Advertisement

கொஞ்சம் காபி ….கொஞ்சம் காதல்….!

 

“அவன் உனக்கு செட் ஆக மாட்டான் டி சொன்னா கேளு.பேசாம உங்க அப்பாகிட்ட சொல்லி ஸ்டாப் திஸ் ப்ரோபோசல்” என்று சொன்ன என் தோழி மிதிலாவைப் பார்த்த நான்,

 

” இங்க பார் மிது விதுஷ்ட்ட என்ன குறை இருக்கு.வேண்டாம்னு சொல்ற அளவிற்கு? ”

 

அதற்கு அவளோ ” அவனுக்கு நாலைந்து கேர்ள் பிரண்ட்ஸ் என்நேரமும் அவங்க கூடத்தான் சுத்துவான்”

 

“சரி அதுக்கென்ன?? ப்ர்ண்ட்ஷிப் அன்பால வர்றது ஆண்பால் பெண் பால் பார்த்து வர்றதில்ல…ப்ரன்ட்ஷிப்பைக் கொச்சைப்படுத்தாத”  என்றேன் கொஞ்சம் கோபமாக.

 

கோபத்தின் காரணம் அந்த விதுஷ் என்கிற விதுஷ்ணனை எனக்கு மிகவும் பிடித்து விட்டது…ஆகையால் தான் தோழியிடம் கூட அவனை விட்டுக்கொடுக்க முடியவில்லை..பெரிதாய் ஒன்றும் விசயமில்லை.

 

அவன் என் அப்பாவின் சாய்ஸ்…தி பெஸ்ட் சாய்ஸ்!!

 

அவன் என் காலேஜ் சீனியர் வேறு. அவன் கிரிக்கெட் ஆடுகையில் விது என்று உற்சாக ஒலி எழுப்பிய ஜனத்திரளில் நானும் ஒருத்தி. அவன் டென்னிஸ் ஆடுகளத்தினுள் நுழைந்து விட்டால் பந்துக்கு இணையாக பறப்பான் அவன்.

எஸ்!!! கிரிக்கெட் ,டென்னிஸ்,ஆடல்,பாடல் என அனைத்திலும் அவன் ஆதிக்கம் இருக்கும்.அவன் மீது இத்தகைய ஆர்வத்தின் காரணம் காதலா என்றால் இல்லை என்பது திண்ணம்.பருவ வயதில் ஹீரோயிசம் காட்டிய ஒருவன் என்பதில் என் அக ஏட்டினில் அழியாமல் இருக்கிறான்.இப்போது கூட எங்கோ கேட்ட இசை ஒன்றை நினைவு கூறும் மன நிலையில் தான் இருக்கிறேன்.

 

அவன் என் அப்பா எனக்கு பார்த்திருக்கும் மணாளன்.கஸ்டம்ஸில் இருக்கிறானாம்.அவன் புகைப்படம் கண்டதும் அவன் நினைவுகள் கிளர்ந்து எழுகிறது. இத்தனைக்கும் அவன் என்னோடு படிக்கவில்லை.நான் முதலாம் ஆண்டு படிக்கையில் அவன் இறுதி ஆண்டு. ஒரு வேளை இப்போது பார்த்திரா விட்டால் அவன் நான் ரசித்த இசையாய் என் இதயத்தின் ஓரம் இருந்திருப்பான்.

 

இரண்டு நாட்களுக்கு முன் அப்பா வந்து ,” மகிழ் உனக்கு அலையன்ஸ் பார்த்திருக்கேன்… பெயர் விதுஷ்ணன்.. கஸ்டம்ஸில் இருக்கார்…பிடிச்சா சொல்லுடா” என்றார்.

 

பிடிக்காத எதையும் அப்பா செய்ய மாட்டார்.என் விருப்‌பம் அவர் அறிவார்.ஆகையால் உடனே சம்மதித்து விட்டேன்.அவன் புகைப்படத்தை என்னைப் பார்க்க வந்த தோழியிடம் காட்ட அவளோ தாம் தூம் என்று ஆடத் தொடங்கி விட்டாள்.

 

சலங்கை இன்றி பரதமும் சாராம்சம் இன்றி சண்டையும் வருவதில்லையே.அவள் கோபத்தில் அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால் ஐயாவுக்கு கேர்ள் ப்ரண்ட்ஸ் ஜாஸ்தி.ப்ரெண்ட்ஸ் என்ற வகைக்குள் தான் வருவார்கள்.ஆனால் கடிவாளம் கட்டிய நம் கலாச்சார பார்வையில் சார் அவுட் ஆஃப் ஆர்டர்.

 

அவனுக்குப் பெண் தோழிகள் இருப்பது பிரச்சனையன்று.பெண்கள் மட்டுமே தோழியாய் இருப்பதுதான் பிரச்சனை.ஆம்!! அவனது படையில் அவனும் அவன் கூடவே சுற்றும் ராகுலும்  தான் ஆண்கள்.மீதி மூவரும் பெண்கள். அதுவும் அதிக நேரம் அவன் அந்த அக்காகளோடு தான் இருப்பான்.ஆனால்‌ நான் படித்த ஒரு வருடத்தில் அவனைப் பற்றி தவறாய்க் கேட்டதில்லை.தவறான விசயத்தை கூட சரியாய் பார்க்கும் கோணத்தை என் பெற்றோர் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் .

 

ஒற்றை பிள்ளை என்பதால் எதுவாகினும் என் அம்மா அப்பாவிடம்‌ சொல்லி விடுவேன்.இவன் டென்னிஸ் விளையாடுவதை நான் ரசித்தபடியே என் தாயிடம் சொல்லி இருக்கிறேன்.

 

இப்படியாக நான் என் யோசனைகளில்‌ உழன்றிருக்க, “ஏய் மகி என்ன நான் கத்துறேன்.உனக்காக தானே பேசுறேன்.இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??” என அவள்‌ சினத்தோடு சீற,

 

“மிது நாலு பொண்ணுங்களும் அவன்கிட்ட பாதுகாப்பா உணர்றாங்கன்னா ஹி வில் பி ரியலி ஜென்யூன். தூரத்தில் இருந்து பார்க்கறப்போ எல்லாம் தப்பா தெரியும்.அவங்களைப் பத்தி தப்பா பேசக்கூடாது.இப்ப அந்த அக்காவுக்கெல்லாம்  கல்யாணம் கூட ஆகியிருக்கலாம்”

 

“ ஓ அவங்க அக்கான்னா அவர் அண்ணாவா?  ” என மடக்கினாள் என்‌ தோழி

 

” அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன்… விடு…அப்பா விசாரிக்காம எதுவும் செய்ய மாட்டார்.ஸோ ஐ பிலீவ் ஹிம்.பசங்க பிரண்ட்ஸா இருக்கிறதால பொண்ணையும், பொண்ணு கூட நட்பா இருக்கிறதால பசங்களையும் தப்பா பேசாத…பொண்ணுக்கிட்ட நட்பா இருக்கிறவங்க  பெண்களை புரிஞ்சவரா இருப்பாங்க.பெண்களோட பெயின்,அவங்க எமோஷன்ஸ் எல்லாம் தெரிஞ்சிருக்கும்.முக்கியமான விசயம் தெய் வில் ரெஸ்பெக்ட் வுமன்.” என்றேன் நான்  தெளிவாக.

 

தெளிவான வார்த்தைகள் என்னோடது தான்.ஆனால் சிந்தனை என் அம்மாவினது.

இப்படியாக நான் தீர்க்கமாய் தெளிவாய் இருக்க , ” சரி உனக்குப் பிடிச்சா ஓகே.நீ சொல்றது கூட சரி போல தான் படுது.” என என் அலைவரிசையில் இணைந்தாள்.எனக்கும் அவள்‌ சிறிது சமாதா‌னம் ஆனதும் மனம் சமன்பட்டது.

 

அறைக்குள்‌ இருந்து  வெளியே பிரவேசித்த என் தோழியிடம் அம்மா ,” என்ன டா மிது.மகி பையன் போட்டோ காமிச்சாளா?”  என கேட்க, நான் அவளைப் புன்னகையோடு நோக்க என் புன்னகை வாடக்கூடாது என்ற எண்ணத்தில் அவளும் ” பார்த்தேன் ஆன்டி.நம்ம மகிக்கு நல்லா இருப்பார்” எனவும் என்‌ முகதத்தோடு போனஸாய் அம்மாவின் முகமும் சிரித்தது.

 

எல்லாம் அப்பா‌ வந்து ” பையனுக்கு மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்லையாம்.ஸோ‌ வேற‌ பார்க்க சொல்லிட்டாங்க.பையனுக்குத் தெரியாம அவங்க அம்மா பார்த்திருக்காங்க .ஸோ விட்டுடலாம்.” என சொல்லும் வரையில் தான்.

 

அப்பா‌ மிகவும் ப்ராக்டிகல்.அதனால்‌ அவர் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

அவன் இன்ட்ரெஸ்ட் இல்லை‌ என்றது எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது என்னவோ உண்மை.மனதில்‌ ஏமாற்றமும்‌ ஏக்கமும் சத்தமின்றி பரவியது.முதன்முதலில் பார்த்த மாப்பிள்ளை என்பதால் எனக்கு ஏமாற்றம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபட‌ முனைந்தேன்.இனிய கனவு ஒன்று ‌கலைந்த நிலை . நான் ரசித்த இசையானது எங்கோ தொலைவில் என்னை விட்டு சென்ற எண்ணம் என்னுள்.

 

இருந்தும் எதுவும் என்னைக் கொண்டு போக விடவில்லை‌.அப்படித்தான் நான் நினைத்தேன்.ரசனை என்ற புள்ளியில் தொடங்கி அது ஈர்ப்பு என்னும் கோலத்தை எப்படி எப்பொழுது வரைந்தது என தெரியவில்லை.ஆனால் நிச்சயமாக இந்த திருமண விசயம் ஆரம்பித்த பின் தான் என்பது ஐயம் திரிபற நான் அறிவேன்.

 

முதல் சலனம் அதனால்‌ ஏற்பட்ட தாக்கம்.அதை எதிர் கொள்ள‌ முடியாத தயக்கம்.அவனின்‌ நினைவுகள் தந்த இனிமை.எல்லாம் ஒருசேர என்னைத் தாக்குகிறது.இதில் வருத்தமான விசயம் என்னவென்றால்  திருமணம் ஒன்றும் நிச்சயமாகவில்லை.எத்தனையோ திருமணம் மேடையில் கூட நின்று போயிருக்கிறது என்பதெல்லாம் அல்வா போல் பிசிறில்லாமல் வளவளவென தெளிவாய்ப்  புரிகிறது. ஆனால் மனம் ?? அது மிகவும் பேராசைக் கொண்டது போலும்.இன்னும் இன்னும் காரணங்கள் தேடி தன்னைத் தானே வருத்தமுற செய்கிறதே?!

அடி நெஞ்சத்தில் அசைப்போட்ட  அவனின்‌ அசைவுகள்.அவன் விளையாடும் பாணி,ஜெயித்தவுடன் அவன் தோழமைகளோடு சேர்ந்து அடிக்கும்‌ லூட்டி.முதல்முறை அவன் என்னிடம் பேசியவை.

 

ஆம்! பேசியிருக்கிறான்.கல்லூரி கல்ச்சுரல்ஸின் போது அவன் தான் தலைமை.அவன் தான் நிகழ்ச்சி‌ நிரல் ஆகியவற்றை தயார் செய்தான்.”சினேகிதியே நீங்க  தானா? ” என்று அவன் கேட்க ஒரு நொடி திகைப்பில் நான் திணற,அவனருகில் இருந்த அவன் தோழி , ” சாங் கேட்டான்மா அவன்” எனவும் ” ஆமா. நான் தான் பாடுறேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

” டேய் அது சினேகிதனே சாங் ” என அவன் தோழி திருத்தம் செய்வதும் என்‌‌ காதில் கேட்டது. அவ்வளவு தான் எங்கள்  பேச்சு.

 

ஆனால் இந்த இரு தினங்களில் அவனோடு திருமணத்திற்குப் பின் இதையெல்லாம் பேச வேண்டும் என்று என்‌ மனம் கொண்ட அவா மரணித்துப் போனது.நான் மிகவும் தைரியமான பெண் தான்.எதையும் எதார்த்தமாகப்‌ பார்ப்பவள் தான்.

 

ஆனால் முதல் முறையல்லவா? முரண்டுகிறது என்‌ மனம். பெண் மனம்‌ அல்லவோ? என் அப்பா எல்லாம் பொருந்தி இருக்கிறது என்ற பின் தான் என்னிடம் புகைப்படத்தைக்‌‌ காட்டினார். இப்போது நான் வருந்துவது தெரிந்தால்‌ அவரும் வருத்தப்படுவார்.ஆகையால் அதை‌‌ நினைக்காமல் இருக்க முயலுகிறேன்.இசை கோர்க்காத பாடல் ஒன்றை என் இதயம் பாட கேட்கும்‌ நிலையில் இருக்கிறேன் நான்.

 

ஒரு வாரம் ஓடியிருக்க,  விடுமுறை என்பதால்‌ நான் என் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அப்படியே எங்கள் ஏரியாவில் இருக்கும் மாலுக்கு சென்றேன்.அங்கிருந்த புத்தக கடைக்குள் நுழைந்து ஒரு புக்கைத் திருப்பிப் பார்த்து விட்டு மூடினால் விதுஷ்ணன் நிற்கிறார். அதிர்வோடு தான் நான் அவனைப் பார்த்தேன் என சொல்ல வேண்டும்.சர்வ நிச்சயமாக சத்தியமாக‌ ஆவல் இல்லை என்னிடம். ஆம்! முயன்று என் மனதை ஒருமுகப்படுத்தி இருந்தேன்.அம்மாவும் அப்பாவிடம் ஸ்டிரிக்டாக சொல்லி விட்டார். ஆகையால் யாரும் திருமணம் பற்றி பேசவும் இல்லை.நானும் சிறிது மாதங்கள் போகட்டும் என்றும் சொல்லிவிட்டேன்.

 

அதனால் நான் மிக‌ சாதாரணமாக அந்த புக்கை வைத்து விட்டு அடுத்த புக்கை பார்க்கத் துவங்க, ” மகிழ்வதனி ! ” என்ற தேன்தமிழ்‌ பெயரை சிறிதும் தீதின்றி சரியாய் உச்சரித்தான் அவன்.அவன் விதுஷ்னண். தாக்கங்கள், தயக்கங்கள் எல்லாம் எப்போதோ ஓடியிருக்க, நிமிர்வோடு அவனை நோக்கி

 

“எஸ்.சொல்லுங்க” என்ற என் வார்த்தையில் புன்னகை சிந்தியவன்,

 

“மகிழ் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றதும் எங்கிருந்தோ ஒரு கோபக்கணை என்னைத் தாக்க,

 

”இப்படி தான் தெரியாத பொண்ணுகிட்ட பேசுவீங்களா? மரியாதை இல்லாம?” என நான் கேட்கவும் திகைத்து திருதிருவென விழித்தவன் ,

 

” எதுக்குக் கோபம்?.. கண்டிப்பா தெரியாத பொண்ணுகிட்ட நான் மரியாதையா தான் பேசுவேன்.இப்பவும் அப்படி தான் பேசினேன்.நீ என்னை விட சின்னவ தானே.அன்ட் மோரோவர் இப்படி தானே இனி கூப்பிட போறோம்.ஐ மீன் இஃப் யூ விஷ்” என பேசிக்கொண்டே போக புரிந்தும் புரியாத புரிந்து கொள்ளவியலாத பா‌வம் எனக்கு.

 

நான் முழித்ததை உணர்ந்தவன் ,” வாயேன் வெளியே காஃபி டே இருக்கு.சாப்பிட்டுட்டே பேசலாம்” என ஏதோ உரிமைப்பட்டவன் போல அழைக்க,

 

”இல்ல நான் தெரியாதவங்க‌ கூடவெல்லாம் வர முடியாது” மறுத்தேன் அவனிடம்.கட்டுப்பெட்டியல்ல நான் ஆனால் கட்டுப்பாடுகள் உண்டு.அம்மா அப்பாவைக் கேட்காது எதுவும் செய்ய மாட்டேன்.அதுவும் ஒரு அன்னியனுடன் காபி எல்லாம் ‘ நோ ‘ தான்.

 

அவன் என் அப்பா‌ பார்த்தவன் என்பதெல்லாம் பறந்து போய் விட்டது.ஹி இஸ் எ ஸ்டேரேஞ்சர் அது மட்டுமே என் மனதின் குரல். போன வாரம் கொண்டிருந்த சலனம் எல்லாம் சத்தமின்றி காணாமல் போயிருந்தன.

 

இப்படி நான் யோசிக்கையில் என் அலை பேசி‌ ஒலி எழுப்ப , எடுத்துப் பார்த்தால் ‘அப்பா’ .கொஞ்சம் தள்ளிப்போய் பேசினேன்.

 

” சொல்லுங்கப்பா”

 

இந்த  முனையில் நான் சொல்ல, அந்த பக்கம் அப்பா, ” மகிழ்மா‌ விதுஷ்ட்ட பேசினேன் டா.அவரே வந்து பேசினார்.மேரேஜ்க்கு ஓகேவாம்.எனக்கே இந்த வரன் தட்டிப்போனதுல வருத்தம் தான்.உங்கிட்ட பேச ஆசைப்பட்டார்.அதான் உன்னை மீட் பண்ண வந்திருக்கார்.பேசி பாருடா.எதுனாலும் உன் டிஷிஷன் தான் மகிழ்மா..ஜஸ்ட் பேசிப்பாரு” என்று சொல்லி விட்டு அப்பா போனை வைத்துவிட, நான் பேசவில்லை என்பதை போனில் போட்டுக் கொடுத்து விட்டு என்னையே விழியகலாமல் கண்ணும் கருத்துமாய் கண் நோக்கினான் அவன்.

 

அதாகப்பட்டது சைட் அடித்தான்.

 

அவன் என்னை‌ நோக்கி வந்து ,” இப்ப‌ போகலாமா” என‌ கேட்க, பேசத் தோன்றாமல் தலையசைக்க, அவன்‌ முன்னே.. நான் அவன் பின்னே.. பேச வேண்டும்  என்றதுதான் அவன், ஆனால் பேச்சைத் துவங்கியது நானே! ” மேரேஜ்ல இப்ப இன்ட்ரேஸ்ட் இல்லனு சொன்னாங்க” ஆரம்பித்தேன் நான்.

 

” எஸ் சொன்னேன்.இப்பவும் இன்ட்ரெஸ்ட் இல்லதான்.இப்போ எனக்கு உன் மேல தான் இன்ட்ரெஸ்ட்.ஆனால் இப்ப விட்டா ஐ வில் மிஸ் யூ.அதனால தான் மேரேஜ்கு ஓகே சொன்னேன்.” எனவும் எனக்குள் உருகி ஓடுகிறது பரவச பனிக்கட்டி ஒன்று.

 

ஆனாலும் இந்த முறை அலர்ட்டாகிறது அடிவாங்கிய மனது. உருகலை எல்லாம் வெளிக்காட்டாமல் விரைப்பாகவே , ” எப்படி? ” என்றேன் நான்.

 

“மிதுலா.ஷி இஸ் தி ரீசன்” .

 

உள்மனமோ ,” அவ  தானேடா உனக்கு எதிரா நின்றாள்.உன்னை வேண்டாம்னு சொல்லி சண்டை வேற போட்டா..எப்படி இது பாஸிபிள்?? ” என நான் என் மண்டைக்குள் விசாரணை நடத்த, விதுஷ்க்கு என் மைன்ட் வாய்ஸ் புரிஞ்சது போல,  சாரே பேசினார்.

என் ப்ர்ண்ட் ஆகப்பட்ட அந்த லூசு மிது போய் எங்களுக்குள்ள நடந்த அத்தனையும் அப்படியே அங்க காபி பேஸ்ட் செய்திருக்கா.

 

அதை என் கிட்ட சொன்ன விதுஷ்ணன், ” எனக்கு ஆராதனா,ஸ்ரேயா,ஜீவா,ராகுல் எல்லாருமே முக்கியம்.இவங்க தான் என் ப்ரெண்ட்ஸ்.சிலர் எங்க நட்பை தப்பா பேசினாலும் வீ வோன்ட் மைன்ட்.பிகாஸ் எங்க கூட பழகினவங்களுக்கு எங்க நட்பை தெரியும்.ஆனால் மேரேஜ்னு வரப்ப எங்க லைஃப் பார்ட்னர்ஸ் எங்களை புரிஞ்சிக்கணும்ல.இதுல எனக்கும் ராகுலுக்கும் மட்டும் தான் கல்யாணம் ஆகல.இப்ப வரைக்கும் மேரேஜ்க்குப் பிறகும் எங்க ப்ர்ண்ட்ஷிப் தொடருது.ஆரா ஹஸ்பண்ட் எங்க கூட படிச்சவன் தான்.சோ அவனும் எங்க செட் ஆகிட்டான்.ஸ்ரேயா ஹப்பி அந்த அண்ணா ரொம்ப ஜாலி‌ டைப்.ஜீவா ஹப்பி மட்டும் இதெல்லாம் பிடிக்காதவர்.சோ நாங்க விலகி இருந்தோம்.ப்ர்ண்ட்ஷிப் எந்த அளவு முக்கிய மோ மேரேஜ் பின்னாடி பார்ட்னரும்‌ முக்கியமில்லையா.சொல்ல போனா அதுக்குத்தான் முக்கியத்துவம் ஜாஸ்தி.

 

அவளுக்கு மேரேஜ் ஆகி   ஏழு வருடம் ஆகுது.இப்ப. அவருக்கே எங்க நட்பை பத்தி தெரிஞ்சிடுச்சு.சோ அவ எங்க கூட பேச பழக அலோவ் செய்றார்.என்னோட அம்மா இப்ப உயிரோட இல்லை.ஷி டைட் வென் ஐ வாஸ் ஃபைவ்.இப்ப இருக்க அம்மா என்னோட சித்தி.” என்றதும் என் கண்கள் வெளிப்படுத்திய கருணையும் கனிவும் கலந்த பாவத்தை படித்தவன் ,

 

 

” ஹே அம்மா ரொம்ப நல்லவங்க..என்னையும் என் தம்பியையும் ஒரு மாதிரி தான் கேர் செய் வாங்க.பட் நான் ஒரு நாலு வருசம் அம்மா இல்லாம இருந்தேன்.அப்போ எனக்கு ஆரா தான் எல்லாமே.என் அம்மா உனக்கும் அம்மா தான்.அப்படி இப்படினு ரொம்ப கேர் செய்வா…அப்புறம் அவ மூலமா தான் எனக்கு மத்த ப்ரெண்ட்ஸும்  கிடைச்சாங்க. “

 

” மிது என்கிட்ட எல்லாத்தையும் சொன்னாங்க.யாரைப் பத்தியும் அனாவசியமா தப்பா பேசாம,என்னோட ப்ரெண்ட்ஷிப்பை மதிச்ச உன்னோட மனசு ஐ லைக்ட் இட்.அக்சுவலி மேரேஜ்ல இப்ப இன்ட்ரேஸ்ட் இல்ல.ஸோ உன் போட்டோ கூட பார்க்காம வேண்டாம்னு  சொல்லி அம்மாட்ட கத்திட்டேன்.மிதுலா என்கிட்ட சொல்லவும் தான் உன்னை மாதிரி ஒரு பொண்ணை மிஸ் பண்ண கூடாதுனு தோணிச்சு.உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என அவன் கேட்கவும் பிறழ்கிறது எந்தன் மனம் அவன்பால்.

 

உருகல் இப்போது வெளியே தெரியவும் செய்ய,அவனை நோக்கி சினேகப் புன்னகையை சிந்த, மீண்டும் பிடிச்சிருக்கா ? என அவன் பிடியில் நிற்க,

 

அவன் கூட விளையாட விழைகிறது என் மனம்.” பிடிக்கல” எனவும்

 

” பிடிக்க வைக்க என்ன செய்ய?? ” என்றான் அசராது.

 

என் அமைதியை கண்டவன் , ” லெட்ஸ் ஹேவ் எ காஃபி ” என்றான்.

 

” காபி குடிச்சா பிடிக்குமா என்ன?”, அவனைத் தடுமாற வைக்க தவம் கிடக்கிறது என் மனம்.

 

தடுமாறுகிறானா அவன் ?ஹூம் ஹூம் ..!!

 

“எ லாட் கென் ஹேபன் ஓவர் காஃபி” என்றான் உற்சாகம் உரமேறிய குரலில்.மொத்த குதூகலமும் குத்தகைக்கு எடுத்தாற் போன்ற நிலையில் பேசுகிறான் அவன்.

 

“மிது சொன்னாளா?” மொத்தமாக சரண்டரானேன் நான்.

 

‘மிது கையில கிடைச்ச காலி டி நீ…இது கூடவா சொல்லுவா நீ?’ மானஸீகமாய் மண்டையில் ஒரு கொட்டு அவளுக்கு .

 

எனது ஆசைகளுள் ஒன்று கணவனுடன் மட்டுமே காபி ஷாப் செல்ல வேண்டும் என்பது.இது நாள் வரையில் நான் காபியைத் தொட்டதே இல்லை தெரியுமா..?அதனால் தான் இவன் அழைத்தவுடன் வந்துவிட்டேன்.அப்பாவின் சம்மதமும் உண்டு என்றாலும் கூட இவன் பேசும்வரையில் இவனுக்கு பாஸ் மார்க் தரவில்லை நான்.மறைமுகமாய் காபி சாப்பிட்டால் பிடிக்குமா என்று கேட்டேனே நான்அதைப் பிடித்துக் கொண்டு என் பிடித்தத்தை அறிந்து கொண்டு விட்டான்.

 

‘அறிவாளி என ஒத்துக்கொண்டது என் நியாய மனம்’

 

“எஸ்.அவங்க தான் சொன்னாங்க..ரொம்ப திட்டு என்னை.என் ப்ரெண்ட் உங்களை விட்டுக்கொடுக்கல..பட் நீங்க எப்படி அவளை வேண்டாம்னு சொல்லலாம்னு ஒரே சண்டை.இப்படி சண்டை போடுற அளவுக்கு யாரடா அது பார்க்கலாம்னு அம்மாட்ட கேட்டேன்.அவங்களும் சண்டை.மகாலஷ்மி மாதிரி இருந்தா நீ பார்க்க வேண்டாம் சொல்லிட்டனு..பின்ன அவங்ககளை கெஞ்சி உங்க டாடியைக் கெஞ்சி இப்போ உன்னைக் கெஞ்சுறேன்” என அவன் கெஞ்சல் கதையை சொல்லவும் சிரித்து சிதறுகின்றது சிந்தை.

 

“காபி குடிக்கலாமா வது ?” என இந்த முறை ஆர்வம் அதிகமான குரலில் அவன் வினவ,மறுக்காத தோன்றவில்லை என் மனதுக்கு.

 

பின்னர் என்ன..?

 

‘எ லாட் ஹேப்பண்ட் ஓவர் காபி’

 

எனக்குள் ஒலித்த இசையானது இன்று அவன் இதயத்தில் கேட்கிறது.காதலின் மாயமோ..? கல்யாணத்தின் ஜாலமோ..?எதுவோ ஒன்று இனிக்கத்தான் செய்கிறது எனக்கு.

 

இப்போது அவனுக்கும் எனக்கும் சண்டை என்றால் என் பக்கமாகத்தான் எங்கள் தோழியர் வாதாடுவர்.அவனுக்கு இருக்கும் ஒரே சப்போர்ட் மிஸஸ்.மிதுலா ராகுல் மட்டுமே.

 

என் மனதின் ஓரம் சிறு இசையாய் இருந்தவன் இன்று என்னை ஆட்சி செய்யும் ஆனந்த பைரவியாக மாறிப்போனான்.

 

 

Advertisement