அத்தியாயம் ஏழு:

“ஜெயஸ்ரீ வந்து வணக்கம் சொல்லு”, என்று தந்தை வஜ்ரவேல் சொல்ல… மெதுவாக அவளின் ஸ்டிக்கை பிடித்தபடி நடந்து வந்து, “வணக்கம்”, என்கிற மாதிரி கை குவித்தாள், வாயைத் திறந்து உச்சரிக்கவில்லை.

ஒரு கனமான அமைதி அங்கே… பாவாடை தாவணியில் இருந்தாள் ஜெயஸ்ரீ… வெளியே பாதம் மட்டுமே தெரிய… அதில் ஒரு காலில் தெரிந்த ஷூ. அவள் கால்கள் பாதிக்கப்பட்டு அதைத் தாங்கி நடக்க அந்த ஷூ போட்டிருக்கிறாள்.. ஆனால் அதைக் கொண்டும் சரியாக நடக்க முடியாமல் கூட ஒரு ஸ்டிக் அவளின் கைகளில். நடராஜனும் தேவியும் அப்படியே அமர்ந்துவிட்டனர்.

“எங்க பொண்ணு கிட்ட சில குறை”, என்று ராஜவேல் சொன்னான் தான். ஆனால் இப்படி நடராஜனுக்கு அந்த சமையத்தில் தோன்றவேயில்லை. 

வீட்டில் அவளும் அப்பாவும் மட்டுமே அந்த நேரத்தில்… கூட ராஜவேல் தனம் மற்றும் எப்போதும் வீட்டில் உதவிக்கு இருக்கும் ஆயா என்று யாரும் இல்லை.

பெரிய வீடு… சற்று வசதியானவர்கள் என்று காட்டியது… ராஜவேலு போல தோற்றமெல்லாம் இல்லை… மரியாதையான தோற்றம் வஜ்ரவேலிற்கு இருந்தது.

ஜெயஸ்ரீயை தான் தேவியும் நடராஜனும் அளவெடுதனர்… இந்த குறைகள் இல்லாவிட்டால் அழகான பெண் தான். அழகு குழந்தைத்தனமான முகம்.. சற்று உயரமாக.. அளவான உடல் கட்டில் இருந்தாள்…

ஆனால் பார்பவர்களுக்கு அந்த அழகை விடவும் அவளின் குறை தான் பளிச்சென்று தெரியும்… ஏனென்றால் நம் பார்வைகள் அப்படி…. வேறு என்ன சொல்ல…

வாய் திறந்து பேசாமல் சற்று பதட்டத்தை முகத்தில் தாங்கி நின்ற ஜெயஸ்ரீயை தேவியும் நடராஜனும் பார்க்க… “நல்லா பேசுமுங்க, ஆனா புது ஆளுங்களைப் பார்த்தா பதட்டம், வார்த்தை வராது”, என்று வஜ்ரவேல் உள்ளதை உள்ளபடி பேச…

“என்னது திக்குவாயுமா?”, என்று தேவி வாய்விட்டே கேட்டுவிட்டார்.

அவர் அப்படி வாய்விட்டு கேட்டுவிடவும்… அவளின் முகம் பதட்டத்தை தாங்கி அவள் இயல்பாக இல்லை என்று எதிரில் இருப்பவர்களுக்கு தெரிந்தாலும், அந்த நிலையிலும் ஆமாம் என்பது போல அவரை பார்த்து தலையாட்டினாள் ஜெயஸ்ரீ.     

தேவியும் நடராஜனும் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தது பார்த்தபடி அமர்ந்து இருக்க…. ஜெயஸ்ரீ ஒன்றும் பேசாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

“கண்ணு இருடாம்மா!”, என்று அப்பா சொன்னதை காதில் வாங்கவேயில்லை, அவள் பாட்டிற்கு உள்ளே சென்று விட…. வஜ்ரவேலிற்கு தான் சங்கடமாகிவிட்டது.

“அதுங்க கொஞ்சம் செல்லம் அதிகம், அதுதான்! பிடிவாதமும் அதிகம் என்றார். அவர் முகத்தில் இவர்கள் பெண்ணை சரி என்று சொல்வார்களா வேண்டாம் என்று சொல்வார்களா என்ற பதட்டம்.

குறையுள்ள பெண் என்பதன் கூட, மரியாதை தெரியாத பெண் என்பதும் இப்போது நடராஜன் மற்றும் தேவியின் மனதில் பதிந்தது.

என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். நடராஜனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நன்றாக இருக்கும் பெண் என்றால் சிபியைக் கட்டி தான் ஆகவேண்டும் என்று அவரால் கட்டாயப்படுத்த முடியும்.

இப்படி இருக்கும் பெண்ணை எப்படி சொல்வது…. ராஜவேலாவது எவனாவது……. இவர்கள் அந்த மூன்று பிள்ளைகளை பார்த்தால் பார்க்கட்டும், இல்லை தாங்கள் பார்த்துக் கொள்ளலாம், மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு நான்கு வருடம் பத்மியைப் பார்த்துக் கொள்ளவேண்டும்… ஒரு பத்து வருடங்கள் அந்த ஜெய்ஷங்கரையும் ராகினியையும் பார்த்துக் கொள்ள வேண்டும், அவ்வளவு தானே…

பார்த்துக் கொள்ளலாம்! அதற்காக வாழ்நாள் முழுவதும் இந்தப் பெண்ணை எப்படி சிபி பார்த்துக் கொள்வான்.

நாளை குழந்தைகள் என்று வரும் போது அவர்களுக்கும் இப்படி ஏதாவது குறை வந்துவிட்டால்.. நினைக்கவே முடியவில்லை.

“வீட்ல போய் பையன் கிட்ட கலந்துட்டு சொல்றமுங்க”, என்றார் நடராஜன். அவர்கள் சொன்ன விதம் சரியென்று சொல்ல மாட்டர் என்று வஜ்ராவேலிற்கு தோன்ற……

“சரி”, என்பது போல தலையாட்டினார், வேறு என்ன செய்ய முடியும். தேவியும் நடராஜனும் போவதற்காக எழ…… “இருங்க! காபி குடிச்சிட்டு போகலாம்”, என்றவர்……

“ராஜவேலு!”, என்று ஒரு குரல் கொடுக்க….. ராஜவேலுவும் தனமும் விரைந்து வந்தனர். அதுவரை எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.

நேற்று இருந்த ஒரு தோற்றமில்லை, இன்று இன்னும் நீட்டாக இருந்தனர். நேற்று ஒரு மாதிரி தோற்றத்தில் இருந்தவன்… இன்று சற்று மதிக்கும்படியான தோற்றத்தில் இருந்தான் ராஜவேல்.

“குடிக்கக் கொண்டு வாங்கடா”, என்று வஜ்ரவேல் சொல்ல,

“இருக்கட்டுமுங்க, என்னன்னு முடிவெடுத்த பிறகு சாப்பிட கொள்ளலாம்”, என்று நடராஜன் சொல்ல…….

“ஐயோ! நீங்கப் பொண்ணே கட்டலைன்னா கூட போகுதுங்க… யாரு யாருக்கு என்ன ப்ராப்தமோ அதுதான்…. நம்ம முடிவு இல்லை இது… அவன் போடற முடிச்சுங்க.. அதுக்குன்னு காபி தண்ணி கூடவா குடிக்காம அனுப்புவேன்..”,

என்று ராஜவேலை ஒரு பார்வை பார்க்க, அவன் தனத்தைப் பார்க்க…. உள்ளே விரைந்தாள் தனம்.

தட்ட முடியாமல் குடித்து, எப்படியோ வீடு வந்து சேர்ந்தனர்… நடராஜனும் தேவியும்.

வீடு வந்தவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் முடங்கி விட்டனர். ஈஸ்வரரும் சுலோச்சனாவும் என்ன ஏதென்று கேட்க… என்ன வென்று சொல்வர்.

விவரம் சொல்ல, “உன்னை யார் வாக்கு கொடுக்க சொன்னது”, என்று நடராஜனை அவரின் அம்மாவும் அப்பாவும் திட்ட… விஷயம் இன்னுமே சிக்கலாகிவிட்டதை அனைவரும் உணர்ந்தனர்.

இன்று பெண்ணைப் போய் பார்க்க போகிறார்கள் என்று தெரிந்த சிபி, கோபித்துக் கொண்டு காலையில் வீட்டை விட்டுப் போனவன் தான் இன்னும் வீடு வந்து சேரவில்லை.

எப்படி அவனிடம் விஷயத்தை சொல்வது என்றும் தெரியவில்லை. அங்கேயும் இங்கேயும் சுற்றிவிட்டு சிபி இரவு தான் வீடு வந்து சேர்ந்தான்.

காலையில் இருந்து கொலைப் பட்டினி… பசி வயிற்றைக் கிள்ளிய போதும் வந்து அப்படியே வெறும் தரையில் படுத்துக் கொண்டான்.

“சிபி, எழுந்து சாப்பிடு!”, என்று அவனின் அம்மா சொல்ல… பதில் பேசாமல் அப்படியே படுத்திருந்தான்.

“எழுந்துரு”, என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தவும்……..

“மா, நான் என்ன சின்ன பையனா? சும்மா என்னை தொல்லை செஞ்சிக்கிட்டு! போங்க! சும்மா சாப்பிடுன்னு! எனக்கு பசிச்சா சாப்பிட தெரியாதா… போங்க!”, என்று அவன் கத்திய கத்தலில் வீடே அங்கே கூடி விட்டது.

“என்ன பழக்கம் இது சிபி! அம்மா கிட்ட சத்தம் போடற”, என்று நடராஜன் திட்டவும்,

“எங்கம்மா கிட்ட நான் சத்தம் போடறேன், உங்களுக்கு என்ன?”, என்றான் சிபி திரும்ப,

“எப்போர்ந்துடா இப்படி மரியாதையில்லாம பேசக் கத்துகிட்ட…”,

“நான் கத்துக்கலை! நீங்க கத்துக் குடுக்கறீங்க! ஊர் உலகத்துல நடக்கறதை எல்லாம் என் தலைமேல போட்டு…… ஒரு பொண்ணை இழுத்துட்டு போனதும் இல்லாம அவன் வேணாம்னு சொன்ன பொண்ணை என் தலையில கட்டுறீங்க…”,

“இதுல நான் எங்கம்மாவைச் சத்தம் போடறது உங்களுக்கு பெருசாத் தோணுதோ”, என்று பதிலுக்கு தந்தை முன் மல்லுக் கட்டி நின்றவனை அடக்க யாராலும் முடியவில்லை.

“சும்மா கோவப்படாத சிபி! உங்க அப்பா இந்தக் கல்யாணம் வேண்டாம்ங்ற முடிவுல தான் இருக்கார்”, என்று ராஜலக்ஷ்மி, அவன் சமாதானமாகிவிடுவான் என்று நினைத்து சொல்ல, அது சிபியின் கோபத்தை இன்னும் கிளறியது……..

“ஏன் அத்தை இந்த மாதிரி?”, என்றான் ஒரு கூர்மையான பார்வையோடு..

“அது பொண்ணு கொஞ்சம் ஊனம்”, என்று சொல்ல…. இன்னமுமே சிபியின் முகம் கடுமையானது.

“இது இன்னும் தப்பாச்சே அத்தை…….. நான் கோவத்துல கம்ப்ளைன்ட் குடுத்தேன் அவ்வளவு தான்…… சட்டப்படி நடவடிக்கை எடுத்தாங்க அவ்வளவுதான்…..”,

“அது என்னவோ யாரும் நினைச்சு பார்க்காத அளவுக்கு ரெண்டு உயிர் போயிடுச்சு! அது அவங்க தப்பு! அதுக்கு என்னை எங்கப்பா குத்தஞ்சொன்னார்! அதோட நிறுத்தினாரா… அந்த பிள்ளைங்க அனாதையானதுக்கு நான் காரணம்னு சொன்னார்”.

“அப்படியே இருக்கட்டும்! நான் அவங்களைப் பார்த்துக்கறேன்னு சொன்னா, அதெல்லாம் வாழ்நாள் முழுசும் பார்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டு, அந்த பிள்ளைங்களை யாரோ பார்த்துக்கறேன்னு சொன்ன உடனே அவங்க பொண்ணை எனக்கு கட்டி வெக்கறேன்னு சொன்னார்…”,

“கொஞ்சமாவது யோசனை வேணாம்… எனக்கு இல்லைன்னு சொல்லிட்டு இப்போ இவர் என்ன செஞ்சிருக்கார்” 

தன் மகனை இப்படி சிபி கேள்வி கேட்பது பொறுக்காமல், “சிபி”, என்று ஈஸ்வரர் ஒரு அதட்டல் போட, அதற்கு அடங்குபவனா சிபி, திரும்பி அவரையும் பார்த்து முறைத்தான்.

“இப்போ அந்த பொண்ணுக்கு குறையிருக்குன்னு வேண்டாம்னு சொல்றார்… எல்லாம் நம்ம இஷ்டத்துக்கு மாத்திகிட்டே இருப்போமா, சுயநலத்தோட மொத்த உருவம் ஆகிட்டோம் நம்ம..”,

வர்மன், அருள்மொழி, வனிதா என்று அனைவரும் சிபி ஆக்ரோஷமாக பேசுவதை வாய் பிளந்து பார்த்தனர். இவனோடு எப்படி என் தங்கை குடும்பம் நடத்தியிருப்பாள்… இந்த வேகம், இந்த ஆக்ரோஷம் நிச்சயம் ராதா தாங்கியிருக்கவே மாட்டாள் என்று தான் தோன்றியது.  

“இவன்கிட்ட இருந்து என் தங்கச்சி தப்பிச்சா”, என்பது போல கணவன் அருள்மொழியைப் பார்க்க தவறவில்லை வனிதா. திரும்பி அருள்மொழி ஒரு முறைப்பை கொடுக்க… இன்னும் அலட்சியமாக அவனை பார்த்து திரும்பினாள் வனிதா. 

சிபி இன்னும் ஆவேசமாக பேசிக் கொண்டு இருந்தான். “அதுவும் அந்த ஆளுங்க சொல்றாங்க எங்க பொண்ணுகிட்ட குறை இருக்குன்னு. அதைக் காதுல வாங்கி மனசுல கொள்ளாம, அந்த சமயம் பிரச்சனை தீர்ந்தா போதும்னு அத்தனை பேர் முன்னாடி வாக்கு குடுத்துட்டு இப்போ வேண்டாம்னு சொன்னா, அதை விட கேவலம் என்ன இருக்கு”, என்று சிபி பேச..

“அப்போ அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றியா சிபி”, என்று அவனின் தாத்தா ஈஸ்வரர் கேட்க…..

“நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற மனநிலையில இல்லை தாத்தா… ஆனா இந்த காரணம் சொல்லி ஒரு பொண்ணை மறுக்குறது ரொம்ப தப்பு… நான் வேண்டாம்னு சொல்ல, சொல்ல இவரை யாரு வாக்கு குடுக்க சொன்னா”, என்று மீண்டும் கோபமாக தந்தையை பேச….

“சிபி நமக்குள்ள குற்றம் சொல்றதை முதல்ல நிறுத்துவோம், சொன்னா கேளு!”, என்று தாத்தா அதட்டவும் சற்று அடங்கினான்.

“பொண்ணுக்கு நடக்கறதுல சிரமம் போல, என்ன பிரச்சனைன்னு எல்லாம் உங்கப்பாவும் அம்மாவும் கேட்கலை…. அது கால்ல ஷூ மாதிரி போட்டு தடி வெச்சி நடக்கும் போல… அப்புறம் பேசலையாம்”,

“என்ன பேசவும் வராதா”, என்று சிபி கேட்க…..

“திக்குவாய் போல”, என்று தேவி சொல்ல……..

பிள்ளைகள் ஆதரவின்றி போனப் பாவத்தோடு, இப்போது ஒரு பெண்ணை திருமணம் செய்கிறோம் என்று எல்லோர் முன்னும் வாக்கு கொடுத்து, இப்போது அதையும் வேண்டாம் என்பது போல சொல்வது நடராஜனுக்கு மிகுந்த ஒரு மனவுளைச்சளைக் கொடுத்தது….

அதையும் விட ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறோம் என்று சொல்லி மறுப்பது அதுவும் அவளின் குறையைச் சுட்டிக் காட்டி…            

“எப்போதிலிருந்து இப்படியானேன் நான்!”, ஒரு கழிவிரக்கம் அவரைச் சூழ, நின்று கொண்டிருந்தவர் அப்படியே தடுமாறி பிடிப்பின்றி சாயப் போகவும், வீடே பதறியது. அவசரமாக மாமல்ல வர்மன் தந்தையை பிடித்து நாற்காலியில் அமர வைத்தான்…

என்ன ஏதென்று தெரியாத போதும், அதுவரை அத்தனை சத்தங்களையும் கேட்டு, அது பாட்டிற்கு ஏதோ சாமான்களைக் கையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்த மணிமேகலை, பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

“ஒன்னுமில்லைடா!”, என்று வனிதா தூக்கி சமாதானம் செய்ய… இங்கே நடராஜனுக்கு அவசரமாக சிபி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க… வீடே இன்னும் ஸ்தம்பித்தது.

அருள்மொழி மகளைக் கையில் வாங்கி வெளியே தூக்கிப் போகவும்… சத்தம் குறைந்தது.

“என்ன பண்ணுதுப்பா”, என்று ஈஸ்வரர் பதட்டமாக மகனைக் கேட்க….

“ஒன்னுமில்லைப்பா! ஆனா என்னவோ சுழல்ல மாட்டின மாதிரி இருக்கு! என்ன பண்றதுன்னே தெரியலை….!”,

“தெரியாம சொல்லிட்டேன்! மனைவியா வர்றவ இவனைக் கவனிக்கலைன்னா கூட பரவாயில்லை…. ஆனா இவன் கூட நின்னு அவளை எப்பவும் கவனிக்க முடியுமா….. இதெல்லாம் கூட பரவாயில்லை, பொறக்கப் போற சந்ததிக்கு வந்திடிச்சுன்னா தேவையில்லாம சிக்கல் தேடிக்கிடேன்”, என்று சொன்ன போது,

என்னவாகினும் அவர் சொன்னது சொன்னதுதானே! அதை நிறைவேற்ற வேண்டிய கடமை தனக்கிருப்பதாய் தான் சிபிக்கு தோன்றியது.

ஒரு திருமணம் நின்ற சூழலில், திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் சிறிதும் இல்லாத போதும், ஒரு வேளை திருமணத்திற்கு பின் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படிருந்தால் விட்டா இருப்பேன் என்று நினைத்தவன்..

“இவ்வளவு குழப்பம் வேண்டாம், சொல்லிட்டோம், கல்யாணம் தானே பண்ணிக்கறேன்… என் தலை எழுத்து அதுதான்னா அனுபவிக்கறேன்! நீங்க ஆகவேண்டியதை பாருங்க!”, என்றான் தெளிவாக.

தேவி, “இல்லை, வேண்டாம்! குறையோட சேர்த்து எவ்வளவு ரப்பு அந்த பொண்ணுக்கு, நாங்க பேசப் பேச அதுபாட்டுக்கு போகுது, மரியாதை தெரியாத பொண்ணு, வேண்டாம்!”, என்றும் சொல்ல….

“வீட்டுலயே வெச்சு, பார்த்துப் பார்த்து ஒரு பொண்ணுக்கு மரியாதை கத்துக் குடுத்தீங்க, அது போகலை”, என்று சிபி ராதாவை இழுக்க….

தங்கையைப் பற்றி பேசவும் வனிதா… “அதான் அந்த பொண்ணு வேண்டாம்னு சொல்றாங்க தானே, நீ எதுக்கு தேவையில்லாததை பேசுற”,  என்று சொல்ல….

“அந்தப் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணுவேன்”, என்றான் சிபி யார், எவர், என்ன குறை, என்று ஜெயஸ்ரீயைப் பற்றி எதுவும் தெரியாமல்.

“வேண்டாம்டா! பணம், காசு எவ்வளவுன்னாலும் அந்த பசங்களுக்கு கொடுத்துடலாம். ஆனா வாழ்க்கை முழுசும் அந்தப் பொண்ணை நீ வெச்சி பார்த்துக்க முடியாது! அவங்கப்பா திக்குவாயான்னு கேட்டதுக்கு ஆமாம்னு சொன்னாரு, ஆனா அந்தப் பொண்ணு பேசவேயில்லை! ஊமையோ என்னமோ!”, என்று தேவி மறுபடியும் சொல்ல…..     

“அம்மா! எப்படி வேணா இருந்துட்டு போறா…. நான் ஒரு வேலை தப்பு செஞ்சிருந்து, கடவுள் அதுக்கு தண்டனையா தான் இந்த வாழ்க்கையை கொடுக்கிறார்னா அதை நான் ஏத்துக்கறேன்…”,

“நீங்க கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லுங்க!”,

“இல்லை, முடியாது!”, என்று பிடிவாதமாக தேவி மறுக்க… கூட வீட்டில் எல்லோரும் வேண்டாம் என்று சொல்ல….

“ம்கூம், நான் அந்தப் பொண்ணைப் பண்ணிக்கறேன்”, என்று சிபி பிடிவாதமாகச் சொல்லி, முடிவெடுத்து உணவருந்த அமர்ந்தான்…

சிபிக்கு தெரியவேயில்லை, “நான் செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சிக்கறேன்”, என்ற வார்த்தைகள் ஜெயஸ்ரீயை எத்தனை வருத்தப்படுத்தும் என்று.

அவளின் உடளவு ஊனத்தை விட, அவளின் மனதை இன்னும் ஊனமடைய செய்யும்,  கொஞ்சம் கொஞ்சம் வரும் அவளின் வார்த்தைகள் வராமலே போகக் கூடும், ஏனென்றால் அவளுக்கு யாரோடும் பேச விருப்பம் இல்லாமல் அற்றுப் போகக் கூடும் என்று.