NVNN-8

அத்தியாயம் 8

ஆதி தன்னுடைய நண்பன் முரளியிடம் நங்கையின் வேலை சம்பந்தமாக பேச, நங்கை ஏற்கனவே ஆசிரியர் வேலை பார்த்திருந்ததால், தன் தந்தையிடம் சிபாரிசு பெற்று, அருகிலுள்ள பள்ளி ஒன்றிலேயே வேலை பெற்று விடலாம் என்று நம்பிக்கை அளித்தான்.

மதியத்திற்கு தக்காளி சாதம் உருளைக்கிழங்கு வறுவல் என்று எளிமையாக நங்கை சமைக்க, ஆதிக்கு என்னவோ தேவாமிர்தமாகத்தான் இருந்தது.

முரளியின் தந்தை சந்திரசேகரின் சிபாரிசின் பெயரில், அன்று மாலையே நங்கைக்கு அருகில் இருந்த தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டது. அடுத்த நாளில் இருந்து வேலைக்கு வர சொல்லிவிட்டார்கள். மாதம் பத்தாயிரம் சம்பளம் என்று கூறினார்கள். அதுகூட நங்கைக்கு ஏற்கனவே முன் அனுபவம் இருந்ததாலும், முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதாலும்தான்.

ஒன்றுமே இல்லாததற்கு இது பரவாயில்லை என்றுதான் நங்கை நினைத்துக்கொண்டாள். ஆதிக்கு இப்பொழுதுதான் பணத்தின் அருமையே தெரிந்தது. ஊதாரித்தனமாக தான் மாதம் செலவழித்த தொகையே நங்கையின் மாத சம்பளத்தை விட அதிகம் என்று நினைக்கும் போதே அவனுக்கு அவமானமாக இருந்தது.

இரவு கடையில் வாங்கிய மாவில் தோசை ஊற்றி உண்டுவிட்டு படுக்க தயாராகினர். இருந்த ஒரு பாயை நங்கை விரித்து இரண்டு தலையணைகளையும் பாயின் மீது போட, ஒரு தலையணையை மட்டும் எடுத்தவன் சற்று தள்ளி வெறும் தரையில் போட்டுக்கொண்டான்.

“என்ன பண்றீங்க” எனக் கேட்டாள் நங்கை.

“நான் இங்கேயே படுத்துக்கிறேன்” என்றான் ஆதி.

“ஏன் வெறும் தரையில் படுக்குறீங்க? இந்த பாய்ல ரெண்டு பேர் தாராளமா தூங்கலாம், இங்கேயே படுங்க”

“இல்லைங்க நாம ஒரு நல்ல நிலைமைக்கு வர்ற வரைக்கும் நான் இங்கேயே படுத்துக்கிறேன்” என்றான் ஆதி.

அவன் கூறுவதின் அர்த்தம் உணர்ந்த நங்கை சிரித்துக்கொண்டே, “சரிங்க அதுக்காக வெறும் தரையில ஏன் படுக்கணும்? பாயிலேயே ரெண்டு பேரும் தள்ளித்தள்ளி படுத்துக்கலாம்” என்றாள்.

“உங்க அளவுக்கு நான் அவ்ளோ நல்லவன் எல்லாம் கிடையாதுங்க” என ஆதி கூற, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்  ஆதியை பார்த்தாள் நங்கை.

“இதுல என் மேல உங்களுக்கு ஒன்னும் கோவம் இல்லையே?” என ஆதி கேட்க,

“ஐயோ எதுவும் பேசாதீங்க, நீங்க அங்கேயே படுத்துக்குங்க. நான் இங்கேயே படுத்துக்கிறேன்” என கூறி விட்டு பாயில் படுத்த நங்கை அவனை பார்க்க முடியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

‘என்ன கோவமா இல்லையான்னு கேட்டதுக்கு பதிலே சொல்லாம படுத்துட்டாங்க’ என மனதிற்குள் நினைத்த ஆதியும் வெறும் தரையில் படுத்துக்கொண்டான்.

காலையில் ஆதி கண்விழித்தபோது நங்கை மும்மரமாக சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள்.

“என்னங்க ஏன் தனியா செய்றீங்க? என்னை எழுப்ப வேண்டியதுதானே” என கேட்டுக்கொண்டே எழுந்தான் ஆதி.

“பரவாயில்லை” எனக் கூறிய நங்கை மீண்டும் சமையலில் கவனமாக, குளியலறை சென்று வந்தவன் “நீங்க போங்க, கிளம்புங்க நான் செய்றேன்” என்றான்.

“இன்னும் டைம் இருக்கு, நான் முடிச்சுட்டு கிளம்புறேன்” என்றாள் நங்கை.

“எல்லா வேலையும் நீங்களே செஞ்சுட்டு, வேலைக்கும் போவீங்களா? நான் பார்த்துட்டு வெட்டியா உட்கார்ந்துக்கவா?” என கோபமாக ஆதி கேட்க,

“ஹப்பா என்னா கோபம்? நீங்களே பண்ணுங்க” என நங்கை வழிவிட, “அது…” என்றவன் “என்ன பண்ணனும்னு சொல்லிட்டு போங்க” என்றான்.

“மதிய சமையல் முடிச்சுட்டேன். காலை டிஃபன் மட்டும்தான் செய்யணும். மாவு இல்ல, சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சி வச்சிருக்கேன். அதை கொஞ்சம் தேய்ச்சு வச்சுடுங்க” எனக்கூறிவிட்டு குளியலறைக்கு சென்றாள் நங்கை.

குளித்து நைட்டி அணிந்து கொண்டு வந்தவள், ‘புடவை மாத்தணும் இவரை எப்படி வெளியே போகச் சொல்வது?’ என யோசித்து, “என்னங்க பால் வாங்கிட்டு வர்றீங்களா?” என கேட்டாள்.

“இருங்க இன்னும் இரண்டு சப்பாத்திதான் இருக்கு. அதையும் சுட்டுட்டு போறேன். நீங்க கிளம்பிகிட்டே இருங்க. நீங்க கிளம்பி முடிக்கிறதுக்குள்ள…” என்றவன் முடிக்காமல் ஏதோ நினைத்தவனாய் நங்கையை பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

மின்சார அடுப்பை அணைத்தவன் சட்டையைப் போட்டுக் கொண்டு, திரும்பி பார்க்காமலேயே “கதவை சாத்திக்குங்க” என்று உரைத்து விட்டு வெளியே வந்தான்.

“டேய் ஆதி, ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு இன்னும் உனக்கு வளரடா” என தனக்கு தானே கூறி முன் நெற்றியில் தட்டிக்கொண்டு பால் வாங்க கடைக்குச் சென்றான்.

அவன் திரும்ப வரும்பொழுது நங்கை தயாராகியிருந்தாள். ஆதி குளிக்கச் செல்ல, பாலைக் காய்ச்ச வைத்துவிட்டு பாத்திரங்களை ஒழித்து கழுவும் பேசினில் போட்டாள்.

இருவரும் உணவருந்தி முடிக்க, தேநீர் தயாரிக்க சென்றாள் நங்கை. அவளைத் அடுத்தவன் தானே தயாரித்தான். தேநீரை ரசித்து அருந்தினாள் நங்கை.

“வாங்க உங்களை ஸ்கூல்ல விட்டுட்டு அரியர்ஸ் எக்ஸாம் எழுத அப்ளை பண்ண நான் காலேஜ் போகணும்” என கூறிக்கொண்டே வண்டி சாவியை எடுத்தான் ஆதி.

மதிய சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டு கைப் பையுடன் நங்கையும் தயாரானாள்.

நங்கையை பள்ளியில் விட்டவன், “முதல்நாள் ஸ்கூல்ல பாடம் எடுக்க போறீங்க டீச்சரம்மா. ஆல் த பெஸ்ட்” என்றான் ஆதி.

“நீங்களும்தான் ரொம்ப நாள் கழிச்சி, இல்ல இல்ல ரொம்ப வருஷம் கழிச்சு காலேஜ் போறீங்க. ஆல் த பெஸ்ட்” என்றாள் நங்கை. இருவரும் சிரித்துக்கொண்டே விடைபெற்று சென்றனர்.

பழனிவேல் வந்து சாப்பிட அமர எப்போதும் உணவு பரிமாற வரும் சந்திரா அடுக்களையில் நின்று கொண்டு மருமகளை அனுப்பி வைத்தார்.

“உன் அத்தை எங்கம்மா?” எனக் கேட்டார் பழனிவேல்.

“அது… வேலையா இருக்காங்க மாமா” என்றாள் அம்பிகா.

ஒன்றும் கூறாமல் சாப்பிட்டு முடித்த பழனிவேல், “சந்திரா என் வண்டி சாவியை எடுத்துக் கொடு” என்றார்.

“ஏன் இவருக்கு எடுத்துக்க தெரியாதாமா?” என வாய்க்குள்ளேயே முனகிக்கொண்டு, வண்டி சாவியை எடுத்து வந்தவர், கையில் தராமல் அவர் அருகில் இருந்த நாற்காலியில் வைத்தார்.

“ஏண்டி உன் புள்ளையை நானா வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன்? அவனா போனா நீ என்கிட்ட மூஞ்சிய தூக்கிட்டு திரிவியா?” என அதட்டினார் பழனிவேல்.

“என்னடா ரொம்ப சவுண்ட் கொடுக்கிற? என் ராசா வீட்டை விட்டுப் போனதுக்கு நீதான் காரணம். என்னைக்காவது நீ அவன மனுஷனா மதிச்சிருப்பியா? பேசிப்பேசியே கொன்ன. அதான் அவன் பொண்டாட்டிய கூப்பிட்டுகிட்டு வீட்டை விட்டே போய்ட்டான். என் ராசா… என் தங்கம்… என்ன கஷ்டப்படுறானோ” என விசாலம் மூக்கைச் சிந்தினார்.

“ச்சீய்… இந்த வீட்டில மனுசன் நிம்மதியா இருக்க முடியுதா?” என கத்திக்கொண்டே பழனிவேல் வெளியே வர, டாலியும் அவரைப் பார்த்து சத்தமாக குறைத்தது.

“நீ சாப்பிடுற எலும்பு கறி கூட என் பணத்துல வாங்கி போடுறதுதான். நீ எனக்கு நன்றியா இல்லாம அவனுக்காக என்ன பார்த்து குறைப்பியா? தொலைச்சிடுவேன் தொலைச்சி” என டாலியையும் பார்த்து சத்தம் போட்டார்.

“என் புள்ளை டாலியையும் அவனே வச்சுக்கிறேன்னு சொன்னான். நான்தான் அதுவாவது எங்க கூட இருக்கட்டும்னு சொல்லிட்டு வந்தேன். உங்க பணத்துல கறி வாங்கி போட்டா…? அதுக்குதானே காவல் காக்குது. டாலிய ஏதாவது சொன்னீங்க, அத கூட்டிட்டு நானும் என் புள்ள கூடவே போய்டுவேன்” என சந்திரா கூற, “என்னையும் கூட்டிட்டு போ” என விசாலம் கூற ஒரே ஓட்டமாக கடைக்கு சென்று விட்டார் பழனிவேல்.

வீட்டில் சத்தம் போட்டு விட்டு வந்தாலும் அவருக்கும் தன் மகனை நினைத்து கவலையாகத்தான் இருந்தது. ‘இப்படி ஒரு வேலை வெட்டி கூட இல்லாம பொண்டாட்டியை கூப்பிட்டுகிட்டு வெளிய போய்ட்டானே. நான் என்ன புதுசாவா பேசிட்டேன்? எப்பவும் போலதானே பேசினேன். அதுவும் அவன் இப்படி இருக்கானேன்னு ஆதங்கத்தில்தானே பேசினேன். இப்படி ஒரேடியா போய்டுவான்னு நினைக்கலையே’ என மனதிற்குள்ளேயே குமைந்தார்.

நங்கைக்கு ஏற்கனவே ஆசிரியர் பணியில் முன் அனுபவம் இருந்த காரணத்தால் சிரமமாக ஒன்றும் இல்லை. கற்பித்தல் அவளுக்கு மிகவும் பிடித்த பணியும் கூட, அதனால் உற்சாகமாகவே தன் பணியை செய்தாள்.

ஆதி தன் கல்லூரிக்கு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு வருகிறான். நிறைய மாற்றங்கள் ஆகியிருந்தது. நேரே அலுவலகம் நோக்கி சென்றான். அரியர்ஸ் தேர்வுகளை எழுதுவது பற்றி விசாரித்தான். கல்லூரி முதல்வரை பார்த்து அனுமதி கடிதம் வாங்கி வருமாறு கூறினார்கள். ஆதி படிக்கும் போது இருந்த அதே முதல்வர்தான் இப்பொழுதும் இருந்தார்.

அவருக்கு நல்ல நினைவுத்திறன் போலும். ஆதியை உடனே அடையாளம் கண்டு கொண்டார். பின்னே அவரது அறையில் வைத்து தானே பழனிவேல் பெல்ட்டால் விளாசித் தள்ளினார். மறக்க முடியுமா என்ன அவரால்.

தான் வந்த காரணத்தை ஆதி அவரிடம் கூற, “இப்பவாவது உனக்கு பொறுப்பு வந்ததே. படிக்கிற வயசுல படிக்காம கல்ச்சுரல்ஸ்க்கு போன இடத்தில் யாரோ ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே, அந்தப் பொண்ணு சம்மதிச்சுதா? நல்லா படிச்சு ஒரு வேலையில் இருந்து உன் அப்பா அம்மாவோட போய் பொண்ணு கேட்டா, அந்தப் பொண்ணு ஓகே சொல்லும். அந்தப் பொண்ணே மறுத்தாலும் அவங்க அப்பா அம்மாவே உன்ன பத்தி சொல்லி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. அதையெல்லாம் விட்டு இத்தனை வருஷத்தை வீணடிச்சிட்டியே” என ஒரு உண்மையான ஆசிரியராய் தன்னுடைய மாணவனுக்காக வருத்தப்பட்டார் அவர்.

“ஆமாம் சார் இத்தனை வருஷத்தை வீணடிச்சிட்டேன்னு இப்போ நான் வருத்தப்படுகிறேன். எனக்கு இப்போ கல்யாணம் கூட ஆயிடுச்சு. பொண்ணு வேற யாரும் இல்லை அப்போ லவ் லெட்டர் கொடுத்தேனே அதே பொண்ணுதான்” என்றான் ஆதி.

ஆச்சர்யமாய் பார்த்தவர் “ம்… உனக்கு வாழ்க்கையில இரண்டாவது சான்ஸ் கிடைச்சிருக்கு. எல்லாருக்கும் இது கிடைச்சிடாது ஆதி. கெட்டியா பிடிச்சு முன்னேறி வரணும். ஆல் த பெஸ்ட்” என்று கூறியவர், அவன் அரியர்ஸ் தேர்வுகள் எழுதுவதற்கான அனுமதி கடிதத்தை அலுவலகத்திற்கு வழங்கினார்.

கடிதத்தை அலுவலகத்தில் கொடுத்து தேர்வு எழுத விண்ணப்பத்தையும் வாங்கி விட்டான். அவர்கள் கட்டணமாக கேட்ட தொகைதான் அவனிடம் இல்லை. விஜய் கொடுத்த பணம் வீட்டிற்கு பொருட்கள் வாங்கவென்று வெகுவாக கரைந்திருந்தது.

மீதம் உள்ள பணத்தை வைத்துதான் இந்த மாதத்தை ஓட்டியாக வேண்டும். மீண்டும் அவனிடம் கேட்க தயக்கமாகவும் இருந்தது. முரளியிடம் கேட்கலாம் என்று நினைத்தான். ஏற்கனவே வீட்டிற்கு அவன் முன் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அவனிடம் கேட்க யோசனையாக இருந்தாலும் வேறு வழியில்லை அவனிடமே கேட்டு பார்க்கலாம். பகுதி நேர வேலை பார்த்து பணத்தை திருப்பி தந்து விடலாம் என்று நினைத்தான்.

மாலையில் வீட்டிற்கு வந்தபின் நங்கை ஆதியிடம் அரியர்ஸ் தேர்வுகளைப் பற்றி விசாரித்தாள்.

“இன்னும் ஒன்றரை மாசத்தில எக்ஸாம்ஸ் வருதுங்க. நாளைக்கே ஃபீஸ் கட்டி அப்ளை பண்ண சொல்லிட்டாங்க” என்றான்.

“அதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றீங்க? ஒன்றரை மாசம்தான் இருக்குதுன்னு நினைக்கிறீங்களா? டைம் வேஸ்ட் பண்ணாம இப்போ இருந்தே படிக்க ஆரம்பிச்சுட்டா, ஈசியா எல்லாத்தையும் எழுதிடலாம்” என்றாள் நங்கை.

ஆதி ஒன்றும் கூறாமல் அப்படியே அமர்ந்திருக்க, “என்னங்க என்னென்னு சொன்னாதானே தெரியும்” என்றாள்.

“ஃபீஸ் கட்டணம்ங்க, கையில அவ்வளவு பணம் இல்லை” என்றான் ஆதி.

‘இவ்வளவுதானா” என்றவள் தாமதிக்காமல் தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி, “இதை வித்துடுங்க” என்றாள்.

நங்கையை முறைத்தவன் “இது வேணாங்க நான் வேற ஏற்பாடு பண்ணுக்கிறேன்” என்றான்.

“என்ன ஏற்பாடு பண்ணுவீங்க?”

“பார்ட் டைமா ஏதாவது வேலைக்கு போகலாம்னு இருக்கேன்”

“இப்போ வேலைக்கு எல்லாம் போனீங்கன்னா எப்படி படிப்பீங்க”

“நிறைய பேர் வேலைக்கு போயிகிட்டே படிக்கிறது இல்லையா? அது மாதிரிதான் நானும் படிப்பேன்”

“அவங்க எல்லாம் ரெகுலரா காலேஜ் போய் படிக்கிறவங்களா இருப்பாங்க. உங்களுக்கு இன்னும் ஒன்றரை மாசத்தில் எக்ஸாம் வரப்போகுது. நீங்க படிப்ப விட்டே வருஷக்கணக்கில ஆகுது. இப்போ வேலைக்கு எல்லாம் போனீங்கன்னா சரியா படிக்க முடியாது. நான் சொல்றதைக் கேளுங்க. வாங்கிக்குங்க” என்றாள் நங்கை.

“சரிங்க வேலைக்கு போகல, ஆனா இது வேணாம். வேற யார்கிட்டயாவது உதவி கேட்டு பார்க்கிறேன்” என்றான் ஆதி.

“வேற யார்கிட்டயும் உதவி வாங்கிப்பீங்க. ஆனா நான் கொடுத்தா வேணாம்னு சொல்வீங்களா? நாளைக்கு நீங்க ஏதாவது எனக்கு வாங்கி கொடுத்தீங்கன்னா நானும் வேணாம்னு சொல்றேன்” என நங்கை கோபமாக கூற, “உங்களுக்கு பிடிவாதம் ஜாஸ்திங்க. சும்மாவா பிடிவாதம் பிடிச்சி என்னையே கட்டிக்கிட்டவங்க ஆச்சே”என கூறிக்கொண்டே செயினை கையில் வாங்கிக் கொண்டான்.

“கட்டுன அன்னைக்கே வீட்டை விட்டு அழைச்சுட்டு வந்துட்டேன். ரெண்டு நாள்ல போட்டிருக்க நகையையும் விக்கப் போறேன்” என விரக்தியாக கூறி சிரித்தான் ஆதி.

“கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு ஒரு பிரச்சனைன்னதும் என்னை விட்டுட்டு போகாம நின்னீங்க. உங்க அப்பா உங்களை எவ்வளவு திட்டியிருந்தாலும் வெளியே வராத நீங்க எனக்கு சோறு போடணும்னு சொல்லி காட்டவும் பொறுக்க முடியாமல் வெளியில் வந்துட்டீங்க” என நங்கை சொன்னாள்.

“என்னங்க நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கா” என ஆதி கேட்க,

“ம்ஹூம்… காதல் கணவா உன் கரம் விடமாட்டேன்” என நங்கை கூற இருவரும் அடக்கமுடியாமல் சிரித்தனர்.

காலமும் அவர்களைப் பார்த்து சிரித்தது.