Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

மதியம் எல்லோரையும் அனுப்பி.. பின்பு மித்ராவின் ஸ்கூல் சென்று அவளின் மிஸ்ஸைப் பார்த்த போது தாமரையின் வார்த்தைகள் தான் ஞாபகம் வர.. ஆதவன் முகம் முழுவதும் புன்னகை.

எப்போதும் கடு கடுவென்று இருக்கும் அவனின் முகம் இப்படி இருக்கவும் அந்த மிஸ் ஆச்சர்யமாகப் பார்க்க,

“அச்சோ! இவர் சிரிச்சு கிரிச்சு என்னை காட்டிக் குடுத்துடப் போறார், நம்ம புள்ள இங்க தானே படிக்கணும்!” என்று கலவரமாக பார்த்தாள்.

அதற்கு தகுந்தார் போல அந்த மிஸ்ஸிடம் ஆங்கிலத்தில் சகஜமாக பேசிக் கொண்டே தாமரையைப் பார்க்க..

“அங்க பாருங்க! சிரிக்காதீங்க!” என்று கண்களால் தாமரை சொல்ல..

புருஷனும் பொண்டாட்டியும் ரொம்ப க்ளோஸ் போல என்று தான் அந்த க்ஷணத்தில் மிஸ்ஸிற்கு தோன்றியது. பொறாமையாகவும் இருந்தது. தானும் தான் கணவரும் இப்படி பேசுகிறோமா என்று யோசனைகள் ஓட..

“miss did you hear what i say” என்று ஆதவன் அழுத்தி உச்சரித்த பிறகு தான் கவனத்திற்கு வந்தவள் “எஸ் sir” என்று பதில் கொடுத்து… வேறு சிலதைப் பேச..

வெளியே வந்த பொழுது “இப்படிப் பட்டிக் காடு மாதிரி என்னை பார்த்தா, அந்த மிஸ் அப்படித் தான் உன்கிட்டப் பேசுவாங்க” என்று சொல்ல….  

“நான் உங்களைப் பார்க்கலை, நீங்க பேசினதை தான் பார்த்தேன்!” என்றாள் ரோஷமாக தாமரை.

“ஏன்? நான் பார்க்கற மாதிரி இல்லையா?” என்று ஆதவன் கேட்க,

“அடி ஆத்தி! என்ன அச்சு இவருக்கு? ரெண்டு நாளா இப்படி ஆகிட்டாங்க!” என்று பார்த்தாள்.

“என்ன பார்க்கற? நான் பார்க்கற மாதிரி இல்லையான்னு கேட்டேன்!”

“அதுதான் பார்க்கிறேனே! அப்புறம் பார்க்கிற மாதிரி இல்லையான்னு கேட்டா?” என்று சின்ன சிரிப்போடு தாமரை சொல்ல..

ஆதவனின் கண்களுக்கு ஏனோ எப்போதும் இல்லாத அளவிற்கு தாமரை அழகாகத் தெரிந்தாள். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் அவ்வளவு பாராமுகமாக இருந்துவிட்டு எப்படி இப்படி மாறிப் போனேன்! என்ற சுய அலசலில் ஆதவன் இருக்க…

அதே யோசனை தான் தாமரைக்கும்! எப்படி என்னைப் பார்ப்பது கூட இல்லை என்று நான் நினைத்திருக்க எப்படி இப்படி மாறிப் போனார் எனத் தோன்றியது.

மீனாட்சி அம்மனுக்கு மனதார நன்றி உரைத்தவள்.. “கோவிலுக்குப் போயிட்டு போகலாமா” என்றாள் அவனிடம்.

“வேலையிருக்கு, சீக்கிரம் வெளிய வந்திடணும்” என்றான்.

“சரி” என்று சொல்லிக் குழந்தைகள் மூவருடன் கோவில் சென்று குடும்பமாக அம்மன் சன்னதியில் நின்ற போது.. “தொழில் நல்ல படியாக நடக்க வேண்டும், இவளோடான என் வாழ்க்கை சிறக்க வேண்டும், எந்த மன நெருடலும் இல்லாமல் என் வாழ்க்கை இருக்க வேண்டும்” என்று ஆதவன் வேண்ட…

அதே வேண்டுதல் தான் தாமரைக்கும்.. “என் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்” என்று…

வெளியில் வந்ததும்…  “நீ ஆட்டோல போயிடுவ தானே. எனக்குக் கொஞ்சம் அவசர வேலை” என்று அவர்களை ஆட்டோவில் வைத்து வேலையைப் பார்க்க கிளம்பியவன்..  அவர்கள் வீடு சேர்ந்ததும் சேர்ந்து விட்டார்களா என்று அழைத்துத் தெரிந்து கொண்டவன்…

மீண்டும் இரவு பத்து மணிக்கு தான் அழைத்தான்… “வர இன்னும் நேரம் ஆகும், தாமரை நீ சாப்பிடு, நான் இங்கயே சாப்டுட்டுவேன்!” என்று சொன்னவன் வீடு வந்த போது இரவு ஒன்றுக்கும் மேல்..

வந்தவனை ஹாலில் இருக்க வைத்து, அந்த நேரத்திலும் இளம் சூட்டில் பால் கொடுத்து அவன் குடித்த பிறகே உறங்க செல்லுங்கள் என்றாள்.

“ஏதோ எனக்கே வேலை செய்யப் பிறந்த மாதிரி எப்படி இப்படி செய்யற.. எனக்குக் கஷ்டமா இருக்கு! செய்யாத!” என்றான்.

“நீங்க உழைக்கறது உங்களுக்கு மட்டுமா! எங்களுக்கும் தானே! அந்த எங்களுக்குல நானும் இருக்கேன் தானே!”

“ஆனாலும் சமைக்கிற, குழந்தைங்ளைப் பார்த்துக்குற, வேற எதுவும் நீ செய்யறது இல்லை… இது மட்டுமா உன் வாழ்க்கை!”

“இப்போதைக்கு இது போதும்! குழந்தைங்க நல்ல முறையில வளரணும், உலகத்திலேயே மிகவும் சிரமமான விஷயம் குழந்தை வளர்ப்பு தான், அதுவும் மூணு பேரும் என் குழந்தைங்க தான், ஆனாலும் என் வயிற்றுல இருந்து வரல இல்லையா.. அதனால மத்த அம்மாங்க கொடுக்கறதை விட நான் இன்னும் அதிகமா கவனம் செலுத்தணும், இல்லை அவங்களுக்கு என் மேல அந்த பாசம் வராது. அதனால தான் எப்பவும் அவங்க பின்னாடியே சுத்தறேன்” என்று சொல்ல,

ஆதவன் எதிர் பார்க்காத கோணம் இது…  

“சின்ன வயசுல பெரிய படிப்பு படிக்கணும்.. பெரிய வேலைக்குப் போகணும்னு ஆசை. சூப்பரா படிப்பேன்னு சொல்ல முடியலைன்னாலும் சுமாரா படிப்பேன்!  அண்ணா தான் பெரியவன்! அதுக்கு அப்புறம் அக்கா… நான் அவங்களை விட ரொம்ப சின்னவ…  

“அண்ணா நல்லா படிச்சான்… ஆர்மில கமாண்டோ!” 

“நான் பிளஸ் டூ முடிக்கும் முன்ன தான் அண்ணி இறந்தாங்க.. கொஞ்ச நாள்ல அண்ணா..” என்று சொல்லும் போதே கண்களில் நீர்.

“எதுக்கு இப்போ பழசு எல்லாம் நினைச்சிக்கிட்டு?” என்றான் ஆறுதலாக.

“யார்கிட்டயாவது எனக்கு சொல்லணும்! இதுவரைக்கும் யார்கிட்டயும் சொன்னதில்லை…”

“ஏதோ தீவிரவாத தாக்குதல் போல.. இவங்க கமாண்டோ அஞ்சு பேர் இருந்திருக்காங்க.. தீவிரவாதிங்க மாடியில.. அண்ணா எல்லோரையும் கீழ இருக்க வெச்சிட்டு, யாரையும் கூட வரவேண்டாம் சொல்லிட்டு தனியா போயிருக்கான். வர்றேன்னு சொன்னவங்களை பிடிவாதமா மறுத்து போயிருக்கான்”.

“அதனால மத்த கமாண்டோ எல்லோரும் தப்பிச்சிட்டாங்க.. ஆனா தீவிரவாதிங்களை சுட்டுட்டு, அந்தத் துப்பாக்கி சூட்டுல அவனும் செத்துப் போயிட்டான்” என்று சொல்ல சொல்ல அழுகையை அடக்க முடியவில்லை.

தேம்பிக் கொண்டே, “மாடி மேல ஏறுறதுக்குத்துக்கு முன்னாடி யார் ஃபோனையோ வாங்கி வீட்டுக்கு கூப்பிட்டான். நான் தான் எடுத்தேன்”.

“எடுத்தவுடனே நான் வருவனோ இல்லையோ தெரியாது தாமரை, மித்ரா இனிமே உன் பொண்ணு பார்த்துக்கோ, அவளை விட்டுடாத சொல்லி வெச்சிட்டான். எனக்கு ஒன்னுமே ஓடலை… சாயந்தரம் அண்ணன் இறந்துட்டான்னு ஃபோன் வருது…”

“அப்பா அம்மா எல்லோரும் ஓய்ஞ்சு போயிட்டாங்க.. சில பேர் மித்ரா பிறந்த நேரம் தான் இப்படி ஆகிடுச்சுன்னு சொல்ல.. அதுக்கு அப்புறம் என்னால எங்க அப்பா அம்மாக்கிட்ட கூட மித்ராவை விட முடியலை.. யாரும் ஒரு சொல் அவளை சொல்லிடக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன்”

“பிளஸ் டூ முடிச்சப்போ அப்பாவும் அம்மாவும் என்னை படிக்க சொன்னாங்க.. எங்களுக்கு என்ன வயசா ஆகிடுச்சி.. நாங்க வளர்த்துக்கறோம் நீ படி சொன்னாங்க.. என்னால போக முடியலை.. என்னவோ அண்ணா பொறுப்பை என்கிட்டே கொடுத்த மாதிரி தான் எனக்கு எண்ணம். மித்ராவும் என்னை விட்டு யார் கிட்டயும் போக மாட்டா!”

“அம்மாக்கும் அப்பாக்கும் நான் படிக்காதது, அப்புறம் இப்படி ரெண்டாம் தாரமா கல்யாணம் செஞ்சிக்கிட்டது எல்லாம் ரொம்ப வருத்தம்”.

“இன்னைக்கு தான் அம்மா முகத்துல சிரிப்பே பார்த்தேன்! தேங்க்ஸ்!” என்றாள்.

         அண்ணனுக்காக! அவனின் கடைசி வார்த்தைகளுக்காக! மித்ராவிற்காக தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் மாற்றி அமைத்துக் கொண்டாள் என்று புரிந்தது.

       எங்கோ ராணுவ வீரர்கள் தங்களின் உயிரை பணயம் வைப்பதால் தான் தாங்கள் எல்லாம் நிம்மதி இருக்கிறோம் என்பது தானே உண்மை.. இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்! ஆனால் எத்தனை பேர் இதனை நினைக்க நேரம் கூட இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.  

      அதிலும் அவளின் அண்ணன் சாகும் போதும் கூட உடன் இருந்தவர்களைக்  காப்பாற்றி இருக்கிறான்! சாவோம் என்று தெரிந்தே சென்றிருக்கிறான்! வீர வணக்கம் அவனுக்கு! அவன் தங்கை எப்படி இருப்பாள்!     

        என் மக்களையும் நான் இப்படி தான் வளர்க்க வேண்டும் என்று தோன்றியது.

       ஆதவனுக்கு மனதிற்கு அவ்வளவு நிறைவாய் இருந்தது தாமரையின் செயல். எல்லோரிடமும் இந்த குணம் பார்க்க முடியாதே. இவள் ஆகாயத் தாமரை! அபூர்வத் தாமரை!  

“மொத்ததுல உங்க வீட்ல அவ்வளவு பிடிவாதமா இருந்தவ, இங்க எங்களுக்காக ரொம்ப அட்ஜஸ்ட் பண்ற. நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும், நீ எங்க வாழ்க்கையில வந்ததுக்கு! நீ எனக்கு சொல்றியா!” என்றான்.

“சில வரன் அம்மா அப்பாக்கு பிடிச்ச மாதிரி வந்தது. மித்ராவைப் பார்த்துக்குவோம்னே வந்தாங்க! கூடவே மித்ரா கிட்ட எவ்வளவு டெபாசிட் இருக்கு. அவளுக்கு அவளோட அப்பா பென்ஷன் எவ்வளவு  வருது, அப்படியும் கேட்டாங்க, எனக்குப் பிடிக்கலை!”

“என்னை மட்டும் எப்படிப் பிடிச்சது…?”

“உங்க பேர் தான் முதல்ல.. தாமரைன்னு என்னோட பேர்க்கு மேட்ச் ஆச்சு.. அப்புறம் என்னைப் பார்க்க வந்தீங்க.. ரொம்ப வயசு வித்தியாசம் பார்த்துட்டு சின்ன பொண்ணு உன்னோட வாழ்க்கை வீணாகிடும் வேணாம் சொன்னிங்க.. என்னவோ அது எனக்கு மித்ராவை பார்த்துக்குவீங்கன்ன்னு நம்பிக்கை கொடுத்துச்சு!”

“கூடவே உங்களுக்கு ரெண்டு சின்னப் பொண்ணுங்க.. உங்க பொண்ணு மாதிரி பார்த்துக்குவீங்கன்னு நம்பிக்கை.. வயசு வித்தியாசம் அதிகமானாலும் பார்க்க வயசுப் பசங்களை விட நல்லா இருந்தீங்க, அதான் ஓகே சொல்லிட்டேன்” என்று அவள் சொல்லும் போது முகத்தில் சிறு நாணம்.

“என்ன? நான் நல்லா இருக்கனா!”

“இல்லையா பின்ன?” என்று ஏதோ வேலையிருப்பவள் போல அந்த இடத்தை விட்டு அகல..

“ராத்திரி ஒன்னரை மணிக்குக் கூட வேலை செய்வியா! உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லாம போச்சு! உட்கார்!” என்று அதட்டினான்.

“காலையில இருந்து சுத்திட்டே இருக்கீங்க, உங்களுக்குத் தூக்கம் வரும்” என்று சொல்ல,

“உனக்கு வருதா?” என்றவனின் பார்வையில் தலை தானாக இல்லை என்று ஆடியது.

“உட்கார்!” என்று அவன் அருகமர்த்த, அவன் மிக அருகில் இருக்கவும் நெளிந்தாள்.

“பைக்ல என்னோட உட்காருர தானே!”

“அது நீங்க முன்னாடி தானே பார்த்து உட்கார்ந்து இருக்கீங்க! என்னய்யா இப்படி கிட்டக்க பார்க்கறீங்க” என்று அவள் சொல்ல

தலையில் செல்லமாக அடித்துக் கொண்டவன், “உங்கண்ணன் புத்திசாலி மித்ராவை உன் பொண்ணாக்கிட்டான் இல்லை நீ எப்போ குழந்தை பெக்கறது, ஆளும் அவளும், நெளிஞ்ச கொன்னுடுவேன்!” என்று இன்னும் நெருக்க,

“ம்க்கும்! என்னை நீங்க ஆறு மாசம் பார்க்க கூட இல்லை!” என்று சொல்லியே விட்டாள். பின்பு அச்சோ சொல்லியிருக்க வேண்டாமோ என்று நாக்கை கடிக்க….

“அதுதான் இதை தொந்தரவு பண்ணாதே, நான் தொந்தரவு பண்றேன்னு சொல்றேன் இல்லை” என்று சொல்லி அவளின் இதழ்களை வருட உடல் முழுவதும் சிலிர்த்தது தாமரைக்கு.

அவள் சொன்னதை தப்பாக எடுத்துக் கொண்டானோ என்று முகம் பார்க்க…

அப்படி எல்லாம் எதுவும் இருந்தது போல தெரியவில்லை. தாமரையின் உடலின் சிலிர்ப்பை கைகளும் உணர.. அவளை அடக்கமாக கைகளுக்குள் வைத்துக் கொண்டவன்.

“நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சுக்குவியா?” என்று சொல்லி அவளின் பதிலுக்கு கூடக் காத்திருக்காமல் சொல்ல ஆரம்பித்தான்.

“சுகன்யா! சுகன்யாவை நான் ரொம்ப இஷ்டப்பட்டுக் கல்யாணம் பண்ணிகிட்டேன்.. எத்தனை கஷ்டங்கள் வந்த போதும் திடீர்ன்னு காய்ச்சல்ன்னு அவ படுக்கையில விழுந்த போதும், கண் திறக்காம மூணு மாசம் முழுசா படுக்கையில இருந்த போதும்… அவ பிழைச்சிடுவான்னு தான் நினைச்சேன்.. அவ இல்லாம போன அன்னைக்கு என்னால அதை நம்பக் கூட முடியலை…” என்று சொல்லும் போதே குரல் கம்மியது.

“ஆனா அதை யோசிச்சிக்கிட்டு இருக்க முடியாதபடி அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செஞ்சு தானே ஆகணும், அவ காரியம் முடிஞ்ச உடனே என் குழந்தைங்க… அஸ்வதியாவது சின்னக் குழந்தை…”

“பிருந்தா பொறந்ததால இருந்து ஒரு நாள் கூட அவங்கம்மாவை விட்டு இருந்தது கூட இல்லை. அம்மா வேணும்னு அழுது ஆர்பாட்டம் பண்ணினாக் கூடப் பரவாயில்லை.. கொஞ்ச நாள் தான் தடுமாறினா! அப்புறம் தேறிக்கிட்டா”,

“அப்புறம் இங்க வந்தோம்! யாராலையும் யாரோடையும் சட்டுன்னு ஒட்ட முடியலை.. நான் பிறந்து வளர்ந்து முப்பது வருஷமா வாழ்ந்த வீடு! ஆனா திரும்ப வந்த போது எனக்கு ரொம்ப அன்னியமா தெரிஞ்சது!”

“இதுல குழந்தைங்களைப் பார்க்க முடியாதுன்னு என் கல்யாணத்துக்கு அவ்வளவு அவசரப்பட்டாங்க என் அம்மா.. எவ்வளவு சொல்லியும் கேட்கலை… யார் சொன்னாலும் எனக்குப் பண்ணிக்கிற ஐடியா இல்லை… ஆனா பிருந்தா சொன்னா அப்பா, பாப்பா நீங்க இல்லாதப்ப ரொம்ப அழறா… என்னால அவளைத் தூக்கிட்டே இருக்க முடியலை…. பாட்டியாலயும் முடியலை! பண்ணிக்கங்கன்னு. ஒரு எட்டு வயசு பொண்ணு சொல்றா.. அம்மா அவக்கிட்ட சொல்லிட்டே இருந்திருப்பாங்க போல!”

“நானே குழந்தைங்களைப் பார்த்துக்க முடியும்! சாப்பாடு மட்டும்னா பிரச்சனையில்லை, ஏதோ ஒரு வேலை, வீட்ல அதிக நேரம் இருக்குற மாதிரி செஞ்சு கூட சமாளிக்கலாம்”.

“ஆனா என் கடன்… ஊர்பட்ட கடன்.. முதல்ல தொழில்ல அப்புறம் சுகன்யா ட்ரீட்மென்ட்க்கு, வேற வழியில்லை!”     

“என்னை மாதிரி இருக்குறவங்களை பார்க்கச் சொன்னேன்.. குழந்தை இருக்குன்னு தான் சொன்னங்க.. அதான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. ஆனா வயசு வித்தியாசம் ரொம்ப இருக்கவும் தான் உன்னைப் பார்க்க வந்தேன்!”

“அப்போ தான் உன் குழந்தை இல்லைன்னு தெரிஞ்சது! வேண்டாம் சொன்னேன் நீயும் கேட்கலை! வீட்லயும் கேட்கலை!”   

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் மனசு முழுக்க குற்ற உணர்ச்சி. சே! நம்ம சுயநலத்துக்கு ஒரு சின்னப் பொண்ணை போய் கல்யாணம் பண்ணிக்கிடேனேன்னு!”

“என்னோட நிலைமைல சுகன்யா இருந்தா கல்யாணம் செஞ்சிருப்பாளான்னு! கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டா..! நான் எதுக்குப் செஞ்சிக்கிட்டேன்னு! தொழில் நஷ்டம்..! எப்படியோ சுத்திட்டு இருந்தேன்!” 

“நீ ஒரு சின்ன முக சுளிப்புக் கூட இல்லாம குழந்தைங்களை, வீட்டை எல்லாம் பார்த்துக்கிட்ட. திடீர்ன்னு தோணிச்சு இப்படி மாடு மாதிரி அந்தப் பொண்ணு உழைக்குது, நீ என்ன பண்ற.. யார் கிட்ட பயந்து ஒளியரன்னு. கொஞ்ச நாளா மனசுக்குள்ள ஓடிச்சு.. அப்புறம் கொஞ்சம் பேச ஆரம்பிச்சேன்.. இதுல எங்கம்மா பண்ணினது இன்னும் உருத்திச்சு.. அப்புறம் அப்படி அப்படியே ஆகி, இப்படி ஆகிடுச்சு!” என்று இன்னும் இறுக்கி அவளைப் பிடித்தான்..

ஆதவன் முற்றிலுமாக இளகியிருக்க.. மனதிலும் ஒரு  சுகம்! உடலிலும் ஒரு  சுகம்!

“மறுபடியும் என்னோட வீட்டை அமைச்சிக் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்!” என்றான்.

அவனின் மனநிலை புரிந்தவளாக தாமரையும் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

“உனக்கு எதுவும் மனக்கஷ்டம் இல்லையே!” என்றான் திடீரென்று.

“இல்லை! இல்லவேயில்லை!.. எனக்கு உங்களோடான இந்த வாழ்க்கை ரொம்ப பிடிச்சிருக்கு!” என்றாள்.

“ஆனா எனக்கு இது பத்தாது! உனக்கு இன்னும் ரொம்ப பிடிக்க வைக்கணும்!” என்று சரசமாக ஆதவன் பார்க்க..

“பிடிக்க வைப்பீங்கலாம்! வாங்க! இப்போ மணி ரெண்டு.. தூங்கலாம்!” என,

“தூங்கியே ஆகணுமா!”

“கண்டிப்பா! அஞ்சு மணிக்கு டான்னு அஸ்வதி எழுந்துக்குவா.. காலம் இன்னும் ரொம்ப தூரம் இருக்கு.. எனக்கு இப்போதைக்கு எந்த வருத்தமும் இல்லை, வாங்க!” என்று அழைத்துச் சென்றாள்.

சொன்னபடி ஐந்து மணிக்கு அஸ்வதி எழுந்து கொள்ள.. தாமரையின் அன்றைய தினத்தின் ஓட்டம் ஆரம்பமானது.

பிருந்தா பள்ளி செல்வதற்கு தான் ஆதவனை எழுப்பினாள். அவனின் ஓட்டமும் அதோடு ஆரம்பமானது..  வாழ்க்கை அதனின் ஏற்ற இறக்கங்களோடு சென்றாலும், வானவில்லாய் அதன் வர்ணங்களை காட்டியது.

ஒரு இனிய மழைக்கால இரவில் சாரலாய்.. அவர்கள் தாம்பத்தியமும் துவங்க… தாமரையின் இரவு நேர காத்திருப்பு, இனிய நினைவுகளோடு சுகமுள்ளதாகவும் ஆகியது.

அன்றும் நேரத்தைப் பார்ப்பதும், இன்னும் அவன் வரவில்லையே என்று பார்ப்பதுமாக எஃப் எம் மில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க.. ஆதவனின் புல்லட்டின் ஹாரன் ஒலிக்க.. வேகமாக சென்று கதவை திறந்தாள்.

எல்லாம் பூட்டிச் சரி பார்த்து.. இருவரும் உள்ளே வர… பார்வை குழந்தைகளின் மீது படற.. மூவரும் நல்ல உறக்கத்தில். அஸ்வதி மித்ரா மேல் கால் போட்டிருக்க… மித்ரா பிருந்தாவை அணைத்துப் பிடித்து இருந்தாள்.  

எஃப் எம் மில் ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடல் ஆரம்பித்தது.    

ஒரு வானவில் போலே                                                        என் வாழ்விலே வந்தாய்                                                      உன் பார்வையால் எனை வென்றாய்                              என் உயிரிலே நீ கலந்தாய்!!!    

என்று ஓட..

இரவின் நிஷப்தத்தில் அந்த இசை இனிமையைக் கொடுக்க, அந்தப் பாடலின் வரிகளைக் கொண்டு ஆதவன் தாமரையைப் பார்க்க..

விடியலில் ஆதவனின் ஒளிபட்டு மலரும் தாமரை பூவைப் போல.. ஆண்மகனான ஆதவனின் பார்வையில் முகம் மலர்ந்ததால் பெண்ணான தாமரை.             

 

Advertisement