தமிழ் தங்கையின் பிறந்தநாள் தேதியை அவளது சான்றிதழ்கள் மூலம் அறிந்து வைத்திருந்தான் ஆதி. இரண்டு நாட்களில் நங்கைக்கு பிறந்தநாள். அவளுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு முரளியிடம் “ஒரு அரை நாள் உன் கடையில வேலை பார்க்கிறேன். எனக்கு பணம் கொடுடா” என்று கேட்டான்.
“ஏண்டா வேலை எல்லாம்? எவ்ளோ பணம் வேணும் சொல்லு, வாங்கிக்க” என்றான் முரளி.
“இல்ல முரளி நங்கைக்கு பர்த்டே வருது. என் காசுல அவளுக்கு ஏதாவது வாங்கணும்” எனக்கூற அவனது மனம் புரிந்த முரளியும் “சரி” என்றான்.
நங்கைக்கு தெரியாமல் முரளியின் கடைக்கு வேலைக்கு சென்றான். அன்று முரளிக்கு வெளியூர் செல்லவேண்டி இருந்ததால் சென்றுவிட்டான். அவனது தந்தை சந்திரசேகர்தான் இருந்தார்.
சந்திரசேகர் எப்பொழுதுமே பணம் விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பவர். ஒரு ரூபாய் கூட இனாமாக யாருக்கும் தரமாட்டார். முரளி முன்பே ஆதி இன்று அரை நாள் வேலைக்கு வருவான் என்று கூறிவிட்டுதான் சென்றிருந்தான்.
அவன் வந்தால் பில் போடும் இடத்தில் அமர வைக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தான். ‘சும்மா உட்கார்ந்து விட்டு போறதுக்கு அரைநாள் சம்பளமா?’ என மனதில் நினைத்தவர், ஆதி வரவும், அவனிடம் சிரித்து நன்றாக வரவேற்றார்.
“சரக்கு வண்டி வந்துடுச்சி இறக்கி வைக்க ஆள் அனுப்புங்க” என ஒருவன் வந்து சந்திரசேகரிடம் கேட்க, “இன்னைக்கு ஒரே கூட்டமா இருக்கு, ரெண்டு பேரை அனுப்புறேன். போதுமா?” எனக்கேட்டார் சந்திரசேகர்.
“ரெண்டு பேர் பத்தாதுங்களே” என வந்தவன் கூற, “இன்னைக்கு வேற நாலஞ்சு பேரு ஒட்டுக்கா லீவு எடுத்துட்டானுவோ, என்ன பண்றது?” என யோசிப்பது போல நடித்தார்.
அருகில் நின்று கொண்டிருந்த ஆதி, “நான் போறேன் பா” என்றான்.
“அய்யய்யோ நீயா… உன்னை இந்த வேலை எல்லாம் நான் வாங்கினேன்னா முரளி என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவான்” என்றார் சந்திரசேகர்.
“முரளிக்கு தெரிஞ்சாதானே கோபப்படுவான். அவன் கிட்ட சொல்ல வேண்டாம். நான் செய்றேன்” என்றான் ஆதி.
சந்திரசேகர் எதிர்பார்த்ததும் இதைத்தானே. “ நீ வற்புறுத்தி கேட்கிறதுனால ஒத்துக்கிறேன்” என கூறி அவனை அனுப்பி வைத்தார்.
சரக்கு வண்டியில் இருந்து சரக்குகளை இறக்கி கடையில் வைத்துக் கொண்டிருந்தான் ஆதி. அந்த வழியாக வந்த பழனிவேலுக்கு அதை பார்த்துவிட்டு உள்ளம் கொதித்தது.
‘நான் நாலு பேரை வச்சு வேலை வாங்குறேன். இவன் இப்படி இன்னொருத்தன் கிட்ட வேலை பார்க்கிறானே’ என நினைத்துக் கொண்டே வேதனையோடு அங்கிருந்து சென்றார்.
அவன் குடியை நிறுத்தி விட்டு தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பது பழனிவேலுக்கு நன்றாக தெரியும். பணத்தேவை இருப்பதால்தான் இப்படி வேலை பார்க்கிறான் என்று நினைத்தவர், ‘படிப்பில் கவனம் வைக்காம இப்படி வேலை பார்த்தா எங்கே இருந்து படிப்பான்?’ எனவும் நினைத்துக் கொண்டார்.
அரை நாள் சம்பளமாக 500 ரூபாயை பெற்றுக்கொண்டான் ஆதி. ஆதியின் முதல் சம்பளம். ஒரு துணிக்கடைக்கு சென்றவன், பார்த்து பார்த்து மிகவும் எளிமையாக 400 ரூபாய்க்கு நங்கைக்கு என ஒரு புடவை வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்தவன் நங்கைக்கு தெரியாமல் அவனது பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான்.
நங்கையின் பிறந்த நாள் அன்று இரவு 12 மணிக்கு அவளை எழுப்பியவன், “பிறந்தநாள் வாழ்த்துகள்!” எனக் கூறி புடவையை நங்கையிடம் கொடுத்தான்.
நங்கை இதை எதிர்பார்க்கவே இல்லை. வாங்கிக் கொண்டவள் ஆசையாக பிரித்து பார்த்துவிட்டு “ரொம்ப நல்லாயிருக்கு” என முகம் மலர்ந்தவள், உடனே கோபமாக ஆதியை பார்த்து “கடன் வாங்குனீங்களா?” என கேட்டாள்.
“உங்களுக்கு முத முதல்ல வாங்குற கிஃப்ட். கடன் எல்லாம் வாங்குவேனா?” என்றான் ஆதி.
“அப்புறம் இதுக்கு பணம் எப்படி வந்தது?” என நங்கை கேட்க ஆதி உண்மையைக் கூறினான்.
“நான் உங்ககிட்ட கிஃப்ட் கேட்டேனா? படிக்காம இப்படி போய் ஏன் வேலை செய்யணும்? இன்னும் பத்து நாள் தான் இருக்கு உங்க எக்ஸாமுக்கு” என்றாள் நங்கை.
“இதை மட்டும் நான் செய்யலைன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்ங்க. பரீட்சை கூட ஒழுங்கா எழுத முடியாது” என ஆதி கூற மனம் நெகிழ்ந்தவள் ஆதியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
திடீரென கிடைத்த முத்தத்தில் ஆதியில் உள்ளம் ஆனந்த கும்மாளமிட, ஆதியும் நங்கைக்கு முத்தம் கொடுக்க நெருங்கி வந்தான். அவனை தடுத்தவள் ‘முதல்ல எக்ஸாம் எல்லாம் முடியட்டும்” என்றாள்.
“இது போங்கு ஆட்டம். நீங்க மட்டும் கொடுத்தீங்க. நான் கொடுக்க கூடாதா? ஒன்னே ஒன்னு ப்ளீஸ்” என ஆதி கெஞ்ச அவனைப் பார்த்து பாவப்பட்டவள் “சரி ஒன்னே ஒன்னுதான்” என்ற கட்டளையுடன் சம்மதித்தாள்.
கன்னத்தில் முத்தமிடுவான் என நங்கை நினைத்திருக்க ஆதி முத்தமிட்டது நங்கையின் இதழ்களில். ஆதியின் முத்தம் முடிவடையாமலே இருக்க, அவனை விலக்கிய நங்கை, “மூச்சு முட்டுதுங்க” என்றாள்.
“அப்புறம்…? ஒண்ணே ஒண்ணுனு கண்டிஷன் எல்லாம் போட்டா… மூச்சுதான் முட்டும்” என்றான் ஆதி.
“உங்கள…” என கூறி நங்கை அவன் தோளில் ஒரு அடி வைக்க, “இன்னும் 4 அடி கூட வைங்க, இன்னொரு முத்தம் கொடுத்துக்கவா? ஆசையா இருக்கு” என ஆதி கேட்க, நங்கை நாணமுற, நங்கையின் இதழ்களில் அடுத்த கவிதையை எழுத ஆரம்பித்தான் ஆதி.
காலையில் ஆதி வாங்கிக்கொடுத்த புடவையை கட்டிக் கொண்டவளை கோவிலுக்கு அழைத்துச் சென்றான் ஆதி. வெளியில் எப்பொழுதும் போல பூ வாங்கிக் கொள்ளக் கூறி பூ விற்கும் பெண்மணி கூற, நங்கை மறுத்து கடந்து செல்ல அவள் கையை பிடித்து நிறுத்தியவன், இரண்டு முழம் மல்லிகை வாங்கி நங்கையின் கையில் கொடுத்தான்.
நங்கையின் அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. அவ்வளவு பிரகாசமாக இருந்தாள். முருகனை தரிசித்து விட்டு நங்கையை பள்ளியில் விட்டான் ஆதி.
நங்கைக்கென்று தான் எளிமையாக வாங்கிக்கொடுத்த பரிசுகளில் மகிழ்ந்த அவளைப் பார்த்தவன், இதைப்போல அளவில்லா மகிழ்ச்சியை அவளுக்கு அளித்திட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
படிப்பிலே அதிகம் கவனம் வைத்து படித்தான். அனைத்து தேர்வுகளையும் மிகச் சிறப்பாக எழுதி முடித்தான். கடைசி தேர்வை எழுதி முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பினான்.
நங்கையை உள்ளம் அப்படி தேடியது. மாலை 4 மணிக்குதான் அவளுக்கு பள்ளி முடிவடையும். அந்தநேரம் வருவதற்குள் யுகமானது ஆதிக்கு.
வீட்டில் இருக்க முடியவில்லை ஆதியால். பள்ளிக்கு கிளம்பி விட்டான்.
பள்ளி முடிவடைவதற்கு முன்பே பள்ளிக்கு எதிரில் போய் நின்று கொண்டான். அருகில் இருந்த கடைக்காரருக்கு ஆதி தினமும் நங்கையை காலையில் விட்டு விட்டு, மாலையில் அழைத்து செல்வது தெரியும்.
அதனால் அவனிடம், “தம்பி இன்னும் நேரமிருக்குதுங்களே பள்ளிக்கூடம் விட, சீக்கிரமே வந்துட்டீங்க?” என கேட்க, என்ன சொல்வதென தெரியாமல் அசடு வழிந்தான். கடைக்காரருக்கு என்ன புரிந்ததோ அவரும் சிரித்தார்.
பள்ளி விட்டதும் நங்கை வெளியே வர, அவள் முன் பிரசன்னமானான் ஆதி.
“என்னங்க முன்னாடியே வந்துட்டீங்களா? பரீட்சை எப்படி எழுதியிருக்கீங்க?” எனக்கேட்டாள் நங்கை.
“நல்லா எழுதி இருக்கேன். வீட்டுக்கு வந்ததிலிருந்து உங்களை பார்க்கணும் போலவே இருந்துச்சு. அதுதான் அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன்” என்றான் ஆதி.
“என்னாச்சு?”
“தெரியலை எல்லா எக்ஸாமும் எழுதிட்டேன்னா? அதான் மனசு ரிலாக்ஸா இருந்துச்சி. உடனே உங்களை தேடுது”
“ஓஹோ… அப்ப ரிலாக்ஸா இருந்தாதான் உங்க மனசு என்னை தேடுமா?”
“பார்த்தீங்களா நீங்களே எடக்கு முடக்கா பேசுறீங்க? எவ்ளோ டென்ஷன்னாலும் நீங்க பக்கத்துல இருந்தா ரிலாக்ஸ் ஆயிடும் இந்த மனசு. நீங்க இல்லாம ரிலாக்ஸ் ஆனாலும் உங்களைத்தான் தேடும் இந்த மனசு” என்றான் ஆதி.
இப்படியாக பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து விட்டனர்.
என்றும் இல்லாமல் அன்று வெயில் குறைந்து, மழை வருவது போல வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.
“எக்ஸாம் எல்லாம் எழுதி முடிச்சாச்சு, அடுத்து என்ன?” எனக் கேட்டாள் நங்கை.
“கவர்ன்மெண்ட் வேலைக்கு போக, எக்ஸாம் எழுதணும். அதுக்கு அப்ளை பண்ண விசாரிச்சிட்டேன். நாளையிலிருந்து பார்ட் டைமா வேலைக்கு கூட போக போறேன்” என்றான் உற்சாகமாக.
“ஏன் போய்த்தான் ஆகணுமா? வேலைக்கு போயிட்டா எப்படி நல்லா படிக்க முடியும்?”
“மதியம் மட்டும் தான். நாலு மணி நேரம்தான் வேலை. இதுக்கு மேல எல்லாம் வீட்டில் சும்மா இருக்க முடியாது” என்றான் ஆதி.
ஆதியை தடுத்தால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடும் என்பதால் நங்கையும் விட்டுவிட்டாள்.
ஆதி தேநீர் கலந்து தர, கால்நீட்டி கீழே அமர்ந்தவள் வாங்கி குடிக்க ஆரம்பித்தாள். ஆதியின் தேநீருக்கு நங்கை அடிமையாகி இருந்தாள். குடித்துவிட்டு கோப்பையை கீழே வைக்க, நங்கையின் மடியில் படுத்து கண்களை மூடிக் கொண்டான் ஆதி.
நங்கைக்கு குறுகுறுப்பாக இருந்தது. முதலில் தயங்கியவள் பின் மெல்ல அவன் தலையை வருடிக் கொடுக்க ஆரம்பித்தாள். சுகமாக உறங்கிவிட்டான் ஆதி. அவனையே பார்த்து ரசித்திருந்தாள் நங்கை.
நல்ல உயரமாக, உயரத்திற்கு ஏற்ற உடலுடன் சற்று கடுமையானவன் என்று மற்றவர்கள் நனைப்பது போன்ற தோற்றம்தான் ஆதிக்கு. ஆனால் உள்ளம் குழந்தை போன்றது என எண்ணிக் கொண்டாள்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளும் உட்கார்ந்த வாக்கிலேயே உறங்கி விட்டாள். இடி இடிக்கும் சத்தம் கேட்டு தான் இருவரும் கண் விழித்தனர்.
“ஐயோ… துணி காயுது மழை வரும் போலிருக்கே” என பதறி நங்கை கூற, ஆதி எழுந்து வெளியே சென்றான். மின்சார விளக்கை போட்ட நங்கையும் வெளியே சென்றாள். துணியை இருவரும் எடுத்துக் கொண்டிருக்க மழை சடசடவென பெய்ய ஆரம்பித்தது.
துணிகளுடன் இருவரும் உள்ளே வர, இருவருமே முழுவதும் நனைந்திருந்தனர். மழை வேகமாக பொழிய ஆரம்பித்தது. துணியை ஓரமாக வைத்துவிட்டு கதவை அடைத்தான் ஆதி. ஜன்னலின் வழியாகவும் சாரல் அடிக்க அதையும் சாத்தினாள் நங்கை.
உடையை மாற்றவென குளியலறை சொல்லப்போனாள் நங்கை. ஆனால் செல்ல முடியவில்லை. ஆதி நங்கையைப் போக விடாமல் அவள் கையை பிடித்திருந்தான்.
“என்னங்க?” என திரும்பி பார்த்த நங்கை அவன் பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்தாள். நங்கையின் நெஞ்சம் தடதடவென ரயில் வண்டியாய் சத்தமிட்டது. ஈரமான உடையால் குளிரில் அவள் உடல் லேசாக நடுங்கியது.
நங்கையை நெருங்கிவந்த ஆதி, நடுங்கிய அவளை அணைத்துப் பிடிக்க, “இதெல்லாம் இப்ப வேண்டாம்னு சொன்னீங்கதானே” என மெதுவாக கேட்டாள்.
“இப்ப வேணும்னு தோணுதுங்க” என்றான் ஆதி.
“வேண்டாம்” என நங்கை கூறினாலும், அவளும் அவனின் நெருக்கத்தில் மயங்கித்தான் போயிருந்தாள். ஆதி நங்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.
வெளியே மழை பொழிய, ஆதி, நங்கையின் ஆசை மேகங்களும் காதல் மழையாக பொழிய ஆரம்பித்தது.
மழை விட்டிருந்தது. ஆதியின் கைவளைவில் படுத்திருந்த நங்கையின் முகத்தில் விழுந்திருந்த முடிகளை ஒதுக்கி விட்டவன், அவளது நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.
“பசிக்குதுங்க” என்றாள் நங்கை.
ஆதி தேங்காய் சட்னி செய்ய, நங்கை தோசை ஊற்ற ஆரம்பித்தாள். உணவருந்தி விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் உறங்கச் செல்ல இருவருக்கும் வாழ்க்கையே வண்ணமயமாகத்தான் தெரிந்தது.
அடுத்த நாள் காலையில் நேரம் கழித்தே எழுந்ததால், அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் நங்கை.
“இல்லைங்க ஒருநாள்னாலும் லாஸ் ஆஃப் பே ஆகும். சீக்கிரம் கிளம்பினா போய்டலாம்” என்றாள்.
“லாஸ் ஆஃப் பே ஆனா ஆகிட்டு போகுது. நீங்க போக வேண்டாம் நம்ம சமாளிச்சுக்கலாம். நீங்க டயர்டா இருக்கிற மாதிரி தெரியுது” என்றான் ஆதி.
ஆதியின் கன்னத்தை கிள்ளிய நங்கை, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போறேன்” என்றாள் நங்கை.
“சாப்பாடு மட்டும் பேக் பண்ணி வச்சுடுங்க. இப்ப சாப்பிட நேரமில்லை மதியமே சாப்பிடுக்கிறேன்” என நங்கை கூறி கிளம்புவதில் கவனம் வைத்தாள்.
நங்கை புடவை கட்டிக் கொண்டிருக்க தோசை ஊற்றியவன் “ சாப்பிடாமல் போனா எப்படி பசங்களுக்கு பாடம் எடுப்பீங்களாம்? “என கேட்டுக் கொண்டே ஊட்ட ஆரம்பித்தான். சிரித்து கொண்டே சாப்பிட்டாள் நங்கை.
நங்கை கிளம்பி தயாராகிவிட சட்டை அணிந்துகொண்டு, பைக் சாவியை எடுத்தவன் வேகமாக வெளியே வர நிலைப்படியில் காலை இடித்துக்கொண்டான்.
“என்னாச்சுங்க? பார்த்து வரக்கூடாதா?” எனக் கேட்டுக் கொண்டே அவன் காலைத் தடவி விட்டாள் நங்கை.
“ஒன்னுமில்லைங்க உங்களுக்கு லேட் ஆகுது. வாங்க கிளம்பலாம்” என அழைத்துச்சென்றான் ஆதி.
நங்கையைப் பள்ளியில் விட்டு வந்தவன், தானும் உணவருந்திவிட்டு கைப்பேசியின் மூலம் தேர்வுக்கு சில குறிப்புகள் எடுத்தான். பின்னர் வேலைக்கு செல்வதற்காக கிளம்பினான்.