Advertisement

அத்தியாயம் பன்னிரெண்டு:

பிருந்தாவிற்கு விடுமுறை விட்டு, விடுமுறை முடிந்து மித்ராவும் அவளும் மீண்டும் பள்ளி செல்ல ஆரம்பித்து இருந்தனர். அன்று தான் செங்கல் சூளை முதல் வேலை ஆரம்பமாகும் நாள். சுகன்யாவின் பெயரை தான் அதற்கு வைத்திருந்தான். முன் தினம் தான் தாமரையிடம் பேசினான்.

“நான் சுகன்யா பெயரை வைக்கப் போறேன்” என்று சொல்லி விட்டவன், பின்பு அவசரமாக “வைக்கட்டுமா” என்று சம்மதம் கேட்டான். குழந்தைகள் எல்லாம் உறங்கியிருக்க.. தாமரை வருவதற்காக காத்திருந்து  கேட்டான்.

அவனுக்கே மனதிற்குள் ஒரு உறுத்தல். சுகன்யா அவனுக்கு மிகவும் இன்றியமையாதவள், ஆனால் இல்லாதவளை நினைத்து நினைத்து இருப்பவளுக்கு நான் நியாயம் செய்ய வில்லையோ என்று அவனுக்காய் மனதிற்குள் ஒரு உறுத்தல்.  

தாமரை ஏதாவது சுணக்கம் காட்டினால் கூட அவனுக்கு அந்த உறுத்தல் இருக்காதோ என்னவோ.. ஆனால் எந்த சுணக்கமும் இல்லாமல் எல்லாவற்றையும் அவள் முக மலர்ச்சியோடு செய்ய.. ஆதவனுக்கு தான் அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ குற்றம் செய்வது போல ஒரு தோற்றம்.     

இப்போதெல்லாம் தன்னுடைய தோற்றத்தை வேறு கண்ணாடி முன் நின்று ஆராய்ந்தான். எனக்கும் அவளுக்கும் பதிமூன்று வயது வித்தியாசம். நான் வயதான மாதிரி ஆகி விட்டேனா. அவளுக்குப் பொருத்தமில்லையோ என்பது போல .. அவள் மிகவும் இளசாக இருக்க நான் முதிர்ந்து விட்டேனோ என்று கூட யோசனைகள் ஓடியது.   

ஆம்! தாமரைக்கு இளமை தானே! ஓயாத உழைப்பு உடலை அதன் நெளிவு சுளிவுகளோடு, வயிறு நிறைய உண்டாலும் எந்த டையட்டும் இல்லாமலேயே கட்டுக் கோப்பாக வைத்திருந்தது.. நிறம் மாநிறம் என்றாலும் வெயில் படாத அவளின் உடல் அதன் மெருகோடு பளபளப்பாக இருக்கும். மிகுந்த முக லட்சணம் கூட அவளுக்கு.  சில சமயம் இப்போது தாமரையை கவனித்துப் பார்ப்பதால் இந்த எண்ணங்கள்.  

“நீ முதிரவெல்லாம் இல்லை” என்று அவனுக்கு யார் சொல்வது. ஆதவன் கட்டுக்கோப்பான அடுத்தவரை வசீகரிக்கும் தோற்றத்துடன் இருக்கும் இளைஞன். முப்பத்தியைந்து வயதை நெருங்கும் பல ஆண்களுக்கு சிறு தொந்தியாவது வந்துவிடும். ஆனால் அவனுக்கு அப்படி எதுவும் கிடையாது. அவனின் சிரிப்பற்ற இறுகிய முகம் தான் அவனின் இளமையை சற்று குறைத்துக் காட்டும்.     

அவன் யோசனைகள் ஆரம்பிக்கும் பொழுதே.. 

“அவங்க பேரை வைங்க” என்றாள்.. அவனின் முக பாவனைகளை பார்த்து “நான் ஏதாவது நினைப்பனோன்னு நீங்க நினைக்க வேண்டாம், வைங்க!” என்றாள் இன்முகத்தோடு..

“தேங்க்யு” என்றான் மனதின் பாரம் குறைந்தவனாக… 

“மித்ரா ஸ்கூல்ல நாளைக்கு வரச் சொல்லி ஸ்லிப் குடுத்து விட்டிருக்காங்க.. நாளைக்குப் போகணும்.. இந்த வேலைல போக முடியுமா”

“எத்தனை மணிக்கு?”

“மதியம்”

“காலையில இது முடிஞ்டும் போகலாம், அப்படி இல்லைன்னா கூட நீ போயிட்டு வா! ஆட்டோ சொல்றேன்” என்றான்.

“வேணாம்! நான் தனியா போகலை!”

“ஏன்?”

“அந்த மிஸ் வேணும்னே இங்கிலீஷ் சட்டுன்னு புரியாத பேரன்ட்ஸ் கிட்ட வேகமா பேசுவாங்க! அவங்க என்ன சொல்றாங்கன்னே எனக்குப் புரியாது! நீங்களே வாங்க.. நீங்க வந்தா தமிழ்ல பேசுவாங்க” என்றாள்  கடுப்பாக.

       “எதுக்கு இவ்வளவு கோபம்..?”

       “பின்ன! உங்களுக்கு நல்லா பேச வரும்னு தெரிஞ்சவுடனே தமிழ்ல பேசறாங்க! ஆனா நான் போனா ஓரே இங்க்லீஷ்!”

       “அது அப்படி தான்! தெரியாதவங்க கிட்ட தான் எல்லோரும் பீட்டர் விடுவாங்க.. நீ நான் வராத போது பிருந்தாவைக் கூட வெச்சிக்கோ.. அவ பேசினாலே அந்த மிஸ் வாயைத் திறக்க மாட்டாங்க.. அவளுக்கு யார் கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியும்.. எல்லோரையும் நல்லா ஹேண்டில் பண்ணுவா” என்றான் பெருமையாக.

       ஆம்! இப்போதெல்லாம் தயக்கமில்லாத சகஜமான பேச்சு இருவரிடையும்.       

அடுத்த நாள் பூஜைக்கு நெருங்கிய உறவினர்கள் பலரையும் ஆழைத்து இருந்தார் அழகர். “நம்ம மட்டும் போதும்பா” என்று அவன் சொன்னதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

அவன் வளர்த்த தொழில்.. ஆனால் தனியாகப் போன பிறகு மிகுந்த சிரமப்பட்ட போதும்.. அழகரிடம் ஒரு பைசா கேட்டதில்லை. சுகன்யா ஹாஸ்பிடலில் கோமாவில் இருந்த போது அவர் கொடுக்க முன் வந்த போதும் வாங்கவேயில்லை. அந்த உறுத்தல் அவருக்கு எப்போதுமே உண்டு.

பெற்றவர்கள் சம்பாதிப்பது கல்லறையில் தங்களோடு புதைப்பதற்கா! இல்லையே! சந்ததிகளுக்குத்  தானே!!       

 குழந்தைகளை அன்று பள்ளிக்கு அனுப்பவில்லை. காலையில் நான்கு மணிக்கே எழுந்து குழந்தைகளை எழுப்பிக் குளிக்க வைத்து அவர்களுக்கு பட்டுடுத்தி தயார் செய்திருந்தாள்.

சுகன்யாவின் நகைகள் எல்லாம் பேங்கில் அடமானத்தில் இருக்க… குழந்தைகளது மட்டும் வீட்டில் இருந்தது.. எடுத்துத் தாமரையிடம் கொடுத்து “போட்டு விடு!” என்றான்.  முன்பே அவளிடம் கொடுத்திருக்க வேண்டும் ஞாபகத்திலேயே இல்லை. மித்ராவிற்கு என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை. அதனால் கொடுத்து “மூணு பேருக்கும் போட்டு விடு” என்று பொதுவாக சொல்லி விட்டான். மித்ரவிடம் இருக்கிறதா இல்லையா என்று கேட்கவில்லை.

ஆனால் தாமரை அவளாக “மித்ராக்கு எதுவும் இல்லை… எங்க அப்பா எதுவும் பண்ணினதில்லை!” என்றாள்.

“பரவாயில்லை! நம்ம பண்ணலாம்! அப்புறம் வாங்கிக்கலாம்! இப்போ மூணு பேருக்கும் போட்டு விடு” என்றவன்… “நீயும் பட்டு கட்டிக்கோ.. நகை போட்டுக்கோ!” என்றான்.  

எபோதும் கழுத்தில் தாலிச் சங்கிலி, கையில் ஒற்றை வளவிகளில் மட்டுமே தாமரையைப் பார்த்திருக்கிறான். அவளிடம் என்ன இருக்கிறது என்று கூடத் தெரியவில்லை.         

வீட்டில் இருப்பது போல வெளியே கிளம்பும் போது வரக் கூடாது என்று பலமுறை சொல்லியிருந்ததால்.. சற்று கவனித்து அழகுபடுத்தி, பட்டுடுத்தி கிளம்பியிருந்தாள். தோற்றம் ஆதவனுக்கு மிகுந்த திருப்தி! ஆனால் அந்தப் புடவை கட்டு..

“என்ன புடவை கட்டியிருக்க? குழலி அன்னைக்கு சொல்லிக் குடுக்கலையா..”

“அண்ணி கட்டி விட்டாங்க! ஆனா சொலிக் குடுக்கலை” என.

“நல்ல விளக்கம்!” என்று சொல்லி, என்ன புத்திசாலித்தனம் என்பது போல ஒரு பாவனையைக் காட்டியவன், “கண் பார்த்தா! கை செய்யணும்!” என்று ஒரு அதட்டல் போட்டு .. பிள்ளைகள் எங்கே என்று பார்த்தான்.. ஹாலில் மரகத்துடன் இருந்தனர். அவர்களுக்கு சின்ன சின்ன திருத்தங்கள் செய்து கொண்டிருந்தார் மரகதம்.

ரூமின் கதவை தாளிட்டான்.. “நீ கட்டு என்ன தப்பு பண்றேன்னு சொல்றேன்” என்று சொல்ல…

“ஆங்!” என்று வாயப் பிளந்து நின்றாள்.

“சீக்கிரம்! நேரம் ஆகுது!” என… மின்விசிறி தலைக்கு மேல் அவ்வளவு வேகமாக சுழன்று கொண்டிருந்த போதும் தாமரைக்கு வேர்க்க ஆரம்பித்தது.

“எதுக்கு இவ்வளவு டென்ஷன்! உன்னையே தான் கட்ட சொன்னேன்! நான் கட்டி விடறேன்னா சொன்னேன்!” என்று அருகில் நெருங்க..

இன்னும் விழி விரித்து அவனைப் பார்த்து நின்றாள். “குழந்தைங்க கதவை தட்டப் போறாங்க! சீக்கிரம்!” என்றான் மீண்டும்.

“இதுவே! இதுவே இருக்கட்டும்!” என்றாள் தடுமாறியபடி.

சரி! இதுவே இருக்கட்டும்! ஆனா இன்னும் கொஞ்சம் கீழ இறக்கு, இவ்வளவு மேல தூக்கிக் கட்டக் கூடாது!” என்றவன், அவள் இன்னும் அப்படியே நிற்பதைப் பார்த்து.  

“இது வேலைக்கு ஆகாது” என நினைத்து, நெருங்கி இடுப்புக் கட்டில் கையை வைக்க.. ஆதவன் கை வைத்த இடம் சிலிர்த்தது, அந்த சிலிர்ப்பு உடல் முழுவதுமே பரவியது. அவனின் கையை இறுக்கமாக பிடித்தவள், “வேண்டாம்! வேண்டாம்! நானே கீழ இறக்கறேன்!” என்றாள் பதட்டமாக.

“சரி! இறக்கு!” என்று அவளின் முன் கையைக் கட்டி நிற்க,

அந்தப் பார்வையை, அந்த பாவனையை, அவளின் மனம் ரசிக்க முற்பட்ட போதும், “நீங்க போங்க! நான் பண்றேன்!” என்று கூச்சப்பட்டு நின்றாள்… 

அதற்குள் “அம்மா” என்ற மித்ராவின் குரல் கேட்க..

இதுதான் சாக்கென்று “சின்ன குட்டி கூப்பிடறா!” என்று சொல்லி அவனைக் கடந்து தாமரை செல்ல முற்பட.. மின்னல் வேகத்தில் அவளை அருகில் இழுத்தவன்.. அவளின் இடையை பற்றி அகல விடாமல் நிறுத்தினான்.

அந்தப் பிடி, அந்த இறுக்கம் ஏதோ செய்த போதும், “அச்சோ! நான் போகணும்! இல்லை கதவை உடைப்பா!” என

“எட்டு பத்து மாசத்துக்கு அப்புறம், முதல் முதலா கட்டிப் பிடிக்கறேன்! ஓடற நீ!” என அவன் சொல்லி முடிக்கக் கூட இல்லை,

“அம்மா!” எனக் கதவை தட்டும் ஓசை.

“வரேன் மித்து!” என்று குரல் கொடுக்கவும்.. குழந்தை அகன்றது.

அவளின் முகத்தில் அரும்பியிருந்த வேர்வை துளிகளை அவனின் தோளில் இருந்த துண்டு கொண்டு நிதானமாகத் துடைத்தான். புதிதாக ஆதவன் பார்க்கும் அந்தப்  பார்வை அவளை ஏதோ செய்தது. ஒரு புதிய உணர்வு. அதே சமயம் அதை அனுபவிக்க முடியாத ஒரு தவிப்பு!   தாமரையின் முகத்தில் அவ்வளவு பதட்டம், மீண்டும் கதவைத் தட்டி விடுவார்களோ என்று.

“விடுங்க போகணும்!” என,

“என்னடி பண்றேன்? உன்னை ஒண்ணுமே பண்ணலையே!” என்றான் பாவனையாக.

“நான் எப்போ பண்ண வேணாம் சொன்னேன்! இப்போ போகணும்!” என்று உடனடியாக சொன்னவள், சொன்ன பிறகு அதன் அர்த்தம் புரிய,

“அச்சோ!” என்று நாக்கை கடித்து, இதழ்களை பேசாதே என்பது போல மூட..

“நீயேன் அதை சிரமப்படுத்துற! நான் படுத்துறேன்!” என்று ஆதவன் சொல்லி அவளைப் பார்த்த பார்வையில்.. அவளின் முக ரத்த நிறம் கொண்டது, இமைகள் தானாக நிலம் நோக்கியது, உதடுகளும் துடித்தனவோ! 

“என்னமா சிவக்குறடி நீ!” என்றான் ரசனையாக.

அதற்குள் “அம்மா” என்ற பிருந்தாவின் குரல் ஒலிக்க,   

“பெரிய குட்டியும் கூப்பிடறா” என்று சொல்லிக் கதவை கதவை பார்த்திருந்தாள்.

என்ன நினைத்தானோ.. வேகமாக அவளின் இதழில் அழுத்தமாக இதலொற்றி எடுத்துப் “போ” என..

தாமரைக்கு என்ன நடந்தது என்று கிரகிக்கவே சில நொடிகள் ஆனது, இப்போது  ஆ என்று இன்னும் வாய் பிளந்து நின்றாள்.  

அவளை சுற்றியிருந்த கைகளை விட்டுப் “போடி” என்றான் சன்ன சிரிப்போடு .

“நீயா! நீயா என்னிடம்?” என்பது போல ஒரு பாவனையை தாமரை தன் முகத்தினில் காட்ட..

“போடி! அப்புறம் மறுபடியும் பக்கத்துல இழுத்துக்குவேன்!” என மிரட்டினான்.

விட்டால் போதும் என்று ஓடிப் போய் கதவை திறந்தாள். மித்ரா உள்ளே வரவும்..

அவளைக் கையினில் தூக்கிக் கொண்டவன்.. “வாடா குட்டி! அம்மா ட்ரெஸ் பண்ணதும் வரலாம்!” என்று சொல்லி..

“ஒழுங்கா கவனமா கட்டலை.. அப்புறம் நான் கட்டிவிடுவேன்!” என்று சின்ன சிரிப்போடு சொல்ல..

அச்சச்சோ! இவருக்கு பேய் அடித்து விட்டதோ! என்பது மாதிரி ஒரு பார்வை பார்த்தாள். ஆனாலும் “கீழ இறக்கிக் கட்டுனா, எனக்கு கால் தட்டும்” என்று சொல்ல,

“அதுக்கு தான் தட்டாத மாதிரி நான் கட்டிவிடறேன்னு சொல்றேன்” எனவும்,

“இல்லை! இல்லை! நானே கட்டிக்கறேன்” என்றாள் பதட்டமாக மீண்டும்.

“இன்னைக்கு நேராமாச்சுன்னு நீ தப்பிச்சிட்ட!” என்று சொல்லியபடி ஆதவன் செல்ல,

“அப்பாடா!” என்று பெரு மூச்சு விட்டவள், “என்ன இப்படி பார்வையிலேயே கொல்றாங்க!” என்று நினைத்த படியே பார்த்து பார்த்து சில நிமிடங்கள் எடுத்துக் கட்டினாள். கதவை திறந்த நிமிடம் ஏதோ வேலை இருப்பது போல உள்ளே வந்த ஆதவன் “பரவாயில்லை! ஆனா சூப்பர் சொல்ல முடியாது! அப்புறம் பார்க்கலாம்!” என்று சொன்னவன்..

“நகை போட்டுக்கோ!” என்று சொல்ல.. அவளிடம் அதிகமில்லை இருந்த ஒன்றிரண்டைப் போட…

“நாலு பொண்ணுங்க இருக்காங்கடா தம்பி.. நிறைய வாங்கணும்!” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். பின்னே அவனின் உறவுகள் அப்படித் தான் இருப்பர். அப்படி இருப்பவர்களுக்கு தான் அதிக மரியாதையும்.

ஊரோடு ஒத்து வாழ்பவன் தான் ஆதவன். நீ மதிச்சா எனக்கென்ன மதிக்காட்டி எனக்கென்ன என்று தோன்றினாலும், அப்படி வாழ்வதா வாழ்க்கை! யாருக்கும் எதற்கும் தான் எப்போதும் கீழே போகக் கூடாது என்ற எண்ணம் உண்டு.

சுமதி குழந்தை பிறந்திருப்பதால் அம்மா வீட்டில் இருக்க.. அவளை பிறகு அழைத்து வருவதாக சேரன் கூறியிருந்தான்.

ஐந்து மணிக்கு சேரன் பைக்கில் அப்பாவை அழைத்து செல்லல.. ஆதவன் அம்மா மற்றும் குடும்பம் சகிதம் அம்பாசிடரில் சென்றான்.

இடத்திற்கு சென்றது தான் தெரியும்.. பிறகு வேலைகள் இழுத்துக் கொண்டன.. ஒரு சிறிய ஹோமம் வேறு வளர்க்க இருந்தனர்.

ஐயர் அதற்கு எல்லாம் தயார் செய்திருக்க… ஆதவனும் தாமரையும் தான் அமர்ந்தனர்.. அஸ்வதி வந்து தாமரையின் மடியில் ஏற.. அதைப் பார்த்த மித்ராவும் வர.. அவளை தன் மடியில் இருத்திக் கொண்டவன், பிருந்தாவையும் பக்கத்தில் இருத்திக் கொண்டான்.

அப்போது தான் உறவுகள் ஒன்றிரண்டு பேர் வர ஆரம்பித்தனர்.

“குழந்தைங்களுக்கு கண்ணு எரியப் போகுதுப்பா!” என்று அழகர் சொல்ல..

“ஹோமப் புகை நல்லது தான் பா! இருக்கட்டும்!” என்று விட்டான் ஆதவன்.

ஒரு மணி நேரம் ஹோமம்.. அதன் பிறகு பூஜை… நடக்க நடக்கவே தாமரையின் பெற்றோர், அவளின் அக்கா.. குழலி.. மற்றும் அவர்களின் அண்ணன் தம்பிகள் என்று வர.. சுகன்யாவின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் கூட வந்தனர். சுகன்யாவின் பெற்றோர் என்பதை விட அழகருக்கும் தங்கை அல்லவா.. 

ஹோமமும் பூஜையும் சிறப்பாகவே நடந்தது. அதைவிட திருமணத்தின் போது ஆதவனும் அததை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தில் இல்லை.. தாமரைக்கும் சஞ்சலமே.. இப்போது அந்த மாதிரி இருவருக்குமே இல்லை.

ஹோமத்தின் இறுதியில் மாலை மாற்றும் போது… இருவருக்குமே மிகுந்த மன நிறைவு.. அதிலும் தாமரை ஆதவனின் இந்த புதிய அவதாரத்தில் பார்வையில் தன் முகம் சிவக்காமல் யாரும் தன்னை கவனித்து விடாமல் இருக்க மிகுந்த பிரயர்த்தனம் செய்தால் என்றே சொல்ல வேண்டும்.

அதுவரையிலும் அஸ்வதி தாமரையின் மடியை விட்டு அகலவில்லை, மித்ராவும் ஆதவனின் மடியை விட்டு எழவில்லை. கண்ணை துடைத்து துடைத்து விட்டாலும் குழந்தைகள் எழ வில்லை.

பூஜைக்கான வேலைகள் அனைத்தையும் குழலியை செய்ய வைத்தான். தங்கையையும் விடவில்லை.

வேலை ஆரம்பிப்பதற்கான முதல் மண்ணை மட்டும் தாமரையை தான் எடுத்துப் போடச் செய்தான்.   

தாமரையை விட்டு குழந்தைகள் அகலவே இல்லை. அவளாக அத்தை கிட்ட போ! பாட்டிக் கிட்ட போ! என்று அனுப்பிக் கொண்டிருந்தாள்.

அப்போதும் தாமரை மித்ராவைக் கொண்டு போய் அவளின் அப்பா மிலிட்டரி முருகேசனிடம் விட.. தன் தாத்தா பாட்டியிடம் இல்லாமல் அவள் ஆதவனை நோக்கிப் போய் அவனின் கைகளில் ஏறிக் கொள்வாள். பெண்ணின் மலர்ந்த முகத்தைப் பார்த்து தாமரையின் அம்மாவிற்கு மிகுந்த திருப்தி. அங்கிருந்தவர்கள் மித்ராவிடம் எந்த வித்தியாசமும் காட்டவிலை. அவரின் மனம் நிறைந்தது.    

அவர்களுக்கு மட்டுமல்ல பார்த்திருந்த சுகன்யாவின் பெற்றோருக்கும் அவ்வளவு திருப்தி. அம்மா இல்லாத குழந்தைகள்.. இரண்டாம் திருமணத்தினால் வரும் சித்திகள் நல்லவர்களாகப் பார்க்கப் படுவது இல்லை. ஆதவன் தன் பிள்ளைகளை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்றாலும் வந்திருப்பவள் எப்படியோ என்ற சஞ்சலம் இருந்திருக்க அது முற்றிலும் மறைந்தது.

அதிலும் மரகதம் எப்போதும் சம்பிரதாயத்திற்குத் தான் சுகன்யாவின் அம்மாவிடம் பேசுவர். இன்று நன்றாக எந்த வித்யாசமும் பாராட்டாமல் பேச.. “என்னவோ ஆகிடுச்சுங்க எங்க அண்ணிக்கு! என்னை தேடிவந்து பேசுது!” என்று அண்ணன் அழகரிடமும், தன் கணவரிடம் நம்ப முடியாமல் சொல்லிக் கொண்டு இருந்தார்.

மொத்தத்தில் எல்லாம் சிறப்பாக நடந்தது.   

 

Advertisement