Advertisement

 

தேடல் 10 :

 

ஒரு மாதம் கழித்து ரவீணா ஹர்ஷாவோடு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றாள்.

 

அங்கு போய் பார்த்த போது ,பூமிஜாவும் அவளது கணவனும் இருந்தனர்.ரவீணாவின் பெற்றோர் மூத்த மகளை ஏற்றுக்கொண்டனர்.காரணம் ஹர்ஷாதான்.ஆனாலும் செந்தில் பழையபடி மூத்த மகளிடம் பேசுவதில்லை.இருந்தாலும் ஹர்ஷாவின் வார்த்தைக்காக அவளை ஏற்றுக்கொண்டனர்.

 

கிருஷ்ணாவும் ஒன்றும் குறை சொல்லும்படியாக இல்லை.மிக மிக நல்லவன்.பெற்றோர் இல்லாத குறை ஒன்றை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.மாமனார் மாமியாரிடம் மிகுந்த மரியாதையோடும் பூமிஜாவை கைக்குள் வைத்து பார்த்துக் கொள்வான்.

 

வித்யாவதி தான் மாசமாக இருக்கும் பெண் என்பதால் பூமிஜாவின் மீது கோபதாபங்கள் இருந்தும் அன்போடு நடந்து கொண்டார்.இது எல்லாம் ரவீணாவிற்கு தெரியும்.ஆனால் அவளாக அதைப் பற்றி எதுவும் பேச மாட்டாள்.அவளுலகம் ஹர்ஷாவோடு சுருங்கி விட்டது.அவனிடம் மட்டுமே திறந்த புத்தகமாய் இருந்தாள்.

 

ஹாலில் அமர்ந்திருந்த கிருஷ்ணா தான் ஹர்ஷாவையும் இவளையும் பார்த்து விட்டு புன்னகைத்தான்.பூமிஜா தங்கையை ஏக்கமாய்ப் பார்க்க,கிருஷ்ணா ,

 

“ஹாய் ரவீ..எப்படி  இருக்க…?” என்றான் இயல்பாக.

 

தானாக வந்து பேசுபவனை அவமதிக்க தோன்றாமல்,அது மட்டுமில்லாமல் கிருஷ்ணாவைப் பற்றி ஹர்ஷா சொல்லி கேட்டிருக்கிறாள் ரவீணா.ஆகையால்,

 

“நல்லா இருக்கேன் மாமா.நீங்க எப்படி இருக்கீங்க?”

 

“நான் நல்லாயிருக்கேன்”

 

அதற்கு மேல் என்ன பேசுவதென தெரியாமல் இருவரும் இருக்க,ரவீணா

 

“அம்மாவை பார்த்துட்டு வரேன் மாமா” என்றபடி அவரது அறைக்குள் புகுந்தாள்.

 

அதன்பின் தாய் தந்தையோடு பேசியவள் மறந்தும் கூட பூமிஜாவுடன் பேசவில்லை.அதில் பூமிஜாவின் கண்கள் கலங்கி விட்டன.

 

“பாருங்க கிருஷ்…உங்க கிட்ட கூட பேசுறா..எங்கூட பேச மாட்றா…எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?” என கணவனிடம் புலம்ப,

 

“பூமி..அவ உங்கிட்ட பேசலன்ன வருத்தமா..இல்ல எங்கிட்ட பேசினான்னு வருத்தமா…விடுடா…சீக்கிரமே சரியாகிடுவா..நம்ம செஞ்ச வேலையில் பாதிக்கப்பட்டது அவ தானே.அந்த கோபம் இருக்கத் தான் செய்யும்..” என்று மனைவியை சமாதானம் செய்தான் அந்த அன்புக் கணவன்.

 

தீடீரென ரவீணாவின் கத்தும் சத்தம் கேட்க,ஹாலில் இருந்தவர்கள் அனைவரும் செந்திலுன் அறைக்குள் நுழைய,அங்கே வித்யாவோ ,

 

“ஹே..! ஏன் கத்துற நீ..அமைதியா இருமா..நான் என்ன சொல்லிட்டேன்..” என சமாதானம் செய்ய,அவளோ பொங்கி விட்டாள்.

 

“என்ன தப்பா கேட்டீங்களா…? நான் எப்போ புள்ளை பெத்துக்கனும்னு எழுதியிருக்கோ அப்போதான் நடக்கும்..அதை விட்டுட்டு அது கூட உங்க இஷ்டமா..?சும்மா என்னை ஏன் டார்ச்சர் பண்றீங்க..” என அவள் கத்த

 

செந்திலோ , “என்ன சொன்ன வித்யா?” என மனைவியைக் கேட்க

“இல்லங்க..கல்யாணமாகி ஒரு வருசம் ஆகப்போகுது.இவ கூட கல்யாணம் ஆனவங்களாம் மாசமா இருக்காங்க.அதான் சீக்கிரமே ஒரு பேரனோ பேத்தியோ பெத்து தாம்மான்னு சொன்னேன்..அதுக்குப் போய் இவ கத்துறா..” என அவர் கலங்கிப் போய் பேச

 

ஹர்ஷாவோ , “வினு..பேசாம இரு..வா போகலாம்..” என மனைவியை அழைக்க,அவளோ

 

“நான் ஏன் பேசக்கூடாது..? நான் பேசுவேன்…அன்னிக்கு நம்ம கல்யாணத்தப்போ கூட இவங்க என்னை பேச விடல..என் கழுத்துல தாலி ஏறலன்னா தூக்கில தொங்கிடுவோம்னு மிரட்டினாங்க…அப்படி ஒரு சூழ்னிலையில் கல்யாணமான பொண்ணாச்சேன்னு இவங்களுக்கு யோசனை வேண்டாம்.அப்பா அம்மா அதை மட்டும் சொல்லல..பெரியம்மா அத்தையெல்லாம் நல்ல செய்தி சொல்லலையான்னு கேட்கிறாங்க…உன் மாமியார் எதாவது நினைப்பாங்க…அப்படிங்கறாங்க..என் அத்தையைப் பத்தி எனக்குத் தெரியாதா..?”

 

“இப்படி அடுத்தவங்களுக்காக நான் எவ்வளவு தான் செய்றது..?கொஞ்சம் கூட நானும் உணர்வு உள்ள மனுஷின்னு நினைக்க மாட்டீங்களா நீங்களாம்..? என்ன ஒரு பொருளா நினைச்சு தானே இவ போன பின்னாடி என்னைக் கட்டி வைச்சீங்க..உனக்கு விருப்பமான்னு ஒரு வார்த்தைக் கேட்டீங்களா..?” என்று கோபத்தில் பேசிக் கொண்டே போக,

 

ஹர்ஷா ,”வினு…ஸ்டாப் இட்..விடு… நான் சொல்றேன்ல..கேளு” என அதட்ட

 

செந்திலோ , “விடுங்க மாப்ள..அவ மனசுல உள்ளதை எல்லாம் சொல்லட்டும்..” என்று விட்டார்.

 

ரவீணாவோ ஆவேசம் வந்தவளாய் எதையுமே காதில் வாங்காது பேசிக் கொண்டே போனாள்.

 

“அது என்ன…பெரிய பொண்ணு ஓடிப்போயிட்டா சின்னப் பொண்ணைக் கட்டுறது..?பெரிய பொண்ணுக்கு குழந்தை இல்லன்னா இல்லை செத்துப் போயிட்டா சின்னவளைக் கட்டி வைக்கிறது…இதே பசங்க விசயத்துல இப்படி செய்வாங்களா..? பொண்ணுங்க என்ன வெங்காயம் தக்காளியா..அழுகிப் போயிட்டா வேற பொருள் தரதுக்கு..உயிரும் உணர்வும் உள்ள மனுஷங்க தானே..கல்யாணம் ஆன பின்னாடியாவது என்னோட மனசைப் புரிஞ்சிக்க ட்ரை பண்ணீங்களா..?”

 

“எப்ப ஃபோன் பண்ணாலும் மாப்ள கூட சந்தோசமா இருக்கனும்…மானம் மரியாதையைக் காப்பாத்து…இதான் பேச்சு…என் மனசைப் பத்தி யோசிச்சீங்களா..?இப்பவும் வந்து அவளுக்கு குழந்தை இருக்கு..இவ மாசமா இருக்கான்னு சொல்ல வேண்டியது.ஏதோ இவரு நல்லவரா இருந்ததால எங்க வாழ்க்கை நல்லாயிருக்கு..இதே பூமி ஓடிப்போனதுக்கு என்னை பழிவாங்கி இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க நீங்க…?எப்பவும் மானம் மரியாதை மட்டும் பார்க்காதீங்க..கொஞ்சம் மனசையும் பாரு…..” என்றவள் உணர்ச்சிவசத்தால் அப்படியே மயங்கி சரிந்தாள். 

 

அதைக் கண்டு பதறி மனைவியைத் தாங்கியவன் அவளை பெட்டில் படுக்க வைக்க, கிருஷ்ணா ரவீணாவை பரிசோதித்து விட்டு அவள் மாசமாக இருப்பதாக சொல்ல,இவ்வளவு நேரம் ரவீணாவின் பேச்சால் கலங்கிப் போயிருந்த அனைவரும் மகிழ்ந்தனர்.

 

ஹர்ஷாவையும் ரவீணாவையும் தனியாக விட்டு விட்டு மற்றவர்கள் வெளியே வர,வித்யாவதியோ ,

 

“என்னங்க…நம்ம பொண்ணு மேல உள்ள அக்கறையில தானே சொன்னேன்..அதுக்கு இப்படி பேசுறா..” என அழ,செந்திலோ,

 

“வித்யா…விடு அவ மனசில உள்ள கோபமெல்லாம் வெளிய வந்தது ரொம்ப நல்லதுதான்.இல்லன்னா இன்னும் எத்தனை நாள் இதையெல்லாம் மனசுல வைச்சிக்கிட்டு கஷ்டப்படுவாளோ…அவ சொல்றதும் நியாயம் தானே..” என்றார்.

 

“பாரு..நம்ம எண்ணங்கள் அப்படி ட்யூன் ஆயிடுச்சு.ஒருத்தவங்க செஞ்ச நல்ல விசயத்துக்கு நாம இன்னொருத்தரை பாராட்டுறது இல்லை.ஆனா இதே தப்பு செஞ்சா ஈசியா தண்டிச்சிடுறோம் இல்ல..” என்றார் வேதனையுடன்.

 

“எல்லாம் என் தப்பு தான்ப்பா..” என்று பூமிஜா தேம்பி தேம்பி அழ,

 

“அய்யோ…இந்த நிலையில அழாதடா..விடுடா.” என்று பெரிய மகளை சமாதானம் செய்தார் செந்தில்.

 

உள்ளே கண்விழித்த ரவீணாவோ , உணர்ச்சிப் பெருக்கில் கண்ணில் நீர்வழிய இருந்தாள்.

 

அவளது கண்ணீரை ஹர்ஷா துடைத்து,

“உனக்குள்ள ஒரு ஜான்சி ராணி இருக்கான்னு எனக்குத் தெரியாம போச்சே புஜ்ஜீமா..” என சிரிப்போடு சொல்ல,

 

“சாரி ஆதி..” என்றபடி அவனது மடியில் சாய்ந்தாள் அவன் மனைவி.

 

“ஹே..! எதுக்கு சாரி…?”

 

“நான் உங்களைக் கஷ்டப்படுத்த பேசல…இவங்க மேல  உள்ள கோவம் அதான்…நீங்க சொல்லும்போது கூட என்னால கன்ட்ரோல் செய்ய முடியல..”

 

“அதனால தான் நானும் விட்டுட்டேன்..இல்லன்னா உன்னைக் கன்ட்ரோல் பண்ண எனக்குத் தெரியாதா என்ன…?நீ இப்போ ரிலாக்ஸ் ஆகிட்டல…அது போதும்…”

 

“ம்ம்..ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கேன்..”

 

“இனிமே நீ டென்ஷனே ஆக கூடாது..ஏன்னா உள்ள குட்டி புஜ்ஜூம்மா இருக்காங்க..என் பாப்பா சிரிச்சிட்டே பொறக்கனும்” என்று சொல்ல அவள் கண்கள் வியப்பில் விசிறியாய் விரிந்து கணவனை காதலோடு ஆவலும் போட்டி போட நோக்க,

 

“ஆமாடா… நம்ம இனி இரண்டு இல்ல மூணு…” என்றான் விரல்களை நீட்டி.

 

அந்த ஆனந்த அதிர்ச்சியைத் தாங்கவியலாது அவள் கண்களில் நீர்வழிய,

“ஐ அம் சோ ஹாப்பி ஆதி..எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா…சொல்லவே முடியல….அவ்வளவு ஹாப்பி…” என்றபடி கணவனின் தோள் சாய்ந்து முகம் புதைத்து அழுதாள்.

 

வீட்டிற்கு செல்லும் முன் ,

“சாரிப்பா…சாரிம்மா…நான் ஏதோ கோவத்துல பேசிட்டேன்…” என மன்னிப்புக் கேட்க

 

“அய்யோ…என்னடா ரவீக்குட்டி…..நீ எந்த தப்பும் செய்யல..விடு..எல்லாம் எங்க தப்பு..நீதான் எங்களை மன்னிக்கனும்..” என்று செந்தில் சொல்ல

 

“என்னது தப்பா..? என் விட்டுக்காரரை பார்த்து தப்புன்னா சொல்றீங்க…” என்று ரவீணா மிரட்ட,ஹர்ஷா மனைவியை மையலோடு நோக்க,அங்கே மகிழ்ச்சி மீண்டது.

 

அதன்பின் வைதேகிக்கு விசயம் தெரிய மருமகளை ஏற்கனவே மகள் போல் பார்ப்பவர் இன்னும் அவளை தாங்கினார்.ஹர்ஷாவோ அவனது மொத்த அன்பையும் அவள் மேல் காட்டி திக்குமுக்காட செய்தான்.

 

இரண்டு மாதங்கள் கழித்து பூமிஜாவிற்கு பிரசவ வலி வர,கிருஷ்ணா போன் செய்து ஹர்ஷாவுக்கு சொல்ல,

 

“யாரு ஆதி..” என்றாள் ரவீணா.

 

“கிருஷ்ணா தான்…இன்னிக்கு பூமிஜாவுக்கு டெலிவரியாம்…” என சொல்லி

 

“நான் போய்ட்டு வரேண்டா” என அவன் கிளம்ப,நானும் வரேன் என்று இவளும் அவனோடு சென்றாள்.

 

மருத்துவமனையில் பூமிஜா பிரசவ வலியில் துடித்தபடி கணவனின் கையை இறுகப்பற்றியிருக்க,ரவீணாவுக்கு அவள் வேதனைக் கண்டு அழுகை வர,அக்காவிடம் சென்றவள்,

 

“அழாத பூமி….சீக்கிரமே குழந்தை வந்துடுவான்…” என சமாதானம் சொல்ல,தங்கை பேசியதில் அவளது மனதில் இருந்த சங்கடம் நீங்க ,ஆனந்த கண்ணீர் சிந்தினாள்.

 

அதன்பின் சிறிது நேரம் கழித்து பூமிஜாவுக்கு அழகாய் ஒரு ஆண்மகவு பிறக்க,குழந்தையை வாங்கிய ரவீணாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

“பூமி…தம்பி எப்படி பார்க்கிறான் தெரியுமா..அப்படியே நீதான் டி..” என குழந்தைப் பற்றிய பூரிப்பில் உற்சாகமாய்ப் பேச அங்கே அனைவரின் மனதும் நிறைந்தது.

 

வைதேகி மாசமாக இருக்கும் தன் மருமகளைக் கவனிக்க வேண்டி மகனிடம் ,

“ஹர்ஷா அவ எதுவுமே சாப்பிடாம இருக்கா பாரு..போய் பால் வாங்கி கொடு “ என்று சொல்ல அவனும் அவளுக்கு மருத்துவமனை கேண்டினில் இருந்து பால் வாங்கிக் கொடுத்தான்.

 

அக்காவுடனான கோபதாபங்களை மறந்து ,கணவனின் காதலில் கரைந்து,பெரும்பேறாம் பிள்ளைப்பேற்றைப் பெற போகும் பூரிப்பிலும்,அக்காவின் பிஞ்சுக்குழந்தையைக் கையில் ஏந்திய உற்சாகத்துடனும் இருந்தவள் பாலைக் குடித்துவிட்டு வேண்டுமென்றே கணவனைப் பார்த்துக் கொண்டே நாவால் அவளது இதழ்களை துடைக்க, ஹர்ஷாவோ அவளது இம்சை தாங்காமல் அருகில் வந்து ,

“ஹாஸ்பிட்டல்னு பார்க்கிறேன்..உன்னை புஜ்ஜூமா உனக்குக் கொழுப்பு ஜாஸ்தியாச்சு..படுத்துறடி என்னை..” என அலுத்துக்கொள்ள

 

அவளோ அவன் காதில் ரகசியம் பேசுவது போல் அவன் கன்னத்தில் முத்தமிட ஹர்ஷாவோ மனைவியை அதிர்வோடு நோக்க,அவளோ

 

“எனக்கு ஹாஸ்பிட்டல்னா எந்த பிரச்சனையும் இல்லை..” என்று கண்ணடிக்க

 

“உன்னை…” என்றபடியே அவளை அன்போடு அணைத்துக் கொண்டான் ஹர்ஷாதித்யன்

 

அவர்கள் தேடிய தேடல் காதலாகி இனி இந்த காதலே தேடலாகும்…

 

தேடல் காதலானது..!!!              

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement