Advertisement

பகுதி 2

வீட்டிற்கு சென்றதும் அபினவ் தங்கையை சோஃபாவில் அமர வைத்து அவளருகில் அமர்ந்தான்.மனம் முழுக்க சுமக்க இயலா பாரமொன்று அழுத்தியது.புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த பெற்றோரின் படத்தைக் கண்டவனுக்கு அழுகையே வந்து விட்டது.பெற்றோர் இறந்த அன்று அழக்கூட அவனுக்கு நேரமில்லை.அதற்கெல்லாம் சேர்த்து இன்று அழுதான் அபினவ்.

 

அவன் அழுவதைப் பார்த்த அவன் தங்கை விஜி அந்த குடிபோதையிலும் ,”ஏய் அண்ணா ஏன் டா அழுவுற…?” என்றபடி அவன் கண்களைத் துடைக்க

 

அவள் கையைப் பிடித்தவன் அதிலேயே ,முகம் புதைத்து அழுதவனிடம் ,

 

“டேய்..அபி…..அழாதடா…..நான் இனிமே குதிக்க மாட்டேன்….ஏன் தா அழுவுற…நான் அழுதப்போ நீ வரல….பட் மீ குட் கேர்ள் டா…… நான் உன்னை அழ விட மாட்டேன் டா..நீ தான் பெரிய்ய்ய..போலிஸாச்சே..இப்படி அழலாமா…ஷேம்..ஷேம்……அழாத…” என அண்ணங்காரனை அவள் ஆறுதல் படுத்த அப்போது விட்டினுள் புயலென நுழைந்தான் பிரதீப்.

 

பிரதீப் அபினவ்வின் நண்பன்.விஜி படிக்கும் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவனாக இருக்கிறான்.அபினவ் காரில் வரும்போதே நண்பனை வீட்டிற்கு வர சொல்லி போன் செய்தான்.உள்ளே வந்தவன் நண்பனின் நிலையைக் கிரகிக்க முயன்றான்.அபியின் அழுகையும் புரியவில்லை விஜியின் சமாதானமும் புரியவில்லை.

 

“என்னாச்சு அபி..எதுக்கு அழற…?”

 

“அண்ணா…அழாத்தா…நான் சொல்றேனே..” என்ற சொன்ன விஜியின் பேச்சிலிருந்த குழறல் எதையோ உணர்த்த,

 

“ஏய்..என்ன நீ..ஒரு மாதிரி பேசுற..சொல்லு நீ…நீ குடிச்சியா விஜி…” என குரலில் நடுக்கத்தோடு கேட்க

 

“எஸ்….”

 

“வாட்…?” என அதிர்ந்தவனுக்கு அப்போதுதான் நண்பனின் கண்ணீருக்கான காரணம் புரிந்தது.

 

கோபம் தலைக்கேற ,அவளை இழுத்து கன்னத்தில் அடிக்க அவள் அப்படியே கீழே விழுந்தாள்.

 

“ஒரு பொண்ணா இருந்துட்டு இப்படி குடிச்சிருக்கா….உனக்கு வெக்கமா இல்ல….உன்னை இப்படி தான் வளர்த்தாங்களாடி…..யூ…ஷிட்……நீயெல்லாம் டாக்டருக்குப் படிச்சு என்னத்த கிழிக்க போற…” என்று கத்த

 

விஜியோ , “நீ யாரு என்ன அடிக்க….அங்க ஒருத்தி அதிக்கிறா..இங்க நீ அடிக்கிற……என்னைப் பத்தி நீ பேசாத…. நீ ஒழுங்கா டா…நீ குடிச்சதே இல்லயா…..உனக்கு வெக்கமா இல்ல….நீ சந்தோசத்துல குடிப்ப…நான் துக்கத்துல குடிச்சேன்…தட்ஸ் இட்..நீ என்ன கேக்க கூடாது…” என மரியாதையில்லாமல் பிரதீப்பை பேச,நிலைமை புரிந்த அபி

 

“விஜி….என்னடா நீ……பேசாத விடு…..பிரதீப்….ஏன் டா அடிக்கிற அவள….?தப்பெல்லாம் என் பேர்ல தான்….அவளோட நிலைமைக்குக் காரணம் நான் தான்….என் அம்மா அப்பா நான் இவளை நான்  நல்லபடியா பார்த்திப்பேன்னு நம்பி விட்டுப் போயிருப்பாங்க….ஆனா நான் அந்த நம்பிக்கையைக் காப்பாத்தல..” என்றவன் நண்பனின் கரம் பற்றி கண்ணீர் வடிக்க

 

“பார்த்தியா டி..நீ செஞ்ச வேலைக்கு..உன்னோட கொழுப்பெடுத்த நடவடிக்கையால…இவன் அழறான்..ஆனா தப்பு செஞ்சுட்டு உனக்கு குற்றவுணர்வே இல்ல……திமிருடி உனக்கு…..உன் அப்பா அம்மா இருந்தா நீ செஞ்ச வேலைக்கு..உன்னை…” என்று  நண்பனுக்காக விஜியை பிரதீப் திட்ட

 

“ஒஹ்..உன் ப்ர்ண்ட் அழுதவுடனே என்னை அடிக்கிற.திட்டுற….நீ…….ஆனா நான் அழுதப்போ…நீயோ உன் ப்ர்ண்டோ வந்தீங்களா டா…..போ..எனக்கு யாருமே இல்ல..என் டாடியும் அம்மாவும் இருந்தா நான் ஏன் குடிக்கிறேன் டா…..?அவங்க என்னை  நல்லா பார்த்திருப்பாங்க…..உன் ப்ர்ண்ட்க்காக என்னை வேண்டாம்னு சொல்லிட்டேல…இப்போ என்னை எப்படி நீ அதிக்கலாம்…ஐ ஹேட் யூ…..எல்லாரும் என்னை அடிக்கிறீங்க திட்றீங்க…ஆனா என்னைப் பாக்க மாட்றீங்க….போ..யாரும் வேண்டாம்..எனக்கு….நான் போறேன்…” என்றபடியே கதவை திறக்க செல்ல,

 

அபியோ ,”விஜிமா…” என கத்த

 

“ஹே..குடிகாரி…அறிவுக்கெட்டவளே..” என்றபடியே பிரதீப் அவளை பிடிக்க,அவள் திமிற,அவன் அவளை குண்டுகட்டாக தூக்கி அவளறைக்குள் செல்ல முயல,

 

“டேய் அண்ணா….இவனைப் பாரு…விடுடா……”

 

“மச்சி….சாரிடா…இவளை இப்போ நான் இப்படி தான் ஹாண்டில் செய்யனும்…” என்றபடியே அவளை கொண்டு போய் மெத்தையில் படுக்க வைத்தான்.அவள் உளறிக் கொண்டே உறங்கினாள்.

 

கதவு திறந்தே இருக்க , ஹாலில் இருந்த அபிக்கும் பிரதீப்புக்கு அவளது உளறல்கள்  நன்றாய் கேட்டன.

‘ஐ மிஸ் யூ மா…ஐ மிஸ் யூ டாடி…..ஐ ஹேட் யூ பிரபு……..சாரிடா…அண்ணா……ஐ லவ் யூ அபிண்ணா…” என்ற உளறல்களைக் கேட்ட அபிக்கு தங்கையின் வேதனை

புலப்பட்டது.பிரதீப்பை பற்றி அவள் உளறியது நினைவுக்கு வர அபினவ் நண்பனை உற்று நோக்க,

 

“டேய் மச்சான்…அப்படில்லாம் பார்க்காத..நான் எதுவுமே செய்யல…..அவ என்னை லவ் பண்றேன்னு சொன்னாடா…நான் தான் இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்..அவ படிக்கனும்னு நல்லா திட்டி அனுப்பிட்டேன்..அதனால தான் குடிச்சிருக்கா அபி..உன்னால இல்ல…”

 

“இல்ல..ப்ரதீப்……அவளோட நிலைமைக்குக் காரணம் நீ இல்ல….நான் தான்…அவளை அங்க பார்ல…பார்த்த நிமிசம்….ஆயிரம் பேர் சேர்ந்து என்னை குத்துன மாதிரி

இருந்ததுடா…அதுவும் அப்ஸரா என்னைப் பார்த்த பார்வையில….செத்துட்டேன் டா…தங்கச்சியை ஒழுங்கா வளர்க்க துப்பில்லன்னு நினைச்சிருப்பா டா அவ…..என் மேல எனக்கே கோவம்டா……விஜியை இந்தளவுக்கு தள்ளிட்டேன்னு….”

 

“என்னடா அப்ஸராவைப் பார்த்தியா..?”

 

“ஹ்ம்ம்…அவ தான் விஜியை அடிச்சா…இப்படி குடிக்கிறதைப் பார்த்து..ஒரு கேஸ் விசயமா நான் போனேன்…அப்ஸரா தான் முதல்ல விஜியைப் பார்த்தாடா…..ஆமா உனக்கு ஏன் டா விஜியைப் பிடிக்கல….எங்கிட்ட நீ சொல்லவே இல்ல…” என அபினவ் குறைபட

 

“அய்யோ அபி..சொல்லக்கூடாதுன்னு இல்லடா…நீயும் பிஸியா இருந்த..இப்போ எதுக்கு சொல்லனும்..அப்படின்னு தான்….விஜியை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா….ஐ டூ லவ் ஹெர்….ஆனா அவ படிக்கனும்னு தான் நான் ஹார்ஷா பேசினேன் டா…சாரிடா…” என்றவனின் கையைப் பிடித்த அபினவ்,

 

“தாங்க்ஸ் டா பிரதீப்…..அக்சுவலி விஜியை நான் பார்க்க கூடாதுன்னுல்லாம் இல்லடா……அம்மாப்பா தவறினப்போ அவள் ப்ள்ஸ் ஒன் தானே படிச்சா….அப்போ இருந்த நிலைமைல ஹாஸ்டல்ல சேர்த்தேன்…மெடிசன் சீட் கிடைச்ச பின்னாடியும் ..என்னோட வேலை இங்க இல்ல…அதனால் அப்போவும் ஹாஸ்டல்…அதுக்கு அப்புறம் இப்போ தான் ஒரு வருசமா அவ எங்கூட இருக்கா…ஆனால் கூட என்னால அவ கூட டைம் ஸ்பெண்ட பண்ண முடியலடா…..நேரம் தான் இல்ல…..என்ன செய்ய சொல்ற….அவ எப்போவுமே அம்மா அப்பா கிட்ட ரொம்ப அட்டாச்டா இருப்பா டா….தனியா விடனும்னு தோணினப்போ கூட அப்ஸராலாம் அம்மா இல்லாம தனியா தானே வளர்ந்தா…நம்ம விஜியும் சமாளிச்சிடுவான்னு நினைச்சேன்…அவளை நான் வளர்ந்துட்டான்னு நினைக்க…என் தங்கச்சி இன்னும் குழந்தையாவே இருக்காடா..”

 

“குழந்தை தான் குவார்ட்டர் குடிக்குமோ..” என்று கடுப்பாய் பிரதீப் கேட்க ,

 

“இப்போ அதனால உனக்கு விஜியைப் பிடிக்காதடா….?” என வேதனையாய் அபி கேட்க

 

“லூசாடா…நீ குடிச்சா அவளை விட்டுடுவேனா நான்… நாலு அடி போட்டாவது அவளை கட்டிப்பேன்…..போதுமா….ஆனா இனிமே இதை அலோவ் பண்ண கூடாதுடா….என் மேலையும் தப்புதான்….அவளை காலேஜ்ல கூட நான் அவாய்ட் செஞ்சேன்….அவளுக்குப் பெருசா ப்ர்ண்ட்ஸூம் இல்ல…எனக்குத் தெரிஞ்ச வரைக்கும்…ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றா போல…அவ கிட்ட மனசு விட்டு பேசினா எல்லாம் சரியாகிடும்டா..இப்போ தூங்குறா லூசு..காலையில பேசிக்கலாம்…என்ன….?…நீ இவளை நினைச்சு மனசு வருத்திக்காத…..எல்லாம் சரியாகிடும்…..” என தோழனுக்கு ஆறுதல் சொல்லி விட்டு புறப்பட்டான்.

 

கதவை சாத்தி விட்டு வந்த அபினவ் சோபாவில் அமர்ந்து கொண்டு தங்கையின் அறையையே வெறித்தான்.இதெல்லாம் கடந்து போக வேண்டும் என்ற பிரார்த்தனையோடு கண் அசந்தான்.

****************************************************************

நார்கோட்டிக்ஸ் இண்டலிஜின்ஸ் ப்யூரோ சென்னை அலுவலகம்…

 

“என்னாச்சு சுரேஷ்..அந்த ஈசிஆர் ஹோட்டல்ல பிடிச்ச ஆளுங்க என்ன சொல்றாங்க….அவங்க கிட்ட சீஸ் செஞ்ச ட்ர்க் பத்தி ரீபோர்ட் ரெடி பண்ணிட்டீங்களா..?” என்றபடி கோப்புகளில் பார்வையை பதித்து தனது காவல் துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்தோடு அமர்ந்திருந்தாள் அப்ஸரா அரவிந்தன்.

 

அப்ஸரா ஐபிஎஸ் இரண்டு ஆண்டுகளாக நார்கோட்டிக்ஸ் துறையில் இருக்கிறாள்.சென்னை ஈசிஆரில் உள்ள பிரபல ஹோட்டல் மற்றும் பப்புகளில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக தகவல் வர, அவளது குழுவினர் அந்த பகுதி முழுவதும் வெவ்வேறு வேடத்தில் ஒரு மாதமாக கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.அப்ஸரா ரிசப்ஷனிஸ்டாக அந்த பிரபல ஹோட்டலில் சிபாரிசில் சேர்ந்தாள்.அவள் நினைத்தாற் போல அந்த ஹோட்டலில் எந்த விதமான தவறான செயலும் நடைபெறவில்லை.ஆனாலும் அங்குள்ள மதுபான பாரில் வேலைப்பார்ப்பவன் ஒருவன் அங்கு வரும் கஸ்டமர்களுக்கு சிறிய அளவில் போதைப்பொருள் சப்ளை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.அவனை கையும் களவுமாக வலை விரித்து பிடிக்கவே ஒரு மாதமானது.ஹோட்டல் நிர்வாகத்துக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதாலும் ஹோட்டலுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்ற காரணத்தாலும் சில நொடிகள் பவர் சப்ளையை ஆஃப் செய்து குற்றவாளிகளை ஹோட்டலின் பின்வாயில் மூலம் அவர்களை அலுவலகம் கொண்டு வந்தனர்.

 

“மேம்….அவங்க கிட்ட இருந்த பொருள் ‘கேட்டமைன்’.ரொம்பவே காஸ்ட்லியான போதைப்பொருள் இது.இது ஆஃப் ஸ்பூன் விலை ஒரு லட்சம்.அந்த ஏரியாவுல உள்ள மற்ற பப்புகளையும் இதை யூஸ் செய்றதா நம்ம டீம் கண்டுபிடிச்சிருக்காங்க…அண்ட் இன்னொரு முக்கியமான விசயம்..”

 

“என்ன மிஸ்டர்.சுரேஷ்..” என்றபடி கூர்மையாக அவனைப் பார்த்து கேட்க

 

“மேடம்…அங்க வரவங்கள் குடிக்கிற டிரிங்க்ஸ்ல தற்செயலா கலந்துட்ட மாதிரி கலந்து அதோட போதைக்கு அவங்க அடிமையானதும் இவன் காசு வாங்கிட்டு சப்ளை செய்றான்.முக்கியமா பணக்காரங்க தான் இவனோட டார்கெட்..இதுல இவனோட சேர்ந்து நம்ம அரெஸ்ட் செய்த மற்ற மூணு பேருமே காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்…..அதுல ஒருத்தன் மைனர் வேற….அதான் என்ன செய்றதுன்னு புரியல..” என்று இளைஞர்கள் அதுவும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் இப்படி தீய பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்பதை ஜீரணிக்க முடியாத வேதனை அந்த சுரேஷின் குரலில் இருந்தது.

 

“ஓ…..” என்ற அப்ஸராவுக்கும் அதிர்ச்சி தான்.ஏற்கனவே விஜியை அப்படி பார்த்த அதிர்ச்சி.இதில் அரெஸ்ட் செய்திருப்பதெல்லாம் மாணவர்கள் என்ற வருத்தம்.இளம் தலைமுறையினர் செல்லும் பாதைக் கண்டு அவளுக்கு அத்தனை ஆயாசமாக இருந்தது.

 

இருந்தும் தனது கடமையை உணர்ந்தவள் உணர்வுகளின் பிடியில் சிக்காது தெளிந்த மனதோடு யோசித்து ஆணைப் பிறப்பித்தாள்.

 

“ஒகே சுரேஷ்…நீங்க அந்த பார்ல வேலை செஞ்ச சப்ளையர் முகேஷை நல்லா விசாரிங்க..புரியுதா நல்லா….” என்றாள் அழுத்தமாய்.

 

“நீங்க விசாரிக்கறதுல..அவனுக்கு யார் கூட லிங்க்……எங்கயிருந்து போதை மருந்து சப்ளை அவன் கைக்கு வருது…எல்லா டீடெய்ல்ஸும் நமக்குத் தெரியனும்…அண்டர்ஸ்டாண்ட்……அந்த காலேஜ் பசங்களை இதுல இன்வால்வ் செய்ய வேண்டாம்….தெரியாம செஞ்சிருப்பாங்க…..வாழ்க்கை இருக்கு அவங்களுக்கு இன்னும்….அவங்க எதிர்காலத்தை நம்ம வீணாக்கிட கூடாது….அவங்க பேரண்ட்ஸ் பத்தியும் நம்ம யோசிக்கனும்…இன்னிக்கு நடந்த இந்த ஆபரேஷன் பத்தி ப்ரஸுக்கும் நியூஸ் போக வேண்டாம்..தேவையில்லாம அந்த ஸ்டூண்டன்ஸ் நேம் வரும்….அந்த பசங்கள இங்க கூட்டிட்டு வாங்க….” என்றவளின் செய்கையை சுரேஷ் மெச்சிக்கொண்டார்.

 

“நான் நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்க மேடம்..நானும் பசங்க இந்த கேஸ்ல மாட்டினா இவங்க நிலைமை என்னவாகும்னு நினைச்சு பயந்தேன்….அண்ட் காங்கிராட்ஸ் மேடம்..இந்த ஆபரேஷனை சக்ஸஸ்புல்லா முடிச்சதுக்கு..” என்றவனிடம் தலையசைத்து மறுத்த  அப்ஸரா,

 

“நோ சுரேஷ்…தி ரியல் ஆபரேஷன் பிகின்ஸ் நவ்..இதான் ஆரம்பம்..இனிமேதான் இந்த கும்பலை நாம பிடிக்கனும்…பசங்களாம் தெளிவா இருக்காங்களா…இல்ல….” என அவள் இழுக்க

 

“எஸ் மேம்..அவங்களை உடனே பிடிச்சாச்சு..அவங்க எந்த டர்க்கும் யூஸ் செய்யல..அண்ட் டிரிங்கும் பண்ணல…..சோ தெளிவா இருக்காங்க….”

 

“ஓகே.டன்.நீங்க டாக்டர்…வினய்யை வர சொல்லுங்க…..பசங்க கண்டிசன் பத்தி தெரியனும்…” என்றவளின் சொல்லை ஆமோதித்த சுரேஷ் விரைப்பாக ஒரு சல்யூட் வைத்து சென்றார்.

 

அவர் சென்ற பின் அந்த மாணவர்களை ஒவ்வொருவராக வரவழைத்துப் பேசினாள்.பேசிய அனைவரின் முகத்திலும் எங்கே ஜெயிலுக்குப் போய் விடுவோம் என்ற பீதி நிறைந்திருந்தது.அவர்களிடம் விசாரித்ததில்  மூவரில் ஒருவன் முதலாம் ஆண்டு என்றும் மீதி இருவர் நாலாம் ஆண்டு மாணவர்கள் என்றும் தெரிய வந்தது.மூவருமே ஒரு பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் படிப்பவர்கள்.வயதின் கோளாறு காரணமாகவும் அட்வெஞ்சருக்காகவும் குடிக்க ஆரம்பிக்க,இந்த ஹோட்டலில் குடித்த சரக்கின் போதை அலாதி என்று நண்பன் ஒருவன் சொல்ல,அதன் பிறகு ஆரம்பித்திருக்கிறது இப்பழக்கம்.இப்போதுதான் முதல் முறையாக அந்த போதை வஸ்துவை வாங்க வந்திருக்கின்றனர்.வந்த இடத்தில் நடந்த ரெய்டில் மாட்டியுள்ளனர்.

 

மிகவும் விலையுயர்ந்த வஸ்துவை வாங்க ஏது பணம் என இவள் கேட்க , ஹாஸ்டலில் தங்கியிருப்பதால் பெற்றோர் தரும் பணத்தை இப்படி செலவழிப்போம் என்ற இளைஞர்களை நினைத்தவளுக்கு கோபமும் ,அவர்களது அறியாமையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது.அவர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் அனைவருக்கும் நல்ல வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணமிருப்பது தெரிந்தது.எதிர்காலம் பற்றிய பயம் இருந்தது.ஏதோ வயதில் தடுமாற்றம் இப்படி தடம் மாற வைத்ததை அப்ஸரா உணர்ந்து கொண்டாள்.அவர்களுக்கு அறிவுரை கூறியவள் டாக்டர் வினய்யை வரவழைத்து மது ,சிகரெட் போதை வஸ்துகளின் தீமையை விளக்கி சொல்ல வைத்தாள்.

 

அவர்களின் பெற்றொருக்கும் போன் செய்து போதை விசயத்தை சொல்லாமல மது பழக்கத்தைப் பற்றி மட்டும் சொல்லி கண்டிக்க சொன்னாள்.அவர்களில் இரண்டு பேர் சென்னையிலிருந்து கொஞ்சம் அருகிலேயே இருந்த காரணத்தால் அவளை நேரில் சந்தித்தனர்.அவர்களிடம் ,”இது இந்த வயசில சில பேர் பண்ற தப்பு தான் சார்….ஏன் நீங்க கூட செஞ்சிருக்கலாம்…” அதில் ஒருவரை சுட்டிக் காட்டியவள் ,

 

“உங்களைப் பார்த்தாலே தெரியுது நீங்க ஸ்மோக் பண்ணுவீங்கன்னு…இப்போ நீங்க சொன்னா எப்படி உங்க பையன் கேட்பான்…?ஒரு விசயத்தை சொல்லி திருத்திறதை விட செயல்ல காட்டினா தானா திருந்திடுவாங்க..இப்போ இதுக்காக நீங்க அடிச்சா மேலும் இந்த தப்பை செய்யதான் தோணும்..சோ கொஞ்சம் பொறுமையா பேசி புரியவைங்க….உங்க பசங்க மேல உள்ள பாசத்தை பணம் கொடுத்துதான் காட்டனும்னு அவசியமில்ல…சார்…நல்ல பழக்க வழக்கத்தை சொல்லிக் கொடுத்து காட்டனும்…இப்போ உள்ள பாதி பேரண்ட்ஸ் செய்ற தப்பு இதுதான்..ஹாஸ்டல்ல இருக்காங்கன்னு அளவுக்கு அதிகமா பணம் தரது..அளவுக்கு அதிகமா இருந்தா தப்பான வழிக்குத் தான் சார் போக தோணும்….இனிமே பார்த்து நடந்துகோங்க சார்…பசங்கள பார் பார்த்ததும் ஷாக் ஆகிடுச்சு..மத்தபடி ஒன்னுமில்ல..கேஸ்லாம் ஃபைல் செய்யல…டேக் கேர்..” என்றவள் அந்த இளைஞர்களை அழைத்து “சுதந்தரம் கொடுக்கறதே பொறுப்ப கத்துக்கதான்..அதை தப்பா பயன்படுத்தக் கூடாது..the price of freedom is responsibility..சோ இனிமே தப்பா நடக்க மாட்டீங்கன்னு நம்புறேன்..” என்றவள் பெற்றோரையும் மாணவர்களையும்  டாக்டர் வினய்யிடம் கவுன்சிலிங் செல்லுமாறு சொன்னாள்.

 

அதன்பிறகு அந்த பிடிப்பட்ட முகேஷிடம் விசாரணை நட்த்தியவள் வீடு சென்ற போது மணி இரவு பதினொன்று.

 

இவளது ஜீப் வாயிலில் இருங்க , வாசலிலே அவளை முறைத்த வண்ணம் காத்திருந்தார் அவளது அத்தை அம்பிகா.

Advertisement