அத்தியாயம் –3

 

 

அபிநயா அவள் அறையில் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தாள், அவள் சிந்தனை எல்லாம் வைபவை பற்றியே இருந்தது. அவனை நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது. தனிமையில் அவள் சிரிக்கும் சத்தம் கேட்டு கற்பகம் வந்து எட்டிப்பார்த்து விட்டு சென்றார்.

 

 

‘கடவுளே என் மகள் மனம் விட்டு சிரித்து எவ்வளோ நாட்கள் ஆகிவிட்டது, இவளுடைய சிரிப்பு என்றும் இவள் முகத்தில் நிலைத்திருக்க வேண்டும் இறைவா என்று கடவுளிடம் தன் கோரிக்கையை வைத்துவிட்டு படுக்கச் சென்றார்.

 

வைபவ்க்கு அவள் நன்றியுரைத்ததை அவன் புரிந்து கொண்ட விதம் நினைத்து அவள் சிரித்துக் கொண்டிருந்தாள், அவனை சொடக்கு போட்டு கூப்பிட்டது தப்பு என்று அவன் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தானே. இவனுக்கும் ஆண் என்பதில் ஆணவமும் திமிரும் இருக்குமோ.

 

 

எல்லா ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் தான் இவன் மட்டும் அதற்கு விதிவிலக்காகி விடுவானா என்ன என்று அவள் மனதிடம் அவள் பேசிக் கொண்டிருந்தாள். எதற்கு அவனை பற்றிய இந்த ஆராய்ச்சி என்பதை மறந்தவளாக அவனை பற்றிய பட்டிமன்றம் அவளுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

 

 

உறக்கம் கூட மறந்தவளாக வெகு நேரம் அவனை பற்றிய சிந்தையிலேயே உழன்று கொண்டிருந்தாள். ஒருவழியாக அவளுக்கு உறக்கம் கண்களை தழுவ கனவிலும் அவன் முகமே அவளுக்கு வந்து போனது. சுகமான கனவுகள் வலம் வர அவள் ஆழ்ந்த துயில் கொண்டாள்.

 

 

“அம்மா நான் சீக்கிரம் கிளம்பணும் எனக்கு பசிக்குது டிபன் கொடுங்கம்மா என்றான் வைபவ். “ஏன்ப்பா எனக்கென்ன பத்து கையா இருக்கு நீங்க ரெண்டு பேரும் காலைல நேரத்துல இப்படி பரபரத்தா நான் என்ன செய்வேன் எனக்கு கையும் ஓடமாட்டேங்குது காலும் ஓடமாட்டேங்குது என்று அங்கலாய்த்தார் அவன் அன்னை சாந்தி.

 

 

சாந்தி பெயருக்கேற்றார் போல் சாந்தமானவரே வைபவும் அவன் தங்கை நந்திதாவும் சிறுவயதாக இருக்கும் போதே தன் கணவரை ஒரு விபத்தில் இழந்துவிட தன்னந்தனியாளாக நின்று தையல் வேலை செய்தும் அப்பளம் இட்டும் தன் பிள்ளைகளை படிக்க வைத்தார்.

 

 

வைபவ் நன்றாக படித்ததில் அவனுக்கு உதவித்தொகை கிடைத்ததில் அவன் பள்ளி வாழ்க்கை ஒரு வழியாக முடிந்தது. அவன் நன்றாக மதிப்பெண்கள் எடுத்திருந்ததினால் அவனுக்கு இன்ஜினியரிங் படிப்பும் தேடி வர அதிலும் அவன் உதவித்தொகை கிடைத்தது.

 

 

பத்தாததிற்கு அவனும் பகுதி நேரமாக பேப்பர் போடுவது, பிட்சா டெலிவரி செய்வது என்று சிறு சிறு வேலைகள் செய்து அவன் கல்லூரிப் படிப்பை ஒருவழியாக முடித்தான்.

 

 

அவனுக்கு கேம்பஸில் வேலை கிடைக்கும் என்று அவன் காத்திருந்து காத்திருந்து நாட்கள் நகர பொறுமையிழந்த வைபவ் கல்யாண் இருவருமே மேற்கொண்டு தங்களுக்கு ஒரு வேலை வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அப்போது தான் தற்செயலாக பேருந்தில் சந்தித்த ஒருவர் ப்ரோக்கர் தொழிலில் உள்ள கஷ்டநஷ்டம் பற்றி சொல்லிக் கொண்டிருக்க, நண்பர்கள் இருவருக்கும் இது போன்று ஒரு மையம் தொடங்கலாம் என்ற எண்ணம் தோன்றி இன்று கல்யாண வைபவம் அவர்கள் முன் வளர்ந்து நிற்கிறது.

 

 

வைபவுக்கு அவன் அன்னை அங்கலாய்த்ததை பார்த்ததும் அவனுக்குள் பழைய நினைவுகள் வந்து போனது, அதை கலைத்தவளாக அவன் தங்கை நந்திதா அவன் முன் நின்றாள்.

 

 

“டேய் அண்ணா அம்மா என்ன சொல்றாங்கன்னு உனக்கு புரியுதா, ஏன் தான் நீ இப்படி இருக்கியோ என்று அவனை இடித்தாள் அவள். “ஹேய் என்ன சொல்றாங்க எனக்கு ஒண்ணும் புரியலை என்றான் அவன்.

 

 

“இம் சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னாங்க, சீய் போ நீ எப்படிடா எனக்கு அண்ணாவா பொறந்த எனக்கு இருக்கற அறிவுல உனக்கு பாதி கூட இல்லையே கடவுளே இது என்ன சோதனை. இதை தான் கவுண்டமணி ஒரு படத்துல சத்தியசோதனைன்னு சொன்னாரோ என்றாள் அவள்.

 

 

“ஹேய் வாலு ரொம்ப பேசாத, அம்மா முதல்ல இவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்றான் அவன். “கடவுளே நான் உன்கிட்ட என்ன கேக்குறேன் நீ என்ன செய்யுற என்று சாந்தி சத்தம் போட்டு புலம்பினார்.

 

 

“முதல்ல நீ கல்யாணம் பண்ணு எனக்கு அண்ணியோட சண்டை எல்லாம் போடணும், நீயும் அண்ணியும் சேர்ந்து எனக்கு தாய் தகப்பனா நின்னு எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கறேன் என்றாள் நந்திதா பெரிய மனுஷியாக.

 

 

“ஹேய் பேசாம இரு, பெரியவங்க உன் நல்லதுக்கு தான் சொல்லுவோம். நீ சின்ன பொண்ணா லட்சணமா நடந்துக்கோ என்று தங்கையை அதட்டினான். “அதே தான் நானும் சொல்றேன் அம்மா பெரியவங்க அவங்களோட ஆசை உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கணும்னு நீயும் சின்ன பையனா லட்சணமா அம்மா சொல்படி நட

 

 

“அப்புறம் இந்த சின்ன பொண்ணுக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம் நான் இன்னும் என் படிப்பே முடிக்கலை. என் படிப்பு முடிச்சு நான் வேலைக்கு போகணும் இன்னும் எனக்கு பெரிய பெரிய லட்சியம் எல்லாம் இருக்கு அதெல்லாம் நிறைவேறட்டும் அப்புறம் என் கல்யாணம் பத்தி பேசலாம் என்றாள் அவள்.

“ஏன்பா அவ சொல்றதும் சரிதானே முதல்ல உன் கல்யாணம் முடியட்டுமே அப்புறம் அவளுக்கு நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து கல்யாணம் பண்ணி வைப்பீங்க என்றார் அவர்.

 

 

“அம்மா நீங்களுமா அம்மா தயவு செய்து கொஞ்ச நாளைக்கு என் கல்யாண பேச்சே எடுக்காதீங்க, நானா சொல்ற வரைக்கும் இனி அந்த பேச்சு இந்த வீட்டில வேணாம் என்றான் அவன்.

 

 

அப்போது அவனுக்கு தெரியாது அன்றே அவன் திருமணத்தை பற்றி யோசிப்பான் என்று, காலம் போட்டிருக்கும் முடிச்சு தான் என்ன பார்போம்… வெளியில் கிளம்பி வந்தவன் பைக்கை உதைக்க அது எனக்கென்ன என்பது போல் பேசாமல் இருந்தது.

 

 

‘உனக்கு இன்னைக்கு என்ன வந்துச்சு நீயும் காலையிலேயே என்னை படுத்துறியே என்று திட்டிக் கொண்டே பைக்கை எட்டி உதைத்தான். அது கிளம்புகிற வழியாய் காணோம். பைக்கை தள்ளிக் கொண்டு வந்து அவன் வீட்டிற்கு அருகில் இருந்த பழுது பார்க்கும் இடத்தில் விட்டு கிளம்பினான்.

 

 

வெகு நாளைக்கு பின் பேருந்து நிறுத்தம் வந்து பேருந்துக்காக காத்திருந்தான். பத்து நிமிடம் கழித்து வந்த பேருந்தில் ஏறி அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணச்சீட்டு வாங்கிவிட்டு நின்றிருந்தான்.

 

 

இரண்டு நிறுத்தங்கள் தாண்டி வந்த நிறுத்தத்தில் ஏறியவளை வியப்புடன் பார்த்தான். இவ எப்படி பஸ்ல, என்னன்னு சொல்லுவா, எப்படி பயணச்சீட்டு எடுப்பா என்று அவளையே ஆராய்ந்து கொண்டிருந்தான் வைபவ்.

 

 

‘இதோ அவள் கைப்பையில் கையை நுழைக்கிறாள் காசை எடுத்துவிட்டாள் போலிருக்கிறதே என்று அவன் பார்த்தால் அவள் எடுத்தது மாதாந்திர பயணச்சீட்டு, வைபவை பற்றி கேட்க வேண்டுமா டின் டின்னாக அவன் முகத்தில் வழிந்ததை அவனே வேறு வழியில்லாமல் துடைத்துக் கொண்டான்.

 

 

‘இந்த யோசனை எனக்கு வரவே இல்லையே என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். அவள் ஏறியதில் இருந்து ஏனோ அவன் பார்வை அவளை விட்டு இம்மியும் நகராமல் அவள் ஒவ்வொரு செயலையும் அளவெடுத்தது.

 

 

‘நான் ஏன் இவளை பார்க்குறேன்எதுக்கு இப்படி நடக்குது என்று நினைத்தவன் கஷ்டப்பட்டு தன் பார்வையை வேறு புறம் திருப்பினான். அவன் அப்போதே பார்த்திருந்தால் அங்கேயே ஒரு பெரிய களேபரம் நடந்திருக்கும்.

 

 

பேருந்து கடைசி நிறுத்தத்தில் நிற்க அவளை பார்க்காமல் வேகமாக இறங்க வேண்டும் என்று நினைத்தவனின் பார்வை தன்னையுமறியாமல் அவள் இருந்த பக்கம் சென்றது. ‘அப்பாடா இறங்கிட்டா போல என்று நினைத்தவன் கீழே இறங்கினான்.

 

 

அப்போது ஏதோ சத்தம் கேட்க நின்று திரும்பி பார்த்தான், அவள் நிருந்தத்தில் இறங்கி யாரையோ முறைத்துக் கொண்டே சென்றவள் அங்கிருந்து சற்று தள்ளி சென்று வேறு பேருந்துக்காக நின்றாள்.

 

 

‘இவ நம்மகிட்ட மட்டும் இல்லை எல்லார்கிட்டயும் இப்படி தான் முறைப்பா போல, பாவம் இவளை கட்டிக்கப் போறவன் என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டவன் அங்கு ஒருவர் சத்தமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான்.

 

 

“இவளுக மாதிரி பொண்ணுங்க இருந்தா நாடே தாங்காது, இவ தப்பு பண்ணிட்டு என்னமோ நான் தப்பு பண்ண மாதிரி எப்படி என்னை முறைச்சுகிட்டு போறா பாரு என்று அவனருகில் நின்றிருந்தவன் ஒருவன் சொல்ல வைபவ் அவன் யாரை சொல்கிறான் ஒருவேளை இவளை தானோ என்று அவனை ஏறிட்டான்.

 

 

“என்ன சார் பார்க்குறீங்க எல்லாம் அந்த பொம்பளை தான் சார் என்றான் அவன். ‘என்னாச்சு என்பதாய் அவன் பார்க்க அருகில் இருந்தவனின் அழுக்கு உள்ளம் வெளியே தெரிய ஆரம்பித்தது.

 

 

“அந்த பொம்பளை பஸ்ல வரும் போது என் பக்கத்துல தான் நின்னுட்டு இருந்தா சார், என் பக்கத்துல வந்து இன்னைக்கு என்னோட வர்றீங்களான்னு கேட்குறா சார், என் கையை தொட்டு தொட்டு பேசுறா, காலம் கலி காலம் சார். கலி முத்தி போச்சு, இல்லைனா…. என்று அவன் தொடர்வதற்குள் அவன் கன்னம் எரிந்தது.

 

 

“என்னடா சொன்ன என்ன சொன்ன சொல்லு, சீய் நீயெல்லாம் ஒரு மனுசனா எவ்வளவு கேவலமானவன்டா நீ, அந்த பொண்ணை பத்தி வாய் கூசாம இப்படி பேசுறியே, எப்படிடா உன்னால அப்படி பேச முடிஞ்சது, இனிமே அப்படி பேசுவியா… என்றவன் அவனை மீண்டும் அறைந்தான்.

 

“பேசுவியா… பேசுவியா… என்று சொல்லிக் கொண்டே அவன் அறைய தற்செயலாக அவள் திரும்பி பார்க்க என்னவோ ஏதோவென்று அவனருகில் வந்தாள்.

 

 

“யோவ் நீ யாருய்யா என்ன அடிக்க, அந்த பொண்ணை சொன்னா உனக்கு பொத்துக்குது, நீ தான் அந்த பொண்ணுக்கு மாமாவா என்றவன் அவளை நோக்கி “ஏன்டி இவன் தான் உனக்கு மாமாவா என்று அவன் மேலும் வார்த்தைகளை விட வைபவுக்கு கண் மண் தெரியாமல் கோபம் வர அவனின் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான். அவனும் பதிலுக்கு கையை ஒங்க அதை லாவகமாக தடுத்தான் அவன்.

 

 

அவனருகில் வந்திவிட்டிருந்தவளுக்கு சூழ்நிலை புரிய அவளுக்கும் ஆத்திரமாக இருந்தது, இருந்தும் வைபவை அடிக்காமல் இருக்குமாறு சைகை செய்தவள் அவனை கட்டுப்படுத்த முடியாது அவன் கையை பற்றினாள்.

 

 

அதற்குள் நடத்துனர் அங்கு வர அவர்களை தப்பாக பேசியவன் நடத்துனரிடமும் அதே கதையை சொல்ல அவரும் அவளை திரும்பி பார்த்தார். “சார் இந்த ஆளு பொய் சொல்றான், இவங்க இவனை பார்த்து அப்படி சொல்லி இருக்கவே முடியாது, ஏன்னா இவங்களால பேச முடியாது சார் என்று அவன் சொல்ல அவளை தப்பாக பேசியவனின் முகம் கருத்தது.

 

 

“சார் இவன் பொய் சொல்றான் இவன் தான் அந்த பொண்ணுக்கு மாமா என்று சொல்லவும் அவள் கையை தன்னில் இருந்து உதறியவன் பாய்ந்து அவன் கன்னத்தில் மறுபடியும் அறைந்தான்.

 

 

அதற்குள் ஒரு சின்ன பெண்ணும் அவளுடன் அபிநயாவின் வயதை ஒத்த ஒரு பெண்ணும் வந்து நின்றார்கள். “சார் இங்க நடந்த விஷயம் எனக்கும் தெரியும், இவர் சொல்ற மாதிரி இவங்களால பேச முடியாது சார், இவங்க எங்க பள்ளிக்கு வந்து எப்பவாச்சும் வகுப்பு எடுப்பாங்க. எனக்கு இவங்களை நல்லா தெரியும் என்றாள் அந்த பெண்.

 

 

“அதுவும் இல்லாம இந்த ஆளு முதல்ல பிரிச்சனை பண்ணது இவங்ககிட்ட இல்ல, இந்த சின்ன பொண்ணுகிட்ட தான் இந்த ஆளு சில்மிஷம் பண்ணி இருக்கான், அதை பார்த்து இவங்க தான் அந்த பொண்ணை தன் பக்கத்துல வைச்சுகிட்டாங்க, இந்த ஆளையும் கால்ல நல்லா மிதிச்சுட்டாங்க போல

 

 

“அவனுக்கு இவங்க மேல உள்ள ஆத்திரத்துல இப்படி இல்லாததும் பொல்லாததுமா பேசி இருக்கான். பாவம் இந்த பொண்ணால பேச முடியாது, இவகிட்ட போய் இவன் இந்த மாதிரி நடந்திருக்கான்.

“இந்த பொண்ணு இப்போ தான் என்கிட்ட சைகையில எல்லாம் சொன்னா, நான் இந்த பொண்ணோட வகுப்பு ஆசிரியை தான் என்று அவள் கூற வைபவ் முகம் முன்னிலும் அதிகமாக அவன் மேல் துவேஷம் கொண்டது.

 

 

அதற்குள்ள அபிநயா எதையோ எழுதி அவனிடத்தில் கொடுக்க, ‘இவ வேற எப்போ பார்த்தாலும் ஒரு காகிதத்தை எடுத்து கொடுத்துக்கிட்டு என்று நினைத்து அவசரமாக பிரித்தான்.

 

 

‘தயவு செய்து பிரச்சனை வேண்டாம், அந்த பெண் பாவம் தினமும் இதே வழியில் பயணம் செய்பவள் என்னால் தினமும் அவளுடன் பயணம் செய்ய முடியாது, நாளை இதே ஆள் இவளிடம் வேறு விதமாக தொல்லை செய்தால் என்ன செய்வது, அவனை எச்சரித்து மன்னித்துவிடுங்கள், எனக்காக என்று எழுதியிருந்தாள்.

 

 

அவள் எழுதியிருந்ததில் இருந்த உண்மை அவனை யோசிக்கச் செய்தது, சிறிது நேரம் யோசித்தான், அதற்குள் நடத்துனர் “இவனை நாம போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சுடலாம் சார் என்று கூற வைபவ் அவரை தடுத்தான்.

 

 

“வேணாம் சார் அவரை விட்டுடுங்க, அவர் திருந்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமா இருக்கட்டும் என்றான் அவன். தவறு செய்தவனிடம் திரும்பி “சார் இனி இது போல செய்யாதீங்க சார், பாவம் அந்த பொண்ணால பேசவும் முடியாது, அந்த பொண்ணோட தவிப்பை பாருங்க

 

 

“இந்த நிலைமை உங்க அம்மா, உடன்பிறந்தவங்களுக்கு வந்திருந்தா என்னாகியிருக்கும்ன்னு கொஞ்சம் நினைச்சு பாருங்க சார். நான் அடிச்சதுக்கு என்னை மன்னிச்சுடுங்க சார் என்று அவரின் கைகளை பிடிக்க இப்போது மன்னிப்பு வேண்டுவது அவரின் முறையாகி போனது.

 

 

அவர் செய்த செயலுக்கு கூனிக் குறுகியவர் இனி இது போல் என்றும் நடவாது என்று உறுதியளித்து எல்லோரிடமும் மன்னிப்பு வேண்டி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

 

 

“என்ன சார் அவரை சும்மா விட்டுட்டீங்களே என்றாள் அச்சிறு பெண்ணின் ஆசிரியை, “இல்லைங்க அதுக்கு காரணம் நான் இல்லை இவங்க தான், இவங்க சொன்ன மாதிரி நாம தினமும் இந்த பொண்ணுக்கு துணையா வரமுடியாது இல்லையா

 

 

“இவர் நாளைக்கே இந்த பொண்ணால தான் எல்லாம்ன்னு நினைச்சு இந்த பொண்ணுக்கு திரும்ப திரும்ப தொந்திரவு கொடுத்தா என்ன செய்யுறது, அதனால தான் பேசாம விட்டாச்சு.

 

 

“அவர் திருந்தறதுக்கு கொடுத்த அந்த சந்தர்ப்பத்தை அவரும் பயன்படுத்திக்கிட்டார் இனி இது போல ஒரு தப்பை அவர் செய்ய மாட்டார் என்றான் வைபவ்.

 

 

“சார் நாளைக்கு இவர் வரமாட்டார், வேற ஒருத்தன் வந்தா என்ன சார் பண்ணுறது. இதுவே அந்தாளை நாம காவல் துறைகிட்ட ஒப்படைச்சு இருந்தா நாளை பின்ன எவனுக்கும் இந்த மாதிரி செய்யுற துணிவு இருக்காதுல சார் என்றாள் அந்த ஆசிரியை.

 

 

‘ஆமா நாம இதை பத்தி யோசிக்கவே இல்லையே என்று யோசித்தவன் அபியின் முகத்தை பார்த்தான். அவள் ஏதோ சைகை மொழியில் மற்றவளிடம் பேச அவளும் சம்மதமாய் தலையசைத்தாள்.

 

 

“என்னங்க எனக்கும் கொஞ்சம் புரியற மாதிரி சொன்னீங்கன்னா தெரியும் என்றான் வைபவ் பாவமாக, “அது இல்லை சார் இந்த மாதிரி தொல்லை எல்லாம் தடுக்க இப்படி இருக்க பெண்கள் தற்காப்பு கலை எல்லாம் தெரிஞ்சு வைச்சுக்கணும்ன்னு சொல்றாங்க

 

 

“அதை இவங்களே எல்லாருக்கும் வந்து சொல்லிக் கொடுக்கறாங்களாம், இந்த மாதிரி வாய் பேச முடியாத சின்னஞ்சிறு பெண் குழந்தைகளிடம் இது போல வம்பு வளப்பவர்கள் ஏராளம் சார், எல்லாரும் உங்களை மாதிரியே நல்லவரா இருக்கமாட்டாங்க சார்.

 

 

“இவங்களோட பிரச்சனைகள் இங்கயே முடியறது இல்லை, இவங்க அக்கம் பக்கம் உள்ளவங்க இவங்க வீட்டுக்கு வந்து போறவங்கன்னு நெறய கஷ்டங்கள் இதுல இவங்க படாறாங்க

 

 

“இது போல கதைகள் சில பெண்கள் எங்களிடம் வந்து சொல்லும் போது ரொம்பவே கஷ்டமா இருக்கும் சார். இந்த துன்பம் இனி இவங்களுக்கு வரக்கூடாதுன்னா இவங்க அடிப்படையான தற்காப்பு கலையை கண்டிப்பா கத்துக்கணும், ரொம்பவே நன்றி அபி நீங்களே வந்து சொல்லி தர்றேன்ன்னு சொன்னதுக்கு என்று அவனிடம் ஆரம்பித்து அவளிடம் முடித்தார் அந்த ஆசிரியை.

 

 

அந்த ஆசிரியை இது போல நிறைய பேர் அவதிப்படுவது குறித்து சொல்லும் போது அவளின் முகம் ஒரு நொடி வேதனையை சுமந்ததை வைபவ் குறித்துக் கொண்டான்.

 

 

அவனுக்கு சைகை மொழியில் நன்றி சொல்ல எண்ணி கைகளை உயர்த்தியவள் கட்டுப்படுத்தி தன் கைகளை அடக்கிக் கொண்டாள். ஒருவேளை அன்று போல் இவன் நான் பறக்கும் முத்தம் கொடுப்பதாக நினைத்தால் என்ன செய்வது என்று எண்ணி கைகுவித்து அவனுக்கு நன்றியுரைத்தாள்.

 

 

அவள் கை முதலில் உயர்ந்து பின் இருகரம் கூப்பியதை அவன் கண்டுகொண்டான். ‘அன்னைக்கு மாதிரி நான் நினைப்பேன்னு யோசிச்சு எனக்கு இப்படி நன்றி சொல்றா போல என்று எண்ணிக் கொண்டு எல்லோரிடமும் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினான்.

 

 

கிளம்பும் முன் அவளை திரும்பிப் பார்க்க அவன் தவறவில்லை, தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ அவளும் அக்கணம் திரும்பி அவனை நோக்கினாள்.

 

 

அலுவலகம் வந்து அமர்ந்தவனுக்கோ கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, பேருந்து நிறுத்தத்தில் நடந்த நிகழ்வுகளே அவன் கண் முன் வந்து நின்றது. அவளை முதலில் பார்த்ததில் இருந்து நடந்த நிகழ்வுகளை அவன் மனம் கொஞ்சம் கொஞ்சமாக அசை போட்டது.

 

 

ஏனோ முதல் முறை அவளை கைகளில் ஏந்திய தருணம் அவன் கண் முன் வந்து போனது. அன்றும் அவள் வேதனை படுவதை சகிக்காமல் அவளை தன் கைகளில் ஏந்தி சென்றது நினைவுக்கு வந்தது.

 

 

அதன் பின் மருத்துவமனையில் அவளுக்கு வாய் பேசமுடியாது காது கேட்காது என்பது தெரிந்ததும் இவள் எப்படி தனியாக வந்தாள் என்ற கேள்வியும் அதனால் தானே இந்த விபத்து என்ற பதட்டமுமே அவனை கோபம் கொள்ள செய்து அவளை பார்த்து கேள்வி கேட்க பதிலுக்கு அவள் வெளியே போக சொன்னாள் என்பதும் நிழலாடின.

 

 

ஆத்திரத்தில் கிளம்பினாலும் ஆட்டோவை அவளுக்காக நிற்க வைத்துவிட்டு சென்றதும், அவள் அவனைத் தேடி அவன் அலுவலகம் வந்ததும், அவள் அவனுக்கு நன்றி நவின்ற அந்த கணம் மனம் இறக்கை இல்லாமல் பறந்ததை நினைத்தான்.

 

அவன் மனதிற்குள் அவள் எந்த அனுமதியும் வேண்டாமலே உள்ளே நுழைந்து விட்டது அவனுக்கு புரிந்தது. அவளை பார்த்த பின் வேலையில் அவன் கவனம் இருந்தாலும் அவ்வப்போது அவள் முகம் வந்து போனது ஏன் என்பது லேசாக புரிவது போல் இருந்தது.

 

 

மீண்டும் பேருந்து நிகழ்வுகளை அவன் மனம் அசைபோட அபியின் முகம் ஏன் வேதனையை சுமந்தது என்று அவனை யோசிக்க வைத்தது. அதில் ஏதோ சொல்லொணாத கவலை தோய்ந்திருப்பதாக அவனுக்கு தோன்றியது. ‘கடவுளே இது போன்றதொரு வேதனை அவளுக்கு நிகழ்ந்திருக்குமோ என்று எண்ணினான்.

 

 

அப்படி எண்ணும் போதே அவனுக்குள் கொலை வெறி வந்தது, அப்படிப்பட்ட ஆண்களை நிற்க வைத்து தோலை உறிக்கவேண்டும் என்ற ஆத்திரம் அவனுக்குள் எழுந்தது.

 

 

அதே சமயம் அவளுக்கு ஒரு துன்பம் நேர்ந்திருக்கும் என்று நினைத்துக் கூட அவனால் பார்க்க முடியவில்லை, அவன் மனதில் ஏதோ சொல்ல முடியாத ஒரு வேதனை சூழ்ந்தது.

 

 

அவனுக்கு அவளின் அந்த வேதனை நிறைந்த கண்கள் ஆயிரம் சேதி சொல்லின, அவ எந்த கஷ்டமும் பட்டிருக்கக் கூடாது, இனியும் அவளுக்கு எந்த கஷ்டமும் வராமல் நான் அவளை பார்த்துக் கொள்வேன் என்று அவன் மனம் நினைத்தது.

 

 

அவன் மனம் சொல்லிய சேதி மூளையை வந்தடைய இதென்ன எனக்குள் இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது, நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேனா. இது அவளின் மேல் உள்ள பரிதாபமா இல்லை காதலா என்று அவன் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.

 

 

மனம் யோசனையில் ஒரு தீர்க்கமான முடிவெடுத்தது, அதன் பின்னே அவனுக்கு மனம் லேசானது போல் இருந்தது. அவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்த கல்யாண் அவன் நினைவுகளை கலைக்க வென்று வந்து சேர்ந்தான்.

 

 

“என்னடா நம்ம ஆபீஸ் தரைக்கு டைல்ஸ் எதுவும் ஓட்டப் போறியா, இல்லை புதுசா சோபா செட் எதாச்சும் வாங்க போறியா என்றான் கல்யாண். அவன் என்ன கேட்கிறான் என்பது புரியாமல் வைபவ் அவனை பார்த்தான்.

 

 

“இல்லை ஆபீஸ் அளந்துட்டு இருக்கியே அதான் கேட்டேன், இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி குறுக்கும் நெடுக்குமா அலையுற. என்னடா எதாவது பிரச்சனையா என்றான் கல்யாண் அக்கறையாக.

 

 

“ஏன் கல்யாண் எல்லா ஆண்களும் தப்பானவங்களா என்றான் வைபவ். இப்போது புரியாமல் முழிப்பது கல்யாணின் முறையானது. “என்னடா சொல்ற கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு.

 

 

“இன்னைக்கு நான் அபியை பார்த்தேன் என்றான் அவன். “அபியா ஓ அந்த பொண்ணா, நீ கூட மருத்துவமனையில சேர்த்து அந்த பொண்ணுகூட உன்னை அசிங்கப்படுத்தி அந்த பொண்ணா என்றான் அவன் விளக்கமாக.

 

 

“உன்னை இப்போ யாராச்சும் இவ்வளவு விளக்கமாக கேட்டாங்களா, எதுக்கு இப்படி நீட்டி முழக்கி சொல்லி என்னை அசிங்கப்படுத்துற

 

 

“சரி சரி விடுடா, என்னாச்சு அந்த பொண்ணு உன்னை திரும்ப அசிங்கப்படுத்திட்டாளா என்றான் கல்யாண். “அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை, நடந்ததை என்னை சொல்லவிடு, நீ பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்காதே என்றவன் அதுவரை நடந்த நிகழ்வுகளை நண்பனிடம் சொன்னான்.

 

 

கல்யாணுக்கும் சற்றே அதிர்ச்சியாக இருந்தது, வைபவ் அவனை சும்மா விட்டு வந்திருக்கிறான் என்றால் அது மிகப்பெரிய விஷயம் என்று அவனுக்கு தோன்றியது, எப்போதும் வைபவ் கண்டிப்பானவன். அவன் தவறுகளை பொதுவாக மன்னிப்பதில்லை.

 

 

அவன் மன்னித்து இருப்பது அவனுக்குள் ஆச்சரியத்தை கிளப்பியது, “வைபவ் இந்த ஒரு சம்பவத்தை வைச்சு எல்லா ஆண்களும் தப்பானவங்கன்னு எப்படிடா சொல்ல முடியும், அப்படி பார்த்தா பெண்கள்லயும் இது போல சிலர் இருக்காங்க அதுக்காக நாம ஒட்டுமொத்தமா எல்லா பெண்களும் தப்புன்னு சொல்றது இல்லையே என்றான் கல்யாண்.

 

 

“எனக்கு புரியுதுடா இருந்தாலும் இதை பத்தி பேசும் போது அபியோட முகத்துல ஒரு வேதனை வந்து போச்சுடா, எதையோ சொல்ல முடியாம அவ தவிச்ச மாதிரி எனக்கு தோணிச்சு, அதை பார்க்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு கல்யாண்

 

 

“பாவம் கல்யாண் அந்த பொண்ணு, அவ வாழ்க்கையில இப்படி ஏதாவதொரு கஷ்டத்தை அவ அனுபவிச்சு இருப்பாளோன்னு தோணுது, அவ எப்படி இதெல்லாம் சமாளிச்சு இருப்பா, எனக்கு ஒண்ணும் புரியலைடா கல்யாண்

 

 

கல்யாணுக்கும் ஒன்றும் புரியவில்லை, ‘இதென்ன இவன் இவ்வளவு வருந்துகிறான், இப்படி நடந்து கொள்பவனில்லையே இவன் என்று யோசித்தான் அவன்.

 

 

‘என்னாச்சு இவனுக்கு அந்த பொண்ணை பத்தியே பேசிட்டு இருக்கான், “என்னடா வைபவ் சொல்ற அந்த பொண்ணுக்கு அது போல கஷ்டமா!!! அதெல்லாம் இருக்காதுடா என்றான் கல்யாண் நண்பனை ஆறுதல் படுத்தும் விதமாக.

 

 

“அவளை கஷ்டப்படாம பூ மாதிரி பார்த்துக்கணும்டா கல்யாண், நான் ஒரு முடிவு பண்ணிட்டேன், நான் அவளை கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நீ இவ்வளவு நாளா என்னை கேட்டுட்டே இருந்தியே எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு இப்போ சொல்றேன்டா

 

 

“நான் அபியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன், அவளை எதுக்காகவும் கஷ்டப்படாம பார்த்துக்க நான் நினைக்கிறேன் கல்யாண், நீ எனக்காக அவங்க வீட்டுல போய் பொண்ணு கேட்பியா. கல்யாண் வைபவின் பேச்சில் திகைத்து விழித்தான்.

 

 

உன் விழிகள் வேதனை

சுமப்பதை பார்த்து

என் கைகள் உயர்ந்து

உன்னை அணைக்க

துடிக்கின்றன…

 

என்னவளே…

என் இதயம் உனக்காக

மட்டுமே துடிப்பது போல்

இக்கணம் நான்

உணர்கிறேனடி…

 

உன்னை என்னவளாக்க

இந்த நொடியே உன்

கழுத்தில் மங்கலநாண்

பூட்ட என் கரங்கள்

எழும்புகிறது…

 

உன் கண்ணில் இனி

துயரத்தின் சாயல்

என்றுமே விழாது

உன்னை நான்….

என் கண்ணின்

மணி போல் வைத்து

உனக்கு இமையாய்

இருந்து காப்பேனடி…

 

என் மூச்சு உள்ளவரை

உன் மூச்சை

என் மூச்சாய்

சுவாசித்து உனக்காய்

உயிர்வாழ்வேனடி…