NVNN-3

அத்தியாயம் 3

“அக்கா இப்படி வெயிலில் நின்னீனா கறுத்து போயிடுவ. கல்யாணத்தன்னைக்கு பிரைட்டா இருக்க வேண்டாமா?” என்று மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த தமிழ்நங்கையிடம் கேட்டாள் அவளது தங்கை தமிழ்வெண்பா.

“ரெண்டு நிமிஷம் இப்படி நின்னு துணியை எடுத்தா நான் ஒன்னும் கறுத்திட மாட்டேன். வெயில்ல துணி கிடந்தா, துணிதான் வெளுத்துப் போகும்” என கூறிக்கொண்டே தன் வேலையில் கண்ணாக இருந்தாள் தமிழ்நங்கை.

நங்கையின் தந்தை தமிழரசு. தமிழரசுவின் தந்தை சந்தானபாரதி தமிழ் மீது தீராத பற்று கொண்டவர். அவர்தான் தன் பேத்திகளின் பெயரில் தமிழை இணைத்தது. சந்தானபாரதி 15 ஆண்டுகளுக்கு முன்பே இறைவனடி சேர்ந்து விட்டார்.

தமிழரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார். அவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு மூன்று பெண்கள். மூத்தவள் தமிழ்தென்றல். திருமணமாகி லால்குடியில் கணவருடன் இருக்கிறாள். அவளது கணவன் அசோக் ஒரு நிதி நிறுவனத்தில் வேலையில் இருக்கிறான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை 2 வயதில் இருக்கிறாள். பெயர் மகிழினி.

மூன்றாவது மகள் தமிழ்வெண்பா. பொறியியல் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

இரண்டாவது பெண்தான் தமிழ்நங்கை. இயற்பியலில் முதுகலைப் படிப்பு படித்திருக்கிறாள். கடந்த ஒரு வருடமாக தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வந்தாள். திருமணம் முடிவாகவும் வேலையிலிருந்து நின்று விட்டாள்.

சந்தானபாரதி உயிருடன் இருக்கும் வரை தமிழ்நங்கைதான் அவரின் செல்ல பேத்தி. எல்லோர் மீதும் பாசம் உண்டு என்றாலும் நங்கையின் தமிழ் ஆர்வமும் தமிழ் உச்சரிப்பும் அவரை மிகவும் ஈர்த்தது. சந்தானபாரதி உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக தன்னுடைய செல்ல பேத்தி தமிழ்நங்கையையும் தமிழையே படிக்க வைத்திருப்பார். அவர் இல்லாத காரணத்தால் பிரேமா நங்கையை இயற்பியல் படிப்பில் சேர்த்து விட்டார்.

தமிழரசு தான் பணி ஓய்வு பெறுவதற்குள் மூன்று பெண்களுக்கும் மணம் முடித்துவிட வேண்டும் என்று எண்ணினார். நங்கைக்கு மும்முரமாக மாப்பிள்ளை தேட, தமிழரசுவின் பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவேலும் அவரது மகனுக்கு பெண் தேட, இருவரும் ஒரே இனம் என்பதால் அவரது மகனுக்கு பேசி முடித்து விட்டார்.

ஆனந்தை தமிழ்நங்கை இன்னும் நேரில் பார்க்கவில்லை. புகைப்படத்தில் பார்த்ததோடு சரி. ஆனந்த் விடுப்பில் வரும்பொழுதே திருமணம் செய்துவிட வேண்டும் என்பதால் கல்யாணப் பேச்சை ஆரம்பித்து நான்கு நாட்களில் பேசி முடித்து விட்டனர்.

திருமணத்திற்கு முதல் நாள் இரவு நிச்சயம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தனர். ஆனந்தை தமிழரசுக்கு முன்பே தெரியும் என்பதால் அவரும் உடனே சம்மதித்து விட்டார்.

“கல்யாணத்துக்கு முன்னாடி ஃபோன்ல பேசுறதாலதான் பாதி பிரச்சனை. கல்யாணத்துக்கு அப்புறமா நல்லா பேசிக்கிட்டும். இப்ப வேண்டாம்” என மாணிக்கவேல் கூற அவர் மிகவும் கண்டிப்பானவர் என்பதை அறிந்த தமிழரசுக்கும் தவறாக தோன்றவில்லை. இதனால் நங்கை ஆனந்துடன் பேசியதும் இல்லை.

துணிகளை எடுத்துக் கொண்டு கீழே வந்த நங்கை மடித்து வைக்க, அவளிடம் வெண்பா,

“அக்கா… நீ என்ன இப்படி இருக்க? இன்னும் நாலு நாள்ல உனக்கு கல்யாணம். ஒரு எக்ஸைட்மெண்டே இல்லையா உனக்கு?” என கேட்டாள்.

சிரித்த நங்கை “என்ன எக்ஸைட்மெண்ட்? எனக்கு ஒன்னும் தோணலையே” என்றாள்.

“இந்த அரேன்ஜ்டு மேரேஜ் எல்லாம் இப்படித்தான். அதுக்குதான் நான் லவ் மேரேஜ்தான் பண்ணிப்பேன். அப்போ நீயும் தென்றலும்தான் எனக்காக பேசணும்” என வெண்பா கூற,

“அதுக்கு உன்னை யாரும் லவ் பண்ணனுமே” என்றாள் நங்கை.

“ஏன் என்னை யாரும் லவ் பண்ண மாட்டாங்களா?” என்றவள் அவளுக்கு அருகில் சென்று சற்றே குரலை தாழ்த்தி, “நேத்து கூட ஒருத்தன் எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான். இது எனக்கு வந்த மூணாவது ப்ரோபோசல் தெரியுமா?” என்றாள் பெருமையாக.

“வெண்பா இங்க கொஞ்சம் வாயேன்” என பிரேமா அழைக்க, வெண்பா சென்றுவிட்டாள்.

லவ் லெட்டர் என்றதும் நங்கைக்கு அவனது நினைவுதான் வந்தது. அதுதான் நங்கைக்கு வந்த முதல் காதல் கடிதம். கடைசியும் கூட. அந்தக் கடிதம் அவளிடம் இல்லை. ஆனால் அதில் எழுதப்பட்டிருந்த வரிகள் இன்னும் மறக்கவில்லை. லவ், லவ் லெட்டர் எனும் வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் அவன் நினைவும், கடிதத்தின் வரிகளும் அனிச்சையாக அவளின் நினைவுக்கு வரும்.

கடிதத்தை உண்மையாக தன்னுடைய மனதில் இருந்து அவன் எழுதி இருந்தான் என்றுதான் நினைத்துக் கொள்வாள். பாவம் இந்த மீனாவால்தான் மாட்டிக் கொண்டான். அதற்காக மீனாவிடம் கோபப்பட்டு தமிழ்நங்கை அவளுடன் பேசாமல் இருந்தாள். மீனா மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்கவும்தான் பேசவே செய்தாள்.

தமிழ்நங்கை படித்தது எல்லாம் இருபாலரும் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான். யாரும் அவளிடம் காதல் என்று வந்ததில்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பாள். யாரும் வம்பு செய்வது போல தெரிந்தால் யாருடைய உதவியும் அவளுக்கு தேவையில்லை. அவளே நன்றாக திருப்பி கொடுப்பாள். மிகுந்த தைரியசாலி. பார்ப்பதற்கு சாதாரணமானவள் போல தோன்றினாலும் மிகவும் அழுத்தம் நிறைந்தவள்.

சந்தான பாரதியின் வளர்ப்பு நங்கை. உண்மை, நேர்மை, தைரியம் என்றுதான் நங்கையை வளர்த்திருந்தார். சிறுவயதில் ஒரு முறை நங்கைக்கு நன்றாக சளி பிடித்திருக்க, பள்ளி சென்று திரும்பும் வேளையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு விட்டாள். அவளுக்கு தொந்தரவு அதிகமாக சந்தானபாரதி நங்கையிடம் நான் சொல்லும் வரை ஐஸ்கிரீமை சாப்பிடக்கூடாது என்று கூற, நங்கையும் சரி என்றாள். இரண்டு நாட்களில் சந்தானபாரதி உறக்கத்திலேயே இறைவனடி சேர்ந்து விட, நங்கை அதற்குப் பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்டதே இல்லை.

தாத்தா உனக்கு உடம்புக்கு முடியாமல் போய்டும்ன்னு அப்போ அப்படி சொன்னார். அதுக்காக எப்பவுமே ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாதுன்னு இல்லை என்று அவளது பெற்றோர்கள், சகோதரிகள் என்று அனைவருமே சொல்லி பார்த்து விட்டனர். கேட்டுக்கொண்டு சிரிப்பாலே தவிர ஐஸ்கிரீமை நினைத்தும் பார்க்க மாட்டாள். தான் சொன்ன வார்த்தையை மீறக்கூடாது என்று அவளுக்குள் ஒரு வைராக்கியம். மற்றவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றினாலும் அவளுக்கு இதுவே சரியெனப் பட்டது.

“கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே என் தம்பி கூப்பிட்டிருக்கான். மதியம் கிளம்பணும் நீ இன்னும் ஒன்னும் எடுத்து வைக்கலையா?” என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் பழனிவேல்.

ஆதி, பார்த்திபன் மற்றும் சம்யுகக்தாவுடன் கேரம் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “என்னடி அதிசயமா உன் புள்ள வீட்ல இருக்கான்?” எனக் கேட்டார்.

“அவனும் கல்யாணத்துக்கு வர்றான். அதான் வீட்டுல இருக்கான்” என்றார் சந்திரா.

“எதுக்கு என் மானத்தை வாங்கவா?”

“டேய் சும்மா சும்மா அவனை ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காத. ராசா மாதிரி இருக்கணும்னு பேர் வச்சா மட்டும் பத்தாது. கேவலமா நடக்கக்கூடாது. அவனும் ஆனந்தும் சின்ன வயசுல ஒன்னா வளர்ந்தவங்க. அவன் கல்யாணத்துக்கு ராசா வருவான். நீ இவனை வரக்கூடாதுன்னு சொல்லாதே” என்றார் விசாலம்.

“ம்… ஒன்னா வளர்ந்தான். அவன் நல்லா படிச்சி நல்ல வேலையில இருக்கான். கை நிறைய சம்பாதிக்கிறான். உன் பேரன் ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லாம ஊரைச் சுத்திட்டு இருக்கான்” என்றார் பழனிவேல்.

“ஆரம்பிச்சுட்டீங்களா? அவனை கரிச்சிக் கொட்டிக்கிட்டே இருக்காதீங்க. இப்படி நீங்க பேசுறதாலதான் அவனும் வீம்புக்கு ஏதாவது செய்றான். என்னைக்காவது அன்பா அவன்கிட்ட நாலு வார்த்தை பேசியிருப்பீங்களா. இப்படி அவன் ஆனதுக்கு காரணமே நீங்கதான். போங்க. உங்களுக்கு தேவையானதை எடுத்து வச்சிருக்கேன். சரியா இருக்கான்னு போய் பாருங்க. அப்புறம் பச்சை கரை வேஷ்டி இல்ல மஞ்சள் கரை வேஷ்டி இல்லன்னு சொல்லாதீங்க” என சந்திரா சத்தம் போட, ‘இவளுக்கு என்ன ஆச்சு?’ என யோசித்துக் கொண்டே உள்ளே சென்றார் பழனிவேல்.

“நீ என்னடா உனக்கு வேற தனியா சொல்லனுமா? போய் எடுத்து வைடா” என ஆதியையும் விரட்ட,

“எனக்கு என்னமா 2 பேண்ட் 2 ஷர்ட்தானே எடுத்து வச்சுட்டேன்” என்றான் ஆதி.

“ஏன் ராசா ஒரு வேட்டி சட்டை எடுத்து வச்சுக்க கூடாது?” என விசாலம் கேட்டார்.

“எனக்கா கல்யாணம்? ஆனந்துக்குதானே கல்யாணம்?”

“ம்… அவனும் உன் ஜோட்டு வயசுக்காரன்தான். இந்தா… கல்யாணம் நடக்கப் போகுது. உனக்கு ஒரு நல்லது பார்த்துட்டேனா நானும் அப்படியே கண்ணை மூடிடுவேன்”

“நீ கண்ணை மூடிட கூடாதுன்னுதான் நான் கல்யாணமே வேணாம்னு இருக்கேன்”

“ஆ…  என்ன ராசா அப்படி சொல்லிட்ட?”

“நான் சரின்னு சொன்னா மட்டும் பொண்ணுங்க என்னை கட்டிக்க க்யூல நிக்குதா? நீ வேற ஏதாவது காமெடி பண்ணாத” என்று சொல்லிக்கொண்டே ஆதியும் சென்றுவிட்டான்.

“ஏன் சந்திரா நம்ம புவனா பொண்ணு நர்மதாவ ஆதிக்கு கேட்டா என்ன?” என்றார் விசாலம்.

“நம்ம எங்க கேட்டிற போறோமுன்னுதான் அவங்க இங்க வர்றதே இல்ல. அவங்கள சொல்லியும் குத்தம் இல்லை. இவன் ஒழுங்கா இருந்தா நம்மளும் உரிமையா கேட்கலாம். இப்படி அறிவே இல்லாம நடந்துக்கிட்டானா எந்த மூஞ்சியை வச்சிகிட்டு அவங்க கிட்ட கேட்கிறது. ம்… எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி…” என அங்கலாய்த்துக் கொண்டே சென்றார் சந்திரா.

“என் ராசாவுக்கு என்ன குறைச்சல்? அவனுக்கேத்த ராணி இனிமேலா பொறக்கப் போறா?” தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தார் விசாலம்.

பழனிவேலின் குடும்பம் கரூரை வந்தடைந்தது. டாலியுடன் இறங்கிய ஆதியை நர்மதாவும், கார்த்திக்கும் வரவேற்றனர்.

“என்ன ஆதி முழு தேவதாஸாவே மாறிட்டியா?” எனக் கேட்டாள் நர்மதா.

“ஆமாம், ஆனா பார்வதி நீ இல்ல” என ஆதி கூற, கார்த்திக் ஆதிக்கு ஹைஃபை கொடுத்தான்.

இருவரையும் நர்மதா இடுப்பில் கைவைத்து முறைத்தாள். வெளியே நின்றிருந்த புவனேஸ்வரி இவர்களையே பார்த்துக் கொண்டிருக்க,

“பாருடா அத்தையை அவங்க பொண்ணை நாம எங்க சைட் அடிச்சுடுவோம்முன்னு காவலுக்கு நிற்கிறதை” என்றான் கார்த்திக்.

திரும்பிப் பார்த்த நர்மதா, “நான் எங்க ஆதிய லவ் பண்ணிடுவேனோன்னு அம்மாவுக்கு பயம். இப்ப புதுசா இந்த குரங்க கல்யாணம் பண்ணிக்க சொல்லி வேற கேக்குறாங்க” என கார்த்திக் தோளின் மீது ஒரு அடி வைத்து கூறினாள் நர்மதா.

“என்னடி இது புதுக் கதை?” அதிர்ச்சியாக கார்த்திக் கேட்க,

“அவங்க அப்படிதான் சொல்லிக்கிட்டு திரியுறாங்க. அதனாலதான் நான் அவங்க கிட்ட கார்த்திக்க கல்யாணம் பண்ண சொன்னீங்க, நான் ஆதி கூட ஓடிப் போய்டுவேன்னு மிரட்டிக்கிட்டு இருக்கேன்”

“ஓ… அதுதான் அப்படி உன்ன வேவு பார்த்துகிட்டு நிக்கிறாங்களா?” எனக் கேட்ட ஆதி வேண்டுமென்றே நர்மதாவிடம் சிரித்து சிரித்து பேச, புவனேஸ்வரிக்கு வியர்த்துக் கொட்டியது.

“அத்தைக்கு பிபி ஏறி ஆனந்த் கல்யாணத்துல ஏதாவது தடங்கல் ஆகப்போகுது. நீ போடி முதல்ல” என நர்மதாவை கார்த்திக் விரட்ட, “யாரு என் அம்மாவுக்கா? விட்டா நம்ம எல்லாருக்கும் பிபி ஏத்துவாங்க” என்றாள் நர்மதா.

இப்படியாக இவர்கள் அரட்டை கச்சேரி களை கட்ட, அவர்களுக்கு சற்று முன்னர்தான் வந்திருந்த ஆனந்த் பயணக் களைப்பு என கூறிக்கொண்டு அறைக்குள்ளேயே முடங்கி விட்டான்.

வந்திருந்த சொந்தங்கள் “ஆதி என்ன செய்கிறான்?” என பழனிவேலிடம் கேட்க, என்ன சொல்வதென தெரியாமல் “கவர்மெண்ட் உத்தியோகத்துக்கு படிச்சிகிட்டு இருக்கான்” என சொல்லி சமாளித்தார்.

சந்திராவும் அம்பிகாவும் கல்பனாவுடன் இணைந்து திருமண வேலைகளை கவனிக்கத் தொடங்கினர். விசாலத்திற்கு கல்பனாவை பிடிக்காது. அவரும் விசாலத்துடன் ஒத்து போகமாட்டார். அதனால் செய்யும் வேலைகளில் குறை கண்டு பிடித்த வண்ணம் இருந்தார் விசாலம்.

ஆதி மட்டும் எந்த வேலையும் செய்யாமல் அவ்வப்போது டாலியை மட்டும் கவனித்துக் கொண்டு மற்ற நேரங்களில் தன் அப்பாவிற்கும் அத்தைக்கும் பிபியை ஏற்றிக்கொண்டு இருந்தான்.

தன் மகளை கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டே இருந்தார் புவனேஸ்வரி. அவருடைய கணவர் கேசவமூர்த்தி கல்யாணத்தன்று வருவதாக கூறி விட்டார். பின்னே இரண்டு நாள் வருமானம் போய்விட்டால்? நந்தினி திருமணம் முடிந்து வெளிநாட்டில் இருப்பதால் வரவில்லை.

பழனிவேலும் விஜய்யும் வெளி வேலைகளை ஆளுக்கொன்றாக செய்து மாணிக்கவேலுக்கு வேலைப் பளுவை குறைத்துக் கொண்டிருந்தனர்.

இப்படியாக முதல் நாள் முடிவடைய அடுத்த நாள் மாலையில் அனைவரும் மண்டபத்திற்கு சென்றனர். திருமணம் மாப்பிள்ளை வீட்டின் சார்பில் என்பதால் பெண் அழைப்பிற்காக விஜய், அம்பிகா மற்றும் கல்பனாவின் அண்ணன் அண்ணி ஆகிய நால்வரும் செல்லத் தயாராகினர். ஒற்றைப் படையில் தான் செல்ல வேண்டும் என விசாலம் கூற, கல்பனா புவனேஸ்வரியை செல்லுமாறு கேட்டார்.

தன் மகளை தனியே விட்டு செல்ல விரும்பாத புவனேஸ்வரி “எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. நம்ம ஆதியை போகச் சொல்லுங்களேன்” என்றார்.

“அவன் எதுக்கு? வேண்டாம். வேற யாரையாவது போகச் சொல்லலாம். எங்க அந்த கார்த்திக்?” என பழனிவேல் கார்த்திகை தேட முதல் ஆளாக வேனில் ஏறிக் கொண்டான் ஆதி. பழனிவேல் பல்லைக் கடிக்க, புவனேஸ்வரி பெருமூச்சு விட பெண் அழைப்பிற்காக வேன் புறப்பட்டுச் சென்றது.

பெண் வீட்டிற்கு வந்து வரிசை தட்டுகளை வைத்து பெண்ணை அழைக்க தமிழ்நங்கை அழைத்து வரப்பட்டாள்.

அவளைப் பார்த்த கணம் பேச்சிழுந்து நின்றான் ஆதி. நெஞ்சாங்கூட்டில் வருத்தமா, வேதனையா, ஆற்றாமையா என பிரித்தறிய முடியாத உணர்வொன்று எழுந்தது.

“ஆதி அந்தப் பையை எடுத்து தா” என அம்பிகா கூற, சாவி கொடுத்த பொம்மையாக பையை அம்பிகாவின் கையில் கொடுத்தான்.

ஆதி என்ற அழைப்பில் அவனைப் பார்த்த நங்கையும் ஒரு கணம் அதிர்வுற்றாள். ஆனால் உடனேயே தன்னை சுதாரித்துக் கொண்டவள் அனைவரையும் “வாங்க” என்று அழைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அம்பிகா எளிதில் எல்லோருடனும் பழகி விடுவாள். அம்பிகா பெண்ணைப் பார்க்க அறைக்கு செல்ல, புடவை மாற்றிவிட்ட நங்கைக்கு, தென்றல் நகைகளை அணிவித்து கொண்டிருந்தாள்.

தான் யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அம்பிகா சினேகமாக சிரிக்க, நங்கையும் சிரித்தாள்.

தென்றலின் குழந்தை அவளுக்காக அழ “நான் வெண்பாவை வரச் சொல்றேன்” எனக்கூறி தென்றல் நகர, “நான் ஹெல்ப் பண்றேன். நீங்க போங்க” என்றாள் அம்பிகா.

“தேங்க்ஸ்” எனக் கூறிவிட்டு தென்றலும் சென்று விட்டாள்.

அம்பிகா பேச்சுக் கொடுத்துக் கொண்டே நங்கையின் படிப்பு குடும்ப விவரங்களை கேட்டறிந்தவள், “உனக்கு பாரு ஒரு அக்கா ஒரு தங்கச்சி வீட்டில ஜாலியா இருக்கும் இல்ல. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. எனக்கு யாருமில்லைன்னு முன்னாடியெல்லாம் ரொம்ப ஏக்கமா இருக்கும்” என்றாள்.

“இருக்கும்னா இப்ப இல்லையா?” எனக் கேட்டாள் நங்கை.

“வெளியில கிரே கலர் ஷர்ட் போட்டு, நல்லா தாடியும் மீசையுமா இருந்தானே ஒரு வளர்ந்தவன். அவன் ஆதி. என் ஹஸ்பண்டோட தம்பி. எனக்கும் தம்பி மாதிரிதான். அவனுக்கு கல்யாணம் ஆனா அந்த பொண்ணுதான் எனக்கு தங்கச்சி” என்றாள் அம்பிகா.

“ஓ… அவருக்கு கல்யாணம் ஆகப்போகுதா?” எனக் கேட்டாள் நங்கை.

பெருமூச்சு விட்டு அம்பிகா, “இன்னும் ஆகலை. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ? அவன் ரொம்ப நல்ல பையன். என் மாமனார் தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். எப்பவும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாது. அவன் காலேஜ் படிக்கும்போது கல்ச்சுரல்ஸ்ன்னு கோயம்புத்தூர் போனான். அங்க ஏதோ பிரச்சனை. அதனால என் மாமனார் ஆதிகிட்ட ரொம்ப கடுமையா நடந்துகிட்டாரா? அதிலே இருந்து அவங்க அப்பாவ வெறுப்பேத்துறேன்னு குடிக்க ஆரம்பிச்சான். படிப்பில் அரியர்ஸ் வச்சான். ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டுல தான் இருக்கான். எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா?” என கூறினாள்.

அம்பிகா யாரிடமும் ஆதியைப் பற்றி எதுவும் சொல்லமாட்டாள். அன்று ஏனோ நங்கையிடம் பேசும்போது அவளுக்குள்ளாகவே ஒரு நெருக்கம் ஏற்பட மனதில் இருந்ததை மறைக்காமல் கூறி விட்டாள்.

கேட்ட நங்கைக்கு என்ன பிரச்சனை என்பது புரிந்து போனது. நங்கைக்கு மிகுந்த குற்ற உணர்ச்சியானது. ஆனால் வெளியே எதுவும் காட்டி கொள்ளவில்லை.

பெண்ணை அழைத்துக்கொண்டு வேன் புறப்பட்டது. நங்கையுடன் அவளது தாய் மாமன், மாமி, தமிழ்தென்றல் அவளது கணவன் அசோக் ஆகியோர் புறப்பட்டனர். மற்றவர்கள் சிறிது நேரத்தில் கிளம்புவதாக இருந்தது.

வேனின் பின்சீட்டில் ஆதி அமர்ந்திருந்தான். அவன் உள்ளம் எரிமலை போல பொங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது காரணத்தைச் சொல்லி ஊருக்கு சென்று விடுவோமா என கூட நினைத்தான்.

நங்கை எங்கிருக்கிறாள்? அவளைத் தேடிப் போக வேண்டும் என்றெல்லாம் ஆதி யோசித்தது கூட இல்லை. சம்மதம் இல்லை என்று கூறிய பின்னர் அவளை தொந்தரவு செய்யும் எண்ணம் சிறிதும் ஆதிக்கு இல்லை. ஆனால் இன்று மணப்பெண்ணாக அவளைப் பார்த்ததும் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இன்னொருவன் அவளுக்கு தாலி கட்டுவதை பார்க்கும் சக்தி தனக்கில்லை என்பதை உணர்ந்தவன், ‘யாருக்கும் சொல்லாமல் இரவே புறப்பட்டு விட வேண்டும். பின்னர் ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்’ என நினைத்தான்.

தமிழ்நங்கையின் உள்ளமும் வெறுமையாக இருந்தது. மணப் பெண்ணுக்கு உரிய மகிழ்ச்சி துளியும் அவளிடத்தில் இல்லை. ‘இது என்ன சோதனை, நான் என்ன நினைக்கிறேன்னு எனக்கே தெரியலை. இப்ப கடவுள் இவனை ஏன் என் கண்ணில் காட்டினார்’ என நொந்து கொண்டாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதை நினைவுகூர்ந்து கொண்டிருந்தனர்.