Advertisement

 

தேடல் 3:

 

ஹர்ஷாதித்யன் வெட்ஸ் பூமிஜா என பொன்னிறத்தில் மணமக்களின் பெயர் அந்த அதிகாலை வேளையிலும் மண்டபத்தின் வாயிலில் ஜொலித்தது.

 

அந்த திருமண மண்டபத்தை விட்டு , யாரும் அறியா வண்ணம் பூமிஜா பூனைப்போல் மெல்ல நடந்து வந்து அந்த காரிருளில் கலங்கிய கண்களோடு காரில் தனக்காக காத்திருந்த காதலனிடம் வந்தாள்.அவளது கலக்கத்தைக் கண்டவன் அவளது கண்ணீரைத் துடைத்து ,”அழாம வா பூமி….எல்லாம் சரியாகிடும்…”என்றபடியே அவளை அழைத்துக் கொண்டு காரை விரட்டினான், அவளை கைப்பிடிக்க வேண்டி..!

 

நான்கு மணியளவில் பூமிஜாவை குளிக்க சொல்ல வித்யாவதி மகளை எழுப்ப வர அவளைக் காணாமல் அங்குமிங்கும் தேடினார்.மணமகள் அறையில் தேடி கிடைக்காமல் இருக்க ,பால்கனியில் தேடினார்.அங்கெல்லாம் பூமிஜா இல்லாமல் போக ரவீணாவை எழுப்பினார்.

 

தூக்க கலக்கத்தில் ,”என்னமா…..நான் தூங்கனும்..எல்லாரும் ரெடியானதும் எழுப்புமா…” என அவள் புரண்டு படுக்க

 

“ரவீ…அக்காவை காணும்டி…எழுந்திரு..எங்க அவ…?” என பதட்டத்தோடு கேட்க ,

 

சோம்பல் முறித்து எழுந்தவள் ,”என்ன கேட்டா எப்படிம்மா தெரியும்….இங்க தானே தூங்கினா.பாத்ரூம் போயிருக்க போறா…பாருங்க…” என சொல்ல

 

“அய்யோ…எல்லா இடத்துலையும் பார்த்தாச்சு..உங்கூட தானே படுத்திருந்தா…..எங்க போனா டி..இவ….”என்றவருக்கு கண்கள் கலங்கிப் போயிற்று.

 

அப்போது கூட மகள் ஒடிப் போயிருப்பாள் என அவர் நினைக்கவில்லை.ரவீணாவுக்குத் தான் பயம் பிடித்துக்  கொண்டது.

 

இரவில் பூமிஜா யாரிடமோ பேச , “என்னக்கா யார் கூட இப்போ பேசற..” என வினவ

 

“மாமா கிட்ட தான் ரவீ…” என்றாள்.

 

அதனால் அவளுக்குத் தனிமை கொடுத்து விட்டு அவள் வெளியே வர, ஹர்ஷா அவன் தங்கையோடு பேசிக் கொண்டிருந்தான்.கையில் மொபைல் இருக்கவும் , தங்கை வந்ததும் பேச்சை நிறுத்தி இருப்பான் என அவளாகவே நினைத்துக் கொண்டாள்.இப்போது அது நினைவுக்கு வர,ஏதோ சரியாக இல்லை என்ற உண்மை புரிய ,நெஞ்சை பயம் கவ்வ ,குழப்பத்தோடு  முதலில் அவளும் எல்லா இடங்களிலும் தேடினாள்.

 

மீண்டும் அறைக்கு வந்தவள் அலைப்பேசியைத் தேடினாள் அக்காவுக்கு போன் செய்யலாம் என , அவளது அலைப்பேசியின் கீழ் ஒரு காகிதம் பூமிஜாவின் கைப்பட.

 

வழக்கம்போல் ஓடிப்போகும்போது எழுதி வைக்கும் அதே டெம்ப்லேட் வகையறா கடிதம் தான்..!!

 

அதைப் படித்த ரவீணா பயத்தில் அழ,வித்யாவும் நடந்ததை யூகித்துக் கொண்டார்.அவரும் அந்த கடிதத்தைப் படித்து விட்டு அழத்தொடங்கினார்.

 

“அய்யோ…அவ இப்படி செய்வான்னு  நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கலயே டி….அய்யோ……இப்ப என்ன செய்வேன்….எல்லார் முகத்திலேயும் நான் எப்படி முழிப்பேன்..இப்படி அமைதியா இருந்து ஒரேடியா  தலையில பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டாளே…..” என அவர் அழ

 

காலையில் மணப்பெண்ணுக்கு நலங்கு வைக்க ஹர்ஷாவின் தாய் வைதேகி வர , அவருக்கும் விசயம் தெரிந்தது.அவரும் தன் பங்குக்குப் புலம்ப ஆரம்பித்தார்.

 

“இப்படி தான் பொண்ணை வளர்ப்பீங்களா..?பிடிக்கலன்னா முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே…….இப்போ எங்க மானம் மரியாதை என்னவாகுறது…?” என அவரும் அழ தொடங்கினார்.

 

இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்ற மகனை வற்புறுத்தி திருமணம் செய்ய நினைக்க இப்படியா ஆகவேண்டும் இவர் நிலைமை…?

 

மகனுக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு இது….?

 

நினைக்கவே பயம் சூழ்ந்தது.

 

அதற்குள் விசயம் கேள்விப்பட்டு செந்தில் வர அவர் அப்படியே நெஞ்சில் கை வைத்து சாய்ந்து விட்டார்.

 

யாருமே பூமி இப்படி செய்வாள் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.பூமி எப்போதும் பெற்றோர் சொல்லுக்கு மாற்றாய் பிரிதொரு சொல் சொல்லாதவள்.அதுவும் ரவீணா கூட சேட்டைக்காரி பூமி மிகவும் சமத்தானவள் அவள் இப்படி ஓடி போவாள் என செந்தில் சத்தியமாக நினைக்கவில்லை.ஆனால் மகள் எழுதி வைத்து சென்ற கடிதம்..அதுவும் அவளது கைப்பட இருக்கும்போது எப்படி நம்பாமல் போவது..?

 

இப்படியே  ஒரு மணி நேரம் கழிய ,ஆளாளுக்கு சலசலக்க தொடங்கினர்.ஹர்ஷாதித்யனோ விசயம் கேள்விப்பட்ட பிறகு  அவன் அறையை விட்டு வெளி வரவே இல்லை.அன்னை விசயத்தை சொன்ன பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

 

அவனுக்குமே அதிர்ச்சி தான்…அதுவும் தாங்க முடியாத அதிர்ச்சி. காதல் என்றெல்லாம் இல்லை..ஆனால் இயல்பான கல்யாண கனவுகள் கலைந்து போன ஆதங்கம்…அதை விட திருமணம் நின்று போனது எவ்வளவு பெரிய அவமானம்…?

 

அடுத்து என்ன செய்வது என அவனுக்குப் புரியவில்லை.

 

பூமிஜா பெயருக்கு ஏற்றார்போல் பொறுமையின் சிகரமாகவே தெரிந்தாள்.இவனும் அவளோடு பெரிதாக எதுவும் பேசிக் கொண்டது கிடையாது.வேலை டென்ஷன் ஒரு புறம் என்றாலும் அவனது இயல்பான குணம் அவனை பேச விடவில்லை.நேரில் பார்க்கும்போது ஒரிரு வார்த்தைகள் ,சின்னதாய் சிரிப்புகள் அவ்வளவுதான்…!!

 

அந்த அமைதியான பண்பிலேயே பூமிஜா ஹர்ஷாவை கவர்ந்திருந்தாள்.தன் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என நம்பினாள்.மனைவியான பின் மொத்த காலமும் அவளுக்குத் தானே என செல்பேசியில் பேசியது கூட கிடையாது.

 

மனதில் ஒரு ஓரத்தில் நம்பிக்கைத்  துரோகத்தின் வலி.அதை விட அதிகமாய் ஆண்மகனாய் என்னை ஒருத்தி வேண்டாம் என சென்று விட்டாளே..எவ்வளவு பெரிய அசிங்கம்…என அவமானத்தின் தடங்கள் ஆழமாய் அக்கணம் இதயத்தில் பதிந்து போயின.

 

மூகூர்த்த நேரம் காலை ஆறு மணி என்றிருக்க கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர தொடங்கினர்.எல்லாரும் ஒன்றாய்க் குழுமியிருக்க , செந்திலின் குடும்பம் ஒரு புறம் கண்ணீர் வடிக்க, ஹர்ஷாவின் தாய் ஒரு புறம் அழுது வடிந்தார்.

 

அப்போது ஹர்ஷாவின் பெரியப்பா வைதேகியிடம் வந்து , “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப வைதேகி..ஒரு முடிவு செய்ய வேண்டாமா…?” என கேட்க

 

“என்ன முடிவு செய்றது மாமா….பொண்னே ஓடிப்போன பின்னாடி நாம என்ன செய்றது…?” என அவர் கலங்க

 

ரவீணாவின் அப்பா செந்திலைப் பார்த்த அவர் “ இங்க பாருங்க செந்தில்….எந்த காலத்திலேயும் மேடை வரை வந்து கல்யாணம்  நின்னு போனா..எப்படியெல்லாம் பேச்சு வரும்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரியனும்னு இல்லை….உங்களுக்கும் இன்னொரு பொண்ணு இருக்கு..அதனால உங்க ரெண்டாவது பொண்ணை எங்க ஆதிக்குக் கட்டி வைச்சிருங்க….சீக்கிரமே யோசிச்சு சொல்லுங்க…. மூகூர்த்த நேரத்துக்கு இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கு…..எனக்கு இந்த யோசனை தான் சரியா படுது..” என அவர் அந்த அரத பழசான ஐடியாவை தனது அரைகிலோ மூளையை உபயோகித்து சொல்ல ,

 

அழுது கொண்டிருந்த ரவீணா திடுக்கிடலோடு பார்த்தாள் என்றால் , செந்திலின் முகத்தில் நம்பிக்கையின் கீற்று.

செந்திலின் மாமா ஒருவர் வந்து ,

 

“உங்கிட்ட தனியா பேசனும் செந்தில்…” என்று அவரை அழைத்துச் சென்றார்.

 

“அவர் சொல்றது தான் எனக்கும் சரின்னு படுது செந்தில்….ஒரு பெண் ஓடிப்போயிட்டா அந்த அவமானம் ஆயுசுக்கும் உண்டு…இதனால ரவீணாவோட வாழ்க்கையும் பாதிக்கும்..ஓடிப்போனவ தங்கச்சின்னு அவப்பெயர்தான்..அதுக்கு அப்புறம் அவளை யாரு கட்டுவா….அதனால் இப்போ ரவீணாவை அந்த தம்பிக்கே கட்டி வைச்சிட்டா…..அவங்களுக்கும் நியாயம் செஞ்ச மாதிரி ஆகிடும்…அதே நேரம் ரவீணாவோட எதிர்காலமும் நல்லாயிருக்கும்…யோசிச்சு டக்குனு சொல்லுப்பா..” என அவர் கேட்க

 

அந்த யோசனை சரியென தான் பட்டது.இனி ரவீணாவின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பீதி வேறு அவரது நெஞ்சைபி பிசைந்தது.

அதனால் அவர் சம்மதம் சொல்லி விட வெளியே வந்த செந்திலின் மாமா , ஹர்ஷாவின் பெரியப்பாவை நோக்கி

 

“நீங்க சொன்ன யோசனை தான் எங்களுக்கும் சரின்னு படுது…அது படியே செஞ்சிடலாம்” என்றார்.வைதேகிக்கும் அதுவே சரியென பட மகனிடம் பேசச் சென்றார்.

 

ஹர்ஷாவோ விசயம் கேள்விப்பட்டு கொதித்துப் போனான்.

 

“ஏம்மா..உங்க புள்ள எதுக்கும் லாயக்கி இல்லன்னு முடிவு பண்ணிட்டீங்களா…?இப்ப தான் ஒருத்தி ஓடிப்போய் அதிர்ச்சி கொடுத்தான்னா..அதுக்குள்ள நீங்களும்மா….இதெல்லாம் சரியா வராதும்மா…..வேண்டாம்….விட்டுடலாம்….” என அவன் மறுக்க

 

“இதுல ரெண்டு குடும்பத்தோட மானம் மரியாதை அடங்கியிருக்கு ஹர்ஷா…இதனால  நம்ம சிந்துவோட வாழ்க்கை அந்த பொண்ணு ரவீணாவோட வாழ்க்கை எல்லாமே கேள்விக்குறியாகிடும்….”

 

“இதுல நம்ம சிந்து எங்கம்மா வந்தா…” என அவன் எரிச்சலாக

 

“ஏன் அண்ணனோட கல்யாணம் நின்னுச்சுன்னு கேள்வி வரும்பா….எது கிடைக்கும்..மெல்லலாம்னு அலையுற உலகம்பா….அந்த பொண்ணு ரவீணாவும் பாவம்….அவளோட எதிர்காலத்தையும் யோசி….அவ ரொம்ப நல்ல மரியாதையான பொண்ணுடா…” என்ற தாயை ஒரு பார்வை பார்த்தான்.

 

‘இப்படி தானே பூமிஜாவுக்கும் சொன்னீர்கள்’ என்ற மகனின் பார்வையை அவர் உணர , தலை குனிந்தார் .

 

தாயின் நிலை உணர்ந்தவன் ,”நீங்க ஏன்மா தலை குனியுறீங்க…இதுல உங்க தப்பு எதுவுமில்ல..இப்படில்லாம் நடக்கும்னு நம்ம நினைச்சோமா என்ன…இதான் விதி போல..விடுங்க….”

 

“அம்மா இது வரைக்கும் உன்ட்ட எதாவது கேட்டிருக்கேனா ஹர்ஷா…தயவு செஞ்சு கல்யாணத்துக்கு ஒத்துக்குப்பா..” என அவர் வேண்ட

 

பெரு மூச்சை விட்டவன் ,“நீங்க சொன்னபடியே நான் ரவீணாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்றான் தாய்க்காக.

 

அங்கே ரவீணாவை அலங்காரம் செய்ய போக , அவளோ தாயின் இடுப்பைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

 

“அம்மா…ப்ளீஸ்மா…எனக்குக் கல்யாணமெல்லாம் வேண்டாம்பா….எனக்கு வேண்டாம்மா…ப்ளீஸ்மா…” என அழுதாள்.

ஆனால் அவரோ மகளது பிடியைத் தள்ளி விட்டபடி ,”இங்க பாரு…..ஏற்கனவே ஒருத்தி எங்க தலையில மண்ணைப் போட்டா….இப்ப நீயும் உயிரை வாங்காத..அதுக்கு மொத்தமா எங்க ரெண்டு பேரையும்  கொன்னுடுங்கடி…..நீ மட்டும் இப்போ கல்யாணம் பண்ணிக்கல…அப்புறம் உங்க அப்பாவை பார்க்க முடியாது..அந்த மனுசனை இப்படி நான் பார்த்ததே இல்ல…உங்களை எப்படி நம்பி வளர்த்தோம்…..இப்படியா மோசம் செய்வீங்க…இப்போ உன் கழுத்தில தாலி ஏறல….எங்க கழுத்துல தூக்குக் கயிறு தான் ஏறும்..” என்றார் ஆத்திரமும் அழுகையையுமாய்.

 

அவரது இயல்பு இதுவில்லை என்றாலும் சூழ் நிலை அவரை அப்படி கடுமையாக பேச வைத்தது.

 

அதற்கு மேல் ரவீணாவுக்கும் வேறு வழி இருக்கவில்லை.கல்லாய் அனைத்துக்கும் உட்பட்டாள்.மனம் மரத்துப் போயிருந்தது.

 

அக்கா ஓடிப்போயிருந்த அதிர்ச்சியிலிருந்தே அவள் மீளவில்லை.அதற்குள் அவளை மொத்தமாக செயலிழக்க வைக்கும் வகையில் அவளுக்கே திருமணம்.

 

மூகூர்த்த  நேரத்தில்  ஹர்ஷாதித்யன் ரவீணாவின் கழுத்தில் தாலியைக் கட்டி அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்.

 

அங்கே மனம் புரியாமல் மானத்தைக் காக்க வேண்டி அவர்கள் மணம் புரிந்து கொண்டனர்.

 

அக்காவின் திருமணத்திற்கு அவளது நெருங்கிய தோழமைகளான தீபக்,ராஜி ,ஆதித்யராமை மட்டும்  தான் அழைத்திருந்தாள்.அவர்களுக்குப் பேரதிர்ச்சி.தீபக் தாங்கமாட்டாமல் ராஜியை மூகூர்த்தத்துக்கு முன் போய் ரவீணாவிடம் பேச சொல்ல , ரவீணாவோ ,

 

“எதுவும் பேசாத ராஜி….இதான் இனி நிஜம்….” என்றதுடன் முடித்துக் கொள்ள அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் தோழியின் அக்கா திருமணத்தைப் பார்க்க போய் தோழியின் திருமணத்தைப் பார்க்க வேண்டியதாயிற்று.

 

**************************************************** 

திருமணமே ஏதோ அல்லோலப்பட்டு நடந்தமையால் மணமக்களின் மனம் கருதி மற்ற சடங்குகள் தவிர்க்கப்பட்டன.

 

வீட்டிற்கு வந்தவுடன் உடை மாற்றிய ஹர்ஷா உடனே தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.இரவு வெகு நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை.

 

வைதேகி தான் ரவீணாவோடு இருந்தார்.அழுது முகம் சிவந்து போயிருந்த அவளது முகத்தை வாஞ்சையோடு வருடியவர் ,

 

“உன் நிலைமை எனக்குப் புரியுதுடா…..ஆனால் இதான் நிஜம்..கடவுள் உனக்கும் அவனுக்கும்தான் முடிச்சுப் போட்ருக்கான்…..என் பையன் ரொம்ப நல்லவன் டா…இப்போ சூழ் நிலையில அவனை நீயும் உன்னை அவனும்  புரிஞ்சிக்க கஷ்டம் தான்..ஆனா கொஞ்சம் கொஞ்சமா மனசை மாத்திக்கோங்கடா….அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு நினைப்பு இருந்தா அழிச்சிடு ரவீமா…..இனி அவன் உன் புருசன்..அதை பதிய வை..நான் அவனுக்கும் எடுத்து சொல்றேன்…நீ படுத்துக்கோ…அவன் மனசு சரியில்லன்னு பீச் வரைக்கும் போறேன்னா..வந்துடுவான் டா..” என்றபடி அவர் எழுந்து போனார்.

 

அவர் போனதும்  வெகு நேரம் அழுதவள் கீழே அமர்ந்தவாக்கில் மெத்தையில் தலைவைத்து உறங்கினாள்.

 

அதிகாலை நான்கு மணிக்கு ரூமில் வெளிச்சம் பரவ , ஹர்ஷாதித்யன் தான் லைட்டைப் போட்டான்.அந்த வெளிச்சத்தில் கண்கள் கூச, புடவையை சரி செய்து கொண்டவள் எழுந்து கொண்டாள்.

 

ஹர்ஷா அவனது சட்டையைக் கழட்டி விட்டு பனியனோடு வந்து படுக்க, இவள் எங்கே படுப்பது என தெரியாமல் அவனிடம் பேசவும் பயந்து , கீழேயே அமர ,

 

ஹர்ஷாதித்யனோ அவனது பெயருக்கேற்ப  சுடுசொல்லால் அவளை சுட்டெரித்தான்.

 

“ஏன் என் பக்கத்துல மேடம் படுக்க மாட்டீங்களோ…உங்க அக்கா கல்யாணத்துக்கு முன்னாடி ஓடி போனா…நீ கல்யாணத்துக்குப் பின்னாடி ஓடி போக போறியா…?” என சுள்ளென்று கேட்க

 

அனிச்சப்பூ இதயத்தாள்  அடிநெஞ்சில் இடி வாங்கினாள்.

Advertisement