தூரிகை 8 :
நான்கு வருடங்களுக்கு முன்பு……..
பசுமையை ஆடையாய் போர்த்திய மரங்களும்….நவீனயுக கட்டிடங்களுமாய்…. கம்பீரமாய் இருந்தது அந்த கல்லூரி.கோயம்பத்தூரின் புகழ் பெற்ற அந்த கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு தொழிலில் உள்ள ஏற்ற இறக்கங்களைப் பற்றியும்,அதில் உள்ள நுணுக்கங்கள் பற்றியும்,அணுகு முறைகள் பற்றியும் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார் அந்த ஆசிரியர்.
அவரின் பேச்சை ஒரு காதில் வாங்கிய தேவா….மற்றொரு புறம் தன் போக்கில் தன்வேலையை செய்து கொண்டிருந்தான்.
“டேய் மச்சான்….கொஞ்சம் நிமிர்ந்து பார்…!” என்றான் குணா பல்லைக் கடித்தபடி அமைதியாக.
“ம்ம்ம்…” என்று தேவாவின் குரல் தான் வெளி வந்ததே தவிர….அவன் நிமிர்ந்த பாடில்லை.
“மச்சி….உன்னைத்தான்…!கூட்டத்துலையே உன் தலை மட்டும் தான் குனிந்திருக்கு.அந்த விடாக் கொண்டன் பார்த்தான்….உன் கதி அதோ கதி தான்…!” என்றான் குணா…சிரிப்பை அடக்கியவாறு.
“இப்ப என்னதாண்டா செய்யனும்ன்ற….?”” என்ற படி நிமிர்ந்தான் தேவா.
படிய வாரிய தலையும்…கூர் நாசியும்,எலும்புகள் புடைத்த முகமுமாய்…தனக்கென உள்ள ஒரு கம்பீரத்துடன் இருந்தான் தேவா.
“என்னடா…? இப்ப எதுக்கு என்னை உத்து பார்த்துகிட்டு இருக்க…?இதுக்கு தான் கூப்பிட்டயா…?” என்றான் தேவா கடுப்பாய்.
“இல்ல மச்சான்…என் கண்ணுக்கே நீ இவ்வளவு அழகா தெரியறியே…அப்ப பொண்ணுங்க கண்ணுக்கு எவ்வளவு அழகா தெரிவன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்…!”” என்றான் குணா குறுஞ்சிரிப்புடன்.
“மண்ணாங்கட்டி…! இப்ப இது ரொம்ப முக்கியமா….?ஏண்டா இப்படி என் உயிரை வாங்குற…?” என்று மீண்டும் குனிய…
தேவாவின் கையில் இருந்த நோட்பேடை சட்டென்று பிடுங்கினான் குணா.
“மச்சான் நீ எனக்கு தெய்வமடா…!இன்னைக்கு இது போதும்.அந்த விடாக் கொண்டன் இங்க தான் பார்க்குறான்.நீ மாட்டுனா…நானும் கூண்டோட கைலாசம் போக வேண்டியது தான்…போதும் மச்சி விட்டுடு மச்சி…” “என்று குணா கதற….அவனைப் பார்த்து சிரித்தான் தேவா.
“சரி…சரி…!இனிமே குனிய மாட்டேன்…! நீ அந்த நோட்பேடைக் குடு…!” என்று தேவா கேட்டுக் கொண்டிருக்கும் போதே…
“அங்க என்ன சத்தம்…!”” என்ற குரலில் விக்கித்துப் பார்த்தான் குணா.தேவா எப்பொழுதும் போல் அமர்ந்திருக்க…
“குணா….! உனக்கு எப்பவும் இதே வேலை தானா.இங்க இருக்க விருப்பம் இல்லைன்னா….நீ தாராளமா எழுந்து வெளிய போகலாம்…ஓகே…!” என்றபடி அவர் மீண்டும் தன் வேலையைத் தொடங்க… “ பாவமாய் முழித்தான் குணா.
“அது எப்படிடா….செய்றதெல்லாம் நீ..! ஆனா பலன் மட்டும் எனக்கு…எப்படி மச்சான் எப்படி…?” என்று பாவமாய் குணா கேட்க….அவனின் முக பாவனையில்…வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டான் தேவா.
தேவாவும்,குணாவும் இருபத்து நான்கு வயதில் நடைபோட்டுக் கொண்டிருந்தனர்.பள்ளியிலிருந்து இவர்களின் நட்பு விடாமல் தொடர்ந்த காரணத்தினால் தேவாவிற்கு குணா என்றால் கொள்ளைப் பிரியம்.குணாவும் தேவாவிற்கு ஒன்று என்றால் துடித்து விடுவான்.
எம்.பி.ஏ.வகுப்பின் இறுதியாண்டில் இருந்தனர்.குணா பெரிய பணக்கார வீட்டுப் பையன் இல்லையென்றாலும்….அவனுடைய தந்தை ஏழையும் அல்ல.
தேவாவின் சொத்துக்களை கணக்கீடு செய்தால் அன்றைக்கு நாள் பத்தாது என்பதைப் போல் பன்மடங்கு குவிந்திருந்தது.
ஆனால் எவ்வளவு சொத்துக்கள் இருந்த போதிலும் வீட்டிற்கு சென்றால்…தனிமை மட்டுமே அவனுக்குத் துணை.யாருடனும் ஒரு ஒட்டுதல் இல்லாமலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தான் தேவா.
எதைப் பற்றியும் கவலைப் படாது…இளமைக் காலத்தை சந்தோஷமாய் செலவிடும் நேரத்தில் தேவாவின் தலையில் பொறுப்புகளும் கடமைகளும் அதிகமாய் சுமத்தப் பட்டிருந்தது.
பொறுப்புகளைத் தூக்கி சுமக்க அவன் பயப்படவில்லை.ஆனால் உடன் இருப்பவர்களை அவன் வெறுத்தான்.அவனுடைய வெறுப்பிற்கான காரணம் அவனையன்றி வேறு யாரும் அறியார்.
அதனால் தனிமையே அவனுக்கு துணைவன் ஆகியது.குணா அவன் வாழ்க்கையின் பெரும் பகுதியாய் மாறினான்.
“மச்சான் இன்னும் கொஞ்ச நாள் தான் இப்படி ஜாலியா இருக்கமுடியும். அப்பறம் வேலை,குடும்பம் பொறுப்பு,பருப்பு,அப்படின்னு பேசியே நம்ம காலம் முடிஞ்சுடும்…” “ என்றான் அலுப்பாய் குணா.
“டேய் ஓவரா சீன் போடாத…!உனக்கு என்ன குறை….? தன்னோட கடமைகளை சரியா செய்ற அப்பா….உன் மேல உயிரா இருக்குற அம்மா,உன் கூட சண்டை போடா ஒரு குட்டி தங்கை…நல்ல படிப்பு….இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்…” “ என்றான் தேவா.
“நல்ல மனைவி…! லிஸ்ட்ல இதை விட்டுட்டியே மச்சான்.அது தான் ரொம்ப முக்கியம்…! ஹிம்….நல்ல பொண்ணா பார்க்கணும்…கரெக்ட் பண்ணனும்,லவ் பண்ணனும்,அப்பறம் கல்யாணம் பண்ணனும்,அப்பறம் அவகிட்ட அடி வாங்கனும்….” இப்படி எவ்வளவு இருக்கு…? நினைச்சாலே கண்ணைக் கட்டுது…!” என்றான் குணா.
“அதான பார்த்தேன்…! என்னடா இன்னமும் ஆரம்பிக்கலைன்னு…!உனக்கு எப்பவும் அதே நினைப்புதானா…?” “ என்றான் கடுப்பாய் தேவா.
“ வயசு அப்படி மச்சி….!காதல் ,கல்யாணம் பத்தியெல்லாம் பேசாம இருந்தாத்தான் கோளாறு…!அப்படிப் பார்த்தா உன்னை மாதிரியே எல்லாரும் சாமியாரா இருக்க முடியுமா…?”” என்றான் குணா.
அப்பா சாமி..!தெரியாம சொல்லிட்டேன்.உன்னுடைய குறிக்கோள் உயர்ந்தது,சிறந்தது.முக்கியமா வாழ்க்கைக்கு வேண்டத்தக்கது…போதுமா…!” என்று கும்பிட்டான் தேவா.
“சரி,சரி….உனக்கு புரிஞ்சா சரித்தான்….!”” என்றான் குணா.
தேவா…” “எல்லாம் என் நேரம்டா…! சரி வா பசிக்குது கேண்டீன் போகலாம்…!”” என்றான்.
“அம்மா உனக்கும் சேர்த்து தான் லன்ச் குடுத்து விட்டாங்க…!” “ என்று குணா முடிக்க….
“அது எனக்கு…!கேண்டீன் சாப்பாடு உனக்கு…”! “ என்றான் பட்டென்று தேவா.
அடப் பாவி…!” என்று குணா வாயைப் பிளக்க….”,சரி வாயை ரொம்ப திறக்காத….” என்றபடி அழைத்து சென்றான் தேவா.
கேண்டீனில் இருவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க….” “தேவ்..” என்றபடி… வந்தமர்ந்தாள் சிந்து.
“ஹாய் சிந்து…!”” என்றான் தேவா.
“என்ன..? மேடமை ரெண்டு நாளா ஆளையே காணோம்..!”” என்றான் குணா.
சிந்து..”.. “ரெண்டு நாளா ரொம்ப பிசிடா. டாட் கூட ஒரு பங்க்ஷன் போயிருந்தேன்.சோ இரண்டு நாள்… நான் விடுப்பில் இருந்தேன்..!”” என்று சிந்து கொஞ்சும் தமிழில் பேச…..
“சிந்து எனக்கொரு ஹெல்ப் பண்றியா…?”” என்றான் குணா பாவமாய்.
“என்ன ஹெல்ப்..?” என்றாள்.
“தயவு செய்து இனி சுத்த தமிழ்ல பேசாத.தமிழ் இனி மெல்ல சாகாது.நீ பேசினா உடனே செத்துடும்…!”” என்றான் சிரிக்காமல்.
அதைக் கேட்ட தேவா வாய் விட்டு சிரிக்க…” “தேவா…! நீயுமா…? இவன் பேச்சைக் கேட்டு சிரிக்காத…!”” என்றாள் சிணுங்கலுடன்.
தேவா…” “குணா சொல்றது நூத்துக்கு நூறு உண்மை சிந்து…! நீ தமிழைக் கொலை செய்யாதமா…!ப்ளீஸ்..”” என்று சொல்ல…
“போங்கடா…!”” என்றபடி எழுந்து சென்று விட்டாள் சிந்து.
“அப்பாடா…! இந்த புள்ளைய கண் கலங்க வச்சாதான் அன்னைக்கு நாள் முழுமையடைந்த மாதிரி இருக்கு.இன்னைக்கு டார்கெட் ஓவர்…” “என்று முடித்த குணா…
“உன்னோட மாமா பொண்ணை இவ்வளவு கொடுமை பண்றேன்னு என் கூட சண்டைக்கு வராத மச்சி…” “ என்றான் குணா.
பத்மாவின் அண்ணனுடைய ஒரே பெண் சிந்து.தேவா படிக்கும் கல்லூரி என்பதே… சிந்துவும் அங்கு படிப்பதற்கான ஒரே காரணம்.
எவ்வளவு விலகிப் போனாலும் தேவாவிடம் விடாமல் வந்து பேசுவாள் சிந்து.ஒரு கட்டத்திற்கு மேல் அவனும் அவளுடன் சகஜமாய் பேசத் துவங்கினான்.
“இனைக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வாடா…”!“என்றான் குணா.
இல்லைடா இன்னைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு.ஆர்ட் கேலரி போகணும்…முடிஞ்சா நாளைக்கு வரேன்….” என்றான் தேவா.
குணா…” “உனக்கு இருக்குற வசதிக்கு இதெல்லாம் வேண்டாத வேலை மச்சி..”!” என்றான்.
தேவா..”. “ஏன்..? பணம் இருந்தா…திறமை இருக்க கூடாதா…? எனக்கு இது பிடிச்சிருக்கு.பண்றேன்.தட்ஸ் ஆல்..”“ என்று முடித்துக் கொண்டான்.
அதற்கு மேல் என்ன சொன்னாலும் தேவாவின் காதில் விழாது என்பது குணாவிற்கு நன்றாகத் தெரியும்.அதனால் அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசாமல் சென்றான்.
மாலை 5 மணி…
வீட்டிற்குள் நுழைந்தான் தேவா.வீடே அமைதியாய் இருக்க…அங்கு வேலை செய்யும் வேலையாள் ஓடி வந்தான்.
“சார் காபி கொண்டு வரட்டுமா..?” என்று கேட்க…”அதெல்லாம் வேண்டாம்…!” என்றபடி மேலே சென்றவன்…திரும்பி…”வீட்ல யாருமில்லையா..? எல்லாரும் எங்க போய்ட்டாங்க…!” என்றான் வேலையாளிடம்.
“கார்த்திகா மேடமோட ப்ரண்டுக்கு பிறந்தநாள் விழான்னு போயிருக்காங்க சார்…!” என்றான் வேலையாள் பவ்யமாய்.
“சரி..! நீங்க போங்க…!” என்றபடி யோசனையுடன் மாடி ஏறினான் தேவா.இந்த தனிமை அவனுக்கு பழக்கப்பட்டது தான் என்றாலும் அன்று ஏனோ ஒரு மாதிரியான உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது.
தனது அறைக்குள் நுழைந்தவன் ஆயாசமாய் படுக்கையில் விழுந்தான்.”என்ன வாழ்க்கை இது…? எனக்குன்னு யார் இருக்கா…? வீட்டுக்கு வந்தா அன்பா பேச தாய் இல்லை.இப்படி எனக்குன்னு யாருமே இல்லாம என்னால் எப்படி இருக்க முடிகிறது…?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
அவன் அறையின் பால்கனியின் வழியாக காற்று இதமாய் வீச….அந்த குளுமையில் தனது மனதில் உள்ள யோசனைகளை,கேள்விகளையெல்லாம் ஒதுக்கி வைத்தான்.
அவனுக்கு வந்த கடிதங்களையும்,வாழ்த்து அட்டைகளையும் வேலையாள் வந்து கொடுக்க…வேகமாய் அதை வாங்கினான் தேவா.
எல்லாக் கடிதங்களையும் வேகமாய் எடுத்துப் பார்த்தவன்….ஏதோ ஒன்றைக் காணாமல் தேடினான்.
“தூரிகா..” என்ற பெயர் கண்ணில் பட அதை வேகமாய் எடுத்தான் தேவா.மற்ற அனைத்து கடிதங்களையும் ஒதுக்கித் தள்ளியவன்…குறிப்பிட்ட அந்த கடிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பால்கனி நோக்கி சென்றான்.
தேவாவிற்கே தன்னை நினைத்து வியப்பாய் இருந்தது.அந்த கடிதத்தின் மீதான அவனுடைய எதிர்பார்ப்பு என்னவென்று அவனுக்கே தெரியவில்லை.ஆனாலும் அவன் மனம் அந்த பெயரைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தது.
தேவாவிற்கு எப்பொழுதுமே தன்னுடைய எண்ணங்களை ஓவியமாக வெளிப்படுத்துவதில் அலாதிப் பிரியம்.எப்போது போல் ஒரு படத்தைப் பார்த்தேன்,வரைந்தேன் என்று இல்லாமல்…தன் மனம் எதிர்பார்க்கும் ஆசைகளை,கற்பனைகளை..அவற்றிக்கான வடிவத்துடன் கொடுக்கத் துவங்கினான்.
அதே சமயம் தன்னை யார் என்று வெளிக்காட்டுவதிலும் அவனுக்கு விருப்பமில்லை.எல்லா ஓவியர்களையும் போல் புனைப் பெயரில் தன்னுடைய ஓவியங்களை வரைய ஆரம்பித்தான்.
தன்னுடைய சொந்த பெயரையோ,முகவரியையோ யாருக்கும் கொடுக்காத அவனுக்கு பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வரும் கடிதங்கள் மட்டுமே அவனுடைய விசிறிகள்.இருபத்தி நான்கு வயதிலேயே தன்னுடைய புகழை சம்பாதிக்க ஆரம்பித்தான்.
கார்ட்டூனிலும்,விளம்பரங்களிலும்,மாத இதழ்களிலும் அவனுடைய ஓவியங்கள் அணிவகுத்து நிற்க…முகம் காட்டாமல் அந்த துறையில் ஒரு முழுமையை எட்டினான் தேவா.அவனுடைய தனிமைக்கு வரைதல் மட்டுமே மருந்தாய் அமைந்தது.
இது அவனுக்கும்,குணாவிற்கும் மட்டுமே தெரிந்த ஒரு அத்யாயம்.
ஆவலுடன் பிரித்தான் அந்த கடிதத்தை….
வணக்கம்….
உங்களுக்கு நான் எழுதும் இருபத்து ஐந்தாவது கடிதம் இது.உங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை.ஆனால் கலைக்கும்,திறமைக்கும் அறிமுகம் தேவையில்லை என்று நான் அறிகிறேன்.
நீங்கள் யார் என தெரிந்து கொள்ள….நான் விசாரிக்க சென்ற இடம் எல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இந்த மாதம் நீங்கள் வரைந்த மாடன் ஆர்ட்டில் மயங்கி எங்கள் கல்லூரியில் திரியும் கூட்டம் ஏராளம்.
உங்களிடம் ஒரு ஆட்டோகிராப் ஆவது வாங்கிவிட வேண்டுமென்று நினைக்கிறேன்.ஆனால் முடியவில்லை.இன்னும் கொஞ்ச நாளில் உங்கள் ஓவியத்திற்காக நான் பைத்தியம் ஆகாமல் இருந்தால் அது அதிசயம்.
உங்கள் எண்ணங்களே ஓவியங்களாய் உருவம் பெறுகின்றன என்பது நான் அறிந்த உண்மை.
எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்த போதிலும்…கடிதத்தை தவிர வேறு எதிலும் உங்களைத தொடர்பு கொள்ள முடியவில்லை.நீங்கள் அணிந்திருக்கும் போர்வையை விலக்கி.. வெளி உலகிற்கு வர வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் வேண்டுகோள்.
உங்கள் படைப்புகளை ரசிக்கும் ரசிகையாய்….. நீங்கள் தொடர்பு கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்திலும் எனது தொலைபேசி எண்ணைக் குறிப்பிடுகிறேன்…*********.
இப்படிக்கு…
உங்கள் படைப்பை ரசிக்கும் ….
தூரிகா.
என்று முடிந்திருந்தது அந்த கடிதம்.
அந்த கடித்ததை திரும்ப திரும்ப வாசித்தான் தேவா.என்ன மாதிரியான பெண் இவள்…? இந்த காலத்திலும் ஒவியத்தின் மீது இப்படி ஆர்வமா….?யார் இவள்…?ஒவ்வொரு முறையும் கடிதத்தை வாசிக்கும் போது இவள் கல்லூரி பெண் தான் என்று புரிகிறது.
ஆனால் எந்த கல்லூரி….? என்று கடிதத்தை திருப்பி பார்க்க…அதில் பெறுநர் முகவரியில் பத்திரிகை அலுவலத்தின் முகவரி மட்டுமே எழுதப்பட்டிருந்தது.
ஆனால் ஒவ்வொரு முறையும் அவளுடைய கடித்தத்தைப் படிக்கும் போது…அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் வேரூன்ற தொடங்கியது.
எதிலும் ஏற்படாத ஒரு மன அமைதி….அவளின் கடித வரிகளில் அவனுக்கு கிடைத்தது.ஒவ்வொரு முறையும் அவள் நம்பர் அனுப்புவதும்…இவன் அந்த எண்ணிற்கு டயல் செய்வதும்…பின் எதையோ நினைத்து கட் பண்ணுவதுமாக அவனுடைய நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு கடிதத்தின் மூலமாக ஒரு பெண் என்னை ஈர்க்க முடியமா…? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
“ஏன் முடியாது…? ஒரு ஓவியத்தின் மூலமாக நீ அவளை ஈர்க்கும் போது…கடிதத்தின் மூலமாக அவள் உன்னை ஈர்ப்பதில் என்ன அதிசயம்…?” என்று அவனின் மனசாட்சி அவைக்கு பதில் அளித்தது.
“தூரிகா….””“ என்று ஒரு முறை மனதிற்குள் சொல்லிப் பார்த்தான்.கண்டிப்பா இது அவளுடைய உண்மையான பெயரா இருக்க முடியாது என்று நினைத்தான்.
அவள் முந்தைய கடிதங்களில் எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது அவனுக்கு.
“நீங்கள் ஓவியனாய் இருக்கும் வரை…உங்களுடைய ஓவியங்களுக்கு நான் என்றும் தூரிகையாய் ஒரு விசிறியாய் இருப்பேன்….” “என்று எழுதியிருந்தாள்.
“எந்த காலேஜ்ல படிக்கிறா….?” என்று அவன் யோசிக்க…”முட்டாள் அதான் அவளே நம்பர் குடுத்திருக்காளே…அதுக்கு கால் பண்ணிக் கேட்டா அவளே சொல்லப் போறா…? இதுல இவ்வளவு ஆராய்ச்சித் தேவையா…?” என்று மனம் இடித்துரைத்தது.
“வேண்டாம் தேவா…! அவசரப்படாத.உனக்கு இங்க இருக்குற பிரச்சனைகள் ஏராளம்.அதையெல்லாம் முதல்ல முடிக்கணும்.இன்னும் இரண்டு மாதத்தில் உன் படிப்பும் முடிஞ்சுடும்.அதுக்கப்பறம் எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவு பண்ணு.எதையும் எடுத்தோம் கவுத்தோம்ன்னு செய்யாத…”” என்று அவன் மூளை அவனை எச்சரிக்க….அப்போதைக்கு அந்த நினைப்பைக் கைவிட்டான் தேவா.
அதே நேரத்தில்…..
ஜன்னலின் ஓரத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் தூரிகா.அடுத்த நாள் தேர்விற்கான பாடங்களை புரட்டிக் கொண்டிருந்தாள்.
கண்கள் மட்டுமே புத்தகத்தில் இருக்க….நினைவுகள் இடம் மாறி இருந்தது.எத்தனை கடிதம் போட்டாச்சு.ஒரு ரெஸ்பான்சும் இல்லை.யார்ன்னு கண்டு பிடிக்கவும் முடியலை…இதுக்கு மேல என்ன தான் பண்றது…? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
“ஹேய் என்னடி ஆச்சு…? எதுக்கு இப்ப பேயறைந்த மாதிரி உட்கார்ந்திருக்க…?” என்றாள் ஜெனிபர்.
“ஆங் ஒண்ணுமில்லைடி…” “என்றாள்.
“நீ ஒன்னும் இல்லன்னு சொல்றப்பவே தெரியுது ஏதோ இருக்குன்னு.என்ன இன்னைக்கும் அந்த ஓவியனோட நினைப்பு தானா…? என்றாள் ஜெனி.
“எப்படி கண்டுபிடிச்ச…?”” என்றாள் ஆச்சர்யமாய்.
“இதுல கண்டுபிடிக்க என்ன இருக்கு.கழுதை கெட்டா குட்டிச்சுவறு…” “ என்றாள் ஜெனி.
தூரிகா கோபமாய் முறைக்க….” “இப்ப எதுக்குடி முறைக்கிற…? அவன் யாருன்னு தெரியாது…?கருப்ப..சிவப்பா…நெட்டையா…குட்டையா…கிழவனா… இல்லை குமரனா இப்படி எதுவுமே தெரியாம…எப்ப பாரு உனக்கு அவன் நினைப்பு தான்…!எனக்கென்னமோ இது சரியாப் படலை…” “ என்றாள் ஜெனி.
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை…”“ என்றாள் தூரிகா.
வேண்டாம்…தெரியவே வேண்டாம்.கற்பூர வாசனையே எனக்கு தெரிய வேண்டாம்.நான் கழுதையாவே இருந்துட்டு போறேன்.சரியா…?” என்று இடக்காக சொன்னவள்…
நாளைக்கு எக்ஸாம்…. படிக்க நிறைய இருக்கு..சோ இன்னைக்கு மட்டும் இந்த ஆர்ட்டு,கீர்ட்டு எல்லாத்தையும் ஓரம் கட்டிட்டு படிக்கிற வழியப் பாரு….!” என்றபடி படிக்க ஆரம்பித்தாள் ஜெனி.
ஆனால் தூரிகாவால் படிக்க முடியவில்லை.ஏதோ ஒன்று அவளது மனதை நெருடிக் கொண்டிருந்தது.
“எதற்காக என் மனம் இப்படி குழம்பித் தவிக்குது…?யார் அவன்..? என்னுடைய எண்ணங்களும் அவனுடைய எண்ணங்களும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்.நான் மனதில் நினைப்பவை….அவன் மூலம் எப்படி ஓவியமாக மாறுகிறது….?” என்று ஆயிரம் கேள்விகள் அவள் மனதில் உதித்துக் கொண்டிருந்தது.