Advertisement

 

தேடல் 6:

 

வீட்டிற்குள் நுழைந்த ஹர்ஷாதித்யனைப் பிடித்துக் கொண்ட வைதேகி ,

 

“ஹர்ஷா அம்மா உங்கிட்ட பேசனும்டா..” என

 

“சொல்லுங்கம்மா” என்றபடி அமர்ந்தான்.

 

“நானும் நாலஞ்சு நாளா சொல்லத்தான் நினைக்கிறேன் டா..ஆனா நேரம் வாய்க்கல..   நடக்கனும்னு இருக்கறது நடந்துடுச்சு.கிடைச்ச வாழ்க்கையை சந்தோசமா வாழ பழகிக்கோடா…பாவம் ரவீணா.அந்த பிள்ளையை எதுவும் சொல்லாதடா…இன்னிக்கு முகம் வாடிப் போய் வந்திருக்கா…முன்னாடி நல்லா கலகலன்னு சிரிச்சிட்டு இருந்த பிள்ளைடா. நீ சும்மா சும்மா அவளை திட்டாம நல்லா பார்த்துக்கோ என்ன..?மனைவியை அழ விடுறவன் நல்ல மனுசனே இல்ல..” என்றவர் அவனுக்கு காபி கலந்து கொடுத்தார்.

 

ரவீணா வேலை முடிந்ததும் சீக்கிரமே  வீட்டிற்கு வந்துவிட ,ஹர்ஷாவுக்கு டீம் லீட் என்பதால் வேலைகள் சற்று ஜாஸ்தியாக இருக்க , அவன் வர தாமதாகி விட்டது.ஏற்கனவே இன்று ஆபிஸீல் வைத்து அவள் பேச்சிய பேச்சில் சூடாக இருந்தவன் , வீட்டிற்கு வந்து தாய் சொன்ன அட்வைஸில் இன்னும் கடுப்பானான்.

 

மேலே வந்து பார்க்க ,ரவீணா குளித்து விட்டு அப்போதுதான் வெளியே வந்தாள்.அவளைக் கண்டதும் , அவள் கையை முரட்டுத் தனமாகப் பற்றியவன் ,

 

“நல்லா நடிக்கிறடி நீ..விட்டா நடிகர் திலகமே தோத்துடுவார் உங்க பெர்ஃபாமன்ஸ்ல…பின்ன உங்க அக்கா எப்படி நடிச்சா..நீ மட்டும் குறைஞ்சா போவா….என்னை ஆபிஸ்ல அப்படி திமிரா பேசிட்டு இங்க அம்மாட்ட வந்து  சீன் போட்ருக்க நீ… நான் உன்னை திட்டிறேனாடி..இல்ல நீ என்னை திட்டினியா..?அது எப்படி    நான் ஜஸ்ட் டீம் லீட் இல்ல…” என்றவன் கோபமாக மூச்சை விட்டு ,அவள் முகம் பார்க்க அதுவோ வாடித்தான் போயிருந்தது.

 

அதைக் கண்டு இன்னும் கடுப்பானவன் , கையை விட்டு ,

 

“அது எப்படி…எப்படி..?உனக்கு என்னை தவிர மத்த எல்லாரும் நல்லவங்களா தெரிவாங்கள…நான் ஒரு டீம் லீடா….உன்னோட சோ கால்ட் ஹஸ்பண்ட் என்னைத் தவிர  மேடம்க்கு அந்த ராம் இல்ல தீபக் சொல்லிக் கொடுத்தா தான் விளங்கும் இல்ல.உன்னை சொல்லி குத்தமில்ல..என் தலையெழுத்து உன் கூட வாழனும்னு..போ..முன்னாடி நின்னு ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி சீன் போடாத..எரிச்சலா வருது..” என்றபடியே குளியறைக்குள் புகுந்து கொண்டான்.

 

அவளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம் என்று தான் அவனும் காலையில் தீர்மானித்திருந்தான்.ஆனால் இவனை மதிக்காமல் அவள் ஆதித்யராமிடம் சந்தேகம் கேட்டது அவனது ஈகோவைத் தூண்டி விட்டது.’கணவன் நான் இருக்கும்போது அவன் யார் இவள் சந்தேகம் தீர்க்க’ என்ற உரிமையுணர்வு அவனை அவ்வாறு பேச வைத்தது.

 

இப்போதும் அவன் ரவீணாவை இப்படி வார்த்தைகளால் தாக்க நினைக்கவில்லை.ஆனால் அவனையறியாமல் அனைத்தும் நடந்துவிட்டன.

 

கீழே சென்ற ரவீணா மாமியாருக்கு காய்கறி வெட்டி உதவிகள் செய்து கொடுத்தாள்.இரவு உணவு முடிந்த பின் இருவரும் வந்து படுக்க, வேலை பளு காரணமாக ஹர்ஷா அசந்து உறங்கி விட,ரவீணாவோ மௌனமாய்க் கண்ணீர் உகுத்தாள்.

 

காலையில் தீபக்குடனான மனஸ்தாபத்தில் இருந்தவளை ஹர்ஷா வந்து திட்ட ,அதை தாங்காமல் வெகுண்டாள் அவள். மீண்டும் மாலையில் அவன் இப்படி திட்டுவான் என அவள் எதிர்ப்பார்த்தாள் தான்.

 

எதிர்ப்பார்த்ததே  என்றாலும் கூட மனதில் தோன்றிய வலியைத் தடுக்க முடியவில்லை.ஏற்கனவே மாதவிலக்கு வேறு அவளுக்கு வந்து அவளைப் படுத்தி எடுத்தது.இவளாக சென்று வைதேகியிடம் எதுவும் உரைக்கவில்லை.ஆனால் வைதேகியே இவளது வாடிய முகத்தைக் கண்டு மகனிடம் பேசினார்.நாலு நாட்களாகப் பேச நினைப்பார்தான்.இன்று தான் சந்தர்ப்பம் வாய்க்க மருமகளிடம் பேசியது போல் மகனிடமும் பேசி விட்டார்.

 

அவனோ அன்னையிடம் காட்ட முடியாத கோபத்தையெல்லாம் ரவீணாவிடம் காட்ட,அவள் மனமும் உடலும் முற்றிலும் சோர்ந்து போனாள்.தவறே செய்யாவிட்டாலும் தன் மீது குற்றம் இல்லாவிட்டாலும் கூட அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

 

தவறு செய்த பூமிஜா எங்கோ நன்றாக இருக்க ,தான் மட்டும் ஏன் இப்படி பேச்சுகளை வாங்கிக்கொண்டு வாழ வேண்டும் என்ற கழிவிரக்கம் பிறந்தது.கூடவே பூமி எப்படி இருக்கிறாள் என்ற கவலையும் பிறந்தது.இன்று காதல் என்ற பெயரில்  எத்தனை பெண்கள் வீட்டை விட்டு போய் ஏமாறுகிறார்கள் என்ற பீதியும் சேர்ந்து கொண்டது.எப்படியோ அவள் நன்றாக இருந்தால் போதும் என நினைத்தாள்.இப்படியாக பலவித  மன குழப்பங்களால் தவித்தவள் வெகு நேரம் கழித்து விடியலில் தான் உறங்கினாள்.

 

மறு நாள் எழுந்த ஹர்ஷா இவளைக் கண்டுகொள்ளாது ஆபிஸுக்கு ரெடியானான்..ஒரு வேளை அவள் லீவோ என்று நினைத்தான்.

 

‘எதை இவனிடம் சொல்லிவிட்டு செய்கிறாள்.’ அவளை எழுப்ப கூட இல்லை. அவன்  சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ரவீணாவுக்கு முழிப்புத் தட்டியது.வேக வேகமாக எழுந்தவள் தலை குளித்து விட்டு ஆபிஸீக்கு ரெடியானாள்.அவள் கீழே வந்த போது ஹர்ஷா பஸ்சுக்கு போய் விட, வைதேகி

 

“ஏன் ரவீமா தூங்கிட்டியாடா….?அவன் நீ  தூங்குறேன்னு சொன்னான்….டையர்டா இருந்தா ரெஸ்ட் எடுத்துக்கோடா..அவன் வேற லேட்டாச்சுன்னு கிளம்பிட்டானே” என

 

“பரவாயில்லத்த..ஒரு முக்கியமான ப்ராஜ்க்ட்…அதான்… நான் போகனும் அத்த.சிந்து போயிட்டாளா.பார்த்து இருங்கத்த…பை…. நான் வரேன்..” என்றவள் அவசர அவசரமாக செருப்பை மாட்ட,

 

“ஹே…!!நில்லு நில்லு..ரவீமா..சாப்பிடாம போற..ரெண்டு இட்லி சாப்பிடுடா…” என மல்லுக்கட்ட

 

“டைம் ஆச்சுத்த…” என்றவளுக்கு டிஃபனையும் லன்ச்சோடு சேர்த்து கட்டிக் கொடுத்தார்.

 

“தேங்க்ஸ் அத்த…பை..” என்றவாறே விரைந்து அவள் பஸ் வரும் இடத்துக்கு வர அதுவோ முன்னாடியே சென்றிருந்தது.அதனால் பக்கத்து ஏரியாவுக்கு வரும் அவர்கள் கேப்பையாவது பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் ஷேர் ஆட்டோ பிடித்து  ,பக்கத்து ஏரியாவுக்கு சென்று ஒரு வழியாக கேப்பை பிடித்து ஆபிஸ் சென்றாள்.

 

அதற்குள் அவளது உடல் சோர்ந்து போய் விட்டது.அவளது இருக்கையில் வந்து அமர,சரியாக ஹர்ஷாவிடமிருந்து மெயில்.அவன் மெயிலில் குறிப்பிட்டிருந்த வேலையை செய்யுமாறு டீம் மெம்பர்ஸ் அனைவருக்கும் அனுப்பியிருந்தான்.

 

சாப்பிட கூட செய்யாமல் , வேலையில் மூழ்கிப்போனாள்.ஒரு வழியாக அவனுக்கு மெயில் அனுப்பிவிட்டு ,எழ முயற்சி செய்ய,அப்படியே மயங்கி விழுந்தாள்.

 

இரவில் சரியாக உறங்காதது,காலையில் சாப்பிடாமல் அலைந்தது,போதாக்குறைக்கு மாதவிலக்கு எல்லாம் சேர்ந்து அவளை மயங்கச் செய்ய ராஜி பயந்து சத்தம் போட,அனைவரும் கூடி விட,ஹர்ஷா வேக வேகமாக ஓடி வந்தான்.

 

மனைவியை அங்கிருக்கும் ரெஸ்ட் ரூமில் உள்ள பெட்டில் படுக்க வைத்தவன் தண்ணீர் தெளிக்க மயக்கம் தெளிந்தாள் ரவீணா.அவள் கண் விழித்ததும் தான் ஹர்ஷாவுக்கு மூச்சே வந்தது.

 

அதையெல்லாம் கண்ட தீபக் மெதுவாக விலகி வந்தான்.ஹர்ஷாவின் அன்பு பொய்யில்லை.அவன் துடிப்பு மெய்யே.இப்படி அன்பான கணவன் அமைய தன் தோழி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அதற்கு தடையாய்த் தானோ தன் நட்போ இருக்க கூடாதென முடிவு செய்தவன் மனதைத் தேற்றிக்கொண்டு அவனிருக்கையில் வந்து அமர,ராஜியும் அவன் பின்னே வந்தாள்.

 

“ஏய்..நீ அவ கூட இருக்க வேண்டியதுதான…?” என தீபக் சொல்ல

 

“இல்லடா…ஹர்ஷா சார் நான் பார்த்துக்கிறேன்..நீங்களாம் போய் வேலையைப் பாருங்கன்னு சொல்லிட்டார்டா.அவளை மடியில வைச்சு க்ளூகோஸ் கொடுத்துட்டு இருக்கார்..”

 

“ஹ்ம்ம்..சரி நீ போய் உன் வேலையைப் பார்..” என தீபக் அதட்ட

 

“ஏன் டா என்னை துரத்துறதுலயே இருக்க..?”

 

“ஏன்..எல்லாரும் என்ன கடைசி வரைக்கும் என் கூடவே வா இருக்க போறீங்க..ஒரு   நாள் எல்லாரும் போய் தானே ஆகனும்..இப்போ பாரு ரவீக்கு கல்யாணம் ஆனதும் ஹர்ஷா தான் முக்கியமா போய்ட்டார்..” என்றான்.

 

அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி,“நானும் கடைசி வரைக்கும் உங்கூட தான் இருப்பேன்…நான் ஏன் போறேன்…என் ஹஸ்பண்ட் ரொம்ப நல்லவரு….உங்கூட பேச கூடாதுன்னு சொல்ல மாட்டார்.”

 

“அப்படியா அப்படி ஒரு நல்லவன் இருக்கானா என்ன?”

 

“இதோ இருக்கானே..” என அவனை நோக்கி கை நீட்ட,ஆனந்த அதிர்ச்சி தீபக்குக்கு.

 

“ஹே..! “ என அவன் கையைப் பிடிக்க முயல அவனுக்குப் பழிப்புக் காட்டி விட்டு ஓடினாள் அவனது இதயத்தை ராஜ்ஜியம் செய்யும் ராஜேஸ்வரி.

 

 

ரவீணா மெல்ல தன் நிலை உணர்ந்து அவனது மடியில் இருந்து எழ முயற்சிக்க,அவள் கையைப் பிடித்து,

 

“ஷூப்…இப்படியே இருடா…என்னாச்சும்மா…சாப்பிடலயா நீ..?” என்றான் அக்கறையான குரலில்.

 

அவனது அக்கறை வாஞ்சையாக அவன் குரலில் வெளிவர ,இத்தனை நாள் இப்படி அவன் பேச மாட்டானா என ஏங்கியவள்  உடைந்து அழ,

 

“என்னடா அழற….ரொம்ப முடியலயா..?” என்றான் அவள் தலைவருடி.

 

அவளுக்கு வயிறு வேறு பயங்கரமாய் வலிக்க,அதைத் தாங்க இயலாது பல்லைக் கடித்தபடி ,அவனுள் துஞ்சி ,

 

“ம்ம்…” என

 

“பீரியட்ஸா..?”

 

“ம்ம்” என்றாள் முனகலாய்.

 

“சாப்பிட்டியா இல்லயா…?”

 

“இல்ல…”

 

“ஏன் சாப்பிடல..சாப்பிடாம ஏன் வந்த நீ…அம்மா உன்னை சாப்பிட சொல்லலையா..?” என அதட்ட,

 

“லேட் ஆச்சுன்னு சாப்பிடாம வந்துட்டேன்…”

 

“போட்டேன்னு வை..இந்தம்மா வந்து தான் ப்ராஜ்க்டை கம்பிளீட் பண்ணனும் பாரு..இரு..” என்றவன் அவளது லஞ்ச்பேக்கை எடுத்து அவளை சாப்பிட வைத்தான்.

 

“இப்போ ஓகேவா ஃபீல் பண்றேன்…..தேங்க்ஸ்..” என்றாள் மெலிதாக சிரித்தபடி.

 

“பாப்பாக்கு பூவா கொடுத்துவுடனே தான் பேச்சே வருது…” என்றபடி அவள் கன்னம் தட்டியவன் “ரெஸ்ட் எடு டா..ஐ ஹேவ் வொர்க்” என்றபடி வெளியேற,

 

“இல்ல…நானும் வரேன்..இப்போ ஓகே “ என்றவளின் தோள்ப்பற்றி அமர வைத்தவன் ,

 

“ஹே..!!ஒழுங்கா படுத்து ரெஸ்ட் எடு…ஈவினிங் போகும்போது நான் கூப்பிட்டுக்கிறேன்.ஹெச்.ஆர் கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றான்.

 

அதன்பிறகு இவர்கள் திருமண செய்திதான் அன்றைய ஹாட் டாக்.மாலையில் அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் ,

வீடு வந்து சேர இரவாகி விட்டது.இருவரும் படுத்திருக்க,ரவீணாவோ புரண்டு புரண்டு படுத்தாள்.

 

“என்னாச்சு மா..?” என

 

“ஒன்னுமில்ல..” என்றாள் வலியைப் பொறுத்தபடி.

 

“ரவீ…சொல்லு வலிக்குதா..?” என அவன் அதட்ட

 

“ம்ம்” என்றவள் வலி தாங்காது அழ,

 

உடனே கீழே சென்ற ஹர்ஷா ஐஸ்க்யூப்ஸை துண்டில் வைத்து அவளிடம் வந்தான்.அவள் அருகில் உட்கார்ந்தவன் அவளது சுடி டாப்ஸில் கை வைக்க,அனிச்சையாக அவள் தட்டி விட

 

கடுப்பானவன் ,  “லூசு..இருடி..நான் ஒன்னும் பண்ண மாட்டேன்.வலி போயிடும்..கொஞ்சம் அமைதியாக இரு..” என அதட்டியவன் அவளது வயிற்றில் கைவைக்க

 

அவளுடலில் சிலிர்ப்பு.ஹர்ஷாவுக்கும் அதே நிலை தான்.முதன்முதலில் ஒரு பெண்ணை இவ்வளவு நெருக்கமாய்ப் பார்க்கிறான்.இலவம் பஞ்சாய் அவள் மேனியும்..அவளது பால் நிலா போன்ற முகமும் அவனை தடம்புரளச் செய்தது.ஆனாலும் தன்னை மீட்டெடுத்தவன் மென்மையாக அவள் வயிற்றில் ஐஸால் ஒத்தடம் கொடுத்தான்.கணவனின் கை செய்த மாயமும் அந்த பனிக்கட்டி செய்த மாயமும் ஒரு  சேர,பனி உருகியதோ இல்லை அவள் உருகினாள்.அவளது வலியும் அந்த ஐஸ்கட்டியோடு கரைந்து போயிற்று.அப்படியே உறங்கிப் போனாள் ரவீணா.

 

அவள் உறங்கியதும் அவளுக்குப் போர்த்தி விட்டு ,அவளருகில் அமைதியாகப் படுத்துக் கொண்டான்.லேசாக வலிக்க,முனகியவள் தலையணை இறுக்க,அதை நீக்கியவன்,அவளை மிருதுவாய் அணைத்துக் கொண்டான்.

ரவீணாவோ அரைகுறை உறக்கத்தில் அவனை உணர்ந்து கண்விழித்து அவனிடமிருந்து விலகப் பார்க்க,

 

“தூங்குடா….சரியாகிடும்..” என்றபடி அவளது முதுகை வருடிக் கொடுத்தான்.அவளும் அதன் இதத்தில் உறங்கிப் போனான்.

 

காலையில் அவளை ரெஸ்ட் எடுக்க சொல்ல,அவளோ சரியாகி விட்டதாக கூறி கிளம்பினாள்.மனைவியைத் தாமதாகவே எழுப்பியவன்,அவள் கிளம்பும் வரைக் காத்திருந்தவன் அவர்களது காரிலே அவளை  அழைத்துச் சென்றான்.

 

அன்றிலிருந்து இருவருக்குமிடையில் எந்த போரும் வெடிக்கவில்லை.யாரும் யாரையும் நோகடிக்கவில்லை.ஒரு வித அமைதியுடன் கழிந்தது அம்மாதம்.

 

திருமணமாகி இரண்டாவது மாதம் தொடங்கிய நிலையில்,இருவருக்குள்ளும் சில பேச்சு வார்த்தைகள் பொதுவானதாக, இதமானதாக நிகழ்ந்தன.

 

அன்று ஆபிஸில் இருந்த போது ஹர்ஷாவுக்கு அவன் மாமனார் செந்தில் போன் செய்தார்.

 

“மாப்பிள்ளை..எப்படி இருக்கீங்க…ரவீ எப்படியிருக்க…அவ போனுக்கு ட்ரை பண்ணேன்..அவ எடுக்கல..இன்னிக்கு அவளுக்குப் பிறந்த நாள்..அதுக்குத் தான் கூப்பிட்டேன்..” என சொல்ல

 

‘அச்சோ…வினு  பர்த்டேவா…தெரியாம போச்சே..அவ வேற ஃபீல் செய்வாளே..ஹர்ஷா அசத்திடுடா..’ என தனக்குள் சொல்லிக் கொண்டவன் மாமனாரிடம்,

 

“நாங்க நல்லாயிருக்கோம் மாமா.நீங்க அத்தையெல்லாம் எப்படி இருக்கீங்க…ரவீ நல்லாயிருக்கா..ஆபிஸ்ல இருக்கா..வொர்க் அதிகம்..அதனால எடுத்திருக்க மாட்டா.. நீங்க ஈவினிங் அவ வீட்டுக்குப் போனதும் கூப்பிடுங்க…” என்றவன் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு  வைத்தான்.

 

அன்றிரவு உறங்க ஆயத்தமான ரவீணாவை , கைப்பிடித்து அருகில் அமர்த்திக் கொண்ட ஹர்ஷா , கட்டிலுக்குக் கீழ் இருந்து ஒரு பூங்கொத்தையும் பெரிய பாக்ஸையும் எடுத்தான்.

 

அவளிடம் பூங்கொத்தை நீட்டி,”விஷ் யூ மேனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே வினு..” என்றவன் அடக்கவியலாது அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.அவன் வாழ்த்தியதே ஆதிர்ச்சி என்றால் பரிசு கொடுத்தது பேரானந்தனமாய் இருக்க,இதழ் பதித்தது இன்ப சுறாவளியை அவள் மனதில் வீசிச் சென்றது.

 

காலையில் அவளுக்கு அவள் தந்தையிடத்திலிருந்தும் தாயிடமிருந்தும் அழைப்பு வர,அதன்பின் தான் அவளுக்குமே பிறந்த நாள் நினைவுக்கு வந்தது.ஆனால் அவர்கள் மேல் உள்ள கோபத்தில் அவள் எடுக்கவில்லை.ஏனெனில் திருமணமான தினத்தில் இருந்து அவள் தந்தை அவளுக்கு அழைத்துப் பேசியதில்லை.தாயும் போன் செய்தால் அறிவுரை மட்டுமே சொல்வாரே ஒழிய அன்பாகப் பேச மாட்டார்.அந்த கடுப்பில் இருந்தவள் அவர்களிடம் பேசுவதை விட்டொழித்தாள்.ராஜி மட்டுமே அவளுக்கு வாழ்த்து சொல்ல,தீபக் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்.ஹர்ஷா வாழ்த்துவான் என எதிர்ப்பார்க்காதவள்  புளங்காகிதம் அடைந்தாள்.

 

“தேங்க்ஸ்…” என்றாள் மென்சிரிப்போடு.

 

பாக்ஸை நீட்டியவன் , “பிரிச்சு பாரு வினு..” என

 

உள்ளே ஒரு புடவை இருக்க,”பிடிச்சிருக்கா டா” என்றான்.

 

அவளுப் பிடித்த பேபி பிங்க் நிறப்புடவை.கற்கள் பதித்து அழகுற இருக்க,

 

“பிடிச்சிருக்கு…சூப்பர்” என்றாள் மனதை மறைக்காது.இந்த கேக் வெட்டிக் கொண்டாடும் பழக்கமெல்லாம் அவன் வீட்டில் கிடையாது.அது கூட சிறு வயதில் தான்.அதனால் தான் அவன் அதையெல்லாம் செய்யவில்லை.

 

அதில் உச்சிக்குளிர்ந்து போனவன் புன்னகை மன்னனாய், “இன்னிக்கு வொர்க்னால உன்னை வெளியே அழைச்சிட்டுப் போக முடியல…நாளைக்குக் கண்டிப்பா உன்னை கூட்டிட்டுப் போறேன் டா…” என சொல்ல ரவீணாவோ அவன் புன்னகைக்கும்போது விழுந்த கன்னத்துக்குழியில் பார்வையைப் பதித்து இருந்தாள்.பின்னர் அவன் பேசியதைக் கேட்டு

 

“ஆதி இட்ஸ் ஒகே…நாளைக்கு நீங்களே அழைச்சிட்டுப் போகலன்னா கூட நானே உங்களை இழுத்துட்டுப் போயிடுவேன்..” என்றாள் புன்னகையோடு.

 

 ஒரு நாள் அவன் ஆதி என்று அழைக்காதே ஹர்ஷா என்றே சொல்லு என சொல்ல,அவளோ “எனக்கு ஹார்ஷா பேசுற ஹர்ஷாவிட அன்பா பேசுற ஆதியைத் தான் பிடிச்சிருக்கு “ என்று சொல்லி விட அவனும் அதிலிருந்து  மறுக்கவில்லை.இருவரும் அன்பால் பாலம் அமைக்கத் தொடங்கினர்.சிந்துவோடு சேர்ந்து மூவரும் விளையாடுவது கதையளப்பது என்று நன்றாகப் பொழுது போக்கினர்.

 

அன்றைய இரவு பொழுது இனிமையாய் இருக்க ,

“குட் நைட் வினு..” என ஹர்ஷா சொல்ல

 

“குட் நைட் ஆதி..” என்றபடி அவளும் உறங்கிப் போனாள்.அவனும் அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான்.சில நாட்களாக இதுவும் அன்றாட பழக்கங்களில் ஒன்றாய்ப் போனது.இரவும் போய் விடியலும் வந்தது.

 

நிமிடத்துக்கு நிமிடம் மாறும் இவ்வாழ்க்கையில் இரவைப் போலவே விடியலும் இனிதாய் இருக்குமென சொல்ல முடியுமா?

 

பிறந்த நாள் வாழ்த்து சொன்னவன் மறு நாளே பிரியும் நாள் பற்றி பேசுவான் என எதிர்ப்பார்க்காத ரவீணா அதிர்ச்சியானாள்.

Advertisement