் கொண்டு தங்கப்பனை இரயில் ஏற்றி விட்டு வீடு வந்து சேர்ந்தனர். 

கணக்கிட்டு பார்த்தால் மூவாயிரத்துக்குள்ளேயே செலவு முடிந்து விட்டது. மகனை வெந்நீரில் துடைத்து ஆடை மாற்றி விட்டான் ஆனந்த். 

கணவன் குளித்து வந்ததும் அவள் குளிக்க சென்றாள். அதற்குள் தருண் உறங்கியிருந்தான். 

“கோவம் போயிடுச்சா தேனு?” எனக் கேட்டவனை பொய்யாக முறைத்தாள். 

மனைவியை அணைத்து கொண்டு சமாதானம் செய்தான். 

கணவனோடு சங்கமித்து தான் சமாதானம் ஆகி விட்டதை உணர்த்தியிருந்தாள் தேன். அவள் உறங்கி விட்ட போதும் உறக்கம் வராமல் விழித்துக் கிடந்தான் ஆனந்த்.