“டேய் ரொம்ப பண்ணாத, எல்லாம் போட்டுட்டு தான் வந்தேன்”
“டாலி தனியா இருக்கும், நான் வீட்டுக்கு போறேன்”
“எல்லாருக்கும் டாலி காவலா? இல்ல டாலிக்கு நீ காவலா? வீட்டுல வேலை செய்ற ரெண்டு பேர உன் சித்தப்பா இருக்க வச்சுட்டுதான் வந்திருக்கார். நீ ரொம்ப கவலைப் படாத” என்று கூறி கைப்பேசியை அணைத்தார்.
“என்ன அத்தை?” என அம்பிகா கேட்க, சந்திரா விஷயத்தை கூற நங்கையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.
மேடையில் தமிழ்நங்கையும் ஆனந்தும் அமர வைக்கப்பட்டனர். பார்த்திபன் வெளியில் வந்து அவனை விஜய் கூப்பிடுவதாக அழைத்துச் சென்றான்.
விசாலம் நன்றாக பார்க்கட்டும் என்று மேடை ஓரத்திலேயே ஒரு நாற்காலி போட்டு அமரச்சொன்னார் மாணிக்கவேல். விசாலத்திற்கு மூட்டுவலி என்பதால் மேடையில் ஏற சிரமப்பட, பார்த்த ஆதி அவரை தூக்கிக் கொண்டு போய் நாற்காலியில் அமர வைத்தான்.
“பார்த்துடா என் அத்தையை கீழே போட்டு உடைச்சிடாதே” என சொந்தக்காரர் ஒருவர் கூற, “யார்டா அவன் பொச கெட்ட பய? என் ராசா நம்பி வந்த யாரையும் அப்படி எல்லாம் விட்டுட மாட்டான். உன் மாமனோட பேரனாக்கும்” என்று சொல்லி ஆதியின் முகத்தை பாசமாக தடவினார் விசாலம்.
தன் பாட்டியை மேடையில் அமர வைத்தவன் கீழே இறங்கி ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அருகில் வந்தமர்ந்த நர்மதா “எவ்ளோ கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு, புடவை எல்லாம் கட்டியிருக்கேன். மாமா மகனா அழகா நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்றீங்களா டா” என கேட்டாள்.
அவளை வெறுமையாக ஆதி பார்க்க, “ என்ன ஆச்சு ஆதி, ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்றாள்.
“தலைவலி” என பொய்யுரைத்தவன், மீண்டும் மேடையை பார்க்க, நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டு கொண்டிருந்தது. ஆதிக்கு நெருப்பின் மேல் இருப்பது போல இருந்தது. வெளியே செல்ல ஆதி ஏழ, அவனை போகவிடாமல் கையைப் பிடித்து உட்கார வைத்தாள் நர்மதா.
நிச்சயம் முடிந்த உடன் அனைவரும் இரவு உணவுக்காக சென்றனர்.
“வாடா வந்து பந்தியில் ஹெல்ப் பண்ணு” என விஜய் ஆதியையும் உடன் அழைத்துச் சென்றான்.
சிறிது நேரத்தில் தமிழ்நங்கை அவளது சகோதரிகளுடன் சாப்பிட வந்தாள். ஆதி பரிமாறிக் கொண்டிருக்க அவளை பார்த்ததும் நின்றுவிட்டான். தமிழ்நங்கைக்கும் சங்கடமாக இருந்தது.
நங்கை பந்தியில் அமர அவளுக்கும் பரிமாறினான். அவள் சாப்பிட முடியாமல் சங்கடப்பட்டு கொண்டிருப்பதைப் பார்த்தவன் உடனே அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.
சாப்பிட்டுவிட்டு மணமகள் அறையில் தங்கினாள் நங்கை. அனைவரும் உறங்கிய பின்னர், யாருக்கும் தெரியாமல் ஊருக்கு சென்று விடலாம் என முடிவெடுத்தான் ஆதி.
தமிழ் நங்கையின் கல்லூரி தோழி ஒருத்தி இவளது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வெளியூரிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அவர்களில் ஒருத்தியின் அழைப்பு வர, சிக்னல் கிடைக்காததால் மொட்டை மாடிக்கு சென்றாள் நங்கை. அங்கே ஆனந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தான் ஆதி.
“ஆனந்த் நீ செய்றது சரியில்லை. நாளைக்கு உனக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம்” என்றான் ஆதி.
“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லடா. எங்கப்பா என்னை கார்னர் பண்ணி இதுக்கு ஒத்துக்க வச்சிட்டார்” என்றான் ஆனந்த்.
“கார்னர் பண்ணினாரோ இல்லையோ நீ ஒத்துகிட்டதானே? ஒன்னு நீ ஒத்துக்காம முன்னாடியே போயிருக்கணும், இல்லன்னா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கவே கூடாது. அதை விட்டுட்டு ஒரே மேடையில் உட்கார்ந்து நிச்சயம் வரை பண்ணிட்டு, இப்படி ஓடிப்போறியே… அந்த பொண்ணை கொஞ்சம் நினைச்சுப் பார்த்தியாடா? அவங்க வாழ்க்கை என்ன ஆகும்? நீ செய்றது தப்புடா?”
“ஐயோ ஆதி புரியாம பேசாதடா அங்க என் வினிதா தூக்கமாத்திரை முழுங்கிட்டு சாகக் கிடக்கிறா. எனக்காக உயிரையே விட துணிஞ்சிட்டா, அவளை என்னால விட முடியாது”
“உங்க அப்பாகிட்ட முன்னாடியே பேசுறதுக்கு என்னடா? படிச்சி பெரிய வேலையில் இருக்கதானே. என்ன பயம் உனக்கு?”
“அவர பத்தி உனக்கு தெரியாதாடா? வினிதா வேற ஜாதின்னு சொல்லி சம்மதிக்க மாட்டேன்னுட்டார். எனக்கு இங்க வர்ற வரையிலுமே கல்யாண ஏற்பாடு பத்தி ஒண்ணுமே தெரியாது. வந்ததுக்கு அப்புறம் செத்துப் போய்டுவேன்னு மிரட்டி ஒத்துக்க வச்சிட்டார்”
“உன் வினிதா தூக்க மாத்திரை சாப்பிட்டதனால ஓடுறியே, இல்லன்னா என்னடா பண்ணியிருப்ப?” என ஆதி கேட்க பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றான் ஆனந்த்.
“அவரை போக விடுங்க” என்ற நங்கையின் குரல் கேட்டு இருவரும் அதிர்ந்து திரும்பி பார்த்தனர்.
“அவர் போகட்டும் விடுங்க” என்றாள் நங்கை.
“என்னங்க சொல்றிங்க? நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்” என்றான் ஆதி.
“நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வேற ஒரு பொண்ணோட போக நிற்கிறார். இவரை எப்படிங்க நான் கல்யாணம் பண்ணிக்கிறது? அவரை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா அங்க சாகத் துணிஞ்ச பொண்ணோட சேர்த்து மூணு பேரோட வாழ்க்கை பாழாகிடும்” என்றாள் நங்கை.
அவளிடம் வந்த ஆனந்த், “ சாரி தமிழ்நங்கை. என் அப்பா வேற ஜாதின்றதனால எங்க லவ்வுக்கு சம்மதிக்கலை. நாங்க ரெண்டு பேரும் ரெண்டு வருஷமா லவ் பண்றோம். எனக்காகத்தான் அவ காத்துக்கிட்டு இருந்தா. என் அப்பா செத்துடுவேன்ன்னு மிரட்டி என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டார். ஆனா வினிதா…” என இழுத்தான் ஆனந்த்.
கைகளை கட்டிக்கொண்டு அவனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்தவள், “ரெண்டு வருஷமா உங்களை நம்பி காதலிச்ச வினிதாவை நினைச்சா பாவமா இருக்கு” என நக்கலாக கூறியவள், சிறிது இடைவெளிவிட்டு, “யாரும் வர்றதுக்குள்ள தயவுசெய்து போய்டுங்க” என்றாள்.
ஆதியிடம் சென்றவள், “எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” எனக் கேட்டாள்.
“சொல்லுங்க” என்றான் ஆதி.
“இவரை எப்படியாவது இங்கிருந்து போக வைங்க. யாருக்கும் தெரிஞ்சா இவரை கட்டாயப்படுத்தி என்னை கல்யாணம் செய்து வச்சிடுவாங்க. எனக்கு இவரை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்” என்றாள்.
ஆதி குழம்பிப்போய் நங்கையை பார்க்க, “ப்ளீஸ்ங்க” என்றாள் நங்கை.
ஆதி சுற்று முற்றும் பார்க்க, கயிறு கிடந்தது. அதை எடுத்தவன், படிகளுக்கு அருகிலிருந்த கம்பிகளால் ஆன இரும்பு கதவில் கயிற்றின் ஒரு முனையை இறுக்கமாக கட்டி, மறுமுனையை கீழே தொங்க விட்டான். “போடா இது பிடிச்சிக்கிட்டு கீழே இறங்கு” என்றான்.
“தேங்க்ஸ்டா” என ஆனந்த் கூற,
“உங்கப்பா திருப்பியும் செத்து போயிடுவேன்னு மிரட்டுவாரு. அதுக்காக அந்த பொண்ண விட்டுட்டு திருப்பியும் வந்துடாதே” என கூறி அவனை அனுப்பி வைத்தான். ஆனந்தும் இறங்கி சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் “இப்ப என்னங்க செய்ய போறீங்க?” என நங்கையை பார்த்து கேட்டான்.
“தெரியலைங்க, நடக்கிறது நடக்கட்டும். நீங்க போங்க. நானும் கீழே போறேன்” என்றாள்.
அவன் பையை எடுத்துக்கொண்டு “நீங்க போங்க நான் பின்னால வர்றேன்” என்றான்.
“இது என்ன பாக்?” எனக் கேட்டாள் நங்கை.
“அது… நான் ஊருக்கு போலாம்னு கிளம்பிகிட்டு இருந்தேன். அப்பதான் ஆனந்த பார்த்தேன்” என்றான்.
“ஊருக்கு போக வாசல் வழியா போகாம இங்கே ஏன் வந்தீங்க?”
“வாசல் வழியா போனா யாராவது பார்த்துடுவாங்க”
“பார்த்தா என்ன?”
“என்னை போக விடமாட்டாங்க?”
“கொஞ்சம் புரியிற மாதிரி பேசுறீங்களா?”
“எனக்கு இங்க இருக்க பிடிக்கலங்க. இந்த கல்யாணத்துக்கு கிளம்பறதுக்கு முன்னாடி நீங்கதான் பொண்ணுன்னு தெரியாது. தெரிஞ்ச பின்னாடி… என்னால இங்கே இருக்க முடியல” என்றான் ஆதி.
“இப்ப கிளம்பலையா?” எனக் கேட்டாள் நங்கை.
“இப்ப எப்படிங்க கிளம்புறது. எப்படியும் பிரச்சினையாகும். உங்களை எப்படி இப்படி விட்டுட்டு போறது? பிரச்சனை சரியானதும் கிளம்புறேன். நீங்க போங்க” என்றான்.
நங்கை கீழே செல்ல இடைவெளிவிட்டு பின்னே சென்றான் ஆதி. அவனைப் பார்த்துக் கொண்டே அறைக்குள் சென்று விட்டாள் நங்கை.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆனந்த் அங்கு இல்லை என்ற விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாருக்கும் தெரிந்து விட்டது. தமிழ்நங்கைக்கு அவளது அக்காதான் கூறினாள்.
மாணிக்கவேலுக்கு தனது மகன் எங்கு சென்றிருப்பான் என்பது தெரிந்து விட்டது.
தமிழரசுவிடம் வந்து, “இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். இன்னும் ஒரு மணி நேரத்தில அவன் இங்கே இருப்பான்” என கூறிவிட்டு, “அண்ணா, விஜய், கார்த்திக் வாங்க போகலாம்” என கூறினார்.
“எங்க?” எனக் கேட்டான் விஜய்.
“நீங்க என்ன சொல்றீங்கன்னு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?” என்றான் தென்றலின் கணவன் அசோக்.
“அது வந்து…” என மாணிக்கவேல் தயங்க,
“என்னடா தயங்குற? நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு பையன காணோம். அவன் எங்க இருக்கான்னு தெரியல. என்னன்னு விவரமா சொல்லுடா. ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்சனை” என்றார் விசாலம்.
“தம்பி என்னன்னு சொல்லுடா அப்பதானே அடுத்து என்ன செய்யலாம்னு முடிவெடுக்கலாம்” என பழனிவேலும் கூறினார்.
“அத்தான்… ஆனந்த் ஒரு பொண்ணை ரெண்டு வருஷமா விரும்புறான். நம்ம இனம் இல்லன்னு இவர் ஒத்துக்கல. அவனை மிரட்டிதான்… இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சார். இப்படி பண்ணுவான்னு நாங்க நினைக்கலை” என்றார் கல்பனா.
நர்மதா கார்த்திக்கின் முகத்தை பார்க்க, “சத்தியமா எனக்கு தெரியாது” என்றான் கார்த்திக்.
ஆதி நங்கையைதான் பார்த்துக் கொண்டிருந்தான். எந்த உணர்வும் இல்லாது வேடிக்கை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள் நங்கை.
“அப்போ உங்க பையனுக்கு விருப்பம் இல்லாமதான் இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கீங்களா?” என்றார் நங்கையின் தாய்மாமா.
தமிழரசும், பிரேமாவும் தங்கள் மகளை நினைத்து கலங்கி போயிருந்தனர்.
“நாம அவனை கூட்டிக்கிட்டு வந்துடலாம். நாளைக்கு கல்யாணம் சொன்னபடி நடக்கும்” என மெல்லிய குரலில் கூறினார் மாணிக்கவேல்.
“நான் அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்றாள் நங்கை.
எல்லோரும் நங்கையை பார்க்க, “வேற ஒரு பொண்ணுக்காக கல்யாணத்துக்கு முதல் நாள் ஓடிப் போய்ட்டார். எனக்கு அவர் வேண்டாம்” என்றாள் உறுதியாக.
“அய்யோ தம்பி… இப்படி நிச்சயம் முடிஞ்சு கல்யாணம் நின்னுப்போனா நங்கைக்கு திரும்ப எப்படி நல்ல இடத்தில கல்யாணம் நடக்கும்?” என அழுதார் பிரேமா.
பழனிவேல் முன்வந்து, “யாரும் பதறாதீங்க. மாணிக்கம் நீ செஞ்ச தப்பால ஒரு பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போகக் கூடாது. கார்த்திக்கை இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம். நீ என்ன சொல்ற?” என கேட்டார்.
கார்த்திக் இதை எதிர்பார்க்கவில்லை. பின்னே அவன் வந்ததில் இருந்து நங்கையின் தங்கை வெண்பாவை பார்த்துக்கொண்டிருக்க, ‘பெரியப்பா இப்படி குழப்புகிறாரே’ என பீதியடைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.
மாணிக்கவேலுக்கும் சரியென பட, தன் சம்மதத்தை தெரிவித்தார். பழனிவேல் தமிழரசிடம், “இப்படி எல்லாம் நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல. எப்படி இருந்தாலும் உங்க பொண்ணுதான் எங்க வீட்டு மருமகள். கார்த்திக் நல்லா படிச்சிட்டு நல்ல வேலையில இருக்கான். நல்ல பையன். நீங்க சம்மதிச்சீங்கன்னா காலையில கார்த்திக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம். என்ன சொல்றீங்க?” எனக் கேட்டார்.
தமிழரசு பிரேமாவின் முகத்தை பார்க்க, பிரேமாவும் சம்மதம் என்று கண்களாலேயே கூறினார். தமிழரசு பேசப் போவதற்கு முன்பு “அப்பா” என்று அழைத்தாள் நங்கை.
“என்னம்மா?” என தமிழரசு கேட்க, ஆதிக்கு அருகில் நடந்து வந்தவள், “நான் இவரைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என ஆதியை காட்டி கூறினாள்.
ஆதி உட்பட அனைவருமே அதிர்ச்சியடைந்து விட்டனர். “அம்மா, உன் தலையிலே நீயே மண்ணை அள்ளிப் போட்டுக்கப் போறியா? இவன் ஒன்னுத்துக்கும் உதவாம ஊர் சுத்திட்டு இருக்கான். இவனை கல்யாணம் பண்ணினா உன் வாழ்க்கையே வீணாகிடும்” என்றார் பழனிவேல்.
ஆதி வீட்டில் அனைவரும் பழனிவேலை முறைத்துக் கொண்டு நிற்க, “எனக்கு இவரை பிடிச்சிருக்கு” என தயக்கமே இல்லாமல் நங்கை கூறினாள்.
ஆதி நங்கையை பிரமிப்போடு பார்த்து நிற்க, “நங்கை கொஞ்சம் சும்மாயிரு. அந்த பையனோட அப்பாவே நல்ல விதமா சொல்ல மாட்டேங்கிறார். நாங்க பேசி முடிவு எடுக்கிறோம்” என்றான் அசோக்.
தென்றலின் கையை எடுத்து விட்டவள், “எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது இவர் கூடத்தான். இல்லன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்” என உறுதிபடக் கூறி விட்டு தானாகவே அறைக்குள் சென்று விட்டாள்.
“உங்க பொண்ணு புரியாம பேசுது. சொல்லி புரிய வைங்க. படிப்ப இன்னும் முடிக்கல. வேலை கிடையாது. இதுல குடி வேற. இதோ என் கூட பிறந்த தங்கச்சி. அது பொண்ணையே கொடுக்க யோசிக்குது. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எல்லாம் இவனை போல ரவுடி மாதிரி நின்னாக்கா புடிச்சு தொலைக்குது. போங்க… போய் எடுத்து சொல்லி புரிய வையுங்க” என்றார் பழனிவேல்.
“எலேய் என் ராசாவ பத்தி இதுக்கு மேல ஏதாவது சொன்னே, புள்ளைன்னு கூட பாக்க மாட்டேன்” என விசாலம் கத்தினார்.
“நீ கொஞ்சம் சும்மா இரு” என அதட்டினார் பழனிவேல்.
“நீ சும்மா இருடா. என் பேரன் நல்லவன். அது தெரிஞ்சு தான் அந்தப் பொண்ணு ஆசைப்பட்டு கேட்குது. நீ ஏண்டா இப்படி பேசுற உன்னை தவிர எல்லாருக்கும் அவன் அருமை தெரியுது” என்றார் விசாலம்.
மாணிக்கவேலுக்கு எப்படியாவது நங்கையின் திருமணத்தை நடத்திவிட வேண்டும். நின்றுவிட்டால் பின் தமிழரசுவின் முகத்தில் எப்படி விழிப்பார். அதனால் தமிழரசிடம் “ஆதி நல்ல பையன்தான். நீங்க கட்டிக்கொடுங்க தமிழரசு. உங்க பொண்ணு வாழ்க்கைக்கு நான் கேரண்டி” என்றார்.
“சார் போதும், உங்க பையனுக்கே உங்களால கேரண்டி கொடுக்க முடியல, இதுல அடுத்தவர் பையனுக்கு கேரண்டி கொடுக்க வந்துட்டார்” என்றான் அசோக்.
அம்பிகா தான் ஆதியைப் பற்றி கூறியதால்தான் நங்கை இவ்வாறு கேட்கிறாள் என நினைத்துக்கொண்டாள். விஜய் என்ன சொல்வதென தெரியாமல் பார்வையாளராக நின்றிருந்தான். சந்திராவும் விசாலமும் இந்த கல்யாணம் நடக்கக் கூடாதா என எதிர்பார்ப்புடன் நின்றிருந்தனர்.
நங்கையின் அறைக்கு வந்தனர் தமிழரசுவும், பிரேமாவும். “இங்க பாரு நங்கை. இது வாழ்க்கை. விளையாட்டு இல்லை. ஒரு வேலை வெட்டியும் இல்லாமல் குடிச்சிட்டு ஊர் சுத்துறவனோட எப்படி நீ குடும்பம் நடத்துவ?” என்றார் பிரேமா.
“அப்பா, எனக்கு அவரை முன்னாடியே தெரியும். இனிமே அவர் குடிக்க மாட்டார். சீக்கிரத்திலேயே நல்ல வேலைக்கும் போவார். நம்பி என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி கொடுங்க” என்றாள் நங்கை.
“உனக்கு இருக்கிற நம்பிக்கை எங்களுக்கு வரலையே மா” என்றார் தமிழரசு.
“அவர் வளர்க்கிற நாயை கூட எப்படி பார்த்துக்கிறார் தெரியுமா? என்னை மட்டும் விட்டுவிடுவாரா? நீங்க சம்மதிச்சா இவரை கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லைனா எப்பவும் எனக்கு கல்யாணமே வேண்டாம். உங்களோடையே இருந்துக்கிறேன்” என்றாள் நங்கை.
மகளின் பிடிவாத குணத்தை நன்கு அறிந்த தமிழரசு, “சரிம்மா, உன் இஷ்டப்படியே அந்தப் பையனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நான் பார்த்த மாப்பிள்ளைதான் ஏமாத்திட்டான். நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும்” என்றார்.
பிரேமா தன் அதிருப்தியை முகத்தில் காட்டி, ஏதோ சொல்ல வருவதற்குள், “நங்கை உறுதியா சொல்றா. நீ மறுத்து பேசாதே” என்ற தமிழரசு தன் மகளை வெளியில் அழைத்து வந்தார்.
இந்த கல்யாணம் நடந்து விடவேண்டும் என்று மாணிக்கவேலும், ஆதியிடம் இருந்து தன் மகளை காப்பாற்ற எண்ணிய புவனேஸ்வரியும், பழனிவேலின் மனதை கரைத்து கொண்டிருந்தனர். அரைமனதாக பழனிவேலும் திருமணத்திற்கு சம்மதித்தார்.
“பையன்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்” என்றார் பிரேமாவின் அண்ணன்.
எல்லோரும் ஆதியை பார்க்க, அவன் நங்கையின் முகத்தை பார்த்து நின்றான். அருகில் வந்த விஜய், “என்னடா அப்படியே நிக்குற? உன் கிட்டதானே கேக்குறாங்க. ஏதாவது சொல்லு” என்றான்.