NVNN-20

அத்தியாயம் 20

வெண்பாவை பார்த்து வரலாமென்று கல்பனா மாணிக்கவேல் இருவரும் கூற தமிழரசுடன் சேர்ந்து மூவரும் வந்தனர். வந்தவர்கள் அங்கு நடந்ததை பார்த்துவிட்டு உண்மையை தெரிந்து கொண்டனர்.

வெண்பா ஓடிச்சென்று தமிழரசுவின் கால்களை பிடித்துக் கொண்டு “அப்பா என்னை மன்னிச்சிடுங்க” என அழ ஆரம்பித்தாள்.

கர்ப்பவதியாக இருந்த மகளை தூக்கி நிறுத்தியவர், “இதை நீ அன்னைக்கே செஞ்சிருந்தேனா ஒருவேளை உன்னை மன்னிச்சிருப்பேனோ என்னவோ. இப்படி ரெண்டு பேரும் சேர்ந்து எல்லோரையும் முட்டாள் ஆக்கிட்டீங்களே. இவ்வளவு சுயநலமாக நடந்துகிட்ட உன்னை மன்னிக்கிற அளவுக்கு எனக்கு மனசில்லை” என்றார்.

நங்கையிடம் சென்றவர் “உன் வீட்டுக்காரர் இந்த குடும்ப மானத்தை மட்டும் இல்லமா, உன் அப்பா உசுரையும் சேர்த்து காப்பாத்தியிருக்கிறார். இப்ப இந்த உண்மை தெரிஞ்சதையே என்னால தாங்க முடியல, அப்ப தெரிஞ்சிருந்தா சத்தியமா நான் உயிரையே விட்டுருப்பேன்” எனக்கூற, “என்னங்க ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?” என பிரேமா கேட்டார்.

“வயசுல சின்னவரா இருந்தாலும் செய்கையில ரொம்ப உயர்ந்துட்டார் மாப்பிள்ளை. ஆனா நீ…” என்றவர் அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் சோர்ந்துபோய் அமர்ந்துகொண்டார்.

“இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் என் காதால கேட்கணும்? இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம்… ஒன்னும் சொல்றதுக்கு இல்லை…” என்றார் மாணிக்கவேல்.

“வாங்க சார்… வாங்க… அது என்ன சார்? இந்த மாதிரி விஷயத்துல பொண்ணுங்கள மட்டும் குறை சொல்றீங்க? ஏன் ஆம்பளைங்களுக்கு இதுல பங்கு இல்லையா? நீங்க வளர்த்த வளர்ப்பு சார். அந்த பிள்ளைக்கும் இந்த தப்புல சமபங்கு இருக்கு. அதை மறந்துடாதீங்க” என்றாள் நங்கை.

“என்ன நான் வளர்த்த வளர்ப்புன்னு நக்கலா சொல்றியா? நல்லா வளர்த்து, நல்லா படிக்க வச்சி, என் ரெண்டு பிள்ளைங்களையும் நல்ல வேலையில் உட்கார வச்சிருக்கேன். மத்தவங்க மாதிரி தண்ணி, தம்மு அப்படி இப்படின்னு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது என் பசங்க கிட்ட” என்றார் மாணிக்கவேல்.

“ஆமாம் கெட்ட பழக்கமே… கிடையாது. அதே மாதிரி பொண்ணுங்கள மரியாதையாவும் நடத்த தெரியாது. ஒன்னு காதலிச்ச பொண்ணு விட்டுட்டு ஓடுவாங்க, இல்லைன்னா காதலிச்ச பொண்ணு கிட்ட எல்லைமீறி பழகுவாங்க. இதுதான் உங்க வளர்ப்போட லட்சணம். மத்தவங்கன்னு என் வீட்டுக்காரரைதானே சொல்றீங்க? அவர் குடித்தார்தான், இல்லைன்னு யாரும் சொல்லலை. ஆனா அவரை நம்பி ஒரு பொண்ணு அவர் வாழ்க்கையில் வந்ததும் அதை எல்லாம் விட்டுட்டு அந்த பொண்ணுக்காக தன்னையே மாத்திக்கிட்டார்” என நங்கை கூற,

“அவனைப் பத்தி எங்களுக்கு தெரியாதா? படிக்கிறப்பவே ஏதோ பொண்ணுங்ககிட்ட பிரச்சனை பண்ணி, எங்க அண்ணன் கையால பெல்டால அடி வாங்கினான். தெரியுமா உனக்கு?” எனக் கேட்டார் மாணிக்கவேல்.

இது என்ன புதுக்கதை என்று எல்லோரும் நங்கையை பார்க்க, “ஒரு விஷயத்தை பத்தி ஒழுங்கா தெரிஞ்சுக்காம, நீங்களா ஏதாவது தப்பு தப்பா சொல்லாதீங்க” என்றாள் நங்கை.

“நான் ஒன்னும் தெரிஞ்சுக்காம பேசலை. உண்மையைத்தான் சொல்றேன். அவன் காலேஜ் படிக்கிறப்ப பொண்ணுங்க விஷயத்துல ஏதோ பிரச்சனையாகி… அதனாலதான் எங்க அண்ணனுக்கும் அவனுக்கும் பெரிய சண்டையே. எங்க… உன் வீட்டுக்காரன் கிட்ட கேளு இல்லன்னு சொல்லட்டும்” என்று சவால் விட்டார் மாணிக்கவேல்.

“அவர் கிட்ட கேட்கனும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை. என்ன நடந்துச்சுன்னு எனக்கு நல்லா தெரியும்”

“உன்கிட்ட ஏதாவது கதை சொல்லி இருப்பான்” என்றார் மாணிக்கவேல்.

“அவர் சொல்லாமலேயே எனக்கு தெரியும்”

“ஏன் நேர்ல போய் பார்த்தியா?”

“ஆமாம். பிரச்சனை பிரச்சனைன்னு சொல்றீங்களே, என்ன பிரச்சனை தெரியுமா? 5 வருஷம் முன்னாடியே ஆதி என்னை விரும்பினார். எனக்கு லவ் லெட்டர் கொடுத்தார். அவரை பத்தி எதுவும் தெரியாத நான் சம்மதம் இல்லைன்னு சொல்லவும் புரிஞ்சிக்கிட்டு விட்டுட்டார். அதை புரிஞ்சிக்காத என்னோட ஃப்ரெண்ட் தேவையில்லாம அதை கம்ப்ளைன்ட் பண்ணி, பிரச்சனை ஆயிடுச்சு”

அதுக்காகத்தான் அவரோட அப்பா ஆதியை அடிச்சாரு. அவர் எந்த பொண்ணு கிட்டயும் எந்த வம்பும் செய்யலை. என்னை காதலிக்கிறதா சொன்னாரு. எனக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும் என்னையே நெனச்சுக்கிட்டு வாழ்ந்தாரு. கல்யாணத்துக்கு முதல் நாள் உங்க பையன் ஓடும்போது, என்கூட நின்னாரு. எந்த பிரச்சனை வந்தாலும் எப்பவும் என் கூட நிப்பாரு” என கர்வமாக கூறியவள் “எதுவும் தெரியாம அரைகுறையா தெரிஞ்சுகிட்டு அவரை பத்தி தப்பா பேசாதீங்க” என்றாள்.

இந்த செய்தி எல்லாருக்குமே புதிது. என்ன பதில் சொல்லலாம் என மாணிக்கவேல் யோசித்துக் கொண்டிருந்தார்.

“ஆதியாலதான் நம்ம பையன் செஞ்ச தப்பு வெளியில தெரியாம, நம்ம மானம் போகாமல் இருந்தது. நீங்க அவனையே குறை சொல்லிக்கிட்டு இருக்காதீங்க” என்றார் கல்பனா.

அப்போது கார்த்திக் உள்ளே நுழைந்தான். வெண்பாவை பார்க்கவென்று வந்தவன், எல்லோரையும் அங்கு பார்த்து வியப்படைந்தான். உள்ளே நுழைந்த அவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது. அடித்தது கார்த்திக்கின் அன்னை கல்பனாவேதான்.

“அம்மா…” என கார்த்திக் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கூற,

“பேசாதடா… நான் வளர்த்த பையனாடா நீ? என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?” என கோபமாக கேட்டார்.

வெண்பா அழுது கொண்டு நிற்க, உண்மை தெரிந்து விட்டது என்பதை அறிந்தான் கார்த்திக்.

“கல்பனா, ஒரு வளர்ந்த பையனை இப்படித்தான் எல்லார் முன்னாடியும்… அதுவும் அவன் மாமனார் வீட்டுல வச்சி அடிப்பியா? உனக்கு அறிவு இருக்கா?” என கேட்டார் மாணிக்கவேல்.

“நீங்க கொஞ்சம் வாயை மூடுறீங்களா? உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தாதான் இந்த கஷ்டம் புரியும். பிள்ளைங்கள கண்டிக்கிறேன்… கண்டிக்கிறேன்னு… சொல்லி… சொல்லி… அவங்க ரெண்டு பேருமே உங்களுக்கு பயந்து பயந்து மனசுல உள்ளதை தைரியமா சொல்ல முடியாம… பிரச்சனை வந்தா ஒழுங்கா ஹேண்டில் பண்ண தெரியாம… இன்னும் பெரிய பிரச்சினையாக்கி விட்டுக்கிறாங்க. எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். அதனால எதுவும் பேசாம இருங்க. தப்பு பண்ணவங்கள விட்டுட்டு சும்மா மத்தவங்கள குறை பேச வேண்டியது” என அவரது வாயை அடக்கினார் கல்பனா.

“பாவம் ஓரிடம் பழி ஓரிடம் ங்கிற மாதிரி, நீங்க ரெண்டு பேரும் தப்பு செஞ்சுட்டு ஆதியை திட்டு வாங்க வச்சி வேடிக்கை பார்த்தீங்களே, அதுக்கப்புறம் ஒரு முறை மன்னிப்பாவது கேட்டீங்களா? இல்லையா?” என கார்த்திக்கை பார்த்து கேட்டார் கல்பனா.

கார்த்திக் தலைகுனிந்து நிற்க, “ஆதி வந்ததும் முதல்ல அவன்கிட்ட ரெண்டுபேரும் மன்னிப்பு கேட்கிறீங்க” என கார்த்திக்கையும் வெண்பாவையும் பார்த்து கூறியவர், “நீங்களும்தான்” என மாணிக்கவேலிடமும் கூறினார்.

மாணிக்கவேல் முறுக்கிக்கொண்டு நின்றார். அவருக்கு மன மாற்றம் வர இதெல்லாம் போதாது. இன்னும் அவர் சந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது போலும்.

நங்கையின் கைகளை பற்றிய கல்பனா, “எல்லாரும் ஆதியை திட்டும்போது நீ மட்டும் எப்பவும் அவனுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருப்ப. நான் கூட நினைப்பேன் இந்த பொண்ணு ஏன் இப்படி அவனுக்கு சப்போர்ட் பண்ணுதுன்னு? இப்ப புரியுதும்மா. நீ அவனை நல்லா புரிஞ்சு வச்சிருக்க. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருப்பீங்க” என்றார்.

ஆதியிடம் நடந்ததை அன்றிரவு கைப்பேசியின் மூலமாக நங்கை கூற, “விடு நங்கை, என்ன இருந்தாலும் அவங்க உன் அம்மா. உண்மை தெரியாம அப்படி நடந்துகிட்டாங்க, உண்மை தெரிஞ்சதும் தப்பை உணர்ந்திட்டாங்கதானே. அவங்க கிட்ட நீ பழைய மாதிரி பேசு. என் சித்தப்பாவை எல்லாம் திருத்துறத்துக்கு புதுசா யாராவது பொறந்து தான் வரணும். அவர் கிட்ட பேசினா நம்ம எனர்ஜிதான் வேஸ்ட் ஆகும். பாவம் மாமா. அவருக்கு இந்த உண்மை தெரியாமலேயே இருந்திருக்கலாம். ரொம்ப வருத்தப்பட்டிருப்பார்” எனக் கூறினான்.

“நீங்க பெரிய தியாகப்பிரபுதான். எல்லாரையும் ஈஸியா மன்னிச்சிடுங்க” என கூறினாலும், நங்கைக்கு ஆதியை நினைத்து பெருமையாகத்தான் இருந்தது.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. பொதுத் தேர்வுகள் முடிந்துவிட்டது. பள்ளியின் முதல்வர், அடுத்த செட் மாணவர்களுக்கும் விடுமுறையிலேயே பாடங்கள் எடுக்க தொடங்கிவிட்டதால், நங்கையின் கணவர் வரும்வரை கற்பிக்கும் படி கேட்டுக் கொள்ள, நங்கைக்கும் ஆதி வரும்வரை வேலையை தொடரலாம் என முடிவெடுத்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள்.

வெண்பாவிற்கு சொந்தங்கள் எல்லோரையும் அழைக்காமல் வீட்டு ஆட்களை வைத்தே வளைகாப்பு நடத்தினர். அந்த வாரத்திலேயே அவளுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

நர்மதாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அரசுப் பணியில் இருக்கும் ஒருவரை மாப்பிள்ளையாக அவளின் பெற்றோர் தேடிக்கொண்டிருக்க, இயற்கை விவசாயம் செய்யும் கிருஷ்ணா என்பவனை தன் பெற்றோரின் முன் கொண்டுவந்து நிறுத்தினாள் நர்மதா. தனக்கு சீனியர் என்றும், அப்போதிலிருந்தே நண்பனாக தெரியும். இப்போது கொஞ்ச நாட்களாக காதலிக்கிறோம். கல்யாணம் செய்து வையுங்கள் என்றாள் நர்மதா.

“விவசாயம் பார்க்கிறவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன். இவரை படிச்சி கவர்ன்மெண்ட் வேலைக்கு போகச் சொல்லு. பார்க்கலாம்” என்றார் நர்மதாவின் தந்தை.

“எல்லாரும் கவர்ன்மென்ட் வேலைக்கு போயிட்டா, அவங்களுக்கு எல்லாம் சாப்பாடு போடறது யாரு? கவர்ன்மெண்ட் வேலையை விட நல்ல சம்பளத்துல, ஐ டி ல நல்ல வேலையில இருந்தேன். அதுல எனக்கு ஈடுபாடு இல்லாமதான் இப்போ இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதைத் தான் செய்வேன்” என கிருஷ்ணா கூற,

“நீங்க சம்மதிச்சா உங்க ஆசீர்வாதத்தோடு கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லைன்னா ஆதி கிட்ட பேசிக்கிறேன். எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைப்பான்” என நர்மதா கூற, வேறு வழியில்லாமல் நர்மதாவின் பெற்றோர் சம்மதித்து விட்டனர். ஆதிக்கு பயந்து எல்லாம் இல்லை. தங்கள் மகளுக்கு பயந்து.

நர்மதாவின் நிச்சயதார்த்தத்திற்கு பழனிவேல் குடும்பத்தை நர்மதா வீட்டில் அழைத்திருந்தனர். அவர்களும் செல்வதாக இருந்தது.

நங்கை வேலைபார்த்த பள்ளியில் வார இறுதி நாட்களில் கூட படிப்பில் கொஞ்சம் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏதாவது ஒரு ஆசிரியர் அரைநாள் பாடம் எடுப்பது வழக்கம். நங்கையின் முறை வர, அவள் அன்று பள்ளிக்கு சென்றிருந்தாள்.

பள்ளியில் வாட்ச்மேன் எப்பொழுதும் இருப்பார். மாணவர்கள் இருக்கும் பொழுது, ஆண் பெண் என இரண்டு அட்டெண்ட்டர்களும் இருப்பார்கள். அதனால் எந்த பயமும் இல்லை.

அவள் பள்ளியில் இருப்பதை அறிந்த மதன், பள்ளிக்கு வந்தான். வாட்ச்மேனிடம் ஒரு ஃபைலை கையில் கொடுத்து, வீட்டில் கொடுத்துவிட்டு வருமாறு கூறினான். மதன் மீது மதுவின் நெடி வந்தது.

வாட்ச்மேன் காவலுக்கு வேறு ஆட்கள் இல்லை என்று கூற, “நான் சொல்வதை செய்” என அனுப்பி வைத்தான் மதன். தயக்கத்தோடு வாட்ச்மேன் புறப்பட்டு சென்றான்.

தனது அறைக்குள் வந்தவன், அட்டெண்டர்கள் இருவரையும் அழைக்க, இருவரும் உள்ளே நுழைந்தனர். தன் கையில் வைத்திருந்த மயக்க மருந்து ஸ்பிரே மூலம் இருவரின் முகத்திலும் அடிக்க, இருவரும் மயக்கம் அடைந்து விழுந்தனர். இருவரையும் அறையிலேயே வைத்து பூட்டியவன், நங்கை இருக்கும் இடத்தை தேடி சென்றான்.

அன்றைய வகுப்பு ஆய்வுக் கூடத்தில் நடைபெற்றது. அரைநாள் வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருக்க, நங்கையும் கிளம்ப தயாரானாள். எல்லா மாணவர்களும் சென்று விட்டார்கள் என்பதை, உறுதிப்படுத்திக் கொண்டவள், அட்டெண்டர்கள் எங்கே என பார்த்தாள். அவர்களை காணாததால் தேடிக் கொண்டு வெளியே வந்தாள்.

ஆய்வுக் கூடத்தை பூட்டிவிட்டு சாவியை அலுவலகத்தில் வைத்து விட்டு செல்ல வேண்டும். வாட்ச்மேனிடம் சொல்லிக் கொண்டு செல்லலாம் என நினைத்து கேட்டின் அருகே வந்தாள்.

வாட்ச்மேனும் இல்லாததால் எங்கே போயிருப்பார்கள் என யோசித்துக்கொண்டே, தானே பூட்டிவிட்டு அலுவலகத்தில் வைத்து விட்டு போய்விடலாம் என்றெண்ணி உள்ளே வந்தாள். ஆய்வகத்தில் உள்ளே சென்று மீண்டும் ஒருமுறை சரி பார்த்தாள். அதற்குள் உள்ளே நுழைந்தான் மதன். நுழைந்தவன் வேகமாக கதவை தாழிட்டான்.

அவனைப் பார்த்ததும் விழிப்படைந்த நங்கை, தன் கைப்பையை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, “ கதவை எதுக்கு சாத்தின? மரியாதையா கதவைத் திற?” என்றாள்.

சிரித்துக்கொண்டே, வெறியுடன் அவளை நெருங்கினான் மதன். தன் கைப்பையில் எப்பொழுதும் இருக்கும் பேனா கத்தியை எடுத்துக் கொண்டாள் நங்கை.

அவன் நெருங்க, அவன் முன் கத்தியை நீட்டினாள். முதலில் அதிர்ந்தவன், தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஸ்பிரேவை கையில் எடுத்துக் கொண்டு அவள் அருகில் வந்தான்.

அவன் நெருங்கிவர கத்தியால் அவன் கன்னத்தில் கீறினாள் நங்கை. இவள் அழுத்தமாக கீற வந்தாலும் அவன் சற்று நகர்ந்து கொண்டதில் ஆழமாக காயம் ஏற்படாமல் லேசாக காயம் ஏற்பட்டது. இருந்தும் கன்னத்தில் குபுக்கென ரத்தம் எட்டிப் பார்த்தது.

எரிச்சல் மிகுதியால் அவளைப் பார்த்து கத்தியவன், ஸ்பிரேவை அவள் முகத்தில் அடித்தான். அவன் ஸ்பிரேவை கையில் எடுத்தபோதே, தன் முந்தானையின் மூலம் முகத்தை மூடிக் கொண்டாள். இருந்தும் ஸ்பிரே கொஞ்சமாக அவள் நாசிக்குள் செல்ல மயங்கி சரிந்தாள் நங்கை.

மமதையுடன் நங்கையை பார்த்து சிரித்தவன் ஆசை வெறியுடன் நங்கையை நெருங்கினான். அவளை தன் காரில் வைத்து பண்ணை வீட்டிற்கு செல்வதற்காக போட்ட திட்டம்தான் இது. அவளை தூக்குவதற்காக மதன் நெருங்க, நாய் சத்தமாக குரைக்கும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்த்தான். கொலைவெறியுடன் அவனைப்பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது ஆதியின் செல்லப்பிராணி டாலி.