கார்த்திக்கை வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து வந்த ஆதி என்ன விஷயம் என்று கேட்க, கார்த்திக் வெண்பா கருவுற்றிருப்பதாக கூறவும் பேரதிர்ச்சி அடைந்த ஆதி ‘பளார்’ என்று கார்த்திக்கின் கன்னத்தில் அறைந்தான்.
வலி தாங்காமல் கன்னத்தைப் பிடித்துக் கொண்ட கார்த்திக், ஆதியை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்த வண்ணம் நின்றிருந்தான்.
“அறிவில்லடா, படிக்கிற பொண்ணை போய், ச்சீய்… அண்ணனும் தம்பியும் காதல்னா என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க…? காதலிக்கிற பொண்ணை எந்த சூழ்நிலை வந்தாலும், யாருக்காகவும் கை விடக்கூடாதுன்னு உங்க அண்ணனுக்கு தெரியலை. சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி, அதுக்கப்புறம் அந்தப் பொண்ண தேடிப் போனான். நீ அவனுக்கும் மேல போய்ட்டடா, உன்னை நம்பி வந்த பொண்ணுகிட்ட, கண்ணியமா நடந்துக்க தெரியாம…” என முடிக்க முடியாமல் ஆதங்கமாக கார்த்திகை பார்த்தான்.
கார்த்திக்கின் கண்கள் கலங்கியிருந்தது. “இப்படி ஆகும்னு நினைக்கலை டா” என்றான்.
ஆதிக்கு கார்த்திக்கின் மேல் கோபமாக இருந்தாலும், தன் கோபத்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை, பிரச்சனையை சரி செய்வது தான் இப்பொழுது முக்கியம் என நினைத்தவனாய் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
‘ஒருவேளை இவர்கள் காதலை பற்றி நங்கையிடம் தான் சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு ஆகியிருக்காதோ’ என்று கூட நினைத்தான்.
‘இருவரும் காதலிக்கிறார்கள். வெண்பா படித்துக் கொண்டிருக்கிறாள். இரு குடும்பத்திற்கும் பிரச்சனை என்றாலும் பேசி சரிப்படுத்த கூடியதுதான். வெண்பா படிப்பு முடிந்ததும் பேசி திருமணத்தை நடத்தி வைக்கலாம்’ என்றுதான் ஆதி நினைத்திருந்தான். இவர்கள் இப்படி அவசரப் படுவார்கள் என்று கனவிலும் அவன் நினைக்கவில்லை.
“இப்போ என்ன செய்யலாம்னு இருக்க?” எனக் கேட்டான் ஆதி.
கார்த்திக் வெறுமையாக ஆதியை பார்க்க, மூச்சை இழுத்து விட்டு தன் முகத்தை அழுந்தத் துடைத்து கோபத்தை கட்டுப்படுத்திய ஆதி, “எத்தனை மாசம்?” என்று கேட்டான்.
“ஒரு மாசம்” என்றான் கார்த்திக்.
இரு குடும்பங்களிலும் பேசி திருமண ஏற்பாடுகள் செய்தாலும் வெண்பாவின் படிப்பு முடிய வேண்டும் என்றுதான் வெண்பாவின் பெற்றோர் கூறுவார்கள். உண்மையை சொன்னால் அன்றி திருமணம் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை.
“உண்மையை சொல்லிடுங்க, அப்பதான் உடனே கல்யாணம் நடக்கும்” என்றான் ஆதி.
“இந்த உண்மை வெளியில தெரிஞ்சா உயிரையே விட்டிடுவேன்னு சொல்றாடா வெண்பா. அவளை எல்லோரும் கேவலமா பார்ப்பாங்கன்னு சொல்றா” என்றான் கார்த்திக்.
ஆதியின் கைகளைப் பிடித்துக் கொண்ட கார்த்திக், “ப்ளீஸ் ஆதி யார்கிட்டயும் சொல்லிடாத… நான் உன் அக்கா கிட்ட மட்டும் சொல்லலாம்னு சொன்னதுக்கு, என் வீட்டில் யாருக்கு தெரிஞ்சாலும் அடுத்த நிமிஷம் உயிரோடவே இருக்க மாட்டேன்னு உறுதியா சொன்னாடா. உன்கிட்ட சொல்ல போறதே அவளுக்கு தெரியாதுடா. யார்கிட்டயும் சொல்லாத” என கெஞ்சினான்.
ஆதிக்கும் குழப்பமாக இருந்தது. வெண்பா நங்கையின் தங்கை. கார்த்திக் தம்பியாக இருந்தாலும் அவனுக்கு நண்பனும் கூட. ‘ஏதாவது செஞ்சுக்கோங்க எப்படியோ போங்க’ என அவனால் விட முடியவில்லை.
“நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற. நீயே சொல்லு” என்றான் ஆதி.
“எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலடா. பயமா இருக்கு. வீட்டுல நர்மதாவ கல்யாணம் பண்ண சொல்லி கேட்கிறாங்க. அப்பாகிட்ட வெண்பாவை காதலிக்கிறத சொன்னா என்ன சொல்வார்ன்னு தெரியல. பேசி சரி செஞ்சாலும் உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரான்னும் தெரியலை. வெண்பா பிரக்னண்டா இருக்கிறதை சொன்னா எங்க கல்யாணத்துக்கு அப்புறம் அவளை எப்படி மரியாதையா பாப்பாங்க? ” என கூறினான் கார்த்திக்.
சில நிமிடங்கள் யோசித்த ஆதி, “நீ வெண்பாவை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோ” என்றான்.
“வீட்டுக்கு தெரியாம எப்படி டா?” என கார்த்திக் கேட்க, அவனை முறைத்து பார்த்தவன், “ ஓஹோ… வீட்டுக்கு தெரியாம நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க… ஆனா…” என முடிக்காமல் நிறுத்தியவன் “மரியாதையா கல்யாணம் பண்ணிக்க” என அழுத்தமாகக் கூறினான்.
எச்சில் விழுங்கிய கார்த்திக், தயங்கித் தயங்கி, “ஆதி, வெண்பாக்கு அபார்சன்…” என இழுக்க, அவன் சட்டையை பிடித்திருந்தான் ஆதி.
“வெட்கமா இல்ல இப்படி பேச? கல்யாணம் பண்ற எண்ணத்துல பழகினியா? இல்ல கழட்டி விட்டுடலாம்னு நினைச்சியா? அப்படி ஏதாவது நெனப்பு இருந்துச்சுன்னா… தம்பின்னு பார்க்க மாட்டேன். நானே உன்னை வெட்டி பொலி போட்ருவேன்” என்றான் ஆதி.
“டேய் என்னடா நீ இப்படி எல்லாம் பேசுற? வெண்பாதான் என் பொண்டாட்டி. அதுல எந்த மாற்றமும் இல்லை” என கார்த்திக் கூற அவனது சட்டையை விட்டவன், “அப்புறம் என்னடா? மரியாதையா கல்யாணம் பண்ணிக்க. வேற ஏதாவது பேசுன நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்றான் ஆதி.
“ஆனந்த் தான் அப்பா அம்மாவை மீறி கல்யாணம் பண்ணிகிட்டான். நானாவது அவங்க ஆசீர்வாதத்தோடு பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்”
“அதுக்கு நீ அவசரப்பட்டிருக்க கூடாது. ஒன்னு உன் வீட்டில உண்மையை சொல்லி வெண்பாவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க. இல்லைன்னா யாருக்கும் தெரியாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க. ரெண்டுல எதுன்னு முடிவு பண்ணி இன்னும் அஞ்சு நிமிஷத்துல சொல்ற” எனக் கூறிய ஆதி பக்கத்திலிருந்த மர பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டான்.
“சரிடா நான் ரெஜிஸ்டர் மேரேஜே பண்ணிக்கிறேன்” என்றான் கார்த்திக்.
கார்த்திக் ஆதியிடம் கூறி விட்டான் என்று தெரிந்த பிறகு வெண்பா கார்த்திக்கிடம் அழுது “ஏன் சொன்னாய்?” என கேட்டாள்.
“ஆதி எனக்கு நண்பன் போல. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. அதான் சொல்லிட்டேன். கண்டிப்பா அவன் யார்கிட்டயும் சொல்ல மாட்டான்” என சமாதானப்படுத்தி இருந்தான்.
தென்றல் அவளது கணவன் அசோக் உடன் தனது அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள். அடுத்த நாள்தான் வெண்பாவும் கார்த்திக்கும் பதிவுத் திருமணம் செய்வதாக இருந்தது. இரவு உணவு அருந்தும் பொழுது, எல்லோரும் பேசிக் கொண்டிருக்கையில், “நான் அப்பவே சொன்னேன் யாரும் கேட்கலை. நம்ம கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா நங்கைக்கு நல்ல இடமா பார்த்திருக்கலாம். இப்ப பாருங்க, கஷ்டப்படுறா” என்றான் அசோக்.
“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை மாப்பிள்ளை. ஆதி மாப்பிள்ளை இப்போ படிச்சிட்டு இருக்கார். சீக்கிரம் நல்ல நிலைமைக்கு வந்திடுவார். நங்கை மேல ரொம்ப அன்பா இருக்கார். அவர் கிட்ட நீங்க பேசி பார்த்ததில்லை. ரொம்ப நல்ல குணம். பேசுனீங்கன்னா உங்களுக்கும் பிடிச்சிடும்” என தமிழரசு கூறினார்.
அசோக் கூறியதில் நங்கைக்கு கோபம் வந்தது. அப்பா பதில் பேசி விட்டதால் விட்டுவிட்டாள். இருந்தும் அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காமல் எழுந்து தனது அறைக்கு சென்றுவிட்டாள்.
“எப்ப பாரு அவரைப் பத்தி குறை சொல்லிக்கிட்டே இருக்காதீங்க. நங்கை அவரைப் பத்தி ஒரு வார்த்தை குறையாய் இதுவரைக்கும் சொன்னதில்ல. பாருங்க, அப்பா கூட நல்லவிதமா தான் சொல்றார். உங்களுக்குதான் என்னவோ அவரை பிடிக்கலை” என தென்றல் கூற, அசோக் ஒன்றும் கூறாமல் அமைதியானான். பின்னர் அனைவரும் உறங்கச் சென்று விட்டனர்.
அடுத்த நாள் நங்கை பள்ளி சென்றுவிட, வெண்பா கல்லூரிக்கு செல்கிறேன் எனக் கூறிச் சென்றாள். தமிழரசு தன் பேத்தியுடன் நேரம் செலவிட எண்ணி, விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில்தான் இருந்தார்.
கரூரில் இருந்த பதிவாளர் அலுவலகத்தில் கார்த்திக்- வெண்பா பதிவு திருமணம் நடைபெற்றது. வெண்பா சார்பில் ஆதி கையெழுத்திட, கார்த்திக்கின் சார்பில் அவனது நண்பன் ஒருவன் கையெழுத்திட்டான்.
வெண்பா ஆதியின் முகத்தை பார்க்க முடியாமல் மருகி போய் நின்றிருந்தாள். கண்ணீர் மல்க ஆதியிடம், “மாமா…” என வெண்பா பேச முடியாமல் தடுமாற, “நங்கையோட தங்கச்சி, எனக்கும் தங்கச்சிதான். நான் எதுவும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்றான் ஆதி.
நன்றியுடன் வெண்பா பார்க்க, “நான் இப்ப கல்யாணத்துக்கு வந்தது, சாட்சி கையெழுத்து போட்டது, எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம். நங்கைகிட்ட நானே ஒருநாள் சொல்லிக்கிறேன். இப்ப தெரிஞ்சா பிரச்சனை ஆகும். என்னை எல்லோரும் எதுவும் சொல்வாங்களோன்னு நான் பயப்படல. ஆனா நங்கை இப்போ உங்க வீட்ல இருக்கும்போது, இது தெரிய வேண்டாம்” என ஆதி கூற சரியென தலையாட்டினாள் வெண்பா.
ஆதிக்கு எப்படியாவது கார்த்திக்- வெண்பா திருமணத்தை நடத்திவிட வேண்டும். கார்த்திக்கின் விஷயம் தெரிந்து, எங்கே ஆனந்திடம் நடந்து கொண்டது போல கார்த்திக்கிடமும் மாணிக்கவேல் செத்து விடுவேன் என மிரட்டி, அவன் பயந்து பின் வாங்கி விடுவானோ என ஆதிக்கு பயமாக இருந்தது. அதனால் அவனே முன் நின்று திருமணத்தை நடத்தி விட்டான்.
“வெண்பாவை அழைச்சுக்கிட்டு உன் வீட்டுக்கு போ. உன் அப்பா அம்மாவை சமாதானம் பண்ணி அவங்களையும் கூட அழைசிக்கிட்டு வெண்பா வீட்டுக்குப் போ. தைரியமா ஃபேஸ் பண்ணு” என ஆதி அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தமிழரசு, பிரேமா, அசோக் மூவரும் ஒரு ஆட்டோவில் வந்திறங்கினர்.
தமிழரசுக்கு தெரிந்த ஒருவர் சொத்து வாங்கியதை பதிவு செய்ய பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவர்தான் தமிழரசுக்கு கைப்பேசி மூலமாக தகவல் அளித்திருந்தார். தமிழரசு நம்பவில்லை. தன் மகள் மீது அவ்வளவு நம்பிக்கை. வேறு யாரையோ பார்த்துவிட்டு கூறுவதாகத் தான் நினைத்தார்.
வெண்பாவிற்கு கைப்பேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்க அது அணைக்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்தது. கல்லூரியில் விசாரிக்க அவள் வரவில்லை என்று கூறினார்கள். உடனே தன் மனைவியையும் மாப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த தமிழரசு தன் மகள் இவ்வாறு செய்வாள் என கொஞ்சமும் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, பிரேமா வெண்பாவை இழுத்துப்போட்டு அடிக்க ஆரம்பிக்க, அங்கே ஒரு கூட்டமே கூடிவிட்டது.
அவரை தடுத்த ஆதி, “அத்தை எல்லோரும் வேடிக்கை பார்க்கிறாங்க, வீட்டுக்கு போய் பேசலாம்” என கூற, “உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என் பொண்ணுக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்க?” என ஆதியை பார்த்து கோவமாக கேட்டார் பிரேமா.
பிரேமாவை விட்டு தமிழரசிடம் சென்ற ஆதி, “அத்தையை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க மாமா நான் இவங்களை அழைச்சுக்கிட்டு அங்கேயே வரேன். இங்கே எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க” என கூறினான்.
பிரேமா நேரடியாக ஆதியை குற்றம் சாட்ட, தமிழரசு கண்களாலேயே ‘இப்படி துரோகம் செய்து விட்டாயே’ என குற்றம் சாட்டினார். அவரின் பார்வையால் சங்கடத்துக்குள்ளானவன், அசோக்கை பார்க்க, அசோக் ஆதியை குரோதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆதியை முறைத்துக் கொண்டே தமிழரசையும், பிரேமாவையும் ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச்சென்றான் அசோக்.
கார்த்திக் வெண்பாவையும் வீட்டிற்கு ஆட்டோவில் அனுப்பியவன், கார்த்திக்கின் அப்பாவை அழைத்து விஷயத்தைக் கூறி, அவரையும் வரச்சொன்னான்.
விஷயத்தை சொன்னவுடனே ஆதியிடம், காச் மூச் என்று மாணிக்கவேல் கத்த, “சித்தியை அழைச்சுக்கிட்டு சீக்கிரமா வாங்க” என்று மட்டும் கூறிவிட்டு கைபேசியை அணைத்தான். கார்த்திக்கின் பைக்கில் அவனும் தமிழரசுவின் வீட்டுக்கு சென்றான்.
திருமணத்தை மட்டும் முடித்து விட்டு தான் ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தான். இப்போது தான் இந்த திருமணத்தை நடத்தி இருப்பது தெரிந்து விட்டபின், செல்வது சரியாக இருக்காது என்பதால் அவனும் சென்றான்.
தென்றல், நங்கைக்கு அழைத்து கூறியிருக்க விடுப்பு எடுத்துக்கொண்ட நங்கை எல்லோருக்கும் முன்பே வீட்டில் இருந்தாள். வீட்டிற்குள் நுழைந்த தமிழரசு ஓய்ந்து போனவராய் சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.
“ஐயோ மாப்பிள்ளை… நான் இனிமே எல்லார் மூஞ்சுலேயும் எப்படி முழிப்பேன். என்னை பார்த்து விரல் நீட்டி யாரும் எதுவும் சொன்னது கிடையாதே. இப்படி என் வயித்துல பிறந்ததே எங்களுக்கு அவமானத்தை தேடி கொடுத்துட்டே” என பிரேமா அசோக்கை பார்த்து கத்தி அழுதார்.
“வெண்பா சின்னபொண்ணு, எல்லாம் உங்க ரெண்டாவது மாப்பிள்ளை கொடுத்த தைரியத்தில்தான் இப்படி பண்ணிட்டா” என அசோக் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, ஆட்டோவில் கார்த்திக்கும் வெண்பாவும் இறங்க, பின்னாலேயே ஆதியும் பைக்கில் வந்திறங்கினான்.
“மாமா… என்னன்னு தெரியல உங்களுக்கு என் வீட்டுக்காரரை பிடிக்கல. அதுக்காக தேவையில்லாம அவரைப் பத்தி ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்காதீங்க” என கொஞ்சம் அமைதியாகவே ஆனால் அழுத்தமாக அசோக்கிடம் நங்கை கூறினாள்.
“அவர் என்னடி தப்பா சொல்லிட்டார்? உன் புருஷன் பண்ணின வேலையை பார்த்தியா? ஒழுங்கா வேலை வெட்டிக்கு போகாம, உன்னை பொறந்த வீட்டில் உட்கார வச்சாரு. இப்போ என் இன்னொரு பொண்ணுக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வச்சிருக்கிறார்” என்றார் பிரேமா.
“அம்மா போதும். என் புருஷன பத்தி நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிட்டு இருக்க மாட்டேன்” என தன் தாயிடம் கூறிவிட்டு ஆதியை பார்த்து முறைத்தாள் நங்கை. என்ன சொல்வதென தெரியாமல் ஆதி பாவமாய் நங்கையை பார்த்து நின்றான்.
மாணிக்கவேலும், கல்பனாவும் வந்துவிட, மாணிக்கவேல் கார்த்திக்கை அடிக்கப் பாய்ந்தார். குறுக்கே வந்த ஆதி “சித்தப்பா கொஞ்சம் பொறுமையா இருங்க” என்றான்.
“நீதானடா இதுக்கெல்லாம் உடந்தை. தள்ளு முதல்ல. ரெண்டு பிள்ளை இருந்தும் ஒருத்தன் கல்யாணத்த கூட பார்க்க முடியாம… என்ன இருந்து என்ன பண்ண?” என்றார் மாணிக்கவேல்.
கல்பனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், பெரிய பையனைத்தான் வீட்டோடு சேர்த்துக் கொள்ளவில்லை. எப்படியாவது சமாதானம் செய்து இவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டும் என நினைத்துக்கொண்டார்.
“நீ இந்தப் பொண்ணைதான் விரும்புறேன்னு சொல்லித் தொலைக்கிறத்துக்கு என்ன?” என மாணிக்கவேல் கார்த்திக்கிடம் கேட்க, “நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சுதான் சொல்லல” என்றான் கார்த்திக்.
“இந்த ரெஜிஸ்டர் மேரேஜ் ஐடியா யார் கொடுத்தது உனக்கு? இந்த பயலா?” என ஆதியை காட்டி கேட்டார் மாணிக்கவேல்.
கார்த்திக் ஒன்றும் கூறாமல் இருக்க, “இன்னும் என் பொண்ணு படிப்பை கூட முடிக்கல, அதுக்குள்ள கல்யாணம். விஷயத்தை சொல்லியிருந்தா நாங்களே உங்ககிட்ட வந்து பேசியிருப்போமே” என்றார் பிரேமா.
“படிக்கிற பொண்ணை கல்யாணம் பண்ற அளவுக்கு எல்லாம் என் பையனுக்கு தைரியம் கிடையாதுங்க. எல்லாம் இதோ நிற்கிறானே… ஆதித்யவேந்தன்… இவனோட தூண்டுதலாலதான் இருக்கும்” என்றார் மாணிக்கவேல்.
“இப்படி யார் மூஞ்சிலேயும் முழிக்க முடியாம செஞ்சுட்டீங்களே” என ஆதியை பார்த்து பிரேமா கூற, “அவருக்கு அவர் வாழ்க்கையை பத்தியே பொறுப்பில்லை. மத்தவங்கள பத்தி எல்லாம் எங்கே கவலைப்பட போறாரு?” என அசோக் கூற, “அதிகப்பிரசங்கி ஏண்டா இப்படி பண்ணுன?” என ஆதியிடம் மாணிக்கவேல் கேட்க,
“எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா?” என கத்தினாள் நங்கை.