கணபதியே அருள்வாய்
ஒரு வானவில் போலே….
அத்தியாயம் ஒன்று :
கைவீசும் தாமரை… கல்யாண தேவதை… பொன் வாழ்வு கண்டால்… கண்மூடி நின்றாள்… காதல் கொண்டாள்!!!
பாடல் ஓடிக் கொண்டிருந்தது எப் எம் ரேடியோவில்… அது மட்டுமே அவளின் வலி தீர்க்கும் மருந்து… பாடல்கள்.. அந்த இரவின் நிஷப்தத்தில் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு வைத்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
இதில் அவள் பெயர் வருவதால் என்னவோ மனதிற்கு இன்னமும் இதமாக இருந்தது. ஆம்! தாமரை அவளின் பெயர். யோசனைகள் பாட்டை ஒட்டி ஓடிக் கொண்டு இருந்தது.
காதல் கொண்டு விட்டேனா? தெரியவில்லையே? என்னுடைய யவ்வனத்தை என்ன முகத்தையும் கூட நின்று பார்க்காத கணவன்.. வேலைகள் சொல்வதற்கு மட்டும் பேசும் கணவன்… குழந்தைகளுக்காக நடந்த திருமணம்.. நானோ சூழ்நிலைக் கைதி.. இப்படி எல்லாமும் இருக்க..
திருமணம் நடந்த பிறகு அவன் முகம் பார்த்து நடக்கக் கற்றுக் கொண்டு விட்டேன் தானே! இதற்கு பெயர் என்ன? காதலா?
ஆனால் அவன் சிறந்த காதலனாமே? எல்லோரும் சொல்கிறார்களே? அவனின் முதல் மனைவியை அப்படி பார்த்துக் கொள்வானாமே… எண்ணங்கள் சுழன்று அடித்தன.
தனிமையில் எப்போதும் அவன் எண்ணங்கள் தான். இதற்கு பெயர் என்ன?
அதற்குள் பாட்டு நின்று ரேடியோ ஜாக்கியின் பேச்சு வர… சத்தம் சற்று அதிகமாக வந்தது. அவசரமாக குறைத்து வைத்தாள். கொஞ்சமும் சத்தம் கேட்டு விட்டாலும் “இதென்னா வீடா இல்லை டீக் கடையா?” என்று மாமியார் சத்தம் போடுவார்.
பாட்டைக் கேட்காவிட்டால் தூக்கம் வந்துவிடும்.. பிறகு கணவன் வண்டி நிறுத்தும் சத்தம் கேட்டு கதவை திறக்க முடியாது. அவன் பெல் அழுத்தினாலும் “கண்ட நேரத்துக்கு வந்து பெல் அடிச்சா எங்க தூக்கம் கெடாதா… அவனுக்கு கதவை திறக்கறது விட்டா உனக்கு என்ன வேலை?” என்று அதற்கும் அவளுக்கு தான் திட்டு விழும்.
நேரத்திற்கு வா என்று அவனிடம் சொல்பவர் யாரும் கிடையாது.
இப்படி அஞ்சி அஞ்சியே தன் வாழ்க்கை ஓடிவிடுமோ. மனது சலிப்பாக உணர்ந்தது.
திருமணமாகி இந்த வீட்டிற்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இது அன்றாடம் நடப்பது தான்.
குழந்தை அதற்குள் சிணுங்க… உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு அவசரமாக எழுந்து சென்று தட்டிக் கொடுத்தாள்.
ஒன்றரை வயது அஸ்வதி தாமரையின் ஸ்பரிசம் உணர்ந்ததும் உறங்கிவிட.. பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த எட்டு வயது பிருந்தாவை பார்த்தாள். உறங்கும் போது கூட முகத்தில் ஒரு பிடிவாதம். அழகு குழந்தை மனம் சிலாகித்தது. புத்திசாலிக் குழந்தையும் கூட. அனால் தாமரையிடம் பேச மாட்டாள். வேலை சொல்வதற்கு மட்டுமே தாமரையிடம் பேசுவாள். அப்பாவைப் போல?
இவர்கள் இருவரும் படுக்கையில் உறங்க, தனியாக பாயில் உறங்கிக் கொண்டிருந்தாள் நான்கு வயது மித்ரா. தாமரையின் அண்ணன் மகள்… ஆனால் அவள் பிறந்தது முதலே அம்மா அப்பா எல்லாம் தாமரையே, அவளை முன்னிட்டே இந்தத் திருமணம். மனைவியாகி தனக்கு ஒரு குடும்பத்தைக் கொள்ளாமல்.. ஏற்கனவே இருந்த குடும்பத்தில் இரண்டாம் மனைவியாகி வந்ததற்கு காரணம் மித்ரா மட்டுமே.
இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு அவளை பார்க்காதது தப்பு போல தோன்ற… அவளின் அருகில் சென்று போர்வையை சரியாக போர்த்தி, தலையணையில் இருந்து நழுவியிருந்த அவளின் தலையை சரியாக வைத்து விட்டாள்.
திருமணமாகி ஆறு மாதங்கள், இதில் கணவனின் கை என்ன பார்வை கூட இன்னம் மேலே படவில்லை.. இதில் மூன்று குழந்தைகள். எதிரில் இருந்த கண்ணாடியில் “பெரியாள்டி நீ தாமரை” என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொள்ள.. தானாக ஒரு புன்னகையும் கூட.
ஆம்! தாமரை மிகவும் உற்சாகமான பெண்… எத்தனை கவலைகள் கஷ்டங்கள் இருந்தாலும் புன்னகையோடு எதிர்கொள்ளும் மனப்பான்மை தான். இல்லையென்றால் இருபத்து ஒன்று வயது தாமரை முப்பத்தி நான்கு வயதான ஆதவனை திருமணம் செய்ய எப்படி சம்மதித்து இருப்பாள்.
கிட்ட தட்ட பதிமூன்று வயது வித்தியாசம். யாரும் நிர்பந்திக்க எல்லாமில்லை. என்னோடு மித்ராவுடைய பொருப்பெடுக்கும் மணமகன் தான் வேண்டும் என்று சொல்ல… ஆதவன் வீட்டில் இரண்டாம்தாரமாக பெண் தேடியவர்கள் சம்மதம் சொல்ல… “சரி” என்று விட்டாள்.
திருமணதிற்கு முன் ஆதவன் அவளிடம் பேசினான் கூட.. “எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.. குழந்தைகளுக்காக மட்டுமே திருமணம்! பெண் பிள்ளைகள் என்பதால் தான் அதுவும் கூட.. நிறைய எதிர்ப்பார்ப்புகள் வாழ்க்கையை பற்றி இருந்தால் விலகிக் கொள்” என்பது போல.
அவனுடைய தோற்றம், பேசிய விதம், எல்லாம் பார்த்தவுடனே பிடித்து விட்டது. “எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை” என்றாள்.
“உனக்கும் எனக்கும் பதிமூணு வயசு வித்தியாசம்.. வீட்ல எவ்வளவோ சொல்லிட்டேன், கேட்க மாட்டேங்கறாங்க.. நீ வேண்டாம்னு சொல்லு.. வாழ வேண்டிய வயசு உனக்கு! என்னைக் கல்யாணம் செஞ்சு கஷ்டப்படாத!” என்றான்.
“எனக்கு முழு மனசோட சம்மதம்…” என்றாள் முடிவாக. நினைவுகள் ஓடிக் கொண்டிருக்க…
புல்லட்டின் சத்தம் கேட்டது, அவசரமாக எஃப் எம்மை அணைத்து வேகமாக சென்று கதவை திறந்தாள்.
இவள் கதவை திறந்து பார்க்க, பூட்டியிருந்த கேட்டை அவனிடமிருந்த சாவியால் திறந்து கொண்டிருந்தான் ஆதவன்.
புல்லட் ஒரு பக்கம் சத்தமிட்டு கொண்டிருந்தது. அவள் கதவை திறப்பது தெரியாமலா இருக்கும்.. ஆனாலும் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை.
ஆதவன் பார்க்காவிட்டால் என்ன தாமரை பார்ப்பாளே அவனை. வெள்ளை வேஷ்ட்டி வெள்ளை சட்டை.. சட்டையிலும் வேஷ்டியிலும் அந்த நாளின் முடிவில் இருப்பதால் உழைப்பின் கசங்கல் இருந்தது.. ஆனால் வெண்மையில் குறைவில்லை.
“நல்லா தாண்டி நீ துணி துவைக்கிற தாமரை” என்று மனதிற்குள் அவளின் வேலையை அவளே மெச்சிக் கொண்டாள். என்ன தான் உழைப்பின் கசங்கல் இருந்தாலும் மாநிறத்தில் ஆறடிக்கு சற்று குறைவாக இருந்தவனது கம்பீரம் தாமரைக்கு மிகவும் பிடிக்கும். ஆதவன் கவனிக்கும் முன் அவனை பார்வையில் நிரப்பி வேகமாக உள் செல்ல திரும்பி விட்டாள்.
கேட்டை திறந்து பைக்கை கொண்டு வந்து நிறுத்தியவன் படியேற பார்க்கும் முன்னே தாமரை உள்ளே சென்றிருந்தாள். இவன் கதவையும் பூட்டி சரி பார்த்து உடை மாற்ற சென்றான்.
வேகமாக சமையல் கட்டிற்கு சென்று இட்லியை ஊற்றி ஐந்தாறு நிமிடத்தில் ஆவி பறக்க.. சாம்பாரையும் சூடு செய்து எடுத்து முன்னறையில் வைத்து அவனின் தட்டையும் தண்ணீரையும் வைக்க… ஆதவன் கை கால் கழுவி வருவது தெரிந்தது.
அமர்ந்து எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். அவனே தான் போட்டுக் கொள்வான். தாமரை வருவதை விரும்ப மாட்டான். அவள் சமையல் கட்டிலேயே இருக்க.. எட்டு இட்லியை ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு எழுந்து கொள்ள…
“எதுக்கு இப்படி அவசரமா சாப்பிடறாங்க? சரியா ஜீரணமே ஆகாதே!” என்ற கவலை தாமரைக்கு. அதன் பிறகு அவன் போய் குழந்தைகளின் அருகில் படுத்துக் கொள்ள…
“அச்சோ! சாப்பிட்ட உடனே தூங்கக் கூடாதே! அதுவும் நிறைய சாப்பிட்டு இருக்காங்க! நாளைக்கு ரெண்டு கம்மியா வைக்கணும், நைட் நிறைய சாப்பிடக் கூடாது” என்ற கவலை தாமரைக்கு.
எப்போதும் அவனைப் பற்றிய கவலை தான். நிறைய முறை யோசித்து விட்டாள். “அவர் உன்னை இன்னும் ஒரு பார்வை பார்க்காத போதே இவ்வளவு கவலை அவரைப் பற்றி உனக்கு… இன்னும் உன்கிட்ட பேச ஆரம்பிச்சிட்டா… தாமரை உன்னைக் கைல பிடிக்க முடியாதுடி! என்ன சொல்ல?” என்று நினைத்துக் கொண்டே பாத்திரங்களை மீண்டும் அடுக்களையில் வைத்து… அவள் உண்ண உணவை எடுத்தாள்.
ஆம்! இட்லி அவனுக்கு மட்டும் தான்… அவளுக்கு சாதம் தான்… மீதமான சாதம் இருந்தால் அவள் தான் உண்ண வேண்டும்! எழுதப் படாத விதி அது. அப்போதும் தோன்றும், நான் வந்து ஆறு மாதங்கள் தானே ஆகின்றது அதற்கு முன் என்ன செய்திருப்பார்கள் என்று.
காலை பதினோரு மணி அளவில் சமைத்தது! இப்போது இரவு பதினோரு மணி! சாதம் நீர்த்து இருந்தது. தண்ணீரை ஊற்றி அதைக் கழுவி எடுத்துப் போட்டு இட்லிக்கு செய்த சாம்பாரையே ஊற்றி உள்ளிறக்கினாள். எப்போதும் ரசம் சாதம் தான்… இன்று ரசம் தீர்ந்து விட்டது. திரும்ப எல்லாம் புதிதாக வைத்துக் கொள்ள முடியாது. அதற்கு அனுமதி கிடையாது.
உமட்டிக் கொண்டு வந்தது. இருந்தாலும் உள்ளே தள்ளிப் பாத்திரம் எல்லாம் கழுவி அவள் ரூமினுள் போகும் போது ஆதவன் ஆழ்ந்த தூக்கத்தில்.
உறங்கும் கணவனை சிறிது நேரம் நின்று பார்த்தாள். இவன் என் கணவன் என்று மனதினில் சொல்லிக் கொண்டு.. பக்கத்தில் படுத்திருக்கும் குழந்தைகள் பிருந்தாவையும் அஸ்வதியையும் பார்த்தாள். இவர்கள் என் குழந்தைகள் என்று சொல்லிக் கொண்டாள்.
பின்பு சற்று தள்ளி இன்னொரு பாயில் படுத்திருந்த மித்ராவோடு உறங்க செல்ல.. அஸ்வதி தூக்கத்தில் சிணுங்க… சத்தமில்லாமல் அவளைத் தூக்கி தங்களோடு பாயில் போட்டுக் கொண்டு குழந்தையை தட்டிக் கொடுத்த படியே உறங்க ஆரம்பித்தாள். ஒரு நிமிடம் கூட இருக்காது அசதியில் உறங்கிவிட்டாள்.
பதினொன்றரை மணிக்கு உறங்கியவள் மீண்டும் காலை ஐந்து மணிக்கு எழ, அவளோடு அஸ்வதியும் எழுந்து கொண்டாள். “என்னடிம்மா பட்டு அதுக்குள்ள எழுந்திட்டியா?” என்று அவளை தூக்கிக் கொண்டு அடுக்களைக்குள் விரைந்தாள்.
பாலைக் காய்ச்சி குழந்தைக்கு பாட்டிலில் ஊற்றி, மீண்டும் ரூமிற்கு வந்து ஆதவனின் பக்கத்தில் விட்டு, “இங்க உட்கார்ந்து குடி! அம்மா இப்போ வந்துடறேன்” என்று சொல்ல அது சமத்தாக தலையை ஆட்டியது.
ஆதவன் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு என்பதால், அவன் இருக்கும் நேரம் குழந்தைகள் அவனுடன் இருக்குமாறே பார்த்துக் கொள்வாள்.
பிறகு அவள் வாசல் தெளிக்கப் போய் விட… அஸ்வதி பாலைக் குடித்து விட்டு இன்னும் சமத்தாக அப்பாவின் மேல் ஏறி படுத்துக் கொண்டது.
குழந்தை படுக்கவும் சற்று உறக்கம் கலைந்தவன், மீண்டும் குழந்தையை அழுத்தி பிடித்து “படுடா செல்லம்” என்று சொல்லித் தட்டி கொடுக்க, கையில் இருந்து நழுவி அக்காவைப் போய் எழுப்பினாள். பிருந்தா அசையவில்லை என்றதும் மித்ராவைப் போய் எழுப்பினாள்.
“பட்டுக் குட்டி எழுந்திட்டியா” என்றபடி மித்ரா எழுந்து அமர.. வெளியே போகலாம் என்று மித்ராவின் கையைப் பிடித்து இழுத்தது.
உள் வாசலைக் கூட்டி முடித்து இப்போது வெளி வாசலைக் கூட்டிக் கொண்டிருந்தாள். இருவரும் படி இறங்க முற்பட… “அச்சோ! பனி வரக் கூடாது அங்கயே இருங்க” என்று அதட்ட… அப்படியே படியில் அமர்ந்தனர்.
“அச்சோ ஈரம்!” என்று பதறி வந்தவள்… “உள்ள போங்க! போங்க!” என்று அதட்ட,
ஈரத்தை விட்டு உள்ளே சென்று அவள் பார்வையில் படும்படி இருவரும் அமர்ந்தனர். இவர்களைப் பேசி சமாளிக்க முடியாது என்றுணர்ந்து விரைவாக கோலத்தை முடிக்க வெளியே சென்றாள்.
பின்பு அதை முடித்து உள்ளே வந்து மித்ராவிற்கு பாலைக் கொடுக்க, அவள் வாங்கவேயில்லை, “ரொம்ப அடம் பண்ற மித்து நீ” என்று சொல்லி தாமரை கீழே அமர, அவளின் மடியில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.
குடித்து முடித்து தான் எழுந்தாள். பின்பு தாமரை அவர்கள் படுத்திருக்கும் ரூமில் சில பொம்மைகளை எடுத்துப் போட.. அவர்கள் அதை வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தனர்.
தாமரையை வேலைகள் இழுக்க ஆரம்பித்தது.