தான் வந்த ஆட்டோவில் அவளை வீட்டிற்கு அனுப்பியவன், “வண்டியை தள்ளிகிட்டு வா மெக்கானிக் ஷாப் ஒன்னு பக்கத்துல இருக்கு. வழியில் பார்த்தேன், கிட்டதான் இருக்கு. வா அங்க போகலாம்” என கார்த்திக்கிடம் கூறினான்.
வண்டியைத் தள்ளிக் கொண்டே இருவரும் நடந்தனர். “என்னடா நீயும் வெண்பாவும் லவ் பண்றீங்களா?” எனக் கேட்டான்.
“ஆமா டா உன் கல்யாணத்தப்பவே எனக்கு வெண்பாவை ரொம்ப பிடிச்சிடுச்சி. அவகிட்ட சொல்றதுக்குள்ள நிறைய பிரச்சனையாகிடுச்சு. அதுக்கப்புறமும் அவ நினைப்பாவே இருந்தது. அவ படிக்கிற காலேஜுக்குப் போய் அவகிட்ட சொன்னேன். முதல்ல ஒத்துக்கல, போக போக அவளும் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா” என்றான்.
“உன் அண்ணன் அடிச்ச கூத்துல இதுக்கு வெண்பா அம்மா அப்பா ஒத்துப்பாங்கலான்னு தெரியல. நீ என்னடான்னா படிக்கிற பொண்ண, காலேஜ் கட் அடிக்க வச்சு ஊர் சுத்திக்கிட்டு இருக்க” எனக் கேட்டான் ஆதி.
“வெண்பா வீட்டுல இல்லடா, என் வீட்டிலேயே ஒத்துப்பாங்களான்னு தெரியலை” என்றான் கார்த்திக்.
“நர்மதாவை கட்டிக்க சொல்லி என்னை ஃபோர்ஸ் பண்றாங்க டா” என கார்த்திக் கூற, “நீ வீட்ல சொல்லிட வேண்டியதுதானே” எனக் கேட்டான் ஆதி.
“வெண்பாவோட அக்கா வீட்டுக்காரர் உன் கல்யாணத்தப்ப அப்பாவை மரியாதை குறைவாக பேசிட்டாராம். அதை வெண்பா அப்பா கண்டிக்கலையாம். அதனால அவங்க மேல எல்லாம் அப்பா கோவமா இருக்காரு டா. எங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பாருன்னு தோணலை” என்றான் கார்த்திக். பேசிக்கொண்டே மெக்கானிக் ஷாப் வந்துவிட, வண்டியை கொடுத்துவிட்டு ஒரு தேநீர் கடைக்கு சென்றனர்.
“நர்மதாகிட்ட பேசுனியா?” எனக் கேட்டான் ஆதி.
“நான் ஏன் அவ கிட்ட பேசணும்?” என கார்த்திக் கேட்க, “டேய் உங்க ரெண்டு பேருக்கும்தானே கல்யாணம் பேசுறாங்க. அவ பாட்டுக்கு மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டா. முன்னாடியே நீ அவகிட்ட சொல்லிடு” என்றான் ஆதி.
கார்த்திக் தயங்க ஆதியே நர்மதாவுக்கு அழைத்தான். நல விசாரிப்புகளுக்கு பின், “உனக்கும் கார்த்திக்கும் கல்யாணம் பேசுறாங்களே நீ என்ன நினைக்கிற?” என கேட்டான் ஆதி.
திடீரென ஆதி இப்படி கேட்கவும் கார்த்திக் அருகில் தான் இருப்பான் என நினைத்த நர்மதா, “லவுட் ஸ்பீக்கரில் போடேன்” என்றாள்.
ஆதியும் போட, “எனக்கும் கார்த்திக்கும் கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலிருந்து அவன் நினைப்பாவே இருக்கு. கனவுல கூட அவன் தான் வர்றான்” என்றாள் நர்மதா.
“கார்த்திக் மனசுல இருக்குற அந்த பொண்ணு யாரு?” என பட்டென கேட்டாள் நர்மதா.
“அவன் கல்யாணத்தன்னைக்கு தெரியும்” என ஆதி கூற, மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு நர்மதா வைத்துவிட்டாள்.
“ஒரு நிமிஷம் என்னை பயமுறுத்திட்டா டா” என்றான் கார்த்திக்.
“நல்ல வேளை அவ மனசுல எந்த ஆசையும் இல்லை. இல்லேன்னா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பா” என ஆதி கூற “எனக்கு இது தோணவே இல்ல டா” என்றான் கார்த்திக்.
“மனசுல ஒருத்தவங்கள நெனச்சி அவங்க கிடைக்கலன்னா என்ன வலின்னு உனக்கு வேணா தெரியாம இருக்கலாம். எனக்கு நல்லா தெரியும். அதே மாதிரி மனசுல நெனச்சவங்களே வாழ்க்கை துணையாக வந்தா எப்படி இருக்கும் தெரியுமா?” என கார்த்திக்கின் தோளைத் தட்டி கேட்டவன், “தெரிஞ்சுக்க தானே போறே” என கூறி சிரித்தான்.
“ஆளே மாறிட்ட டா” என்றான் கார்த்திக்.
சிரித்துக் கொண்ட ஆதி, “வெண்பா படிப்ப முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணு. அதுக்குள்ள உன் வீட்டுல உன்னோட லவ்வ பத்தி சொல்லி நர்மதா கூட கல்யாணம் பேசுறதை நிறுத்து. எதுவும் ஹெல்ப் வேணும்னா கேளுடா. செய்றேன்” என்றான்.
“இப்போதைக்கு இந்த லவ்வ பத்தி நீ நங்கை கிட்ட கூட சொல்லக் கூடாதாம். வெண்பா மெசேஜ் பண்ணியிருக்கா” என கார்த்திக் கூற, “சொல்லல டா” என்றான் ஆதி.
பின்னர் சரி செய்யப்பட்ட பைக்கில் கார்த்திக் ஆதியை பேருந்து நிலையத்தில் விட, திருச்சிக்கு புறப்பட்டு விட்டான் ஆதி.
நங்கையை நேரில் பார்த்துவிட்டு வந்த பிறகு ஆதியால் கவனம் வைத்து படிக்க முடிந்தது. விஜய்யின் நண்பனின் அப்பா டெல்லியில் நிதித்துறை செயலாளராக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.
அவரை ஆதிக்கு அறிமுகப்படுத்தி வைக்க, அவருடைய யோசனைகள் ஆதிக்கு பேருதவியாக இருந்தது. அவருடைய அறிவுரையின் பேரில் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொண்டான், அவரும் சில புத்தகங்களை படித்துவிட்டு தருமாறு கொடுத்தார். தேர்வுகளுக்கான அறிவிப்பும் பெற விண்ணப்பம் செய்திருந்தான்.
காலையிலேயே முதல் வேலையாக நங்கைக்கு காணொளியில் அழைத்து விடுவான். அவள் பேசாவிட்டாலும் இவன் பேசுவான். அவள் கேட்டுக் கொள்வாள். அவளிடம் பேசுகிறோம் என்ற நினைவே ஆதிக்கு போதுமானதாக இருந்தது.
படித்துவிட்டு இடைவெளி விடும் பொழுது, அவளிடம் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடுவான். கைப்பேசியில் எச்சரிக்கை ஒலி எழும்பும் போதெல்லாம் எந்த வேலையாக இருந்தாலும் உடனே கைப்பேசியை எடுத்து பார்ப்பாள் நங்கை. அவன் அனுப்பும் செய்திகளை மீண்டும் மீண்டும் படிப்பாள்.
“இந்த ஆண்ட்ராய்டு ஃபோன் மட்டும் இல்லேன்னா நம்ம கதி அதோ கதிதான்” என விளையாட்டாக கூறுவான் ஆதி.
நங்கையும் முன்பு போல் அல்லாது நன்றாக சாப்பிட்டு உறங்கி தெளிந்து இருந்தாள். தமிழரசு நங்கையிடம், அவள் திருமணத்திற்கு முன்பு வேலை பார்த்த பள்ளியின் தாளாளர் மீண்டும் அவளை வேலைக்கு அழைப்பதாக கூற, அவளுக்கும் செல்லலாம் என தோன்றியது.
ஆதியிடம் குறுஞ்செய்தி மூலம் கேட்க அவன் நங்கையின் விருப்பம் என்று கூறிவிட்டான். அவளும் பள்ளிக்கு மீண்டும் ஆசிரியராக வேலைக்குச் செல்ல தொடங்கினாள்.
கார்த்திக் வெண்பா காதல் பற்றிய விவரத்தை நங்கையிடம் ஆதி எதுவும் கூறவில்லை. வெண்பாவின் காதல் விஷயத்தை அவள்தான் கூறவேண்டும். தான் சொல்வது நன்றாக இருக்காது. அவளே சொல்ல வேண்டாம் என்று கூறும் பொழுது தான் சொன்னால் நன்றாக இருக்காது என நினைத்துக்கொண்டான்.
நங்கை வேலைக்கு சேர்ந்த பள்ளியின் தாளாளர் வயது மூப்பின் காரணமாக பொறுப்பில் இருந்து விலகி விட்டார். அவர் சொல்லித்தான் தமிழரசு நங்கையை மீண்டும் வேலையில் சேர கூறினார்.
இப்பொழுது அவரது மருமகன் மதன் தாளாளராக இருந்தான். திருமணமானவன். இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படித்தான் நடந்து கொள்வான். வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்வான். நங்கையை பார்த்ததிலிருந்து மதனுக்கு நங்கை மீது ஆசை ஏற்பட்டது. அவள் இப்போது கணவனுடன் சேர்ந்து வாழவில்லை என்பது அவனது ஆசைக்கு தூபம் போட்டது.
எல்லோரையும் தன் பார்வையாலேயே தள்ளி நிறுத்தும் நங்கையிடம் அவனால் நெருங்க முடியவில்லை. அதனால் நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.
இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று நங்கையை பார்க்கவென்று ஆதி கரூர் சென்றான். இந்த முறை பிரேமாவை அழைத்துக்கொண்டு தமிழரசு தனியாக எல்லாம் செல்லவில்லை. வீட்டிலே வெண்பாவும் இருந்தாள். நங்கை தன்னுடைய அறைக்கு சென்றால் தானும் செல்லலாம் என ஆதி நினைக்க அவளோ செல்லவே இல்லை. அவளுக்கு எல்லோரும் இருக்கும்போது அவ்வாறு செல்ல தயக்கமாக இருந்தது.
சென்ற முறை ஆதி வீட்டிற்கு வந்தபொழுது ஆதியை சரியாக கவனிக்கவில்லை என்று தமிழரசுக்கு வருத்தம். அதனால் இந்த முறை மாப்பிள்ளையுடன் நேரம் செலவிடுகிறேன் என்று உலக விஷயங்களைப் பற்றி ஆதியிடம் அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்.
விழி பிதுங்கிப் போய் ஆதி கேட்டுக்கொண்டிருக்க, வெண்பா நங்கையின் காதில் “மாமா ரொம்ப பாவம்க்கா. அப்பாகிட்டே வசமா மாட்டிக்கிட்டார்” எனக்கூற, நங்கைக்கும் ஆதியை பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.
‘என்னை காப்பாற்றேன்’ என கண்களால் ஆதி கெஞ்ச, “அப்பா நீங்க விரும்பி பாக்குற மகாபாரதம் இப்போ ரீடெலிகாஸ்ட் ஆகும். பாக்கறீங்களா?” என தொலைக்காட்சியை நங்கை போட ஒருவழியாக ஆதியை விட்டுவிட்டு மகாபாரதத்தில் ஒன்றினார் தமிழரசு.
வெண்பா தன் தாயுடன் சமையல் அறையில் இருக்க, துணிகளை காய வைக்க மாடி ஏறினாள் நங்கை.
நங்கை துணிகளை காயப் போட்டுக் கொண்டிருக்க, பின்னாலிருந்து அவளை அணைத்து, அவளது தோள் வளைவில் முகத்தை வைத்துக் கொண்டான்.
தன் வயிற்றை இறுக்கி இருந்த ஆதியின் இரண்டு கைகளையும் நங்கை பிரித்தெடுக்க முயல, “ப்ளீஸ்ங்க ஒரு ரெண்டு நிமிஷம் இப்படியே இருந்துக்குறேனே. இன்னும் ரெண்டு வாரத்துல எனக்கு எக்ஸாம்ஸ். ஒரே நெர்வசா இருக்கு. எங்க அப்பாதான் வில்லத்தனம் செய்றார்ன்னு பார்த்தா, இப்போ உங்கப்பாவும் வில்லத்தனம் செய்றார். என் பொண்டாட்டிய நிம்மதியா கட்டிப்பிடிக்க முடியுதா?” என கூறிக்கொண்டே அவளது கூந்தலில் வாசம் பிடிக்க ஆரம்பித்தான்.
யாரும் வந்து விடுவார்கள் என பயந்த நங்கை அவனிடமிருந்து விலக பார்க்க, ஆதி தன்னுடைய அணைப்பை இன்னும் இறுக்கமாக்கினான்.
பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு யாரோ வருவது போல இருக்க, ஆதியிடமிருந்து நங்கை விலக போராட, அவன் விடாமலிருக்க தன் காலால் அவன் காலை வேகமாக மிதித்தாள். வலி பொறுக்க முடியாமல் ஆதி விலக,
“என்ன நங்கை துணி காய போடுறியா?” எனக்கேட்டார் பக்கத்து வீட்டுப் பெண்மணி.
அவருடன் பேசிக்கொண்டே துணிகளை காய வைத்து முடிக்க, அந்தப் பெண்மணி கீழே சென்றுவிட்டார். ஆதி மீண்டும் நங்கையை நெருங்கிவர, “நங்கை துணி காயப்போட எவ்வளவு நேரம் டி சீக்கிரம் வா” என அழைத்தார் பிரேமா.
ஆதி நொந்துபோய் நங்கையைப் பார்த்து, “சீக்கிரத்திலேயே உங்கள ஆளில்லாத தீவுக்கு கடத்திட்டு போறேனா இல்லையா பாருங்க…” எனக்கூற “நங்கை” என்று பிரேமா மீண்டும் அழைக்க, “போங்க” என பாவமாக சொன்னான் ஆதி.
இப்படியாக நங்கையை தனியே சந்திக்க முடியாமல், கண்களால் மட்டும் பார்த்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்து விட்டான் ஆதி.
ஆதி முதன்மைத் தேர்வுகளை எழுதிவிட்டான். நாட்கள் இப்படியே நகர, அன்று பகலிலேயே நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். ஆதியின் அன்னை சந்திரா வந்து எழுப்பவும்தான் கண் விழித்தான். கார்த்திக் வந்திருப்பதாகக் கூற, எதற்காக வந்திருக்கிறான் என்ற யோசனையுடனே எழுந்து சென்றான்.
விசாலம் பாட்டி கார்த்திக்கிடம் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார். “என்னடா திடீர்னு?” எனக் கேட்டான் ஆதி.
“உன் ஃபோன் எங்கடா?” எனக்கேட்ட கார்த்திக் கண்களால் ஏதோ கூற முற்பட, தன் கைப்பேசியை எடுத்து பார்த்தான் ஆதி.
கார்த்திக்கிடம் இருந்து 10 அழைப்புகள் வந்திருந்தது. குறுஞ்செய்தியாக ‘அர்ஜென்ட் தனியா பேசணும்’ என்றும் அனுப்பியிருந்தான்.
சந்திரா கொடுத்த தேநீரைப் பருகிவிட்டு “வாடா வெளியில போகலாம்” என இயல்பாக அழைத்துச் செல்வதுபோல வெளியே அழைத்துச் சென்றான்.
“என்னடா என்ன அப்படி அர்ஜென்ட்?” என கேட்டான் ஆதி.
“ஆதி நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். உன்னை நம்பிதான் வந்திருக்கேன்” என்றான் கார்த்திக்.
“முதல்ல விஷயத்தை சொல்லுடா” என்றான் ஆதி.
தயங்கிய கார்த்திக் தன் தலையை தாழ்த்திக் கொண்டு, “ஆதி வெண்பா… வெண்பா… இப்போ… பிரக்ணன்டா இருக்கா” என்றான்.