Advertisement

அத்தியாயம் ஏழு:

குனிந்து கண்களின் நீரை ஆதவனுக்கு தெரியாமல் மறைத்தாள், பின்பு சுதாரித்து “சாப்பாடு வேஸ்ட் ஆகும்னு” என்று அவளாக சாப்பிடுவது போல விளக்கம் சொல்ல,

“இப்போ இதை எப்படிச் சாப்பிட முடியும். பார் நீர் விட்ட மாதிரி இருக்கு.. தோசை சாப்பிடு” என்றான்.

அவள் அப்போதும் தலை நிமிராமல் இருக்க…

“மணி என்ன தெரியுமா பண்ணண்டு.. நானே ரொம்ப லேட் பண்ணிட்டேன். நான் வர்ற வரை நீ வெயிட் பண்ணாதன்னு நான் சொல்லியிருக்கணும். அதுவே நான் பண்ணிட்டு இருக்குற பெரிய தப்பு. அதுக்கே நான் உன்கிட்ட மன்னிப்பே கேட்கணும். ஆனா வேணும்னு செய்யலை. நான் இதை யோசிக்கலை, தோசை சுட்டுக்கோ” 

“இல்லை! பரவாயில்லை!” என்று சொல்லி நிமிர்ந்து பார்த்தாள்.  

“சொன்னாக் கேட்கணும்” என்று கையில் இருந்த தட்டத்தைப் பிடிங்கிக் கொண்டான்.

“எனக்குப் பசிக்குது, கால் வலிக்குது, நான் இன்னும் சுட்டு எப்படி சாப்பிடுவேன். ஆறு மாசமா ராத்திரி இதைத் தான் சாப்பிடறேன். இன்னைக்கு மட்டும் ஏன் கேட்கறீங்க. போங்க எப்பவும் போல நீங்க போய் தூங்குங்க” என்று ஒரு ஆவேசத்தில் சொல்லி அவன் கையில் இருந்த தட்டத்தை மீண்டும் தாமரை பிடிங்கிக் கொண்டாள்.

அவனிடம் யாரும் இப்படி நடந்து கொண்டதும் இல்லை, தாமரையிடம் இப்படி ஒரு கோபத்தையும் ஆதவன் பார்த்ததில்லை.

அமைதியாக திரும்பி உள் சென்று விட்டான். தாமரைக்கு அழுகை பொங்கியது. சுவரில் சாய்ந்து அமர்ந்து தேம்பித் தேம்பி அழ துவங்கினாள்.

ஆதவன் சென்று மகள்களுடன் படுத்தவன் அந்த இடத்தை ஆராய, ஒரு பாயில் மித்ரா படுத்திருப்பது தெரிந்தது.  

தன் மக்கள் மட்டும் படுக்கையில்.. இவ்வளவு நாளாக பார்த்து தான் இருந்தான்.. ஆனால் அது கருத்தில் பதியவில்லை…

“ச்சே! ச்சே! என்ன செய்திருக்கிறேன் நான்!” என்று ஒரு கழிவிரக்கம் தோன்ற.. தன்னையே மிகவும் கீழாக உணர்ந்தான். மித்ராவைத் தூக்கி மெத்தையில் பிருந்தாவிற்கு பக்கத்தில் படுக்க வைத்தான். பின்பு அவன் அப்படியே வெறும் தரையில் படுத்துக் கொண்டான்.

ஆனால் உறக்கம் ஏனோ இன்று அணுகவில்லை. கிட்ட தட்ட அரை மணிநேரம் ஆகிற்று, நேரம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது.    

தாமரை உறங்க வருவதாக காணோம்… எழுந்து சென்றுப் பார்க்க.. சமையலறையில் அப்படியே காலை குறுக்கி படுத்து உறங்கியிருந்தாள். சாதம் போட்டு வைத்த தட்டம் அப்படியே இருக்க, அந்த சாதமும் தொடப் படாமல் இருந்தது.

அருகில் சென்று அவளின் முகத்தைப் பார்க்க, கண்களில் கண்ணீர் துளிகள் வடிந்து கன்னத்தில் இறங்கி கரைகளாக காட்சியளித்தது.

“நேற்று தானே நினைத்தோம்! இவள் எனக்கு நிம்மதியை கொடுக்கிறாள் என்று. இன்று காலையில் இருந்து எவ்வளவு பிரச்சனைகள்..”

“தன்னை வருத்தி இவள் எனக்கு நிம்மதியைக் கொடுக்கிறாளா” என்று தோன்றியது.

தட்டத்தை சத்தம் செய்யாமல் எடுத்து வேறு இடத்தில் வைத்து.. தாமரையை இரண்டு கைக் கொண்டு அப்படியேத் தூக்க.. தாமரைக்கு விழிப்பு வந்து என்ன நடக்கிறது என்று உணராமல் அவள் மேலே எழும்புவது மட்டும் தெரிய வீல் என்று கத்தப் போனவளை “ஷ், கத்திடாத” என்று அதட்டல் போட..

“அய்யோடா! இவர் என்னைத் தூக்குகிறாரா. ஒரே நாளில் எனக்கு இவ்வளவு அதிர்ச்சியா!” என்று தாமரை துவண்டு தான் போனாள். ரூமின் உள் சென்று இறக்கிவிட்டு “படு” என்றான்

“சமையல் கட்டுல லைட் எரியுது” என்று தாமரை தன் கடமை உணர்ச்சியைக் காட்ட..

“நான் ஆஃப் பண்ணிக்கறேன். பேசாம தூங்கு!” என்றான்.

அப்போது தான் மித்ரா இல்லாததை பார்த்தவள். மித்ரா அங்கே குழந்தைகளுடன் படுத்திருப்பதை பார்த்து “மித்ரா” என்றாள்.

“அவ எல்லாம் இங்க வந்து படுக்க மாட்டா, வேணும்னா நீ அங்க போய்ப் படு!” என்று ஆதவன் சொல்ல…

“எங்கே படுக்க” என்று குழம்பி நின்றாள்.

“போ! போய்ப் படு!” என்று சொல்ல,

“நீங்க எங்க படுப்பீங்க?” என்று கேட்டாள்.

“இத்தனை நாளா கேட்டியா? இல்லையில்லை! இப்போ மட்டும் ஏன் கேட்கற. எனக்குத் தெரியும்! நீ குழந்தைங்களோட படு!” என்றான்.

கோபமாக சொல்கிறானா! கடுப்பில் சொல்கிறானா! இப்படிப் பல வகையிலும் ஆராய்ந்தாள், அவன் முகத்தில் இருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பேசாமல் படுத்துக் கொண்டாள். ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகள். எப்படித் தாங்குவாள். ஆனாலும் களைப்பு உறங்கிவிட்டாள். புதிதாக கிடைத்த  மெத்தை வேறு உடல் வலிக்கு சற்று சுகமாக இருக்க, நிமிடத்தில் உறங்கி விட்டாள்.

ஆதவனுக்கு தான் உறக்கம் வரவில்லை. உள்ளே உப்புசமாக இருக்க கதவைத் திறந்து படியில் அமர்ந்து கொண்டான்.

         தன்னைத் திருமணம் செய்து வந்த பெண், ஆறு மாதமாக என்ன உண்கின்றது என்று கூடத் தெரியாமல் இருந்திருக்கிறேன். என்ன மனிதன் நான். செலவுகளும் அதிகரிக்கின்றது. அடுத்த வாரம் மித்ராவிற்கு ஃபீஸ் வேறு கட்ட வேண்டும். பேசாமல் தொழிலை மாற்றிக் கொள்வோமா என்று யோசித்தபடி அமர்ந்திருந்தான்.

வெகு நேரம் கழித்தே உறங்க சென்றவன், விழிக்கும் போதும் வெகு நேரமாகி விட்டது.

“அப்பா! பஸ்க்கு டைம் ஆச்சு! எழுந்திருங்க!” என்று பிருந்தா வந்து எழுப்பவும் தான் எழுந்தான். அவளை பஸ் ஏற்றி வந்த போது வீடு பரபரப்பாக இருந்தது.. சுமதிக்கு பிரசவ வலி எடுத்திருக்க..  சேரன் அம்பாசிடரை எடுத்துக் கொண்டிருந்தான்.

“நீ போ! சுமதியைக் கூட்டிட்டு வா! நான் கார் எடுக்கறேன்!” என்று சொல்லி அவனை அனுப்பினான்.. இவன் கார் எடுப்பதற்குள் சுமதி வெளியே வந்திருந்தாள்..

மரகதம் பொருட்களை இன்னும் எடுத்துக் கொண்டிருக்க.. “அம்மா நான் இவங்களை விட்டுட்டு வர்றேன். நீ ரெடியா இரு..” என்று மதுரையின் ஒரு புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவமையை நோக்கி காரை விட்டான். அங்கே தான் அவர்கள் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.

சுமதியை பிரசவ அறை நோக்கிக் கொண்டு சென்றனர். அவர்களின் பிறந்த வீட்டிற்கு சொல்லி.. திரும்ப அம்மாவைக் கூட்டி வந்து விடுகிறேன் என்று ஆதவன் சென்றான்.

அங்கே தயாராக இருந் மரகதம்.. “வீட்டை இப்படிப் பார்த்துக் கொள்! இதை செய்! அதை செய்!” என்று  தாமரைக்கு சட்ட திட்டங்கள் போட்டுக் கொண்டிருக்க….

“முதல்ல நீ கிளம்பு!” என்று அம்மாவை அதட்டிக் கிளப்பி, “நான் இவங்களை விட்டுட்டு வர்றேன்” என்று தாமரையிடம் சொல்லி அம்மாவையும் அப்பாவையும் கூட்டிக் கொண்டு கிளம்பினான்.

அவர்களை விட்டு இவன் வீட்டிற்கு திரும்பி வந்த பிறகு குளிக்கப் போக, தாமரை அவனுக்கு பசிக்கும் என்று வெளியே வரும் சமயம் டீ யுடன் தயாராக நின்றாள்.

என்றுமில்லாத அதிசயமாக சிறு புன்னகையுடன் ஆதவன் அந்த டீயை வாங்க.. இப்போது தாமரை அவனை அதிசயமாக பார்த்தாள்…

“உன் விரல் எப்படி  இருக்கு?” என்றான்..

அவளுக்கு சட்டென்று அடிப்பட்டது ஞாபகம் வரவில்லை, “என்ன விரல்” என்றாள்.

“உன் கால்ல அடிப்பட்டது”

“ஓஹ்! அதுவா!” என்று அப்போதுதான் அதை குனிந்து பார்த்தாள். “வலி அதிகமில்லை! சரியாகிடும்!” என்று அவள் பாட்டிற்கு செல்ல.. அவளைத் தேடிப் போய் குழந்தைக்கு அடிபட்டால் போடும் ஆயின்மென்ட் ஒன்றைக் கொடுத்தான்.  வாங்கி வைத்து கொண்டாள்.

“மறக்காம போட்டுக்கோ” என்று சொல்லிக் காலை உணவை முடித்து வெளியே கிளம்பியவன்.. “கதவைத் தாள்  போட்டுக்கோ தாமரை.. அஸ்வதியும் மித்ராவும் வெளில ஓடிடப் போறாங்க.. வீட்ல யாருமில்லை! கவனமா இரு!” என்று சென்றான்.

“இருந்தா மட்டும் அவங்களா பார்த்துக்கறாங்க” என்ற வார்த்தை மனதில் தோன்றிய போதும் அதை வெளியில் சொல்ல எல்லாம் தாமரை விழையவில்லை. வெளி ஆட்களிடம் கூடப் பேசி விடுவாள், இன்னும் வீட்டு ஆட்களிடம் வாயைத் திறக்க முடியவில்லை.. முக்கியமாக ஆதவன் முன் அதிகம் பேச வருவதில்லை.

அவன் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக சொல்லிச் செல்ல.. இவள் தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள்.

மதியம் உணவிற்கு வந்தவன்… “பையன் பொறந்திருக்கான் சேரனுக்கு” என்று சொல்ல.. தாமரைக்கு சந்தோஷமாகியது.

“எப்போ பொறந்தான்?” என்று கேட்க..

“காலையிலயே.. உனக்கு யாரும் சொல்லலையா?”

“இல்லை! வீட்டுக்கு யாரும் வரலை..” என்றாள்.  தாமரையினது பிறந்த வீட்டில் எளிய வாழ்க்கை… இந்த பெரிய குடும்பங்களின் சூட்சுமங்கள் இன்னும் புரிந்தவள் அல்ல. அது மட்டுமன்றி இங்கே யார் அவளிடம் அரட்டை அடிப்பவர்கள் எல்லோரும் அவசியத்திற்கு பேசுபவர்கள்.. இதில் அவர்கள் ஏன் சொல்ல வில்லை என்பது போல எல்லாம் தோன்றவில்லை.

ஆனால் ஆதவன் அப்படியல்ல! அவனுக்கு மரியாதை மிகவும் முக்கியம்! வீட்டில் வெளியில் எல்லா இடத்திலும்..      

“வீட்டுக்கு வரலை சரி! போன் செஞ்சு சொல்லியிருக்கலாம் தானே! வீட்ல நீ மட்டும் தானே இருக்க!” என்று சொல்லும் போதே ஆள் வந்தது..

செங்கல் சூளையில் வேலை செய்பவன்.. “பெரியம்மா சாப்பாடு வாங்கிட்டு வரச் சொன்னாங்க” என்றான்.

“சமைச்சு குடுத்து அனுப்பச் சொல்லியிருந்தாங்களா?”

“ஆம்!” என்பது போலத் தாமரை தலையசைக்க..

“குடுத்து விடு!” என்றான்.   

இரண்டு வயர் புட்டிகளில் தனித்தனியாக கொடுத்தாள்.. “இது     பெரியய்யாக்கு.. இது ஆஸ்பத்திரிக்கு”.

அதன் பிறகு தாமரையிடம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அஸ்வதியை தூக்கி வைத்து கொண்டான். உண்டு முடித்து மாலை வரை வீட்டில் தான் இருந்தான்.

யோசனை எல்லாம் புதிய செங்கல் சூளை அமைப்பதில் தான் இருந்தது. அஸ்வதி தந்தையின் மடியிலேயே இருக்க… மித்ரா அவனை எட்டிப் பார்ப்பதும் அம்மாவின் பின் மறைவதுமாக இருந்தாள்.

குழந்தையை பார்க்கச் செல்லவில்லை. தாமரையிடம் சொல்லாததால் செல்லவில்லை.

தான் அவளுக்கு உரிய மரியாதை அளிக்காதது மற்றவர்களின் பார்வையில் அவளை அலட்சியமாக பார்க்க வைக்கிறதோ என்று உரைத்தது.

வீட்டில் சற்று நேரம் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அப்போது தான் என்ன நடக்கிறது என்று தெரியும்.

மாலை பிருந்தாவை தாமரை தான் மெயின் ரோட் சென்று ஸ்கூல் பஸ் வந்ததும் அழைத்து வருவாள். இன்று ஆதவன் இருக்க “நான் போறேன்!” என்று சொல்லி நிறுத்தம் செல்ல… அவனைப் பார்த்த பிருந்தாவிற்கு சந்தோசம் பிடிபடவில்லை.

“அப்பா!” என்று தாவி ஏறினாள். நிறைய குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டோம் என்று உணர்ந்தான்.

அதிகம் பேசாத பிருந்தா அன்று அப்பாவிடம் பள்ளியில் நடந்ததை சொல்லிக் கொண்டே வந்தவள்… வீடு அருகில் வந்ததும்… “அம்மாக் கிட்ட எப்பவும் நான் இப்படித் தான் சொல்லிக்கிட்டே வருவேன். அம்மா ஏன் விட்டிட்டு போயிட்டாங்க” என்று கண்கள் கலங்க சொல்ல… எட்டு வயது பெண்ணையும் கையினில் தூக்கிக் கொண்டான்.

மனது கலங்கியது. என்ன செய்தாலும் சென்றவர்கள் திரும்ப வர மாட்டார்களே.  

“தாமரை அம்மாக் கிட்ட சொல்ல மாட்டியா? அவங்க கேட்க மாட்டங்களா…?”

“கேட்பாங்க! ஆனா நான் சொல்ல மாட்டேன்!”

“ஏன் குட்டிம்மா?”  

“அவங்க அம்மா மாதிரி பேசறதில்லை! ட்ரெஸ் பண்றதில்லை! என்னோட சில பஸ் ஃபிரண்ட்ஸ் அவங்க உங்க வீட்டு மெயிடான்னு கேட்கறாங்க” என்றாள்.

“என்ன?” என்று அதிர்ந்து நின்று விட்டான்.

“உங்க வீட்ல வேலை செய்யறவங்களான்னு கேட்கறாங்களா? ஏன் ஏன் அப்படிக் கேட்கறாங்க” என்று தெரிந்து கொள்ள முயல..

பேசிக் கொண்டே வீட்டின் வாசல் வரை வந்திருந்தார்கள். தாமரை அவர்கள் வருவதை வாயிலில் இருந்து பார்த்தாள்.

“அவங்க ஒரு ரெண்டு மூணு சாரி தான் திரும்பத் திரும்ப கட்டுறாங்க.. அதுவும் பழசா இருக்கு, வேலை செஞ்சிக்கிட்டே அப்படியே வந்துடறாங்க..”

“ரெண்டு சின்ன குழந்தைங்களை சமாளிக்கும் போது அப்படி தான் இருக்கும். நீ சொல்லலாம் தானே!”

“அவங்க பேடா ஃபீல் பண்ணினா?” என்று சொல்லித் தன் முகத்தை பார்த்த பிருந்தாவைப் பார்த்தவன்.. 

“எஸ்! சொல்ல வேண்டாம். மெதுவா மெதுவா மாத்திடலாம்.. அம்மா சாமியாகிட்டாங்க இல்லையா? நாம தாமரை அம்மாவைப் பார்த்துக்குவோம்” என்று சொன்ன நிமிடம் ஆதவனின்  மனம் கனத்துப் போனது.

 “அப்பா! எப்பவும் வெளில போயிடறேன் இல்லையா. நீ தான்  தாமரை அம்மாவை, மித்ராவை, அஸ்வதியை எல்லாரையும் பார்த்துக்கணும்” என்ற பெரிய பொறுப்பை அவளிடம் கொடுத்தான்.

அதுவும் சமர்த்தாக தலையாட்டியது.

“எங்கேடா இன்னும் காணோம். அப்போதே வாசல் அருகில் வந்தார்கள் இன்னும் காணோம்” என்று பிருந்தா குடிப்பதற்காகப் பாலை கையினில் வைத்து தாமரை வாசல் வர… அஸ்வதியும் மித்ராவும் அவளை நூல் பிடித்து வந்தனர்.

மூவரும் படியில் நிற்க.. அதைப் பார்த்த படியே தந்தையும் மகளும் வீட்டின் உள் வந்தனர்.

“பால் ஆறிப் போனா நீ குடிக்க மாட்ட, குடிச்சிடு பிருந்தா!” என்று உள் நுழைந்ததும் அவளைப் பால் குடிக்க வைத்து, “போ! போய் முகம் கழுவு” என..

அவளின் லஞ்ச் பேகை அஸ்வதி தரையில் இழுத்துப் போக.. மித்ரா அவளின் ஸ்கூல் பேகை தம் கட்டி தூக்கி சிறிது தூரம் சென்று வைத்து மீண்டும் தூக்கி என்று கொண்டு சென்றுக் கொண்டிருந்தாள்.

ஆதவனுக்கு தானாக முறுவல் வந்தது. முதல்ல இன்னக்கு நைட் இவங்களுக்கு ஒரு எழுமிச்சம் பழம் சுத்திப் போடணும் என்று நினைத்துக் கொண்டான்.    

 

 

Advertisement