அன்று மாலை வரை ப்ரித்வியும் ஜீவனும் இருந்து தான் சென்றனர். மதியம் அவர்களே உணவையும் ஆர்டர் செய்து விட்டனர்.
அது சிங்கிள் பெட்ரூம் பிளாட், சைந்தவிக்காக பார்த்தது, இப்போது என்னவோ ப்ரித்விக்கு மிகவும் சிறியதாக தோன்ற, அங்கேயே அப்போதே பக்கத்தில் காலியாக இருந்த டபிள் பெட்ரூம் பிளாட்டிற்கு வாடகை பேசி அட்வான்ஸ் குடுத்து விட்டான்.
“அண்ணா டேய், அங்கே எந்த சாமானும் கிடையாது, எல்லாம் புதுசா வாங்கணும்” என்று சைந்தவி சொல்ல…
“வாங்கிக்கலாம்”
“என்கிட்டே பணமில்லை” என்று விஜயன் சொல்லிவிட்டான், யோசிக்கவெல்லாம் இல்லை.
“இதுவரை என்னோட சம்பாத்தியம் எல்லாம் அம்மாக்கும் அக்காக்கும் கொடுத்துடுவேன், சோ என்கிட்டே பணமில்லை, வண்டியில்லை, வீடில்லை எதுவுமே இல்லை. கிரெடிட் கார்ட் கல்ச்சர்குள்ள நான் போகலை, சோ எந்த செலவும் என்னால பண்ண முடியாது. இப்போதைக்கு இங்கே இருக்கிறோம், பின்ன மாத்திக்கறோம்” என்று விஜயன் விளக்கம் கொடுத்தான்.
“நீ உங்க அக்காக்கு கொடுக்கலாம், நான் என் தங்கைக்குக் கொடுக்கக்கூடாதா? ரெண்டு பேரும் எதுவும் பேசக் கூடாது, ஜீவன் என்னோட லிஸ்ட் போடு”
“ஒரு ரெண்டு நாள் வெயிட் பண்ணுடா” என்றான் விஜயன் அழுத்தமான குரலில்.
“எதுக்கு? எதுக்கு ரெண்டு நாள்?” என்று ஜீவன் கேட்க…
“எனக்கு பணம் புரட்ட முடியுமான்னு பார்க்க” என்று விஜயன் சமாளித்து விட்டான்.
“ப்ரித்வி குடுக்க வேண்டாம்னா நான் குடுக்கறேன். எனக்கு நீ எப்போன்னாலும் திருப்பிக் குடுக்கலாம், நீ எனக்கு திருப்பியே கொடுக்க வேண்டாம். ஆனா நீ கேட்க மாட்டேன்னு தான் இந்த ஆப்ஷன் கூட குடுக்கறேன்” என்று ஜீவன் சொல்ல…
“டேய், அவன் என்னடா சொல்றது வேண்டாம்னு. இத்தனை வருஷம் சம்பாரிச்சதை அம்மா அக்கான்னு அவன் குடுக்கலாம், நான் என் தங்கைக்கு குடுக்கக்கூடாதா?” என்று ப்ரித்வி மீண்டும் பேச…
“டேய், குட் பாய்ஸ், பேசிக்கலாம் கிளம்புங்க. ரொம்ப டைம் ஆகிடுச்சு, இன்னும் பதினஞ்சு நாள்ல கல்யாணம் சொல்ற, கிளம்பு, கிளம்பு” என்று பேசியபடி ரித்தியை ப்ரித்வியிடம் விஜயன் கொடுக்க முற்பட,
குழந்தையோ விஜயன் கழுத்தை கட்டிக் கொண்டது.
“என்னவோ போடா? என் வீட்டு பொண்ணுங்களை மயக்கற நீ!” என்று பேசியபடி ரித்தியை கொஞ்சி தூக்கினான் ப்ரித்வி.
ஜீவனிற்கு இன்னும் ஒரு மாதத்தில் கங்கண பொருத்தம் முடிவதால், பின் திருமணம் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதால், திருமணம் பதினைந்து நாளில் வைத்து விட்டனர். ஜீவன் வீட்டில் பணத்திற்கு பஞ்சமில்லை, ஆட்களுக்கும் பஞ்சமில்லை. அதிர்ஷ்டவசமாய் நடக்கயிருந்த திருமணம் நின்று ஒரு மண்டபமும் காலியாயிருக்க, இதோ திருமணம் நடக்கயிருக்கிறது.
அப்படி ஒன்றும் காஞ்சனா வீட்டினர் வசதியில்லை. வசதிதான் ஆனால் ஜீவன் வீட்டினரை ஒப்பிடும் போது வெகு குறைவு. காஞ்சனாவை ப்ரித்விக்கு கொடுத்திருக்க, அந்த சம்மந்தம் பார்த்தே இந்த சம்மந்தம்.
நகை சீர்வரிசை என்று அதிகப்படியாக மேகலா அண்ணன் வீட்டினருக்கு செய்ய, அது ப்ரித்வியின் கண்களை வெகுவாக உறுத்தியது. என் தங்கைக்கு கிடையாது, வேறு யாரோ அனுபவிப்பாரோ எங்கள் பணத்தை என்று.
இதோ வீட்டிற்கு சென்றதும் அம்மாவிடம் ரித்திகாவை கொடுத்து அப்பாவிடம் சென்றவன் “எனக்கு ஒரு அம்பது லட்சம் வேணும், இன்னும் வேணும்னா கேட்பேன்” என்று சொல்ல…
“எதுக்குடா என்னன்னு நோட் பண்ணட்டும்?” என்றார்.
“உங்க விருப்பம் போல என்னவோ எழுதிக்கோங்க” என்றவனைப் பார்த்து அவனின் அம்மா “எதுக்குடா இவ்வளவு பணம்” என்றார்.
“ஏன் உங்க மருமகளுக்கும் உங்க அண்ணன் வீட்டுக்கும் தான் கொட்டி கொடுப்பீங்களா? என்னை கேள்வி கேட்பீங்களா? நான் யார் இந்த வீட்ல?” என்றான் கோபமாக.
“டேய் தம்பி எல்லாம் உன்னோடது தாண்டா. எதுக்கு கோபம்?” என்று அப்பா தான் சமாதானம் செய்தார்.
அம்மாவும் எதற்கு இவ்வளவு கோபம் என்று பார்த்திருந்தார்.
இவனின் சத்தம் கேட்டு காஞ்சனாவும் வெளியே வர… “ரித்தியை தூக்கு, அவளுக்கு ட்ரெஸ் சேஞ் பண்ணு” என்று அவளை மேகலா அனுப்பிவிட… ப்ரித்வியும் அவனுடைய அறைக்கு சென்றுவிட்டான்.
மேகலா ஸ்கந்தநாதனை பார்க்க, “அவன் காலையில இருந்து அவனோட தங்கை வீட்ல தான் இருந்துட்டு வந்திருக்கான்”
“அப்போ இந்த பணம் அவளுக்கா?”
“அவ கேட்டிருக்க மாட்டா, நீ உன் அண்ணன் பொண்ணுங்களுக்கு அவன் சொல்ற மாதிரி கொட்டிக் கொடுக்கற, அப்போ என் தங்கை குறைவான்னு கிளம்பிட்டான்” என்றார் மகனை சரியாக கணித்து.