மீள் யுத்தம்… மீளா யுத்தம்….

கனமான மனதோடு செய்வதறியாமல், அவனுக்கான தலையணை போர்வை கொண்டு வந்து கொடுக்க, மௌனமாய் வாங்கியவன், உறங்க ஆயத்தமாகி கண்மூடிக் கொள்ள,

சைந்தவியும் படுக்கையறை கதவைவை விரியத் திறந்து வைத்து படுத்துக் கொண்டாள்.

இருவரும் உறங்க வெகு நேரமாகிற்று.

உறங்கி எழுந்ததும் பார்த்தது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் சைந்தவியை தான்.

சற்று தெம்பாய் உணர்ந்தான் அன்று. முகத்தில், உதடில் இருந்த வலி பெரிதளவு மட்டுப் பட்டிருந்தது. உடல் வலியுமே தாங்க முடியும் என்ற அளவுகோலுக்குள் வந்திருந்தது.

அவளின் அருகில் சென்று அவளின் முகத்தை சிறிது நேரம் பார்த்திருந்தான். பயமாய் இருந்தது, வாழ்க்கையை எப்படி எடுத்துப் போக என்று தெரியவில்லை. கையில் கிடைத்த பொக்கிஷத்தை மீண்டும் தொலைக்க மனதில்லை.

ஆனால் அவளின் எனக்கு உங்களோட இருக்க முடியும்னு தோணலை என்ற வார்த்தைகள் பெரிதளவு சஞ்சலத்தை கொடுத்திருந்தது.

அவளிடம் முடியாது என்று பேசிவிட்டான் தான், ஆனால் வாழ்க்கை முறை வித்தியாசங்களை எப்படி கடக்கப் போகிறோம் என்று சஞ்சலமாகிப் போனது. அவனுக்கு அவளோடு இசைந்து முடியும் ஆனால் அவனின் பெற்றோர்கள் முடியாது.

போனவள் யாரையாவது திருமணம் செய்து நன்றாக இருந்திருக்கக் கூடாதா என்று அந்த க்ஷணம் சத்தியமாய் நினைத்து மனம்.

யோசனைகள் சூழ சைந்தவியின் முகத்தையே பார்த்திருந்தான். அன்றும் விடுமுறை தினமே.

சைந்தவியின் கைபேசி இசைக்க… ப்ரித்வி அழைத்திருந்தான்.

அவளின் உறக்கம் கலைந்திடாதவாறு எடுத்து வெளியே வந்து,

சொல்லுடா சைந்தவி தூங்கறா என்றான்

இன்னைக்கு என்னோட பேபி க்கு பேபி ஸ் டே அவுட். என்னோட ஜாயின் பண்றீங்களா ரெண்டு பேரும் என்றான் உற்சாகமாய்

தூங்கறாளே, எழுப்பிக் கேட்கட்டுமா,

வேண்டாம் என்று வைத்து விட்டான்

என்னடா இவன் போன் பேசிட்டு எதுவுமே சொல்லாம வச்சுட்டான் சரி பசிக்குது நம்ம காப்பியாவது குடிப்போம் என்று நினைத்துக்கொண்டே சமையலறையில் ஃப்ரிட்ஜிலிருந்து பாலை எடுத்துக் காய்ச்சி பின்பு காபி கலந்து அதை அருந்தி முடிக்கவும் காலிங் பெல் சப்தம் கேட்டது யாருடா நம்ம வீட்டுக்கு இந்த நேரத்துல என்று யோசித்துக் கொண்டே சென்று கதவைத் திறந்தான்

பார்த்தது பிருத்திவியும் ரித்திகாவும்

இனிமையாக அதிர்ந்தவன்

என்ன சர்ப்ரைஸ் காலைல குட்டி தேவதை உன்னோட என்று பேசிக்கொண்டே ரித்திகாவிற்காகக் கை நீட்ட அவளும் இவனிடம் உடனே தாவினாள்.

மனது இதமாக, ம்ம் அப்புறம் இவங்கம்மா ஒன்னும் சொல்லலையா நானும் வர்றேன்னு என்று கேட்டபடி உள்ளே செல்ல

அவனை பின்தொடர்ந்த ப்ரித்வி, பார்லர் போறேன்னு சொன்னா, எப்படியும் அரைநாள் நாள் ஓடிடும், மதியம் வந்ததும் தூங்குவா, நானும் பேபி யும் மால் போறோம்னு சொல்லிட்டேன் என்றபடி கையில் கொண்டு வந்திருந்த ரிதிக்காவின் பொருட்கள் அடங்கிய பையை சோபாவில் வைத்து அமர…

சாப்ட்டீங்களா என்றான் விஜயன்…

ஆச்சு… நீங்க

இப்போ தான் எழுந்தேன், இன்னும் சவீ தூங்கறா

உன் வலி பரவாயில்லையா

எஸ் ஐ அம் ரொம்ப பரவாயில்லை என்று சொல்லியபடி புன்னகைத்தான்

நாம அத்தையை எழுப்பலாமா என்று சொல்லியபடி செல்ல முற்ப்பட

வேண்டாம் வேண்டாம் தூங்கட்டும் என்றான் ப்ரித்வி அவசரமாக

சரி வேண்டாம் என்று ப்ரித்வியின் அருகில் அமர்ந்தவன் சரி சொல்லு என்றான்

என்ன சொல்ல

சவீ ய பத்தி

சவீ ய பத்தியா அவளைப் பத்தி என்ன

ம்ம் என்னோட இருப்பாளா மாட்டாளான்னு என்று சொல்ல

சில நொடிகள் தேவைப்பட்டது ப்ரித்விக்கு விஜயனின் வார்த்தைகளை க்ரகிக்கவே

என்ன உளர்ற என்று வேகமாக எழ

கூல் மச்சான் உட்காரு என்றான் அமைதியாக அதே சமயம் அழுத்தமாக

இவன் எழுந்த வேகத்திற்கு மிரண்டு  பார்க்க

உட்காருடா பேபி பயப்படறாள்ள என்றான் அதிகராமாக

ப்ரித்வி அவனை முறைத்தவாரே அமர

என்னை முறைச்சு என்ன ஆகப் போகுது என்றான் சலிப்பாய்

ப்ரித்வி சற்றும் பார்வையை மாற்றவில்லை

ப்ச் அவ தாண்டா சொன்னா என்னோட இருக்க முடியுமான்னு தெரியலைன்னு என்று சொல்ல

என்னடா நீங்கல்லாம் காதலிச்சீங்க, கருமம் என்று ஆத்திரத்தில் சொன்ன ப்ரித்வி, குடுடா என் பேபி யை நாங்க கிளம்பறோம் என்று ரித்திகாவை வாங்க முற்ப்பட

டேய் உட்காருடா குழப்பத்துல தானே கேட்கறேன் உண்மையா கேட்கறேன் இதை நான் வேற யார்கிட்டயும் பேச முடியாது, எனக்கு அவ நல்லா இருக்கணும், இப்போ இந்த நிமிஷம் என் மனசுல ஓடறது அது மட்டும் தான். அதுக்காக அவளை நான் பிரியரதுன்னாலும் ரெடி, சில பொருட்களை நாம ஆசைப் படறதோட நிறுத்திக்கணும், அது நமக்கு வேணும்னு நினைக்கக் கூடாது…

என் தங்கை உனக்கு பொருளா

ப்ச் அது ஒரு உதாரணம் என்று மீண்டும் சலித்தவன்,