Advertisement

நெருங்கி வா..முத்தமிடாதே..!!

 

சாய்….சாய் குட்டி எழுந்திருடா…..” என்று தன் மூன்று வயது மகள் சாய் சாஹித்யாவை எழுப்பினான் ஜெய் என்ற ஜெய்சங்கர்.

 

“எஞ்சிட்டேன்னே..” என்றபடி கட்டிலிலிருந்து துள்ளிக்குதித்து குளியறைக்குள் சென்ற மகளை பின் தொடர்ந்தவன் அவளை பல் துலக்க வைத்து ,குளிப்பாட்டி உடை அணிவித்து அவனும் ரெடியானான்.

 

அவன் சாஹித்யாவைத் தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வர , அங்கே அவனது மூத்த மகள் சதுர்மதி அவனை முறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.அவனது மூத்த மகளுக்கு வயது இருபத்தி ஏழு.

 

ஆம்..அவள் அவனுக்கு மகள் தான்.அப்படிதான் அவன் அவளை தாங்குவான்.ஏனெனில் பெயரில் மதியைக் கொண்டிருக்கும் சதுர்மதி இப்போது மதியிழந்த நிலையில் இருக்கிறாள்.ஆறு ஆண்டுகளுக்கு முந்தி  நடந்த ஒரு சம்பவத்தால் அவளது மனம் தாங்கா முடியாத அதிர்ச்சியை சந்திக்க , அவள் பைத்தியமாகி விட்டாள்.தன் தந்தையின் எதிர்ப்பையும் மீறி மன நலம் பாதிக்கப்பட்ட சதுர்மதியைத் திருமணம் செய்தவன் இன்று வரையில் அவளுக்கு நல்ல கணவனாக, தந்தையாக இருந்து வருகிறான்.  

 

தந்தை போல் தாங்கும் கணவன் கிடைப்பது வரமல்லவா..?

 

சதுர்மதியைக் கண்டதும் “மா…………….” என்று சாய் ஓடி போய் அவளருகில் அமர்ந்து ,

 

“குட்டு மாரிங்…சொல்லும்மா” என கேட்க

 

“போ……நா சொல்ல மாட்டேன்….எனக்குப் பசிக்குது…………………..நீங்க லேட் செஞ்சிட்டீங்க……என்னை மட்டும்  இந்த ஜெய் சீக்கிரம் எழுப்பி விட்டிடுச்சு…..பேட் பாய்…” என அவள் கணவனை திட்ட

 

“நோ நோ…டாடி குட் பாய்……அப்படி சொல்லக்கூடாது..சதி(சரி)….வா… சாப்பிடலாம்மா….” என்று அவள் கையைப் பிடித்து சாய் இழுக்க

 

“போ..நீயும் பேட்……ஜெய்யும் பேட்….எனக்கு சாப்பாடு வேண்டாம்…..” என்று அவள் அடம்பிடிக்க,

 

மகளைத் தூக்கியவன் , “சரளாம்மா……………………என்ன செஞ்சீங்க இன்னிக்கு….என் பேபி கோபமா வேற இருக்கு…..” என்று அவரிடம் கேட்க

 

“நான் நம்ம மதிம்மாக்குப் பிடிச்ச பூரியும் சன்னாவும் தான் செஞ்சேன்…தம்பி………” என்றார் சரளாம்மா.

 

சாஹித்யாவை டைனிங் டேபிளில் அமர வைத்து அவளுக்கு சரளாம்மா சாப்பாடு வைக்க , இவன் தட்டில் பூரியை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்த அவன் முதல் குழந்தையாகிய அவன் மனைவியிடம் போய் ,

 

“சதுக்குட்டிக்கு என்ன கோபம்…………சீக்கிரம் எழுந்தா என்ன தப்பு…….இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம சாய்க்குட்டி ஸ்கூலுக்குப் போவாளே…அப்போ……….அவளையும் சீக்கிரம் எழுப்பி விட்டுடுவேன்…….இப்போ…கோபப்படாம சாப்பிடனும்…” என்று சிறு குழந்தைக்கு சொல்வதைப் போல் சொன்னான்.

 

அவளும் மனதளவில் குழந்தைதானே..!சொல்லப்போனால் அவர்கள் மகள் சாய் கூட சொன்ன பேச்சு கேட்பாள்.அவன் மனைவி தான் அதிகம் சேட்டை செய்வாள்.

 

“போ……. நீ எனக்கு வேண்டாம்………நீ பேட்……..” என்று அவனின் சட்டையில் கைவைத்து தள்ளி விட  அவனோ சிறிதும் அலட்டிக்கொள்ளாது ,

 

“நீ மட்டுமா சீக்கிரம் எழுந்த……..ஜெய்யும் தானே எழுந்தேன்……….அப்போ உன் ஜெய் பாவமில்லயா..?” என முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு கேட்க

ஒரு நொடி யோசித்தவள் ,

“நீயும் சீக்கிரம் எழுந்தியா…..ஜெய் ?” என வினவ

 

“நான் சீக்கிரம் எழுந்தா தானே உன்னை எழுப்ப முடியும்…..உன்னை நான் தானே எழுப்பினேன்….நீயாவா எழுந்த.?”

 

தன் தலையில் தட்டிக்கொண்டவள் “ஆமாம்ல……ஷரி….ஷாரி……நீ குட் பாய் தான்..” என்று கணவனுக்கு செர்டிஃபிகெட் கொடுத்துவிட்டு வாயைத் திறக்க புன்னகையுடன் பூரியை அவள் வாயில் வைத்தான்.

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரளாம்மாவுக்கும் இதழ்கள் தானாக விரிந்தன.நாலு ஆண்டுகளாக அவர் இந்த வீட்டில் வேலைப்பார்க்கிறார்.ஒரு நாள் கூட ஜெய்சங்கரின் அன்பில் மாற்றம் இல்லை.சதுர்மதி இப்போது பரவாயில்லை.முன்னரெல்லாம் இன்னும் அடம்பிடிப்பாள்.

இவருக்கே சில நேரம் எரிச்சலாகும்.ஆனால் அவளை கடிந்து ஒரு சொல் சொன்னதில்லை ஜெய்.

 

அவன் தான் , “அவ இப்போ குழந்தை மாறி இல்லம்மா..குழந்தையே தான்…..இதை நான் அவ கணவனா சொல்லல……ஒரு டாக்டரா சொல்றேன்…..கொஞ்சம் அன்பா சொல்லுங்கம்மா….பெரியவளா அவளை நினைச்சு நீங்க  நடத்துனீங்கனா அவ கேட்க மாட்டா..உங்க பேத்தி மாறி தான் அவ,…” என்று அவருக்கு மனைவியின் உண்மை நிலையை புரியவைத்தான்.அன்றிலிருந்து அவரும் அவளை குழந்தை போல் ட்ரீட் செய்ய அவளும் அவரது சொல்பேச்சு கேட்டு நடந்து கொண்டாள்.

 

தன் தந்தை தாய்க்கு ஊட்டி விடுவதைக் கண்ட அவர்கள் மகள் தன் தட்டோடு வந்து நின்று ,

 

“அப்பா….எனக்கு…..” என சொல்ல

 

குழந்தையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டவன் தன் இரு மகள்களுக்கும் ஊட்டினான்.அதன்பின் அவன் வேகவேகமாக உண்ட பின் , எப்போதும் போல் சரளாம்மாவிடம்

 

“மா…….ரெண்டு பேரையும் ஜாக்கிரதையாப் பார்த்துக்கோங்க…….பணம் எப்போவும் போல அந்த உண்டியல்ல இருக்கு..என்ன வேணுமோ…வாங்கிக்கங்க…..மதியம் சதுவை சாப்பிட வைச்சிருங்க…..அவ அடம்பிடிச்சா எனக்குப் போன் செஞ்சு சொல்லுங்க….” என்று சொல்ல

 

சரளாம்மாவோ சிரித்தார்.

 

“என்னமா சிரிக்கிறீங்க….?”

 

“பின்ன என்ன தம்பி நீங்களும் இதையே தான் தினமும் சொல்றீங்க….என் பேத்திங்க ரெண்டு பேரையும் நான் நல்லா பார்த்துப்பேன் போதுமா…பேசாம ஒரு ரேடியாவுல இதை பதிவு செஞ்சு வைச்சுடுங்க….நீங்க போகும்போது நான் போட்டுக் கேட்டுக்கிறேன்..” என்று சிரிக்க,

 

லேசாக அசடு வழிந்தவன் ,”ஹி ஹி…..” என்றபடியே மனைவியிடம்  சென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு , “சதுக்குட்டி சமத்தா இருக்கனும்…….ஒழுங்கா சாப்பிடனும்..அப்போதான் நான் பீச்சுக்குக் கூட்டிட்டுப் போவேன்…” என்றான்.

 

மகளுக்கு முத்தமிட்டு ,”சாய்மா……அம்மாவைப் பார்த்துக்கோ…ரெண்டு பேரும் சண்டை போடாம இருக்கனும்டா…” என சொல்ல

 

“ஓகேப்பா….” என்ற சாய் தந்தையின் கன்னத்தில் முத்தமிட ,மகளுக்கு மீண்டும் தந்தை முத்தமிட

 

அதைப்பார்த்த சதுர்மதி , “ஜெய்…..அவளுக்கு மட்டும் டூ கிஸ்……எனக்கு ஒன்னு தானா…?” என சண்டைக்கு வர

 

“நான் அப்பாக்குக் கிஸ் குத்தேன்..நீ குத்தியா…?”

 

மகளை முறைத்த்வள் ,“ஜெய்..இங்க வா…” என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட , இதெல்லாம் நடக்கும்போது சரளாம்மா சமையல் கட்டுக்குள் போய் விட்டார்.தினமும் நடக்கும் கூத்து தானே….!!அவர் இல்லாததை உறுதிப்படுத்தியவன் ,

 

“உனக்கு இல்லாத கிஸ்ஸாடா சது…” என்று மீண்டும் மனைவியின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ்ப்பதித்தான்.

 

இருவரிடமும் பை சொல்லிவிட்டு , “சரளாம்மா…கதவை சாத்திக்கோங்க……….நான் போயிட்டு வரேன்..”

என்றபடியே  அவன் வேலைப்பார்க்கும் மருத்துவமனைக்குக் கிளம்பினான்.

 

டாக்டர்.ஜெய்சங்கர் ராகவன்.consultant pshychologist. என்ற பெயர் பலகை இருந்த அறைக்குள் சென்றான்.முதல் வேலையாக தன் தாய் ராதிகாவுக்குப் போன் செய்து அவர் நலம் விசாரித்தான்.அவன் தந்தை ராகவனோடு தான் அவனுக்கு மனஸ்தாபம்.இப்போது என்றில்லை எப்போதுமே உண்டுதான்.

 

அவனை அவர் அவரைப்போலவே எம்.பி.பி.எஸ் படிக்க சொல்ல, அவனோ ,”உடலைப் படிக்கறது ஈசிப்பா……மனசைப் படிக்கறதுதான் கஷ்டம்….மனசு நல்லா இருந்தாலே உடம்பு நல்லாயிடும்…..” என்று சொல்லி அவரை மீறி பி.எஸ்.சி சைக்காலஜி படித்தான்.கடைசியில் டாக்டர் பட்டம் வரைக்கும் வாங்கி விட்டான்.

 

அந்த வருத்தம் கோபமாய் மாறியது , அவன் சதுர்மதியைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொன்னப்போதுதான்.

 

ஒரு சைக்காலஜிஸ்ட் ஒரு மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வைத்தியம் பார்க்கலாம்.அதற்காக ஒரு பைத்தியைத்தையே கல்யாணம் செய்வது வடிக்கட்டின முட்டாள் தனம் என்பது தான் ராகவனின் எண்ணம்.உண்மையும் அதுதானே..!!

 

அவர் தனது ஆட்சேபனையைத் தெரிவிக்க ,ஜெய்சங்கரோ எப்போதும் போல் அவன் மனம் சொல்வதைக் கேட்டு செயல்படுத்தியும் விட , மகனை வீட்டை விட்டே விரட்டிவிட்டார் ராகவன்.தந்தைக்கும் மகனுக்கும் இந்த நாலு ஆண்டுகளாக பேச்சு வார்த்தையே இல்லை.ஆனால் அவன் தாய் ராதிகா மட்டும் மனம் கேளாமல் மகனிடம் பேசுவார்.

 

தாய் மனம் அன்றோ…!!

 

தாயிடம் பேசியவன் அவனது மாமனார் மாமியாரிடமும் பேசி விட்டு தன் பணிகளைக் கவனிக்கலானான்.

 

********************************************************************************

வீட்டில் டீவியில் டாம் அண்ட் ஜெர்ரி பார்த்துக்கொண்டிருந்தனர் அம்மாவும் மகளும்.தெருவில் ஐஸ் ஐஸ் என்று ஐஸ் வண்டி போகும் சத்தம் கேட்டு ,

 

“ஐ…..ஐஸ்…ஐ…ஐஸ்…………” என  குதித்தாள் சாய் சாஹித்யா.

 

“அம்மா…ஐஸ்கீரிம்…”

 

“ஐய்…ஐஸ்கீரிம்……வா…வா…சாப்பிடலாம்….” என்ற மதி ,”சரளாம்மா….எங்களுக்கு ஐஸ் வாங்கித் தாங்க………” என கத்த

 

உள்ளே கிச்சனில் மிக்சியில் மசாலா அரைத்துக் கொண்டிருந்த அவரது காதில் விழவில்லை.

 

“சரளாம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆஆ” என்று அம்மாவும் மகளும் அலற

 

‘என்னமோ ஏதோ…’ என்று பதறியடித்துக் கொண்டு சரளாம்மா ஓடி வர ,தாயும் மகளும் நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டு ஐஸ் வேணும்… என்றனர்.

 

அவர் தெருவில் போய் பார்க்க அதற்குள் ஐஸ் வண்டி போயிருந்தது.

 

“ஐஸ்வண்டி போயிடுச்சு……நான் அப்பாவுக்குப் போன் செஞ்சு சாயங்காலம் வாங்கிட்டு வர சொல்றேன்………..” என்று அவர் சமாதானம் செய்ய

 

“எனக்கு இப்பொவே வேணும்….” என்று சாய் அழ,கூடவே சேர்ந்து ,

 

“ஜெய்யை இப்போவே வாங்கி தர சொல்லு……….எனக்கு ஐஸ் வேணும்……..” என்று மதியும் அடம்பிடிக்க அவர்களை சமாளிக்க முடியாமல் திண்டாடிப்போனார் சரளாம்மா.

 

எப்போதுமே அவர் வெளியே செல்ல தேவை இல்லாதபடி ஜெய்சங்கரே அனைத்துப் பொருட்களையுமே வாங்கி வைத்துவிடுவான்.

 

அவன் வீட்டில் இருக்கும்போது மட்டுமே மாலை நேரத்தில் சாய் குட்டியை அழைத்துக் கொண்டு  வெளியே செல்வார்.அவரால் இருவரையும் தனியே விட்டுச் சென்று கடைக்கு செல்ல முடியாது.என்ன செய்வதென்று புரியாமல் விழித்தவர் ஜெய்க்குப் போன் செய்தார்.

 

அவனிடம் விசயத்தை சொல்ல, “நான் வேற……இங்க கவுன்சிலிங் கொடுக்கறதுக்கு  நீலாங்கரையில உள்ள ஹாஸ்பிட்டலுக்கு வந்துருக்கேனே……….ம்………இருங்க நான் சிவா ஃப்ரீயா இருக்கானான்னு கேட்கிறேன்..” என்றவன் தன் தம்பி சிவசங்கருக்குப் போன் செய்து ,”சிவா…என்னடா செய்றா..நீ ப்ரீயா…?”

 

“இப்போ ஆபரேஷன் ஒன்னுக்கு அசிஸ்ட் செய்யப் போறேண்ணா …எதாவது முக்கியமான விசயமா…?”

 

“இல்ல…சும்மா தான் டா.” என்றவன் மீண்டும் சரளாமாவிற்கு அழைத்து ,மகளையும் மனைவியையும் சமாதானம் செய்ய

முயல,இருவருமே அழுது அடம் செய்தனர்…இப்போவே வாங்கித் தாப்பா…” என்ற பாட்டோடு.

 

“நம்ம மெயின் ரோட்ல…..இருக்க ஐஸ்கீரிம் கடைக்கு ரெண்டு பேரையும் அழைச்சிட்டுப் போய் வாங்கித் தாங்க….கைப் பிடிச்சுக் கூட்டிப்போங்கம்மா…..ரோட் க்ராஸ் செய்றப்ப ஜாக்கிரதை…போயிட்டு எனக்கு மறக்காம போன் பண்ணுங்க…”

என்றவன் ,

 

மனைவியிடமும் மகளிடமும் ,”வர வர சொன்ன பேச்சுக் கேட்கறதில்லை….சரளாம்மாவோட சமத்தா போய்….ஐஸ்கீரிம் சாப்பிட்டு வரனும்….அவங்க கையைப் பிடிச்சிட்டே போகனும்….” என்று அறிவுறித்து விட்டு போனை வைத்தான்

 

அவனது செல்ல மனைவியும் மகளும் சரளாம்மாவின் சொல் கேட்டு நடந்து ஐஸ்கீரிம் சாப்பிட்டனர்.கடையில் ஐஸ்கீரிமை சுவைத்துக் கொண்டே அவனிடம் போனில் பேசினர்.பின்னர் மூவரும் ரோட்டைக் க்ராஸ் செய்து அவர்கள் தெரு முனைக்கு வந்த போது இடப்பக்கத்தில் ஒரு ஆடவன் ஒரு பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு ஏதோ கோபமாகப் பேச ,அவளோ அவனிடமிருந்து கையை எடுக்கப் போராடினாள்.அவள் கண்கள் கலங்கி இருந்தன.

 

மதியம் என்பதால் ஆள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது.அந்த காட்சி சதுர்மதியின் கண்களில் விழ, தலைக் கனத்தது. நினைவடுக்களிலிருந்து மெல்ல அதே போல் அவள் வாழ்விலும் நடந்த காட்சி நினைவுக்கு வர, எங்கிருந்து தான் அவளுக்கு அவ்வளவு ஆவேசம் வந்ததோ சரளாம்மாவின் கையை உதறிவிட்டு ,அந்த ஆடவனை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினாள்.சரளாம்மா தடுக்க முயல, அதற்குள் அந்த ஆடவன் அவளைக் கீழே தள்ளியிருந்தான்.அதில் அவள் மயங்கிருந்தாள்.

Advertisement