Advertisement

 

நண்பகல்  இரண்டு மணி.கூடுவாஞ்சேரியில் இருந்த அந்த சோப் தயாரிக்கும் தொழிற்சாலை மதிய உணவு இடைவெளி என்பதாலும் சனிக்கிழமை என்பதாலும் ஊழியர்கள் அதிகமில்லாது  சற்று மந்தமாக இயங்கிக் கொண்டிருந்தது.பாக்கிங் பிரிவில் மட்டும் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன.ஒரு ஐந்தாறு பேர் அவசர அவசரமாக பாக்கிங் செய்த சோப்புத்தூள் பாக்கெட்டை அட்டைப்பெட்டியில் வைத்து அடுக்கினர்.

 

அப்போது யாரும் எதிர்ப்பாராவிதமாக புயலென உள்ளே நுழைந்தனர் அப்ஸரா , அபினவ் மற்றும் கவின்.பாக்கிங் பிரிவுக்குள் சென்று அங்கிருந்த பேக் செய்யப்பட்ட கார்டன்ஸையெல்லாம் கிழித்து ஒவ்வொரு சோப்புத் தூள் பாக்கட்டுகளைக் கொட்டினர்.கேள்வி கேட்ட ஊழியர்களைக் கவினும் அபினவும் துப்பாக்கியைக் காட்டி அமைதியாக இருக்க சொன்னார்கள்.அவர்களில் ஒருவன் முதலாம் மாடியில் இருக்கும் மானேஜருக்குத் தகவல் தர,அவர் உடனே செக்யூரிட்டியை அழைக்க அவரோ , “நான் சாப்பிட்டுட்டு இருக்கேன் சார்..நான் யாரும் உள்ளே வந்ததைப் பார்க்கலயே” என சொல்ல

 

மானேஜரோ , “மண்ணாங்கட்டி……சாப்பிட போன இன்னொருத்தனை வைச்சிட்டுப் போகனும்னு அறிவு வேண்டாம்..வைடா போனை இருக்கு உனக்கு…” என்றபடி அவன் ஒருவருக்கு போன் செய்ய,அவர் கொடுத்த உத்தரவு படி ,சிசிடிவி விஷுவலை ஆன் செய்து பார்த்தவன் வெறும் மூன்று பேர் மட்டுமே வந்திருப்பதாகத் தகவல் சொன்னான்.

 

உடனே அந்த பக்கம் பேசிய மனிதர் , “இங்க பாருய்யா மானேஜரு….அந்த மூணு பேரும்  நம்ம ஃபாக்ட்ரியை விட்டு போக கூடாது..போனா பொணமாத்தான் போகனும்…யார்னு தெரியாம விளையாண்டுருக்கானுங்க…என் கோட்டைக்குள்ளயே தைரியமா திருட்டுத்தனமா உள்ளே நுழைச்சிருக்கானுங்க…கண்டிப்பா இது மேலதிகாரி சொல்லி செய்யல…..அப்படி இருந்தா இன்னேரம் என் விசுவாசி எவனாவது போன் போட்டு சொல்லியிருப்பானுங்க….நம்ம மாரி எங்கய்யா?” என கேட்க

 

“அவன் நேத்து நைட் கொல்கத்தாவுக்கு லோடை ஏத்திட்டு இப்போ காலையிலிருந்து மாடி ரூம்ல தான்யா தூங்குறான்…” என சொல்ல

 

“அப்போ போய் அந்த தடியனை எழுப்பு…..இவங்களைத் தீர்த்துக் கட்ட சொல்லு…”

 

“அய்யோ ஐயா…அவங்க எதுக்கு வந்திருக்கானுங்கன்னு தெரியாம எப்படிய்யா…?”

 

“ஏன் டா….துப்பாக்கி வைச்சிருக்கவன் திருடனும்னா உன் ரூம்க்குத் தானே வரனும்….அது மட்டுமில்லாம ஃபாக்டரில எப்படிடா பணம் இருக்கும்..அவனுங்க போலிஸ் தான்…..அதுவும் நம்ம செய்ற வேலை தெரிஞ்சவங்க…ஒன்னு நார்கோடிக்ஸ் இல்ல ட்ரக் கன்ட்ரோல் போர்ட் எதாவது ஒன்னுலேந்து வந்திருப்பானுங்க….அதுவும் நம்ம பாக்கெட்டையெல்லாம் பிச்சுப் பார்க்கிறானுங்கன்னா சந்தேகமே இல்லாம நம்ம மேல சந்தேகப்பட்டுதான் வந்திருக்கானுங்க…..அதனால அந்த மூணு பேரும் வந்த சுவடே இல்லாம அழிச்சிடு…மாரிகிட்ட சொல்லு அவன் பார்த்துப்பான்…அதுக்கு முன்னாடி முதல்ல வெளியே போய்  ஃபாக்டரி கேட் கிட்ட எதாவது போலிஸ் வண்டி நிக்குதான்னு பாரு….ஆளுங்க யாராவது இருக்கானுங்களான்னு பாரு…..நீ போகாம செக்யூரிட்டையைப் பார்க்க சொல்லு….” என உத்தரவிட

 

செக்யூரிட்டி பார்த்து விட்டு மானேஜருக்குத் தகவல் சொல்ல,”யாருமில்ல ஐயா….ஜீப் மட்டும் நிக்குது…..ஆனா அதுக்குள்ள ஆள் இல்ல…” என சொல்ல,அந்த ஐயா ஆகப்பட்டவர் ,”அப்போ முடிச்சிடு” என்று உத்தரவிட்டு போனை வைத்தார்.

 

மானேஜருக்கு பயமாக இருந்தது.ஆனால் அவனது ஐயாவுக்கு காபி குடிப்பது,பல் விளக்குவது போல் கொலை செய்வதும் தினசரி வாடிக்கைதான்.இப்போது இங்கு நடக்கும் சமூக குற்றம் வெளி உலகிற்கு தெரியாமல் பாதுக்காக்க வேண்டும் இல்லாவிட்டால் அவனது ஐயா முதலில் இவனை ‘முடித்து’ விடுவார்.அதனால் அவர்களது கூலிப்படை தலைவனான மாரியை அழைத்து கீழே பாக்கிங் நடக்கும் இடத்துக்குச் சென்றான்.மாரியோடு இன்னும் இரண்டு பேர் இருந்தனர்.முதலில் தனக்கு தகவல் கொடுத்தவன் மூலம் இருந்த பத்து ஊழியர்களையும் கலைந்து போக சொல்லி ஆணையிட்டான் மானேஜர்.தீவிரமாக சோதனையில் ஈடுபட்டிருந்த அப்ஸராவும் அபியும்  அதைக் கவனிக்கவில்லை.

 

மானேஜர் அங்கு சென்று பார்க்க detergents பாக்கெட்டை பிரித்து கிழித்தனர்.”ஹலோ மேடம்…யார் நீங்க..என்ன செய்றீங்க இங்க….?” என சத்தம் போட

 

அபினவ் அந்த மானேஜரை நோக்கி ,”  நாங்க என்ன செய்றோம்ங்கறது இருக்கட்டும்…நீங்க என்ன செய்றீங்க…..இங்க…?” என கேள்வி எழுப்ப

 

“என்ன செய்றோமா…?இது ஒரு சோப் அண்ட் டிடர்ஜெண்ட் ஃபாக்டரி…இங்க சோப் தான் உற்பத்தி செய்றோம்….நீங்க எதுக்கு யாருக்கிட்டையும் அனுமதி வாங்காம,…இப்படி எங்க இடத்துல அத்துமீறி நுழைஞ்சுட்டு நீங்க எங்களை கேள்வி கேட்கிறீங்களா?”

 

“போதும்டா….யார் அத்துமீறல் செய்றது…இது என்ன…?”என்றபடி அப்ஸரா  சீல் செய்யப்பட்டிருந்த அட்டைப்பெட்டியை பிரித்து அதிலிருந்து பேக் செய்யப்பட்ட டீடர்ஜெண்ட்ஸை எடுத்துக் கிழித்துக் கொட்டினால் வெள்ளி துகள்களாக மின்னியது ஹெராயின்.தங்கள் குட்டு வெளிபட்டதை உணர்ந்த மானேஜர் மாரிக்கு சைகை காட்ட மாரியின் ஆட்களில் ஒருவன் கவினை அடிக்க,கவினும் பதிலுக்கு அவனோடு சண்டையிட துவங்கினான்.மானேஜரும் மெதுவாக அவ்விடம் விட்டு  நகர்ந்து எஸ்கேப் ஆனான்.அப்படி மாட்டிக்கொண்டாலும் அவன் மாட்டக்கூடாது என்பதற்காக.

 

அபி கவினைக் காப்பாற்ற முயல , அதற்குள் ஒருவன் அப்ஸராவைப் பிடித்துக்கொள்ள  அப்ஸரா தனது கராத்தே அடிகளால் அவனை வெளுத்து வாங்கினாள்.துப்பாக்கியை எடுத்து அவனை சுடப்போக அதற்குள் மாரி   அப்ஸராவின் கையை கத்தியை வைத்துக் கீறி விட வலியில் அவளது கையில் இருந்த துப்பாக்கி கீழே விழ,அப்ஸராவை தனது முரட்டுக் கைகளால் பிடித்துக் கொண்டான் அந்த மாரி.

 

முதலில் தன்னை தாக்கியவனை திருப்பித் தாக்க முடிந்தவளால் ஹெஃப்டியாக , எருமை மாடு கணக்காக இருந்தவனை பெண்ணவளால் எதிர்க்க முடியவில்லை.இருந்தும் அவனிடமிருந்து போராட அவள் திமிர,அவனோ அவளை பிடித்த பிடியை இறுக்கினான்.கைகளில்  ஒருப்பக்கம் இரத்தம் வர,ஒரு பக்கம் இவன் வேறு அவளை முரட்டுத்தனமாகப் பிடித்திருக்க அவளால் தப்பிக்கவே முடியவில்லை.

 

அபி ஒருவனை அடித்து துவம்சம் செய்ய, அபியின் அடி  தாங்காமல் சரிந்து விழுந்தான்.கவினோடு மல்லுக்கட்டியவன் கவினை கத்தியால் குத்தி விட ,அபி சற்றும் யோசிக்காது தனது துப்பாக்கியை எடுத்து கவினை குத்தியவனின் கை காலில் சுட்டான்.

 

அபி கவினை நோக்கி ஓட , மாரியோ , “ஓய்..காக்கி.இருடா…ஒரு அடி நகர்ந்த இவளை சுட்டுடுவேன்…..”என்றபடி அப்ஸராவின்  தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்ட,அரண்டு போனான் அபினவ்.ஒரு நொடி எங்கே அப்ஸராவுக்கு எதாவது ஆகிவிடுமோ என பயம் அவனைப் பிடித்துக் கொண்டது.

 

அவனது பயத்தை சரியாக ஊகித்துக் கொண்ட மாரி ,”ஹே..!! சொல்றதைக் கேளுடா…ஒழுங்கா என் பேச்சைக் கேட்டு துப்பாக்கியை கீழ போடு..அப்போதான் இவளை விடுவேன்…” என ப்ளாக்மெயில் செய்ய அபியின் கைகள் துப்பாக்கியை நழுவ விட்டன.

பகுதி 9

அபியின் கைகள் துப்பாக்கியை நழுவ விட போக,அப்ஸரா தனது கூரிய கண்களால் அபியிடம் ,”வேண்டாம்” என விழிவழி சொல்ல அவனோ அவளை புரியாமல் பார்த்தான்.

 

“போடுடா” என மாரி கர்ஜிக்க

 

அவள் மீண்டும் அவனை தீர்க்கமாய்ப் பார்த்து தலையசைக்க,அவனும் துப்பாக்கியை கீழே போடாமல் இருக்க,அந்த மாரியின் கவனமெல்லாம் அபியின் மீதும் அவன் துப்பாக்கியின் மீதும் தான்.மின்னல் வேகத்தில் அவனை தனது பின்னங்காலால் ஓங்கி ஒன்னு விட்டாள் அப்ஸரா.அதனால் மாரி நிலைத்தடுமாறினான்.

 

அப்ஸரா கவினை நோக்கி ஓடி அவனுக்கு முதலுதவி செய்யப்போக ,அந்த மாரி தனது துப்பாக்கியால் அப்ஸராவைச் சுடப்பார்க்க நொடியும் தாமதிக்காது  அபினவின் துப்பாக்கிக் குண்டு மாரியின் கையைப் பதம் பார்த்தது.

 

அந்த சத்தம் கேட்டு அப்ஸரா அதிர்ச்சியாக அபியைப் பார்க்க,அபி கவினை நோக்கி ஓடி வந்தான். ஏற்கனவே அவர்கள் திட்டத்தின் படி போலிஸ் படை உள்ளே நுழைய , அவர்களது டீமை சேர்ந்தவர்கள் வந்து கவினை தூக்கிக் கொண்டு ஜீப்பில் ஏற்றி ஹாஸ்பிட்டலுக்குச் சென்றனர்.

 

சுரேஷைப் பார்த்த அப்ஸரா  கவினின் நிலைக்கண்டு ,“என்ன சுரேஷ்…இதான் வர நேரமா..பார்த்தீங்கள்ளா…கவினுக்கு என்னாச்சுன்னு…?” என சிடுசிடுக்க ,அபி அப்ஸராவின் கையைப் பிடித்து “விடு……..அவன் கான்சியஸத்தான் இருக்கான்….நம்ம சொன்னபடி தான் இவங்க வந்திருக்காங்க….” என சமாதானம் செய்தான்.அதன்பிறகுதான் இருவரும் ஆசுவாசப்பட்டனர்.பதட்டமான சூழல் கொஞ்சமாய்த் தணிந்தது.

 

முதலில் இப்படி கூடுவாஞ்சேரியில் உள்ள டிடர்ஜெண்ட் ஃபாக்டரியில் முறைகேடாக போதைப்பொருள்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவை ஏற்றுமதிக்கு அனுப்பப்படுவதாகவும் தகவல் வர,அவர்களது பத்து பேர் கொண்ட டீம் மட்டுமே டிஎஸ்பியின் உத்தரவோடு இந்த ஆபரேஷனில் ஈடுபட முடிவு செய்தனர்.பகலில் சோப்பு மற்றும் சோப்புத்தூள் ஃபாக்டரியாக செயல்படும் அவ்விடம் இரவில் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் குடோனாகப் பயன்படுகிறதை அறிந்தனர்.

 

அவர்களது டீமில் அப்ஸரா,அபினவ் ,கவின் மூவர் மட்டும் முதலில் வந்து சோதனை செய்து ,அதன்பின் மற்றவர்களை அழைக்கலாம் என்று திட்டமிட்டனர்.அவர்கள் இப்படி பகலிலேயே ரௌடியெல்லாம் வைத்திருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

 

இரவில் தானே போதைப்பொருள் கடத்துகிறார்கள் என்று இவர்களை கம்மியாக எடைபோட,அவர்களோ இண்டர்நேஷனல்  லெவலில் ஸ்மக்ளிங் செய்கிறவர்கள்.அந்தளவுக்கா எச்சரிக்கை உணர்வின்றி இருப்பார்கள்..?

 

அவர்கள் உள்ளே சென்று சிக்னல் தந்த பின் ஒரு கிலோமீட்டர் தொலைவில் காத்திருந்த அவர்களது டீம் ஆட்கள் வருவதாக ப்ளான் செய்யப்பட்டது.ஆனால் இங்கு நடந்த எதிர்ப்பார்க்காத சம்பவத்தால் அவர்களால் டீம் மேட்ஸூக்கு தகவல் தர முடியாமல் போக, நேரம் கடந்து விட்டதால் அவர்களாகவே ஃபாக்டரி வந்துவிட்டனர்.

 

அபினவ் கையைப் பிடித்திருந்தது வலிக்க ,”ஆஆஆஅ..” என அப்ஸரா கத்த

“ஏய்…சாரி சாரி..” என்றபடி அவனது கர்சீஃபால் அவளது கையை இறுக்கமாய் ரத்தம் வராதவாறு கட்டினான்.

 

மாலை ஏழு மணி ப்ளாஷ்  நியூசில் அபினவ் அப்ஸரா  மற்றும் கவினின் புகைப்படங்கள்தாம் மின்னி மறைந்தன.போதைப்பொருள் கடத்தல் குடோனாக செயல்பட்ட அந்த சோப் பாக்டரி சீல் வைக்கப்பட்டது.கவின் உயிருக்கு எந்த ஆபத்துமின்றி காப்பாற்றப்பட்டான்.மாரியும் அவன் கூட்டாளிகளும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் போலிஸ் பாதுகாப்போடு அனுமதிக்கப்பட்டனர்.

 

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நார்கோடிக்ஸ் எஸ்பி சுரேந்தர் சின்ஹா , “போதைப்பொருள் புழக்கம் இப்போ ஜாஸ்தியாடிச்சு…போதைப்பொருளை இப்போ  நேரடியா கடத்தல் செய்றதில்லை.பிஸ்கட் பாக்கெட்,டயாபர்ஸ்,ஃப்ரூட்ஸ்கள்ல கலந்து கடத்துறாங்க.இன்னிக்கும் அப்படிதான் அந்த சோப் தயாரிக்கற ஃபாக்டரிலேர்ந்து தான் கொல்கத்தா மும்பை டெல்லிக்கெல்லாம் சப்ளை நடக்குது.லோக்கல் சப்ளை குடோனா அது செயல்பட்டிருக்கு.இங்கிருந்து இலங்கை,மலேசிய உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் கடத்தல் நடந்திருக்கு.அதுவும் ரொம்ப க்ளவரா சில மார்க்ஸ் யூஸ் செஞ்சு சில detergent packets ல மட்டும் சோப்புத்தூளுக்குப் பதிலா போதைமருந்தை சாமர்த்தியமா எக்ஸ்போர்ட் செய்றாங்க.. நாங்க இதைப் பத்தி தீவிரமா விசாரிச்சிட்டு இருக்கோம்.அண்ட் இந்த ஆபரேஷன்ல சிறப்பா செயலாற்றியது இவங்க தான்…மிஸ் அப்ஸரா அரவிந்தன் அண்ட் மிஸ்டர் அபினவ் ப்ர்சாத்.இன்னொரு ஆபிசர் கவின் அவருக்கு நடந்த ஆபரேஷன்ல அடிபட்டதால ஹி இஸ் இன் ஹாஸ்பிட்டல்…”

 

“சார்..அந்த குடோன் யாரோடது…?” என ஒரு பத்திரியாளர் வினா எழுப்ப

 

“அது பத்தி விசாரிச்சுட்டு இருக்கோம்…..தாங்க் யூ” என்று விடைப்பெற்றார்.

 

வீட்டிற்கு வந்த அபியைக் கட்டியணைத்த விஜி, “டேய் அண்ணா..கலக்கிட்ட டா….சூப்பர்…..அய்யோ..எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா….?ஃபேஸ்புக் ல  நீ அண்ணான்னு சொல்லி ஃபோட்டோவோட ஸ்டேட்டஸ் போட்டேன்…எல்லாரும் உன்னை பாராட்டுறாங்க டா…எனக்கு டிரிட் வேணும்….” என துள்ளி குதிக்க அவனும் தங்கையை வெளியே அழைத்துச் சென்றான்.

 

அப்ஸராவின் வீட்டிலோ அவள் உள்ளே நுழைந்ததுமே ,அம்பிகா அத்தை கண்கலங்க அவளை முழுமையாக ஆராய்ந்தார்.அவளது கையில் இருந்த கட்டைப் பார்த்தவர் , “ஏய் என்னடி இது….கையில கட்டு..இதுக்குத்தான் இந்த வேலையெல்லாம் வேண்டாம்னு சொன்னா எங்க கேட்கிற…..?”என புலம்ப

 

அவளோ , “அத்த…இது விழுப்புண்..இப்படி அழாத…ராணி மங்கம்மா ,தில்லையாடி வள்ளியம்மையெல்லாம் பிறந்த ஊர் இது…சும்மா இதுகெல்லாமா பயப்படுவாங்க….அதான் ஒன்னுமில்லை இல்ல…”என சமாதானம் செய்தாள்.

 

அரவிந்தனுக்கும் மகளுக்கு எதாவது ஆகியிருந்தால் என நினைக்கவே பயமாக இருந்தது.ஆனாலும் அதை முகத்தில் காட்டாது ,”அப்புக்குட்டி தான் இன்னிக்கு டாக் ஆஃப் தி டவுன் போல….என் சிங்ககுட்டி கலக்கிட்டா…..சூப்பர்டா” என வாழ்த்து சொல்ல

 

“ஐ லவ் யூப்பா…தாங்க்ஸ் சோ மச்….” என்றபடி ப்ரஷாகப் போனாள்.

 

அரவிந்தன் அதற்குள் அபிக்கும் போன் செய்து வாழ்த்தினார்.அப்ஸரா சாப்பிட்டு முடித்ததும் அவரிடம் அரவிந்தன் பேச அழைத்தார்.அபினவ் வந்ததையெல்லாம் சொன்னவர் அவளது முடிவை கேட்க

 

அவளோ அமைதியாக உட்கார்ந்திருக்க , கடுப்பான அத்தை

,”ஏய்..குந்தாணி….எதாவது…ஒன்னை சொல்லித்தொலையேன் டி….இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்…ஒன்னு அந்த புள்ளையைக் கட்டு..இல்ல….வேற எவன பிடிச்சிருக்கோ அவனைக் கட்டிக்க….சொல்லிட்டேன்..” என சத்தம் போட,அவரை முறைத்துக்கொண்டே அரவிந்தனைப் பார்க்க,அவரும் மகளை முறைத்துக் கொண்டு தான் இருந்தார்.

 

“என்னப்பா..நீயும் முறைக்கிற…”

 

“பின்ன உன்னைக் கொஞ்சுவாங்களா டி…?” என அத்தை திட்ட ,அரவிந்தன் அமைதியாகவே இருந்தார்.அம்பிகா மாலையிலேயே சொல்லிவிட்டார் அவருக்கு அபியைப் பிடித்திருப்பதாகவும் சீக்கிரமே அப்ஸராவுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றும்.அவர் பேசும்போது மகளை செல்லம் கொஞ்சிக்கொண்டு வரக்கூடாதென்று ஸ்டீரிக்டாக ஆர்டர் வேறு.

 

“இப்போ நான் என்ன செய்யனும்…?”

 

“ஒன்னு அந்த தம்பியைக் கட்டிக்க..இல்ல நான் வேற மாப்பிள்ளைப் பார்க்கிறேன்…”

 

“அப்பா….அவன்…” என இழுக்க

 

“அபி இஸ் எ குட் பாய் அப்பு…..அவன் என்ட்ட வந்து சாரி கூட கேட்டான் தெரியுமா..இத்தனைக்கு அவன் என்னை கோவமா தான் பேசினான்…அதை உணர்ந்து இத்தன வருசம் கழிச்சும் கூட அவன் மன்னிப்புக் கேட்டான்….அது எவ்வளவு நல்ல குணம்…..தப்புன்னு பட்டா தயங்காம மன்னிப்புக் கேட்கிறான்….”

 

“உங்க கிட்ட கேட்டான்..என்ட்ட கேட்டானா….?” என சிலுப்பிக் கொள்ள

“இன்னிக்கு உன்னை சுட வந்தவனை சுட்டானே……உன்னைக் காப்பாத்துனானே அதுக்கு நீ தேங்க்ஸ் சொன்னியா….?” என அவர் கோபமாக கேட்க

 

“அது…அவன்…….ஆமா அது எப்படி உங்களுக்குத் தெரியும்….?”

“ நான் தான் அவன்ட்ட பேசினேன்..சொன்னான்…போதுமா….நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு அப்பு…”

 

“அது…. எனக்கு தோணல..சொல்லல….முதல்ல கவினை ஹாஸ்பிட்டல்ல போய் பார்த்து..அப்புறம் எனக்கு கட்டுப் போட்டு எஸ்பிட்ட ரீப்போர்ட் செஞ்சு..நிறையா வேலை இருந்துச்சு….அவனும் ரொம்ப பிசி…பார்க்க முடியல….”

 

“இது ஒரு காரணமா….சும்மா கோவத்தைப் பிடிச்சுட்டு தொங்கிட்டிருக்க கூடாது…..கோவங்கறது உப்பு மாதிரி லைஃப்ல அளவா இருக்கனும்..கம்மியா இருந்தா கூட அட்ஜஸ்ட் செய்யலாம்..அதிகமா இருந்தா தாங்க முடியாது…..அப்போ இருந்த சிட்டிவேஷன் அப்படி….அவன் இடத்துலேர்ந்து யோசிடா….ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம வந்திருக்க..இது கூட அபி சொல்லல…நீ எதாவது பேசினியான்னு கேட்டேன்…அவன் இல்லன்னு சொன்னான்…அதான் என் பொண்ணுக்கு அந்த மரியாதை கூட தெரியலன்னு கஷ்டமா இருக்கு….” என அவர் வருத்தமாக சொல்ல

 

“தேங்க்ஸா…நான் எதுக்கு தேங்க்ஸ் சொல்லனும்……அவன் என்ன பொதுசேவையா செஞ்சான்..நான் இல்லாம அவனால வாழ முடியாது..அதான் அப்படி செஞ்சான்….அவன் உயிரை அவன் தானே காப்பாத்தனும்….” என சொல்ல.அம்பிகாவுக்கும் அரவிந்தனுக்கும் ஒன்றுமே  புரியவில்லை.புரிந்த பின் அவர்கள் முகம் மகிழ்ச்சியில் திளைக்க அப்ஸரா,

 

“கோவம் கொஞ்சம் இருந்துச்சு…ஆனா அவனும் பாவம்னு புரிஞ்சது….என்னை இன்னொருத்தனைக் கட்டிக்க சொன்னான் ராஸ்கல்..அதான் கோவம்…..முன்னாடியெல்லாம் அவன் எப்போவுமே ஜாலியா இருப்பான்…இப்போ அப்படியில்ல…..கஷ்டப்படும்போது தானே நான் அவனுக்குத் துணையாய் இருக்கனும்…..நாங்க பேசி ராசியாகிடுறோம் அத்த..எனக்கு வேற எவனாவது மாப்பிள்ளையா கொண்டு வந்த வரவனையும் சரி உன்னையும் சரி என்கௌண்டர் தான்” என்றவள் அரவிந்தனிடம் வந்து ,

 

“அந்த சமத்து பையன்ட்ட நான் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்ப்பா….குட் நைட்…பை தி வே…உங்க பொண்ணும் சமத்துதான்..” என்றவள் அவர் கன்னத்தில் முத்தமிட்டு ,”ஐ லவ் யூப்பா…” என சொல்ல

 

“ஏன் டி..அப்பன்ட்ட ஐ லவ் யூ சொல்ற…போய் அந்த தம்பிட்ட சொல்லுடி…”

 

“அப்பா தான் என்னோட ஃப்ர்ஸ்ட் லவ்…..அப்பாட்ட மட்டுமில்ல..அத்தட்டையும் சொல்லலாம்…” என வாயடித்தவள்

அவர் கன்னத்தில் முத்தமிட்டு ,”ஐ லவ் யூ அம்பிகா…” என

 

“அடி கழுத…..பெயரயா சொல்ற….” என அவர் அடிக்க வர , அவள் புன்னகையோடே அவளைறைக்குள் ஓடினாள்.

 

மறு நாள் அபியை ஆபிசில் பார்த்தாள் அப்ஸரா.அவனிடம் கவினைப் பற்றி விசாரிக்க அபி,

“கவினைப் பார்க்கத்தான் இப்போ ஹாஸ்பிட்டல் போறேன்..” என சொல்ல

 

“நானும் வரேன்”

 

“நான் பைக்கில் போறேன்..” என எச்சரிக்கையாய் சொன்னான் அபினவ்.அவள் தன்னோடு பைக்கில் வருவாளா என எண்ணினான்.

 

“ஏன் உன் பைக் நான் உட்கார்ந்தா ஓடாதா?” என இவள் இடக்காய்க் கேட்க

 

“இல்ல..எங்கூட நீ தனியா வருவியோன்னு தான்..”

 

“அப்போ பெட்ரூம்க்கு நீ எங்கூட தனியா வரமாட்ட கூட துணைக்கு ஆள் சேர்ப்பியா டா”

 

“ஹே..!” என அவள் சொன்னது புரிந்தவுடன் அவள் வாயை மூடியவன்.

 

“என்ன பேச்சு இது..திஸ் இஸ் ஆபிஸ் டி.லூசு…கெட்ட பொண்ணாயிட்ட நீ…” என்றவனை முறைத்தவள்

 

“ஆமா…ஆமா நான் பேட் கேர்ள் நீ குட் பாய்.போடா..ரொம்பத்தான் சீன் போட்டு…..கத்தியா சொன்னேன்..அமைதியாதானே சொன்னேன்… முதல்ல உனக்கு நான் சொன்னது புரிஞ்சதாடா..?” என அவள் சந்தேகமாய்க் கேட்க

 

“புரியலயே அப்பு..வா…..வந்து தனியா உன் பெட்ரூம்க்கு என்னைக் கூட்டிட்டுப் போ…” என அவன் கண்ணடிக்க,அவன் தோளில் அடித்தவள்,

 

“ராஸ்கல்…உன்னை…எல்லாம் புரிஞ்சிட்டு விளையாடுறியா உன்னை…” என அவள் கடிய

 

“ஆமா…ஏனோ வானிலை மாறுதே..!சென்னை சிட்டி இன்னிக்கு குளுகுளுன்னு இருக்கு….” என அவளை ரசனையோடு பார்க்க

 

“அதெல்லாம் அப்படித்தான்…வா வா சீக்கிரமே போய் கவினைப் பார்க்கலாம்….”என அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.கவினைப் பார்த்து விட்டு வந்த பின் இருவரும் ஒரு ஹோட்டலுக்குச் சென்றனர்.

 

அவனோடு ஒரே சோபாவில் அமர்ந்தவள் ,அவனின் கையைப் பிடித்துக் கொண்டு ,”சாரி….அபி..” என மன்னிப்புக் கேட்க

 

“நானும் சாரி டா அப்பு..ரொம்ப பேசிட்டேன்ல……அன்னிக்கு இருந்த சூழ் நிலை அப்படிடா…அப்பா அம்மா தான் உலகம்னு இருந்துட்டு உலகமே அழிஞ்சிடுச்சு ஒரே நாள்ல..அந்த வயசுல….அது வரைக்கும் நான் பார்க்காத நிறையா நடந்துச்சு…ரெண்டு மரணம் அதுவும் அம்மாப்பாவோடது ,சொந்த பந்தங்களோட உண்மையான மனசு….யார் நல்லவங்க கெட்டவங்க…..எல்லாத்துக்கும் மேல எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது விஜியை வேற பார்த்துக்க வேண்டிய நிலைமை….சாதாரணமா அவ பெருசாகி கல்யாணம் செஞ்சு கொடுத்து நான் பார்த்திருந்தா ஒன்னுமே தெரிஞ்சிருக்காது….அது  இயல்பான விசயமா போயிருக்கும்…”

 

“அது எல்லாத்துக்கும் மேல பணக்கஷ்டம்….என்னோட கனவு…..இதுல நீ..எல்லாம் சேர்ந்து கோவம் டிப்ரஷன்…நீ வந்து பாட்டியை பத்தி சொன்னப்போ…அதுவும் கல்யாணம் அந்த சமயத்துல கோவமும் எரிச்சலும் தான் வந்தது….இப்போவும் சொல்றேன்..அந்த நேரத்துல நீ எவ்வளவு தான் ஃபோர்ஸ் செஞ்சிருந்தாலும்  நான் ஒத்துட்டு இருக்க மாட்டேன்….ஆனா உன்ட்ட ஹார்ஷா பேசினது தப்பு தான் அதுக்கு சாரிடா…….”

 

“ம்ம்..புரியுதுடா…எனக்கோ என்னை அம்மாவா வளர்த்தவங்களோட லாஸ்ட் விஷ்..அது நிறைவேத்தனும்னு ஆசை….கவலை எல்லாம்…..ஆனா யாராயாவது கல்யாணம் செஞ்சிக்கோ….அப்படின்னு நீ சொன்னது…..நிஜமா தாங்க முடியல……விடுடா……எல்லாம் முடிஞ்சது…இனி அதைப் பத்தி பேச  வேண்டாம்..”

 

அவளது கையை இன்னும் இறுக்கமாய்ப் பற்றியவன் , “சாரிடா அன்னிக்கு உணர்ந்து சொன்ன வார்த்தைகள் இல்ல…நாம மட்டும்  கல்யாணம் செஞ்சிருந்தா நிஜமா நல்லா வாழ்ந்திருக்க மாட்டோம்..ரெண்டு பேருக்கும் ஈகோ க்ளாஷ் வந்திருக்கும்…..இந்த பிரிவு தான் டா புரிதலை கொண்டு வந்துருக்கு…வந்திருக்கு தானே…” என அவன் கேள்வியாய் நோக்க அவளும் ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள்.

Advertisement