மேலும் பத்து நிமிடங்கள் செல்ல, இரயில் வந்து சேர்ந்தது. இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணிக்க புக் செய்திருப்பான் கணவன் என இவள் நினைக்க, அவனோ சாதாரண வகுப்பில் புக் செய்திருந்தான். 

ஏமாற்றமும் கோவமுமாக கணவனை பார்த்தாள். 

“டிக்கெட் கிடைக்கல தேனு”

“பொய் சொல்லாதீங்க” என கோவமாக சொன்னவளின் கண்கள் கலங்கிப் போய் விட்டன. 

“முதல்ல ஏறு, இதுலேயும் மனுஷங்க டிராவல் பண்றாங்கதான்” என ஆனந்த் சொல்ல, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஏறினாள் தேன். 

நல்ல வேளையாக அவர்களுடையது கீழே உள்ள பெர்த். 

“இப்படினு முன்னாடியே சொல்லியிருந்தா ஏர் பில்லோ, பெட் ஷீட் எல்லாம் எடுத்து வச்சிருப்பேன். எதையுமே என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?” என அவள் கேட்டதற்கு அவன் பதில் சொல்லவில்லை. 

 

லக்கேஜ்களை பத்திரமாக வைத்து விட்டு குழந்தைக்கு தொட்டில் கட்டினான். இரயில் புறப்பட்டது. 

நகை வாங்கியிருக்கிறான், திருமணத்துக்கு ஐயாயிரம் மொய் செய்ய வேண்டும், வீட்டுக்கு எவ்வளவு அனுப்பினானோ, பணப் பற்றாக்குறையால்தான் சாதாரண வகுப்பு பெட்டியில் புக் செய்திருக்கிறான், இல்லையென்றால் எங்களது வசதியில் சமரசம் செய்து கொள்ள மாட்டானே, அவனே அதனால்தான் பேருந்தில் பயணித்து வந்திருக்கிறான் என அவனுக்கு சாதகமாக சொல்லிக் கொண்டாள். 

மனம் சமாதானம் அடைந்தவளாக தன்னுடைய சுடிதார் துப்பட்டாக்கள் எடுத்து அவனுக்கும் அவளுக்கும் படுக்கை விரிப்பாக போட்டு விட்டாள். 

குழந்தைக்கு தலை வியர்ப்பது நிற்கவில்லை. இப்படியே விட்டால் சளி பிடித்துக் கொள்ளுமோ என பயந்தவள் குழந்தையை தொட்டிலில் இருந்து எடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டாள்.

தலையை துடைத்து விட்டவள் விசிறி விட, அவளை படுக்க சொல்லி விட்டு குழந்தையை தான் வாங்கிக் கொண்டான். 

சற்று நேரம் அசந்து உறங்கி விட்டவளுக்கு விழிப்பு வந்தது. அவன் இன்னும் உறங்காமல் குழந்தைக்கு விசிறி விடுவதும் வெளியில் இருளை பார்ப்பதுமாக இருந்தான். நடு இருக்கை யில் ஆள் இருக்க, தன்னை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். 

“காலைல வரை இப்படியே வருவீங்களா? அவனை என்கிட்ட விட்டுட்டு படுங்க” என்றவள் குழந்தையை மீண்டும் தன்னுடன் வைத்துக்கொண்டாள். 

“எதாவதுன்னா எழுப்பு” என சொல்லி அவனும் படுத்து விட்டான். 

இடையில் தருண் விழித்துக் கொண்டான், அவனை சமாதானம் செய்து உறங்க வைக்க சிறிது நேரத்தில் மீண்டும் எழுந்து கொண்டான். இப்படியே அவன் சிணுங்கி சிணுங்கி அழ, ஆனந்த்துக்கும் தேனிலாவுக்கும்  தூங்கா இரவாகிப் போனது. 

திருச்சி வந்ததும் அவர்களை அழைத்து செல்ல கார் எடுத்துக் கொண்டு வந்திருந்தான் தேனின் அண்ணன் ராஜ்குமார். 

“ஏசி கோச்ல வரலையா அம்மு?” மச்சானை கண்டனமாக பார்த்துக் கொண்டே தங்கையிடம் கேட்டான் ராஜ். 

“டிக்கெட் கிடைக்கலியாம் ண்ணா” என்றாள் தேன். 

“கிடைக்கலைனா எங்கிட்ட சொல்றதுக்கு என்ன? அப்பாவே ஏதாவது அரேஞ் பண்ணியிருப்பார், வெயில் காலத்துல சாதா கோச்ல வந்திருக்கீங்க!” என்றான் ராஜ். 

“ட்ரெயின்ல வந்த எல்லாருக்கும் வெயில் காலம்தான்,  நூத்துக் கணக்கான பேர் இப்படித்தான் டிராவல் பண்ணி வந்தாங்க” கோவமாக அல்லாமல் செய்தி போல சொன்னான் ஆனந்த். 

அண்ணன் ஏதும் பேசி விடும் முன் முந்திக் கொண்டு பேச்சின் திசையை மாற்றி விட்டாள் தேன். 

வீட்டினர் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் கணவனுடன் இணக்கமாகவே இருந்தாள்  தேன். ராஜ்குமாரின் மனைவி திவ்யாக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். மணமாகி ஒரு வருடம் ஆகிறது, இன்னும் குழந்தை உண்டாகவில்லை.  அவள் தருணை தன் வசப் படுத்திக் கொண்டாள். 

தேனின் அக்கா வினயாவும் அவளது கணவன் மற்றும் பிள்ளைகளோடு வந்திருந்தாள். ஆகவே தருணுக்கு நேரம் நன்றாக ஓடியது. 

இரவில் சரியாக உறங்கியிராத ஆனந்த்தும் தேனும் உறங்கி மதியம் போலதான் எழுந்தனர். உணவுக்கு பின் விழா நடைபெறும் மண்டபத்துக்கு புறப்பட வேண்டும். 

மகனை தயார் செய்து கணவனிடம் கொடுத்த தேனும் தயாரானாள். வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன் நினைவு வந்தவளாக, “ஏங்க செயின் எங்க? என் கைல கொடுங்க, பத்திரமா வச்சுக்கிறேன்” என்றாள். 

அதற்கு மேல் அவளிடம் ஒப்படைக்காமல் இருக்க முடியாது என்பதால் தந்தான் ஆனந்த். 

பிரித்து கையில் எடுத்து பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தாள். 

“என்னங்க இது, அரை பவுன் செயின் போல இருக்கே?” எனக் கேட்டாள். 

“ஆமாம் தேனு, அரை பவுன்தான்” சின்ன குரலில் சொன்னான்.

“அதெப்படிங்க ஒரு பவுனுக்குதானே வாங்க சொன்னேன்?” 

“ஷ் சத்தம் போடாத! இப்போதைக்கு இதுதான் என்னால முடிஞ்சது, நாள பின்ன வேற விஷேஷம் இங்க வராமலே போயிடுமா என்ன? அப்ப நல்லா செஞ்சிடலாம்” என ஆனந்த் சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

“என்ன தேனு, இதுக்கு போய் அழுவியா?”

“பின்ன என்னங்க? என் அக்கா ஒரு பவுனுக்கு செய்யும் போது நான் மட்டும் கம்மியா செஞ்சா நல்லாருக்குமா? அம்மா அக்காட்டலாம் ஒரு பவுனுக்கு செய்றதா சொல்லிட்டேன். உங்களால முடியாதுன்னா முன்னாடியே சொல்றதுக்கென்ன? நான் ஏதாவது ஏற்பாடு பண்ணியிருப்பேன்ல?” அழுகையும் ஆத்திரமுமாக கேட்டாள். 

எப்படியும் செய்திடலாம்னு நினைச்சேன் தேனு, லாஸ்ட் மினிட் …” என பாதியில் நிறுத்தினான். 

“என்ன என்ன லாஸ்ட் மினிட்ல… என்ன உங்க வீட்லேருந்து பிடுங்கிட்டாங்களா?”

“ஏய் அவங்கள இழுக்காத. என்னால இப்போதைக்கு இவ்ளோதான் செய்ய முடிஞ்சுது. டைம் ஆகுது பாரு, வா கிளம்பலாம்” என்றான். 

தேனின் அம்மா கலைவாணியும் மகளின் பெயரை சொல்லி சத்தமிட கண்களை துடைத்துக் கொண்டு கிளம்பினாள் தேன். 

மண்டபம் வந்து சேர்ந்த பின்பும் கணவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தாள். அவனுக்கும் சங்கடமாக இருந்த போதிலும் அமைதி காத்தான். 

நிஜத்திலேயே கஷ்டம் என்றால் தேனுக்கு சமாதானமாக இருந்திருக்கும். ஐ டி நிறுவனத்தில் பணி புரியும் ஆனந்த் லட்சங்களில் சம்பாதிக்கிறான். இவர்களின் திருமணத்திற்கு பின்பு இவனது அக்காவின் மாமனார் பணி ஓய்வு பெறுகிறார் என ஒரு பவுனுக்குத்தான் மோதிரம் போட்டு விட்டார் இவளின் மாமனார். 

அந்த பணமே ஆனந்தினுடையதுதான் என்ற போதும் ஆனந்த் தனியாக அவன் பங்குக்கு செய்ய வேண்டும் என கட்டளை போட்டு விட்டார் அவனது அம்மா திரிபுரசுந்தரி. இரண்டு கிராமுக்கு இவன் தனியாக மோதிரம் போட்டு விட்டான். 

அதற்கு பின்னரும் கூட எத்தனை வகை விஷேஷங்கள் அவனது அக்கா குடும்பத்தில், ஒன்றுக்கு பத்து எனதான் செய்வார் சுந்தரி, அத்தனையும் இவன் கொடுக்கும் பணம். இவளால் தலையிட்டுக் கொள்ளவே முடியாது. 

இப்போது என் தந்தைக்கு செய்ய மட்டும் கணக்கு பார்க்கிறான், எல்லாம் இவன் அம்மா சொல்லிக் கொடுத்திருப்பார் என மனதிற்குள் பொறுமிக் கொண்டே அமர்ந்திருந்தாள். 

அன்றைய இரவே அரை பவுன் செயின்தான் என வீட்டினருக்கு தெரிந்து போனது. மற்றவர்கள் எதுவும் பேசாமல் இருக்க கலைவாணி மட்டும் மகளிடம் வாய் விட்டு கேட்டு விட்டார். 

பதில் சொல்ல இயலாமல் மருகிப் போனவளாக அவள் நிற்க, “என்னடி விசாரணை இது? நீ போம்மா” என மகளை அறைக்கு அனுப்பி வைத்தார் தங்கப்பன். 

“இவ ஏமாந்து ஏமாந்து போறா. இப்படியே விட்டா எம்பொண்ணுக்கும் பேரனுக்கும் ஒண்ணுமில்லாம ஆக்கி ரோட்ல நிக்க வச்சிடுவாரு உங்க அருமை மாப்பிள்ளை! ஒழுங்கா என்ன ஏதுன்னு கேட்டு புத்திமதி சொல்லுங்க அவருக்கு” என கலைவாணி பேசியது தேனுக்கு மட்டுமல்ல, ஆனந்திற்குமே கேட்டது. 

“பணம் காசு செய்முறை வச்சுத்தான் மதிப்பு மரியாதையா தேனு? இப்போ ஏதோ என் சூழ்நிலை சரியில்லை…”

“பேசாதீங்க!” இரைந்தாள் தேன். 

அவன் கண்டனமாக பார்த்தான். “நாளைக்கு எனக்கு போட்ட டிக்கெட் கேன்சல் பண்ணிடுங்க, நான் கொஞ்ச நாள் இங்க இருந்திட்டு வர்றேன்” என்றாள். 

“கேவலம் அரை பவுன் தங்கம் என் மனசை விட உயர்ந்து போயிடுச்சா தேனு?” 

“நானும் அதேதான் கேட்கிறேன், கேவலம் அரை பவுன் கூட செய்ய பொற மாட்டாரா உங்க பொண்டாட்டியோட அப்பா?”

அவன் பெருமூச்செறிந்தான்.

“நீ நாளைக்கு வரலைனா நான் ஏன் இன்னும் இங்க இருக்கணும், இப்போவே நான் கிளம்பறேன்” என்றான்.

“தாராளமா கிளம்புங்க” என அவள் அழுத்தமாக சொல்ல, நிஜமாகவே புறப்பட்டு விட்டான் ஆனந்த்.