அத்தியாயம் ஒன்பது:
காலையில் ரகுவை ஹாஸ்பிடல் கொண்டு போய் விட்டு ப்ரீத்தியை வீட்டுக்கு அழைத்து வந்தான்.
மாலினிக்கு அவ்வளவு நிம்மதி, பொதுவாக ப்ரீத்தி ஏதாவது இந்த மாதிரி பிரச்சனைகள் வந்தால் உடனே அவளுக்கு அப்பா வேண்டும், “நை, நை”, என்று உயிரை எடுத்து விடுவாள்.
இந்த முறை ஹரி சொன்ன பிறகு சற்று அமைதியாக தான் இருந்தாள். ஆனாலும் கவலை, “அம்மா உனக்கு ஒன்னுமில்லைல”, என்று சமையத்தில் மிகவும் பெரிய குழந்தை, சமையத்தில் மிகவும் சிறிய குழந்தை, சமாளிப்பது கடினம் ப்ரீத்தியை.
இரவு முழுவதும் தூங்காமல் மாலினியையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். “என்னோட சேர்த்து நீயும் உடம்பை கெடுத்துக்காத ப்ரீத்தி”, என்று மாலினி சொல்லியும், “ஒன்னும் ஆகாது”, என்று சாமாதானம் செய்தும் விழித்தே இருந்தாள்.
காலையில் ஹரியும் நிதினும் ஆறு மணிக்கே வந்து, “என்ன தேவை”, என்று பார்த்து செய்து கொடுத்தனர்.
ரகுவையும் நிதினையும் அங்கே விட்டு ஹரி ப்ரீத்தியை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
அவள் இரவு முழுவதும் தூங்காதது முகத்தில் இருந்தே தெரிய, “முழிச்சிட்டே உட்கார்ந்து இருந்தியா…..”,
“ஆமாம்”, என்பது போல தலையாட்டினாள்.
“ஏன், கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம் தானே”,
“அதெல்லாம் சொல்ல முடியாது போ”, என்பது போல ப்ரீத்தி ஒரு பார்வை பார்க்கவும்,
ஆபிஸ் கிளம்பும் அவசரத்தில் இருந்ததால் அதிகம் ப்ரீத்தியுடன் வார்த்தை வளர்க்காமல்…… அவளை அவளின் வீட்டில் விட்டு அவள் குளித்து ப்ரெஷ் ஆனவுடன் மீண்டும் ஹாஸ்பிடல் அழைத்து வந்தான்.
மீண்டும் ப்ரீத்தியை ரகுவையும் காலை உணவு உண்ண வைத்து,
“நாங்க கிளம்பறோம் ஆன்ட்டி, ஏதாவது ஹெஃல்ப்னா உடனே கூப்பிடுங்க தயங்காதீங்க”, என்று போன் நம்பர் கொடுத்து ஹரியும் நிதினும் கிளம்பினர்.
ஹரியும் நிதினும் மிகவும் இயல்பாக பழகினர். எதுவும் அதிகப்படி இல்லை…… அது மாலினியை ஒரு வகையில் கவர, “எப்படி ப்ரீத்தி உனக்கு இவங்க பிரிண்ட்ஸ் ஆனாங்க”, என்று மாலினி கேட்க,
“சீனியர்ஸ்மா”, என்று ப்ரீத்தி சொல்லவும், அவர்கள் சென்னை கல்லூரி சீனியர்ஸ் என்று மாலினி நினைத்துக் கொண்டார்.
அதன் பிறகு காலையில் டாக்டர் வந்து பார்க்க….. வலி இப்போது பரவாயில்லை என்பது போல மாலினி சொன்னார்…..
ட்ரிப்ஸ் இன்னும் தொடரலாம், சில சமயம் ஸ்டோன் வெளியே வந்தாலும் வந்துவிடும் இல்லையென்றால் வேறு யோசிக்க வேண்டும், பார்க்கலாம் என்று சொல்லவும்,
இன்னும் ஹாஸ்பிடல் வாசம் என்பதில் மாலினிக்கு கவலையானது. அங்கே கோவைக்கு பெற்றோருக்கு தெரிவித்தவர், பின்பு கணவருக்கு அழைத்து விவரம் சொன்னார்.
ராஜசேகரன் வருகிறேன் என்று சொன்னதற்கு, “இப்போது பரவாயில்லை தேவை என்றால் சொல்கிறேன், அப்போது வந்தால் போதும்”, என்று சொல்லிவிட்டார்.
நைட் எல்லாம் தூங்காததில் ப்ரீத்தி பகல் முழுவதும் தூங்கியே இருந்தாள்.
ரகு தான் தேவையானதை எல்லாம் பார்த்துக் கொண்டான். இருவரும் அம்மாவை விட்டு அகலவில்லை.
மாலையில் ஹரியும் நிதினும் வந்த போது மாலினி டிரிப்சின் தாக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்க, ப்ரீத்தியும் ரகுவும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர்.
“என்னடா இப்படி உட்கார்ந்து இருக்குதுங்க”, என்று நிதினே கேட்டு விட்டான்.
“என்ன இது இப்படி உட்கார்ந்து இருக்கீங்க, நீ ப்ராக்டிஸ் போகலையா”, என்றான் ஹரி.
“அம்மா இப்படி இருக்கும்போது எப்படி போவேன்”, என்று ப்ரீத்தி சொல்ல,
“இதெல்லாம் ஒன்னுமில்லை, சரியாகிடுவாங்க, நீ ப்ராக்டிஸ் கிளம்பு. உனக்காக தான் நாங்க இன்னைக்கு சீக்கிரம் வந்தோம். நிதின் இங்க இருப்பான். ரகுவோட நீ வா”, என்று ஹரி சற்று அதட்டி பேசவும்,
“முடியாது போ”, என்று ப்ரீத்தி அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“ப்ளீஸ், ப்ரீத்தி வா”, என்று தணிவாக சொல்லவும், உடனே எழுந்தாள்.
அதட்டல் இவளிடம் வேலை செய்யாது என்று ஹரிக்கு புரிந்தது.
ப்ரீத்தி அமைதியாகவே ஹரியின் பின் அமர்ந்து வர, “உங்கம்மாக்கு ஒன்னுமில்லை, எதுக்கு இவ்வளவு அப்செட், நம்மல்லாம் மனுஷங்க, ஏதாவது தொந்தரவு வர்றது சகஜம்”, என்று அவளை தேற்ற…..
ப்ரீத்தி வாயே திறக்கவில்லை……
ஹரி வெளியில் அமர்ந்து இருக்க….. ஒரு மணிநேரம் ப்ராக்டிஸ் முடித்து வந்தவள் அமைதியாக ஹரியின் பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள்.
“போகலாமா”, என்று ஹரி கேட்கவும், “ம்”, என்று சொல்லி அமர்ந்து தான் இருந்தாள். ப்ரீத்தி சற்று டையர்ட் என்று புரிந்தவன், அவனும் கூட அமர்ந்து இருந்தான்.
இந்த ஒரு மணிநேர ப்ராக்டிஸ் ப்ரீத்திக்கு ஒன்றுமேயில்லை. மனதில் அவ்வளவாக உற்சாகம் இல்லாத போது சற்று சோர்வு வந்து அமர்ந்து கொண்டது.
அப்போது பார்த்து அவளின் தந்தை போன் செய்ய, ப்ரீத்தி எடுக்கவேயில்லை. “எடு ப்ரீத்தி”, என்று ஹரி சொல்லவும்,
“உன் வேலையை பார், அதிகப்ரசிங்கித்தனம் பண்ணாத”, என்று அவனிடமும் எரிந்து விழுந்தாள்.
என்னவோ தேவையில்லாமல் யோசித்து மனதை குழப்பிக் கொண்டிருக்கிறாள் என்று ஹரிக்கு தோன்ற, அவன் பொறுமையாகவே “எதுக்கு இவ்வளவு கோபம்”, என்று கேட்கவும்,
கடகடவென்று ப்ரீத்தியின் கண்களில் கண்ணீர்.
“எதுக்கு அழறடா”, என்று ஹரி அவளின் கையை பற்றவும், கையை உருவிக் கொண்டவள், “ப்ச்”, என்று மட்டும் சொல்ல……
“பீயிங் எ ஸ்போர்ட்ஸ் பெர்சனா, நீ இவ்வளவு டென்ஷன் ஆகக் கூடாது”, என்று ஹரி தன்மையாகவே மீண்டும் மீண்டும் சொல்லி, “என்னன்னு சொன்னா தானே தெரியும்”, என்று கேட்டான்.
மெதுவாக வாயை திறந்தாள்…. “எப்பவும் இப்படிதான், நான், ரகு, அம்மா, மூணு பேரும் தனியா தான் இருப்போம். இந்த அப்பா எப்பவும் வேலைன்னு வெளில தான் இருப்பார்”,
“எங்களுக்கு எந்த பிரச்சனையை வந்தாலும் கூடவே இருக்க மாட்டார்….”,
“இப்போ நாங்க மூணு பேர் மட்டும் தானே இருக்கிறோம்”, என்று ப்ரீத்தி சொல்லவும்….
இது அவளின் பல நாள் ஆதங்கம் என்று அவள் பேசுவதிலேயே தெரிந்தது.
“இவ்வளவு தானா”, என்பது போல ஆசுவாசப்பட்ட ஹரி, “அவர் வேலை அப்படி, யாருக்காக கஷ்டப்படறார் உங்களுக்காக தானே”,
“என்ன எங்களுக்காக? கொஞ்சம் பணம் கம்மியா இருந்தா என்ன? எங்களோடவே இருக்கலாம் தானே!”,
“இப்ப இருக்குற வாழ்க்கையோட தேவைகள் அப்படி ப்ரீத்தி, யாராலையும் போதும்னோ இல்லை, வேற வகையிலையோ காம்ப்ரமைஸ் பண்ண முடியறது இல்லை”,.
“உங்க அப்பா ரொம்ப உங்களுக்காக பார்க்குறார் ப்ரீத்தி. லாஸ்ட் இயர் கூட நீ கூப்பிட்ட அன்னைக்கே இங்க ஓடி வந்தார் தானே”,
“வந்தார் தான், ஆனா எதுக்கு அந்த மாதிரி இருக்கணும், இங்க எங்களோடவே இருக்கலாம் தானே”, என்று ப்ரீத்தி அவளின் பிடியிலேயே நின்றாள்.
“மே பீ, கொஞ்சம் சம்பாரிச்சிட்டு வந்துடலாம்னு நினைச்சிருக்கலாம், வந்துடுவார், இது தான் நேத்துல இருந்து முகத்தை தூக்கி வெச்சு இருக்கியா, சியர் அப் ஹனி, எவ்ரி திங் வில் பீ ஆல் ரைட்”,
“உங்கப்பாவோட பேசு”, என்று சொல்லவும் பாதி மனதாக அவருக்கு அழைத்தாள்.
பின்பு அப்பாவும் பெண்ணும் பேசட்டும் என்பது போல ஹரி தள்ளி நிற்க…..
“அப்பா கிட்ட பேசுங்க”, என்று அவனிடம் தொலைபேசியை சிறிது நேரத்தில் கொடுக்கவும்,
ஹரி பதறி விட்டான், “என்னன்னு சொல்லியிருக்க”, என்று கேட்கவும்,
“ஃபிரண்ட் பக்கத்துக்கு வீட்ல இருக்கீங்கன்னு”,
பயத்தோடே தான் தொலைபேசியை வாங்கினான்.
“யார்”, என்பது போல அவர் விசாரிக்கவும், வேலை செய்யும் இடத்தை சொன்னவன், அவர்களின் மூதாதையர்களின் சொந்த ஊரான பொள்ளாச்சியை சொல்லவும்,
பிறகு அவனிடம் ராஜசேகர் சரளமாக பேச ஆரம்பித்தார்.
ப்ரீத்தி எல்லோரிடமும் நன்றாக பழகினாலும், அவள் அவர்களை பற்றி விவரிக்கும் விதத்திலேயே அவர்கள் என்ன மாதிரி என்று ராஜசேகரனுக்கு தெரிந்துவிடும்.
ஹரியை பற்றி நல்ல விதமாக பேசினாள்….. அதுவுமில்லாமல் சற்று நேரத்திற்கு முன் தான் மாலினியிடமும் ரகுவிடமும் பேசியிருந்தார், அவர்களும் ஹரியையும் நிதினையும் மிகுந்த உதவியாக இருப்பதாக பேசவும்,
மனிதர்களை சரியாக தான் மாலினி கண்டுக்கொள்வாள், தேவையில்லாமல் யாரோடும் பழகமாட்டாள் என்று தெரியும், என்றாலும் மனதிற்குள் சிறு சஞ்சலம்.
இப்போது ஹரியுடன் பேசவும் சற்று மட்டுப்பட்டது.
ப்ரீத்தி மனதின் சஞ்சலங்களையெல்லாம் சற்று ஹரியுடன் பகிரவும் அவளின் மனமும் சற்று மட்டுப் பட, ப்ரீத்தி ஹரியுடன் உற்சாகமாவே ஹாஸ்பிடல் கிளம்பினாள்.
ப்ரீத்தியின் சற்று தெளிந்த முகம், மாலினிக்கும் ரகுவிற்கும் கூட உற்சாகம் கொடுத்தது.
இன்னும் ஒரு நாள் மருந்து ஏற்றிக் கொண்டு நாளை மாலை வீட்டிற்கு போகலாம் என்று டாக்டரும் சொல்ல, சற்று இயல்பு நிலைக்கு எல்லோரும் திரும்பினர்.
திரும்பவும் ரகுவை, ஹரியும் நிதினும் அவர்களுடன் அழைத்துக் கொண்டு ப்ரீத்தியை மாலினியுடன் துணைக்கு விட்டுச் செல்ல முடிவு செய்தனர்.
அசடுத்தனங்கள் இல்லாத ஹரி, நிதினின் நடவடிக்கைகள் மாலினியை வெகுவாக கவர்ந்தது. அதையும் விட ரகுவை ஹரியின் நடை உடை பாவனை பேசும் விதம் எல்லாம் அவ்வளவு பிடித்தது.
ஹரியின் உரிமை நடவடிக்கைகள் எல்லாம் ப்ரீத்தியுடன் மட்டும் தான் மற்றபடி யாருடனும் கிடையாது…… மிகுந்த மரியாதையாக, மற்றவர்களும் மரியாதை கொடுக்கும் வகையில் தான் இருக்கும்.
தோற்றம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதில் ஒரு பங்கு வகிக்க, ஹரியின் தோற்றம் அப்படி தான் இருக்கும்.
அவர்கள் செல்லும் சமயம் மாலினிக்கு போன் வந்தது, அவருடைய அம்மா நாளைக் காலை வருவதாக……
ஹாஸ்பிடலுக்கு வழி சொல்ல சொல்ல…… “நீங்க வாங்க பாட்டி, நான் ரயில்வே ஸ்டேஷன் வந்து கூப்பிட்டுக்கறேன்”, என்று ப்ரீத்தி சொல்லிவிட்டாள்.
“எங்க நீ காலையில போவ தனியா”, என்று மாலினி சொல்ல,
“போயிடறேன் மா, அதுதான் ஹரி சார் இருக்காங்க, நிதின் இருக்காங்க”, என்று ப்ரீத்தி வாக்குறுதிகளை அள்ளி விட்டாள்.
“இதுவேறயா”, என்று நிதின் ஹரியை முறைத்தான். ப்ரீத்தியின் முகத்தில் ஒரு சிறிய குறும்பு புன்னகை தெரிய, “என்ன”, என்று ஹரி புருவம் உயர்த்தவும்…..
“பாட்டியும் தாத்தாவும் தனியா வந்தா கூட பரவாயில்லை, அவங்க பேத்தியும் கூட வர்றா துணைக்கு, பரவாயில்லை அவங்களையே வர சொல்லிடறேன்”, என்று பாவம் போல ப்ரீத்தி சொல்லவும்,
மிகவும் லேட்டாக நிதினுக்கு பல்ப் எரிய, “நான் போறேன், எங்க எந்த ட்ரெயின்”, என்றான் அவசரமாக நிதின்.
“வேண்டாம், வேண்டாம்”, என்று ப்ரீத்தி முறுக்கவும்,
“ப்ளீஸ்”, என்றான் நிதின் ப்ரீத்தியை பார்த்து யாருக்கும் தெரியாமல் சத்தமும் வராமல்.
ப்ரீத்தி கண்டிப்பாக நிதினை அனுப்பியிருக்க மாட்டாள், இந்த இரண்டு நாட்களாக ஹரியும் நிதினும் அவர்களின் பக்கத்துக்கு வீட்டில் இருகிறார்கள் என்று மாளவிகாவிடம் ப்ரீத்தி சொல்லியிருந்தாள். அதனால் தான் மாளவிகா அனேகமாக பாட்டியுடன் வருகிறாள் என்று தோன்றவும் தான் ப்ரீத்தி விஷயத்தை சொன்னதே.
பிறகு எதில் வருகிறார்கள் என்று விஷயத்தை சொல்லவும், நிதின் முகத்தில் அவ்வளவு சந்தோசம்.
பின்பு அவர்கள் சென்று விட, நேற்று போல அல்லாமல் ப்ரீத்தி நன்கு உறங்கினாள்.
அடுத்த நாள் காலை பாட்டி, தாத்தா, மாளவிகா மூவரும் வந்தனர்…. நிதின் ரகுவை அழைத்துக் கொண்டு சென்டரல் ஸ்டேஷனே சென்று விட்டான்.
கல்லூரியில் இதுவரை நிதினை பார்த்து புன்னகைத்தது கூட இல்லை மாளவிகா…….. இப்போது சில மாதங்கள் கழித்து பார்ப்பதாளோ என்னவோ, அவளின் முகம் தானாக நிதினை பார்த்து புன்னகைக்க, நிதின் விண்ணில் தான் பறந்தான்.
பாட்டியும், தாத்தாவும் வந்து விட்டதால் மாலினியின் குடும்பம் அவர்களுடன் பிஸியாகிவிட,
ஹரியும், நிதினும் அவர்களின் வேலையை பார்க்க கிளம்பிவிட்டனர். இருந்தாலும் நிதினுக்கு மனமேயில்லை… மாளவிகாவை பார்த்தபடி கிளம்ப…..
என்ன செய்ய முடியும், ஏதும் செய்ய முடியாதே…… ப்ரீத்தியும் அம்மாவுடன் பிஸியாகிவிட, அன்றும் ப்ராக்டிஸ் செய்யவில்லை, அடுத்த நாள் காலையும் ஜாக்கிங் வரவில்லை.
அன்று சனிகிழமை, அதனால் நண்பர்கள் இருவருக்கும் ஆபிஸ் இல்லாததால் பால்கனியில் தான் அமர்ந்து இருந்தனர்.
“டேய் என்னடா? பார்க்கவே முடியலை!”, என்று நிதின் வெகுவாக வருத்தப்பட…….
“உன்னை பார்க்க வந்திருந்தா, கண்டிப்பா வருவா!”, என்று சொல்லி அவன் பாட்டிற்கு கூலாக அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்திலேயே ரகு வந்தவன், “அம்மா உங்க ரெண்டு பேரையும் இன்னைக்கு காலையில டிஃபன்க்கு வர சொன்னாங்க”, என்று சொல்லவும்,
“எதுக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ரகு”, என்று வேண்டாம் என்பது ஹரி பேசவும்…..
நிதின் அவனை பார்வையால் எரித்தான்… “நீங்க இப்படி தான் சொல்வீங்க ஆனா கண்டிப்பா வரணும்னு அம்மா சொன்னாங்க”, என்று ரகு சொல்லவும்,
“நீ காலேஜ் போகலையா”,
“ம்கூம், மண்டே இருந்து தான்”,
“ஏன் இன்னைக்கு ப்ரீத்தி ப்ராக்டிஸ் போகலை”,
“என்னவோ இன்னும் தூங்கறா அண்ணா”, என்று ஹரியை சொல்ல…….
“அண்ணாவா”, என்று நொந்த ஹரி, “நோ ரகு, கால் மீ ஹரி”, என்று அவன் புதிதாக கற்றுக் கொண்ட கார்ப்பரேட் கல்ச்சரை நுழைத்தான்.
அவர்கள் பிரேக் பாஸ்டிற்கு ப்ரீத்தியின் வீடு செல்ல, அவர்களை தனது தாய் தந்தையிடம் அறிமுகப்படுத்தினார் மாலினி.
இருவரும் மிகவும் உதவி புரிந்ததாக கூறினார்.
பின்பு தாத்தா மெதுவாக பேச்சுக் கொடுக்க, நிதின் ஆர்வக் கோளாறில் அவனுடைய விவரம் எல்லாம் சொல்ல ஆரம்பித்தான்.
மாலினி முழுவதுமாக பேச்சை கேட்கவில்லை……. ஆனாலும் ஏதோ ஒரு இடத்தில் கோவை என்று காதில் விழ, சற்று நின்று பேச்சை கவனித்தார்.
ஹரியும் நிதினுக்கு கண்ஜாடை காட்டிக் காட்டி பார்த்தான், நிதினை நிறுத்தவே முடியவில்லை.
மாலினி ப்ரீத்தியிடம், “இவங்க எந்த ஊர்”, என்று கேட்க,
“கோயம்பத்தூர்மா”, என்று ப்ரீத்தி மறைக்காமல் சொல்லி விட்டாள்.
மாலினியின் முகமே மாறியது….. ஹரி இந்த முக மாற்றங்களை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். என்னவோ சரியில்லை என்று உள்மனது சொல்லியது.
“உனக்கு சீனியர்ஸ்ன்னு சொன்ன”,
“ஆமாம்மா, நான் மாலு காலேஜ்ல படிச்சேன் தானே, அங்க இருந்த சீனியர்ஸ்”, என்று ப்ரீத்தி சொல்ல சொல்ல…
மாலினி ஸ்தம்பித்து நின்று விட்டார். தன் மகளை எந்த தீங்கும் அணுகக் கூடாது என்று அவர் நினைத்திருக்க…… ஹரிக்கும், நிதினிற்க்கும் ப்ரீத்தியின் விஷயம் தெரியும் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
ஹரியையும் நிதினையும் பார்க்க…… நிதின் இன்னும் மும்முரமாக தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்தான். தன்னுடைய பின் புலத்தை புரிய வைத்து விடும் நோக்கில்…..
ஹரி மாலினியை தான் பார்த்தான்….. அவரின் தவிக்கும் பார்வையை பார்த்தவன், எழுந்து அருகில் சென்று யாரும் அறியாமல்….
“என்ன ஆன்ட்டி?”, என்று கேட்கவும்,
“நீங்க அந்த காலேஜ் சீனியர்ஸா”, என்று ப்ரீத்தி இருக்கும் போதே கேட்கவும்,
“ப்ரீத்தி, நாங்க கதவை பூட்டினமா இல்லையான்னு தெரியலை, அப்படியே பால்கனில இருந்து எட்டிப் பாரேன்”, என்று அவளை அனுப்பியவன்,
“ப்ரீத்திக்கு எதுவும் தெரியாதுன்னு தெரியும் ஆன்ட்டி, தெரிய வரவும் வராது… உங்களை மாதிரியே அவளோட வெல்பீயிங், அவளோட குட் நேம் எல்லாம் எனக்கும் ரொம்ப முக்கியம்”, என்று உறுதியாக சொல்ல,
இவன் என்ன சொல்லுகிறான் என்பது போல மாலினி இப்போது மலங்க மலங்க விழித்தார்.
மாலினி இதை எதிர்பார்க்கவில்லை. இந்த பேச்சு அவருக்கும் இஷ்டமும் இல்லை……. கோவையை சேர்ந்த, இந்த விஷயம் தெரிந்த ஒருவன், தன் மகள் வாழ்வில் வருவதில் அவருக்கு உடன்பாடே இல்லை…..
இன்னும் ஹரியோடு தான் அந்த புகைப்படங்கள் என்று அவருக்கு தெரியவே தெரியாது.
மாலினியின் சிநேகமான பார்வை நிமிடத்தில் மாறி, அவர் பார்த்த பார்வையே ஹரியை தூர விலக்கி நிறுத்தியது.