ஆதி ஒரு பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலையில் சேர்ந்திருந்தான். காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை வேலை. முதல் நாள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வருகின்ற வழியில் பூ விற்பதை பார்த்தவன், தன் சட்டை பாக்கெட்டை தடவி பார்த்தான்.
இன்று ஆதி வேலைக்கு செல்வதால் அவனது பையில் நங்கை பணம் வைத்து விட்டுதான் சென்றிருந்தாள். வண்டிக்கு பெட்ரோல் போட்டது போக மீதம் 50 இருக்க, பூ வாங்கலாம் என வண்டியை திருப்பினான்.
எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து, நொடிப்பொழுதில் ஆதியின் பைக் மீது மோதியதில், தூக்கி எறியப்பட்டான் ஆதி. இரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்தான்.
பள்ளி முடிந்து வெளியில் வந்த நங்கை ஆதியை காணாமல் அவனுக்கு அழைத்தாள். அழைப்பு போகவே இல்லை. அருகில் இருந்த கடையில் இருந்து, ஒரு பையன் ஓடி வந்து, “அக்கா உங்களுக்கு ஃபோன். எங்க கடை முதலாளி பேசுறார், ஏதோ அவசரமாம்” என்றான்.
நங்கைக்கு ஏதோ சரியில்லை என்று மனதிற்குப் பட்டது. பதட்டத்துடனே சென்று ஃபோனை எடுத்து பேசினாள். கேட்ட செய்தியில் நங்கைக்கு மயக்கம் வருவது போல இருக்க பிடிமானம் இல்லாமல் கீழே விழப்போனாள். அவளை விழாமல் யாரோ தாங்கிப் பிடித்தார்கள்.
ஒரு நாற்காலியில் அவளை அமர வைத்து பருக தண்ணீர் கொடுத்தார் அவர். இரண்டு வாய் குடித்துவிட்டு யாரென்று பார்க்க, அவளது மாமனார் பழனிவேல்தான். அவரைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தாள்.
“மாமா அவருக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம்” என்றாள் அழுதுகொண்டே.
பதறிப்போன பழனிவேல், “என்னமா என்ன சொல்ற? யார் சொன்னா?” எனக் கேட்டார்.
“இந்த கடையோட ஓனர்தான். அவர் அடிபட்டதை பாத்துட்டு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காராம்” என்று அழுது கொண்டே கூறினாள்.
பதட்டத்தில் தன்னாலும் வண்டி ஓட்ட முடியாது என நினைத்த பழனிவேல் ஆட்டோ ஒன்றில் நங்கையையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். போகும் வழியிலேயே விஜய்க்கு பழனிவேல் அழைக்க தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக செய்தி வந்தது.
வீட்டு பெண்களிடம் இப்போது கூற வேண்டாம் என முடிவு செய்தவராய், மனதில் என் மகனுக்கு ஒன்றும் ஆகக்கூடாது கடவுளே, அவனை காப்பாத்தி என்கிட்டே கொடுத்திடு என்று வேண்டி கொண்டே இருந்தார்.
நங்கையும் தான் வணங்கும் முருகனிடம் மன்றாடி கொண்டிருந்தாள். ஆதி சேர்க்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு வந்தனர்.
தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும், வலது கையிலும் வலது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.
முன் பணமாக சில லட்சங்களையும் கட்டச் சொன்னார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் இன்னும் மயக்க நிலையில் தான் இருந்தான் ஆதி. இரத்த இழப்பு அதிகமாக இருந்ததால் இரத்தம் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது.
அதை பார்த்த இருவரும் பயந்து போயினர். அவனை மருத்துவமனையில் சேர்த்த கடைக்காரருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினாள் நங்கை.
அவருக்கு ஆதியை பழக்கமில்லை என்றாலும், பழனிவேலின் மகன் என்பது தெரியும். பழனிவேலையும் தெரியும். எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் ஆதியையும் நங்கையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். நேற்று மாலையில் தன்னிடம் அசடு வழிய சிரித்த ஆதிதான் அவரது நினைவுக்கு வந்தான்.
“தம்பிக்கு ஒன்னும் ஆகாதும்மா. அதான் பழனிவேல் அண்ணன் வந்துட்டாரே. அவர் பார்த்துப்பார்” எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
நங்கை பழனிவேலின் முகத்தை பார்க்க அவளை தனியே அழைத்து வந்தார் பழனிவேல்.
“எல்லா பணத்தையும் நானே கட்டிடுறேன்மா. ஆனா நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்” என்றார்.
விநோதமாக அவரைப் பார்த்த நங்கை “என்ன உதவி மாமா?” என கேட்டாள்.
“நீ அவனை விட்டு போயிடணும்” என்றார் பழனிவேல். அதிர்ச்சியடைந்து “மாமா…” என்றாள் நங்கை.
“நீ அவனை விட்டு போறதா இருந்தா, நானே எல்லா செலவையும் பண்றேன்” என்றார்.
“நான் ஏன் போகணும்?” எனக் கேட்டாள் நங்கை.
“உன்னை நிரந்தரமாக நான் போகச் சொல்லலைம்மா, அவன் ஒரு நல்ல வேலைக்கு போற வரையிலும் விலகியிருன்னுதான் சொல்றேன். நல்ல வேலைக்கு போனதுக்கு அப்புறம்தான் உன்னோடு சேர்ந்து வாழ முடியும்னா, கண்டிப்பா அவன் நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போயிடுவான்”
நங்கைக்கு கோவமாக வந்தது. “உங்க பிள்ளை அடிபட்டு கிடக்கிறார். நீங்க என்கிட்ட பேரம் பேசிகிட்டு இருக்கீங்களா?” என சீறினாள்.
“அடிபட்டு கிடக்குற அவனை சீராக்கணும்னு நீ நினைக்கிற. அவன் வாழ்க்கையை சீராக்கணும்னு நான் நினைக்கிறேன்”
“நான் கூட இருந்தா அவர் வேலைக்கு போக மாட்டாரா?”
“அதுக்கு காலமெடுக்கும். இப்ப அவனுக்கு எல்லாமே நீதான். உன்னோட சேர்ந்து வாழனும்கிறத்துக்காக வெறியோட படிப்பான். அவனுக்கும் வயசாகுதும்மா. எல்லாம் காலத்தோட நடக்கணும். எவ்வளவு காலம் நீங்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்த போறீங்க” எனக் கேட்டார் பழனிவேல்.
நங்கைக்கு அவர் கூறுவதில் உடன்பாடில்லை. தன் தந்தைக்கு அழைத்தாள். அவர் எடுக்கவில்லை. அம்மா, தன் சகோதரிகள் என அனைவருக்கும் அழைத்தாள். யாருமே எடுக்கவில்லை.
அவளுக்கு என்ன தெரியும்? தென்றல் தன் குடும்பத்துடன் வந்திருப்பதால் அனைவரும் அன்று திரைப்படம் பார்க்க திரையரங்கம் சென்றிருந்தனர். படத்தின் சத்தத்தில் யாருக்குமே கைப்பேசியின் அழைப்பு கேட்கவில்லை.
விஜயின் எண்ணோ ஆதியின் நண்பர்களின் எண்ணோ நங்கைக்கு தெரியாது. என்ன செய்வது என நங்கை யோசிக்க, ஒரு செவிலியர் வந்து, “அவருக்கு ஆல்ரெடி பிளட் லாஸ் அதிகமாகியிருக்கு. சீக்கிரம் ஆப்ரேஷன் பண்ணனும். பணம் கட்டிட்டீங்களா?” எனக் கேட்டார்.
“சீக்கிரம் சரின்னு சொல்லுமா” என்றார் பழனிவேல். வேறு வழியில்லாத நங்கை “சரி” என்றாள். “ஆனா அவர் கண் முழிச்சதுக்கு அப்புறம்தான் போவேன்” என்றாள்.
ஒத்துக்கொண்ட பழனிவேல், “அவனே நல்ல வேலையில சேர்ந்ததுக்கு அப்புறம் உன்னை வந்து கூப்பபிட்டுக்குவான். அதுவரைக்கும் நீ அவன் கிட்ட பேசக்கூடாது. அவன் கூட வாழக்கூடாது. எனக்கு சத்தியம் பண்ணி கொடும்மா” என்றார்.
‘இரக்கமே இல்லாதவர்’ என மனதில் நினைத்துக் கொண்ட நங்கை அவருக்கு சத்தியம் செய்து கொடுத்தாள்.
பழனிவேல் தனது சேமிப்பு அட்டையிலிருந்து பணம் செலுத்துவதற்காக சென்றார். ஆதிக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. பழனிவேலின் முகத்தை கூட பார்க்காமல், ஆதி திரும்பி வருவதற்காக, அழுகையை அடக்கி கொண்டு காத்திருந்தாள்.
நங்கையின் தந்தையிடமிருந்து அழைப்பு வர, “அப்பா, என்கிட்டே எதுவும் கேட்காதீங்க. நீங்க மட்டும் கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வாங்க” என மருத்துவமனையின் பெயரை கூறி வரச் சொன்னாள்.
என்னவோ ஏதோ என பதறியவர், மற்றவர்களிடம், அவருடைய நண்பனுக்கு அவசர உதவி தேவை எனக் கூறிவிட்டு திருச்சி புறப்பட்டார். அதற்குள் ஆதியின் வீட்டிலிருந்தும் அனைவரும் வந்து விட்டனர். முரளியும் ரஞ்சித்தும் கேள்விப்பட்டு வந்துவிட்டனர். தமிழரசுவும் வந்துவிட்டார். ஆதிக்கு விபத்து என்று அறிந்தவர், மகளுக்கு ஆறுதல் கூறினார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டான். முதலில் நங்கைதான் பார்க்க சென்றாள். வலது கையிலும் காலிலும் பெரிய கட்டுகளுடன், மருந்தின் வீரியத்தால் நல்ல மயக்கத்தில் இருந்தான் ஆதி.
இனி பயப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தாலும் ஆதியை இப்படி பார்க்க வயிற்றைப் பிசைந்தது நங்கைக்கு. நங்கை பார்த்து விட்டு வெளியில் வர ஒவ்வொருவராக சென்று பார்த்து வந்தனர். அப்பொழுதுதான் விஜய்யும் அங்கே வந்தான். அவனுக்கும் தம்பிக்கு இப்படி ஆகிவிட்டதில் மிகுந்த மனவருத்தம். அவனும் சென்று பார்த்து வந்தான்.
நங்கையிடம் வந்த விசாலம், “இனிமே நீங்க எங்கயும் போகக்கூடாது, வீட்டுக்கே வந்துடுங்க” என்றார்.
சந்திராவும் “ஆமாம்மா இனியும் உங்கள பிரிஞ்சு எங்களால இருக்க முடியாது” என்றார்.
எதுவும் கூறாமல் நங்கை சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆதிக்கு அடிபட்டதில்தான் நங்கை இவ்வாறு அமர்ந்திருக்கிறாள் என அனைவரும் நினைத்துக் கொண்டனர்.
“அம்பிகா நீ எல்லாரையும் அழைச்சுக்கிட்டு வீட்டுக்குப் போ. இன்னைக்கு எப்படியும் ஆதியை ஐ சி யூ லதான் வச்சிருப்பாங்களாம். நாளைக்குதான் ரூமுக்கு மாத்துவாங்களாம்” என்ற விஜய், தமிழரசைப் பார்த்து “மாமா நீங்களும் நங்கையோட வீட்டுக்கு போங்க. நான் இங்கேயே இருக்கேன்” என்றான்.
“அவர் கண் முழிச்சதும் நான் என் அப்பாவோட கரூர் போறேன்” என்றாள் நங்கை.
எல்லோரும் நங்கையை பார்க்க, “என்ன நங்கை ஏன் இப்படி சொல்ற? மாப்பிள்ளைக்கு இப்படி இருக்கும்போது நீ கரூர் வந்து என்ன பண்ண போற?” எனக் கேட்டார் தமிழரசு.
“நான்தான் போகச் சொன்னேன்” என்றார் பழனிவேல்.
“நீங்க ஏன் போக சொன்னீங்க? என் பொண்ணு இப்ப இங்கதானே இருக்கணும்?” என்று கேட்டார் தமிழரசு.
“என் மருமக எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கு” என்றார் பழனிவேல்.
“ஆதி அடிபட்டு கிடக்கும் போது நங்கையை ஏன் கரூர் போகச் சொல்றீங்க? நங்கை என்ன சத்தியம் பண்ணி கொடுத்திருக்கு உங்களுக்கு?” எனக் கேட்டான் விஜய்.
மற்றவர்களும் அதே கேள்வியுடனே பழனிவேலை பார்க்க, பழனிவேல் தான் சத்தியம் வாங்கிய கதையை விளக்கினார்.
கேட்டுக் கொண்டிருந்த முரளி ரஞ்சித்திடம், “என்னடா ஆதியோட அப்பா சைக்கிள் காட்டி ஆதியை ரேங்க் வாங்க சொன்ன மாதிரி, இப்போ அவன் பொண்டாட்டிய காட்டி வேலைக்கு போகச் சொல்றாரா?” எனக் கேட்டான்.
“இந்த ஆளுக்கு அறிவு இருக்குதா? இல்லையா?” எனக் கேட்டான் ரஞ்சித்.
“பொண்ண பெத்த எனக்கு நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும். கேட்க ஆளில்லைன்னு நினைச்சீங்களா? என் பொண்ணு இங்கதான் இருப்பா” என கோபத்தில் கத்தினார் தமிழரசு.
“பாருங்க சம்பந்தி உங்க பொண்ணுக்கு நான் எந்தக் கொடுமையும் செய்துடல. உங்களை விட அதிகமா எனக்கு என் மருமக மேல அக்கறை இருக்கு. என் பையனும் மருமகளும் வாழ்க்கையில நல்லா இருக்கணும்னுதான் நான் நங்கைகிட்ட சத்தியம் வாங்கினேன்”
“உங்களுக்கு தெரியாது என் பையனுக்கு என்னைதான் பிடிக்காது. அவன் அம்மா பாட்டி அண்ணின்னு எல்லோரும் இஷ்டம். இவங்க யார் சொல்லியும் கேட்காத அவன் உங்க பொண்ணுக்காக குடியை விட்டுருக்கான். அரியர்ஸ் எழுதியிருக்கான். பார்க்கிறதுக்கு ரௌடி மாதிரி இருந்தவன் மனுஷனா மாறியிருக்கான். உங்க பொண்ணு மேல அவ்ளோ இஷ்டம் அவனுக்கு” என்றார் பழனி.
“அப்புறம் என்னங்க? என் பொண்ணு கூட இருந்ததால உங்க பையன் நல்லா விதமாத்தானே மாறியிருக்கார். இப்ப மட்டும் என்ன? என் பொண்ணு இல்லைன்னாதான் வேலைக்கு போவாரா?” என கேட்டார் தமிழரசு.
“இதையெல்லாம் செஞ்சிட்டான். கவர்ன்மெண்ட் உத்தியோகத்துக்கு போக ஒரு வயசு வரம்பு இருக்குதுங்க. அது படிச்சு பாஸ் பண்ணவும் ஒரு வெறி வேணும்”
“ உங்க பொண்ணு பக்கத்தில இருக்கும் போது படிக்கிறத விட, உங்க பொண்ணோட வாழணும்னா படிச்சி, நல்ல வேலைக்கு போயே ஆகணும் அப்படிங்கிற கட்டாயம் அவனுக்கு இருந்தா இன்னும் நல்லா படிப்பான். அதுக்காகத்தான் உங்க பொண்ணை தள்ளியிருக்க சொன்னேன். நல்ல வேலை கிடைச்சதும், என் மகனே உங்க பொண்ணை கூட்டிட்டு வந்துடுவான்” என்றார் பழனிவேல்.
“என் மாப்பிள்ளைக்கு அரசாங்க உத்தியோகமே வேண்டாம். நான் பணம் செலவு பண்ணி அவருக்கு ஏதாவது பிஸினஸ் வச்சு தந்துக்கிறேன். என் பொண்ணு மாப்பிள்ளையை விட்டுட்டு எங்கயும் வரமாட்டா” என்றார் தமிழரசு.
“அப்பா நான் அவரோட அப்பாகிட்ட சத்தியம் பண்ணி கொடுத்துருக்கேன்” என்றாள் நங்கை.
“ஏங்க நம்ம புள்ள அடிபட்டு கிடக்கும் போது, மனசாட்சியே இல்லாம அவன் பொண்டாட்டிகிட்ட அவனை விட்டு போய்டணும்ன்னு சத்தியம் வாங்கியிருக்கீங்க. உங்களுக்கு வெட்கமா இல்லை?” என்றார் சந்திரா.
“இவங்க ரெண்டு பேரும் சின்ன பிள்ளைங்க கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாடுற மாதிரி வாழ்க்கையையும் நினைச்சுகிட்டாங்க. இவங்க நல்லா இருக்கணும்கிறதுக்காக எனக்கு பாவம் சேருதுன்னா சந்தோஷமா நான் அந்த பாவத்தை சேர்த்துக்கிறேன்” என்றார் பழனிவேல்.
“இவர் கிடக்கிறார், நீ எங்கயும் போகக்கூடாது, ஆதி கூடத்தான் இருக்கணும். ஆதியை பத்தி எனக்கு நல்லா தெரியும். நீ அவனை விட்டுட்டு போயிட்டா மனசொடிஞ்சி போய்டுவான்” என்றார் சந்திரா.
“ஆமாம்மா. இவர் செலவு பண்ணின பணத்தை நான் இவர்கிட்ட கொடுத்துடுறேன். நீ போகாத. ஆதி தாங்கமாட்டான்” என்றான் விஜய். அம்பிகா ஆதரவாக நங்கையின் தோளைப் பிடித்துக் கொண்டாள்.
“எல்லோரும் போகாதன்னு சொல்லும்போது நீ ஏம்மா உன் மாமனார் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிற? நீ இங்கேயே இரு” என்றார் தமிழரசு.
அப்போது ஆதி கண்விழித்து விட்டதாக செவிலியர் வந்து சொல்ல உள்ளே சென்றாள் நங்கை. மயக்கம் தெளிந்த ஆதியும் நங்கையின் வரவைதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
“வண்டியை பார்த்து ஓட்ட மாட்டீங்களா?” என கேட்டாள் நங்கை.
“நான் பார்த்து தான் ஓட்டுனேங்க. உங்களுக்கு பூ வாங்கலாம்னு வண்டியை திருப்பினேன். லாரிக்காரன் அவன் வண்டியை என் மேல விட்டுட்டான்” என்றான்.
நங்கை அமைதியான அழுகையோடு அவனை விழிகளில் நிரப்பிய வண்ணம் நிற்க, “அடிபட்டு விழும்போது உங்களைத்தான் நினைச்சுக்கிட்டேன். உங்களுக்காகத்தான் என்னை இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும்ன்னு உயிரோட விட்டுட்டார் கடவுள்” எனக் கூறினான்.
நங்கை அழுவதையே பார்த்தவன் “ப்ளீஸ்ங்க அழுவாதீங்க. எனக்கு உங்க கண்ணை தொடைச்சி விட்டு, உங்கள கட்டி பிடிச்சிக்கணும் போல இருக்கு. ஆனா எழுந்திரிக்க முடியல” என்றான்.
அருகில் வந்தவள், அவளது வலது கையை ஆதியின் இடது கன்னத்தில் வைத்து அழுத்த, முகத்தை சற்று திருப்பியவன் அவள் உள்ளங்கையில் தன் காய்ந்த உதடுகளால் முத்தமிட்டான்.
“உங்களுக்கு ஒன்னும் ஆகாதுன்னு எனக்கு தெரியும். உங்கள பிரிஞ்சு என்னால ரொம்ப நாள் இருக்க முடியாது. சீக்கிரம் வந்துடுங்க” என்றாள் நங்கை.
தான் மருத்துவமனையில் இருப்பதைத்தான் கூறுகிறாள் என நினைத்தவன் “சீக்கிரம் வந்துடுறேங்க” என்றான்.
“நான் வர்றேங்க” என நங்கை விடைபெற்று வெளியில் வர, அவள் கதவை கடந்து செல்லும் வரையிலும் அவளையேதான் பார்த்திருந்தான்.
வெளியில் வந்த நங்கை “வாங்கப்பா போகலாம்” என தமிழரசிடம் கூறினாள்.
“நங்கை அவசரப்படாதே, இந்த நேரத்தில் ஆதியை விட்டுட்டு போகாதே. எங்க எல்லாரையும் விட இப்ப நீ அவன் கூட இருக்கறதுதான் முக்கியம். மாமா வாயாலேயே உன்னை இருக்க சொன்னா இருப்பதானே” என்ற அம்பிகா பழனிவேலிடம் சென்று, “மாமா, ஆதி நல்லா இருக்கணும்னு உண்மையிலேயே நினைச்சீங்கன்னா நங்கையை போக வேண்டாம்னு சொல்லுங்க” என்றாள்.
நங்கையிடம் சென்ற பழனிவேல், “சீக்கிரமா என் புள்ள வேலை கிடைச்சு உன்னை கூப்பிட்டுக்குவான். அதுவரை எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்த மாதிரி அவன் கிட்ட நீ பேசக்கூடாது. அவன் கூடவும் நீ இருக்கக் கூடாது” என்றார்.
“என் புருஷனே வேலை கிடைச்சு என்னை வந்து கூப்பிட்டுக்கிற வரை என் சத்தியத்தை நான் மீற மாட்டேன்” என்ற நங்கை வேகமாக மருத்துவமனையின் வெளிவாயிலை நோக்கி நடக்க, மனம் நொந்து கொண்டே தமிழரசுவும் பின்னால் சென்றார்.
எல்லோரும் கண்களில் வெறுப்பை தேக்கி பழனிவேலை பார்க்க, சட்டை செய்யாமல் நாற்காலியில் அமர்ந்து கொண்டார் பழனிவேல்.