அத்தியாயம் இருபது:

நாட்கள் வேகமாக ஓடின, ப்ரீத்தி நிறைய சமூக விழிப்புணர்வு முகாம்கள் அல்லது நிகழ்ச்சிகள் என்று நிறைய விஷயங்களில் பங்கெடுத்துக் கொண்டாள், அவளுடைய பயிற்சி மற்றும் போட்டி அல்லாத நேரங்களில்.

அதனால் மனம் அமைதியாகத் தான் இருந்தது. நிறையப் பேரை பார்ப்பது அவர்களின் கஷ்டங்களை கேட்பது என்றிருக்க, அவளது விஷயமெல்லாம் ஒன்றுமேயில்லாத மாதிரி தான் அவளுக்கு.

நல்ல பெற்றோர், இப்போது இல்லையென்றாலும் எப்போதாகினும் ஹரி தான் அவளின் துணைவன், மிகவும் நல்லவன்…… அவளும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவள்…  

பார்க்கும் மனிதர்களின் துயரங்கள் எத்தனை எத்தனை…. தன்னால் முயன்ற உதவிகள் அடுத்தவருக்கு செய்ய, அது அவ்வளவு மன அமைதியை கொடுத்தது.

ஆனால் ஹரி ப்ரீத்தியை மிகவும் தேடினான். கடந்த இரண்டு வருடமாக இங்கிலாந்தில் இருந்த போது தினமும் அவளிடம் கணினி மூலமாக பேச   செய்து விட்டு இப்போது எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இதற்கு அதிகம் ப்ரீத்தி தான் அவளின் விஷயங்களை பகிர்ந்து கொள்வாள். இவன் கேட்டுக் கொண்டு இருப்பதுடன் சரி. இவன் விஷயங்களை எப்போதாவது சொல்வான்.

அதிகம் அடுத்தவருடன் விஷயங்களை பகிர்ந்ததே இல்லை. அவன் முடிவுகள் அவனதே எல்லாம். ஆனால் இப்போது ப்ரீத்தி பேசாமல் இருப்பது மிகவும் டிஸ்டர்ப் செய்தது. எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

இன்னும் இரண்டு நாட்களில் நிதினின் திருமணம் மாளவிகாவுடன், “ஒரு பொண்ணு பின்னாடி இப்படி சுத்துவியா”, என்று நிதினை பலமுறை கேலி செய்திருக்கிறான்.

இப்போது நிதின் திருமணமே செய்து கொள்கிறான்….. தான் தான் இன்னும் ப்ரீத்தியின் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிறோம் என்பது இன்னும் ஒரு மாதிரியாக இருந்தது.

என்னவோ எரிச்சல் எரிச்சலாக வந்தது, எதையாவது போட்டு உடைக்க வேண்டும் போல, கத்த வேண்டும் போல..

“என்னை பைய்த்தியமாகிட்டு தான் விடுவ போல, ஐ ஹேட் யூ…..  நீ எனக்கு வேண்டாம், போ!”, என்று ப்ரீத்தியை விட சிறு பையனாக அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.

அப்போது ப்ரீத்தி, பெற்றோர் மட்டும் ரகுவுடன் ட்ரெயினில் கோவை சென்று கொண்டிருந்தாள், மாளவிகாவின் திருமணத்திற்காக, அது ஹரிக்கு தெரியாதே, இந்தியாவில் இரவு மணி பதினொன்றை கடந்திருக்கும் ப்ரீத்தி தனியாக இருப்பாள் என்று அனுமானித்து அனுப்பினான்.

யாரும் உறங்கவில்லை, ப்ரீத்தி, ரகு, அப்பா, அம்மா என்று அனைவரும் பேசிக் கொண்டு தான் அமர்ந்திருந்தனர்.

மெசேஜ் பார்த்தவுடன் ப்ரீத்தியின் உற்சாகம் குறைந்து விட, மெசேஜை வெறித்தாள். ப்ரீத்தி அமைதியானதை அவர்கள் பேச்சு மும்முரத்தில் கவனிக்கவில்லை.   

“ஏற்கனவே பையித்தியமானவங்க கிட்ட இந்த மெசஜ் அனுப்பி என்ன பிரயோஜனம்”, என்று பதில் அனுப்பினாள் ப்ரீத்தி.

இரண்டு மாதங்களுக்கு பிறகு வந்த மெசேஜ், உடனே விடாமல் அழைத்தான் அவளை தொலைபேசியில்.

“யாரு ப்ரீத்தி, ஃபோன் அடிக்குது இப்படி”, என்று ரகு கேட்க…… அப்பாவும் அம்மாவும் அவளை கவனிக்க, போனின் பட்டனை அழுத்தி விட்டாள்.    

அவள் எடுத்தவுடனே, “ப்ளீஸ் ப்ரீத்தி! சண்டை போடு, திட்டு, பேசாம இருக்காத”, என்று ஹரி ஏறக்குறையக் கெஞ்சினான். 

அந்த செய்கை அவனை மீறிய ஒன்று என்று ப்ரீத்திக்கு நன்றாக தெரியும். பார்ப்பவர்களுக்கு ஹரி மிகவும் பணிவானவன், மரியாதை தெரிந்தவன் போல தோற்றம் கொடுத்தாலும், மரியாதையாக அவன் மற்றவர்களிடம் பேசினாலும் அவன் அப்படி கிடையாது. அவனுக்கு சற்று திமிர் எப்போதும் உண்டு.  

ஹரியின் கெஞ்சல் ப்ரீத்தியை வெகுவாக அசைக்க,  

“என்னை பக்கத்துல இருந்தா எவ்வளவு உன் பின்னாடி சுத்த வைப்ப, இப்ப எப்படி பேசற நீயே பாரு! தூரமா இருந்துட்டு நீ என்ன பண்றேன்னு?”, சொல்லும் போதே அழுகை வந்துவிட்டது.

ப்ரீத்தி சிறு வயதில் இருந்தே சாமானியத்தில் அழ மாட்டாள். அவள் அழ ஆரம்பிக்கவும் ராஜசேகருக்கும் மாலினிக்கும் மனது பதறிவிட்டது. 

இத்தனை நாட்கள் தைரியமாக காட்டி மற்றவர்களின் பிரச்னையை முன்னிறுத்தி தன்னது ஒன்றுமே இல்லை என்று அவளுக்கு அவளே சமாதானப்படுத்திக் கொண்டது எல்லாம் காற்றில் பறந்து அழுகை வந்தே விட்டது.

படிப்பு முடிந்ததும் வந்துவிடுவான் என்று அவ்வளவு ஆர்வமாக எதிர் பார்த்து இருந்தது மனது. அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஜெர்மனி போக ஒத்துக் கொண்ட போது, போனால் போடா எனக்கொன்றுமில்லை என்று காட்டிக் கொண்டிருந்தவள்,

அப்பாவிடம் சண்டையிட்டவள், அவனிடம் பாராமுகம் காட்டியவள், உடைந்தாள்.

“போ! போ! நீ என்னை ஹேட் யூ… இல்லை. நான் தான் உன்னை ஹேட் யூ”, என்று சொல்லும் போதே தேம்பினாள்.

பேச்சு யாருடன் என்று பெற்றோருக்கு நிமிடத்தில் புரிந்தது.

அவளுக்கு இன்னும் அருகில் போகப் போக, “அப்பா ப்ரீத்தியை தனியா விடுங்கப்பா”, என்று ரகு அவர்களை அதில் நுழைய விடவில்லை.

ஹரியின் குரலை சில மாதங்களுக்கு பிறகு கேட்கவும், பெற்றோர், தம்பி அருகில் இருப்பதையே மறந்து விட்டாள் ப்ரீத்தி. ஹரியிடம் அவள் பேசாதது, இத்தனை நாள் பேசாமல் இருக்கும் வரை தெரியவில்லை அவனின் குரல் கேட்கவும் இன்று உடைந்தே விட்டாள்.

“ப்ரீத்தி….. ப்ரீத்தி அழாத!”, என்று அந்த புறம் ஹரி சொல்ல சொல்ல போனை ஆஃப் செய்து தூர வைத்து விட்டாள்.

பிறகு தான் கூட எல்லோரும் இருப்பதை உணர்ந்தாள், ஆனால் அழுகை நிற்கவேயில்லை.

இதில் தந்தையிடம் வேறு திரும்பி, “எல்லாம் உங்களால தான்! நீங்க தான் அவனைத் தூர அனுப்பிட்டீங்க, நீங்க சொன்னீங்கன்னு அவன் என்கூட பேசவேயில்லை. நான்தான் சும்மா மெசேஜ் அனுப்பி அவனை பேசவைப்பேன். இப்போ என்னைக் கேட்காம எங்கயோ வேலைக்கு போயிட்டான்”. 

“உங்களை மாதிரி, அம்மா மாதிரி, நான் ஒரு இடத்துல அவன் ஒரு இடத்துல இருக்கணுமா?”, என்று வேறு கேட்டு அம்மாவின் மடியில் தலை படுத்துக் கொண்டாள்.

ஆனால் அழுகை நிற்கவேயில்லை. ராஜசேகரனுக்கு ப்ரீத்தி தன்னை திட்டியது தெரியவில்லை…. மாலினியுடனான தன்னுடைய வாழ்க்கையை விமர்சித்தது தெரியவில்லை.

அவருக்கு தெரிந்தது எல்லாம் ப்ரீத்தி ஹரியை, தன்னைப் போல மாலினியை போல, அதாவது கணவன் மனைவி உறவு போல நினைக்கிறாள் என்பது தான்.

ஏதோ வயதின் ஈர்ப்பு, தாங்கள் வேண்டாம் என்று சொல்லவும் பிடிவாதமாக ப்ரீத்தியின் மனது ஹரியின் புறம் செல்கிறது என்று தான் நினைத்திருந்தார்.

அது இந்த கால பிள்ளைகளின் பிடிவாதம் என்பதாக, பெற்றோர் ஒன்றை செய்ய வேண்டாம் என்று சொன்னால், “நீ என்ன சொல்வது! நான் என்ன செய்வது!”, என்பதாகத் தான் நினைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் ப்ரீத்தி இவ்வளவு தீவிரமாக இருப்பாள் என்று நினைக்கவேயில்லை.

ப்ரீத்தி அழுது முடித்தும் அவளின் உடல் தேம்பலில் குலுங்கிக் கொண்டு தான் இருந்தது.               

ரகு, அப்பாவையும், அம்மாவையும் முறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தான்.

ப்ரீத்தியின் போனை எடுத்து ஆன் செய்ய, அடுத்த நிமிடம் போன் அடிக்க ஆரம்பித்தது…. அவ்வளவு நேரமாக ஹரி ப்ரீத்திக்கு முயன்று கொண்டு தான் இருந்தான்.

காலை ரகு அட்டென்ட் செய்த நிமிடம், “ப்ரீத்தி!”, என்று ஹரியின் கலக்கமான குரல் கேட்க, “நான் ரகு”, என்றும் உடனே சொல்லிவிட்டான்.

“ப்ரீத்தி எங்கே”, என்று சற்று பதட்டத்தோடு ஹரி கேட்கவும்,

“அழுது முடிச்சு தூங்க ஆரம்பிக்க போறா, நாங்க எல்லாம் ட்ரெயின்ல மாலு அக்கா கல்யாணத்துக்கு போறோம், இப்போதைக்கு அவ பேசற மூட்ல இல்லை, அவ சரியான பிறகு நான் பேச சொல்றேன்”, என்றான்.

“யார், யார் இருக்கீங்க?”, என்று ஹரி கேட்க,

“நான் அப்பா, அம்மா, அக்கா!”, என்று ரகு சொல்ல,

“ஐயோ……..”, என்றிருந்தது ஹரிக்கு,  “இன்றா நான் அவளை அழைத்து அழ வைக்க வேண்டும். ஏற்கனவே அவளின் அப்பா வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார், இப்போது? அச்சோ! என்ன செய்து விட்டேன்”, என்று நொந்து,

“அவ சரியானதும் ப்ளீஸ் பேச சொல்லு”, என்ற கோரிக்கையோடு போனை வைத்தான்.  

ரகு ஹரியிடன் பேசுவதை பார்த்துக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள் ப்ரீத்தி. அதன் பிறகு ப்ரீத்தி யாரோடும் பேசவில்லை, அமைதியாக உறங்க முனைந்தாள். எதுவும் உடனே சரியாகப் போவதில்லை நினைத்து, “வருந்தாதே”, என்று அவளுக்கு அவளே சமாதனம் செய்து கொண்டு, மனதை அமைதிப் படுத்திக் கொண்டாள், உறங்கியும் விட்டாள்.

அதுவரை அமைதியாக இருந்த ரகு, ப்ரீத்தி உறங்கியது தெரிந்ததும்,  “ஏம்ப்பா ஏன் மிஸ்டர் ஹரியை வேண்டாம்ன்னு சொல்றீங்க ப்ரீத்தி பிடிச்சிருக்குன்னு சொல்றதுனாலையா”, என்றான் கோபமாக. நான் பார்த்த வரைக்கும் ஹீ இஸ் குட் ஒன்லி, வேண்டாம்னு நினைச்சீங்கன்னா காரணம் சொல்லுங்க”, என்று ரகு சொன்னான்.

“ப்ரீத்திக்கு இவ்வளவு ஹரியை பிடிச்சிருக்கும் போது நாம ஏன் வேண்டாம்னு சொல்லணும், சரின்னு சொல்லுவோம், அவ என்ன உலகம் தெரியாதவளா? தப்பா செலக்ட் பண்ணியிருக்க மாட்டா!”, என்றார் மாலினியும்.    

ராஜசேகரன் யோசிக்க ஆரம்பித்தார்.  

அதன் பிறகு யாரும் யாரோடும் பேசவில்லை….. சந்தோஷமான அரட்டையோடு ஆரம்பித்த அவர்களின் பயணம், கோவையை அடைந்த போது ஆளுக்கு ஒரு புறம் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

வீட்டை அடைந்தவுடன் அதன் பிறகும் இப்படி இருப்பது சரியல்ல, இது மாலுவின் விசேஷம் என்பதற்காக ப்ரீத்தி எல்லோருடனும் அவளாகவே போய் வார்தையாட துவங்க, மாலினியும் ராஜசேகரனும் சற்று இயல்பு நிலைக்கு திரும்பினர்.

கல்யாண வீடு கலகலப்பு எல்லோரையும் தொற்ற, ஆளுக்கு  ஒரு வேலையாக இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பிக்க….நேரம் வேகமாக கடந்தது.

அதுவுமன்றி இப்போது தான் ப்ரீத்தி அவளின் வெற்றிக்கு பின் உறவுகள் பலரை சந்திக்க எல்லோரும் ஆர்வமுடன் அவளிடம் பேசினர்.

பெரியவர்கள் முதல் சிறுவர் சிறுமியர் வரை பேசினர், பெரியவர்கள் பலர் அவர்களின் குழந்தைகளுக்கு ஆர்வமாக ஆலோசனைகள் கேட்டனர்.

ப்ரீத்தியும் மிகவும் பொறுப்பாக எல்லோருடனும் பேச, “தங்கள் பெண் இப்படி கூட பொறுப்பாக பேசுவாளா?”, என்று மாலினியும் ராஜசேகரும் பார்த்தனர். ப்ரீத்தி அவர்களோடு பேசுவதைக் கேட்ட போது நிறைய விஷயங்கள் அவளுக்கு தெரிந்ததை உணர்ந்தனர். 

அவர்களுடன் எப்பொழுதும் சிறு பெண்ணாக கொஞ்சி பேசுவதால், அவள் இப்படி பேசுவது அவர்களுக்கே சற்று வியப்பு தான்.

ரகு வேறு, “ப்ரீத்தி, மிஸ்டர் ஹரி உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னார்”, என்று சொல்ல,

“அது என்னடா மிஸ்டர் ஹரி?”, என்றாள் ப்ரீத்தி.

“அண்ணான்னு சொல்லக் கூடாதுன்னு எனக்கு பெரிய அட்வைஸ் வேற! கார்பரேட் கல்ச்சர்ன்னு ஒரு டகால்டி வேற, உன்னை டாவடிசிட்டு என்கிட்டே கதை”, என்றான்.

“இப்போ என்னடா பண்ணனும்”,

“முதல்ல நான் ஓகே சொல்லணும், அதுக்கு அப்புறம் தான் நீ ஓகே சொல்லணும், கொஞ்சமாவது உன் தம்பின்னு பயம் வேண்டாம். இங்க இருந்தப்போ எனக்கு அவரை ரொம்ப பிடிச்சது, ஆனா இங்கிருந்து போன பிறகு என்கிட்டே பேசவேயில்லை”,

“நீயும் என்கிட்டே சொல்லவேயில்லை”, என்று ப்ரீத்தியிடமும் ரகு கோபப்பட்டான்.

“என்கிட்டே கூட சொல்லலை”, என்று மாளவிகாவும் கூட சேர்ந்தாள், “ஓகே வா”, என்று ரகுவைப் பார்த்து சொல்லி,

“ம், இன்னும் நான் என்கிட்டயே சொல்லலை”, என்று சொல்லிப் ப்ரீத்தி அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனாள், கூடவே மனநிலையும் சற்று உற்சாகமா மாறியது.

அந்த உற்சாகம் அடுத்த நாள் மண்டபத்திற்கு இரவு செல்லும் போதும் தொடர்ந்தது. ஆனாலும் ஹரியிடம் பேசவில்லை.

நிதின் மாப்பிள்ளை என்ற போதிலும், தனியாக வந்து ப்ரீத்தியை வரவேற்க வந்தான்.

“ஏன் இப்படி?”, என்பது போல ப்ரீத்தி பார்க்கவும்,

“உலக பிரசித்தி பெற்ற விளையாட்டு வீராங்கனை”, என்று நிதின் முகமன் வைக்க…..

“ஏன் இப்படி? நல்லா தானே இருந்தீங்க”, என்று ப்ரீத்தி வாய் விட்டே கேட்டாள்.

“ம், என் நண்பன் குடும்பம் இங்க கல்யாணத்துக்கு வருவாங்க, அவங்களை நீ கவனிக்க”, என்றான்.

“அவ்வளவு தானே கவனிச்சிட்டா போகுது”, என்பது போல கையை பிசைந்தாள், அடித்து கவனிக்கவா, உதைத்து கவனிக்கா வா என்று.

“உங்க வருங்கால மாமியார், மாமனார், நாதனார். நீ அடிச்சாலும் சரி, உதைச்சாலும் சரி”, என்று நிதின் சொல்லவும் தான்,  

ப்ரீத்திக்கு உரைத்தது. நிதின் ஹரியின் பெற்றோர்களை பற்றி சொல்லுகிறான் என்று.

“இதை ஏன் தான் யோசிக்கவேயில்லை”, என்று நொந்து கொண்டவள், “நீங்க அவங்களை கூப்பிடதை என்கிட்டே சொல்லவேயில்லை. நான்  வீட்டுக்கு போறேன்”, என்றாள் கலவரமாக.

“ஐயோ, ஏன்?”, என்று நிதின் வியப்புடன் கேட்டான்,

“என்னால தானே அவங்க வீட்டை வித்தாங்க, ஹரி வேலையை விட்டு லண்டன் போனான்”, என்றாள்.

“கிழிஞ்சது, அவங்க அப்பா அம்மாக்கு அதெல்லாம் தெரியாது. நீயே போய் உளறி வைக்காத”, என்றான்.

“ஆமாமில்லை, தெரியாது தான”, என்றாள். அப்போதும் முகம் தெளியவில்லை. “இந்த சாதனா, ஹரி ஊருக்கு வந்தப்போ என்னோட பேச ட்ரை பண்ணினா, நான் அவாயிட் பண்ணிட்டேன், என்னை தப்பா நினைச்சிருப்பா தானே”, என்றாள்.

தூரத்தில் இருந்து மகளை பார்த்த ராஜசேகரன், அவளின் முகத்தில் கவலையை பார்க்கவும், கோவை என்பதால் மகளுக்கு எதுவும் தேவையில்லாத விஷயங்கள் தெரிய வருகிறதோ என்று அவசரமாக ப்ரீத்தி இருக்கும் இடம் வந்தார்.

ராஜசேகர் வந்த வேகத்தை பார்த்த நிதின் பயந்து தான் விட்டான். ஐயோ தான் எதுவும் சொதப்பி விட்டேனோ என்று.

“என்ன ப்ரீத்தி?”, என்று அவர் மகளிடம் கேட்க…

“என்னப்பா?”, என்றாள் ப்ரீத்தி அவரிடம் திரும்ப

“இல்லை, நீ டென்ஷன் ஆன மாதிரி இருந்தது”.

“நான் சாதனா கிட்ட பேசவே இல்லையா, அவளுக்கு கோபமா இருக்குமோன்னு பேசிட்டு இருந்தேன்”,

“அது யாரு சாதனா?”,

“ஹரி சிஸ்டர்”, என்று ப்ரீத்தி சொல்ல,

நீக்கமற ஹரி தன் பெண்ணுள் நிறைந்திருக்கிறான் என்று ராஜசேகரனுக்கு புரிந்தது.

“அப்பாவும், பொண்ணும் கூலா ஹரியைப் பத்தி பேசறாங்க, ஆனா என்னை இவரு வில்லன் மாதிரி முறைக்கிறாறே”, என்று நொந்தே விட்டான் நிதின்.

அதற்குள், “மாப்பிள்ளை ரெடி ஆகுங்க”, என்று யாரோ சொல்ல, நிதின் அதுதான் சாக்கென்று இடத்தை விட்டு அகன்றான்.

“இப்போ எதுக்கு இதை பத்தி பேசினீங்க?”,

“அவங்க கல்யாணத்துக்கு வருவாங்க அதுதான்”, என்றாள் ப்ரீத்தி…….

“அவங்க நம்ம ஆளுங்களா?”, என்றார் ராஜசேகரன்.

“தெரியாதுப்பா, நான் அதெல்லாம் கேட்டதேயில்லை, நிதின் ஹரிக்கு ரொம்ப க்ளோஸ் இல்லையா, அதுனால வருவாங்க”, என்றாள்.

பிறகு யாரோ ப்ரீத்தியிடம் ஆர்வமாக பேச வந்துவிட, தந்தை மகளின் பேச்சு முற்றுப் பெற்றது. 

ப்ரீத்தி ஒரு காக்ரா சோலியில் அழகாக இருந்தாள். விளம்பரப் படங்களில் வேறு நடித்து இருந்ததால் எல்லோரும் தினமும் பார்க்கும் முகம். அதனால் மணமக்களை ஒத்த சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன் ப்ரீத்தி.

ப்ரீத்தியோ ஹரியின் பெற்றோர்கள் வருவார்கள், அவர்களிடம் பேச வேண்டுமா? பேசாவிட்டால் ஹரி கோபித்து கொள்ளுவானா. நானாக எப்படிப் போய் பேச என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஹரியிடம் கோபித்துக் கொண்டு அவள் பேசுவது இல்லை என்பதே அவளின் ஞாபகத்தில் இல்லை.

என்ன தான் உறவுகளிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் மாலினியும் ராஜசேகரனும் பெண்ணின் மேல் தான் முழு கண்ணும் வைத்திருந்தனர்.

இருந்த டென்ஷனில் ப்ரீத்தி போய் ஓரிடத்தில அமர்ந்து கொள்ள, பெற்றோரின் கண் ஜாடையில் ரகு அவளுடன் போய் அமர்ந்து கொண்டான்.

அங்கே மேடையில் மாப்பிள்ளையும் பெண்ணும் நிற்க வைக்கப்பட்டனர்.

நிதின் மெதுவாக  மாளவிகாவிடம், “இந்த ப்ரீத்தியை ஒரு ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல ஹரிக்கு போட்டுவிடணும். ப்ளீஸ், ஏதாவது பண்ணு, அவன் என்னைக் கொல்றான்”, என்றான்.

“எவன்?”, என்று மாளவிகா பார்க்கவும்,

“ஹரி”, என்றான் நிதின்.

“இப்போ எப்படி முடியும்! நம்ம ரெண்டு பேரும் இங்க நிக்கறோம் வாய்ப்பேயில்லை”,

“ப்ளீஸ்”, என்றான் நிதின்.

ஹரி தான் அவனை அந்த மிரட்டு மிரட்டி இருந்தானே, “டேய், நீ ப்ரீத்தி ஃபோட்டோவை அவ கல்யாணத்துக்கு அழகா டிரஸ் பண்ணியிருக்கும் போது எனக்கு உடனே அனுப்பலை, உன் ஃபர்ஸ்ட் நைட் நடக்க வாய்ப்புகள் ரொம்ப கம்மி யோசிச்சிக்கோ, இவன் ஜெர்மனி ல இருக்கானே, என்ன பண்ணுவான்னு நினைக்காத?”, என்று ஒரு மெசேஜை தட்டி விட்டிருந்தான்.

“இவன் எப்போடா இவ்வளவு வில்லத்தனமா பேச ஆரம்பிச்சான்”, என்று நிதின் நினைத்தாலும், ஹரியை நம்ப முடியாது சில சமயம் சொல்வதை செய்தும் காட்டுவான்.

அப்போது பார்த்து சாதனா, பெற்றோருடன் வர அவசரமாக அவளை அருகில் வர சொல்லி……

“ப்ளீஸ், ப்ரீத்தியை கொஞ்சம் அழகா போட்டோ எடுத்து உங்கண்ணனுக்கு அனுப்பி விடேன். அங்கிருந்து என்னைக் கொல்றான்”, என்று பாவமாக சொல்ல,

“கோயம்பத்தூர் குசும்பு”,  என்று சொல்லி முறைத்தாள் சாதனா.

“என்ன?”, என்று புரியாமல் நிதின் பார்க்கவும்,

“ப்ரீத்தி அழகு  தான்!”, என்று சொன்னாள் சாதனா.

அப்போதுதான் ப்ரீத்தியை அழகாக எடுத்து அனுப்பு என்று சொன்னதை உணர்ந்த நிதின்,

“அது உங்கண்ணன் பண்ணின டென்ஷன்ல ஒரு ஃப்ளோல வந்துடுச்சு, உங்கண்ணன் கிட்ட சொல்லிடாதம்மா, அங்க இருந்தாலும் ஆள் வெச்சு என்னை அடிப்பான். உங்க அண்ணி அழகு தான்!”, என்று நிதின் சொல்ல.

மாளவிகா சிரிக்க, முகமலர்ந்த சாதனா, “யூ டோன்ட் வொர்ரி அண்ணா! நான் பார்த்துக்கறேன்”, என்று சிரித்தபடி சாதனா ப்ரீத்தியிடம் சென்றாள்.

அப்போது தான் மாலினியும் ராஜசேகரனும் ப்ரீத்தியின் அருகில் வந்தனர்.

“நான் சாதனா!”, என்று ப்ரீத்தியிடம் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாள். ப்ரீத்தியும் சாதானவும் நிறைய பேசி இருந்தாலும் நேரில் சந்தித்தது இல்லை.

ப்ரீத்தி உற்சாகமாக, “ஹாய் சாது”, என்று சொல்லி அணைத்து, தன்னுடைய பெற்றோரிடம் ப்ரீத்தியை அறிமுகப்படுத்தினாள்.

“அப்பா, அம்மா வரலையா?”, என்று ப்ரீத்தி கேட்கவும்,

“ஊப்ஸ் ப்ரீத்தி! இந்த நிதின் அண்ணா கூப்பிட்டாங்களா, அவங்களை மறந்தே போயிட்டேன்!”, என்று அவசரமாக பெற்றோரை கண்களால் சாதனா தேடினாள்.

மாலினியும் ராஜசேகரனும் சாதனாவை அளவெடுத்தனர். பெரிதாக நகை என்று போடவில்லை, மிகவும் காஸ்ட்லியான புடவை இல்லை, ஆனால் அணிந்திருந்தது சாதனாவிற்கு அழகாக நேர்த்தியாக இருந்தது….. அதிலும்  சாதனா அவளின் அண்ணனைப் போல மிகவும் அழகாக இருந்தாள்.  

அங்கே யாரையும் தெரியாததால் சாதனாவின் பெற்றோர் எங்கு அமர்வது என்று யோசித்து நின்று கொண்டிருந்தனர்.

“தோ, அங்க நிக்கறாங்க”, என்று சாதனா காட்டியதும்,

ப்ரீத்திக்கு முன்னர், மாலினியும் ராஜசேகரனும் தான் அங்கு கண்களை திருப்பினர்.

மிகவும் மரியாதையான தோற்றத்துடன் இருந்தாலும், அவர்களும் மிகவும் எளிமையாகவும் இருந்தனர். பார்க்க அமைதியாகவும் இருந்தனர். “இவங்க பார்க்க இப்படி இருக்காங்க, ஆனா இவங்க பையன் என் உயிரை எடுக்கறானே”, என்பது போல தான் ஒரு பார்வையை ராஜசேகரன் அவர்களிடம் செலுத்திக் கொண்டிருந்தார்.

“இருங்க, அவங்களை உட்கார வெச்சிட்டு வர்றேன்”, என்று சொல்லி சாதனா நகரப் போக,

“நீ பேசிட்டு இரும்மா, நான் பார்க்கிறேன்”, என்று மாலினி செல்லப் போக,  ப்ரீத்தி கண்களை விரித்துப் பார்த்தாள்.

அதையும் விட, “நீ இரு! நான் போய் அவங்களை இங்கே கூப்பிட்டுகிட்டு வர்றேன்”, என்று ராஜசேகரன் செல்ல, ப்ரீத்தி கண்கள் வெளியே வந்து விடுமோ என்ற அளவுக்கு கண்களை அகல விரித்தாள்.

“என்னடா நடக்குது”, என்பது போல ரகுவைப் பார்க்கவும், அவன் எனக்கு தெரியாது என்று தோளைக் குலுக்கினான்.

அதே சமயம் தந்தை அவர்களை ஏதாவது பேசி விடுவாரோ என்ற பயமும் தொற்றியது.

“அம்மா”, என்பது போல மாலினியை முறைத்து பார்க்க ஆரம்பித்தாள்.