அத்தியாயம் ஐந்து :
மித்ராவை ஆதவன் பைக்கில் முன் அமர்த்திக் கொள்ள… குழந்தைக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தாமரை அஸ்வதியை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள்.
கணவனுடன் முதல் பைக் பயணம்.. திருமணமாகி வந்த போது வீட்டில் இருக்கும் அம்பாசிடர் காரில் தான் அழைத்து வந்தார்கள். இரண்டொரு முறை அம்மா வீட்டிற்கு சென்ற போதும் அம்பாசிடர் பயணம் தான். அஸ்வதியை ஒரு முறை, மித்ராவை ஒரு முறை என்று ஹாஸ்பிடல் அழைத்து சென்ற போதும் அம்பாசிடர் பயணம் தான்.
இப்போதும் அம்பாசிடரை நினைத்து தாமரை வர, ஆதவன் புல்லட்டை எடுத்து இருந்தான். தாமரையின் முகமும் மகிழ்ச்சியில் விகசித்தது.
குழந்தைகள் இருப்பதால் மிகவும் மிதமான வேகத்தில் ஆதவன் பைக்கை செலுத்த… தாமரை அந்தப் பயணத்தை அனுபவித்தபடி வந்தாள். புல்லட் மதுரை மாநகரின் போக்குவரத்தில் சீராக சென்றது. குழந்தைகளை விட தாமரை வேடிக்கை பார்த்தது தான் அதிகம்.
ஸ்கூல் முன்பு பைக்கை நிறுத்த… செக்யுரிட்டி “இப்பல்லாம் யாரையும் உள்ள விட முடியாது” என்றான்.
“கரஸ்பாண்டன்ட் மேடம் இருக்காங்களா” என்று கேட்டு, “ஆதவன் செங்கல் சப்ளை பண்றவர்ன்னு சொல்லுங்க. வர சொன்னா உள்ள போறோம் இல்லை இப்படியே போயிடறோம்” என்றான்.
அவன் கேட்டில் இருந்த போன் மூலம் கேட்டு உள்ளே அனுப்பினான்.
அங்கே சென்று வெயிடிங் ரூமில் கிட்ட தட்ட அரைமணிநேரம் காத்திருந்த பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அஸ்வதி உறங்கியிருக்க.. மித்ரா எல்லாம் பார்வையிட்டபடி அமைதியாக தான் வந்தாள். தாமரையும் ஒரு மாதிரி பதட்டத்தில் இருந்ததால் பேசவில்லை. அவளுக்கு என்ன கேள்வி கேட்பார்கள் என்ற பதட்டம் மட்டுமே ஸ்கூலுக்குள் நுழைந்த பிறகு.
நால்வரும் உள்ளே நுழைந்தனர்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தவர்… “வாங்க ஆதவன்! எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் மேடம்” என்றான்.
“உட்காருங்க” என்றவர், “என்ன விஷயம்?” என்று நேரடியாக பேச்சிற்கு வர..
“மேடம்! இது என் பொண்ணு மித்ரா! இவளுக்கு அட்மிஷன் வேணும்.. முன்னாடியே வராததுக்கு மன்னிக்கணும்” என்றான்.
“என்ன ஆதவன்? நம்ம ஸ்கூல் பத்தி உங்களுக்குத் தெரியாததா.. இப்போ எப்படி அட்மிஷன் கொடுக்க முடியும்.. கண்டிப்பா முடியாது!” என்றவர், “இவங்க யாரு?” என்றார் தாமரையை பார்த்து,
அவருக்கு சுகன்யாவைத் தெரியும்.. ஆதவன் தான் அந்தப் பள்ளியின் புது கட்டிடத்திற்கு செங்கல் சப்ளை செய்தான் மிகவும் குறைந்த விலையில்.
“என் மனைவி மேடம்” என்றவன், “சுகன்யா இப்போ இல்லை” என்றான்.
“என்ன?” என்றார் அதிர்ச்சியாக.. சுகன்யா ஒரு வகையில் நாகரீக மங்கை, பட்டப் படிப்பு படித்தவளும் கூட.. தாமரையிடம் அவரால் நடை உடை பாவனையில் நாகரீகத்தையும் காண முடியவில்லை… படித்திருப்பது போலவும் தெரியவில்லை.
“இப்போ சீட் முடியாது ஆதவன்! அதுவுமில்லாம பேரன்ட்ஸ் கண்டிப்பா படிச்சிருக்கணும், உங்களுக்குத் தெரியாததில்லை” என்றார்.
ஆதவன் இதை எதிர்பார்த்திருந்தான், ஆனாலும் ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று தான் அழைத்து வந்தான்.
ஆதவன் அமைதியாக இருக்க.. தாமரை “மேடம்! படிக்கப் போறது மித்ரா! அப்பா அம்மா எதுக்கு படிச்சிருக்கணும், அதுமில்லாம ஸ்கூல்ல தானே சொல்லிக் குடுக்கப் போறாங்க” என்றாள் அந்த கரஸ்பாண்டன்ட்டைப் பார்த்து..
அவர் இதை எதிர்பார்க்கவில்லை.. அவரிடம் இப்படி யாரும் கேட்டதும் இல்லை. தாமரை சண்டை இடுவது போலவோ இல்லை கேள்வியாகவோ கேட்கவில்லை.
மிகவும் யதார்த்தமாக, அதே சமயம் மரியாதை சற்றும் குறையாமல் இருந்தது பேச்சு.
ஆதவன் “ஷ், பேசாம இரு!” என்று அதட்டினான்.
தாமரை அமைதியாக, “பேசட்டும் விடுங்க ஆதவன்!” என்றார் அந்தத் தாளாளர்.
“மித்ரா அந்த பொம்மை பாரு” என்று தாமரை அங்கே இருந்த ஒரு பழங்காலப் பொருளை பார்க்க அனுப்பினாள்.
மித்ரா ஆர்வமாகப் போக.. “நாங்க தான் மேடம் அவளோட அப்பா அம்மா, அவளுக்கு அப்படித்தான் சொல்றோம். ஆனா அவ என் அண்ணா பொண்ணு, அண்ணா நல்லா படிப்பாங்க! அந்த புத்திசாலித்தனம் அவ கிட்டயும் இருக்கும்.. அண்ணா ராணுவத்துல இருந்தாங்க.. ஒரு சண்டைல தீவிரவாத தாகுதல்ல இறந்துட்டாங்க!”
“அவங்க அம்மா”
“அவங்களும் இல்லை! மித்ரா பிறக்கும் போதே அண்ணி இறந்துட்டாங்க” என்றாள்.
ராணுவத்தில் இருந்து நாட்டைக் காக்கும் பணியில் இறந்தவனின் மகளுக்கு சீட் கொடுக்காமல் இருப்பது இந்திய நாட்டு பிரஜை என்ற முறையில் மட்டுமல்லாமல் தார்மீக ரீதியாக மிகவும் தவறு என்று நினைத்த தாளாளர்,
“நான் தான் கரஸ்பாண்டன்ட் இருந்தாலும் பிரின்சிபல் தான் சீட் கொடுக்கறது எல்லாம், அவங்க கிட்ட கலந்து ஆலோசிச்சிட்டு சொல்றேன்” என்றார்.
“சரி” என்பது போல தலையசைத்த ஆதவன், “திரும்ப எப்போ மேடம் வரட்டும்” என்றான்.
“அடுத்த வாரம் திங்கக் கிழமை வாங்க! மோஸ்ட்லி ஃபீஸ் கட்டுற மாதிரி வந்துடங்க!” என்றார்.
அதிலேயே அவர்களின் மறைமுக சம்மதம் தெரிய “நன்றி மேடம்” என்றாள் தாமரை.
அவர்களை வெளியே அனுப்பி விட்டு ஆதவன், அந்தத் தாளாளரிடம் “சாரி மேடம்! அவளுக்கு இன்னும் ஆளுங்க பழகலை! யார் கிட்ட எப்படி பேசணும் தெரியலை! நீங்க எதுவும் தப்பபா எடுத்துக்காதீங்க” என்று மன்னிப்பு கேட்டான்.
“இல்லை! அவங்க பேசினதால மட்டும் தான் நான் தப்பா எடுக்கலை! அதுதான் உண்மை! ஏன்னா அட்மிஷன் டைமல் எங்களுக்கு நிறைய டென்ஷன்ஸ். நான் டோனஷன் வாங்கறதில்லை, ரெகமண்டேஷன் எடுக்கறதில்லை.. சீட் ரெஸ்ட்டிரிக்ட் பண்ண ரூல்ஸ் போட வேண்டியிருக்கு, நாங்க மட்டும் என்ன பண்ண! எல்லாருக்கும் அவங்க அவங்க கஷ்டங்கள் வெளில இருக்குறவங்களுக்குப் புரியாது..” என
மீண்டும் அவரிடம் ஒரு மன்னிப்பை கேட்டு வந்தான்.. என்ன செய்வது? மகள் படிக்கிறாள்! இப்பொழுது இன்னொருவளும் படிக்கப் போகிறாள்.. சிறு மனக் கசப்பும் வேண்டாம் என்று தோன்ற பேசி வந்தான்.
ரூமை விட்டு வெளியே வந்ததும், தாமரைக்குத் திட்டு வேறு விழுந்தது. “யார் கிட்டயும் இப்படி யோசிக்காம அதிகப்ரசிங்கித்தனமா பேசக் கூடாது, பொண்ணு நல்லா படிப்பான்னு சொல்லு, அவங்கப்பா பத்தி சொல்லு, ஆனா பொண்ணு தானே படிக்கப் போறா அப்பா அம்மா எதுக்குப் படிக்கணும், இப்படி எல்லாம் பேசக் கூடாது” என கடிக்க,
“நான் உண்மையைத் தானே சொன்னேன்” என்றாள் தயங்கித் தயங்கி,
“உண்மை தான்! ஆனா எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் உண்மை பேச முடியாது! ஸ்கூல் உள்ளக் கூட யாரையும் இந்த நேரத்துக்கு விட மாட்டங்க! யாரும் அவங்களை இப்படி ஈசியா பார்க்கவே முடியாது”.
“ஏதோ நம்ம மேல நல்ல அபிப்ராயம் இருக்கவும் தான் விடறாங்க! நீ அவங்களைக் கேள்வி கேட்பியா! ஊர்ல ஆயிரம் ஸ்கூல் இருக்கு! கவர்மென்ட் இலவசமா கல்வி கொடுக்குது! அதையெல்லாம் விட்டு நாமளா இங்க வந்து, அப்புறம் கேள்வி வேறக் கேட்போமா! நம்மளை அவங்களா கூப்பிட்டாங்க! இனிமே இப்படிப் பேசக் கூடாது! இப்போ நான் மன்னிப்பு வேற கேட்டுட்டு வர்றேன்” என்று மீண்டும் சுள்ளென்று சொல்ல,
“சரி” என்று ஆதவனிடம் தலையாட்டி விட்டாலும், “நான் ஒன்னும் தப்பா பேசலை” என்பது தான் தாமரையின் எண்ணம். ஆனாலும் ஆதவன் மன்னிப்பு கேட்டது மனதை உதைக்க அமைதியானாள்.
அவர்கள் பள்ளியை விட்டு வெளியே வந்த நிமிடம் ஆதவனின் தொலைபேசி அடித்தது.. எடுத்ததும் “எய்யா ஆதவா! காலையில் நாம் ஃபோன் பண்ணினோம் தானே! அவன் ஆளுங்களை கூட்டிட்டு வந்து தகராறு பண்றான்யா.. எல்லா பணமும் குடுத்துட்டேன்னு எழுதிக் குடுன்றான்”
“அவன் கிட்டப் பேச்சு குடுத்துட்டே இருங்க! நான் வர்றேன்!” என்று பேசிக் கொண்டே வண்டியைக் கிளப்பி இருந்தான். “நல்லாப் பிடிச்சிட்டு உட்காரு” என்று தாமரையிடம் சொன்னவன் வந்ததை விடவும் வேகமாக சென்றான்.
அங்கிருந்து சற்று அருகில் தான் பத்து நிமிடத்தில் இடத்தை அடைந்து விட்டனர்.
அது அவர்களின் செங்கல் சூளை.. ஆம்! அதுதான் அவர்களின் பரம்பரைத் தொழில்… இப்போது ஐந்து வருடமாக ஆதவன் அதில் இல்லை.. அவனுக்கு அதைத் தவிர வேறு தெரியாது! அதனால் தான் வேறு தொழில் செய்யும் போது அவனால் சோபிக்க முடியவில்லை! ஏறுவதும் இறங்குவதும் மீண்டும் ஏறுவதுமாக இருந்தான்.
பரந்து விரிந்த இடம்… ஆங்காங்கே ஆட்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அங்கிருந்த ஒற்றை ஆபிஸ் ரூமிற்கு சென்றான்… தந்தை பதட்டத்தோடு இருந்தார்.சேரனும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து நின்றிருந்தான்.
எதிரில் ஒரு நான்கைந்து பேர் அமர்ந்திருக்க, கூட இரண்டு பேர் நின்றும் இருந்தனர்.
ஆதவன் அங்கே சென்று நிற்க, எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். அவர்களிடம் பேசாமல் “அப்பா வெளில வாங்க! அஸ்வதி தூங்கறா! தாமரையும் மித்ராவும் இருக்காங்க! அவங்க இங்க இருக்கட்டும்!” என்றான்.
“என்ன அவங்க வந்திருக்காங்களா?” என்று சேரனும் அழகரும் எழுந்து வந்தனர், தாமரை அஸ்வதியை தோளில் போட்டிருக்க மித்ரா அவளின் புடவையை பிடித்து நின்றிருந்தது.
“உள்ள வாங்க அண்ணி” என்று சேரன் தான் உடனே அவர்களை அழைத்தான்.. ஆட்கள் இருப்பதால் தாமரை தயங்க..
“அண்ணாசிங்களா, கொஞ்சம் வெளில வாங்க!” என்று ஆதவன் குரல் கொடுக்க “யாருடா, இவன் புதியன்” என்பது போல ஆட்கள் பார்த்தாலும் வெளியே வந்தனர்.
“உள்ள போ!” என்று தாமரையைப் பார்த்து சொன்னவன், வேலையாளை அழைத்து “அவங்களுக்கு ஜூஸ் வாங்கிக் கொடு” என்று பணித்து பின்பு தான் அந்த ஆட்களை பார்த்து திரும்பினான்.
“ம்! சொல்லுங்க!” என்றான் அவர்களைப் பார்த்து
“என்னங்க அய்யா! யாரோ போலிஸ் கூப்பிடுவீங்கன்னு நினைச்சா! இவரு யாரு?” என்றான் நக்கலாக.
“யாருப்பா நமக்குப் பணம் கொடுக்கணும்!” என்று அழகரை பார்த்துக் கேட்டான்.
அவர் ஆளைக் காட்டினார். பேசியவன் அவன் இல்லை, பணம் கொடுக்க வேண்டியவனைப் பார்த்து “பேச்சு உனக்கும் எனக்கும் மட்டும் தான்! வேற எவனும் இங்க இருக்கக் கூடாது. எல்லோரையும் இடத்தை காலி பண்ணச் சொல்லு!” என்று சொல்லிக் கொண்டே அவன் வேஷ்ட்டியை மடித்துக் கட்டிய விதத்தைப் பார்த்து எதிரில் இருப்பவர்களுக்குச் சற்று பயம் வந்தது.
அழகர் வேறு “ய்யா! கை வெச்சிடாதைய்யா! பேசித் தீர்த்துக்கலாம்!” என்று சொல்ல..
அங்கே சட்டென்று ஒரு அமைதி.. இப்படி ஒருவனை இங்கே அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
எல்லாவற்றையும் ஜன்னல் வழியாக தாமரை பார்த்துக் கொண்டு இருந்தாள்.. பயத்தோடு அல்ல சுவாரசியமாக. “பெரிய சண்டியரு கணக்கா பில்ட் அப் கொடுக்கறாரு” என்று நினைத்த படியே.
நிஜமாகவே ஆதவன் அப்படித் தான்… எதிரில் இருப்பவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே கை வைத்து விடுவான்..
சுகன்யாவைத் திருமணம் செய்த பிறகு அவனை எந்த வம்பு தும்புக்கும் போக சுகன்யா விட்டதில்லை. சுகன்யா இறந்த பிறகு அந்த அதிர்ச்சியில் அவனாக எதற்கும் சென்றதில்லை. இப்போது தானாக ஒரு விஷயம் வர அவனின் இயல்பு குணம் வெளியே வரத் துவங்கியது.
“ம்! என்ன விஷயம் சொல்லு!” என
அசட்டு துணிச்சலில் ஒருவன் “நாங்க பணத்தைக் குடுத்துட்டோம்! அதை எழுதிக் குடுங்க!” என்றான்.
“வாட்ச்மேன் கேட்டை இழுத்துச் சாத்து!” என்று ஒரு சத்தம் கொடுக்க…
அதற்காகவே காத்திருந்தது போல வாட்ச்மேன் கேட்டை சாத்தினான்.
“இப்போ சொல்லு! யாரு யாருக்கு பணம் கொடுக்கணும்!” என்று பேசியவன் அருகில் சென்றான்..
“நாங்க பணம் குடுத்துட்டோம்! நீங்க எழுதிக் குடுங்க” என்று மீண்டும் அவன் சொல்ல.. அவன் வார்த்தையைக் கூட முடிக்கவில்லை… ஆதவன் விட்ட உதையில் தூரப் போய் விழுந்திருந்தான்.
அந்த ஆக்ரோஷத்தில் வந்தவர்களுக்கு பயம் பிடிக்க துவங்கியது. அங்கு செங்கல் சூளையில் இருந்த ஆட்கள் எல்லோரும் குழுமி விட்டனர். கிட்ட தட்ட இருபது பேர் இருக்க..
பணம் கொடுக்க வேண்டியவன் “கை எல்லாம் வைக்காதீங்க! எதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாம்!” என்றான்.
“அப்புறம் எதுக்குடா இவன்களை கூட்டிட்டு வந்த… சூளையில வெச்சு எரிச்சிருவேன்” என்றான்.
“இருங்க! இருங்க! பேசலாம்!”
“என்ன பேசறது? பேசறதுக்கு ஒன்னுமில்லை.. பணம் வந்தா நீங்க வெளில போகலாம்! இல்லை எவனும் இந்த இடத்தை விட்டுப் போக முடியாது! ஆனதை பார்த்துக்கங்கடா!” என்றான்.
இப்படி ஆகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. மூன்று வருடமாக அழகரிடம் செங்கல் வாங்குகிறான். அவரின் மகன் சேரனை தெரியும். இருவரும் பார்க்க பிரச்சனை வந்தால் ஓடுபவர்கள் போல தோன்ற பணம் அதிகமாக பாக்கி சேர்ந்ததும் கொடுக்க முடியாது என்று இழுத்தடித்தான்.
காலையில் அவர்கள் விடாமல் போன் செய்ததும், “பணம் நான் கொடுக்க மாட்டேன்! ஆனா நீங்க கொடுத்துட்டேன்னு எழுதிக் குடுங்க!” என்று வாங்க வந்தான். ஆதவனைப் போல ஒருவனை எதிர்ப் பார்க்கவில்லை.
“நான் எங்க அசோசியேஷன்ல கம்ப்ளயின்ட் பண்ணுவேன், நீ என்னை மிரட்டுறேன்னு” என்று அப்போதும் விடாமல் சொல்ல…
“அப்படியா நல்லாதா போச்சு! பண்ணுடா!” என்றான் அசராமல்.
“என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்குடா! என்னை யாருன்னு நினைச்ச” என்று சொல்லியபடி அவன் செல் ஃபோனை எடுக்க..
தாமரைக்கு கவலையானது.