எக்மோர் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினாள் தேன்முல்லை. மனம் முழுதும் கோவம் மண்டிக் கிடந்தது. திட்டமிடப் பட்ட வெளியூர் பயணம்தான், அலுவலகத்திலிருந்துதான் வர தாமதமாகும் என சொன்ன அவளது கணவன் ஆனந்த் இவளையே ஆட்டோ பிடித்துக்கொண்டு வர சொல்லி விட்டான். அவன் நேராக இங்கு வந்து விடுகிறானாம்.
பத்து மாத மகன் தருணை கையில் வைத்திருந்த படியே ஆட்டோவுக்கு பணம் செலுத்த அலைபேசியை எடுத்தாள் தேன்முல்லை. அதற்குள் எங்கிருந்தோ வந்து விட்ட ஆனந்த் மகனை கையில் வாங்கிக் கொண்டான்.
தேன் ஜி பே செய்ய ஆட்டோவிலிருந்த லக்கேஜ்களை எடுத்து வைத்தான் ஆனந்த்.
அவள் தன் கணவனை கோவமாக பார்க்க, “என்ன இப்போ அதான் வந்திட்டேனே, தருண் சாப்பிட்டானா? எதையும் மறக்கலையே? இவன் சிரப் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டியா?” இயல்பாக பேசினான் ஆனந்த்.
தலையாட்டிக் கொண்டவள், “அப்படி என்னதான் பிஸியோ நீங்க, இத்தனை நாள் கரெக்ட்டாதானே வந்திட்டு இருந்தீங்க, ஊருக்கு போறன்னைக்குத்தான் பிஸி ஆவீங்க” என சலித்துக் கொண்டாள்.
“நாளான்னிக்கு நைட் ரிட்டர்ன் வரப் போறோம், அதுக்கு எவ்ளோ பெரிய மூட்டை கட்டியிருக்க?”
“சரி சரி” என இடையிட்டு அவளின் பேச்சை நிறுத்தினான்.
“வெயிட்டா இருக்கா? போர்ட்டர் கூப்பிட்டுக்கலாமா?” எனக் கேட்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“அதெல்லாம் வேணாம், இவனை நீ வச்சுக்க, ட்ராலியையும் பேகையும் நான் எடுத்துக்கிறேன்”
“இவனை தூக்கிட்டு ஸ்டெப்ஸ் ஏறி போகணும், எனக்கும் கஷ்டம், உங்களுக்கும் கஷ்டம்” என்றாள்.
தேன்முல்லைக்கு சிசேரியன் மூலமாகத்தான் பிரசவம் நடந்தது. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த பின் தையல் பிரிந்து காயம் ஆற நாளானது. என்னவோ அதன் பின் அவளுக்கு எடை தூக்கவும் படிகள் ஏறவும் சிரமமாக இருக்கிறது. பெரிய வலி இல்லை என்றாலும் சின்னதாக ஒரு அசௌகர்யத்தை உணர்ந்தாள். மருத்துவரும் பயப்பட தேவையில்லை, போக போக சரியாகி விடும் என சொல்லியிருந்தார்.
அவளை போர்ட்டர் கூப்பிடவெல்லாம் அனுமதிக்காமல் மகனை அவளிடம் தந்து விட்டு லக்கேஜ்களை கையில் எடுத்துக் கொண்டவன், “இத வச்சிட்டு வந்து தருணை வாங்கிக்கிறேன், நீ இங்கேயே இரு” என சொல்லி சென்றான்.
இரயில் வந்து விடுமோ என இவள் பதற்றம் கொண்டிருக்க, லக்கேஜ் வைத்து விட்டு வந்தவன் மகனை வாங்கிக் கொண்டான்.
“லட்சத்துல சம்பாதிக்கிறீங்க, பாவம் இங்க இருக்க போர்ட்டர்ஸ், அவங்கள கூட கொஞ்சம் சம்பாதிக்க விடலாம் நீங்க” என அவள் சொல்வதை பொருட்படுத்தவே இல்லை அவன்.
தேன்முல்லையின் பிறந்த வீடு திருச்சியில் இருக்கிறது. அவளது அப்பா தங்கப்பன் இரயிவே துறையில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார், அவருக்கு பிரிவு உபச்சார விழா நாளை நடைபெறுகிறது, அதற்கடுத்த நாள் தேனின் உறவில் ஒரு திருமணம், இரண்டிலும் பங்கு கொள்ளதான் இந்த பயணம்.
பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம்தான், ஆனால் இவனை மிகவும் விரும்பி மணந்து கொண்டாள் தேன்.
நல்லவன், சுடு சொல் பேசாத பொறுமைசாலி, கடுமையான உழைப்பாழி, மனைவி மகன் மீது உயிரையே வைத்திருப்பவன் என அவனை பற்றி பட்டியல் போடும் அளவுக்கு நல்ல குணங்கள் இருந்த போதிலும் அவளுக்கு திருப்தியோ நிம்மதியோ இல்லை. கனவுகள் சுமந்து திருமண வாழ்வில் காலடி எடுத்து வைத்தவளுக்கு நிறைய ஏமாற்றங்கள்தான் பரிசாக கிடைத்தன.
ஆனந்த் அத்தனை கல கலப்பாக பேசும் ரகம் இல்லை, சத்தம் போட்டு சிரித்து இவள் பார்த்ததே இல்லை. மூன்றாவது ஆண்டு திருமண நாள் விரைவிலேயே வரப் போகிறது, இதுவரை ஐ லவ் யூ என அவன் சொன்னதே கிடையாது.
தேன் நிலவு செல்ல வேண்டும் என்ற தேனின் ஆசை நிறைவேறவே இல்லை.
இவள் எது பேசினாலும் எதிர்த்து பேச மாட்டான், அதற்கென இவள் சொல்வதனைத்தையும் அப்படியே நிறைவேற்றி வைக்கவும் மாட்டான். இவளது பிறந்த வீட்டினரோடு பகைமை பாராட்டாத போதும் நெருங்கி பழகவும் மாட்டான்.
‘இன்று முடியவில்லை, சமையல் செய்யவில்லை’ என்றால் உடனே கடையிலிருந்து தருவித்து விடுவான். இரவில் குழந்தை மிகவும் படுத்தி வைத்தால் இவளை தொந்தரவு செய்யாமல் அவனே பார்த்துக் கொள்வான். ஆசையாக அவன் நெருங்கி வரும் போது தலைவலி என இவள் சொன்னால் கொஞ்சம் கூட முகம் சுருக்க மாட்டான்.
அவனை நினைத்து பெருமை கொள்ள நிறையவே காரணங்கள் இருந்த போதும் அதிருப்தி கொள்ளவும் அதற்கு சமமாக காரணங்கள் மலிந்து கிடந்தன.
அவர்கள் வீட்டில் பணம் சம்பாதிப்பது இவன் மட்டும்தான். பெற்றோருக்கும் உடன் பிறந்தோருக்கும் செய்வதில் கணக்கே கிடையாது. தஞ்சாவூரில் அவனது பெற்றோர் வசிக்கும் வீடு திருமணத்துக்கு முன் இவன் கட்டியதுதான். அதற்காக எடுத்த லோன் இன்னும் அடைபடவில்லை.
தம்பியின் புது புது தொழில் முயற்சிக்கெல்லாம் முதலீட்டாளர் இவன்தான். இத்தோடு மூன்று தொழில்கள் மாற்றி விட்டான். ஒன்றும் உருப்படியாக செய்யவில்லை. அந்த கணக்கு வழக்கு பற்றி இவள் ஏதாவது கேட்டால் ஒரு வார்த்தை வெளியிட மாட்டான்.
அக்கா வீட்டில் ஏதாவது விஷேஷம் என்றால் முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதை தாண்டி அமர்க்கள படுத்துவார் அவனது அம்மா. பணம் இல்லை என சாடையாக கூட சொல்ல மாட்டான்.
மனதில் உள்ளதை பகிர்ந்து கொண்டால்தானே இவளுக்கு தெரியும். எதையும் சொல்ல மாட்டான்.
வாழ்க்கையில் எதுவோ குறைவதாக அவளுக்கு தோன்றும். அவ்வப்போது எழும் வெறுமை உணர்வும் விரக்தி மனப் பான்மையும் எதிர்காலத்தை குறித்த அச்சுறுத்தலை அவளிடம் விதைக்கும்.
யாருக்கு செய்கிறான், அவன் குடும்பத்தினருக்குதானே? எனக்கும் பெரிதாக குறைகள் வைக்கவில்லை, தருண் வளர்ந்து விட்டால் மகனுக்காக அனைத்து செலவுகளையும் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு தானாக வந்து விடும் என தனக்கு தானே சமாதானம் செய்து கொள்வாள்.
அவர்கள் ஏற வேண்டிய நடை மேடைக்கு வந்த பின், அங்கிருந்த இரும்பு இருக்கையை சுட்டிக் காண்பித்து அவளை அமர சொன்னான். மகனுக்கு உணவூட்ட மனைவிக்கு உதவினான்.
பின் தருணை வாங்கிக் கொண்டு வேடிக்கை காட்ட ஆரம்பித்து விட்டான். அவனருகில் சென்றவள், “நாளைக்கு அப்பாக்கு செயின் போடணும்னு சொன்னேனே, காலைல திருச்சிலேயே வாங்கிடலாமா?” எனக் கேட்டாள்.
“இல்லயில்ல, நான் வாங்கிட்டேன். அதான் லேட் ஆகிடுச்சு. என்கிட்ட பத்திரமா இருக்கு, பஸ்ல வரும் போது நிறைய கூட்டம் வேற, ஜாக்கிரதையா எடுத்திட்டு வர்றதுக்குள்ள டென்ஷன் ஆகிடுச்சு” என்றான்.
“நான் இல்லாம நகை வாங்க நீங்க மட்டும் போனீங்களா?” வியப்பாக கேட்டாள்.
“ஏன் எனக்கு வாங்க தெரியாதா? நாளைக்கு கடைக்கெல்லாம்அலையவேண்டிய அவசியம் இல்லாம உன் அம்மா வீட்ல ஃப்ரீயா இரு” என்றான்.
“எங்க… செயினை என்கிட்ட காட்டுங்க” எனக் கேட்டாள்.
“ம்ம்… இப்படி ஸ்டேஷன்லவச்சு எல்லாருக்கும் என்கிட்ட நகை இருக்குனு விளம்பர படுத்தினா நம்மள விட முட்டாள் யாரும் இல்லை. திருச்சிக்கு போய் பார்க்கலாம்”
“ம்ம்… ஆமாம் ஏன் பஸ்ல வந்தீங்க? உங்க பைக் என்னாச்சு?”
“என் ஃபிரெண்ட் ரெண்டு நாளைக்கு கேட்ருந்தான், அவன்கிட்ட கொடுத்திட்டேன்”
“கேப் புக் பண்ணிக்க வேண்டியதுதானே?”
“ஏன் பஸ்ல வந்ததால என்னாச்சு இப்போ?” என அவன் கேட்க, அதற்கு மேல் அதை பற்றிய பேச்சை வளர்க்கவில்லை தேன்.
அவனுக்கான சாப்பாடு பேக் செய்து எடுத்து வந்திருந்தாள். குழந்தையை தான் வாங்கிக் கொண்டு அவனை சாப்பிட சொன்னாள்.
அவனுக்கும் நல்ல பசி, மிருதுவான சப்பாத்தியை பன்னீர் கிரேவியில் தோய்த்து சாப்பிட்டாலும் அதன் சுவையை அவனால் அனுபவிக்க முடியவில்லை. ஏதோ யோசனையாகவே இருந்தான்.
தருணுக்கு உறக்கம் வந்து விட்டது. கணவன் அருகில் அமர்ந்து மகனை மடியில் கிடத்தி தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள்.
“ட்ரெயின் ஏறினதும் நான் இவனுக்கு ஸ்வெட்டர் போட்டு விட்டிடுறேன், நீங்க தொட்டிலை கட்டி விடுங்க” என்றாள்.
ஒரு நொடி சங்கடமாக அவளை பார்த்தவன் சரி என்பதாக தலையாட்டிக் கொண்டான்.
“க்ரேவி நல்லாயில்லையா?” எனக் கேட்டாள்.
“நல்லா இருக்கே”
“நான் கேட்கிறதுக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாம்”
“ம்… கொஞ்சம் ஒர்க் பிரஷர் தேனு, அதான் டயர்ட்ல ஏதும் சொல்லலை உங்கிட்ட. நிஜமா ரொம்ப நல்லாருக்கு”
“ரெண்டு நாள் எங்கேயாவது வெளியூர் போயிட்டு வரலாமா? உங்களுக்கும் ரிலாக்ஸ் பண்ணின மாதிரி இருக்கும், நாம சேர்ந்து அப்படிலாம் எங்கேயும் போனதில்லைதானே?”
“ம்ம்… போலாம், இவனுக்கு கிளைமேட் ஒத்துக்காம போயிட்டா கஷ்டம், இவன் இன்னும் கொஞ்சம் வளரட்டும்”
“ஓ… அப்படினா சென்னைலேயே ரெசார்ட் மாதிரி எங்கேயாவது போலமா? நம்ம அப்பார்ட்மென்ட்ல அப்படி நிறைய பேர் போறாங்க”
“முதல்ல திருச்சிக்கு போயிட்டு வருவோம், அப்புறமா பேசிக்கலாம் தேனு” என அவன் சொல்ல ஒரு பெரு மூச்சுடன் அமைதியடைந்தாள்.
தருண் உறங்கி விட்டான், அவனுக்கு இன்னும் முடி இறக்கியிருக்கவில்லை. தலை கொள்ளாத முடி, குழந்தைக்கு தலை கழுத்தெல்லாம் நன்றாக வியர்த்து விட்டது.
தேனின் கைப்பையில் எப்போதும் சிறிய மடக்கு விசிறி இருக்கும், அதை எடுத்து மகனுக்கு விசிறி விட்டான் ஆனந்த்.
“ச்சே… எவ்ளோ வெக்கை! ட்ரைன் வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்ங்க?” எனக் கேட்டாள்.