அத்தியாயம் ஏழு:
இரவு முழுக்க ஹரியை பற்றிய யோசனை தான், “அவன் சொன்னான் என்று இத்தனை நாட்கள் மாற்றாத ஹேர் ஸ்டைலை கூட நான் மாற்றி இருக்கிறேன். ஆனால் அவனுக்கு என்னை தெரியக் கூட இல்லை”,
மிகவும் கோபமாக வந்தது, ஒரு வகையில் அவளின் ஈகோ ஹர்ட் ஆக “நாளை போய் முதலில் ஹேர் கட் செய்ய வேண்டும்”, என்று நினைத்துக் கொண்டே உறங்க ஆரம்பித்தாள்.
அதனால் காலை எழ சற்று தாமதம் ஆகியது.
இனி ப்ராக்டிஸ் சென்று கல்லூரி கிளம்ப முடியுமா என்று யோசனையாக இருந்த போதும் ஜஸ்ட் ஒரு இரண்டு ரவுண்டு ஓட மட்டும் செய்யலாம் என்று நினைத்து கீழே இறங்கினாள்.
இன்று கீழ் வீட்டுக்காரர்கள் அதுவரை கேட் திறந்து விட்டிருக்க, அதை திறந்து கொண்டு மெதுவாக ஓட ஆரம்பிக்கவும், சிறிது தூரம் சென்றவுடனேயே யாரோ கூட ஓடி வருவது போல தோன்ற, திரும்பி யார் என்று பார்த்தால் ஹரி.
அவள் திரும்பியதும், “ஹாய்”, என்றான்.
ப்ரீத்தி அவனை எதிர்பார்க்கவேயில்லை…….
அப்படியே நிற்கவும், அவளுக்கு சற்று முன் ஓடி விட்டவன் திரும்ப அவளின் அருகில் வந்தான்……
“ஏன் நின்னுட்ட”, என்று ஒன்றும் நடக்காதது போல கேட்க…….
ப்ரீத்தியின் விழிகள் இன்னும் விரிந்தது, என்ன நடக்கிறது அவளை சுற்றி என்றே அவளுக்கு தெரியவில்லை.
பார்த்து பார்த்தபடி நின்றாள். “வா, வா, எனக்கு டைம் ஆகிடும் ஆபிஸ்க்கு, எவ்வளவு நேரமா நீ வருவேன்னு நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”, என்று சொல்ல, அவன் சொன்ன தொனியில் ப்ரீத்தி அவளையறியாமல் திரும்பவும் ஜாகிங் ஆரம்பிக்கவும்,
“நேற்று என்னை தெரியாதது போல காட்டிக் கொண்டு நின்றுவிட்டு இன்று என்ன செய்கிறான் இவன். ஒரு வேளை அதற்கு பிறகு தெரிந்திருக்குமோ…. அதனால் தான் இப்போது வந்திருக்கிறானோ”, இப்படி யோசனைகள் ஓடியது ப்ரீத்திக்கு
வேறு ஹரி பேசவேயில்லை…… பக்கத்தில் இருந்த கிரௌண்டில் அவளுடன் இரண்டு ரவுண்டு ஓடினான்…… ப்ரீத்தி அவனின் புறம் திரும்ப திரும்ப பார்த்த போதும் கருமமே கண்ணாயினானாக, “இன்னைக்கு இது போதும், எனக்கு டைம் ஆகிடுச்சு, நாம திரும்ப போகலாமா”, என்றான்.
ப்ரீத்தியும் பதில் பேசவில்லை, அவளுக்குமே கல்லூரிக்கு நேரம் ஆகிவிட்டதால் திரும்ப வீடு நோக்கி ஜாக் செய்தாள்…. வீடு இருக்கும் தெருவிற்கு அருகில் வந்ததும்,
“ஓகே, நீ போ! நான் கொஞ்சம் கேப் விட்டு வர்றேன்”, என்றான் ஹரி.
“ஏன், சேர்ந்து போனா என்ன? கூட ஜாக் தானே பண்ணுனிங்க”,
“உனக்கு எப்படி தெரிஞ்சது”, எனவும்,
ப்ரீத்தி அவனை பார்த்து முறைத்தாள், கூடவே, “அப்போ என்னை தெரியாத மாதிரி நடிச்சு இருக்கீங்க”.
“ப்ரியல்லியன்ட், ப்ரியல்லியன்ட், கண்டுபிடிச்சிட்ட”,
“ஏன், ஏன் நடிக்கணும்”, என்றாள் படபடப்பாக.
“அப்போ தானே நீ என்னை பத்தி யோசிப்ப”,
“எதுக்கு, எதுக்கு நான் உங்களை பத்தி யோசிக்கணும்”,
“எதுக்கா?”, என்று மோகனமாய் ஒரு மென் புன்னகை புரிய………
ப்ரீத்திக்கு சத்தியமாய் புரியவில்லை…… “hey whats going on”, என்றாள் ஹரியை பார்த்து.
“you have to decide”, என்றவன்,
“போ, போ, டைம் ஆகுது, அங்க ஒருத்தன் நான் போனவுடனே கத்துவான்”, என்று பரபரக்க……
ப்ரீத்தி ஒன்றும் புரியாமல் வீடு நோக்கி போனாள், சில எட்டுகள் எடுத்து வைக்கவும், “முடிய திரும்பவும் கட் பண்ணிக்காத, இப்போ தான் கொஞ்சம் பொண்ணு மாதிரி இருக்க”, என்று ஹரி சொல்லவும்,
திரும்பி நின்று ஹரியை பார்த்தாள்… தோள் குலுக்கி அவன் புன்னகைக்க….
ப்ரீத்திக்கு, “என்னடா இவன்? யாருடா இவன்? stay away from him preethi”, என்று மூளை அறிவுறுத்த, அந்த செய்தியை அவளின் கண்களும் காட்ட…
“என்னடா நேத்துல இருந்து உன் கண்ணு என்கிட்டே பேசவேயில்லைன்னு நினைச்சேன்….. you have a damn good expressive eyes”, எனவும், திரும்பி பார்க்காமல் வீட்டை நோக்கி சற்று வேகமாக ஓடினாள்.
“stay away preethi, he is not as such what you have thought”, என்று அவளுக்கு அவளே சொல்லியபடி.
வீட்டில், கல்லூரியில் என்று ப்ரீத்தி வெகுவாக டிஸ்டர்ப் ஆகி தான் இருந்தாள், ஏன் என்று அவளால் சொல்ல முடியவில்லை….. ஹரியை சுற்றியே ஞாபகங்கள்.
ஹரி மிகவும் ஹேண்ட்சம் பெர்சனாலிட்டி தான்……. அவனின் தோற்றம் அவனின் புன்னகை ப்ரீத்தியை திரும்ப திரும்ப அவனை நினைக்க தூண்டியது.
அதன் பிறகு அவன் இரண்டு நாட்கள் கண்ணிலும் படவில்லை…. stay away என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டது எல்லாம் இப்போது அவளின் ஞாபகத்தில் இல்லவேயில்லை.
“எங்கே காணோம்”, என்று கண்கள் அவனின் வீட்டை அடிக்கடி வட்டமிட்டது.
மூன்றாவது நாள் ப்ரீத்தி காலையில் ஜாகிங் சிறிது தூரம் சென்றவுடனே இணைந்து கொண்டான், “சாரி, ரெண்டு நாளா ஹெவி வொர்க், உன்னை பிடிக்க முடியலை”, என்றான்.
ப்ரீத்தி எதுவும் சொல்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருக்க, “உன்கிட்ட சொல்லியிருக்கணும், ஆனா போன் நம்பர் இல்லை”, என்றான் கூடவே.
“நீங்க எதுக்கு என்கிட்டே சொல்லணும்”,
“நீ என்னை தேடியிருப்ப தானே, அதுக்கு!”,
“நான் உங்களை ஒன்னும் தேடலையே”,
“நம்பிட்டேன்”, என்று ராகமாக சொன்னான்.
பிறகு கிரௌண்டில் இரண்டு ரவுண்டு ஓடிவிட்டு, வார்ம் அப் எக்ஸசைசிற்கு பிறகு, ஸ்ட்ரெச்சிற்காக ஓவர் கோட்டை கழட்டி, ஜெனரல் பாடி ஸ்ட்ரெச் செய்ய,
மேலே ஒரு டைட் பனியன், கீழே ஒரு ஷார்ட்ஸ்,
“ஊப்ஸ்”, என்று மறுபடியும் மூச்சடைத்தது ஹரிக்கு, கல்லூரியில் தோழிகள் பலர் இருந்தாலும் எப்போதும் தள்ளியே நிற்பான், பெண்களின் முகம் மட்டுமே பார்த்து பேசுபவனின் கண்கள், இப்போது கட்டுப் பாட்டை இழந்து ப்ரீத்தியை அணுஅணுவாக ரசித்தது.
“நல்ல ஸ்ட்ரக்சர்”, என்று ஹரிக்கு தோன்றினாலும் வெளியில் விளையாட்டிற்கு கூட சொல்லவில்லை, ஏனென்றால் அது அவளின் விளையாட்டை பாதிக்கும் என்பதால்.
பயிற்சி என்று வந்துவிட்டால் ப்ரீத்திக்கு கவனம் முழுவதும் எப்போதும் அதில் தான்…… அவள் பாட்டிற்கு அவளின் வர்க் அவுட்சை பார்த்தாள்.
ஹரிக்கு பார்வையை அவளிடம் இருந்து திருப்புவது கடினமாக இருந்தது.
எப்போது அவன் இப்படி மாறினான் என்று அவனிற்கே தெரியவில்லை, ஆனால் இந்த க்ஷனத்தை அனுபவித்தான்.
ப்ரீத்தி அவனை ஏதோ ஒரு வகையில் ஈர்த்தாள். ஒரு மாதிரி சுய அலசலில் அவளை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
இது சரி வருமா? வராதா? என்றும் ஒரு அலசல். ஆனால் இந்த சரி வருமா? வராதா? அலசல் ப்ரீத்தியை பார்க்கும் வரை தான். பார்த்து விட்டால், எல்லாம் மறந்து போனது, பறந்து போனது.
கிட்ட தட்ட நாற்பத்தி ஐந்து நிமிட வொர்க் அவுட்….. முடித்து தான் திரும்பி ஹரியை பார்த்தவள்……
“எதுக்கு நீங்க உட்கார்ந்து இருக்கீங்க”, என்றாள்.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டா”, என்று அவனின் மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், வெளியில், “உனக்கு வெயிட் பண்றேன்”, என்றான்.
“ப்ச்”, என்றவள், “நீங்க வொர்க் அவுட் பண்ணலையா”,
“குடும்பமே வொர்க் அவுட் பண்ணினா நல்லா இருக்காது”, என்று தானாக அவன் வாயில் இருந்து வார்த்தைகள் உதிர….
சரியாக புரியாத ப்ரீத்தி, “என்ன”, என்று கேட்கவும்.
“என்னால இவ்வளவு நேரம் முடியாது”, என்று பேச்சை மாற்றினான்.
“ஏன் முடியாது, நான் சொல்லித் தர்றேன்”, என்று ப்ரீத்தி சொல்ல,
“கொஞ்ச நஞ்ச கெட்டப் பையனா இருக்குற என்னை, இவ முழுசா கெட்டப் பையனா மாத்திடுவா போலவே”, என்று நினைத்த ஹரி, “வேண்டாம்”, என்பது போல தலையசைத்தான்.
“வொர்க் அவுட் பண்ணலைன்னா, இங்க ஏன் வந்து உட்கார்ந்து இருக்கீங்க”,
சிரிப்பது போல வாயை இழுத்து பிடித்து பின்பு ஹரி முகத்தை சீரியசாக வைத்துக் கொள்ள, அதுவே சொல்லாமல் சொன்னது, “நான் அப்படி தான்”, என்று.
முகத்தை சுருக்கியவள், பின்பு வீடு செல்ல எங்கே அவளின் ஓவர்கோட் என்பது போல பார்க்க, அது ஹரி அமர்ந்திருந்த இடத்தின் அருகில் இருந்தது.
சற்று கூச்சமாக உணர்ந்தாள், அவனருகில் சென்று அதனை எடுத்து அணிவதை… அவளின் முகத்தில் தோன்றிய கலவையான உணர்வுகளை பார்த்தவனுக்கு தானாக புன்னகை மலர்ந்தது.
“இவ்வளவு நேரமா என் முன்னாடி இந்த குட்டி டிரஸ்ல சுத்திட்டு, இப்போ இந்த எக்ஸ்ப்பிரஷன்….. ஆனாலும் முகத்தை அவள் கவனிக்கும் முன் மாற்றி சாதரணமாக வைத்து அவளின் ஓவர் கோட்டை எடுத்து அவளின் கையில் கொடுத்தவன், “போகலாமா”, என்பது போல ஒரு பார்வை பார்க்க,
ப்ரீத்தியும், “போகலாம்”, என்பது போல நடக்க அவளோடு நடந்தான்.
“இப்போ வொர்க் அவுட்ஸ் பண்ற, ஸ்குவாஷ் ப்ராக்டிஸ் எப்போ”, என்று அவளிடம் கேள்விகளை கேட்டு பதில்களை வாங்க ஆரம்பித்தான்.
முதலில் தயங்கி பேசியவள், ஸ்குவாஷ் பற்றி ஹரி பேச ஆரம்பித்ததும் ஆர்வமாக பேச ஆரம்பித்தாள். .
நடந்து வந்தவர்கள் வீடு அருகில் வந்ததும் ஹரி தேங்க, “ஏன் வீடு வந்தா முன்னாடியே நின்னுக்கறீங்க, ஏன், அது ஏன்? இங்க என் ஃபிரண்ட்ஸ் வந்தா அம்மா தப்பா எடுக்க மாட்டாங்க”, என்றாள் படபடவென்று.
இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ஹரிக்கு,
கண்டிப்பாக் ஹரியை பற்றி தெரிந்தால் ப்ரீத்தியின் அன்னையோ தந்தையோ ஹரி அவளுடன் பழகுவதை விரும்ப மாட்டர் என்று தெரியும்…. ஹரிக்கு பயமாக இருந்தது என்பது தான் உண்மை. ஆனால் ப்ரீத்தியும் அவனை வெகுவாக ஈர்த்தாள்.
சட்டென்று ஹரியின் முகத்தில் குழப்பம் சூழ, “இங்க என் சொந்தக்காரங்க இருக்காங்க, அவங்க என்னை உன்னோட பார்த்தா என் பேரன்ட்ஸ் கிட்ட சொல்லிடுவாங்க அது தான்”, என்றான்.
“ஜஸ்ட் பேசறதுல என்ன இருக்கு”, என்று பதிலுக்கு ப்ரீத்தி கேட்க.
“என் பேரன்ட்ஸ் கொஞ்சம் ரொம்ப ஓல்ட் டைப்”, என்றான்.
ப்ரீத்தியின் உள்மனது சொல்லியது, ஹரி மிகவும் இன்டிபெண்டன்ட் என்பது போல, பெற்றோருக்கு பயப்படுவான் என்று தோன்றவில்லை…..
“என்ன?”, என்று ப்ரீத்திக்கு சரியாக புரியவில்லை….. அதை அவளின் கண்கள் நன்கு பிரதிபலித்தது.
“ஹேய் ஹனி, ஏன் இந்த லுக்”, என்றான்.
“என்ன ஹனியா……..”, என்று கண்களை அகல விரித்தவள், “ஐ டோன்ட் லைக் திஸ். டோன்ட் கால் மீ லைக் திஸ்”, என்றாள் ஸ்ட்ரிக்ட்டாக.
“ஓகே, கூப்பிடலை, சாரி!”, என்று உடனே ஹரி சொல்லவும், ப்ரீத்தி முழுமையாக குழம்பினாள்.
அதே குழப்பதோடே வீடு நோக்கியும் சென்றாள்.
“நல்லா வருவடா நீ”, என்றான் அவனைப் பார்த்ததும் நிதின்.
“ஏண்டா”, என்று ஹரி கேட்கவும்,
“என் முன்னாடி உன் லவ் ஸ்டோரிய டெவலப் பண்ற”, என்றான் கடுப்பாக.
“இப்போ என்ன? அவளைப் பார்க்கக் கூடாதுன்னு சொல்றியா”, என்று ஹரி உடனே கோபப்படவும்,
“உன்கூட எல்லாம் எனக்கு ஆவறது இல்லைடா, கிளம்பு, கிளம்பு, நேரமாச்சு!”, என்று நிதினும் பதிலுக்கு கோபப்படவும்,
ஹரி நிதினை முறைத்துக் கொண்டே வேகமாக ஆபிஸிற்கு கிளம்பினான்.
மாலை ப்ரீத்தி ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள். அது ஒரு லாக்குடு ரூம். பயிற்சியை முடித்து அவள் வெளியே வந்த போது வெளியே இருந்த அவளின் கோச்சிடம் ஹரி பேசிக்கொண்டு இருந்தான்.
“ஓஹ், இதுக்கு தான் அப்படி வளைத்து வளைத்து காலையில் தன்னிடம் கேள்வி கேட்டானா…..”,
“உங்க ஃபாமிலி ஃபிரண்டாம் ஹரி, நைஸ் கை”, என்று கோச் சொல்ல,
“இது எப்போல இருந்து”, என்றபடி ப்ரீத்தி பார்த்தாள்,
“ஆனா அதைவிட உன்னோட ஃபிரண்ட் அப்படின்றதுல தான் பெருமையாம். ஸ்குவாஷ் பத்தி நிறைய சொல்றார். இப்போ இருக்குற யங்ஸ்டர்ஸ்க்கு கிரிகெட் தவிர வேற என்ன தெரியுது இந்தியால”, என்ற எப்போதும் போல கோச் அவரின் ஆதங்கத்தை சொல்ல….
ஹரி அவளைப் பார்த்து புருவம் உயர்த்தி புன்னகைத்தான்.
கோச்சை அவரின் சரியான இடத்தில் தாக்கி, ஃபிரண்ட் பிடித்திருக்கிறான் என்று அவர் பேசும் விதத்திலேயே தெரிந்தது ப்ரீத்திக்கு புரிந்தது.
“நீ பெரியாள் தான் போல”, என்று ப்ரீத்தியின் கண்கள் பிரதிபலிக்க…..
ஹரியின் கண்கள் சிரித்தது…
அவனின் தோற்றத்தை பார்த்தாலே, அவன் ஆஃபிசில் இருந்து இப்படியே நேராக வந்திருக்கிறான் என்று தெரிந்தது.
ஃபுல் ஆபிஸ் லுக்….. இன்னும் ஹேண்ட்சமாக ப்ரீத்தியின் கண்களுக்கு தெரிந்தான்.
கண்கள் சிரித்ததையும் மீறி ஹரியின் முகத்தில் ஒரு களைப்பு…..
தன்னை பார்க்கத் தான் வந்திருக்கிறான் என்று புரிந்த ப்ரீத்தி, இன்னும் ப்ராக்டிஸ் செஷன் இருந்த போதும், அவளின் ராக்கெட்டை பேக் செய்ய ஆரம்பித்தாள்.
“நான் கிளம்பறேன் சர்”, என்று கோச்சிடம் சொல்ல…..
“இன்னும் அரை மணிநேரம் இருக்கேம்மா, இன்னும் ட்வென்டி டேஸ் தான் இருக்கு மேட்ச்க்கு”,
“இந்த தடவை நீ கண்டிப்பா சாம்பியன்ஷிப் வின் பண்ணனும்”, என்று அவர் சொன்னார்.
“வில் ட்ரை மை பெஸ்ட் சர்”, என்று சொல்லி ப்ரீத்தி வெளியேற,
அப்போதும் சின்சியராக ப்ரீத்தியின் கோச்சிடம் நின்று பேசிவிட்டு தான் வந்தான்.
வெளியே வந்தவன் ப்ரீத்தி அவளின் வண்டியை எடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கவும், அவசரமாக வந்து அதன் சாவியை உருவினான்.
“ஹேய், என்ன பண்றீங்க?”, என்று ப்ரீத்தி கேட்க,
“உன்னை பார்க்க நான் இப்படியே வந்தா, நீ கிளம்பி போற”, என்றான்.
“என்னை பார்க்க வந்து கோச் கிட்ட பேசினா நான் என்ன பண்றது”,
“உன் சார்பா வாக்குறுதி குடுத்துட்டு இருந்தேன். இந்த தடவை சாம்பியன்ஷிப் நீ வின் பண்றேன்னு”, என்றான்.
“என்ன இது”, என்பது போல ஒரு பார்வை பார்த்த ப்ரீத்தி, “நாம நம்ம எஃப்போர்ட்ஸ் தான் போடா முடியும், வின் பண்றது நம்ம கையில இல்லை”,
“ஏன் நீ விளையாடறது மேல உனக்கு நம்பிக்கை இல்லையா”,
“இருக்கு, கண்டிப்பா இருக்கு, ஆனா எதிர்ல இருக்குறவங்க என்னை விட நல்லா விளையாண்டா நாம என்ன செய்ய முடியும்….”, என்று அலட்சியமாகத் தோளைக் குலுக்க,
அது ஹரியை அவ்வளவு வசீகரித்தது.
“this is certainly not the winning spirit”, என்றான்.
“ஏன்? நீங்க எத்தனை டைட்டில் வாங்கியிருக்கீங்க?”, என்று ப்ரீத்தி கிண்டலாக கேட்க…..
“எல்லோர்க்கும் எல்லாம் வந்துடாது…… சொன்னா செய்யணும்னு என்ன, சொல்றதைக் கேளு”, என்று சற்று அதட்டலாக ஹரி சொன்னான்.
ஹரி அதட்டவும், “ஆமாம், நீங்க ஏன் என் பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க”, என்று ப்ரீத்தி கேட்டாள்.
ஆபிசில் இருந்து ஹரி நேரே இங்கே வந்திருந்ததால், அவனுடன் நிதினும் வந்திருந்தான். அவன் அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த இடத்தில் தான் அமர்ந்து இருந்தான்.
ப்ரீத்தி சொன்னதை கேட்டதும் அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை, பெரிதாக சிரித்து விட்டான்.
ப்ரீத்தி நிதினை திரும்பி பார்த்தாள்…. எதற்கு சிரிக்கிறான் என்பது போல..
ஆனால் நிதின் ஹரியை பார்த்த பார்வை அப்பட்டமாக சொல்லியது, “அவளை சுத்த வைக்கிறேன்னு சொன்ன…….. உன்னை பார்த்து நீ சுத்தறேன்னு அவளே சொல்லிடாடா”, என்பது போல….
“எதுக்கு சிரிக்கிறாங்க”, என்று ப்ரீத்தி சற்று கோபமாக கேட்கவும்…..
“அவன் கிடக்கிறான் லூசுப் பய”, என்று சொல்லி ஹரி ப்ரீத்தியை பார்க்கவும்,
“இல்லை, என்னை ஏதோ கிண்டல் செய்றீங்க நீங்க ரெண்டு பேரும்”, என்று நிமிடத்தில் முகம் சுருக்கிய ப்ரீத்தி, “சாவியை குடுங்க”, என்றாள்.
அவள் தப்பாக எடுத்துக் கொண்டாள் என்பது அவளின் முகபாவனைகளில் புரிய….
“உன்னையில்லை ப்ரீத்தி”, என்று அவசரமாக ஹரி சமாதானம் சொன்னான்.
“இல்லை, என்னை பார்த்து தான் சிரிக்கறீங்க, நீங்க சாவியை குடுங்க”, என்று ப்ரீத்தி இன்னும் கோபப்பட…..
நிதின் அருகில் வந்து, “நிஜமா உன்னையில்லை ப்ரீத்தி, இவன் உன் பின்னாடி சுத்தறான்னு நீ சொன்ன தானே, அதுக்காக இவனை பார்த்து தான் சிரிச்சேன்”, என்று உண்மையாக நிதின் சொன்னான்.
இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்பது போல ப்ரீத்தி பார்க்க…..
“இவனுக்கு ரொம்ப ஓவர் கான்ஃபிடன்ஸ். என்னவோ எல்லோரும் இவன் பின்னாடி சுத்தற மாதிரி. அதான் எனக்கு சிரிப்பு வந்துடுச்சு”, என்றான் நிதின்.
“இன்னைக்கு நைட் நீ நல்லா தூங்குவியாடா”, என்று ஹரி சற்று கடுப்பாக கேட்க……
“ஓஹ், நிம்மதியா தூங்குவேன்”, என்றான் நிதின்……
உடனே ப்ரீத்தி விட்ட இடத்தில் இருந்து துவங்கினாள், “ஆமாம், நீங்க எதுக்கு என் பின்னாடி சுத்தறீங்க”, என்று…….
ஹரி அவனின் வண்டி சாவியை தூக்கி நிதினிடம் போட்டவன், “நீ வீட்டுக்கு போடா, நானும் ப்ரீத்தியும் காஃபி குடிச்சிட்டு வர்றோம்”, என்று பக்கத்தில் இருந்த காபி ஷாப்பை காட்டினான்.
“ஏண்டா, நான் காஃபி சாப்பிட வரமாட்டானா”,
“ம், நிதின்னு பேர் வெச்சிருக்குறவங்களுக்கு காபி குடுக்க மாட்டங்களாம், நீ கிளம்புடா”, என்றான் ஹரி.
“நீ எப்படி வருவ”, என்று நிதின் சிரிப்போடு கேட்க,
“ப்ரீத்தி எனக்கு லிஃப்ட் குடுப்பா, நீ கிளம்புடா”, என்றான் ஹரி.
“சொன்னது நீதானா????????”, என்பது போல நிதின் ஒரு லுக் விட்டுக் கொண்டே,
“எப்போ இருந்துடா நீ இப்படி ஆன”, என்று வாய்விட்டேக் கேட்டுவிட்டான்.
ஏனென்றால் வகுப்பு தோழிகளுக்கு கூட அவசரம் என்றால் ஹரி லிஃப்ட் கொடுக்க மாட்டான், சாவியை வேறு யாரிடமாவது கொடுத்து, “கொண்டு போய் விட்டுட்டு வாங்க”, என்று தான் சொல்லுவான்.
இவன் ப்ரீத்தியின் பின் அமர்ந்து வருவானா?
“என்ன ஹரி ஆளே மாறிட்ட”, என்றான் ஆச்சர்யம் தாங்காமல் நிதின் மீண்டும்.
“இவளைப் பார்த்ததுல இருந்து”, என்று ப்ரீத்தியைப் பார்த்தவாறே ஹரியும் பதில் சொல்ல,
ப்ரீத்தி, “ஆங்”, என்று சொல்லி, வாய் பிளந்து பார்த்தாள், “இவன் என்ன பேசுகிறான்”, என்பது போல.
கொஞ்சமும் அசராமல் ஹரி, சுவாதீனமாக ப்ரீத்தியின் இதழ்களை கை கொண்டு சேர்த்து விட்டு திறந்திருந்த அவளின் இதழ்களை மூட,
இப்போது நிதின் வாய் பிளந்து பார்த்தான்.