Advertisement

அத்தியாயம் ஆறு:

“ஐயோ யாரை வரச்சொல்றாங்க பிரச்சனை பெருசாகிடுமோ” என்ற கவலையோடு தாமரை பார்த்திருக்க…

பத்து பதினைந்து நிமிடத்தில் எதிர்பார்த்தவர்கள் வந்தார்கள்.. அந்த அஸோஷியேஷனின் பிரசிடன்ட்டும் செக்ரடரியும்.

வந்தவர்களைப் பார்த்து “அண்ணே! இந்தப் பய என்னை மிரட்டுறாண்ணே! வெளிய விடாம உள்ள பூட்டிட்டாண்ணே” என்று சொல்ல,

“நீ என்ன பண்ணின” என்றனர்.

“என்ன அண்ணே? நான் என்ன வேணா பண்ணியிருக்கட்டும் என்னை மிரட்டுறான்னு சொல்றேன். அதை விட்டு என்னைக் கேள்வி கேட்கறீங்க”

“ஆதவன் காலையிலயே வந்து உன் மேல அசோசியயேஷன்ல கம்ப்ளையின்ட் குடுத்துட்டுப் போயிட்டான்.. பணம் குடுக்க மாட்டேன் ஆனதை பார்த்துக்கோன்னு சொன்னியாமே.. உன்னை மாதிரி சில ஆளுங்களால எங்க எல்லோருக்கும் கெட்டப் பேர், பணத்தை எப்போ குடுக்கற” என்றனர் இருவரும்.

அப்போது தான் வாயை திறந்தான் ஆதவன்.. “வந்ததுக்கு ரொம்ப நன்றிண்ணே! நானும் பேசி தீர்த்துக்கலாம்ன்னு தான் உங்களை வந்து பார்த்தேன். ஆனா இந்தப் பய ஆளுங்களை கூட்டிட்டு வந்து மிரட்டுறான். யார் என்னன்னு தெரியாம விளையாடிட்டான். இனி பணம் வராம இந்த பயலை நான் இந்த இடத்தை விட்டு அனுப்ப மாட்டேன் அண்ணே. நீங்க தப்பா எடுக்கக்கூடாது” என்றான் பணிவாக.

யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்தவன்.

“அப்போ அப்படியே என்னை விட்டுடுவீங்களா?” என்று ஏகத்துக்கும் பணம் கொடுக்க வேண்டியவன் எகிற,

“எங்களால ஒன்னும் பண்ண முடியாது, ஆதவன் பேசறது தப்பில்லை…” என்று கையை விரித்து விட்டனர்.

வேறு வழியே இல்லாமல் யாருக்கோ அழைத்து பணத்தைக் கொண்டு வரச் சொன்னான்.

ஒரு மணிநேரம் ஆனது பணம் வர… அதற்குள் அஸ்வதி வேறு விழித்துக் கொண்டு அழ.. “இப்போல்லாம் எங்கயும் போக முடியாது.. அவளை சமாதானம் செய். ஏதாவது பிஸ்கட் கொடு” என்று தாமரையையும் அதட்டினான்.

“என்னை என்னத்துக்கு இவர் திட்டுறாரு” என்று மனம் சுணங்கிய போதும் முகத்தில் எதையும் காட்டாமல் ஆதவன் சொன்னதை செய்தாள்.   

வந்து பணம் கொடுத்த பிறகு தான்  அவர்களை விட்டான். “ஆழம் தெரியாம காலை விடாத” என்று அவனை மீண்டும் மிரட்டி அனுப்பி..

“தேங்க்ஸ் அண்ணே!” என்றான் ப்ரெசிடன்டையும் செக்ரடிரியையும் பார்த்து.

“மிரட்டறது தப்பு ஆதவா, நம்ம நேரம் சரியில்லன்னா ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடும்” என்றனர் அவனையும் பார்த்து.

“என்ன செய்யட்டும் அண்னே! நானா போனேன்! அவனா வந்து சிக்குறான், என்ன செய்ய?” என்றான் சிரிப்புடன்.

“சரி, விடு! தொழிலுக்கு வந்துட்டியா?” என்றவர்களைப் பார்த்து,

“இல்லைண்ணே” என்றான்.

“ஏன் ஆதவா?”

“அப்பாக்கும் எனக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். அதான் விலகிட்டேன்”

“சரி, விலகிட்ட, ஆனா வேற தொழில் ஏன் போற?”

“அப்பாக்கு போட்டியாயிடக் கூடாது, இல்லையாண்ணே”

“அடப் போப்பா! வேற செங்கல் சூளையே மதுரையில இல்லையா என்ன? அவர் ஒரு பக்கம் செஞ்சா நீ ஒரு பக்கம் செய்..” என்று சொல்லி அவர்கள் சென்றனர்.

அதன் பிறகே மனைவியின் புறமும் மக்களின் புறமும் திரும்பினான்.

எல்லாவற்றையும் ஜன்னல் வழியாக பார்த்து கேட்டு இருந்தாள் தாமரை. “எல்லார்கிட்டயும் நல்லா தான் பேசறாரு, இன்னைக்கு காலையில இருந்து தான் நம்மகிட்ட கொஞ்சம் பேசறாரு” என்று யோசித்தபடியே பார்த்து இருந்தாள்.     

பிள்ளைகளின் முகத்தில் பசியின் சோர்வை பார்த்தவன்.. பணத்தை அப்பாவிடம் கொடுத்து உடனே கிளம்பினான்.

வீடு நோக்கி புல்லட்டை செலுத்திக் கொண்டு இருந்தவன் மனதில் அவர்கள் பேசியது தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. “நீ ஒரு பக்கம் செய். உங்கப்ப்பா ஒரு பக்கம் செய்யறாரு. ஏன் வேற தொழிலுக்கு போகிற?” என்பதே.

பல முறை தொழிலில் சரிவை சந்தித்த போது சுகன்யாவும் இதை தான் சொல்வாள், “தெரியாதது ஏன் செய்யறீங்க… தெரிஞ்சதை செய்ங்க!” என்று.

ஆனால் ஆதவன் கேட்டுக் கொண்டது இல்லை. இப்போது செய்யலாமோ என்ற யோசனை மனதில் ஓட ஆரம்பித்தது.     

அந்த யோசனைகளில் இருந்ததால் சுற்று புறம் கவனிக்கவில்லை. மீண்டும் தனக்குள் சுருங்கிக் கொண்டான். எப்பொழுதும் போல வீடு வந்ததும் தாமரையிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் பாட்டிற்கு அவனே அமர்ந்து சாதத்தை போட்டு உண்டு மீண்டும் வெளியில் கிளம்பிவிட்டான்.

தாமரைக்கும் மக்களை கவனிக்க நேரம் சரியாகப் போய்விட்டது. மாலையில் பிருந்தா வர, அவர்களின் பள்ளி வந்த விவரத்தை தாமரையாகப் போய் சொன்னாள். “அப்பா வந்தாரா? என்னை ஏன் பார்க்கலை!” என்று பிருந்தா எதிர் கேள்வி கேட்க..

“நான் கேட்டேன்! விடமாட்டாங்க சொல்லி கூட்டிட்டு வந்துட்டார்!” என்று சொன்ன போதும் பிருந்தாவின் முகம் சுணக்கம் காட்டியது.

“ஆமா! விட மாட்டாங்க!” என்றாள் அவளும் கூடவே.

“மித்ராவை அங்க தான் சேர்க்கப் போறோம் பிருந்தா. நீ தான் அவளைப் பார்த்துக்கணும்” என்று சொல்ல..

“எங்க ஸ்கூல் வந்தா நீ இப்படி எல்லாம் குறும்பு செய்யக் கூடாது” என்று பெரிய மனுஷியாக பிருந்தா மித்ராவிடம் சொல்ல..

அதற்கு என்ன புரிந்ததோ, அக்கா சொல்லவும் தலையை தலையை ஆட்டியது. “எங்க ஸ்கூல் அப்படி, இப்படி” என்று பிருந்தா சற்று பெருமை பேச… அதை பார்த்த தாமரைக்கு புன்னகை மலர்ந்தது.

அஸ்வதி, மித்ரா, பிருந்தா என்று மூவரும் சற்று நேரம் விளையாட அங்கே ஓரே சத்தம்.. அதுவும் அஸ்வதி வீல் வீல் என்று கத்துவாள். சற்று நேரம் பொறுமையாக இருந்த மரகதம்.. “சத்தம் போடாம விளையாடுங்க” என்று ஒரு அதட்டல் போட.. அதன் பிறகு குழந்தைகளின் சத்தம் இன்னும் கூடியது.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சாமான்களை வேறு வீட்டு ஹால் முழுவதும் பரப்பினர்.. பேப்பர்களை கிழித்து குப்பையாக்கினர்..

சொல்லிச் சொல்லி பார்த்தவர் முடியாமல், தமாரையிடம் அதட்டல் போட்டார், “அவங்களைச் சத்தம் போடாம விளையாட சொல்லு! நான் டீவீ பார்க்கணும்!” என்று..

“ஷ்! மெதுவா பேசுங்க!” என்று தாமரையின் அதட்டல் சற்று வேலை செய்ய அமைதியாக விளையாடினர்.

ஏழு மணி ஆனதும் “சாப்பிடலாம் வாங்க” என்று அவர்களை அந்த இடத்தை விட்டு அகற்றி.. அவர்களுக்கு உணவு கொடுக்க ஆரம்பிக்க..

அப்போதுதான் சேரனும் அழகரும் வீடு வந்தார்கள்.. மரகத்திடம் விஷயம் சொல்ல “என்ன பணம் வசூல் ஆகிடுச்சா?” என்று வாயை பிளந்தார் .

“இந்தம்மா எதுக்கு இப்படி வாயப் பிளக்குது! நமக்கு தான் அவரைப் பத்தி எதுவும் தெரியாது! வாயைப் பிளக்கிறோம்! இவங்களுக்கு அவங்க பையனைப் பத்தி தெரியாதா?” என்று மனதிற்க்குள்ளேயே தலையில் அடித்துக் கொண்டாள் தாமரை.

அவளுக்கு என்னத் தெரியும்? ஆதவனை யாராலும் கணிக்க முடியாது என்று. செய்வான் என்று நினைத்தால் செய்ய மாட்டான். செய்ய மாட்டான் என்று நினைத்தால் செய்வான்.. எல்லாம் அவன் எண்ணம் தான். சுகன்யா நிறைய வகையில் அவனைக் கட்டுப் படுத்தி இருந்தாள்.. இப்போது அவனுக்கு எந்த தடையும் இல்லையே அவன் தானே ராஜா.. தாமரையிடம் இன்னும் அவன் மனைவி என்ற உரிமையோடு பேச ஆரம்பிக்கவில்லையே.  சுகன்யாவிற்கு கட்டுப்பட்டான் தாமரைக்கு கட்டுப்படுவானா என்பதும் கேள்வியே.  

எப்போதுமே தாமரைக்கு ஆதவனை பற்றிய எண்ணம் தான்.. இப்போது அவனின் பல முகங்களை வேறு காலையில் இருந்து கண்டிருக்கிறாள். இப்போது சொல்லவா வேண்டும். அவனைப் பற்றிய நினைப்பே அதிகமாக இருந்தது.

முதன் முதலில் தாமரைக்கு அவனிடம் பிடித்தது அவனின் பெயர்.. ஆதவன்.. தன்னுடைய தாமரை என்னும் பெயருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது தான் அவன் பால் சற்று கவனத்தை திருப்பியது

இதில் அவன் “நீ எனக்கு வேண்டாம். உன் வாழ்க்கை வீணாகிவிடும்” என்று சொல்ல அது இன்னம் பிடித்தது.   தன்னைப் பற்றி நினைக்காமல் முன் பின் தெரியாத போதும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை இரண்டாம் திருமணம் செய்து வீணாக்குகிறோம் என்ற அவனின் நினைப்பு பிடித்தது.

அதனாலேயே திருமணம் செய்து கொண்டாள். ஆனால் இத்தனை நாட்களாக ஆதவன் அவசியமான வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் பேசியதில்லை. உண்மையான காரணம் ஆதவன் தன் தொழில் பிரச்சனைகளில் உளன்று கொண்டிருந்தது, சுகன்யாவின் இழப்பு, இவ்வளவு வயது வித்தியாசத்தோடு ஒரு பெண்ணை திருமணம் செய்தது எல்லாம் தான்.

இவ்வளவு நாட்களாக ஆதவன் பேசாத போது கூட தன்னிடம் பேச மாட்டானா என்று எதிர்பார்த்து இருந்த தாமரை.. இப்போது காலையில் இருந்து அவனுடன் இருந்து அவன் எல்லோரிடமும் பேசும் விதத்தைப் பார்த்தவள்.. “எல்லோர் கிட்டயும் நல்லாத் தான் பேசறாங்க! நம்ம கிட்ட ஏன் பேசறதில்லை? ஏன் பார்க்கறது கூட இல்லை? நம்மை பிடிக்கலையோ?” என்று நினைக்க ஆரம்பித்தாள்.

எல்லா வேலைகளையும் முடித்து பிள்ளைகளைத் தூங்க வைத்து.. அங்கே ரூமில் இருந்த இடுப்பு வரை தெரியும் பெரிய கண்ணாடியின் முன் நின்றவள்… “தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறோமா இல்லை சகிக்க மாட்டாமல் இருக்கிறோமா” என்று பார்க்கத் துவங்கினாள்.

எப்படிப் பார்த்தாலும் பெரிய அழகியாக தோன்றாத போதும் பார்பதற்கு நன்றாகத் தானே இருந்தாள்.

என்ன நிறம் கொஞ்சம் குறைவு.. சிவந்த நிறம் எல்லாம் இல்லை அதனால் என்னைப் பிடிக்கவில்லையோ என்று பலவாறாக மனதில் எண்ணங்கள் ஓடியது.

இப்படியே யோசனைகள்! எப்போதும் கேட்கும் பாடல்கள் கூட கேட்கவில்லை.. நேரம் போனதும் தெரியவில்லை.. எப்போதும் வரும் நேரத்தை விட அன்று நேரமாகிவிட்டது ஆதவன் வரும் பொழுது.

பன்னிரெண்டை நெருங்கி இருந்தது. அவனின் வண்டி சத்ததிற்கே செல்பவள், இன்று அவன் ஒரு லாங் ஹாரன் அடித்ததும் தான் நிகழ்காலத்திற்கு வந்து விரைந்து சென்றாள்.

வேகமாக சென்று கதவை திறக்க, பெல் அடிப்போமா என்று பெல்லில் கை வைக்கப் போனவன்.. கதவு திறந்தது. அவன் முகத்தை பார்த்து நின்ற தாமரையைப் பார்த்தான்.

சில நொடிப் பார்த்து, எப்பொழுதும் போல உள்ளே சென்று விட்டாள்.

ஆதவன் கதவை தாளிட்டு பூட்டி உள்ளே சென்று கை கால் கழுவி வந்த போது இன்னம் தட்டம் வைக்கப் படவில்லை. எப்பொழுதும் எல்லாம் ரெடியாக இருக்கும் இன்று இல்லை.

தாமரையின் மனதின் சோர்வு சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்ய விடவில்லை. சமையல் அறையில் தோசை சுடுவது தெரிந்தது. சரி நாமாக தண்ணீரும் தட்டமும் எடுத்து வருவோம் என்று உள்ளே வந்து அவனாக எடுத்துப் போக.. அவனாக வந்து எடுத்து செல்வதை பார்த்தவள் அவசரமாக தோசையை சாம்பாரை கொண்டு போய் வைத்தாள்.

திரும்ப அடுப்பில் இருக்கும் தோசை தீய்ந்து விடும் என்று வேகமாக வர.. அவசரத்தில் சமையலறை நிலவு காலில் காலில் இடித்துக் கொள்ள..  பெரு விரல் நகம் சற்று பெயர்ந்து ரத்தம் வர ஆரம்பித்தது.. அப்படி ஒரு வலி கூட… ஆனால் இடித்த இடத்தையே இவள் பார்க்கவில்லை.. இடித்துக் கொண்டு அவள் பாட்டிற்கு உள்ளே சென்று தோசையை திருப்பி போட்டு அவனுக்கு எடுத்து வந்து போட்டாள்.

இப்படியாக அவனுக்கு தோசைகளை சுட்டு முடித்து… சமையல் அறையில் நின்று பிறகு தான் கால் தெறித்து விடுவது போல வலிப்பது தெரிந்து காலைப் பார்த்தாள்.. நகம் பெயர்ந்து ரத்தம் வந்திருப்பது தெரிந்தது.

“அச்சோ” என்று அப்படியே  அமர்ந்து காலை ஆராய்ந்தாள். அவள் ரத்தம் வந்தது கவனிக்காமல் நடந்ததால் ஆங்காங்கே ரத்தம் சிறு சிறு துளியாய் சொட்டி இருந்தது.

என்றும் இல்லாத திருநாளாக ஆதவன் உண்டு அன்று தட்டம் அவனே எடுத்து வர சொட்டு சொட்டாக ரத்தம்.. சமையல் அறையில் கால் பிடித்து தாமரையும் அமர்ந்து இருக்க..

“என்ன ஆச்சு?” என்று விரைந்து அருகில் வந்தான்..

“இடிச்சிக்கிட்டேன்” என்று நிலவு காலைக் காட்ட

“பார்த்து வரக் கூடாது” என்று ஒரு அதட்டல் போட்டான். அதில் வலியில் சுருங்கியதை விட முகம் இன்னும் அதிகமாக சுருங்கியது.

தட்டம் வைத்து “எழுந்திரு” என்று கை பிடிக்க கை நீட்டினான்.

“நான் எழுந்துக்குவேன்” என்று அவளாக எழ முயல..

“பிடின்னு சொன்னேன்” என்று மீண்டும் ஒரு அதட்டல் போட.. வேறு வழியில்லாமல் கைப் பிடித்து எழுந்தாள்.

“போ! போய் பைப் திறந்து விட்டு கால் கழுவு… ஈரத்துணி சுத்தலாம்! அப்போ தான் ரத்தம் நிக்கும்” என்றான்.

மறு பேச்சு பேசாமல் அவன் சொன்னது போல கால் கழுவினாள்… பின்பு அவன் ஏதோ ஈரத் துணி கொடுக்க காலில் சுற்றினாள்.

“வேலையிருந்தா காலையில பார்த்துக்கோ! இப்போ போய்த் தூங்கு” என்று சொல்ல… அதைக் காதில் வாங்கினாலும் அவள் பாட்டிற்கு சொட்டியிருந்த இரத்தத்தை துடைத்தாள். பின்பு அவளுக்குச் சாப்பிட சாதத்தை எடுத்து போட்டு அமர்ந்தாள்.

எப்போதும் உண்டவுடன் உறங்கப் போய் விடுபவன்.. இன்று அவளின் காலின் காயத்தைக் கொண்டு நின்று அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தான்.  

“ஏன் சாப்பாடு சாப்பிடற! மாவு தீர்ந்துடுச்சா!” என்று ஆதவன் கேட்க..

மாலையில் இருந்து ஆதவனுக்கு தன்னைப் பிடிக்கவில்லையோ என்ற மனதின் சோர்வு, காலின் வலி, ஆறு மாதமாக இதைத்தானே சாப்பிடுகிறேன், இன்று கேட்டால் என்ற நினைப்பு, தானாக தாமரையின் கண்களில் நீர் வரவைத்தது.  

Advertisement