NVNN-6

அத்தியாயம் 6

செல்வி தமிழ்நங்கை திருமதி ஆதித்தியவேந்தனாக சற்று நேரத்திற்கு முன்னர்தான் மாறிப்போயிருந்தாள். மாப்பிள்ளை மாறிப் போனதால் ஆளுக்கொன்று பேசினாலும், திருமணம் நிற்காமல் நடக்கிறது என்று சிலர் மகிழ்ச்சி அடையவும் செய்தனர்.

திருமண மண்டபத்தில் இருந்து பெண் வீட்டிற்கு சென்றனர். நங்கையின் வீட்டில் அனைவரும் நங்கையின் திருமணம் நிற்காமல் நடந்ததில் மகிழ்ந்தாலும், பிரேமாவுக்கும் அசோக்கிற்கும் ஆதியை பிடிக்காததால் உர்ரென்று இருந்தனர்.

பிரேமாவிற்கு வேதனையாக இருந்தது. தன் மகளின் மண வாழ்க்கையை பற்றி என்னென்னவோ கனவு கண்டு கொண்டிருக்க, ஆதி மாப்பிள்ளையாக வந்தது அவருக்கு சிறிதும் மகிழ்ச்சி அளிக்கவில்லை.

அசோக்கும் நங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை என்றுதான் நினைத்தான். ‘எதை வைத்து இந்த பெண் இவனைப் பிடிச்சிருக்குன்னு சொல்றா. பெரியவங்களும் இவளுக்கு எடுத்து சொல்லாமல் இப்படி இவள் வாழ்க்கையை வீணாக்கி விட்டார்களே’ எனவும் நினைத்தான்.

விளையாடிக்கொண்டிருந்த தன்னுடைய இரண்டு வயது மகள் மகிழினியைப் பார்த்து, ‘என் பொண்ணுக்கு எப்படி வாழ்க்கை அமைய போகுதோ?’ என இப்போதே கவலைப்பட்டான்.

“சீர்வரிசை பொருட்கள் என்று எதுவும் வாங்க வேண்டாம். வேண்டுமென்றால் அதற்குரிய பணத்தை பெண்ணின் பெயரில் போட்டுவிடுங்கள்” என்று மாணிக்கவேல் முன்பே கூறியிருந்ததால் சீர்வரிசை என்று எதுவும் வாங்கவில்லை.

தமிழ் நங்கையை மாப்பிள்ளை வீட்டில் விட, துணையாக தமிழ்தென்றலும் அவள் கணவன் அசோக்கும் சென்றனர். வேனில் அருகருகே உட்கார்ந்திருந்தாலும் ஆதியும் நங்கையும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

வேனில் கடைசி இருக்கையின் கீழே டாலி உறங்கிக் கொண்டு இருந்தது. பழனிவேலை தவிர மற்றவர்கள் அனைவரும் ஆதிக்கு திருமணம் முடிந்துவிட்ட நிம்மதியில் இருந்தனர். பழனிவேலோ ஆதியின் வாழ்க்கையை நினைத்து யோசனையாக இருந்தார்.

தமிழ்நங்கை மன நிறைவாகவே உணர்ந்தாள். ஆதியின் இன்றைய நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று குற்ற உணர்ச்சியில்தான் முதலில் இருந்தாள். அவன் நல்லவன் என்பதையும் போக போக அறிந்து கொண்டாள்.

ஆனந்த் திருமணத்தின் முதல் நாள் ஓடிப் போய்விட, தன்னுடைய திருமணத்தை காண இயலாது என்று ஊருக்குப் போகத் தயாரானவன், இந்த நிலையில் விட்டுட்டு போக முடியாது என்று எப்போது கூறினானோ அப்போது நங்கை நினைத்தது ஒன்றுதான். தன்னை திருமணம் செய்து கொள்ள இதை விட பெரிய தகுதி வேறெதுவும் இல்லை. இன்னும் அவன் மனதில் தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தவள், தன்னுடைய மனதில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இடமளிக்க தயாராகிவிட்டாள்.

ஆதியோ விரும்பிய பெண்ணை மணந்து கொண்ட மகிழ்ச்சியை விட, தன்னுடைய நிலையை எண்ணி தவித்துக் கொண்டிருந்தான்.

‘ஒரு பொண்ணு, எல்லோரும் மறுக்கும் பொழுது என்னைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறி நம்பி வந்து விட்டாள். அவளை எப்படி மகிழ்ச்சியாக வாழவைப்பேன்? அப்பாவை கஷ்டப்படுத்துறேன்னு என் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டேனே!’ என மருகிக் கொண்டிருந்தான்.

வேனிற்கு குறுக்கே நாய் ஒன்று வர, டிரைவர் சடன் பிரேக் போட, பேலன்ஸ் இல்லாமல் சிலர் மோதிக்கொள்ள, நொடியில் தானும் பேலன்ஸ் செய்து நங்கையையும் மோத விடாமல் பிடித்துக் கொண்டான் ஆதி.

தென்றல் குழந்தையைப் பிடிக்க, நன்றாக தலையில் முட்டிக்கொண்டாள். தலையை தடவிக் கொண்டே, “குழந்தை என் மடியில இருக்கா, நான் மோதிக்காம என்னை பிடிச்சா என்ன?” என அசோக்கை பார்த்து கேட்டாள்.

“ஏண்டி நானும்தானே இடிச்சிக்கிட்டேன். இதுல உன்னை எங்கேயிருந்து பிடிக்கிறது?” எனக் கேட்டான் அசோக்.

“என் தங்கச்சி புருஷனை பாருங்க, எப்படி அவளை மோதிக்காம பிடிச்சிட்டார்ன்னு” என்றாள் தென்றல்.

இவர்களது வலப் பக்கத்தில் இருந்த இருக்கையில்தான் அவர்கள் அமர்ந்திருந்ததால் ஆதி நங்கையை மோதிக் கொள்ளாமல் பிடித்ததை அவள் கவனித்திருந்தாள்.

அவர்களையும் தென்றலையும் மாறிமாறி பார்த்தவன், “குடிகாரன் வேலையில்லாதவன்னு அவனை பெத்தவரே சொல்றாரு. உன் தங்கச்சி புருஷன்கிறதுக்காக அவனை தூக்கி வச்சி பேசுறியா?” என்றான் அசோக்.

“எப்படியிருந்தா என்ன? மோதிக்காம பிடிச்சிகிட்டார்தானே” என விட்டுக்கொடுக்காமல் தென்றல் கூற அவளை முறைத்தவன், பின் ஆதியை பார்த்துக் கொண்டே, ‘உன்னைப் போய் என் பொண்டாட்டி புகழ்ந்து பேசுறாளே. சான்ஸ் கிடைக்கட்டும், உன்னை என்ன பண்றேன் பாரு’ என மனதிற்குள் நினைத்து கொண்டான்.

ஆதியின் வீடு வந்து விட மணமக்களை ஆலம் கரைத்து, நெற்றியில் திலகமிட்டு வரவேற்றாள் அம்பிகா. முன் மாலையாகியிருக்க சிற்றுண்டி அருந்தி விட்டு சிறிது நேரத்திலேயே அசோக் தென்றலுடன் புறப்பட்டு விட்டான்.

விஜய்க்கு அவசர அழைப்பு வர அவனும் சென்று விட்டான். பழனிவேல் ஹாலில் அமர்ந்திருந்தார். அம்பிகா எல்லோருக்கும் தேநீர் தயாரிக்க நங்கையும் அவளுடன் நின்று கொண்டிருந்தாள்.

“டீ குடிச்சிட்டு நீ போய் ரெஸ்ட் எடு” என அம்பிகா கூறினாள். அம்பிகா தயாரித்த தேநீரை நங்கையே எல்லோருக்கும் கொடுத்துவிட்டு, தனக்கும் ஆதிக்கும் எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள். தேநீரை வாங்கிக் கொண்டவன் அவளிடம் என்ன பேசுவதென தெரியாமல் நின்றான்.

“குடிங்க ஆறிடப் போகுது” என்றாள் நங்கை. அவசரமாக குடித்து முடித்தான்.

“இந்த நகையை எல்லாம் கழட்டி எங்க வைக்கிறது?” என கேட்டாள் நங்கை.

“அம்மாகிட்ட கொடுக்கலாமா? பத்திரமா வச்சுப்பாங்க” என கேட்டான் ஆதி.

சரி என்றவள், காதில் அணிந்திருந்த தோட்டையும் கழுத்தில் அணிந்திருந்த செயினையும் மட்டும் விடுத்து மற்ற நகைகள் அனைத்தையும் கழட்டி தந்தாள். எடுத்துக் கொண்டவன் தன் அன்னையிடம் சென்று கொடுத்தான்.

“என்னடா இது? என்கிட்ட ஏன் கொடுக்கிற?” எனக்கேட்டாள் சந்திரா.

“நான் எங்கம்மா வச்சிக்கிறது? அண்ணியோடதெல்லாம் எங்க இருக்கோ அங்கேயே வெச்சிடேன்” என்றான் ஆதி.

வாங்கியவர் பழனிவேலிடம் சென்று கொடுத்து “இந்தாங்க நங்கையோட நகை. அம்பிகா நகையோடு சேர்த்து இதையும் லாக்கரில் வச்சிடுங்க” என கொடுத்தார்.

“முதல்ல இதைக் கொடு. இல்லேன்னா உன் புள்ள இதையெல்லாம் வித்து குடிச்சே அழிச்சிடுவான்” என்றார் பழனிவேல்.

கேட்டுக் கொண்டிருந்த ஆதிக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது. இவர்கள் பேசுவது கண்டிப்பாக நங்கையின் காதில் விழுந்திருக்கும். தன் மனைவி காதில் விழுமாறு தன்னை கேவலமாக பேசியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“பொண்டாட்டி நகைய வித்து குடிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் கேவலமானவன் இல்லை” என்றான் ஆதி.

நங்கை இருந்த அறையின் கதவு திறந்து இருந்ததாலும், இவர்கள் ரகசியம் இல்லாமல் சத்தமாகவே பேசிக் கொண்டதாலும் நன்றாகவே நங்கையின் காதில் அனைத்தும் விழுந்தது.

“ம்… ரோசம் பொத்துகிட்டு வர்றத பாரு. என் காசுல உட்கார்ந்து திங்கும் போதே இவ்வளவு ரோஷம். இன்னும் ஒரு வேலையில இருந்து நாலு காசு சம்பாதிச்சன்னு வை… கதையே வேற” என்றார் பழனிவேல்.

“கொஞ்சம் சும்மா இருங்களேன். அந்த பொண்ணு காதில் விழப் போகுது” என்று கெஞ்சினார் சந்திரா.

“விழட்டுமே… எல்லாம் தெரிஞ்சுதானே இவன கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கு” என்றார் பழனிவேல்.

“கடைக்குப் போய் மூணு நாள் ஆகுது. போய் என்னன்னு பாரேண்டா. அதை விட்டுட்டு இங்க என்ன வெட்டி நியாயம் பேசிக்கிட்டு இருக்கே” என்றார் விசாலம்.

“எல்லாம் உங்க ரெண்டு பேரையும் தான் சொல்லணும். இவனுக்கு சோறு போடாம நாலு நாள் விட்டிருந்தா என் வழிக்கு வந்திருப்பான். வீட்டு பொம்பளைங்க எல்லாம் இவனுக்கு சப்போர்ட்டு. அதான் கெட்டு குட்டிச்சுவர் ஆகிட்டான். இப்ப இவனை நம்பி ஒரு பொண்ணு வேற வந்திருக்கு. இவனால அந்த பொண்ணுக்கு சோறு போட முடியுமா? அதையும் நான் தான் செய்யணும். சோறு போடுற எனக்கு பேச உரிமை இல்லையா? ஆளாளுக்கு பேசாத, கடைக்கு போடான்னு விரட்டுறீங்க” என ஆவேசமாக பேசினார் பழனிவேல்.

“ஏங்க சோறு போடுறதெல்லாம் சொல்லி காமிப்பீங்களா? அந்த பொண்ணு என்ன நினைக்கும்? மெதுவாதான் பேசுறீங்களா? ஊருக்கே கேட்குது உங்க குரல்? முதல்ல கடைக்கு கிளம்புங்க?” என்றார் சந்திரா.

“நான் உண்மையைத்தான் சொல்றேன். இவ்ளோ நாள் இவனுக்கு சோறு போட்டேன். இப்போ இவன் பொண்டாட்டிக்கும் சேர்த்து சோறு போட போறேன். பின்ன இவனா சம்பாதிக்கிறான்?” என்றார் பழனிவேல்.

“உன் புருஷன் காசுல ஒன்னும் இனிமே நானும், என் பொண்டாட்டியும் உட்கார்ந்து திங்கல. நாங்க வீட்டைவிட்டு வெளியே போறோம்” என்றான் ஆதி.

“போடா… நல்லா போ… என்ன பூச்சாண்டி காமிக்கிறியா? இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்” என பழனிவேலு பதிலுக்கு கத்தினார்.

அறை வாசலில் நின்று கொண்டிருந்த நங்கையை பார்த்தவன், “வாங்க நாம போகலாம், இனிமே இந்த வீட்ல இருந்தா நமக்கு மரியாதை இருக்காது” என்றான்.

“ஏண்டா அந்த பொண்ணை கூப்பிடுற? போறதுன்னா நீ போடா. என் வீட்டு மருமகளை நடுவீதியில் நிக்கவைப்பியா? அந்தப் பொண்ணுக்கு என்ன தலையெழுத்து?” என்றார் பழனிவேல்.

“அவங்க என் பொண்டாட்டி. நீங்க உங்க காசுல ஒன்னும் சோறு போட வேண்டாம். நான் பார்த்துக்கறேன்” என்றவன் “வாங்க” என நங்கையிடம் கூற, வந்து அவனருகில் நின்று கொண்டாள்.

அவள் கையைப் பிடித்து அவன் வெளியே செல்ல, “டேய் அவரப் பத்தி தெரியாதாடா? மனுஷனுக்கு புத்தி கெட்டு போச்சு. அந்த பொண்ணை கூப்பிட்டுக்கிட்டு எங்க போவே?” என சந்திரா கூற, அம்பிகாவும் “போகாதடா” என்க, விசாலம் வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.

“விடு சாலா. என்ன பெத்தவரு என்னை என்ன வேணாலும் சொல்லலாம். அவருக்கு உரிமை இருக்கு. ஆனா என் பொண்டாட்டிய பேச அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. அவங்களுக்கு என்ன கொடுக்கிறேனோ இல்லையோ மரியாதையான வாழ்க்கையாவது கொடுக்க வேண்டாமா?” என்றவன், இன்னும் விசாலம் கையை விடாமல் இருக்க, அவரின் கையைப் பிடித்து அகற்றியவன் தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

பழனிவேலே அதிர்ச்சி அடைந்துவிட்டார். திருமணமும் ஆகிவிட்டது. மகன் பொறுப்பில்லாமல் இருக்கிறானே. தான் கோபமாக பேசினாலாவது, ரோசம் வந்து, ஏதாவது வேலைக்கு செல்வான் என்று நினைத்துதான் கோவமாக பேச ஆரம்பித்தார். அது எங்கெங்கோ போய் கடைசியில் ஆதி வீட்டை விட்டே வெளியேறி விட்டான். இதை பழனிவேல் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

“எலேய் இப்போ உனக்கு சந்தோஷமா? கல்யாணமான அன்னைக்கே என் ராசாவே வீட்டைவிட்டு துரத்திட்டியே. மனுஷனாடா நீ” என அழுது கொண்டே பழனிவேலின் நெஞ்சில் மாறி மாறி அறைந்தார் விசாலம்.

அவரை தடுத்து நிறுத்திய அம்பிகா இழுத்து வந்து உட்கார வைத்தாள். சத்தம் போட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார் விசாலம்.

சந்திராவும் அழ ஆரம்பிக்க, “கல்யாண வீட்டுல யாராவது இப்படி அழுவாங்களா? எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. நான் அவருக்கு ஃபோன் பண்ணுறேன். அவர் பேசி கூப்பிட்டுக்கிட்டு வந்துடுவாரு” என கூறிவிட்டு விஜய்க்கு கைப்பேசியில் அழைத்தாள் அம்பிகா.

வீட்டுக்கு அருகில் இருந்த முருகன் கோவிலில் அமர்ந்திருந்தனர் ஆதியும் நங்கையும். வீட்டிலிருந்தும், விஜய்யிடம் இருந்தும் அழைப்பு வந்து கொண்டே இருக்க, சைலன்ட் மோடில் போட்டுவிட்டு நங்கையைப் பார்த்தான்.

“என் மேல கோவமாங்க?” என கேட்டான். ‘இல்லை’ என வாயால் கூறாமல் தலையை மட்டும் ஆட்டியவள், “ஏன் உங்க அப்பா இப்படி பேசுறாங்க?” எனக் கேட்டாள்.

“அவர் எப்பவுமே அப்படித்தாங்க. என்னை பேசினா நான் பொறுத்துப் போயிருப்பேன். உங்களுக்கும் சோறு போடணும்னு சொன்னதும் எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சிங்க. அங்க இருந்தா அடிக்கடி இப்படித்தான் பேசுவார். அதான் உங்களையும் கூப்பிட்டுக்கிட்டு வீட்டைவிட்டு வந்துட்டேன்” என்றான்.

“சரி இப்ப எங்க போறதுங்க?” எனக் கேட்டாள் நங்கை.

யோசனையாக அவளைப் பார்த்தான். கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட காயவில்லை. ஒரே நாளில் இவனைத் தான் கட்டுவேன் என கூறி, அவனை திருமணமும் செய்துகொண்டு, அன்றே வெறுங்கையுடன் அவனை நம்பி, அவன் கூப்பிட்டான் என்று அவனோடு வெளியே வந்து கோவிலில் அமர்ந்திருக்கிறாள். கண்களில் துளியும் கலக்கமில்லை. ஆதிக்குதான் பயமாக இருந்தது.

தன்னுடைய கைப்பேசியை எடுத்தவன், தன் நண்பன் முரளிக்கு அழைத்து விஷயத்தை சுருக்கமாக கூறி கோவிலுக்கு வருமாறு அழைத்தான்.

சிறிது நேரத்தில் ரஞ்சித்தையும் அழைத்துக்கொண்டு முரளி வந்துவிட்டான். அவர்களை நங்கைக்கு அறிமுகம் செய்தவன், “முரளி எங்களுக்கு தங்க ஒரு இடம் வேண்டும்டா” என்று கேட்டான்.

“எங்க வீட்டில ரெண்டாவது மாடியில பெண்ட் ஹவுஸ் இருக்குடா. வாடகைக்கு இருந்த பேச்சுலர்ஸ் போன வாரம்தான் காலி பண்ணினாங்க. இப்போதைக்கு அங்க தங்கிக்குங்க. அப்புறம் வேற வீடு பார்க்கலாம்” என்றான் முரளி.

“அப்பாடா” என்றிருந்தது ஆதிக்கு.

“என்கிட்ட அட்வான்ஸ் எல்லாம் கேட்கக்கூடாது” என ஆதி கூற, அவனை முறைத்த முரளி, “சிஸ்டர் இருக்காங்களேன்னு பார்க்கிறேன். இல்லைன்னா இந்நேரம் கன்னம் பழுத்திருக்கும்” எனக் கூறினான்.

“இந்தா என் பைக் சாவி. சிஸ்டரை கூட்டிட்டு வா. நான் ரஞ்சித்தோட வர்றேன்” எனக் கூறிவிட்டு முரளி முன்னே செல்ல, ஆதி நங்கையை அழைத்துக்கொண்டு முரளியின் பைக்கில் பின்னே சென்றான்.

முரளியின் வீடு அருகில்தான் இருந்தது. தரைத்தளத்தில் அவனது குடும்பம் இருக்க முதல் தளத்தில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருக்க, இரண்டாவது தளத்தில் இருந்தது பெண்ட் ஹவுஸ். இவர்கள் செல்லும்போது முரளியின் அம்மா சாந்தி மட்டும் வீட்டில் இருந்தார்.

அவர்களை வீட்டிற்குள் அழைத்து தன் அம்மாவிடம் முரளி விஷயத்தை கூற, “அப்பா ஏதாவது சொல்லப் போறார் டா” என தயங்கினார் சாந்தி.

“அதுக்குதானே உன் கிட்ட சொல்றேன். நீதான் சமாளிக்கணும். முதல்ல சாவியை எடு” என்றவன் “குடிக்க ஏதாவது போடுமா, நான் இப்ப வர்றேன்” என கூறிவிட்டு, சாவியை எடுத்துக் கொண்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு இரண்டாவது மாடிக்கு சென்றான்.

15-க்கு 10 அடியில் இருந்தது அந்த குளியலறையுடன் இணைந்த பெண்ட் ஹவுஸ். ஒரு சிறிய மேடை அடுப்பு வைக்கவென இருந்தது. சுத்தமாகவே இருந்தது.

“டேய் கோபம் குறைஞ்சதும் போற மாதிரியா? இல்லை இது உறுதியான முடிவா?” எனக் கேட்டான் ரஞ்சித்.

“அங்கேயே இருந்தாக் கூட எங்க அப்பா கொஞ்சமா பேசுவாரு டா. இப்ப வெளிய வந்துட்டு திரும்பி போனா சுத்தமா மதிக்கவே மாட்டார். நான் திரும்ப போற ஐடியாவிலேயே இல்லை” என்றான் ஆதி.

“சரி வாடா” என வெளியில் அழைத்த முரளி, “தங்குறதுக்கு இடம் கிடைச்சிட்டு, ஓகே. திங்கிறதுக்கு என்ன பண்ண போற?” எனக் கேட்டான்.

“இனிமே தாண்டா யோசிக்கணும். எனக்கு ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணி கொடு” என்றான் ஆதி.

“இன்னும் நீ டிகிரியே கம்ப்ளீட் பண்ணல. என்ன வேலை டா கிடைக்கும்?” என முரளி கேட்டுக்கொண்டிருக்க, அவனது கைப்பேசி அழைத்தது. எடுத்து பார்த்துவிட்டு “உன் அண்ணா டா” என்றான்.

“நான் என் ஃபோனை சைலன்ட்ல போட்டுட்டேன். எனக்கு ட்ரை பண்ணியிருப்பான், நான் எடுக்கலைங்கவும் உனக்கு அடிக்கிறான்” என்றவன் வாங்கி பேசினான்.

“நான் முரளி வீட்ல இருக்கேன்” என்றான்.

எதிர்முனையில் விஜய் என்ன பேசினானோ, “உன் அப்பா மூஞ்சியில இனிமே முழிக்க மாட்டேன். நீ வேற ஏதாவது பேசு” என்றான்.

பின்னர் “நான் வைக்கிறேன்” என்றவன் கைபேசியை அணைத்து முரளியிடமே கொடுத்தான்.

“சரி இரு, நான் போய் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்” என முரளி சென்றுவிட, ரஞ்சித்திடம் பேசிக்கொண்டிருந்தான் ஆதி.

சிறிது நேரத்தில் முரளி ஒரு தட்டில் தேநீர் நிறைந்த கோப்பைகளை எடுத்துக்கொண்டு வர, முரளியுடன் விஜய்யும் வந்தான்.

“என்னடா இதெல்லாம்? முதல்ல வீட்டுக்கு கிளம்பு” என்றான் விஜய்.

“நான் வரமாட்டேன்” என கூறிக்கொண்டே ஒரு தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டு நங்கைக்கு கொடுப்பதற்காக உள்ளே சென்றான். பின்னாலேயே வந்த விஜய், “நீயாவது இவனுக்கு எடுத்துச் சொல்லுமா” எனக் கூறினான்.

பழனிவேல் பேசியது நங்கைக்கும் பிடிக்கவில்லை. அதனால் ‘நான் ஒன்றும் கூற மாட்டேன்’ என்பதாக விஜய்யை பார்க்க, பெருமூச்சுவிட்டவன், வீட்டிலிருந்து எடுத்து வந்த நங்கையின் கைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு, ஆதியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அவனிடம் வெகுவாக பேசி மனதை கரைக்க முயல, ஆதி அசைந்து கொடுக்கவே இல்லை. இனி பேசுவதில் பிரயோஜனம் இல்லை என்பதை அறிந்தவன், “இப்படி ஒரு பொருள் கூட இல்லாம, மாத்து துணி கூட இல்லாம என்னடா பண்ணுவ?” எனக் கேட்டான்.

“நான் பார்த்துக்குறேன்” என்றான் ஆதி.

ஒன்றும் சொல்லாமல் விஜய் வெளியேறி விட்டான். நண்பர்களும் சென்றுவிட உள்ளே வந்தான் ஆதி. அடுத்து என்ன என்று இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருக்க, நங்கையின் கைபேசி அழைத்தது. நங்கையின் அன்னை பிரேமாதான் அழைத்துக் கொண்டிருந்தார்.