NVNN-18

அத்தியாயம் 18

வெண்பா கார்த்திக்குடன் மாணிக்கவேல் வீட்டில்தான் இருந்தாள். அங்கிருந்தே தினமும் கல்லூரி சென்று வந்தாள். அவளுக்கு படிப்பு முடிய இன்னும் மூன்று மாதங்கள் இருந்தன.

நங்கை தன் தாயுடன் சரியாக பேசுவதில்லை. ‘தப்பு செஞ்ச அவ புருஷனை ஒன்னும் கேட்காம, நான் தப்பை சுட்டிக் காட்டினா என்கிட்டயே நீ பேசாம இருப்பியா? போ’ என விட்டு விட்டார் பிரேமா.

வெண்பா பற்றிய உண்மையை நங்கை யாரிடமும் சொல்லவில்லை. இந்த உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியும். கண்டிப்பாக ஒரு நாள் வெளிப்படும். அன்றே எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டாள்.

நங்கைக்கு இங்கே இருக்கவே பிடிக்கவில்லை. ஆதி தன்னை அவனுடன் அழைத்துச் செல்லும் நாளுக்காக காத்து கொண்டு இருந்தாள். ‘என்னை சீக்கிரம் கூப்பிட்டுக்கிட்டு போகச் சொல்லு’ என டாலியிடம் நங்கை கூறியதே ஆதிக்கு தீவிரமாக படிக்க போதுமானதாக இருந்தது.

அடுத்து வந்த தேர்வுகளையும் நன்றாகவே எழுதியிருந்தான் ஆதி. தேர்வு முடிவுகள் வரவில்லை. ஆனால் முடிவுகளைப் பற்றி கவலை கொள்ளாமல், நம்பிக்கையுடன் நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தான் ஆதி.

கார்த்திக் பெண்பா திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் தான் கருவுற்று இருப்பதாக தன் அன்னையிடம் வெண்பா கூறினாள். தேதியை மாற்றி கூறினாள். கல்பனாவிடமும் அவ்வாறே கூறினாள். உண்மை தெரியாவிட்டாலும் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். நங்கை எதுவும் காட்டிக் கொள்ளவில்லை. ‘எத்தனை நாட்களுக்கு இந்த பொய் வாழப் போகிறது? பார்ப்போம்’ என இருந்துவிட்டாள்.

ஆதி எழுதிய தேர்வுகளின் முடிவுகள் வந்துவிட்டன. ஆதி வெற்றி பெற்றுவிட்டான். தேர்வுகளில் வெற்றி பெற்றதால் நேர்காணலுக்காக டெல்லி வருமாறு அழைப்பு கடிதம் வந்திருந்தது. முதலில் நங்கையிடம்தான் பகிர்ந்து கொண்டான். நங்கை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பழனிவேலுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. இப்படி முதல் முறையிலேயே வெற்றி பெறுவான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஆனாலும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

விஜய்யிடம் “பார்த்தியாடா? என் மேல எல்லாரும் கோவமா இருந்தீங்களே, இப்ப எப்படி அவன் பாஸ் பண்ணியிருக்கான்னு. அவன் பொண்டாட்டியோட சேர்ந்து வாழணும்னு வெறி இருந்ததுனால தானே இப்படி அவனால படிச்சு முதல் முறையிலேயே பாஸ் பண்ண முடிஞ்சது?” எனக்கேட்டார்.

“அப்பா நீங்க ஆதியை புரிஞ்சி வச்சிருக்கிறது அவ்வளவுதான். நங்கையோடு சேர்ந்து வாழணும்னு அவன் படிச்சு பாஸ் பண்ணலை. நங்கையோட நல்லா வாழனும்னுதான் அவன் படிச்சி பாஸ் பண்ணியிருக்கான்” என்றான் விஜய்.

“நானும் நங்கையோட நல்லா வாழனும்னுதானடா, அவங்கள பிரிச்சி வச்சி இவன நல்லா படிக்க சொன்னேன்” என்றார் பழனிவேல்.

“நங்கை அவன் கூட இல்லாததாலதான் படிச்சதா நீங்க நினைக்கிறீங்க. நங்கை அவன் கூட இருந்திருந்தாலும் நல்லாதான் படிச்சிருப்பான். உங்களோட மிரட்டலுக்கு பயந்து எல்லாம் அவன் படிக்கலை. அவனோட மனைவியோடு சேர்ந்து வாழணும்னு அவனுக்கு முன்னாடியிலிருந்தே எண்ணம். அதுக்காகத்தான் படிச்சான். என்ன… நங்கை கூட இருந்திருந்தா அவன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்க மாட்டான்” என விஜய் கூற பழனிவேல் அவனை யோசனையாய் பார்த்தார்.

“நான் செஞ்சது தப்புன்னு சொல்றியா?” எனக் கேட்டார் பழனிவேல்.

“அவன் விஷயத்துல நீங்க செஞ்சது எல்லாமே தப்புதான் அப்பா. எல்லார் முன்னாடியும் பெல்ட்டால் அவனை அடிச்சீங்களே? கோபம் வந்து உங்கள திருப்பி ஏதாவது பண்ணியிருந்தா என்ன பண்ணி இருப்பீங்க? அதெல்லாம் கூட வேண்டாம்… பெல்ட்ட பிடுங்கி கீழே எறிய எவ்வளவு நேரமாகியிருக்கும் அவனுக்கு? எதுவும் செய்யாமல் ஏன் நின்னான் தெரியுமா? உங்கள எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்த அவன் விரும்பல?”

“லவ் லெட்டர் கொடுக்கிறது எல்லாம் வயசு பசங்க, வயசுக்கோளாறுல செய்ற சாதாரண விஷயம் தானே. அத நீங்க தனியா அவனை கூப்பிட்டு பொறுமையா எடுத்துச் சொல்லியிருந்தா அவன் புரிஞ்சுகிட்டு இருந்திருப்பான். அதை விட்டுட்டு எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தி அவன் கெட்டு போறதுக்கு காரணமாவே நீங்கதான் இருந்துருக்கீங்க. அதுக்கப்புறமும் நீங்க அவன் திருந்தனும்னு நினைச்சீங்களே தவிர, அவனை புரிஞ்சுக்கணும்னு நீங்க எப்பவுமே நினைக்கவே இல்லப்பா. இதை நான் முன்னாடியே சொல்லி இருந்தா நீங்க மதிச்சி கேட்டிருக்கக் கூட மாட்டீங்க. இப்ப அவன் பாஸ் பண்ணிட்டான். அதுதான் நான் சொல்றதை இப்ப கேட்கிறீங்க” என கூற பழனிவேலுக்கு விஜய் சொல்வது சரி என்றே பட்டது. ஆனால் காலம் கடந்த ஞானோதயம்.

தலைநகர் டெல்லியில் நேர்முகத்தேர்வு நடைபெற இருந்தது. அதற்கான அழைப்பு கடிதத்தை எடுத்துக்கொண்டு ஒரு நாள் முன்னரே டெல்லிக்கு சென்றான். ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி கொண்டான்.

எழுத்து தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவனுக்கு நேர்முகத்தேர்வு கொஞ்சம் பயத்தையும், பதட்டத்தையும் கொடுத்தது. அவன் பேசுவதிலேயே வீட்டில் இருந்தவர்களுக்கும் நங்கைக்கும் அவன் பதட்டத்துடன் இருக்கிறான் என்று நன்றாகப் புரிந்தது. விஜய் ஆதியை தைரியப் படுத்தினான். நங்கையும் தன்னுடைய குறுஞ்செய்திகள் மூலமாக ஆதிக்கு தைரியம் அளித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் நேர்முகத்தேர்வு. தூங்கி எழுந்தால் காலையில் நன்றாக இருக்கும் என நினைத்து, இரவு விரைவாகவே படுக்கையில் படுத்தாலும் உறக்கம் வரவே இல்லை. வெகு நேரம் கழித்தே உறங்கினான். தேர்வை நன்றாக எதிர்கொள்வோமா என்று சந்தேகமே அவனுக்கு வந்து விட்டது.

இப்படியாக குழப்பத்திலேயே உறங்கினான். காலையில் நான்கு மணிக்கே எழுந்து விட்டான். இன்னும் பதட்டமாகவே உணர்ந்தான். அறைக்கு தேநீர் வரவழைத்து பருகினான். அன்றைய செய்தித்தாளை ஒரு வரி விடாமல் படித்தான். இன்னும் நேரம் இருந்தது.

அழைப்பு மணி ஒலிக்க, எழுந்து சென்று கதவைத் திறந்தான். அறைக்கு வெளியே தமிழ்நங்கை புன்னகையுடன் நின்றிருந்தாள். அவனால் நம்பவே முடியவில்லை. நங்கைக்கு பின்னால் பழனிவேலும், விஜய்யும் நின்றிருந்தனர்.

குரலை செருமிக்கொண்ட பழனிவேல் “என்ன இப்போ… அவங்க கேட்கிறதுக்கு பதில் சொல்ல போற. அதான் என்ன கேட்டாலும் பட்டு பட்டுன்னு பதில் பேசுவியே. அத மாதிரி சொல்லிட்டு போகாமல் எதுக்கு இப்படி பயப்படுற?” என ஆதியிடம் கூறியவர், நங்கையை நோக்கி “அவனுக்கு தைரியம் சொல்லி அழைச்சுட்டு வாம்மா” என்றார்.

‘எங்கப்பா மீசைதான இவரு’ என வியப்பாய் பார்த்து நின்றான் ஆதி.

“டேய் உன்னோட தைரியலட்சுமியையே உன்கிட்ட கூட்டிட்டு வந்துட்டோம். சீக்கிரம் கிளம்பி வா. நாங்க வெயிட் பண்ணுறோம்” எனக்கூறி பழனிவேலை அழைத்துக்கொண்டு சென்று விட்டான் விஜய்.

“எதுக்கு இப்படி பயப்படுறீங்க? ரிட்டன் எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதிதானே பாஸ் பண்ணுனீங்க? அதே மாதிரி இதையும் நல்லா பண்ணுவீங்க” என ஆதியிடம் நேரடியாகவே நங்கை சொல்ல, அவளை ஆரத்தழுவிக் கொண்டான் ஆதி.

நங்கையும் ஆதியை அணைத்துக்கொண்டாள். ஆதியின் இதயத்துடிப்பு நன்றாக கேட்டது நங்கைக்கு. அவனது முதுகை மெல்ல தடவி கொடுத்ததாள். சிறிது நேரத்திற்கு பிறகு அவளை விட்டவன்,

“என்னால நம்பவே முடியலை நங்கை. எப்படி வந்தீங்க? எங்க அப்பா எப்படி ஒத்துக்கிட்டார்” எனக் கேட்டான்.

“எனக்கும் சரியா தெரியலை. இந்த நேரத்துல உங்க கூட இல்லைன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருந்துச்சு. உங்க அண்ணன் என்ன சொல்லி உங்க அப்பா மனசை மாத்தினாரோ தெரியல. ரெண்டு பேரும் நேத்து வந்து என் அப்பாகிட்ட பேசி என்னையும் அழைச்சிகிட்டு திருச்சி வந்துட்டாங்க. அங்கிருந்து சென்னைக்கு ஃபிளைட். சென்னையிலிருந்து திருப்பி டெல்லிக்கும் ஃபிளைட். இப்போ நான் உங்க முன்னாடி. உங்க அப்பா அவர் சத்தியம் வாங்கினதுக்காக ரொம்ப வருத்தப்பட்டார். சத்தியத்தை எல்லாம் கேன்சல் பண்ணிட்டார்” எனக் கூறி சிரித்தாள்.

“தேங்க்ஸ் நங்கை, தேங்க்ஸ்” என்றான் ஆதி.

“எதுக்கு தேங்க்ஸ்”

“இப்போ வந்ததுக்கு. நான் எவ்ளோ நெர்வஸா இருந்தேன் தெரியுமா?”

“எதுக்கு இப்படி பதட்டப்படுறீங்க?”

“ரிட்டன் எக்ஸாம் எழுதறப்ப எல்லாம் இப்படி இல்ல. நான் பாட்டுக்கு போனேன். எழுதிட்டு வந்துட்டேன். இன்டர்வியூல அப்படியா? நம்மள பார்த்து நாலு பேரு கேள்வி கேட்பாங்க. அவங்க சாடிஸ்ஃபை ஆகிற மாதிரி நம்மளும் பதில் சொல்லணும்” என்றான் ஆதி.

“உங்க முன்னாடி இருக்கறவங்க எல்லாம் உங்க ஃபிரெண்ட்ஸ்ன்னு நினைச்சுக்குங்க. ஃபிரெண்ட்ஸ் கேட்டா உங்களுக்கு தெரிஞ்சதை எப்படி சொல்லுவீங்களோ அப்படி பதில் சொல்லுங்க. பதட்டப்படாதீங்க” என்றாள் நங்கை.

“ம்… ம்… தேங்க்ஸ் நங்கை” என ஆதி கூற,

“என்ன சும்மா சும்மா தேங்க்ஸ். பொண்டாட்டிக்கு போய் யாராவது தேங்க்ஸ் சொல்வாங்களா?” எனக் கேட்டாள் நங்கை.

“சொல்லலாம், ஆனா வார்த்தையால சொல்ல கூடாது” என கூறி ஆதி கண் சிமிட்ட, “இன்னைக்கு இன்டர்வியூ. நினைப்பு இருக்கா?” என்றாள் நங்கை.

“நல்லா நினைப்பு இருக்கு…” என ராகம் போட்டு இழுத்து கூறியவன் கிளம்ப தயாரானான்.

டை கட்ட தெரியாமல் ஆதி திணறிக் கொண்டிருக்க நங்கையே கட்டிவிட்டாள்.

“நல்லா டை கட்டுறீங்க” என ஆதி கூறினான்.

“பின்ன மெட்ரிகுலேஷன் ஸ்கூல் டீச்சர் ஆச்சே.எத்தனை பசங்களுக்கு டை கட்ட சொல்லித் தந்திருப்பேன்” எனக் கேட்டாள் நங்கை.

“டைம் ஆச்சி கிளம்பலாம்” என ஆதி கூற, அவன் நெற்றியில் முத்தம் வைத்த நங்கை, “நீங்க நல்லா பண்ணுவீங்க. எனக்கு தெரியும். ஆல் த பெஸ்ட்” என்றாள்.

பின்னர் நால்வரும் உணவருந்திவிட்டு, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்றனர். ஆதி உள்ளே சென்றுவிட, மற்ற 3 பேரும் வெளியில் காத்து நின்றனர்.

உண்மையில் நங்கை வந்திராவிட்டால் இந்த தைரியம் ஆதிக்கு வந்திருக்குமா என்றால் கண்டிப்பாக கிடையாது. ஆதிக்கு யானை பலம் கிடைத்தது போல இருந்தது. ஆதியின் ஆளுமைத் திறனையும் நேர்மையையும் சோதிக்கும் படியான கேள்விகளே கேட்கப்பட்டது. மனதில் தோன்றியதை பயமின்றி பதிலளித்தான். நன்றாக செய்திருப்பதாகவே ஆதிக்கு தோன்றியது.

நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு வந்தவனை நங்கை ஆவலுடன் பார்க்க, அவனது மலர்ந்த முகமே சொன்னது நன்றாக செய்திருப்பதை.

வந்தவன் விஜய்யை கட்டிக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் விஜய்” என்றான்.

“எதுக்குடா? உன் பொண்டாட்டிய அழைச்சிட்டு வந்ததுக்கா?” எனக் கேட்டான் விஜய்.

“அதுக்கு மட்டும் இல்ல. எல்லாத்துக்கும். நான் எப்ப எல்லாம் கஷ்டப்படுறேனோ அப்ப எல்லாம் என்கூட நீ நின்னுருக்க. உண்மையிலேயே நீ எனக்கு அண்ணன் இல்ல, இன்னொரு அப்பாதான்” எனக் கூறி  கண்கலங்கினான் ஆதி.

“அதுல என்னடா சந்தேகம்? பார்த்திக்கும், சம்யுவுக்கும் முன்னாடி நீ தாண்டா எனக்கு” எனக்கூறி விஜய்யும் அவனைத் தழுவிக் கொண்டான்.

பார்த்திருந்த பழனிவேலுக்கு தனது இரு மகன்களின் பாசத்தை பார்த்து பெருமையாக இருந்தது. அன்றே விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.

பழனிவேல் நங்கையை திருச்சியிலேயே இருக்க சொல்ல, நங்கைக்கு ஆதியுடன் இருக்க மலையளவு ஆசை இருந்தாலும் தயங்கினாள்.

அவள் பனிரெண்டாம் வகுப்புக்கு பாடம் எடுப்பவள். பொதுத் தேர்வு நெருங்கும் சமயம். இப்போது தான் வேலையை விட்டு விட்டால் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் யோசித்தாள்.

திருச்சியில் வேலை பார்க்கும் பொழுது அவள் சிறிய வகுப்புகளுக்கு தான் பாடம் எடுத்தாள். அவள் சென்றாலும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது இவள் சென்றால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதை கூறவும் செய்தாள். சற்றும் யோசிக்காமல், உடனேயே  நங்கையை கரூரிலேயே இருக்கச் சொல்லி விட்டான் ஆதி.

இத்தனை மாதங்கள் பிரிந்திருந்தும், ஒன்றாக வாழ வேண்டுமென்ற ஆசை இருந்தும் கடமைக்காக இன்னும் சில காலம் பிரிய தயாராகிய இருவரையும் பழனிவேலும் விஜய்யும் பிரமிப்புடன் பார்த்தனர்.

தமிழரசு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். வெண்பாவின் திருமணத்தின் போது ஆதியின் மீது வருத்தம் இருந்தாலும், ஆதி இப்போது தேர்வில் வெற்றி பெற்றது அவருக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆதியை வாழ்த்திவிட்டு, நங்கையை கரூர் அழைத்துச் சென்றார்.

நங்கை வேலை பார்க்கும் பள்ளியின் தாளாளர் மகன் அடிக்கடி நங்கையை கூப்பிட்டு சம்பந்தமே இல்லாமல் பேசுவது போல பட்டது நங்கைக்கு. அவனின் பார்வையும் நங்கையை மேய்ந்தது. அவள் கவனித்தால் உடனே பார்வையை மாற்றிக் கொள்வான்.

‘ஏதாவது வாலாட்டட்டும், இருக்கிறது இவனுக்கு’ என நினைத்துக்கொண்டாள் நங்கை.

ஒரு நாள் மதிய வேளையில் பனிரெண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களையும் ஒவ்வொருவராக தன்னுடைய அறைக்கு அழைத்து மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டிருந்தான் மதன். வேண்டுமென்றே பள்ளி முடியும் தருவாயில் கடைசியாக நங்கையை அழைத்தான்.

மாணவர்களைப் பற்றி கேட்கிறேன் எனக் கூறி வெகு நேரம் வரையில் இருக்கச் செய்தான். பள்ளி முடிந்து அனைவரும் செல்ல ஆரம்பிக்க, நேரமாவது உணர்ந்து நங்கை தன் கைக்கடிகாரத்தை பார்த்தாள்.

“அப்புறம் நங்கை, நீங்க தனியாதான் இருக்கீங்க போல?” என கேட்டான் மதன்.

முகம் சுருக்கிய நங்கை “என்ன சார், என்ன கேட்டீங்க?” என கேட்க, “அது வந்து… உங்க ஹஸ்பண்ட் உங்க கூட இல்லையா?” எனக் கேட்டான்.

“என் பர்சனல் லைஃப் பத்தி உங்ககிட்ட நான் ஏன் சொல்லணும்?” என நங்கை கேட்டாள்.

வழிந்து கொண்டே சிரித்தவன், “நீங்க ரொம்ப சின்ன வயசு. இந்த வயசுல கணவன் துணை இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும். இது என்னோட பண்ணை வீட்டு அட்ரஸ். இந்த சன்டே அங்க வாங்க” எனக்கூறி தன் கார்டை நங்கையிடம் நீட்ட, மதனுக்கு கண்ணில் பூச்சி பறந்துகொண்டிருந்தது. அடிப்பதற்காக கூட தன் கைகளால் அவனை தொட விரும்பாத நங்கை, தன்னுடைய செருப்பால் அவன் கன்னத்தில் அடித்திருந்தாள்.

“இனி எந்த பொண்ணுகிட்டயும் தப்பா பேசுறதுக்கு முன்னாடி, இந்த செருப்படிதான் உனக்கு நினப்புக்கு வரணும்” என்றவள் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

வீட்டிற்கு வந்த நங்கைக்கு மனது பொறுக்கவே இல்லை. இதைப்போன்ற பொறுக்கிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டாள். அப்போது ஆதியிடம் இருந்து காணொளி அழைப்பு வந்தது. எடுத்து பேசினாள்.

“நங்கை நான் ஐஆர்எஸ் ல செலக்ட் ஆகிட்டேன்… இன்னும் பத்து நாள்ல முசோறிக்கு ட்ரைனிங் வரச்சொல்லி ஆர்டர் வந்திருக்கு” என முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் கூறினான் ஆதி.

நங்கைக்கு ஆனந்தத்தில் அழுகை வந்துவிட்டது. “ஆதி நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்கன்னு எனக்கு தெரியும். ரொம்ப பெருமையா இருக்கு” என்றாள்.

“எனக்கு உங்களை பாக்கணும் போல இருக்கு நங்கை. நான் அங்க வரட்டா” எனக் கேட்டான் ஆதி.

அவன் இங்கு வருவதை விரும்பாத நங்கை வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.

“நங்கை மூணு மாசம் ட்ரெய்னிங். உங்களை அதுக்கு முன்ன ஒரே ஒரு தடவை பார்க்கணும் போல இருக்கு. ப்ளீஸ்…” என கெஞ்சினான் ஆதி.

வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டாள். ஆதிக்கு ஏமாற்றமாக போய்விட்டது. நங்கை தன் பிடியில் உறுதியாக இருக்க, ஆதியும் பிரேமாவால்தான் இவ்வாறு கூறுகிறாள் என்பதை உணர்ந்து விட்டுவிட்டான்.

நங்கை மதன் விஷயத்தைப் பற்றி ஆதியிடம் கூறவில்லை. ‘இப்போது கூறினால் உடனே கிளம்பி வந்து விடுவான். மதனிடம் ஏதும் பிரச்சனை செய்தாலும் செய்வான். அவன் பயிற்சியை நல்ல விதமாக முடிக்கட்டும், அதுவரை ஒன்றும் கூற வேண்டாம்’ என்று விட்டு விட்டாள்.

மறுநாள் பள்ளியின் முதல்வரிடம் மதனைப் பற்றிக் கூறி வேலையிலிருந்து விலகி விடுவதாக கூறினாள். பள்ளியின் முதல்வர், மதனின் மாமனாரும் பள்ளியின் முன்னாள் தாளாளருமான கணேசனிடம் இதைப்பற்றித் தான் பேசுவதாகவும், மாணவர்களுக்கு தேர்வு நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் நங்கை சென்றால் வேறு ஒரு திறமை மிகுந்த ஆசிரியர் உடனே கிடைப்பது அரிது என்றும் வேலையை விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். நங்கையும் மாணவர்களுக்காக வேலையை தொடர்ந்தாள்.

எப்படியும் நங்கை முதல்வரிடம் இதுபற்றி தெரிவித்திருப்பாள் என்று கணித்த மதன், தானே முதல்வரிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.

தன்னுடைய மாமனாருக்கு இதய நோய் இருப்பதாகவும், தன்னைப் பற்றி கூறினால் அதிர்ச்சியில் ஏதாவது ஆகி விடும் என்றும், இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன் என்றும் அவன் கூற, நங்கையை அழைத்து அவளிடமே நேரடியாக மன்னிப்பு கேட்க வைத்தார் முதல்வர். நங்கையும் இந்த விஷயத்தை அதோடு விட்டு விட்டாள்.

நங்கையின் மீது ஏற்கனவே ஆசையில் இருந்த மதன், அவள் செருப்பால் அடித்ததால் மனதிற்குள் வஞ்சம் வைத்து நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.