Advertisement

அத்தியாயம் நான்கு :

“அதெல்லாம் சொல்ல முடியாது” என்று சொல்லித் தாமரை திரும்பி நடக்கத் துவங்க, ஆதவனுக்கு வந்ததே கோபம், தாமரையை அந்த இடத்தை விட்டு அகல விடாமல் அவளின் கையை இழுத்துப் பிடித்தான்.

தாமரை இதை எதிர்பார்க்கவில்லை, பிடி மிகவும் அழுத்தமாக இருக்க, அவளால் கையை உருவ முடியவில்லை. “என்ன பண்றீங்க விடுங்க” என,

“பதில் சொல்லாம விடமாட்டேன்” என்று வார்த்தைகளை உதிர்த்து ஆதவன் பார்த்த பார்வை… உள் வரை சென்று தீண்ட, மனதில் ஒரு பயமும் நடுக்கமும் வந்தது.

அடித்து விடுவானோ? இப்படி ஒரு ஆதவனை தாமரை இதுவரை பார்த்தது இல்லை… எப்போதும் அவளை அதிக நேரம் நேருக்கு நேர் கூட பார்க்க மாட்டன்.. இந்த பார்வை அவளை பயம் கொள்ளச் செய்தது.  கண்களில் மிரட்சியோடு தாமரை பார்க்க… அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் “சொல்லாம விடமாட்டேன்” என்றான் மீண்டும்.

“என்ன சொல்லலாம்? ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்!” என்று தாமாரை யோசிக்கும் போதே,

“பொய் சொன்ன, கண்டுபிடிச்சுடுவேன், அதனால உண்மையை சொல்லு” என மிரட்டலாக பேச…  

சொல்லிவிடுவதே மேல் என்று நினைத்து “அது! நீங்க உங்கம்மா சொன்னதால தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னீங்க இல்லையா, அதான்” என்றாள்.

“ஆமாம்! சொன்னேன்! அதுதானே உண்மை!”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தவள், “இந்தப் பொண்ணை சொன்னீங்க! என் பேர் கூட சொல்லலை!” என்றாள்.

“அது தப்பு தான்!” என்று ஒத்துக் கொண்டவன்.. “பழக்கப் படுத்திக்கிறேன்” என்றான்.

ஆதவன் இவ்வளவு அவளிடம் பேசியதேயில்லை. தாமரை பேசுவது நீயா என்ற பாவனையில் பார்க்க.. பேசும் அவளின் விழிகளின் பாவனைகள் புரிந்து… 

“சின்னப் பொண்ணு நீ, உனக்கு இந்த மாதிரி எதிர்பார்ப்புகள் இருக்கும்னு தான் இந்தக் கல்யாணம் வேண்டாம் சொன்னேன்.. நீ இல்லை பரவாயில்லைன்னு சொல்லி பண்ணிக்கிட்ட.. இப்போ குறையா நினைச்சா?” என்று கேள்வி கேட்க…  

“நான் என்ன உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்? என்ன குறை சொன்னேன்? என்று சட்டென்று கண்கள் கலங்க அவள் கேக்க…

“பார்த்தியா அழற? நீ கேட்டாக் கூட பரவாயில்லை, கேட்காத போது தான் இப்படிச் சின்ன பொண்ணை போய் கல்யாணம் பண்ணி அவ வாழ்க்கையை வீணாக்கிட்டேன்னு தோணுது” என்றான்.

இப்போது என்ன சொல்ல வருகிறான் என்று தாமரை புரியாமல் நின்றாள். “என்ன வீணாகிடுச்சு?” என்று கவலையாக கண்களில் கலக்கத்தைத் தேக்கி கேட்டாள். அவனின் பிடி வேறு வலித்தது.

அறிந்தும் அறியா மங்கை தான் தாமரை.  விவரமில்லாதவள் அல்ல… அதே சமயம் எல்லாம் விவரங்களும் அறிந்தவளுமல்ல.. சில விஷயங்களில் கேள்வி ஞானம் கூட இல்லை.. நம் பெண்கள் பலருக்கு சில விஷயங்கள் புரியவைக்கப்படும் வரை அவை ரகசியங்கள் தானே!

ஆண் பிள்ளைகளுடன் பேசுவது பழகுவது தவறு என்று போதிக்கப்பட்டு வளர்ந்தவள்.. படித்ததும் பெண்கள் பள்ளி… கல்லூரி செல்லாதவள். ஊரோ கிராமம்…

அந்த ஊரில் பெரும்பாலானவர்களின் வேலை ராணுவத்தில்.. அப்போது கிராமத்தின் கட்டுப்பாடுகள் சொல்லவா வேண்டும்… அப்பாவும் ராணுவத்தில், அண்ணனும் ராணுவத்தில், அப்பாவின் பணியின் காலம் முடிந்து இப்போது ஒரு அரசாங்க பள்ளியில் என் சீ சீ மாஸ்டர்.. அண்ணன் நாட்டைக் காக்கும் பணியில் இறந்து உயர்ந்த  கௌரவத்தை அடைந்தவன். 

இப்படி வளர்ந்ததால் தான் திருமணமாகி இந்த ஆறுமாதமாக கணவனுடன் எங்கும் வெளியில் செல்லாதது கூட ஒரு விஷயமாக தோன்றவில்லை. இன்னும் கணவன் மனைவியின் அன்னியோன்னியங்களைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.          

“என்ன வீணாகிடுச்சு?” என்று கேட்டவளைப் பார்த்து தடுமாறி நின்றான். என்ன சொல்லுவது என்று கூடத் தெரியவில்லை. ஆதவன் இப்போது தாமரையை தவறு செய்தவனாக கவலையாகப் பார்க்க…  “வலிக்குது” என்று சொல்லவும் தான் பிடியைத் தளர்த்தி கையை விடுவித்தான்.

அமைதியான சில நொடிகள் இருவருக்குள்ளும்… ஆதவன் கையை விட்ட பிறகும் வலியில் தாமரை கையைத் தடவி விட, “சாரி! என்னைக் கடுமையா நடக்க வைக்காத. நான் உன்கிட்டன்னு இல்லை எல்லார் கிட்டயும் இப்படித் தான் புரிஞ்சு நடந்துக்கோ…” என்றவனைப் பார்த்து,

“எல்லோரும் நானும் ஒன்னா?” என்றாள் கேள்வியாக,

“இல்லை, கண்டிப்பா இல்லை” என்றான் உடனே… ஆனால் மேலே பேச விடாமல்,  

அதுவரை விளையாடிக் கொண்டிருந்த அஸ்வதி வந்து “தூக்கு” என்று கையை நீட்ட… அதைப் பார்த்த மித்ராவும் அருகில் ஓடி வர… உடனே யாரையும் தூக்க முடியவில்லை மணிக்கட்டு வலித்தது.

அவர்கள் உயரத்திற்கு குனிந்து அமர்ந்தவள், “அம்மாக்கு கை வலிக்குது! தூக்க முடியலை” என்று பாவமாக சொல்ல,

“நீ தூக்கு” என்பது போல தந்தையிடம் தளிர் நடையிட்டு சென்றாள் அஸ்வதி.

“இவளைத் தூக்கி வெச்சே நீ பழக்கிட்ட” என்று தாமரையிடம் சொல்லியடி அவளைத் தூக்க, மித்ரா அதை பார்த்து தான் நின்றிருந்தாள். ஆனால் அருகில் செல்லவில்லை.

அப்பாவையும் மகளையும் பார்த்தபடி மித்ரா நிற்க.. “பெரிய பெண்ணான தாமரைக்கே எதிர்பார்ப்புகள் இருக்கும் போது மித்ராவிற்கு இருக்காதா என்ன?” என்று முதல் முறையா தோன்ற… 

“நீயும் வா” என்று இத்தனை நாட்களில் ஆதவனாக அழைத்தான். அது தாமரையின் பின் சென்று மறைந்தது.

“அப்பா! கூப்பிடறாங்க மித்து, போடா!” என்று தாமரை அவளை முன் இழுத்து நிறுத்த… அப்போதும் மாட்டேன் என்பது போல தாமரையின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.  

எப்படியாவது ஆதவனை தூக்க வைத்து விட வேண்டும் என்று தாமரையும் மீண்டும் “அப்பா பைக்ல கூட்டிட்டு போவாங்க, பிருந்தா அக்கா மாதிரி!” என்று ஆசைக் காட்டினாள்..

கழுதைக் கட்டியவாறே மித்ரா ஆதவனைப் பார்த்தது.

“ஆமா! கூட்டிட்டு போவேன்!” என்று ஆதவனும் சொல்ல.. அப்போதும் நகரவில்லை.

அப்போது தான் ஞாபகம் வந்தவனாக “எப்போ இவளை ஸ்கூல்ல சேர்க்கணும்” என்று கேட்க..

“இப்போ தான் வர்ற ஜூன்ல” என்றாள்.. அப்போது மார்ச் மாதம் நடந்து கொண்டிருந்தது.

“இப்போ சொல்ற? எப்படி அட்மிஷன் வாங்கறது! முன்னாடியே சொல்ல வேண்டாமா?”

நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் வளர்ப்பு தாமரை. அவளுக்கு எங்கே இந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே ஒரு நாள் இரவு முழுக்க பெரிய கியூவில் நின்று அப்ப்ளிகேஷன் வாங்க வேண்டும் என்று தெரியும் . “இன்னும் மூணு மாசம் இருக்கே” என்றாள்.

“சரியாப் போச்சு போ! அதெல்லாம் டிசம்பர் மாசமே முடிஞ்சிருக்கும்!” என்றான்.

“அப்போ அட்மிஷன் கிடைக்காதா?” என்றாள் கவலையாக தாமரை.

“அட்மிஷன் கிடைக்கும், ஆனா பிருந்தா ஸ்கூல்ல கிடைக்காது” என்றான்.

“என்ன கிடைக்காதா?” என்று தாமரை கேட்ட பாவனையில் அவளின் கலக்கத்தை உணர்ந்து…

“வேணும்னா கேட்டுப் பார்க்கலாம்” என்றான் சமாதானமாக. ஆனால் அவனுக்கு நிச்சயம் தெரியும் கிடைக்காது என்று. அங்கே அட்மிஷன் கிடைப்பது மிகவும் கடினம்.

“எப்போ கேட்கறீங்க” என்று உடனே தாமரை கேட்க..

“இன்னைக்கு முடியுமான்னு தெரியலை முடிஞ்சா வர்றேன்.. எதுக்கும் நீ வேலை முடிச்சிட்டு ரெடியா இரு” என்று சொல்லி அவன் தயாராக..

“நாங்களும் வரணுமா?” என்றாள்.

“பின்ன, குழந்தை அம்மா அப்பா எல்லோரையும் கேள்வி கேட்பாங்க” என்று சொல்ல,

“என்னது கேள்வி கேட்பாங்களா?” என்று வாயைப் பிளந்தவள், “என்ன கேட்பாங்க? எனக்கு பதில் தெரியாதே” என்றாள் கவலையாக…  

“ஏதாவது கேட்டா உனக்கு தெரியலைன்னா தெரியலை சொல்லு. தப்பா சொல்லாத! இங்கிலீஷ் நல்லா பேசுவ தானே!” 

“என்னது இங்கிலிஷா அதுவும் பேசறதா?”, என்று மீண்டும் வாயை பிளந்தாள். “எங்க ஊர்ல இங்க்லீஷ் பேசினா பந்தான்னு சொல்லுவாங்க. ஸ்கூல கிண்டல் பண்ணுவாங்க. நான் பேச எல்லாம் மாட்டேன். தமிழ் தான் எனக்கு நல்லா வரும். இங்கிலீஷ் படிப்பேன். ஆனா அது எனக்கு ஒரு பாடம், அவ்வளவு தான்! சரளமா பேச எல்லாம் வராது” என்றாள் இன்னும் கவலையாக. 

“யப்பா! ஒரே நாள்ல எத்தனை கவலை காட்டுறா இவ” என்று பார்த்தவன், “பசங்களுக்கு அவங்க அப்பா தான் பாடம் சொல்லி தருவார்ன்னு சொல்லு, அப்புறம் நான் பார்த்துக்கறேன்” என்றான்.

“நீங்க பதில் சொல்லிடுவீங்களா” என்று கேட்க,

அவளைப் பார்த்து முறைத்தான்.. அந்தப் பார்வையில் “அதில்ல நீங்க சொல்லிடுவீங்க” என்று அவளுக்கு அவளே சொல்லி அந்த இடத்தை விட்டு அகன்றாள். 

அவர்கள் இருவரும் இதுவரை பேசிய நீளமான சம்பாஷனை இதுதான்… தாமரைக்கு மனதிற்கு சற்று இதமாக இருக்க.. ஆதவன் வெளியே சென்றதும், குழந்தைகள் இருவரையும் உறங்க வைத்து விரைவாக வேலைகளை முடிக்க விரைந்தாள்.

அவள் வேக வேகமாக வேலைகளைச் செய்வதை பார்த்த மரகதம்.. “எதுக்கு இப்போவே சாதம் குழம்பு எல்லாம் வைக்கிற” என்றார்.

“அவர் மித்ரா அட்மிஷனுக்கு கேட்க ஸ்கூலுக்கு போகலாம்னு சொன்னார் அத்தை”

“என்ன ஸ்கூலுக்குப் போகறீங்களா? என் கிட்ட சொல்லவேயில்லை!”

அப்போதுதான் சொல்லாதது உரைக்க.. “மறந்துட்டேன் அத்தை!” என்றாள்.

“என்ன மறந்துட்ட? வேக வேகமா சமைக்கிற, அப்போ சொல்றது மட்டும் எப்படி மறக்கும்.. எல்லாம் வந்த புதுசுல நல்லாத் தான் இருக்கீங்க! அப்புறம் மட்டு மரியாதை எல்லாம் அப்படியே குறைஞ்சிடுது… ஒரு பெரிய மனுஷி இங்க இருக்காளே அவ கிட்ட சொல்லணும்னு தோணுதா? எல்லாம் அவங்க அவங்க இஷ்டம்….”

“அதுவும் பிருந்தா படிக்கிற ஸ்கூல்ல.. எவ்வளவு ஃபீஸ் தெரியுமா அங்க.. இன்னும் மூணு வருஷத்துல சின்ன குட்டியும் ஸ்கூலுக்கு போவா, எப்படி எல்லோருக்கும் ஃபீஸ் கட்டுவான். என்ன தொழில் பண்றான்னே தெரியலை அவன்..”

“எங்க கூடவும் வரமாடேங்கறான். உன் பங்குக்கு நீயும் தொந்தரவு குடு!” என்று நீளமாக பேசி நொடித்துப் போக…

அப்படியே நின்று விட்டாள் தாமரை.    

அவளுக்கு ஆதவனை பிடிக்கறதா இல்லையா எல்லாம இரண்டாம் பட்சம்… திருமணம் எதற்கு, மித்ராவையும் அவளோடு சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் தானே..

இப்போது அவளுக்கு பீஸ் அதிகம் என்றால், அப்போது இந்த திருமணத்தின் அடிப்படையே ஆட்டம் காண்கிறதே. செல்ல ஆரம்பித்தவரிடம் மெதுவாக “ஃபீஸ் பிரச்சனையில்லை..மித்ராவுக்கு அவங்கப்பாவோட பென்ஷன் வருது” என்றாள்.

“அப்போ என் பையனுக்கு ஃபீஸ் கட்ட வக்கில்லைன்னு சொல்றியா?” என்றார்.

தாமரைக்கு சட்டென்று கோபம் வந்தது. “என்ன பேச்சு இது? சொல்லாததை நான் சொல்கிறேன் என்கின்றது. இந்தம்மாவாக கேட்டு இந்தம்மாவாக பதில் சொல்லிக் கொள்கிறது” என்று ஆத்திரமாக வர.. அவருக்கு பதிலே கொடுக்காமல் அவள் பாட்டிற்கு வேலையை பார்க்க..

தாமரை எந்த பதிலும் பேசாததால் சண்டை வலுக்க முடியாமல் மரகதம் சென்று விட்டார். ஆனாலும் தாமரைக்கு இன்னம் அவரைப் பற்றியும்  தெரியவில்லை. அவரின் மகனைப் பற்றியும் தெரியவில்லை.

ஆதவன் ஒரு பன்னிரண்டு மணி போல வந்தவன்.. “நீ இன்னம் ரெடியாகலையா?” என்றான்.

“ரெடியா தான் இருக்கேன்” என்று அவள் சொல்ல…

“என்ன இப்படியே வருவியா? போ புடவை மாத்திக்கோ.. முகத்தை கழுவி அந்த மஞ்சள் போக வை. மித்ராக்கு மாத்தி விடு.. இப்படி எல்லாம் அங்க போக முடியாது” என்றான்.

அதற்குள் அவனின் பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த மரகதம், “ஸ்கூலுக்குப் போகறீங்களா என்கிட்ட சொல்லவேயில்லை” என்றார் மகனிடம்.

“இப்போ தானே போகப்போறோம். இனிமே தானே சொல்லுவோம்” என்றான்.

“போய் என்ன பண்ண? உன் பொண்டாட்டி உனக்கு ஃபீஸ் கட்ட வக்கில்லைன்னு சொல்றா!” என்றார்.

“ஐயோ! இல்லை!” என்று தாமரை அவசரமாக ஆதவனைப் பார்க்க.. அவன் தாமரையிடம் பார்வையை திருப்பக் கூட இல்லை.. “என் பொண்டாட்டி தானே! சொல்லிட்டுப் போறா! இப்போ என்ன அதுக்கு?” என்று அம்மாவிடம் திரும்ப படிக்க…

தாமரை இப்போது இருவரையும் அச்சர்யமாக பார்த்து நின்றாள்.. “இது என்னடா இவங்கம்மாவை விட இவர் நிறைய பேசறாரே” என்று. 

“ஏண்டா ஆதவா? எப்படி மூணு பேருக்கும் ஃபீஸ் கட்டுவ”

“அது என் கவலை! உங்களுக்கு என்னமா அதைப் பத்தி. உங்க கிட்ட வந்து நிக்க மாட்டேன். சரியா!” என்றான்.

“ஏதோ நல்லதுக்கு சொன்னா புரியாதே.. ஏற்கனவே அந்தப் புள்ளைக்கே மூணாவதுக்கே எண்பதாயிரம் கட்டுற.. இப்ப இவளும்! இன்னம் ஒரு வருஷம் போனா சின்னக் குட்டி! சம்பாதிக்கிற எல்லாம் இப்படியே கொட்டுவியா?”

“எந்தப் புள்ளைக்கு? அவ என்ன பக்கத்துக்கு வீட்டு புள்ளையா? என் மக..! அப்போ நீங்க தான் எனக்கு சம்பாதிக்க வக்கில்லன்னு சொல்றீங்க!” என்று ஒரு பிடி பிடித்த்தவன்… “மறுபடியும் என்னைத் தனியா போற சூழ்நிலைக்குக் கொண்டு வந்துராதீங்க” என்று சொல்ல…

மரகதம் அப்படியே கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.. பின்னே தாமரை மாதிரி வேலை செய்ய ஆள் தேடினாலும் கிடைக்காது.. அவள் திருமணமாகி வந்த பின் தானே அவருக்குச் சமையல் கட்டில் இருந்து விடுதலை. சுகன்யா இருந்த போதும் சுமதி இருக்கும் போதும் அவர் தான் செய்தார். அதை கெடுத்துக் கொள்வாரா என்ன?

“எப்படியோ போங்க! ஒரு பெரிய மனுஷி சொன்னா கேட்கறீங்களா?” என்று ஜகா வாங்கிவிட..

“பெரிய மாமா எப்படி அவங்கம்மாவுக்கு பதில் கொடுக்கறாங்க! என் வீட்டுகாரரும் இருக்காரே. ஒரு வார்த்தை அம்மாவை எதிர்த்து பேசுறாரா?” என்று இதைப் பார்த்திருந்த சுமதி நினைத்துக் கொண்டாள்.

பின்னே இப்போது கர்ப்பமாக இருகிறாள் என்று தான் சுமதிக்கு பேச்சுக்கள் குறைவாக விழுகிறது.. இல்லையென்றால் அவளுக்கும் இதே கதி தான். ஆதவனாவது மனைவிக்காக பரிந்து பேசுகிறான். சேரன் எல்லாம் அம்மா என்ன சொன்னாலும் தலையாட்டி சுமதியைத் தான் திட்டுவான்.

மரகதமும் சுமதியும் அந்த இடத்தை விட்டு அகன்றதும், “இல்லை நான் அப்படி எல்லாம் சொல்லலை” என்று தாமரை விளக்கம் கொடுக்க முற்பட..

“எங்கம்மா எப்படி பேசும்னு எனக்குத் தெரியும்.. நீ சொல்லியிருக்க மாட்ட ஏன்னா நான் என்ன சம்பாதிக்கறேன்னு உனக்குத் தெரியாது, அப்படியே சொல்லியிருந்தாலும் எங்கம்மா அந்த வார்த்தை சொல்ல வைக்கிற மாதிரி பேசியிருக்கும்” என்று சொல்ல..

“யப்பா! ஒரு நாளுல இப்படி நம்மை கண்ணை கட்ட வைக்கிறாரே இவரு” என்று அசந்து பார்த்து நின்றாள்.

இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஒரே மாதிரி நினைத்தனர்.

“என்ன பார்த்துட்டு நிக்கிற, கிளம்பு!” எனவும்.. வேகமாக உள்ளே சென்றவள், “இந்தப் புடவையே நல்லாத் தானே இருக்கு. இன்னும் எதைக் கட்ட” என்று அவளின் அலமாரியை திறந்து பார்த்து நிற்க…. அவளுக்கு தெரியவில்லை எதை கட்டுவது என்று..

அஸ்வதியையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதால் அவளுக்கு உடை எடுக்க உள்ளே வந்தவன் தாமரை அப்படியே நிற்பதை பார்த்து “என்ன?” என்றான்.

“என்ன கட்டுறதுன்னு தெரியலை?” என்று முழிக்க,

“தள்ளு” என்றவன்… அவனே ஒன்றை எடுத்துக் கொடுத்து “இது கட்டு” என்றான். “ஆ” என்று மீண்டும் வாய் பிளந்து நின்றாள். ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகளை எப்படி தாங்குவாள் தாமரை.

வேகமாக அஸ்வதியின் உடைகளை ஆராய்ந்து ஒன்று எடுத்தான், அவளுக்கு மாற்றி விட அஸ்வதியை தூக்கி வெளியே போகப் போனவன் “மித்ராக்கு” என்று கேட்க..

“நீங்களே எடுத்துக் கொடுங்க” என்றாள் தயங்கித் தயங்கி.

வேகமாக அவளுக்கும் ஒன்றை எடுத்தவன்.. “சீக்கிரம் பத்து நிமிஷத்துல ரெடியாகணும்” என்றான்.  

வெளியே போகப் போகிறோம் கணவனுடன் என்பது அவ்வளவு உற்சாகத்தைத் தர, “சரி” என்று சொல்லி மித்ராவை தயார் படுத்தி அவளும் மாற்றி என்று மின்னல் வேகத்தில் கிளம்பினாள்.

ஒரு வயர் புட்டியுடன் கிளம்பி நின்றவளை பரிதாபமாக பார்த்தான்.. “இதை தூக்கிப் போனா, அந்த செக்யுரிட்டி உள்ளயே விட மாட்டான்.. என்ன பொண்ணு போ நீ, வெளில நாலு மனுஷங்களை பார்ப்பியா மாட்டியா நீ” என்று கடிந்தவன்..

“வேற இல்லை” என்று தாமரை நிற்க..

இதுவரை தான் எதுவுமே அவர்களுக்கு வாங்கியதில்லை என்று புரிய… இன்னும் நாகரீகங்களுக்கு அவளும் பழக்கப் படவில்லை என்று புரிந்தது. தாமரையின் ஊர் ஒரு கிராமம் அது தெரியும், இன்னும் மற்ற விவரங்கள் அவன் கேட்டுக் கொண்டதில்லை.

தான் தன்னைப் பற்றி சுகன்யாவைப் பற்றி அதிகம் நினைப்பதை விட்டு, இனியாவது இவர்களை கவனிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தான், காலம் எல்லாம் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற வேண்டுதலோடு.      

 

Advertisement