மகிழ்நிரதி சிறுவயதிலிருந்து இருளை துளி கூட விரும்பியதில்லை, சொல்லத் தெரியாத பயம் அவளை அழுத்தும். பசி ஒருபுறம் அவளின் உடல் சக்தியை இழக்கச் செய்திருந்தது. அசதியில் துளிகூட உறக்கம் வரவில்லை பயத்தில் படபடக்கும் மனதோடு ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.
ரிஷி அவன் அறைக்குள் சென்று கதவை மூடி பலமணி நேரங்கள் கடந்து விட்டது. தனிமையும் இருளும் மகிழை அச்சமூட்டிக்கொண்டே இருந்தது. அந்த மெல்லிய இருளுக்குள் திடீரென கண்ணாடி விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்க, அரண்டு நடுங்கினாள். சத்தமோ ரிஷியின் அறையிலிருந்து தான் வந்தது, அவனுக்கு என்னவோ ஏதோ என படபடக்கும் இதயத்தோடு அவன் அறைக்குள் சென்றாள். உள்ளே செல்லாமா என ஒரு நொடி கூட தயங்கவில்லை, பயம் சென்ற இடம் தெரியவில்லை.
அவன் அறையோ மேலும் இருளில் மூழ்கியிருந்தது. மெல்லிய முனங்ககள் ஒலி அந்த இருளிலும் அவளை கட்டிலை நோக்கி இழுத்தது. படுத்திருக்கும் உருவம் ரிஷி தான் என தெரியும், ஆனால் அந்த உடலின் நடுக்கமும், முணுமுணுப்பும் அவளுள் அவன் நலம் குறித்த பயத்தை விதைக்க மெல்ல தன் மென்கரம் கொண்டு அவன் நெற்றியை தொட்டுப்பார்த்தாள். ஐஸ்கட்டியை உள்ளக்கைக்குள் அள்ளியதை போன்ற குளுமை, அதை தாங்க முடியாது சட்டென கைகளை மீட்டுக்கொண்டாள்.
ரிஷியின் உடல் வெப்பநிலை வெகுவாக குறைந்திருந்தது, தன்னிலை இழந்து மேலும் குளிர் தாங்காது குளிர்காய்ச்சலில் நடுங்கி, புலம்பிக்கொண்டிருக்கிறான் என மகிழுக்கு நன்கு புரிந்தது. உடல் வெப்பநிலை குறைந்துக் கொண்டு செல்வது நல்லதற்கல்ல என உணர்த்துக் கொண்டவள் துரிதமாகச் செயல்பட்டாள். மேலும் குளிர் வரவிடாத அளவிற்கு திரைச்சீலைகள் அனைத்தையும் இழுத்து மூடினாள்.
தன் மார்போடு கட்டிக்கொண்டு நடுங்கிக் கொண்டிருந்த ரிஷியின் கரத்தை தைரியமுடன் பற்றி இழுத்து உள்ளங்கைகளை உஷ்ணமேற தேய்த்துவிட்டாள். அந்த உஷ்ணம் ரிஷியின் உடலுக்கு போதுமானதாய் இல்லை. மேலும் ஒரு போர்வையை எடுத்து வந்து அவன் மேல் போர்த்த, அந்த போர்வையில் இல்லாத கதகதப்பை அதை போர்த்தும் அவள் கைகளில் கண்டுகொண்ட அவன் குளிர்தேகம் போர்வையோடு போர்வை போலே அவள் உடலை இழுத்து இறுக்கத் தழுவிக்கொண்டது. ரிஷியின் உடல் குளுமைக்கு அவள் உடல் உஷ்ணம் தேவையாகவும் இதமாகவும் இருக்க, நெருங்கி வரும் காந்தத்தை ஈர்க்கும் காந்தம் போன்றே இழுத்துக்கொண்டான்.
ரிஷி முற்றிலும் சுயநினைவை இழந்த நிலையிலிருந்தான். மகிழ் சுயநினைவில் தானிருந்தாள், ஆனால் அவள் சிந்தையெல்லாம் ரிஷியின் நலன் மட்டுமே இருந்தது. தன்னிலையோ, தந்தையோ நினைவில் இல்லாது போக இதில் எங்கே திருமணம் நினைவில் வர? தன்னை அணைத்த நொடி உறைந்தே போனாள்.
அடிபட்டு வலியோடு அன்னையின் அரவணைப்பில் அடங்கும் குழந்தையை எவ்வாறு தள்ளிவிட? அது போன்றே அவள் நிலை. சூடு வேண்டி தன் மார்புச்சூட்டில் பொதிந்தவனை தள்ள முடியவில்லை. அவன் எவ்வாறோ ஆனால் அவள் கொண்ட அன்பு உண்மை தானே! அந்த அன்பே அவளை பலகீனப்படுத்தியது.
ரிஷியின் கைகள் உடல் உரசிக்கொள்ளும் அளவிற்கு இறுக்கி அணைத்திருக்க, அவள் வெப்ப மூச்சுக்காற்றின் வீச்சை வாங்கிக்கொள்ளும் வகையில் அவன் முகம் மகிழின் நெஞ்சில் பதிந்திருந்திருக்க, ரிஷியின் உடல் முழுவதும் அவளை அழுத்திக்கிடக்க, மெல்ல அவள் சோர்ந்த விழிகளும் நித்திரையை தழுவி மூடிக்கொண்டது. பசியும் பயமும் ஒருபுறம் இருக்க அது உறக்காமா? மயக்கமா? என தெரியாத நிலையில் அமிழ்ந்து விட்டாள்.
நேற்றைய நிலையில் ரிஷி எதையும் உணரவில்லை எனினும் மகிழுக்கு மட்டுமான பிரத்தேக வாசம் அவன் மூளையில் போதை தரும் மருந்தைப் போன்று புதைந்துக்கொண்டது. இன்றும் அந்த படுக்கையில் அவள் வாசம் உணர்ந்தான். அவள் நினைவே இல்லாத போதும் அவள் வாசத்தின் சுவாசத்தில் அழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை அதிகாலையில் கலைத்தது கைபேசி அழைப்பு.
அரை உறக்க நிலையில் அட்டென் செய்ய, செங்கல்பட்டு அருகே அவர்கள் கார் விபத்திற்கு உள்ளானதாகவும், அதிலிருந்த பயணிகள் அருகே இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாகவும் தகவல் சொல்லப்பட பதறி எழுந்தான் ரிஷி.
அன்பு தங்கை மற்றும் அன்னையின் நலனே அந்த நொடி அவன் மனதில் வேண்டுதலானது. பதைபதைப்புடனே மருத்துவமனைக்கு விரைந்தான். மருத்துவமனைக்குச் சென்று விசாரிக்க, அங்கிருந்த ஊழியர்கள் ஒரு வார்டிக்கு அழைத்துச் சென்றனர். உடல் முழுவதும் பலத்த காயங்களோடு வருணாவும், ட்ரைவரும் மட்டுமே அனுமதிக்கப்பட அவர்களுக்கான சிகிச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதற்குள் இரு காவலார்கள் வந்து அடிப்படை தகவல்கள் சிலவற்றை விசாரித்துக்கொண்டிருக்க, அதற்கு பதில் சொல்லாமல் அவனோ அன்னையை பற்றி விசாரித்தான்.
தேவகி விபத்தான இடத்திலே இறந்திருக்க அவர் உடல் பிரேதபரிசோதனைக்கு பின் சில மணிநேரங்களில் தரப்படும் என்ற தகவலை சொல்லிச்செல்ல, அதை தாங்கும் சக்தியற்று முற்றிலும் உடைந்து அமர்ந்தான் ரிஷி. உயிர்தந்தவள் உயிரிழந்திருக்க காக்காது போய்விட்டேனே என நினைத்து துடித்தான். அவனையும் மீறி கண்கள் கசிந்துக்கொண்டிருந்து.
ஒரே நாளில் தான் வாழ்வின் வண்ணமெல்லாம் அழியுமென்று அவன் கற்பனையிலும் காணவில்லை. தன் வாழ்வின் ஆதராமும் அன்பின் அடைக்கலமும் அவர்கள் இருவர் தான், அவர்கள் இல்லாது வாழும் அவலவாழ்வு வேண்டவே வேண்டாமென்று வேண்டினான். அன்னையின் இழப்பை துளிகூட தாங்க இயலாது சரிந்த கோபுரமாய் தன்னிலை இழந்து அமர்ந்திருந்தவன் அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் அறியாது முடங்கினான். மருத்துவர், காவலர்கள், செவிலியர் என அனைவரும் அவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது தனது உதவியாளர் சங்கரனை அழைத்தான்.
வந்தவர் ரிஷியின் நிலை கண்டு வேதனை கொண்டு அவரே மருத்துவர் காவலாளர்களிடம் பேசினார். வருணாவின் நிலை சீரியஸாக இருக்க அவளை சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு மாற்றிவிட்டு, ரிஷியை அவன் அன்னையின் இறுதிச்சடங்குகளை நிறைவேற்ற வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அன்றைய நாள் அவனுக்கு பல வலிகளை பரிசளிக்கும் சோதனை நாளாக தான் இருந்தது. இரவெல்லாம் இமை கூட மூடாது மருத்துவமனையில் தவம் கிடந்தான் ரிஷி. முற்றிலும் தளர்ந்து நொடிந்து வருணாவின் நலம் வேண்டி அமர்ந்திருக்க, காலையிலே அவள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல் உரைத்தார் மருத்துவர். உடன் அவன் இதயத்திற்கு இடியென மற்றொரு செய்தியையும் உரைத்தார். வருணாவின் தண்டுவ எலும்பு மற்றும் காலிலும் பல எலும்புகள் முறிந்துள்ளதாகவும் உயிர் பிழைத்தாளே தவிர வாழ்வானது பெரும்பங்கு படுக்கையில் தான் என்றனர். இருந்தும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்வதாக ஆறுதல் உரைத்துச் சென்றனர்.
அன்னையோ முகம் கூட காட்டாது சென்றுவிட ஆறுயிர் தங்கைக்கோ இந்நிலை! முதல் முதலாக எதிர்காலம் குறித்துபயம் கொண்டான். கொலுசொலி சிணுங்க அவள் ஓடியாடி விளையாடிய வீட்டில், உயிரற்ற பொருள் போலே அவள் நிலையம் இனி! அவன் வேதனையை விட இதை தங்கை எவ்வாறு தாங்கிக் கொள்வாள் என நினைக்கையில் அதிகம் வலித்தது.
இரண்டாம் நாள் வருணாவிற்கு நினைவு திரும்ப, அன்று மாலையே ரிஷி பார்க்க அனுமதிக்கப்பாட்டான். பால்நிலவு போன்ற அழகு முகத்தில், உதடு நெற்றி, முன் பற்களில் காயமும், தலையில் சிறுகட்டும், அதே போல் கைகள், கால்களில் கட்டோடு காகித பூபோலே கிடைத்தாள். கண்கள் கலங்க அருகே சென்று தலை தடவினான்.
“வலிக்குதா வருணாம்மா?” என்க, உணர்ச்சி இருந்தாதானே வலி தெரியும்? என நினைத்தவாறு மறுப்பாய் தலையசைத்தாள். அந்த கணமே ரிஷிக்கு கண்ணீர் வலியத் தொடங்கியது.
“ம்மா…எங்…க?” என கேட்க திணற, அவள் உதடு அசைவுகளில் அவள் கேட்பதை புரிந்து கொண்டவன், பேச வேண்டாம் என்பது போல் தன் உதட்டின் மீது கைவைத்து சைகை காட்டிவிட்டு மீண்டும் தலை வருடத் தொடங்கினான்.
அவன் சொல்ல மறுத்தாலும் அவள் புரிந்துக்கொண்டாள், கடைசி நொடிகளில் உடன் இருந்தது அவள் தானே, வருணாவின் கண்களும் அன்னையை எண்ணி கலங்க, வலிக்காது தன் ஒற்றை விரல் கொண்டு துடைந்தவாறு அருகிலே சில மணிநேரம் அமர்ந்திருந்தான்.
முழுதாக பதினைத்து நாட்கள் வருணாவிற்கும், ரிஷிக்கும் மருத்துவமனை வாசமே. அதன் பின்னும் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என வருணா தான் அடம்பிடித்தாள். வெளிக்காயங்கள் சற்றே சரியானா போதும் மருத்துவர்களோ அவள் தண்டுவட எலும்பு முறிவை சரி செய்வதற்கான சாத்தியம் உண்டோ என ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.
ரிஷி இன்னும் சிறிது நாட்கள் இருக்கலாம் என்றுரைக்க, மீண்டும் வருணா தான் அடம்பிடித்தாள். வீட்டில் இருந்தால் கூட இவ்வாறு உணருவாளே தெரியவில்லை, மருத்துவமனை படுக்கை என்பது அவளை பலகீனப்படுத்துவது போலே உணர்ந்தாள், உடலாலும் மனதாலும் நொறுங்கி இருந்தாள். அதுமட்டுமின்றி ஊண், உறக்கமின்றி கருவளையிட்ட கண்களோடு மெலித்த தோற்றமும் கவலை முகமுமாய் ரிஷியை காண தாங்க முடியவில்லை.
வெளியில் சொல்ல முடியவில்லை எனினும் இருவரின் உள்ளமும் அன்னையின் கதகதப்பான அரவணைபிற்கு ஏங்கியது. வருணாவிற்கு மருந்தும், நெடியும் முற்றிலும் வெறுத்துவிட வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்ற அவள் பிடிவாதம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. வேறுவழியின்றி ஒரு மருத்துவர் மற்றும் உடன் இருந்து கவனித்துக்கொள்ள ஒரு செவிலியர் என தேவையான வசதிகளோடு தங்கை வீட்டிற்கு மாற்றினான்.
வீட்டிற்கு வந்து ஒரு வாரத்திற்கு பின் வருணாவின் நலன் விசாரிக்க குருமூர்த்தி அவர் மனைவி விமலாவுடன் வந்தார். தந்தையின் நல்ல நண்பரும், அன்னைக்கு தூரத்து உறவும் ஆவர். தேவகி இருந்த போது அவர் மகள் சந்திரிக்காவிற்கும் ரிஷிக்கும் திருமண பேச்சுவார்த்தை இருந்தது, ஆனால் உறுதி செய்யவில்லை.
வந்தவர்களை வரவேற்று உபசரித்தவன் தங்கையை காண அழைத்துச் சென்றான். வருணாவின் அருகே அமர்ந்து அவள் கரம் பற்றிக்கொண்ட, விமலா “எப்படிம்மா இருக்க? இப்போ உடம்பு நல்லாயிருக்க?” என்றார்.
“ஸ்ரீனிவாசன் மகளாச்சே இப்போ தான் நீ தைரியமா இருக்கணும் வருணாம்மா” என்றவர் அவர் தலை தடவி விட்டு ரிஷியிடம் வருணாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துக் கொண்டார்.
“வருணாவோட மெடிக்கல் ரிப்போர்ட் எனக்கு மெயில் பண்ணு, நான் என் ப்ரண்ட் சுரேந்தர்கிட்ட அவளுக்கான ட்ரீட்மெண்ட் பத்தி பேசிப்பார்கிறேன்” என்றவாறு ரிஷியோடு வெளியே வந்தார்.
விமலா வருணாவுடன் பேசிக்கொண்டிருக்க, குருமூர்த்தி ரிஷியிடம், “ஒருமாசமாச்சு இன்னும் உடஞ்சி போய் இருந்தா எப்படிப்பா, நீ தைரியமா இருந்தாதானே வருணாவுக்கும் அது தைரியம்?” என்றார்.
“ம்ம், சரி அங்கிள்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.
“ஆஃபிஸ் பக்கமே போறதில்லை போலயிருக்கு. நாளையில இருந்து போக ஆரம்பி தொழிலை கவனி. ஸ்ரீனிவாசன் கஷ்டப்பட்டு கட்டமைச்ச தொழில் விட்டுறாத ரிஷி” என்க, அதற்கும் சரியென்றே தலையாட்டினான். தான் ஊட்டினால் ஏதோ தனக்காக என சிறிது உண்ணும் வருணா, வேலையாட்கள், பிறரிடம் பேசுவது கூட இல்லை என்பதற்காகவே வீட்டில் இருந்தே முடிந்த வரை தொழிலை கவனிக்கொண்டிருந்தான்.
“அப்பறம் உங்கிட்ட இன்னொரு விஷியம் சொல்லணும்” என்க, “சொல்லுங்க அங்கிள்” என்றான்.
“சந்திரிக்காவுக்கும் உனக்கும் சீக்கிரம் நிச்சியகார்த்தம் வைக்கலாம்னு இருக்கேன், உனக்கு சம்மதமானு சொல்லு” என்றார். ரிஷி யோசனையில் அமர்ந்தான், தங்கை இந்நிலையில் இருக்க தனக்கு திருமணத்தை பற்றி யோசிக்க வேண்டுமா என்றிருந்தது.
அதை உணர்ந்தவர், “உன் கல்யாணம் வருணாவுக்கு ஒரு மாறுதலை தரலாம் இல்லையா, அதுவும் போக வீட்டப் பார்த்துக்கவும் உனக்கு சப்போர்டிங்காவும் ஆள் வேணும் ரிஷி. கொஞ்சம் யோசிப்பா, உனக்கு சந்திரிக்காவை கேட்டது உன் அம்மா தான்” என்றார்.
அன்னை இருந்திருந்தால் மறுத்திருப்பானோ என்னவோ ஆனால் இப்பொழுது அன்னையின் தேர்வை மறுக்க தோன்றாது “சரி அங்கிள், நிச்சியகார்த்ததுக்கு ஏற்பாடு பண்ணுங்க பட் கொஞ்சம் சிம்பிள்லா இந்த வீட்டுலயே இருக்கட்டும்” என்றான். இனி தன் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் வருணாவின் நலனை முன்னிலைப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
“ரொம்ப சந்தோசம் உன் விருப்பப்படியே செஞ்சிடலாம்” என்ற குருமூர்த்தி மனைவியோடு விடைபெற்றார். தான் செய்வது சரியா என ரிஷி முதல் முதலாக முடிவெடுத்த பின் குழம்பினான். குழம்பிய மனதிலிருந்து எவ்வாறு தெளிவான முடிவு கிடைக்கும்?